அதிமுக ஆட்சியில் போராளி வேடமிட்ட சூர்யா, ஜோதிகா, கோவன் என பலரும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னால் ஓடி ஒளிந்து விட்டனர். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் சமூக ஆர்வலர்களெல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டும் விழித்தெழ வாய்ப்புண்டு. திராவிட மாடல் என பீற்றிக்கொண்டு திரியும் இவர்களது லட்சணத்தை ஊரே காறி உமிழ்கிறது. உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. ரேசன் பொருட்களுக்கு கூட கடும் தட்டுப்பாடு. மாணவர்களுக்கு கொடுக்கப்படும் லேப்டாப் முதற்கொண்டு இடை நிறுத்தம். ஆனால், கஞ்சா மட்டும் அனைத்து கல்வி நிலையங்களுக்கு அருகிலேயே மாணவர்களுக்கு கிடைக்கிறது. இதுபோக, மாணவர்களின் பெற்றோர்களுக்காக கள்ளச்சாராயமும், டாஸ்மாக் சரக்கும் பாலாறும் தேனாறுமாய் ஊரெல்லாம் ஓடுகின்றன.
மகளிருக்கான இலவச பேருந்துகளால் ஒட்டுமொத்த போக்குவரத்துத்துறையும் நஷ்டத்தில் இயங்குகிறது. கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து முனையம் சந்தி சிரிக்கும் வேளையிலும், கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக கணக்கு மட்டும் காட்டப்படுகிறது. போதிய அளவிலான புதிய பேருந்துகளையும் வாங்கவில்லை. பழைய பேருந்துகளையும் சரியாக சீரமைக்கவில்லை. லாஜிக் படி பார்த்தால் ஊழியர்களும், பேருந்துகளுமே பற்றாக்குறை. ஆனால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும், விடுமுறை தினத்திற்காக கூடுதல் பேருந்துகளை இயக்குகிறோம் என ஊடகங்கள் வாயிலாக தம்பட்டம் அடிக்கின்றனர். இருக்கின்ற பேருந்துகளின் டயர் தனியே ஓடுகிறது. படிக்கட்டுகள் தரையில் கிடக்கின்றன. சிறு தூறலுக்கே பேருந்துக்குள்ளே மொத்தமாய் மழை நீர் கசிய தொடங்குகின்றன.
ஒருவேளை எல்லாம் சரியாக அமைந்து பேருந்து இயங்கினால் குடிமகன்கள் பஸ்ஸை வழிமறித்து 'எங்களால் தான் கவர்மெண்ட்டே இயங்குது. என்னை மீறி பஸ்ஸை எடுத்துடுவியா?' என்ற ரேஞ்சுக்கு சாலையின் நடுவில் நின்று அரசியல் விவாதம் செய்கின்றனர். இடைமறித்து பேருந்துக்கு வழிவிட நினைக்கும் போலிஸிடமும் 'நீ ஏன் விக்கிற? அதான் குடிக்கிறேன்!' என லெப்டில் டீல் செய்யும் குடிமகன்களின் கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.
ஐ.பி.எல். போட்டிக்கெல்லாம் இலவச பஸ் டிக்கெட் கொடுக்க முன்வந்தவர்கள், பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பஸ் பாஸை கொடுக்க தவறும் நிர்வாகத்தை எவன் கேள்வி கேட்டாலும், சங்கியென முத்திரை குத்தி பாஜகவை வளர்த்து விடுகின்றனர். அச்சு/காட்சி ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் சமூக ஊடகங்களில் இவர்களது லீலைகள் அம்பலப்பட்டு விடுகின்றன. அதற்காகவே நெட்டிசன்களை மடைமாற்றம் செய்ய வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக சோசியல் மீடியாவில் பலான வீடியோக்களை சமயத்திற்கேற்ப பரப்பி விடுகின்றனர். இம்மாதிரியான ஃபார்மலா எல்லா நேரமும் எடுபடாது என்பதை இவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்வதே இல்லை.
காவல்துறையை தங்களது பவுன்சர்கள் போல பாவித்து எதிர்க்கேள்வி கேட்பவனையெல்லாம் கைது, மிரட்டல் செய்ய உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர். இப்படியான ஆணவத்தில் ஆடியதால் தான் பத்து வருடங்கள் அதிகாரத்திற்கு வர முடியாமல் போனது என்பதை மறந்து, திரும்ப தலைகால் தெரியாமல் பிணந்திண்ணி வவ்வால் போல் ஆட்சிக்கட்டிலில் தொங்கி கொண்டிருக்கின்றனர். காலம் அனைத்தையும் மாற்றும். இந்த அதிகார மமதையில் அனைவரையும் ஒடுக்கி, ஜால்ராக்களின் துதிகளை நம்பி கண்மூடி புகழ் போதையில் உழலும் இந்த திராவிட மாடல் ஃபெயிலர் என்பதை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
- இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக