24 பிப்ரவரி 2017

ஆதியோகியின் சிவராத்திரி!

நரேந்திர மோடி இந்த ஹிந்திய கூட்டாட்சி நாட்டின் பிரதமர். ஹிந்துத்துவ சார்புள்ள கட்சியிலிருந்து வந்தவரான மோடி, கோவையிலுள்ள ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்திற்கு வருவது அவரது கொள்கை சார்ந்த விசயம். அவரை இங்கே வர வேண்டாமென சொல்வது வீண்வேலை.

ஜக்கி வாசுதேவ் ஒன்றும் கடவுளில்லை. ஆனால், அவரை குருவாக எத்தனையோ பேர் இன்று ஏற்றுக்கொண்டு அவரது மார்க்கத்தை பின்பற்றுகிறார்கள். பிறப்பால் கன்னடரான ஜக்கி வாசுதேவ் அவர்களுடைய தாய்மொழி கன்னடமென்றாலும், சமகிருதத்தை தன் மார்க்க மொழியாக்கி கொண்டார். எனவே, அவருக்கு தமிழ் அந்நிய மொழியாக தெரியலாம். அதனாலேயே சிவனுக்கு தமிழ் தெரியாதென அவர் சொல்லிருக்கலாம்.

இங்கே எது சிவன்? என்ற கேள்விக்கு பலதரப்பட்ட பதில்கள் அனைவரிடமும் உண்டு. தமிழ் சங்கங்களில் முதற் சங்கத்தின் தலைவரே சிவன் தானென இலக்கிய தரவுகள் குறிப்பிடுகின்றன. தென்னாடுடைய சிவனே போற்றி என்பதில் கூட ஓர் ஆய்வு செய்திருக்கிறார்கள். கயிலாயம் என்பது இமயமலையே இல்லை; ஆதியில் கயிலாயம் என்பதே குமரிப்பகுதி தானென. கயல்+ஆயம்=கயிலாயம். இப்படியாக பிரித்து கயிலாயம் என்பதே தென்தமிழ்நாட்டின் அருகே தான் இருந்ததென சொல்பவர்களும் இங்குண்டு. அகரம் + உகரம் + மகரம் என்ற மூன்றின் வெளிப்பாடே ஓம்காரம் என்பதின் அடித்தளமாகிறது. இதுவே ஆதிமொழி, தமிழ் என்பதற்கான இயல்பான எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்" என்ற பெரியபுராணத்தின் முதற் பாடலை சேக்கிழார் பெருமானுக்கு சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்தார் என்பது இலக்கிய சான்றாக அமைகிறது.

திருவாசகத்துக்கு உருகார்; ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது முதுமொழி. சிவனே தன்னுடைய திருக்கரத்தினால் எழுதி, அந்நூலின் திருக்கடைக்காப்புப்பகுதியில், "இவை எழுதியது, அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து" என்று கையெழுத்திட்டு அருளிய நூல் தான் திருவாசகம். இப்படி நிறையவே தமிழ் மொழிக்கும், ஆன்மீகத்திற்குமான நீண்ட தொடர்புண்டு. வள்ளலார், பாம்பன் சுவாமிகள் உள்ளிட்ட பல மகான்கள் தமிழ் மொழியே இறைமொழி என பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த அடிப்படை உண்மைகளையெல்லாம் உணராமல், ஆதித்தமிழர்களால் சமைக்கப்பட்ட மொழியான சமகிருதத்தை தலையில் வைத்து கொண்டாடும் அதே வேளையில், செம்மொழியான தமிழை காலில் போட்டு மிதிக்க வேண்டாம்.

"வயநமசி ஹரசிவ
நமயவசி வாசி வாசி
சிவயநம ஓம்!"

இது பாம்பாட்டி சித்தரின் மூலமந்திரம். சிவன் வேறு, சித்தன் வேறல்ல; சிவன் வேறு, சீவன் வேறல்ல.

"உள்ளம் பெருங்கோயில்;
ஊனுடம்பு ஆலயம்;
வள்ளற் பிரானார்க்கு, வாய்க் கோபுர வாசல்;
தெள்ளத் தெளிந்தார்க்கு,
சீவனே சிவலிங்கம்;
கள்ளப் புலன்ஐந்தும்,
காளா மணிவிளக்கே" - திருமந்திரம்.

அருட்பெருஞ்சோதியாக நம்முள் வீற்றிருக்கும் சிவனுக்கு நம்மை தவிர வேற யாராலும் ஓர் உருவத்தை தந்துவிட முடியாது. ஆதியோகியென சிவனை சொல்வது, சிறுமை படுத்தவா? பெருமை படுத்தவாயென தெரியவில்லை. யோகம் என்பதே, பதஞ்சலி சித்தராலேயே எட்டு நிலைகளாக பகுக்கப்பட்டது. அப்படியெனில் ஆதியோகி என்பவர் பதஞ்சலியாகத்தானே இருக்க வேண்டும்.

