27 பிப்ரவரி 2014

மகா சிவராத்திரி!




நிலம் - நீர் - தீ - காற்று - ஆகாயம் இந்த ஐம்பெரும் பூதங்களுக்கும், கண் - காது - மூக்கு - வாய் - உடல் உள்ளிட்ட இந்த ஐம்பொறிகளுக்கும் உள்ள தொடர்பின் சூசக மந்திரமே, ந - ம - சி - வ - ய யென்ற இந்த ஐந்தெழுத்தும். இந்த ஐந்தெழுத்தின் உச்சக்கட்ட உறவாடல் இன்றைய மகா சிவராத்திரி திருநாளில் நடைபெறுவதால், ஏக இறைவனாக ஜோதி வடிவில் பிரபஞ்சத்தை ஆட்டுவிக்கும் ஆடலவல்லானின் தில்லையம்பல நாட்டியத்தை நடராசன் மேனியில் தரிசிப்போம். அனைவருக்கும் அடியேனின் மகா சிவராத்திரி நாள் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்.

இந்திய கிரிக்கெட் அணி பலமா? பலவீனமா?

கோலி, ரஹானே அபாரம்: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா.
- தி ஹிந்து

வின்னர் விராத்: இந்தியாவிடம் வீழ்ந்தது வங்கதேசம்.
- தினமலர்

வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இந்தியா விராட் கோலி அபார சதம்.
-தினத்தந்தி

வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி தேடித்தந்தார் கோஹ்லி.
- தினகரன்

இன்னும் எத்தனை நாளுக்குத்தான் ஃபேட்ஸ்மேன்களை மட்டுமே நம்பி இருக்க போகிறது இந்திய கிரிக்கெட் அணி? சச்சின், கங்குலி, சேவாக், தோனி, கம்பீர் யென்ற வரிசையில் இப்போது கோஹ்லியை பிடிச்சிக்கிட்டு தொங்குறதுக்கு வெட்கமாவே இருக்காதா? உருப்படியான ஒரு பவுலரை உருவாக்க வக்கிலாமல் போய்விட்டதா இங்கே? நேற்றைய வங்கதேசதுக்கு எதிரான போட்டியில், வருண் ஆரோன், முகமது சமி, புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வேக பந்துவீச்சாளர்களின் செயல்பாடு படுமோசம். இந்தமாதிரியான ஒன்றுக்கும் உதவாத பந்துவீச்சை கொண்ட அணியை வைத்துக்கொண்டு இந்திய அளவிலான ரஞ்சி ட்ராபியை கூட வாங்க முடியாது என்ற நிலையில் இண்டர்நேசனல் போட்டிகளில் பங்கேற்று என்ன ஜொலிக்க போகிறார்கள்? இப்போது நடந்து கொண்டிருக்கும் ஆசிய கோப்பையையும் இந்தியா கை நழுவ விட்டால், அதற்கு ஃபேஸ் பவுலிங் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் மட்டுமே காரணமாக இருக்கக்கூடும் என்பது என் அனுமானம். மேலும், முக்கியமாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டன்கன் ஃபெளக்சர்ன்னு ஒருத்தர் இருக்காரே, அவர் என்ன பண்றாருன்னு எப்போது பிசிசிஐ கேட்குதோ? அதுவரையிலும் இந்திய கிரிக்கெட் அணி சரிவை நோக்கியே செல்லும் என்பதே எதார்த்தம்.

- இரா.ச.இமலாதித்தன்

25 பிப்ரவரி 2014

இமலாதித்தவியல்

புறக்கணிப்புகள் பெரும்பாலும் புரட்சியைத்தான் ஏற்படுத்துகின்றன. ஆனால், பெரும்பாலான புறக்கணிப்புகள் சரிவர புரிதல் கொள்ளப்படாததாலேயே மெளனித்து கிடக்கின்றன. மெளனம் எல்லாவிதமான கேள்விகளுக்கும் விடையளித்தாலும், அந்த மெளனத்தின் பதிலைத்தான் யாருமிங்கே சரிவர புரிதல் கொள்வதில்லை. ஏனெனில், புதிதாய் உருவாகும் புரட்சியே அதுவரையிலும் மெளனமாகத்தான் கிடக்கின்றன. மெளனிப்பதே ஒருவித கலையாகினாலும், முதலில் மெளனம் கலை; அப்போதுதான் புரட்சி பிறக்கும்; பிறகு புறக்கணிப்புகளும் கலையப்படும்.

- இமலாதித்தவியல்

19 பிப்ரவரி 2014

ஏழு பேரின் விதியை மாற்றிய விதி எண் 110 அறிப்பு!



பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் இதே வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனக்கு தெரிந்து, தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் வெளியிடப்பட்ட நல்ல அறிவிப்பு இது மட்டுமே. நேற்று உச்சநீதிமன்றம் மூவரின் தூக்கை ரத்து செய்த அதேவேளையில், முக்கியமானதொரு ஆலோசனையையும் தமிழ்நாடு அரசுக்கு வழங்கி இருந்தது என்பதும் குறிப்பிடதக்க அம்சம். அது என்னவெனில், 23 வருடங்கள் சிறைவாசம் கண்டுள்ள இவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசுதான் இனி முடிவு செய்ய வேண்டுமென்று அனைத்து பொறுப்பையும் விவேகமாக தமிழக அரசின் மீது வைத்துவிட்டனர். அதனாலேயே, நீதியரசர் சதாசிவம் தலைமையிலான மூவரின் ஆலோசனையை, இன்று அரசியல் லாபமாக மாற்றிக்கொண்டுவிட்டார் ஜெயலலிதா.

ஒருவேளை இந்த அறிவிப்பை ஜெயலலிதா இன்று சட்டமன்றத்தில் அறிவிக்காவிடில், தமிழ் ஆர்வலர்கள், ஈழ ஆதரவாளர்கள், நடுநிலைவாதிகள் என அனைவரும் ஜெயலலிதாவை குற்றம் சாட்ட தொடங்கிவிடுவார்கள் என்பதை நன்றாகவே அறிந்திருந்த ஜெயலலிதா, இதை தனக்கு சாதகமாகவே பயன்படுத்தி கொண்டுவிட்டார். நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடிக்கின்ற இந்த காலக்கட்டத்தில், இப்படியொரு அறிவிப்பு கண்டிப்பாக ஜெயலலிதாவிற்கு லாபத்தைத்தான் தரும் என்பது என் அனுமானம்.

இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விசயமே, நேற்றைய தீர்ப்பின் சாரம்சத்தைத்தான். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்த வேளையில், மூவரின் விடுதலையை தமிழக அரசின் பொறுப்புக்கே விடும்போது, அதை காங்கிரஸ் அல்லாத எந்தவொரு கட்சியும் தனக்கு சாதகமாகத்தான் பயன்படுத்த பார்க்கும் என்று உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்களின் கணிப்பு இன்று வெற்றியடைந்திருக்கிறது. இந்த விடுதலை பற்றிய அறிவிப்பை சரியானதொரு நேரத்தில் தமிழக அரசின் மீதே திசைதிருப்பி அதை வெற்றியடையவும் வைத்த நீதியரசர் திரு சதாசிவம் அய்யாவிற்கு அடியேனின் நன்றி!

- இரா.ச.இமலாதித்தன்

18 பிப்ரவரி 2014

தூக்கும் தமிழரும்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டாலும், "தாமதமாக வழங்கப்படும் எந்தவொரு தீர்ப்பும், மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானதே!"; இந்நாட்டில் பல உயிர்களை கொலை செயதவன், பல லட்சம் கோடிகளை கொள்ளை அடித்தவனெல்லாம் ஊருக்குள்ள வெள்ளையும் சொள்ளையுமா திரியும் போது, அந்த மாதிரியான நபர்களை தண்டிக்கக்கூட இந்த நீதித்துறைக்கு வக்கில்லாமல் போய்விட்டது என்பது வேதனையான விசயமே. ஏனென்றால், நீதித்துறைக்குள்ளும் அரசியல்தான் களம்காண்கிறது. நீதியரசராக யார் பணியில் அமரவேண்டுமென்பதை கூட ஆளும்வர்க்கம் நிர்ணயிக்கும் போது நீதியிலும் பாரபட்சம் இருக்கத்தான் செய்யும் என்பது எதார்த்தம். எது எப்படியோ, வெறும் பெட்டரி வைத்திருந்த குற்றத்திற்காக இத்தனை வருடங்கள் சிறையில் அவதிப்பட்டு, இன்றைக்கோ நாளைக்கோ கொல்லப்படலாம் என்ற மனஉளைச்சலோடே இத்தனை வருடங்கள் சிறைக்குள் காலம் கழித்து, உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்த மூவருக்கும் இனி புதியதொரு மறுவாழ்வு கிடைத்துள்ளது. வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

17 பிப்ரவரி 2014

வினவிற்கு பதில்!

 (தேவருக்கு தங்கம் – அதிமுக மீது நடவடிக்கை எடுக்குமா அரசு ?யென்ற இந்த வினவின் கட்டுரைக்கு என் பின்னூட்டத்தை பதிவாக்கி இருக்கிறேன்.)

வளவன் என்ற புனைபெயருடையவர்க்கு,


/தங்கக் கவசத்தின் மதிப்பு 4.70 கோடி ரூபாய். இது அ.தி.மு.க சார்பில் செலவழிக்கப்பட்டாலும், ஜெயலலிதா அன்றைக்கு சென்று வந்த செலவு, பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டத்தினருக்கான குவார்ட்டர்&பிரியாணி செலவு மற்றும் இன்னபிற செலவீனங்களையும் சேர்த்தால் நிறைய வரும். கேட்டால் இது முதலமைச்சரின் புரோட்டோகால் அடிப்படையில் தவிர்க்க முடியாமல் செய்யப்படும் செலவு /

ஆக மொத்த செலவினத்தொகை 4 கோடியாக இருந்தால் என்ன? 40 கோடியாக இருந்தால் என்ன? ஒரு மாநில முதலமைச்சரின் பாதுகாப்பு செலவை குறைக்க சொல்ல எந்த வளவனுக்கும் தார்மீக உரிமை இல்லையே. அதிமுக சார்பில் வழங்கப்பட்ட 4.70 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கவசம் என்பது ஏற்கனவே பசும்பொன்னில் சொன்ன வாக்குறுதி தானே? ஜெயலலிதா சொன்ன எல்லா வாக்குறுதியையும் நிறைவேற்றி விட்டாரா? யென்று கேட்கலாம்; அதைப்பற்றி இங்கே பேசவேண்டிய அவசியமில்லை; ஏனெனில், இது சரிந்த முக்குலத்தோரின் வாக்கு வாங்கியை கைப்பற்றும் யுக்தி என்பது அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் தெரிந்த ஒன்று. எல்லோருக்கும் தெரிந்த இந்த சங்கதி, முக்குலத்து மக்களுக்கும் தெரியாதா என்ன? எல்லாவற்றையும் தேவரின இளைஞர்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு முக்குலத்து வாக்குகளை ஜெயலலிதாவின் காலடியில் கொட்டிய சமுதாயம் மெல்ல மெல்ல மாறி வந்துகொண்டிருக்கிறது என்பதுதான் எதார்த்தம். எத்தனை கோடி செலவு செய்தாலும், சுயமரியாதையுள்ள இனம் தன் சுயத்தை காண்பித்தே தீரும் என்பது வரலாறு. அந்த வரலாறு மீண்டும் இங்கே வெளிப்படும் நாள் தொலைவில் இல்லை.

/நாட்டில் சாதிய பிளவுகளையும், மோதல்களையும் மற்றவர்களை விட ஜெயாதான் தூண்டி வருகிறார். இதற்கு இந்த தேவர் தங்க கவச திக் விஜயம் ஒரு சான்று./

ஜெயலலிதாவின் இந்த சூழ்ச்சிகளை அனைத்து தரப்பட்ட மக்களும் உணரத்தொடங்கி விட்டார்கள். இது பார்பனீய புத்தி என்பதை முக்குலத்தோரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

/கடந்த ஆண்டு தேவர் ஜெயந்தியின்போது ஏற்பட்ட வன்முறைகளில் மூன்றுக்கும் மேற்பட்ட முக்குலத்தோர் இளைஞர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். அது ஒரு எதிர்மறை விளைவை உண்டாக்கி, தனது செல்வாக்குத் தளத்தை சரித்துவிடக்கூடாது என்ற ஜெயலலிதாவின் எண்ணமும் இந்த கவசத்தின் பின்னே நிச்சயம் இருக்கும்./

சின்ன திருத்தம்; கடந்த 2012ம்ஆண்டு தேவர் ஜெயந்தியின் போது மதுரை - சிந்தாமணி பகுதியில் வேனில் சென்றவர்களை வழிமறித்து பெட்ரோல் சமூக பயங்கரவாத கும்பல் குண்டு வீசியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை, பரமக்குடி - பாம்புவிழுந்தான் பகுதியில் அதே நாளன்று பைக்கில் பசும்பொன் சென்றவர்களை வழிமறித்து கற்கால் அடித்து கொலையானவர்களின் எண்ணிக்கை, மருதுபாண்டியர் நினைவேந்தலின் போது காவல்துறையின் என்கவுண்டரால் கொல்லப்பட்ட பிரபு - பாரதி - குமார் மூவரின் எண்ணிக்கையையும் சேர்த்து பத்துக்கும் மேற்பட்ட முக்குலத்து இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதுதான் நிதர்சனம். நீங்கள் சொல்லிருப்பது போல 3 பேர் என்பது சரியான அளவீடு அல்ல.

/அ.தி.மு.க அரசின் இந்த நடவடிக்கை அவர்களின் சாதிவெறிக்குக் கொம்பு சீவி விடுவது போல் உள்ளது. இதன் எதிர்விளைவாக எதிர் தரப்பான பள்ளர் சாதி இயக்கங்களும் தங்களின் சாதி பிடிமானத்தை இன்னும் கெட்டியாக்கிக் கொள்கிறது./

உண்மை. தேவர் - பள்ளர், வன்னியர் - பறையர் சாதி மட்டுமில்லாது எல்லா சாதி அமைப்புகளும் தற்போதைய சூழலில் தங்களது பிடிமானத்தை இறுக்கமாக்கி கொண்டுதான் இருக்கிறது. அதற்கு காரணம் போலி திராவிட அரசியல் வாதிகளால் தான்.

/‘இந்த காமாட்சிபுரி ஆதீனம் என்ற காமெடி பீஸை நாம் முன்பின் கேள்விப்பட்டது கூட இல்லையே.. ஜெயலலிதாவையே ஆட்டுவிக்கிற அளவுக்கு அவ்வளவுப் பெரிய அப்பாடக்கரா?’ என்று விசாரித்தால் கோவையில் இவர் மீது நிலமோசடி, நிதிமோசடி என்று பல பஞ்சாயத்துகள் சொல்லப்படுகின்றன. ஆதீனம் என்றாலே மோசடி என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்./

காமாட்சிபுரி ஆதீனம் காமெடி பீசு தான் என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள் வளவன்? உங்களுக்குதான் கேள்வியே படவில்லையென்றுதானே சொன்னீர்கள்? அப்பறம் எப்படி, அவர் செய்யாத நிலமோசடி, நிதி மோசடிகளை சொல்கிறீர்கள்? உங்களுக்கும் ஏதாவது சிறப்பு ஆன்மபலம் வந்து விட்டதா? ஆதாரமில்லாமல், வினவில் எழுத வேண்டாமே! உங்களுக்கு திராணியிருந்தால், அந்த காமாட்சிபுரி ஆதினத்தின் நிதி/நில மோசடியை ஆதாரத்தோடு வினவின் மூலமாக இன்னொரு கட்டுரையை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். அதுவரை இந்த பொய் குற்றச்சாட்டை சொன்ன உங்களைத்தான் காமெடி பீசாக நினைக்கத்தோன்றும்.  மேலும், சேவ் தமிழ்ஸ் மீதான் உங்களது வெறுப்பும் கட்டுரையின் இறுதி பத்தியில் பட்டவெளிச்சமாக தெரிகிறது. ஏனெனில், சாதி கட்டமைப்பு, ஹிந்து மதம் போன்றவற்றின் மீதான உங்குளுக்குள் உள்ள காழ்ப்புணர்ச்சி மட்டுமே இந்த கட்டுரையின் நெடுகிலும் தென்படுகிறது. உங்களது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை கட்டுரையில் திணிக்க வேண்டாம் என்பது என் விருப்பம். மற்றபடி இந்த கட்டுரையின் வாயிலாக சொல்லப்பட்டுள்ள அரசியல் வியாபாரிகளின் நரிக்குணத்தையும், அனைத்து சாதிக்களிலும் சிக்குண்டுள்ள எளியவர்களின் உணர்வை வெளிக்காட்டும் விதமாக உள்ளது.

/இந்த மக்கள் விரோத அணியையும் என்றைக்கு தேவர் சாதி மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி உழைக்கும் மக்கள் புரிந்து கொள்கிறார்களோ அன்றுதான் தென்மாவட்டங்களில் உண்மையான சமூக நல்லிணக்கம் நிலவும்./

தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல; தேவர் சாதி மக்களிலும் பெரும்பாலோனோர் உழைக்கும் மக்களே என்பதையும் வளவன் போன்ற புனைப்பெயர் எழுத்தாளர்களும் புரிந்து கொண்டு அரசியல் சித்தாந்தங்களை சீர்திருத்தினால் நலம். ஏனெனில், நானும் விவசாய பெருங்குடியில் வளர்ந்த காவிரி டெல்டா தேவர் மகன்தான். உழைக்கும் மக்களான விவசாயி மகனும் தான் என்பதால் இங்கே இந்த கட்டுரைக்கு என் பின்னோட்டத்தை இடுகிறேன். எல்லா சாதியில் உழைக்கும் வர்க்கமும் உண்டு, உண்டு கொழுத்து திரியும் கூட்டமும் உண்டு. இங்கே தலித், ஒடுக்கப்பட்ட, ஆண்ட சாதி, அடிமை சாதி என்ற பாகுபாடு துளியும் இல்லை.


- இரா.ச.இமலாதித்தன், நாகப்பட்டினம்

14 பிப்ரவரி 2014

காதலுக்கு மரியாதை ஏன்?

பழந்தமிழர் வாழ்வியலில் அகமும் புறமும் ஒருசேர இணைந்தே இருந்திருக்கிறது; அகத்தில் காதலும், புறத்தில் வீரமும் தான் அங்கே முதன்மைபடுத்த பட்டது என்பதையும் தமிழ் இலக்கியங்கியங்களின் ஊடாக அறிந்து கொள்ளவும் முடிகிறது. அப்படிப்பட்ட தமிழ்சமூகம் இன்றைய காதலை மேற்க்கத்திய கலாச்சரத்தோடு பிண்ணிக்கொண்டு சிதைக்கப்பட்டு வருகிறது என்பதே எதார்த்தம் கலந்த உண்மை. ஆதிகாலம் தொட்டு தமிழரின் வீரமும் சரி, காதலும் சரி, மற்ற எந்த கலாச்சாரத்தோடும் ஒப்பிட முடியாத அளவிற்கு உயர்வான ஒன்று. அப்படிப்பட்ட வீரம் செறிந்த தமிழ் கூட்டத்திற்கு, காதல் எப்போதும் எதிரியாக இருந்ததில்லை. ஆனால், சில சந்தர்ப்பவாதிகளால் இன்றைய சூழலில் காதல் என்பதே காமத்தை மட்டுமே குறிக்கோளாக திசைதிருப்பிவிடப்பட்டது என்பது வேதனையான விசயமே. அதற்கு சினிமா மோகமும் - சாதி அரசியலும் கூட முழுமுதற் காரணமாக இருக்கலாம்.
அறம் - பொருள் - இன்பம் - வீடுபேறு; இதுதான் பழந்தமிழரின் வாழ்வியல் கோட்பாடு. முழுமையான மனிதனின் படிநிலை என்பதே, தீமைக்கும் அறம் செய்து, நேர்வழியில் பொருள் ஈட்டி, காதல் மணம் கொண்டு, இறைவனைத்தேடி வீடு பேறு அடைவதே ஆகும். அதைத்தான், வள்ளுவனும் அறத்துப்பால் - பொருட்பால் - காமத்துபால் என்று மூன்றையும் கலந்து 1330 குறளில் எளிதாக சொல்லி வைத்தான். ஒவ்வோரு வீரனுக்குள்ளும் காதல் நிச்சயம் உண்டு; அதுபோல, ஒவ்வொரு காதலுக்குள்ளும் வீரம் நிச்சயம் உண்டு. காதல் தவறென்று சொல்ல யாருக்கும் இங்கே உரிமையில்லை. ஆனால், கேடுக்கெட்ட அரசியல்வியாபரிகளின் தவறான வழிகாட்டுதலால், மேன்மை பொருந்திய காதலை கொச்சைப்படுத்தும் இழிபிறவிகளை கண்டிப்பது தவறில்லை.

பெண்களை விட ஆண்கள் தான் அதிகமான ஆர்வத்தோடு காதலர் தினத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள் என்பதுதான் எதார்த்தம். மேலும் பெரும்பான்மையான காதலர்கள் தங்களுடைய காதலிலும், காதலியிடமும், உண்மையாகவே இருக்கின்றனர். ஆனால், பெரும்பான்மையான காதலிகள், தாங்கள் தேர்ந்தெடுக்கும் காதலனிலும், காதலிலும் சுயநலவாதிகளாகத்தான் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். மேலும், காதலின் போது காதலிகள் தங்களுடைய கவலைகளை - துக்கங்களை - சோகங்களை - ஏமாற்றங்களை - இயலாமைகளை - கோபங்களை யென பலதரப்பட்ட மனக்கழிவுகளை கொட்டும் குப்பைத் தொட்டியாகத்தான் காதலனின் இதயத்தை பாவிக்கிறார்கள்.
எது எப்படியோ, உலகளாவிய அளவில் இன்றைக்கு காதலர் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

10 பிப்ரவரி 2014

என் பார்வையில் ஹிந்து மதம்!




இளையராஜாவின் மகனே இசுலாமுக்கு மாறிவிட்டாரே! என்பது போன்ற பெருமைவாத பேச்சுகளிலோ, இளையராஜாவின் மகன் இசுலாமுக்கு மாறலாமா? என்பது போன்ற சிறுமைபடுத்தும் பேச்சுகளிலோ எனக்கு உடன்பாடில்லை. இளையராஜாவோ - யுவன்சங்கர் ராஜாவோ, எந்தவொரு தனிமனிதனை நம்பியும் எந்த மதமும் இல்லை. குறிப்பாக உலகிலேயே அதிகமான மதமாற்றங்கள் நடைப்பெற்று இருக்கும் ஒரே மதம், ஹிந்து மதமாகத்தான் இருக்கக்கூடும்.

மதம் எனது இறைவனை வழிபட வேண்டிய ஒரு வழிமுறை அல்லது மார்க்கம். எல்லா மதங்களிலும், சாமனியனுக்கும் இறைவனை அடையாளப்படுத்துவதே முதற் நோக்கமாக இருக்கின்றது. அப்படிப்பட்ட உயரிய நோக்கத்தை அடைய, ஆசை வார்த்தை காட்டியோ - பயத்தை ஏற்படுத்தியோ மதமாற்றத்தால் செய்ய வேண்டிய அவசியம் உண்மையான ஆன்மீக சிந்தனை உள்ளவர்களுக்கு தேவையில்லை. ஆனால், இங்கே பெரும்பாலான மதமாற்றங்கள், இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த யுக்திகளை கையாண்டே நடைப்பெற்று கொண்டிருக்கின்றன என்பது வேதனையான விசயம்.

இங்கே, நடைப்பெற்று கொண்டிருக்கும் அநேக மதமாற்றங்கள் ஹிந்து மதத்தை குறிவைத்தே நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அறிவியலும் - கலச்சாரமும் - பழமைவாதமும் - விஞ்ஞானமும் - மெய்ஞானமும் ஒருசேர கலந்திருப்பது ஹிந்து மார்க்கத்தில் மட்டும் என்பதுதான் குறிப்பிடதக்க விசயமாகும். மேலும், ஹிந்து மார்க்கத்தை குறை சொல்லும் பலர் வைக்கும் குற்றச்சாட்டு உருவ வழிபாடு என்பதைத்தான்.


ஹிந்து மார்க்கத்தில், இயற்கையை கடவுளாக வணங்கிய பாமரனுக்கும் உணர்த்தும் வகையில் தான், உருவ வழிபாட்டு முறை கொண்டு வரப்பட்டது. இலக்கு என்பதை நிர்ணயிக்கும் போதுதான் அதை அடைய முடியும். அதுபோலவே, இறைவன் என்ற ஆன்ம இலக்கை அடைய சிலை வழிபாடும் தேவைப்பட்டது. உதாரணமாக கல்வியை எடுத்து கொண்டால், இங்கே யாரும் எடுத்த உடனேயே பி.ஹச்.டி என்ற முனைவர் பட்டம் வாங்கிவிடுவதில்லை. பால்ய கல்வியில் தொடங்கி பள்ளி/ கல்லூரிக்கல்வியென பலதரப்பட்ட நிலையை கடந்த பின்னால்தான் முனைவர் ஆக முடிகிறது. இந்த ஏட்டு கல்விக்கே இத்தனை படிநிலைகள் தேவைப்படும் போது, இறைநிலை என்ற மாபெரும் உச்சத்தை அடைய, அதன் அறிவை பெற இலகுவான படிநிலை யுக்திகளும் தேவைப்படுகின்றன. அதனால் தான் இந்த உருவ வழிபாடும் உருவானது.

சனி கிரகம் கருமை நிறமாக இருக்கும்; செவ்வாய் கிரகம் சிவந்த நிறத்தில் இருக்கும்; வெள்ளி கிரகம் வெண்மை நிறத்தில் இருக்கும் என்பதெல்லாம் இப்போதுள்ள விஞ்ஞானம் சமீப காலங்களில் கண்டறிந்திருக்கலாம். ஆனால், அன்றைக்கே ஹிந்து மார்க்கம், நவகிரக சிலைவழிபாட்டை ஒவ்வொரு கோவில்களிலும் உருவாக்கி, அங்கே ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய நிறத்தையே அந்த சிலைகளின் உடையலங்காரமாக்கி, எளியவனுக்கும் புரியும் வண்ணம் பரம்பொருள் அறிவையும் - பிரபஞ்ச அறிவையும் உணர வைத்தது என்பதை நினைக்கையில் பெருமிதமாக இருக்கிறது.


கோவில் கருவறையில் சிலையை வணங்கினாலும், சூடம் காண்பிக்கும் போதுதான் உச்சக்கட்ட வேண்டுதல் நடைபெறும். ஏனெனில், அப்போதுதான் மூலவர் சிலைக்கு தீபம் காண்பிக்கப்படும். அந்த சில நொடிகள் இருகரம் கூப்பி வணங்கும்போது, சிலை மட்டும் தெரிவதில்லை. அந்த சிலைக்கு முன்னால் காண்பிக்கப்படும் அந்த தீப ஒளியையும் சேர்த்துதான் வணங்குகிறோம். ந - ம - சி - வ - ய என்ற இந்த ஐந்தெழுத்து ரகசியத்தை, நிலம் - நீர் - நெருப்பு - காற்று - ஆகாயம் என்ற ஐம்பெரும் பூதங்களையும், கண் - காது - மூக்கு - வாய் - மெய் என்ற ஐந்துறுப்புகளையும் ஒருசேர இணைத்து அறிய முற்படும் போதுதான், உண்மையான உச்சக்கட்ட இறைநிலையை உணரமுடியும். ஏனெனில் அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் என்று அன்றைக்கே ஒரே வரியில் எளிய முறையில் ஹிந்துமதம் விளக்கம் சொல்லிவிட்டது.

சிதம்பர நடராசனின் நடன தத்துவம்தான், புரோட்டான் - நியூட்ரான் - எலக்ட்ரான் என்ற அணுக்களின் அசைவு என்பதை, போஸான் என்ற விஞ்ஞான தத்துவமே ஒத்து கொண்டு விட்டது. மேலும், கோவில்களில் நடைபெறும் அபிஷேகம் என்பதில் கூட பலதரபட்ட அறிவியல் இருக்கிறது. பால், தயிர், எலும்பிச்சையென எல்லா முறையிலான அபிஷேகத்தின் மூலமும், லாக்டிக் - சிட்ரிக் என்று ஒரு வேதியியல் மாற்றமும் நடைபெறுகிறது. திருநீரை நெற்றியில் வைப்பதின் உள்நோக்கமே, புருவமத்தியில் சக்தி இருப்பதையும், அழியக்கூடிய இந்த பூதஉடல்தான் 'நான்' என்று நம்பிக்கொண்டு போலியான மாயையில் வாழ்வதையும் தான், நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறது. இந்த சீவன்தான் ஒருநாள் சிவனாகவும் மாறும் என்ற உயரிய தத்துவத்தை பலவித படிநிலைகளோடு எம் ஹிந்துமதம் சொல்லிக்கொண்டாலும், அதை புரியாத பலர் ஹிந்து என்பதை வெறும் மதமாக மட்டுமே பார்த்து கொண்டிருக்கின்றனர் வேதனையான ஒன்று. எனவே, இறைவனை உணர, ஹிந்துவாகவோ - இசுலாமாகவோ - கிருஸ்துவனாகவோ இருக்க வேண்டிய கட்டாயமில்லை. ஏனெனில், கடவுள் - மதத்திலோ, வெளியிலோ இல்லை. இந்த பிரபஞ்ச வெளியில் ஒட்டுமொத்தமாகவும் கடவுள் கலந்திருக்கிறார். அதை உணர, முதலில் நீ உன்னுள் கடந்து வா, (கட+வுள் கடவுள் இருக்கிறார் என்பதை அறிவாய்! என்பதுதான் ஹிந்துமதத்தின் எளிய கோட்பாடு.


திலீப்குமார், ஏ.ஆர்.ரஹ்மான ஆனார்; பெரியார்தாசன், அப்துல்லா ஆனார்; யுவன்சங்கர்ராஜா என்னவாக போகிறார் என்பது, எம்பெருமான் முருகனுக்கே வெளிச்சம்!
- இரா.ச.இமலாதித்தன்

07 பிப்ரவரி 2014

தமிழ் தேசியத்தை மறக்க பசும்பொன் கவசம்!

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருடா வருடம் அக்டோபர் மாதம் கடைசி வாரம் முழுமைக்கும் கோவில் திருவிழா போல நடைபெறும் ஓர் ஆன்மீக நிகழ்வை, ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகளின் தலையீட்டால் கடமைக்கு பசும்பொன் வந்து தலை காட்டி செல்வதை வழக்கமாக்கி கொண்டிருக்கின்றனர். 

பெரும்பான்மை சமூகம் சார்ந்த விழா என்பதால், தமிழகத்தில் செயல்படும் லெட்டர்பேடு கட்சி முதற்கொண்டு மாநிலத்தை ஆளும் திராவிட கட்சிகளும், மத்தியில் ஆளும் தேசிய கட்சிகள் உள்பட அனைவரும் அக்டோபர் 30ம் தேதியென்று பசும்பொன்னை ஆக்கிரமித்து கொள்வது தான் கடந்தகால வரலாறு. அப்படிப்பட்ட ஆன்மீக விழாவான தேவர் ஜெயந்திக்கு தடை போட்ட ஜெயலலிதா, முழுக்க முழுக்க நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து முக்குலத்து ஓட்டு வங்கியை கையகப்படுத்தும் முயற்சியில் தற்போது தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

 
அதன் முதல் முயற்சியாக, ஓட்டுக்காக கொடுக்கப்படும் லஞ்சம் போல, வருகின்ற பிப்ரவரி 09ம் தேதி பசும்பொன்னில் தங்க கவசம் அணிவிக்கிறேன் என்ற பெயரில், இழந்த தேவரின ஓட்டு வங்கியை கவர மலிவான அரசியல் யுக்தியை பயன்படுத்துகிறார். இதில் வெட்க கேடான விசயம் என்னவெனில், 32 1/2 கிராமங்களை சொந்தமாக கொண்டு பெரிய ஜமீன்தாராக வாழ்ந்திருக்க வேண்டிய பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர், தேசியவாதியாகவும் - துறவி போல பிரம்மச்சாரியத்தை கடைபிடித்தும், பொன், பெண், மண் ஆசையற்ற ஆன்மீகவாதியாகவும், இறுதிவரை எளியவராகவே வாழ்ந்த மாமனிதரான ஆன்மீக சித்தருக்கு, தங்க கவசம் சூட்டுவதென்பது கேடுக்கெட்ட திராவிட அரசியலின் சூழ்ச்சி என்பதை ஓட்டளிக்கும் எம் மக்கள் புரிந்து கொள்ளாதவரை, தமிழ்நாட்டை தமிழர் ஆள்வதற்கான 'தமிழ் தேசிய அரசியல்' என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்.

- இரா.ச.இமலாதித்தன்


06 பிப்ரவரி 2014




2009ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதிக்கு முன்னாடியே பலகாலங்கள் ஆர்குட் - கூகிள் குரூப்ஸ் - கூகிள் பஸ் - ப்ளாக்கர் யென்று இணையத்தில் செயல்பட்டிருந்தாலும், 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிதான் எனக்கு ஃபேஸ்புக் அறிமுகம் ஆனது. அப்போது மூலமான என் பதிவுகளும் இங்கே ஆரம்பமானது. இணையம் மூலமாக எத்தனையோ நபர்களை கடந்த ஏழெட்டு வருடங்களில் கடந்து வந்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக ஆர்குட்டில் பல உறவுகள் கிடைத்தார்கள். அதன் பிறகு கூகிள் குழுமம் மூலமாக பல நண்பர்கள் கிடைத்தார்கள். அதன் பிறகு ஃபேஸ்புக் மூலமாகத்தான் அதிகமான உறவுகளும் நண்பர்களும் அறிமுகமானார்கள். ஃபேஸ்புக்கில் கடந்த ஐந்து வருடமாக செயல்பட்டிருந்தாலும் இன்னமும் பல புதிய நபர்களை கடந்து கொண்டே வந்திருக்கின்றேன். என்னை இன்னமும் புதியவனாகவே அடையாளப்படுத்தி கொண்டிருக்கும் எம்பெருமான் முருகா நன்றி!

- இரா.ச.இமலாதித்தன்

05 பிப்ரவரி 2014

ஈ.எஸ்.பி யென்ற ஆழ்மன சக்தி!

எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கமெல்லாம் கிடையாது. நான் முழுசா படித்த ஒரே புத்தகம்ன்னா, அது கவிப்பேரரசு எழுதின 'கள்ளிக்காட்டு இதிகாசம்' மட்டும்தான். அந்த புத்தகமும் நான் வாங்கல. 2009ம் ஆண்டு 'தமிழ்நண்பர்கள்' யென்ற கூகிள் இணைய குழுமத்தில் நடந்த கவிதைப்போட்டியில் வென்றதற்காக போஸ்டலில் அனுப்பி வச்சாய்ங்க. அதுனாலதான் அந்த புத்தகத்தையும் படிச்சேன். 'பாய்ஸ்' படத்துல, நான் கடைசியா பார்த்த ஹாலிவுட் படம் சோலைங்க... ன்னு பரத்கிட்ட இன்னொருத்தன் சொல்ற வசனம் மாதிரி, எனக்கும் படிச்ச புத்தகமுன்னு பட்டியல் போடவும் ஒன்னுமில்ல. ஏன்னா, எனக்கு படிக்கிற பழக்கமே இல்ல.

புத்தகங்கள் நிறைய படிக்கணும்ன்னு ரொம்ப ஆசையுண்டு. ஆனால், சோம்பேறித்தனத்தால் அதை செயல்படுத்த முடியல. இப்போ ரொம்ப வருசங்கள் கழிச்சு, 'என்.தம்மண்ண செட்டியார்' எழுதின 'உங்கள் ஈ.எஸ்.பி. ஆற்றல்களை பெருக்கி கொள்ளுங்கள்' யென்ற புத்தகத்தை காசு கொடுத்து வாங்கி படிக்க ஆரம்பித்திருக்கிறேன். 160 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தில், இந்த ஒரு வாரத்துல வெறும் 48 பக்கம்தான் படிச்சு முடிச்சிருக்கேன்.

ஈ.எஸ்.பி. என்பது Extra Sensory Perception யென்ற வார்த்தையின் சுருக்கம் தான். இந்த ஈ.எஸ்.பி ஆற்றல் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஓர் அற்புத சக்தி. பின்னாட்களில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் முன்கூட்டியே காட்சியாக தோன்றி நமக்கு சொல்லிவிடும். கூகிள் உதவியோடும் ஈ.எஸ்.பி பற்றிய அற்புத தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த ஈ.எஸ்.பி சக்தியை மையப்படுத்தியே, இளையதளபதி விஜயின், 'அழகிய தமிழ்மகன்' படமும் உருவாக்கப்பட்டது. இந்த ஈ.எஸ்.பி. ஆனது எனக்கும் 17 வயது முதல் தொடர்வதால், அதை எப்படி அதிகபடுத்துவது என்ற அதீத ஆர்வத்தோடுதான் இந்த புத்தகத்தை தேடிப்பிடித்து வாங்கினேன். ஆனால், ஆர்வமுள்ள விசயத்தை அறிந்துகொள்ள கூட நேரம் அதிகமாக எடுத்துக்கொள்கிறேன். ஏன்னா, எனக்கு புத்தகம் படிக்கிற பழக்கமெல்லாம் கிடையாது.

முதல்வரியையே கடைசி வரியா கொண்டுவந்து முடிச்சாச்சு! ;)

- இரா.ச.இமலாதித்தன்

03 பிப்ரவரி 2014

ஆன்மீகமும் பகுத்தறிவும்!

01.

வாடிய பயிரை காணும்போதெல்லாம் வாடுவதற்க்கு, வள்ளலாரா இருக்க வேண்டிய அவசியமில்லை. சொந்தமா விவசாய நிலம் வச்சிருந்தாலே போதும்!

#விவசாயி_மகன்
02.

குளிர்ந்த நீரை சூடாக்க நெருப்பு தேவைப்படுவது போல, அதே சூடான நெருப்பை அணைக்க நீர்தான் தேவைப்படுகிறது. மேலுமிங்கே நல்லது கெட்டதென்றோ, சரி தவறென்றோ எதுவுமே இல்லை; பிரபஞ்சத்தை சார்ந்த சகலமும் இந்த மாதிரியானவற்றுள்தான் அடங்கி இருக்கின்றன. இங்கே எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்போடும், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமலும், கலைந்து கிடக்கின்றன. அதை சரியாக புரிந்து கொள்வதில்தான் அனைத்துமே அடங்கி இருக்கு. மற்றபடி, இதற்கான வெறும் வழிமுறை மட்டும்தான் ஆன்மீகம்.

#ஆன்மீக_அனுபவம்


-இரா.ச.இமலாதித்தன்

01 பிப்ரவரி 2014

இமலாதித்தவியல் - முன்னேற்றம்

எதார்த்தம் என்னவென்பதை நாம் புரிந்து கொள்ளாதவரை அடுத்தக்கட்டத்தை நோக்கி நாம் நகரவே முடியாது. கூட்டமாக இருக்கும் போது, எல்லாமும் நமக்கு சாதகமானது போலத்தான் தெரியும். தனித்து நின்று சுயத்தை உணரும்போதுதான், நம்முடைய பலவீனமும் - பலமும் தெரியும். அந்த நிதர்சனத்தை உணரும் தருவாயில், நாம் பல வாய்ப்புகளை நழுவ விட்டிருப்போம் என்பதும் புரியவரும். எதுவாகினும் தனி மனித முன்னேற்றமில்லாமல், சமுதாய முன்னேற்றமடைய வாய்ப்பே இல்லை. எனவே, கடந்தகால மாயையிலேயே நிகழ்காலத்திலும் வாழாமல், எதிர்காலத்தை பற்றிய விழிப்புணர்வும் நமக்கு வேண்டும். அப்போதுதான், அடுத்த தலைமுறையும், நம்மை நினைத்து கொஞ்சமாவது பெருமிதப்படும். எனவே, முதலில் நீ முன்னேறு; அதன் பிறகு ஒட்டுமொத்த சமுதாயத்தையே முன்னேற்றலாம்.

- இமலாதித்தவியல்