ஓ.பன்னீர் செல்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓ.பன்னீர் செல்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 பிப்ரவரி 2017

நேற்று வரை தோழி, இனி சின்னம்மா!?

அ: சசிகலா தமிழச்சி; அதனால் ஆதரிக்க வேண்டும்;

இ: அப்போ பன்னீர்செல்வம் யார்? அவரும் தமிழன் தானே?

அ: இல்லை இல்லை; பார்பன பிடியில் இருக்கிறார் ஓ.பி.எஸ்.

இ: சுப்ரமணிய சுவாமி என்ற பார்பனர், சசிகலாவை ஆதரித்து ஆளுநரிடமே பேசிக்கொண்டிருக்கிறாரே? அப்போது சசிகலா யார் பிடியில்?

அ: அதெல்லாம் விடுங்க; எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் சசிகலா பக்கம் தான்.

இ: ஆனால், சாமானிய தொண்டர்கள் 95% க்கு அதிகமானோர் ஓ.பி.எஸ்/தீபா பக்கம் தானே இருக்கின்றனர்?!

அ: அது பாஜக, திமுக கட்சிகளோட சதி.

இ: இந்த கன்றாவியையெல்லாம் பார்க்கணும்ங்கிறது எங்க விதி!


இப்படியாக கடந்து கொண்டிருக்கிறது சமகால அரசியல் நகர்வுகள்; டிசம்பர் 5ம் தேதி முதல்வராக இருந்த ஒரு நடிகை மறைந்தார். மிகச்சரியாக இரண்டே மாதங்களில், பிப்ரவரி 5ம் தேதி நடிகையின் தோழி ஒருவர் முதல்வராக உருவெடுக்க ஆயத்தமானார். அதற்குள்ளாக இத்தனை அரசியல் குழப்பங்கள் அரங்கேறி விட்டன.

சாதி அரசியல்:

இதற்கிடையில் இன்னமும் சாதி சாயத்தில் மூழ்கி கிடக்கும் கூட்டத்தினர், சசிகலாவை கள்ளராக முன்னிலைப்படுத்தி பெருமிதம் கொள்கின்றனர். ஆளும் தகுதியை கொடுத்த அதிமுகவின் ஆட்சி அதிகாரத்தை கொண்டு தமிழகத்தை நிர்வகிக்கும் தலைமை யாரென விமர்சிப்பதில் என்ன அவதூறு இருக்கிறதென தெரியவில்லை. இன்னுமா முக்குலத்தோர் என்று இல்லாத சாதியின் பெயரால் கண்டவர்களையெல்லாம் தூக்கி பிடிக்கிறீர்கள்?

தன்னுடைய சாதிக்காரன் எது செய்தாலும் சரியென நினைத்து, அதற்காக குருட்டுத்தனமாக முட்டுக்கொடுக்கும் மனப்போக்கை மாற்ற முயலுங்கள். (என்னுடைய சாதிய பார்வையே வேறு.) சாதியை வைத்து மட்டுமே சமகால அரசியலில் எதையும் சாதித்து விட முடியாது என்பதை ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றி ஒரு தற்போதைய சான்று. ஒரு குறிப்பிட்ட சாதிகளின் விளையாட்டென அரசியல் செய்தவர்களின் சதியை முறியடித்தது நீங்கள் பெருமைப்படுகின்ற எந்தவொரு தனிப்பட்ட சாதியும் இல்லையென்ற எதார்த்தத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

அதிமுகவை விமர்சிக்கும் அளவுக்கு திமுகவை விமர்சிப்பதில்லையென சிலர் அடிக்கடி குறை கூறுகிறார்கள்; ஆள்பவர்களை தான் விமர்சிக்க முடியும். அதனால் பாஜக, அதிமுக என அதிகாரத்தில் உள்ளவர்களின் தவறை சுட்டிக்காட்டி விமர்சிக்கிறோம். சீமான், ஸ்டாலின், கருணாநிதி, தா.பாண்டியன், மோடி, ஜெயலலிதா என அனைவரையும் பாராட்டியும், கண்டித்தும் அந்தெந்த சூழலுக்கேற்ப விமர்சித்து இருக்கிறோம். இனியும் தொடரும்...

