காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 டிசம்பர் 2017

சாதி மறுப்பு திருமணத்தின் மறுபக்கம்!

இந்த அரச கொலைக்கு எதிராக பதிவிட அவர்கள் குடும்பம் சார்ந்த குறிப்பிட்ட சாதியான கள்ளர் என்பது காரணமில்லை. பக்கத்து வீடு தீப்பற்றி கொண்டால் நம் வீடும் நாளை பற்றிக்கொள்ளும் என்ற அடிப்படையில் தான் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். இதில் அகமுடையார் மட்டுமல்ல; திருமணம் என்பதே குடும்ப கெளரவம் சார்ந்தது என்ற அடிப்படையில் வாழும் அனைத்து இனக்குழுக்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். குடும்பமென்ற உயரிய அமைப்பின் கெளரவத்தை பாதிக்கும் பிரச்சனையாக பார்க்கும் பெற்றோர்களின் ஆதரவு இல்லாத சாதி மறுப்பு திருமணங்களை எதிர்க்கும் அனைவருமே இந்த நீதிமன்ற கொலையை எதிர்ப்பார்கள்; எதிர்க்கிறார்கள். இதில் முக்குலமும் இல்லை; அதில் அகமுடையாரும் இல்லை.
தானாடாவிட்டாலும் தன் சதை ஆடுமென்ற கணக்கீடெல்லாம் இதற்கு ஒத்து போகாது. அப்படி பார்த்தால், இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் வன்னியரும், நாடாரும் கூட இருக்கின்றனர். அவர்களுக்கும் கள்ளருக்கும் என்ன சதை உறவு இருக்கிறது? இதை குறிப்பிட்ட சாதியின் பிரச்சனையாகவோ, சில சாதி கூட்டமைப்புகளின் பிரச்சனையாகவோ பார்க்க வேண்டியதில்லை.
எல்லா சாதிகளிலும் பெரும்பான்மையானோர் சாதி மறுப்பு திருமணங்களை ஏற்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னுடைய சாதியை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்வதற்கே இங்கு எதிர்ப்பு தான் அதிகமாக இருக்கிறது. இதில் சாதி மட்டும் பிரச்சனை இல்லை; சாதியோடு சேர்ந்த பொருளாதார நிலையும் தான் ஒவ்வொரு திருமணங்களையும் முடிவு செய்கின்றன. இந்த விசயத்தில் சாதிக்கும் சதைக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. ஏனெனில் ஒரே இரத்தமும் சதையுமாக பிணைந்துள்ள அதே சாதியில் காதலித்து திருமணம் செய்வதும் கூட இப்போதெல்லாம் எளிதல்ல.

24 ஜூன் 2016

சுவாதி கொலைக்கு பின்னாலும் அரசியல்!

நிகழ்வு 1:

பேஸ்புக்ல ஒரு மணிநேரத்துக்கு ஒரு போட்டோவை அப்லோட் பண்ற பொண்ணுங்களை பார்த்தாலே எரிச்சலாகும். இன்னைக்கு நிலவரபடி, பொண்ணு பேருல ஒரு ஃபேக் ஐடி, ஸ்டேடஸ்ல ஒரேவொரு புள்ளி வச்சாலே இரண்டாயிரம் லைக், ஆயிரம் கமெண்ட், ஐநூறு ஷேர் பண்ற ஆளுக இங்க இருக்காங்க. இந்த லட்சணத்துல தன்னோட போட்டோவை போட்டு சந்தோசப்படுற பொண்ணுங்களும் இருக்கத்தான் செய்றாங்க. அந்த போட்டோவுக்கு, செல்லம், க்யூட், அழகு, சூப்பர்மா, கலக்குறடி, தேவதை, செம்ம, இப்படியாக வழியும் ஆண்கள் ஒருபக்கம் இருக்க, அதை தனக்கான அழகியலின் அளவீடாக எடுத்துக்கொண்டு பெருமை பட்டுக்கொள்ளும் பெண்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்பறம் எவனாவது மனம்பிறழ்ந்தவன் அந்த போட்டோவை மார்பிங் செய்து, பலான வாட்சப்-ஃபேஸ்புக் குரூப்ல ஷேர் பண்ணின பிறகு நீலிக்கண்ணீர் வடித்து என்ன ஆகபோகுது?

ஊசி இடம் கொடுக்காமல் நூல் உள் நுழையவே முடியாது. ஆனால், ஊசிகள் தான் நூலை வலுக்கட்டாயமாக உள்ளே நுழைக்க பெரும் முயற்சிகள் செய்கின்றன என்பதுதான் சமகால எதார்த்தம். இங்கே சொல்லப்பட்டுள்ள எந்த வார்த்தையிலும் பெண்ணடிமைத்தனமோ, ஆணாதிக்கபோக்கோ இல்லை. கமெண்ட்களில் வழியும் ஆண்களோ, போட்டோக்களை பகிர்ந்து தன்னழகை பற்றி யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லாமென அனுமதிக்கும் பெண்களோ, இந்த இருவரிடமும் தவறுள்ளது. ஆனால், பல பிரச்சனைகளுக்கான வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் பெண்களே பெரும்பாலான பாலியல் குற்றங்களுக்கு காரணகர்த்தாக்களா இருக்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது!

நிகழ்வு 2:

சுவாதி கொலைக்கு எதிராக ஒய்.ஜி.மகேந்திரன் பதிவிட்ட சொல்லாடல்களில் தவறு இருக்கிறதே தவிர, அவரது கருத்துகளில் எந்தவொரு தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட சுவாதி, சாதியால் பறையராகவோ - பள்ளராகவோ இருந்திருந்தால், தமிழ்நாட்டின் போரட்டக்களமே வேறுமாதிரியாக இருந்திருக்கும். நாடார்களின் தந்தி தொலைக்காட்சியும் - நியூஸ்7 தொலைக்காட்சியும், உடையாரின் புதியதலைமுறை தொலைக்காட்சியும் தொடர் நேரலையாக இக்கொலைக்காக பல விவாதங்களை ஊடகங்களெல்லாம் நடத்திருக்கும். திருமாவளவன் - கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் அவசர கதியிலான கண்டன பேட்டிகள் அனைத்து அச்சு ஊடகங்களிலும் முதல் பக்கத்தை ஆக்கிரமித்திருக்கும். ம.க.இ.க. - பெ.வி.மு. போன்ற நக்சல் ஆதரவு இயக்கங்களும், மகளிர் சங்கங்களும், மனித உரிமை கழகங்களும், உண்மையறியும் குழுக்களும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும், தமிழ்நாட்டை அனல்பறக்க தெறிக்கவிட்டிருப்பார்கள்.

இதெல்லாம் சுவாதி விசயத்தில் துளி கூட நடக்கவில்லை என்பதற்கான ஒரே காரணம், அந்தப்பெண் பட்டியல் சாதி (தலித்) அல்லாத இதர பிற்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் தானே?! இந்த விசயத்தில் ஒய்.ஜி.மகேந்திரனின் கருத்தோடு மட்டும் ஒத்து போகிறேன்; அவர் பயன்படுத்திய கடினமான சொல்லாடலோடு அல்ல! தன்னோட சாதிக்காரனுக்கு வராத வரைக்கும், ரத்தமெல்லாம் தக்காளிசட்னி தான்!

மெட்ராஸ் படத்துல இரண்டு காட்சிகளில் ஒரு விசயத்தை மிக ஆழமாக பதிந்திருப்பார் இயக்குனர் ரஞ்சித். 'ஒரு பெண்ணை காதலிக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டா, நம்மள செருப்பால அடிச்சாலும் அந்த பொண்ணை விடாம துரத்தணும்; எப்படியாவது கரக்ட் பண்ணிடணும்' இதுதான் அந்த ஒன்லைன் மேட்டர். இப்படியாக இளைஞர்களின் ஆழ்மனதில் நஞ்சு விதையை விதைத்த இயக்குனர் ரஞ்சித் என்னதான் சொல்ல வருகிறார்? என்று ஆராய்ந்தால் ஒன்றுதான் புரிகிறது.

ஒரு பெண் பின்னாடியே ஒருத்தன் விடாப்பிடியாக துரத்தி துரத்தி காதலிக்கிறான்னு வச்சிப்போம். அந்த பொண்ணுக்கு இவன் மேல கொஞ்சம் கூட விருப்பமே இல்லாமல், அவனிடம் நாகரீகமாக சொன்னாலும், கோபமாக சொன்னாலும், அந்த பெண்ணை விட்டுவிட்டு ஒதுங்கிவிட கூடாது. திரும்ப திரும்ப அந்த பொண்ணை டார்ச்சர் பண்ணி, மிரட்டியாவது காதலை சம்மதிக்க வைக்க ட்ரை பண்ணணும். முடியாத பட்சத்தில், இந்த மணிகண்டன் மாதிரியான நபர்கள் சொன்னதுபோல, 'கோபத்துல உணர்ச்சி வசப்பட்டு கொன்னுடணும்!' இதுதான் ரஞ்சித்தின் ஆண்டைகளை பொசுக்குற கூட்டத்திற்கான செய்தி. ஆனால் இந்த சுவாதி விசயத்தில் பொசுக்க மறந்துவிட்டு, உணர்ச்சி வசப்பட்டு குத்திட்டாய்ங்க. அவ்ளோதான் வித்தியாசம்.

த்தூ...

16 மார்ச் 2016

சாதி மறுப்பு காதல்!


சாகடிக்கும் வரை காத்திருந்து அவன் சாதி எதுவென ஆராய்ந்த பின்பே புரட்சியாளர்களாக உருவெடுக்கலாமா? வேண்டாமா? என்பதையே முடிவு செய்கிறார்கள், ஈனபுத்தி கொண்ட நடுநிலை முகமூடிகள்.

இன்றைக்கு இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படுபவர்களில் எத்தனை பேர், சாதிவெறி பிடித்த அரசியல் பொறுப்பாளர்களின் பொதுமேடை பேச்சுக்களை கவனித்தது இருக்கிறீர்கள்? "கவுண்டனை வெட்டு; கவுண்டச்சியை கட்டு. தேவனை வெட்டு, படையாட்சியை வெட்டு, அவனுங்க வீட்டு பொண்ணை கட்டு." இப்படியாக ஊரூராக பேசி இளைஞர்களின் எண்ணத்தை சீர்குலைப்பதை பற்றி எந்த நடுநிலை பேசும் நபர்களாவது எதிர்ப்பு தெரிவித்து பேசியதுண்டா? இந்த மூன்று சாதி பெண்களை கட்டுவதால் இந்த மூன்று சாதிகளும் முற்றிலுமாக ஒழிந்துவிட போகிறதா என்ன? என்பது எனக்கு புரியவில்லை.

காதல் என்ற புனிதத்தை சீர்குலைக்கும் நோக்கில் சாதிவெறி பிடித்த நயவஞ்சகர்கள் பொதுமேடை அமைத்தும், வாராந்திர கூட்டம் ஒருங்கிணைத்தும் இளைஞர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள். காதல் என்பது இயல்பாக ஆண் - பெண் இருவருக்குள் வரும் ஆழ்நிலை மனவோட்டத்தை சார்ந்தது. அதை குறிப்பிட்ட இந்த மூன்று சாதிகள் மீது மட்டும்தான் வர வைக்க சிலர் சாதி அமைப்புகள் நடத்துவதை ஆண்மையுள்ள எந்த நடுநிலைவாதியாவது வாயை திறந்தது உண்டா?

இரு குடும்பத்தாரின் சம்மதத்தோடு எத்தனையோ 'சாதி மாற்று காதல் திருமணங்கள்' இங்கே நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் இருபது வருடங்கள் ஆசையாசையாய் வளர்த்தெடுத்த பெண்ணை தன் குடும்ப சூழலுக்கு ஒத்துவராத யாரோவொரு பெயர் தெரியாத ஒருவனுக்கு மணம் முடிக்க எந்த தாய்தகப்பனும் விரும்புவதில்லை என்பதே உண்மை. மாறாக, பெற்றோரின் சம்மதம் வாங்காமல் காதல் திருமணம் செய்ய துடிக்கும் ஆர்வமும் அதன் பின்னாலுள்ள மர்மமும் என்ன?

