11 நவம்பர் 2015

கந்த ஷஷ்டி திருநாள் நல்வாழ்த்துகள்!



சிக்கல் சிங்காரவேலனை தரிசிக்க வருபவர்கள், அரை மைல் தொலைவிலுள்ள பொரவச்சேரி என்கிற பொருள்வைத்தசேரி திருமுருக பெருமானையும் தரிசிக்க மறவாதீர்கள்.

எட்டுக்குடி, என்கண், பொரவச்சேரி இந்த மூன்று கோவில்களில் தான், ஒரே ஸ்தபதியால் உருவாக்கப்பட்ட மூலவர் சிலை உள்ளது. மேலும், சிக்கல் கோவிலில் திருமுருகரின் உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். மூலவர் சிலை பொரவ்ச்சேரியில் தான் இருக்கிறது. மேலும், பொரவச்சேரியில் முதலில் சிலை செதுக்கிய சிற்பியின் கட்டைவிரலை மன்னன் துண்டித்து விட்டார். ஏனெனில் இதுபோனற அழகானதொரு திருமுருக சிலையை வேறெங்கும் இந்த சிற்பி செதுக்கிவிட கூடாதென்பதால்.

ஆனால் அந்த சிற்பி, எட்டுக்குடியில் கட்டைவிரல் இல்லாமலேயே பக்தியின் விளைவால் மீண்டும் அதே போன்ற அழகான சிலையை செதுக்கியதால் கண்களும் மன்னனால் பறிக்கப்பட்ட பின்னாலும், என்கண்ணிலும் மீண்டும் அழகான திருமுருக சிலையை அதே மாதிரியே உருவாக்கியதால், அந்த சிற்பிக்கு திருமுருகரே காட்சியளித்து தன்னோடு ஏற்றுக்கொண்டார் என்பது வரலாறு.

பொரவச்சேரி - எட்டுக்குடி - என்கண் உள்ளிட்ட இந்த மூன்று ஊர்களிலும் உள்ள திருவுருவ சிலைகளிலும் தத்துரூபமாக மிகவும் நேர்த்தியாக அழகாக ஒரே மாதிரியாகவே திருமுருகன் காட்சியளிப்பார். என்பதே சிறப்பம்சம். மயில்களின் கால்கள் இரண்டில் மட்டுமே வள்ளி தெய்வயானை முருகனென ஒட்டுமொத்த சிலையும் தாங்கி நிற்கும் அற்புதத்தை பார்க்கவே கண்கள் கோடி வேண்டும்.

மேலும், கந்த ஷஷ்டி அன்று திருச்செந்தூர் சூர சம்ஹாரத்திற்கு முந்தைய நாள் சிக்கலில், வேல்நெடுங்கன்னி (வேளாங்கன்னி மாதா உருவான கதையும் சிக்கல் பார்வதியால் தான் என்பது தனிக்கதை) என்ற பார்வதி தாயிடம் வேல் வாங்கி, கடல் மார்க்கமாக திருச்செந்தூர் கொண்டுன்போய் போரில் சூரனை வீழ்த்துவது தான் மற்றுமொரு வரலாறு. அப்படி வேல் வாங்கும் ஷஷ்டிக்கு முந்தைய நாள், சிக்கலிலுள்ள திருமுருகனின் சிலை வேர்த்து வேர்வை நீர் சுரக்கும் நிகழ்வும் பெரும் அதிசய நிகழ்வாகும்.

வெற்றி வேல்! வீர வேல்! திருமுருகா!


இன்றிலிருந்து இந்த ஒருவார கால 'கந்த ஷஷ்டி பெருவிழா'வின் போது, மற்றவர்களை போல விரதம் இருங்கன்னு சொல்லல; அசைவம் சாப்பிடாம இருந்தா நல்லாருக்கும்ன்னு தான் சொல்றேன்.


தமிழின உறவுகள் அனைவருக்கும் கந்த ஷஷ்டி திருநாள் நல்வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக