22 செப்டம்பர் 2021

வாழ்த்துகள் சொல்வதென்ன அத்தனை பிரமாதமான விசயமா?


        ன் மீது இத்தனை அன்பு வைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நன்றி! இத்தனை பேர்களின் வாழ்த்து என்ன செய்து விட போகிறது? ஒரு பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் சொல்வதென்ன அத்தனை பிரமாதமான விசயமா? என என்னிடம் யாராவது கேட்டால், இல்லையென்றோ ஆமாமென்றோ சொல்லத் தெரியவில்லை.


        ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் வரவின் பின்னால் பிறந்தநாள் உள்ளிட்ட எந்தவொரு நாட்களையும், சம்பந்தப்பட்ட நபரே மறந்தாலும் அவரது நட்பு வட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு அந்த நாளிலுள்ள சிறப்பை சுட்டிக்காட்ட அது தயங்குவதில்லை. அப்படித்தான் அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிறந்தநாளோ, திருமணநாளோ, நல்லதோ, கெட்டதோ எம்மாதிரியாக இருந்தாலும் கடந்த ஆண்டின் மெமரிஸ் வழியாக கூட அனைவருக்கும் காட்டிக்கொடுத்து விடுகிறது. இப்படியான ஒன்றின் மூலமாக பலரிடமிருந்து பெறப்படும் வாழ்த்துகளை வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது? என்று பலர் நினைக்கவும் வாய்ப்புண்டு. இதில் பெருமை ஏதுமில்லை தான். ஆனால் அதை தாண்டிய ஒரு பலம் அதிலுள்ளது. ”நமக்கென யாருமில்லையோ!” என்ற மிகப்பெரும் தனிமையை அது ஆழ்மனதில் இருந்து நீக்கும் பேரொளியாக இருக்கிறது.


        எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து ஒவ்வோர் ஆண்டுமே, என்னுடைய பிறந்தநாளை பெரிதும் கொண்டாடும் எண்ணவோட்டத்தில் நான் இருந்ததில்லை. இந்த நாளும் மற்றைய நாள் போன்றது தான் என்ற மனநிலையில் தான் இருந்திருக்கிறேன். ஆனாலும், அன்றைய நாள் விடுமுறை நாளாக இருந்தால், வேதாரண்யம் அருகிலுள்ள கடிநெல்வயலில் உள்ள குலதெய்வ கோவிலான (வேம்புடையார் என்கிற) வேம்படி ஐயனாரை தரிசிக்க செல்வேன். வேலை நாட்களெனில், அந்த வாரத்தில் ஒரு நாள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவதுண்டு. இல்லையெனில், அன்றைய நாளின் காலையிலோ, மாலையிலோ அருகிலிருக்கும் சிவாலயத்திற்கோ, முருகன் கோவிலுக்கோ செல்வதுண்டு. அதிகபட்சம் ஓர் அர்ச்சனையோடு அன்றைய நாள் கடந்து விடும். ஆனால், நமக்கு மட்டுமே தெரிந்த நாளானது, இந்த சமூக ஊடகங்களின் தயவால் ஊரறிய தம்பட்டம் அடிக்கப்படுகிறது. அந்த ஓசையினால், நானும் ஏதோ ஆடிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி இதில் கொண்டாட்டமோ, பெருமிதமோ வேறொன்றுமில்லை.
 
        இன்னும் சொல்வதென்றால். நான் பிறந்தது ஆங்கில நாட்காட்டி படி, செப்டம்பர் 21. அப்படியானால் தமிழ் மாதம் புரட்டாசி ஐந்தாம் நாள். அதிலும் நட்சத்திரப்படி புரட்டாசி கேட்டை அன்று என் பிறந்தநாள் இதுவென கணக்கிலெடுத்திருக்கிறேன். புரட்டாசி முதல் சனிக்கிழமையை கணக்கில் எடுத்திருக்கிறேன்; புரட்டாசி ஐந்தாம் தேதியை கணக்கிலெடுத்திருக்கிறேன்; புரட்டாசி வளர்பிறை ஷஷ்டி திதியை கணக்கில் எடுத்திருக்கிறேன். இப்படியாக என் பிறந்தநாளை பலவாறு கணக்கில் கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் இதை பற்றி ஆய்வுகளையெல்லாம் கடந்து அமைதியாக கடந்திருக்கிறேன்.


        ஆர்குட், கூகிள் பஸ் காலத்திலிருந்தே இதே ஊடகத்தில் நிறைய கசப்பான நிகழ்வுகளும், பலரின் வசவுகளையும், கேலி கிண்டல், மிரட்டல்கள் என பலதரப்பட்ட விமர்சனங்களையும் பார்த்து வந்திருக்கின்றேன். ஆர்குட் முழுவதும் மூடப்பட்ட பின்னால், 2009ம் ஆண்டு முதல் இந்த ஃபேஸ்புக்கின் வாயிலாக இயங்கி வருகின்றேன். அன்றிலிருந்து இன்று வரை என் நட்பு வட்டத்தில் இணைந்திருந்தவர்களை கணக்கிலெடுத்தால், விலகியவர்களின் பட்டியலே ஆயிர கணக்கில் இருக்கும். ஆனாலும், ஆர்குட் காலத்திலிருந்து இன்று வரை நட்பிலிருக்கும் உறவுகளும் இன்னும் உண்டு.

 
        இந்த சமூக ஊடகங்களின் உதவியால், என்னை உடன்பிறந்தானாக பார்க்கும் அன்பிற்கினிய அண்ணன்களும், தம்பிகளும், பாசமிகு பங்காளிகளும் இங்கே கிடைத்திருக்கின்றனர் என நினைக்கையில் வேறென்ன சொத்துபத்து நமக்கு வேண்டும் என, மன உளைச்சலுக்கு ஆளான நேரங்களில் ஆசுவாசப்படுத்தி கொண்டதும் உண்டு. எவ்வித கைமாறும் செய்யாமல், ஊரெங்கும் இத்தனை பேர் எனக்கென அன்பொழுக பாசத்தோடு அரவணைக்க தோள் கொடுக்க இருக்கின்றனர் என நினைக்கையில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

 
        என் வாழ்வில் எனக்கு நேர்ந்த எல்லாவிதமான சுக துக்கங்களில் உள்ள மனக்குமுறல்களை என் நெருங்கிய உறவினர்களோடு, என் குடும்பத்தினரோடு பகிர்ந்ததை விட, இங்குள்ள இணைய உறவுகளோடு அலைபேசியின் வாயிலாக நான் பகிர்ந்து கொண்ட செய்திகளே அதிகம். இப்படியானதொரு பிணைப்பை, நெருக்கத்தை ஆர்குட், ஃபேஸ்புக், வாட்சப் போன்ற சமூக ஊடகங்களே சாத்தியப்படுத்திருக்கின்றன. இணையம் கொடுத்திருக்கும் இப்படியானதொரு வாய்ப்பை அனுபவிக்கும் நாம் அனைவருமே இந்த விசயத்தில் கொடுத்து வைத்தவர்களே.

        ஏதோ பழைய நோட்டு தாள்களில் கிறுக்கி கொண்டிருந்தவனை, நல்லா எழுதுறீங்கற. எழுதுங்க, தொடர்ச்சியா எழுதுங்க, உங்களுக்கு நல்லா எழுத வருது... என நம்பிக்கையூட்டி எனக்கென ஓர் அடையாளத்தை என் எழுத்துகளின் மூலமாகவே எனக்கு கொடுத்ததும் இதே சமூக ஊடகங்களில் இயங்கிய உறவுகள் தான். பூகோள ரீதியாக அவர்களெல்லாம் ஆளுக்கொரு மூலையில் மாவட்டமாக, நகரமாக, ஊராக பிரிந்து இருந்தாலும், என் மீது இத்தனை நெருக்கமும், பாசமும், அன்பும், உரிமையும் வைத்திருக்கின்ற இத்தனை பெரிய உறவு கூட்டத்தை எனக்களித்த இப்பிரபஞ்ச பேரருளுக்கு இந்நாளிலும் என் நன்றி!

- இரா.ச. இமலாதித்தன்