காதல் கொண்ட ஆண் பெண் இருவருக்குள்ளும் ஒத்த மனநிலை வந்த பின்னால், அந்த பெண் வீட்டாரோடு நேரடியாக சென்று பெண் கேட்டு முறைப்படி திருமண செய்யாமலேயே, ஆசை வார்த்தை சொல்லி வீட்டை விட்டு அழைத்து வருவதால் யாருக்கு லாபம்? ஒரே சாதியில் காதல் செய்யும் ஏழை ஆணுக்கு பெண் தர, அதே சாதியை சேர்ந்த பெண் வீட்டார் மறுக்கும் பல சம்பவங்களை ஊரெங்கும் பார்த்துதானே வருகிறோம். எதார்த்தம் இப்படி இருக்கையில், ஒரு குறிப்பிட்ட மூன்று சாதி பெண்களின் கற்பை, காதல் என்ற பெயரில் சூறையாட சொல்லும் குறிப்பிட்ட சாதிவெறி அமைப்புகளின் தலைமை பொறுப்பில் இருக்கும் பொறுக்கிகளை வெட்டி இருந்தால் மகிழ்ச்சியடைந்து இருக்கலாம். ஆனால், சாதிவெறியை ஏவிய 'வில்' பத்திரமாக நடுநிலை புரட்சி என்ற பெயரில் பிணத்தில் மீண்டுமொரு சாதி வன்மத்தை விதைத்து கொண்டிருக்க, அப்பாவி 'அம்புகள்' வீழ்த்தப்படுவது தான் வேதனையான விசயம்.

சாதிவெறியன் என்றும் காட்டுமிராண்டி என அறியப்படும் சாதிகளை சேர்ந்த தமிழ் சாதி உறவுகளே, தயவு செய்து அம்புகளை நோவாதீர்கள். முதலில் வில்லை உடைத்தெறியுங்கள். அதன்பிறகு எல்லாமும் சரியாகும்.
என்னதான் தமிழ் சாதிகளின் ஒற்றுமையையும், தமிழ் தேசியத்தையும் பேசினாலும், 'சாதிவெறி பிடித்த காட்டுமிராண்டி சாதி' என்று ஒட்டுமொத்தமாக ஒரு குறிப்பிட்ட சாதிசார் மக்களை அடையாளப்படுத்தி சமூகத்திலிருந்து அவர்களை தனிமைப்படுத்தி பிரித்தாழும் சூழ்ச்சியை செய்யும் போலி தமிழ்தேசிய முகமூடிகள் இருக்கும் வரை எதுவும் இங்கே சாத்தியமில்லை.

”இயற்கையாக
மனதில் எழாத அன்பை
திட்டமிட்டு உருவாக்கி
சாதி மறுப்பு என்ற பெயரில்
செய்யப்படும் காதல் திருமணங்கள்
நரகத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!”


- இரா.ச.இமலாதித்தன்

14 மார்ச் 2016

காதல் திருமணங்களுக்கு யார் காரணம்?

வெவ்வேறு சாதிகளை சேர்ந்த ஆண் பெண் இருவருக்குள் ஏற்படும் காதல் திருமணங்களுக்கு, டீ சர்ட் ஜீன்ஸ் பேண்ட்டோ - செல்போனோ - சாதிக்கட்சி அமைப்புகளோ காரணமில்லை. அப்பெண்ணை வளர்க்கும் விதமும், அந்த பெண்ணின் உடன்பிறந்த ஆண்கள் அப்பெண்ணிடம் அடக்குமுறையோடு பழகும் விதமும், பெற்றவர்கள் அந்த பெண்ணுக்கு கொடுக்கும் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளும், தன் குடும்ப சூழ்நிலையை பற்றி அந்த பெண்ணோடு வெளிப்படையாக பேசி புரிய வைக்காத ஒட்டுமொத்த பெண் வீட்டார்களே காரணம்; காதல் திருமணங்களுக்கு!

ஒரு பெண்ணோட கற்பில் தான், தங்களுடைய குலப்பெருமை காக்கப்படுகிறதென நினைத்தால், முதலில் அந்த பெண்ணை மதியுங்கள்; அந்த பெண்ணுக்கான அடிப்படை உரிமையை கட்டுப்படுத்தாதீர்கள்; அந்த பெண்ணின் சின்னசின்ன ஆசைகளை நிறைவேற்றுங்கள்; மனம் விட்டு அந்த பெண்ணோடு பேசுங்கள்; வெளியுலக நடப்புகளை வெளிப்படையாக சொல்லி புரிய வையுங்கள்; அந்த பெண்ணுக்கு தேவையான பணத்தை கொடுத்து அனுப்புங்கள்; அந்த பெண்ணுக்கு பிடித்த ஒருசில விசயங்களுக்காவது தடை சொல்லாதிருங்கள்;சினிமா, பார்க், பீச் என மாதம் ஒருமுறை அழைத்து செல்லுங்கள்; ஐஸ் க்ரீம், சாக்லெட் என தாராளமாக வாங்கி கொடுங்கள்.

கண்டிப்பாக உங்கள் வீட்டு பெண், யாரோ பெயர் தெரியாத ஒருவனோடு காதலிக்கிறேன் என்ற பெயரில் உங்களது குடும்ப கெளரவத்தை சீர்குலைத்து ஓடிப்போக மாட்டாள். இதுவரை இப்படி இல்லாவிட்டாலும், இனிமேலாவது மேலே சொல்லிருக்கும் விசயங்களை நடைமுறைப்படுத்தி பாருங்கள். நல்லதே நடக்கும்!

- இரா.ச.இமலாதித்தன்

25 மே 2015

ஓகே காதல்! ஓகே கல்யாணம்! ஓகே கண்மணி!



”ஆதித்யா வரதராஜன், தாரா காலிங்கராயர், கணபதி அங்கிள், பவானி ஆன்ட்டி...” ச்சே என்ன மாதிரியான கதை மாந்தர்கள்? இவர்கள் மட்டுமில்லாமல் இவர்களோடு வரும் இன்னும் சிலரின் சிறுச்சிறு பாத்திரங்களின் நடிப்பும் சான்சே இல்ல.மணிரத்னத்தின் ஃப்ரெஷான கதைக்களத்துடன் கூடிய திரைக்கதை, ஏ.ஆர்.ரஹ்மானின் நேர்த்தியான பின்ணனி / பாடல் இசை, பி.சி.ஸ்ரீராமின் காணொளி உருவாக்கமென எல்லாமும் நச்சுன்னு பொருந்திருக்கு. முதல்நாள் திரையரங்கில் பார்க்கும் போது என்னையும் சேர்த்து ஆக மொத்தம் பத்தே பேர் தான் இருந்தனர். எத்தனை தடவ பார்த்தாலும் அலுப்பே வராத காதல் காவியமான, ஓ காதல் கண்மணி, அடுத்த தலைமுறையினரையும் காலம் கடந்து நிச்சயம் ரசிக்க வைக்கும். என்னை வெகுவாக பாதித்த காதல் திரைப்படங்களில் மெளனராகம், இயற்கை, சங்கமம், அலைபாயுதே, கல்லூரி, நீதானே என் பொன்வசந்தம் போன்றவற்றையெல்லாம் விட, இந்த ஓ காதல் கண்மணி ஒரு படி மேலாகவே மனதை கவர்கிறது. ரஹ்மான், மணிரத்னம், ஸ்ரீராம் என அனைவருமே வயதில் நாற்பத்தந்தை கடந்த பின்னாலும், இன்னமும் இளமையை கொட்டி கொடுப்பதில் தான் அடங்கிருக்கிறது இவர்களின் வெற்றியின் ரகசியம்!

- இரா.ச.இமலாதித்தன்

21 மே 2015

கல்யாணம் முதல் கலாய்த்தல் வரை!

அண்ணன் ஒருத்தரு சாட்ல வந்து, மிச்சத்த உன் கல்யாணத்துல பேசிக்கலாம்ன்னு சொன்னாரு. அதுக்கு இன்னும் காலம் இருக்குண்ணான்னு சொன்னேன். ஏன் உன் லவ்வை இன்னும் உங்க அப்பாகிட்ட சொல்லலையான்னு கேட்குறாரு. என்னது லவ்வா?ன்னு கேட்டேன். பதிலே சொல்லாம ஆஃப்லைன் போயிட்டாரு.


-o-o-o-o-o-o-o-o-o-

 பங்காளிக யெல்லாம் கல்யாண பத்திரிகை வைக்கிறாய்ங்க. இல்லைன்னா ஜாதகம் பொண்ணுன்னு பேசுறாய்ங்க. ப்ரொஃபைல்ல என்கேஜூடுன்னு மாத்திடுறாய்ங்க. யோவ், உங்களையெல்லாம் நம்பித்தான் கொஞ்சம் ஆறுதலா இருக்கேன். நீங்க பாட்டுக்கு திடுதிப்புன்னு இப்படி பண்ணிட்டா நான் எங்கய்யா போறது? தனிமரமா ஆக்கிட்டு போய்டாதீங்கய்யா... என் மனசு தாங்காது!

14 பிப்ரவரி 2014

காதலுக்கு மரியாதை ஏன்?

பழந்தமிழர் வாழ்வியலில் அகமும் புறமும் ஒருசேர இணைந்தே இருந்திருக்கிறது; அகத்தில் காதலும், புறத்தில் வீரமும் தான் அங்கே முதன்மைபடுத்த பட்டது என்பதையும் தமிழ் இலக்கியங்கியங்களின் ஊடாக அறிந்து கொள்ளவும் முடிகிறது. அப்படிப்பட்ட தமிழ்சமூகம் இன்றைய காதலை மேற்க்கத்திய கலாச்சரத்தோடு பிண்ணிக்கொண்டு சிதைக்கப்பட்டு வருகிறது என்பதே எதார்த்தம் கலந்த உண்மை. ஆதிகாலம் தொட்டு தமிழரின் வீரமும் சரி, காதலும் சரி, மற்ற எந்த கலாச்சாரத்தோடும் ஒப்பிட முடியாத அளவிற்கு உயர்வான ஒன்று. அப்படிப்பட்ட வீரம் செறிந்த தமிழ் கூட்டத்திற்கு, காதல் எப்போதும் எதிரியாக இருந்ததில்லை. ஆனால், சில சந்தர்ப்பவாதிகளால் இன்றைய சூழலில் காதல் என்பதே காமத்தை மட்டுமே குறிக்கோளாக திசைதிருப்பிவிடப்பட்டது என்பது வேதனையான விசயமே. அதற்கு சினிமா மோகமும் - சாதி அரசியலும் கூட முழுமுதற் காரணமாக இருக்கலாம்.
அறம் - பொருள் - இன்பம் - வீடுபேறு; இதுதான் பழந்தமிழரின் வாழ்வியல் கோட்பாடு. முழுமையான மனிதனின் படிநிலை என்பதே, தீமைக்கும் அறம் செய்து, நேர்வழியில் பொருள் ஈட்டி, காதல் மணம் கொண்டு, இறைவனைத்தேடி வீடு பேறு அடைவதே ஆகும். அதைத்தான், வள்ளுவனும் அறத்துப்பால் - பொருட்பால் - காமத்துபால் என்று மூன்றையும் கலந்து 1330 குறளில் எளிதாக சொல்லி வைத்தான். ஒவ்வோரு வீரனுக்குள்ளும் காதல் நிச்சயம் உண்டு; அதுபோல, ஒவ்வொரு காதலுக்குள்ளும் வீரம் நிச்சயம் உண்டு. காதல் தவறென்று சொல்ல யாருக்கும் இங்கே உரிமையில்லை. ஆனால், கேடுக்கெட்ட அரசியல்வியாபரிகளின் தவறான வழிகாட்டுதலால், மேன்மை பொருந்திய காதலை கொச்சைப்படுத்தும் இழிபிறவிகளை கண்டிப்பது தவறில்லை.

பெண்களை விட ஆண்கள் தான் அதிகமான ஆர்வத்தோடு காதலர் தினத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள் என்பதுதான் எதார்த்தம். மேலும் பெரும்பான்மையான காதலர்கள் தங்களுடைய காதலிலும், காதலியிடமும், உண்மையாகவே இருக்கின்றனர். ஆனால், பெரும்பான்மையான காதலிகள், தாங்கள் தேர்ந்தெடுக்கும் காதலனிலும், காதலிலும் சுயநலவாதிகளாகத்தான் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். மேலும், காதலின் போது காதலிகள் தங்களுடைய கவலைகளை - துக்கங்களை - சோகங்களை - ஏமாற்றங்களை - இயலாமைகளை - கோபங்களை யென பலதரப்பட்ட மனக்கழிவுகளை கொட்டும் குப்பைத் தொட்டியாகத்தான் காதலனின் இதயத்தை பாவிக்கிறார்கள்.
எது எப்படியோ, உலகளாவிய அளவில் இன்றைக்கு காதலர் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

08 நவம்பர் 2012

இன்னுமா இருக்கிறது காதல்?



இப்போதெல்லாம் காதல் என்பதற்கான விளக்கம் வெறும் ஆண்-பெண் சார்ந்த பாலியல் ரீதியானதாக வரையறுக்கப்பட்டுள்ளது போன்றதொரு மாயையே இங்கே நிலவுகிறது. காதல் என்ற மூன்றெழுத்திற்குள்ளாக, வெறும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத சாதனை சரித்திரமும், சல்லாப சாபக்கேடும் உள்ளடங்கி நிற்கிறது. காதல் யென்ற வசீகரத்தை, அன்பு யென்ற 'மை'தான் மையப்புள்ளியாக இருந்து நம்மை இங்கே ஆக்கிரமிக்க காரணமாய் இருக்கிறது.

அன்பு எல்லோரிடம் காட்டப்பட வேண்டிய ஒன்று தான். ஆனாலும், இந்த அன்பானது பாசத்தையும், பரிவையும், இரக்கத்தையும், நட்பையும் பல பரிமாணங்களில் கொடுத்தாலும் அது முழுமையடைந்ததாக தெரியவில்லை. அன்பின் பரிமாணத்தில் அதிமுக்கியமானதாக காதல் யென்ற ஒன்றே கருதப்படுகிறது. இந்த காதல்தான் பெரும்பாலான உறவுகளை மறக்கடிக்கும் வல்லமை பெற்றது. முன்பின் அறிமுகமில்லாத யாரோ ஒருவரால் கூட நாம்  பரவசப்பட இந்த காதல் முதன்மை காரணமாய் அமைகிறது.


சமீப காலமாக இந்த காதலுக்கு இணையமென்ற களம் இளைஞர்களுக்கான ஒரு பாலமாக அதிவேகமாய் உருவெடுத்து வருகிறது. இணைய பங்காளிப்பாளர்களில், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை தெரியாதவர் வெகுசிலரே இருக்கக் கூடும். முன்பெல்லாம் ஈ-மெயில் கணக்கை தொடங்கவும், அதன் மூலம் மடல் அனுப்பி கருத்துகளை பகிர்ந்து கொள்ளவுமே அதிகம் இணையம் பயன்பட்டது. சில நேரங்களில் உலக - உள்ளூர் நடப்புகளை அறியவும் இணையம் பேருதவியாக அமைந்தது. இப்போதெல்லாம் இணையம் என்பது காதலை பரிமாறிக்கொள்ள மட்டுமே பெரும்பாலானோருக்கு பயன்படுகிறது.


கணினி வாயிலான இணைய இணைப்பு இல்லாதவர்கள், செல்லிடபேசியின் வாயிலாக இணையத்தில் இணைந்து தங்களுக்கான நட்பு வட்டங்களை இணைத்து கொள்கிறார்கள். இந்த நட்பு வட்டங்களானது நாளடைவில் ஒருவித நெருக்கத்தை ஏற்படுத்தித் தருகிறது. குறிப்பாக மாற்று பாலினம் சார்ந்த நாட்பானது பெரும்பாலும் காதலென்று அவர்களே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது.


