TNPSC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TNPSC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 நவம்பர் 2018

தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர் தேர்வின் அத்துமீறல்!



தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளில் இனி ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கப்போவதாக அறிவிப்பு செய்திருக்கின்றனர். தமிழரல்லாதவர்களை தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர்களாக திணிக்கவே இம்முயற்சி அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தமிழில் கேள்வித்தாளை அமைப்பதற்கான நபர்கள் இல்லையென்று காரணம் சொல்லிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பாகவே வெளி மாநிலத்தவரும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை எழுதி தமிழ்நாட்டு அரசின் ஊழியர்களாக வரலாமென திருத்தம் செய்தனர்.

இப்போது குரூப் 2 தேர்வுகள் போன்றவற்றிலும் தமிழ் மொழி வழியிலான கேள்விகள் இல்லையென்றால், வேற்று மொழியை தாய்மொழியாக கொண்டவர்களும், ஆங்கில வழிக்கல்வி பயின்றவர்களும், மேல்தட்டு வர்க்கத்தினரும் எளிதாக தமிழக அரசாங்க பணியாளர்களாக அமர்த்தப்படுவார்கள். PSTM என்ற தமிழ்மொழி வழியிலான பள்ளிப்படிப்பை படித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இங்கிருக்கிறது. அதை இல்லாதொழிக்கவும், தாய்மொழி, மாநில மொழிகளின் அடிப்படையிலான இடப்பகிர்வை பறித்து கொள்ளவுமே இம்மாதிரியான அட்டூழியங்கள் செய்யப்படுகின்றன.


பொருளாதார அடிப்படையில் இடைநிலை/கீழ்நிலை குடும்பத்தில் பிறந்து, முதல் பட்டதாரியாக உருவெடுத்து, சமூகத்தில் புறக்கணிக்கப்படும் எத்தனையோ லட்சம் பேருக்கான கடைசி நம்பிக்கை இந்த டி.என்.பி.எஸ்.சி. போன்ற தேர்வுகள் தான். இந்த தேர்வுகளுக்காக, தனியார் வேலைகளை துறந்து, வாடகைக்கு தனியறை எடுத்தும், கோவில்களில் தங்கியும், கூட்டாக படித்து மாத கணக்கில் அல்லும் பகலும் தங்களை தகுதிப்படுத்தி வருகின்றனர். அந்த எளியோரின் கனவெல்லாம் அரசு வேலை மட்டுமே. அதற்கு பின்னால் தான், அவர்களது வாழ்க்கையே தொடங்கவிருக்கிறது. அந்த கனவில் மண்ணையள்ளி போடும் கயவர்களை கண்டிக்க இளையோர் ஒன்று கூட வேண்டும்.

இட ஒதுக்கீடு / அரசு ஊக்கதொகை / கல்லூரி சேர்க்கை உள்பட, எல்லா வகைகளிலும் புறக்கணிக்கப்பட்டு கொண்டிருக்கும் அகமுடையார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கென இருக்கும் ஒரே ஆயுதம், அரசு வேலை தான். குறிப்பாக பெரும்பான்மையானோரில் தமிழ்வழி கல்வி பயில்வோரின் எண்ணிக்கையே அதிகம்; அதிலும் இப்படியான குளறுபடி. அனைவரும் தங்களது பக்கத்தில், இச்செயலை எதிர்த்து பதிவு செய்து கண்டியுங்கள்.

- இரா.ச. இமலாதித்தன்

#TNPSC#TNPSCExam

18 மார்ச் 2017

அரசியலில் ஆன்மிகமும் - அரசாங்கத்தில் ஊழலும்!


# அரசுத்துறை தேர்வுகளில் உள்ள ஊழல்:

டி.என்.பி.எஸ்.சி என்ற தமிழ்நாடு பொதுத்தேர்வு ஆணைய தேர்வுக்குழுவை நிர்ணயம் செய்ததில் சட்டவிதிமீறல் இருப்பதாக கூறி, அந்த குழுவே ஓரிரு மாதங்களுக்கு முன்பாக கலைக்கப்பட்டது. ஆனால், மத்திய தேர்வுக்குழுவில் உள்ள ஊழலை யார் களையெடுப்பது? ஆர்.ஆர்.பி. என்ற ரயில்வே துறை தேர்விலும், தென்னக ரயில்வே வேலைவாய்ப்பிலும் வடக்கத்தியர்கள் தான் தொடர்ச்சியாக வெற்றிப்பெற்றதாக அறிவிப்பு வருகிறது. அதுபோலவே மத்திய தபால்துறை தேர்விலும் தமிழை மொழிப்பாடமாக எடுத்து தேர்வெழுதியதிலும் கூட வடக்கத்தியர்கள் தான் அதிகளவில் தேர்ச்சிப்பெற்றிருப்பதாக சமீபத்தில் ரிசல்ட் வெளியிடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் யார் கேட்பது? இந்த சதியின் பின்னணியிலுள்ள ஊழலை யார் வெளிக்கொண்டு வருவது? சமுதாய பிரச்சனையை வெட்டவெளிச்சம் போட்டு தட்டிக்கேட்க வேண்டிய ஊடகங்களெல்லாம் ஊமையாகி போய்விட, ஆட்சி அதிகாரமோ ஊனமாகி போய்விட்டது. :(  ஏமாளிகள் தமிழர்கள் தான்!


 # உத்ரபிரதேச முதல்வர் தொகுதியின் பின்புலம்:


உ.பி.முதல்வர் யோகி ஆதித்யாநாத்திற்கும், நாகப்பட்டினத்திற்கும் ஏதோவொரு வகையில் தொடர்பிருக்கிறது. அவர் தொடர்ச்சியாக ஐந்து முறை கோரக்பூரில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த கோரக்பூரில் தான் பதினெண் சித்தர்களில் ஒருவரான கோரக்கரின் ஜீவசமாதியும் இருப்பதாக நம்பப்படுகிறது. கோரக்கரின் ஜீவசமாதியுள்ள அந்த மடத்தை தான், யோகி ஆதித்யாநாத் நிர்வகிக்கிறார். காகபுஜண்டரின் சீடரான கோரக்கர், கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர். சித்தர்களின் ஜீவசமாதி பல இடங்களில் உண்டு. அதுபோலவே, ஒரே சித்தர் பல இடங்களில் ஜீவசமாதி ஆகியிருப்பதும் உண்டு. அப்படியாக, சித்த மருத்துவ ரகசியத்தை மறைபொருள் ஏதுமின்றி மிகவும் எளிமையாக தன் நூல்களில் வெளிக்கொண்டு வந்த கோரக்க சித்தரின் ஜீவசமாதி நாகையிலிருந்து ஆறு மைல் தொலைவிலுள்ள வடக்கு பொய்கை நல்லூரில் இருக்கிறது. இவர் எழுதிய பல நூல்களில் சந்திர ரேகை என்ற நூல் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.

கோரக்க சித்தர் ஜீவசமாதிகள்:

1. பொதிய மலை
2. ஆனை மலை
3. கோரக் நாத்திடல் (மானாமதுரை)
4. வடக்கு பொய்கை நல்லூர் (நாகை)
5. பரூரப்பட்டி (தென் ஆற்காடு)
6. கோரக்கர் குண்டா (சதுரகிரி)
7. பத்மாசுரன் மலை (கர்நாடகம்)
8. கோரக்பூர் (உ.பி)

23 டிசம்பர் 2014

சாதிப்பெயரை நீக்கினால் சாதி ஒழிந்து விடுமா?


 கடந்த ஞாயிறு (21.12.2014)அன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய TNPSC குரூப் 4 தேர்வில் சுமார் பத்து லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளனர். அந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பற்றிய இரு கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன.

001. ’தேசியம் காத்த செம்மல்’ - எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர்

A. பசும்பொன் முத்துராமலிங்கர்
B. காந்தியடிகள்
C. திருப்பூர் குமரன்
D. வீரபாண்டிய கட்டபொம்மன்

002. “வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்” - என எடுத்துரைத்தவர்

A. சுபாஷ் சந்திர போஸ்
B. பசும்பொன் முத்துராமலிங்கர்
C. வீரபாண்டிய கட்டபொம்மன்
D. வேலுத்தம்பி

இந்த இரு கேள்விகளுக்கும் விடையானது பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்பது தான். ஆனால் அவரது முழு பெயரையே சுருக்கி பசும்பொன் முத்துராமலிங்கர் என குறிப்பிட பட்டுள்ளது. இதைத்தவிர மேலும் சில கேள்விகளில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை கீழே பதிவிட்டுள்ளேன்.

01. இராமலிங்கம் பிள்ளை
02. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
03. எஸ். வையாபுரிப்பிள்ளை
04. அ. சிதம்பரநாத செட்டியார்
05. வேங்கட ராஜூலு ரெட்டியார்
06. வைத்தியநாத சர்மா
07. வெ.சாமிநாத சர்மா
08. சி.வை. தாமோதரம் பிள்ளை
09. வேதநாயகம் பிள்ளை
10. வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
11. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
12. ஆளுடைய பிள்ளை
13. வ.வே.சு. ஐயர்

இந்த பெயர்களிலுள்ள் பிள்ளை, செட்டியார், ரெட்டியார், ஐயர் என்பதெல்லாம் சாதிப்பெயர் இல்லையா? அதையெல்லாம் அனுமதித்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ’தேவர்’ என்ற பெயரை மட்டும் புறக்கணித்திருப்பதன் உள்நோக்கம் என்ன? சட்டமோ விதியோ அது அனைவருக்கும் பொதுவானதாக தானே இருக்க வேண்டும்? அப்பறம் ஏன் ஒரு சாரருக்கு மட்டும் எதிரானதாக இருக்கின்றது? ஒரு தேசிய தலைவரின் பெயரை சுருக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? மேலும், அதே வினாத்தாளில் நேரு, படேல், போஸ் என்ற பெயர்களை கொண்ட தேசியத்தலைவர்களின் துணைப்பெயர்களான சாதி / பட்டப்பெயர்களை நீக்காமல் விட்டது ஏன்? தேவர் பற்றாளர்கள் இதற்கெல்லாம் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடுக்க முடியாதா? தகவல் உரிமை சட்டத்தின் மூலம் இதைப்பற்றி விளக்கம் கேட்க முடியாதா? குறைந்தபட்சம் TNPSC அலுவலகத்தையாவது இதற்கான காரணத்தை கேட்டு கண்டனத்தை பதிவு செய்யலாமே? அதை விட்டுவிட்டு இணையத்தில் ”தேவன்டா” என்ற வெற்றுக்கூச்சல்களால் என்ன சாதிக்க போகிறோம்? களத்திற்கு போராட வராதவரை, இன்று பசும்பொன் பெருமகனாரின் பெயரை சுருக்கியவர்கள் நாளை எதை வேண்டுமானாலும் துணிச்சலாக செய்வார்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக கேள்வி கேட்க துணிவும் உணர்வும் உள்ளவர்கள் கீழே உள்ள தொடர்பு எண்களை பயன்படுத்தலாம்.

Phone: +91- 44 - 25300300

மின்னஞ்சல் மூலமாகவும் கேள்வி கேட்க விருப்பமிருந்தால் coetnpsc.tn@nic.in , contacttnpsc@gmail.com இந்த இரு மின்னஞ்சலையும் பயன்படுத்தலாம். வெறும் தேவன்டா என சொல்லிக்கொண்டு திரியும் நபர்கள் இந்த பதிவை வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு கடந்து செல்லலாம். ஜெய்ஹிந்த்!

- இரா.ச.இமலாதித்தன்