பொதுவாகவே ஆன்மீகத்தில், சரியை - கிரியை - யோகம் - ஞானம் என நான்கு வித முறைகள் உண்டு. இந்த நான்கு வழிகளில் ஒவ்வொன்றையும் பின்பற்றி இறைவனோடும் சீவனோடும் சிவனாகி போனவர்களே, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற நால்வர்கள்.

சரியை என்ற முதல்நிலையில், தன் உடல் உழைப்பினால் செய்யப்படும் பூசை போன்ற செயல்களாகும். இதற்கு அடுத்துள்ள கிரியை என்பது, குரு உபதேசம் பெற்று மந்திரங்களால் இறைவன தொழுவது. மூன்றாவதாக உள்ள யோகம் என்பது அட்டமான சித்துகளை யோகக்கலையின் மூலமாக வசியப்படுத்தும் வாசி தத்துவம் ஆகும். இந்த வாசி பற்றி சொல்லவே நிறையவே இருக்கிறது. வாசி - சிவா என்ற சொல்லொற்றுமையே அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும். இறுதியாக உள்ள ஞானம் என்ற நிலையே இறைவனை அடையும் இறுதியான உறுதியான நிலை. ஆனால் அந்நிலையை அடைவது தான் அனைவருக்கும் கடினமாக இருக்கிறது. உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்று நிலைகளிலுள்ள சிவனை கடந்து தன்னை உணர்தல் தான் ஞானம். இந்த மூன்று நிலைகளுக்கும் சீர்காழி சிவன் கோவில் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. இங்கே தான் திருமுலைப்பால் என்ற ஞானம் திருஞானசம்பந்தருக்கு இறைவியால் ஊட்டப்பட்டது.

ஹீலர் பாஸ்கர் அடிக்கடி சொல்லும் அவரது குருவில் ஒருவரான பகவத் ஐயா மட்டுமே இந்த ஞானம் அடைவது எத்தனை எளிய விசயமென விளக்கி இருக்கிறார். ஆனால் அந்த ஞானமென்ற நான்காம் நிலையை அடையக்கூட இரண்டாம் நிலையிலுள்ள கிரியை என்ற குருபதேசம் தேவைப்படும்.

சிவம் என்பது ஐம்பூதங்களில் ஆகாயம்; அந்த வெட்டவெளிக்கு உருவமெல்லாம் ஏதுமில்லை. எனவே நம் புருவ மத்தியில் பூட்டி வைத்திருக்கும் இந்த இறைவனை உணர, ஆதியோகி என்ற சிலையோ, தாடி வைத்த, மொட்டை அடித்த, காவியோ - பச்சையோ - வெள்ளையோ அணிந்த எந்த இடைத்தரகர்களும் தேவையில்லை. இதையேத்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் அன்றைக்கே வள்ளுவர், "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்" என சொல்லிவிட்டார். ஆனால் அப்படி சொன்ன ஞானிக்கே தாடியை கொடுத்த சமூகம் இது.

ஒருவகையில் பாம்பாட்டி சித்தர் கூட அந்த ஆதி சிவனின் அடையாளம் தான். இவரிடம் வெட்டவெளி தத்துவமும் உண்டு; சிவனின் கழுத்திலுள்ள பாம்பும் இவரிடம் உண்டு. வாசி என்ற யோக நிலையும் இவரிடம் உண்டு. இவரும் என் பார்வையில் ஆதி யோகி தான். அனைத்து சித்தர்களையும் பற்றி விரிவாக பதிவாக்கிய போகர் கூட, "சொல்வதென்றால் பாம்பாட்டி மர்மம் தானே" என அரைகுறையாக முடிக்கிறார். அப்படிப்பட்ட பாம்பாட்டி சித்தர், துவாரகை - மருதமலை - சங்கன் கோவில் - விருத்தாச்சலம் என பல இடங்களில் சமாதியாகி கடைசியாக ஆதிசிவனாக ஐக்கியமானது நாகை மாவட்டத்திலுள்ள (காசியை விட வீசம் அதிகமென சிறப்புப்பெற்ற) ஆதி திருக்கடவூர் திருமயானத்தில் தான். வாய்ப்புள்ளவர்கள் திருக்கடையூரிலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள ஆதியோகியை வணங்கி செல்லுங்கள்.

(பாம்பாட்டி சித்தர் பீடம் - திருக்கடவூர் மயானம், நாகை)

மகா சிவராத்திரி வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

18 பிப்ரவரி 2017

நேற்று வரை தோழி, இனி சின்னம்மா!?

அ: சசிகலா தமிழச்சி; அதனால் ஆதரிக்க வேண்டும்;

இ: அப்போ பன்னீர்செல்வம் யார்? அவரும் தமிழன் தானே?

அ: இல்லை இல்லை; பார்பன பிடியில் இருக்கிறார் ஓ.பி.எஸ்.

இ: சுப்ரமணிய சுவாமி என்ற பார்பனர், சசிகலாவை ஆதரித்து ஆளுநரிடமே பேசிக்கொண்டிருக்கிறாரே? அப்போது சசிகலா யார் பிடியில்?