அப்பல்லோ - பத்திரிகையாளர் சந்திப்பு:

ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தியதாக அவர்கள் ஒத்துக்கொண்டதே ஒருவகையில் உண்மையை அவசர அவசரமாக உளற தொடங்கிருக்கிறார்களோ என சிந்திக்க வைக்கிறது. ரிச்சர்ட் பீலே சொல்லிருக்கும் எல்லா விளக்கங்களும், ஏற்கனவே பலராலும் கேட்கப்பட்ட கேள்விகளிலிருந்து குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக திண்ணையில் எழுதிக்கொடுத்த கடிதம் போலவே தோன்றுகிறது. மேனாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து சரியாக இரண்டு மாதங்கள் கழித்து, அவரது தோழி அதே முதல்வர் பதவியில் அமரும் வேளையில் அப்பல்லோ நிர்வாகம் திடீரென கோமா நிலையிலிருந்து சுயநினைவுக்கு திரும்பிருக்கிறது; தவளையும் தன் வாயால் கெடும்! என்பது போல அப்பல்லோவும் அதனை பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் கும்பலும் கெடும்.

இந்த அப்பல்லோ பத்திரிகையாளர் சந்திப்பு கலந்துரையாடல்களை உற்று கவனிக்கும் போது, 'பாபநாசம்' படம் தான் நினைவுக்கு வருகிறது. மீண்டுமொருமுறை கமல்ஹாசன், முன்கூட்டியே நடக்கவிருக்கும் நிகழ்வை படமாக்கி இருக்கிறாரோ என எண்ண வேண்டிருக்கிறது. 2000ம் ஆண்டு 'ஹேராம்' படத்தில் குஜராத் கலவரத்தை முன்னதாகவே காட்சிப்படுத்திருப்பார். 2003ல் 'அன்பே சிவம்' படத்திலேயே சுனாமி பற்றி பேசிருப்பார்; 'தசாவதாரம்' படத்தில் எபலோ வைரஸ் பற்றி முன்னதாகவே சொல்லிருப்பார். அந்த பட்டியலில் இப்போது பாபநாசமும் சேர்ந்திருக்கிறது.

எதிரணியில் ஓ.பி.எஸ்.:

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜெ. அணி, ஜா. அணி என இரண்டாக பிளவுப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு, சசி அணி, தீபா அணி, ஓ.பி.எஸ். அணி என மூன்றாக பிளவுபட்டு நிற்கிறது. போற போக்கை பார்த்தால், ஜெயலலிதா பிறந்த நாளன்று ஜெ.தீபா தனிக்கட்சி தொடங்குவதற்கு முன்னதாகவே ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்கிவிடுவார் போல; ஊரே அந்த கும்பலை நடிப்பதாக கழுவி ஊற்றுகிறது; ஆனால் அந்த கும்பலோ, ஓ.பி.எஸ் நடிப்பதாக சொல்கிறது, தங்கள் கட்சியின் தலைமையே நடிகர்கள் தான் என்பதை மறந்து! போயஸ் கார்டனை, 'அம்மாவின் இல்லம்' என இரண்டொருமுறை அழுத்தம் திருத்தமாக ஓ.பி.எஸ் சொன்னதில் கூட ஏதோவொரு செய்தியை அதன்பின்னால் மறைமுகமாக சொல்லிருக்கிறாரோ என தோன்ற வைக்கிறது.

”சிங்கப்பூர், மலேசியா, லண்டன் என உலகின் எல்லா பகுதியிலிருந்தும் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தரச்சொல்லி தொடர்ச்சியாக என்னுடைய செல்போனுக்கு அதிக கால்கள் வருகிறது. அவர்கள் நிறைய செலவு செய்து, வாட்சப், பேஸ்புக் மூலமாக ஒரு பெரிய நெட்வொர்க்கை உருவாக்கி பலரும், ஓ.பி.எஸை ஆதரிக்க சொல்கிறார்கள்.” என தந்தி தொலைக்காட்சியின் 'கேள்விக்கென்ன பதில்' நிகழ்ச்சியில் ஓ.எஸ்.மணியன் இப்படி சொல்கிறார். அந்த பெரிய நெட்வொர்க், தானா சேர்ந்த கூட்டம். அதுவும் ஜியோவால் சேர்ந்த கூட்டம் என்பதை சசிகலா குடும்பத்தின் ஆதரவாளரான  அவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை போல. :)

சசிகலாவின் அவசரம்:

ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆர்வத்தை ஊட்டியதே நான் தான் என்று சசிகலா சொல்லிருக்கிறார். ஊட்டியது, அரசியல் ஆர்வத்தையா? இல்லை ஆகாரத்துல விசத்தையா?ன்னு மக்கள் கேட்கிறார்கள். நல்லவேளை இந்த கொடுமையையெல்லாம் கேட்க ஜெயலலிதா இப்போது உயிரோடு இல்லை.

பொதுச்செயலாளர் பதவிக்கே தகுதி இல்லையென கட்சி விதிகள் சொல்கின்றன; அதற்குள்ளாக, அவைத்தலைவர், பொருளாளர் என சக பெருந்தலைமைகளில் உள்ளவர்களையே நீக்கினால் யாருக்கும் லாபம்? ஒட்டுமொத்த தொண்டர்களில் 99% பேர் தற்காலிக பொதுச்செயலாளருக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். அதனால் அவர்களை கட்சியிலிருந்து நீக்கிவிட முடியுமா? இன்னும் சொல்லப்போனால், கட்சி விதிகளின் படி, தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது. அவசர அவசரமாக, தவறான வழிகாட்டுதலால், மிகத்தவறான முடிவுகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆத்திக்காரனுக்கு புத்தி மட்டும் என்பது போல, தான்தோன்றித்தனமாக அந்த கூடாரத்திலுள்ள பலரும் பலதரப்பட்ட முடிவுகளை எடுப்பதால் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் முதன்மை காரணம்; தங்க முட்டையிடும் வாத்தை கொன்ற பிறகு அதன் மூலம் இத்தனை வருடங்களாக கிடைத்த லாபம் மட்டும் எப்படி இனி கிடைக்கும்?

ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவதை பற்றி அவரே முடிவு செய்வாரென அப்பல்லோ ரெட்டி சொன்னதை ஏற்றவர்கள், ஆளுநர் ராவை மட்டும் எதிர்ப்பது ஏன்? அவரே முடிவு செய்யட்டுமே?! 75 நாட்கள் அப்பல்லோவில் நடந்ததும் தெரியவில்லை; 5 நாட்களாக கூவத்தூரில் நடப்பதும் தெரியவில்லை. இதையெல்லாம் பொறுமையாக மக்கள் வேடிக்கை பார்க்கவில்லையா? அவ்வளவு ஏன் அவசரம்?

”ஜெயலலிதாவின் சடலம் தான் அப்பல்லோவிற்குள் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே ஜெயலலிதா இறந்து விட்டார்; அவர் இறந்த பிறகு தான் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார்; அவரது உடலை பதப்படுத்தப்படுத்தவே கன்னத்தில் மூன்று துளைகள் இடப்பட்டன” என அப்பல்லோவில் பணிபுரிந்த ராமசீதா சொல்லிருக்கிறார். அப்படியெனில் இதில் பலர் கூட்டு களவாணிகளாக இருந்திருக்கின்றனரோ என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆனால் இதுவரையிலும் அதைப்பற்றி யாருமே வாயை திறக்காமல் கள்ள மெளனம் காக்கின்றனர் என்பது கூட மிக அழுத்தமான சந்தேகங்களை அனைவரது மனதிலுள் எழுப்பி வருகிறது.

கூவத்தூர் கூத்து:

"நாங்க ஜாலியா இருக்கோம்!"ன்னு சொல்கின்ற பன்னாடைகளில் ஒன்றிரெண்டாவது ஆளே காலியாகி பாடையில் தான் போகுமென தோன்றுகிறது. நீங்க குடியும், குடித்தனமாக கூவத்தூரில் கூத்தடிக்கத்தான் வாக்களித்தோமா? நல்ல காற்று, நல்ல தண்ணீர், நல்ல சுற்றுச்சூழல் இவையெல்லாம் அந்த ஸ்டார் ஹோட்டலில் மட்டும் தான் கிடைக்கிறதா? தமிழ்நாட்டில் வேறெங்கும் கிடைக்காதா? ஊர்க்காரனுக்கே யாரென தெரியாதவனையெல்லாம், ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக அடையாளம் காட்டியதன் விளைவை இன்று அனுபவிக்கிறோம். கூவத்தூரில் குதூகலமாய் கும்மியடித்து கொண்டிருக்கும் இந்த அரசியல் பொறுக்கிகளெல்லாம், தன்னுடைய தொகுதிக்குள் செல்லும் போது, கண்டிப்பாக அடையாளம் தெரியாதவர்களால் செருப்படி வாங்குவார்கள்.
130 எம்.எல்.ஏ.க்களுக்கும் தங்களுக்கு வாக்களித்த அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் எண்ணம் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், காசுக்காக கூத்தாடி கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுக்கே அவமானமாக இருக்காதா? மானங்கெட்ட அரசியலின் உச்சம் இது. த்தூ!

குடியும், குடித்தனமாக தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த பேரம் என்ற போதை இரண்டு நாட்கள் கடந்தும் தெளியவில்லை. கறிக்கடையில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகளுக்கும் கூட இலைதழையென கவனிப்பு அதிகமாகவே இருக்கும்; ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் அந்த ஆடுகளெல்லாம் மட்டன் பீசுகளாக மேலே தொங்கவிட பட்டிருக்கும். இதுதான் இன்றைக்கு கூவத்தூரில் கூத்தடித்து கொண்டிருக்கும் எம்.எல்.ஏ.க்களும் விரைவில் நடக்கவிருக்கிறது. ஆனால், இந்த அரசியல் செம்மறி ஆடுகளை தோலுரித்து தொங்கவிடப்பட போவது, அந்த கூடாரமா? இல்லை; மக்கள் அதிகாரமா? என்பதற்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும்.

இனி குடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்:

அனைத்து திறமையுமுள்ள தினகரனுக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும். அந்த பதவிக்குரிய அனைத்து தகுதிகளும் அவருக்கு உண்டு. ஜெயலலிதாவிற்கு அரசியலில் அடைக்கலம் கொடுத்த சசிகலாவையே வழிநடத்திய தினகரனே முதல்வராக வேண்டுமென்ற கோரிக்கைகளும் விரைவில் எழும். ஊசாலுடும் இந்த உயிருக்கு நிறைய செலவழித்து இன்று தற்காலிக சுவாசத்தோடு இயங்க வைக்கப்பட்டுள்ளது; நிரந்தரம் என்பதே இங்கில்லை, நிரந்தர பொதுச்செயலாளர் போல; இனி ஒவ்வொரு நாட்களும் எண்ணப்படும், கூடவே ஜாலியாக இருந்த 124 தலைகளையும் தான்!

- இரா.ச. இமலாதித்தன்

03 மார்ச் 2016

ஓ.பி.எஸ் எனும் விசுவாசி!



கடலூர் நிவாரண பணிகளின் போது எடுக்கப்பட்ட இந்த ஒற்றைப்படம் போதும் ஓ.பி.எஸ். என்ற பச்சைத்தமிழனின் எளிமையை.

அனைத்து தரப்பட்ட மக்களாலும் அறியப்பட்ட, ஊழல் கறை படியாத ஓ.பி.எஸ் என்ற தமிழர் முதலமைச்சராக ஆவதை வரவேற்க காத்திருக்கிறது இந்த ஒட்டுமொத்த தமிழ்நாடும். தமிழகத்தில் எந்த தொகுதியில் சுயேட்சையாக நின்றாலும் கூட, மாபெரும் வெற்றி பெறும் வல்லமை அவருக்குண்டு.
வருங்கால தமிழக முதலமைச்சர் ஓ.பி.எஸ்க்கு சக தமிழ் வாக்காளனாக வாழ்த்துகள்!

ஓ.பி.எஸ் மீது என்ன தான் மாற்று கருத்து இருந்தாலும், அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு அடுத்தது அவர்தான் என்பதில் துளி கூட சந்தேகமில்லை. ஓ.பி.எஸ் ஒருவர் மட்டும் தான் இருமுறை தமிழக முதலமைச்சராக இருந்த, படித்த பட்டதாரி தமிழர் என்பதும் யாரும் மறுக்க முடியாத சமகால அரசியல் வரலாறு.

Time to Lead!

20 நவம்பர் 2015

தேநீர் கடைகளும் தேசத்தை ஆளலாம்!




இதைத்தான் எதிர்பார்க்கிறோம் ஒவ்வொரு முறையும். முன்னாள் முதல்வராக, நிதித்துறை அமைச்சராக இருந்த போதும் பொது இடங்களில் தலைமையின் காலைத்தேடி முதுகு குனிந்தே பார்த்த நாங்கள் இதைத்தான் எதிர்பார்த்தோம். தரையில் அமர்ந்திருந்தாலும் கம்பீரமாய், முதுகெலும்போடு, தமிழனாய் நிமிர்ந்த இந்த ஒரு படம் போதும்.

தேநீர் கடைகளும் தேசத்தை ஆளலாம் என்ற நம்பிக்கை விதையை, சாமானியன் மத்தியிலும் ஆழமாய் விதைத்த, மாண்புமிகு ஓ.பன்னீர் செல்வம் கையிலும் தேநீர் கோப்பை, கடலூர் வெள்ள நிவாரண பணிகளின் போது!

- இரா.ச.இமலாதித்தன்

27 மே 2015

அரசியலுக்குள் ஊழல்!

ஜெயலலிதா முதல்வர் பதவியில் இல்லாத போது எந்தெந்த துறைகளில் முறைகேடுகள் நடந்தது என்பது பற்றி ரகசிய விசாரணை நடத்த, முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் மூலம் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசம் இருந்த பொதுப்பணித்துறை மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் வசம் இருந்த சுகாதாரத்துறை ஆகிய இரு துறைகளிலும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அந்த ரகசிய குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

- விகடன்


இரண்டு துறைகளிலும் வெறும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தான் ஊழல் நடத்து இருக்கா? ச்சே, ஊழலுக்கு இருக்கிற கெளரவத்தையே குறைச்சிட்டாய்ங்களே. எங்க ஊரு காரர் ஜெயபால்கிட்ட இருக்கிற மீன்வளத்துறை உள்பட மிச்சம் இருக்கிற அமைச்சகங்களை விசாரணை பண்னி பாருங்கய்யா. அப்போதான் ஊழல் பண்னின தொகைக்கு ஒரு மரியாதையே கிடைக்கும்.

09 ஜனவரி 2015

ஆண்ட பரம்பரை!

இனியும் இந்த ’ஆண்ட பரம்பரை’ போன்ற வெற்று பெருமை பேச்சுகள் எடுபடாது. ஒழுக்கமா இரு, ஓரளவுக்கு படி, நிறையா சம்பாரி, முடிஞ்சா உன் ஆண்ட பரம்பரையிலேயே வறுமையில் வாடும் பத்து பசங்களுக்கான படிப்பு செலவை நீ பண்ணு. அது போதும், உன் பெருமையை உன் சந்ததி பேச. என்னைக்கோ, எவனோ ஆண்டதுக்கு நீ ஏன் இன்னைக்கு பெருமை பேசுற? இன்னைக்கு தமிழ்நாட்டோட முதலமைச்சரே நீ சொல்ற அதே ஆண்ட பரம்பரை தான். அதுனால நீ போய் ஓ.பி.எஸ் கிட்ட உரிமையா எதாச்சும் கேட்டு வாங்க முடியுமா? ஆண்ட பரம்பரைக்கு அடையாளமா மாத்தி வச்சு அரசியல் பண்ற பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு கூட அக்டோபர் 30 அன்னைக்கு தடையில்லாம போக முடியல. இதுல இந்த ஆண்ட பரம்பரை என்ற வீண்பெருமை எதுக்கு? ஆண்டபரம்பரை மட்டும் எல்லாவற்றையும் செய்ய முடியாது. மத்த சாதி சனத்தோட அனுசரணை இல்லாமல் ஒரு அணுவும் அசையாது. எதார்த்தம் இது தான். எல்லாரையுமே சக மனுசனா பாரு. காலம் போக போக எல்லாம் மாறும். இப்போவே அரசு அலுவலங்களில் பெரிய பதவியில் இருப்பது அனைவரும் ஆண்டபரம்பரை இல்லையே. ஆனால், ஆண்டபரம்பரைன்னு சொல்லிக்கிற எல்லாரும் அந்த அரசு அலுவலர்களை ஏதோவொரு சந்தர்பத்தில் சாரு சாருன்னு கெஞ்சிக்கிட்டு தானே கிடக்க வேண்டிருக்கு. மொதல்ல நீ ஆள்றதுக்கான தகுதியை வளர்த்துக்க. அதுக்கப்பறமா இந்த ஆண்டபரம்பரை கோஷம் போடலாம்.

- இரா.ச.இமலாதித்தன்

25 அக்டோபர் 2014

பாலுக்கும் பால் ஊத்தியாச்சு!

பால் விலையை லிட்டருக்கு பத்து ரூபாய் ஏற்றியுள்ள தற்போதைய தமிழக முதல்வரும், முன்னாள் டீக்கடை காரருமாகிய திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக இருமுறை டீ குடிக்கும் குடிமகனான அடியேனின் நன்றி!

டீக்கடைக்காரனாகவே வாழ்க்கையை ஓட்டியிருந்தால் இந்நேரம் பால் விலை உயர்வுக்கு ஆளும் வர்க்கத்தை சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்திருப்பார் திரு. ஓ.பி.எஸ். அவர் நேரம், பரணி தரணியை ஆண்டு கொண்டிருக்கின்றது. பிறந்த குழந்தைக்கு கூட தாய்ப்பால் கிடைக்காமல் பாக்கெட் பாலை நம்பி வாழும் தமிழ் சமூகத்திற்கு, இந்த பால் விலை உயர்வு பெரும்சுமையாக இருக்கும். கண்டிப்பாக இது வரும் தேர்தலிலும் எதிரொலிக்கும்.

நடுத்தர எளிய மக்களின் ஒரு வேளை உணவாகவே இருந்து வரும் இந்த டீ/காபியின் மூலப்பொருளான பால் விலையை 24 ரூபாயிலிருந்து 34 ரூபாய்க்கு ஏறத்தாழ 50% விலையேற்றத்தால் பாதிக்கப்படுவதும் பெரும்பாலும் ஏழை மக்கள் தான். போற போக்கை பார்த்தால் சாவுக்கு கூட மூன்றாம்நாள் பால் தெளிக்க மாட்டாங்க போலிருக்கு. அந்த நிலை ஏற்படும் முன்னரே மக்கள் விரோத அரசுக்கும் தேர்தலில் பால் ஊத்திடுவாய்ங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா, நம்மாளுகளும் ரோசக்காரய்ங்க* தான்...

*200 ரூபாய் வாங்காத வரைக்கும்!

- இரா.ச.இமலாதித்தன்

18 அக்டோபர் 2014

தேவனும் தொட்டி மீனும்!

தேவர் சாதியினரை பழமைவாதி எனவும், தொட்டி மீன்கள் என்றும் சிலர் இங்கே சொல்வதை அறிய முடிகின்றது. எனக்கு இந்த தொட்டி மீன்களை பற்றியும் தெரியும். கூடவே விலாங்கு மீன்களை பற்றியும் தெரியும். ஏனெனில் தொட்டி மீனாவது பழமைவாதி போல கிணற்று தவளையாக இருந்துவிடும். ஆனால் இந்த விலாங்கு மீன் என்பது, மீனுக்கு முகத்தையும் – பாம்புக்கு வாலையும் காட்டி உயிர்பிழைக்கும். அது போலத்தான் இங்கே பல சாதி ஒழிப்பு போராளிகள் இருக்கின்றனர். வெளியில் தலித்/ சிறுபான்மை/ சாதி ஒழிப்பு/ ஆதிக்க சாதிவெறி யென பேசி விட்டு, சாதிய அடிப்படையில் கிடைக்கும் சலுகைக்கு பின்வாசலை ஏறுவர்.

தேவன் என்பதில் என்ன போலி பெருமை இருக்கின்றது. இதில் என்ன போலியை கண்டு பிடிக்கின்றனர் என்பதே தெரியவில்லை. வழி வழியாக என் பாட்டன் அடைக்கலத்தேவன், தாத்தன் இராமமிர்த தேவர், என தந்தை வழியாக உபயோகப்படுத்தி வந்த தேவன் என்ற பட்டத்தை நான் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கு? இதை பெருமையாகவோ – சிறுமையாகவோ – போலியாகவோ நான் நினைத்ததில்லை. இது எனக்கான அடையாளம் அதில் பெருமை என்று மற்றவர்கள் நினைத்தால் நான் செய்ய முடியும்? அதிலும் போலி பெருமையென அவர்கள் சொல்வதில் எனக்கு எந்தவித கவலையுமில்லை. இந்த அடையாளம் தேவையா என்று அவர்களும் பதிலுக்கு கேள்வி கேட்கக்கூடும். அடையாளமில்லாமல் இங்கே எதுவுமில்லை. அது உயிருள்ள அனைத்துக்கும் ஓர் அடையாளமுண்டு. அதுபோலத்தான் இந்த தேவன் என்பதும். இங்கே தேவன் என்பதால் எந்த போலியும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

 
இங்கே பெரும்பாலானோரின் எண்ணமாக ஆட்சிபீடத்தில் இருக்கும் தேவரின அரசியல் வாதிகளை பற்றியே பேசுகின்றனர். எதார்த்தமாக யோசித்து பார்த்தால், பணம் பதவி புகழ் என்பதெல்லாம் கிடைக்கும் என்று தோன்றினால் சாதி/மத வேறுபாடின்றி எவன் காலிலும் விழ எந்த மத/சாதிக்காரனும் காத்துக்கொண்டு தான் இருக்கின்றனர். அதுபோலத்தான் தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் தேவரின தலைவர்களும் தங்களது இடத்தை தக்க வைத்து பணம் பதவி புகழை சம்பாரிக்க ஜெயலலிதா/கருணாநிதி என பலரது காலிலும் விழுந்து கிடக்கின்றனர்.

இதில் இங்கே அடிமையாக இருக்கும் அடிமை அடையாளமான ஓபிஎஸ் பற்றியெல்லாம் யாருக்கும் கவலை இல்லை. வேண்டுமென்றால், தேவர் சாதியை சார்ந்த ஒரு ஆள், தமிழக முதலமைச்சராக இருந்தார் என பின்னாட்களில் சொல்லிக்கொள்ள மட்டுமே உதவும். மத்தப்படி எவன் ஆட்சியில் இருந்தாலும் எவனுக்கும் லாபமில்லை. அவன் என்ன சாதியாக இருந்தாலும்… இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் ஓபிஎஸ் போன்றோர் தான் ஒட்டுமொத்த தேவரினத்தின் அடையாளமென நினைப்பதும், இந்த சாதியை சேர்ந்தவர்கள் அனைவரும் சாதிவெறியர்கள் என்றும் செம்மறி ஆட்டு மந்தை போன்ற எண்ணத்தை மனதில் இருந்து தகர்த்தெறிய முனையுங்கள். அதை விட்டுவிட்டு, சாதிவெறியன் என்று சொல்லும் ஒவ்வொரு முறையும், சாதி பாகுபாடற்ற மனநிலையில் உள்ள பல தேவர் சாதி தமிழனை, இன்னும் சாதி வெறியனாக மாற்றிக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதே நிதர்சனம்.


- இரா.ச.இமலாதித்தன்

17 அக்டோபர் 2014

சாதி தேவையில்லை, ஆனால் சாதிக்கொரு முதல்வர் தேவை!

தமிழகத்தில் அடுத்த ஆறு மாதத்தில் சுழற்சி முறையில் (கவுண்டர், வன்னியர், தலித் என) ஒவ்வொரு சாதி எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்வர் பதவி வழங்கப்படலாம். - செய்தி.


இந்த முடிவு உண்மையெனில் அது முட்டாள் தனமானது என்பதை செல்வி ஜெயலலிதா பின்னாட்களில் புரிந்து கொள்வார். ஓ.பி.எஸ் முக்குலத்து சமுதாயம் என்றாலும், தனிப்பட்ட முறையில் சாதிக்காக எதையும் செய்ததில்லை. ஆனால் பரமக்குடி சுந்தர்ராஜன் - பள்ளர் சாதி என்பதால், அமைச்சராக இருக்கும் போதே பல விசயங்களை தன்னுடைய சாதிக்கு செய்கிறார் என்பது அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டாக இருக்கின்றது. முக்கியமாக, ஓபிஎஸ் உள்ளிட்ட ஒருசில பேர்களை தவிர இரண்டாம் கட்ட தலைவர்களே அதிமுகவில் இல்லை. மூன்றாம் கட்ட தலைவராக இருக்கும் ஒருவரை, சாதியை காரணம் காட்டி முதல்வர் ஆக்கினால் ஆட்சி ஏளனமாக்கப்படும். குறிப்பிட்டவர்களின் ஆட்சிக்காலத்தில் சாதிய முத்திரை குத்தப்படவும் வாய்ப்பிருக்கின்றது. உட்கட்சிக்குள் யார் பெரியவன் என்ற ஈகோ வளரும். உள்ளடி வேலைகளால் ஆட்சிக்கு களங்கமும் விளையும். எனவே, இப்போது உள்ள நிலையில் ஓபிஎஸ்சை அனைவரும் ஏற்று கொண்டு விட்டார்கள். அதனால் அவரே மீதமுள்ள ஆட்சிக்காலத்தையும் முழுமையாய் ஆள்வதுதான் விவேகமாக அமையும். பார்க்கலாம், புரளிகளை கிளப்பும் இந்த மஞ்சள் பத்திரிகைகளின் ஆருடத்தை...

- இரா.ச.இமலாதித்தன்

11 அக்டோபர் 2014

மு..க. - ஜெ. - ஓ.பி..எஸ்.

# அனைத்திந்திய அ.தி.மு.கட்சி முதல் நேற்று தொடங்கிய லெட்டர்பேடு கட்சி வரைக்கும், செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு (ஆதாயத்திற்காக) ஆதரவாக இன்னைக்கு தமிழ்நாடெங்கும் உண்ணாவிரதம் இருக்காய்ங்க. இவிய்ங்க எவ்ளோதான் பண்ணினாலும், தமிழீழ தனிநாட்டு விடுதலைக்காக திரு மு.கருணாநிதியின் மூனு மணி நேர உண்ணாவிரத ரெக்கார்டை எந்த கொம்பனாலயும் உடைக்கவே முடியாது.

# இந்த ’மக்கள் முதல்வர்’ என்ற பட்டத்தையெல்லாம் ரெண்டு மூனு வருசத்துக்கு முன்னாடியே புதுச்சேரியில திரு.என்.ரெங்கசாமி தனிக்கட்சி ஆரம்பிக்கும் போதே பார்த்தாச்சு. புதுசா ஏதாவது சொல்லிருக்கலாம்.

# இறைவா, எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன்; நண்பர்களை நீ பார்த்து கொள்! - இது ரஜினியோட பஞ்ச் டயலாக். இப்போது செல்வி. ஜெயலலிதாவுக்கும் இது பொருந்துகிறது. சொந்த கட்சி காரய்ங்களே ஆர்வ கோளாறுல கவுத்து விட்டுருவாய்ங்க போலிருக்கு.

# தகுதி இல்லாதவரிடம் மிகப்பெரிய பதவி வந்தால், அந்த பதவியின் தகுதியும் ஏளனமாக்கப்படும் என்பதற்கு ஓ.பி.எஸ். உதாரணமாகிவிட கூடாது. மேலும், ஓ.பி.எஸ். வேண்டுமென்றால் அதிமுக தலைமைக்கு அடிமையாக இருக்கலாம். ஆனால், இன்று ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைவரென்ற பொறுப்பில் இருக்கின்றார். பொறுமையாவே இருக்காமல் கொஞ்சமாவது முதல்வர் என்ற பொறுப்போடு இருக்கலாம்.

# போற போக்கை பார்த்தால் ஜெயா ப்ளஸ் சேனல் கூட செல்வி.ஜெயலலிதாவை மறுந்துடும் போலிருக்கு! திரு.ராமதாஸ், திரு.கருணாநிதி பற்றிய செய்திகள் தான் அதிகமா வருது.

# இலங்கையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்ட எங்க நாகை மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரும், "மக்கள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு நன்றி!ன்னு சொன்னதாக ஜெயாடிவில சொல்றாய்ங்க. ”ஒருத்தனுக்கு எழுந்திருச்சு நிக்கவே முடியலையாம்; அவனுக்கு ஒன்பது பொண்டாட்டியாம்!”ன்னு சொல்ற சந்திரமுகி படத்துல வர வடிவேலு வசனம் தான் ஞாபகத்துக்கு வருது.

# தற்போது திரு. ஓ.பி.எஸ் தலைமையிலான தமிழக அரசின் சார்பில் வெளிவரும் வாழ்த்து / கண்டன அறிக்கைகளுக்கும், செல்வி ஜெ.ஜெயலலிதாவின் சார்பில் முன்பு வெளிவந்த வாழ்த்து / கண்டன அறிக்கைகளுக்கும் எந்தவித மாற்றமும் இல்லை. அந்த 11 பேர் கொண்ட குழுக்கு வாழ்த்துகள்!

# உண்ணாவிரதம் இருக்குறதுக்கே, கையில பணம் கொடுத்து, வயித்துக்கு குவார்ட்டரும் - பிரியாணியும் கொடுக்குறாய்ங்க. இதுல எப்படி சுத்த பத்தமா விரதம் இருக்க முடியுமாக்கும்?

# இதுவரை திரு. மு.கருணாநிதியின் வயதை காரணம் காட்டி முதுமையை விமர்சித்து வந்த அ.இ.அ.தி.மு.க.வினர், இப்போது உச்சநீதிமன்றத்தில் வயதை காரணம் காட்டி ஜாமீன் கேட்டு காத்திருக்கும் செல்வி. ஜெ.ஜெயலலிதாவையும் விமர்சிக்க தி.மு.க.வினருக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றனர் என்பதுதானே உண்மை.

# திரு. மு.கருணாநிதியை விமர்சிக்கும் போதுதான் முறுக்கிய நரம்புகளோடு தெறிக்கும் பேச்செல்லாம் திரு. சீமானுக்கு வரும் போல! ஜாமீனுக்கு ஜால்ரா அடித்தால் தான் திரு. வைகுண்டராஜனுக்கு பிடிக்கும் என்பதால், அநேகமாக 2016 தேர்தலின் போதுதான் இனி களமாடுதல் இருக்கும்ன்னு நினைக்கிறேன். வருங்கால முதலமைச்சர் என்ற கனவில் இருப்பவருக்கே இந்த நிலைமையா?

- இரா.ச.இமலாதித்தன்