சென்னையில் மெரீனா கடற்கரையோரம் இந்த காதல்படும் பாடு இருக்கே, அந்த புனிதத்தை வெறும் எழுத்தில் சொல்லி மாளாது. எழுத்தில் மட்டுமே அதை எளிதாக பொதுவில் சொல்லவும் முடியாது. திருச்சி போன்ற மற்ற பெருநகரங்களுக்கு முக்கொம்பு போன்ற சுற்றுலா தளங்களும், தஞ்சை போன்ற சிறு நகரங்களுக்கு பெருவுடையார் கோவில் சுற்று சுவர்களும் தான், இன்றைய காதலை வெகு விமர்சியாக வளர முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இதுபோல ஒவ்வொரு நகரங்களுக்கும் இந்த மாதிரியான ஏதாவதொன்று பின்புலமாக இருந்து இன்றுவரை காதலை வளர்த்துக்கொண்டு தான் இருக்கின்றன.


இப்போதெல்லாம் நாளிதழ்களை, இந்த காதல் சம்பந்தமான பல செய்திகளையே அநேக பக்கங்கள் ஆக்கிரமித்து கொள்கின்றன. பயனுள்ள செய்திகளுக்கு பக்கத்தின் ஏதாவதொரு மூலையில் சிறியதாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த காதல் சார்ந்த வழக்குகள், கொலைகள், இதுபோன்ற குற்றங்களுக்கு முதல் பக்கத்திலும் இடம் கொடுக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக 'கள்ளக்காதல்' யென்ற தலைப்பிடப்பட்ட செய்திகள்தான் அதிகம் பிரசுரமாகின்றன. அதற்குத்தான் வாசகர்கள் மத்தியில் மவுசும் அதிகம் என்பதை புரிந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள், மற்றவர்களது காதலை வைத்து தங்களுடைய காரியத்தையும் வியாபார ரீதியாக பெருக்கி சாதித்து கொள்கிறார்கள்.


ஒருதலை பட்சமான காதல் என்பதெல்லாம் வெகுவாக குறைந்தே விட்டது எனலாம். அந்த மாதிரியான ஒருதலை பட்ச காதலால் இப்போது தற்கொலைகளும் குறைந்து விட்டன. ஏன், இந்த காலத்தில் எல்லோருமே காதலிக்கவே இல்லையா? தோல்வியே அவர்களுக்கு இல்லையா? என்பதெல்லாம் நீங்கள் கேட்க கூடிய ஒன்றுதான். ஆனாலும். இன்றைய காதல் வெறும் கண்ணாமூச்சி ஆட்டம் போலதான். யாரும் யாரையும் தோற்கடிக்கலாம். அதற்காக இங்கே யாரும் துவண்டு போவதில்லை. இப்போதைய பெரும்பாலான காதல்கள், தோல்வியையே சந்திப்பதில்லை. இங்கே தோற்பது, ஓர் ஆணின் தேவை அல்லது ஒரு பெண்ணின் திருப்தி அல்லது இருவரின் கனவு, ஆசை போன்ற இத்தியாதிகள் மட்டுமே. கண்டிப்பாக காதல் தோற்பதில்லை. ஏனெனில் இதெல்லாம் காதலே இல்லை. இதுவொரு சபலம்; அது சல்லாபமாய் மாறி கடைசியில் வேறொரு மாற்றை இருவருமே தேடி கடந்து செல்ல வழி வகுக்கிறது.


இந்த காதல் என்பது இதயத்தில் அம்பு துளைக்கும் மனதியல் சார்ந்ததாக இப்போது இல்லை. இதயம் என்பது இரத்தம் சுத்திகரிப்பு செய்வதை போல, இன்றைய நவீன காதல்களும் மனதில் படிந்திருக்கும் சபலத்தை சுத்திகரிப்பு செய்துக்கொண்டிருக்கிறது. இதுவொரு இளைய தலைமுறையின் உடலியல் சார்ந்த ஒத்திகை நிகழ்வாகி விட்டது. போர் ஒத்திகையில் அநேகமாக யாரும் இறப்பதில்லை. அது போன்றே திருமண ஒத்திக்கையாகிவிட்ட இந்த காதலும், இன்னுமா இருக்கிறது என்ற கேள்வியே என் மனதில் மேலோங்கி எழ செய்கிறது. விதிவிலக்குகள் எல்லாவற்றுக்கும் உண்டு. காதலும் விதிவிலக்கே!