அ: அதெல்லாம் விடுங்க; எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் சசிகலா பக்கம் தான்.

இ: ஆனால், சாமானிய தொண்டர்கள் 95% க்கு அதிகமானோர் ஓ.பி.எஸ்/தீபா பக்கம் தானே இருக்கின்றனர்?!

அ: அது பாஜக, திமுக கட்சிகளோட சதி.

இ: இந்த கன்றாவியையெல்லாம் பார்க்கணும்ங்கிறது எங்க விதி!


இப்படியாக கடந்து கொண்டிருக்கிறது சமகால அரசியல் நகர்வுகள்; டிசம்பர் 5ம் தேதி முதல்வராக இருந்த ஒரு நடிகை மறைந்தார். மிகச்சரியாக இரண்டே மாதங்களில், பிப்ரவரி 5ம் தேதி நடிகையின் தோழி ஒருவர் முதல்வராக உருவெடுக்க ஆயத்தமானார். அதற்குள்ளாக இத்தனை அரசியல் குழப்பங்கள் அரங்கேறி விட்டன.

சாதி அரசியல்:

இதற்கிடையில் இன்னமும் சாதி சாயத்தில் மூழ்கி கிடக்கும் கூட்டத்தினர், சசிகலாவை கள்ளராக முன்னிலைப்படுத்தி பெருமிதம் கொள்கின்றனர். ஆளும் தகுதியை கொடுத்த அதிமுகவின் ஆட்சி அதிகாரத்தை கொண்டு தமிழகத்தை நிர்வகிக்கும் தலைமை யாரென விமர்சிப்பதில் என்ன அவதூறு இருக்கிறதென தெரியவில்லை. இன்னுமா முக்குலத்தோர் என்று இல்லாத சாதியின் பெயரால் கண்டவர்களையெல்லாம் தூக்கி பிடிக்கிறீர்கள்?

தன்னுடைய சாதிக்காரன் எது செய்தாலும் சரியென நினைத்து, அதற்காக குருட்டுத்தனமாக முட்டுக்கொடுக்கும் மனப்போக்கை மாற்ற முயலுங்கள். (என்னுடைய சாதிய பார்வையே வேறு.) சாதியை வைத்து மட்டுமே சமகால அரசியலில் எதையும் சாதித்து விட முடியாது என்பதை ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றி ஒரு தற்போதைய சான்று. ஒரு குறிப்பிட்ட சாதிகளின் விளையாட்டென அரசியல் செய்தவர்களின் சதியை முறியடித்தது நீங்கள் பெருமைப்படுகின்ற எந்தவொரு தனிப்பட்ட சாதியும் இல்லையென்ற எதார்த்தத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

அதிமுகவை விமர்சிக்கும் அளவுக்கு திமுகவை விமர்சிப்பதில்லையென சிலர் அடிக்கடி குறை கூறுகிறார்கள்; ஆள்பவர்களை தான் விமர்சிக்க முடியும். அதனால் பாஜக, அதிமுக என அதிகாரத்தில் உள்ளவர்களின் தவறை சுட்டிக்காட்டி விமர்சிக்கிறோம். சீமான், ஸ்டாலின், கருணாநிதி, தா.பாண்டியன், மோடி, ஜெயலலிதா என அனைவரையும் பாராட்டியும், கண்டித்தும் அந்தெந்த சூழலுக்கேற்ப விமர்சித்து இருக்கிறோம். இனியும் தொடரும்...

அப்பல்லோ - பத்திரிகையாளர் சந்திப்பு:

ஜெயலலிதாவின் உடலை பதப்படுத்தியதாக அவர்கள் ஒத்துக்கொண்டதே ஒருவகையில் உண்மையை அவசர அவசரமாக உளற தொடங்கிருக்கிறார்களோ என சிந்திக்க வைக்கிறது. ரிச்சர்ட் பீலே சொல்லிருக்கும் எல்லா விளக்கங்களும், ஏற்கனவே பலராலும் கேட்கப்பட்ட கேள்விகளிலிருந்து குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக திண்ணையில் எழுதிக்கொடுத்த கடிதம் போலவே தோன்றுகிறது. மேனாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து சரியாக இரண்டு மாதங்கள் கழித்து, அவரது தோழி அதே முதல்வர் பதவியில் அமரும் வேளையில் அப்பல்லோ நிர்வாகம் திடீரென கோமா நிலையிலிருந்து சுயநினைவுக்கு திரும்பிருக்கிறது; தவளையும் தன் வாயால் கெடும்! என்பது போல அப்பல்லோவும் அதனை பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் கும்பலும் கெடும்.

இந்த அப்பல்லோ பத்திரிகையாளர் சந்திப்பு கலந்துரையாடல்களை உற்று கவனிக்கும் போது, 'பாபநாசம்' படம் தான் நினைவுக்கு வருகிறது. மீண்டுமொருமுறை கமல்ஹாசன், முன்கூட்டியே நடக்கவிருக்கும் நிகழ்வை படமாக்கி இருக்கிறாரோ என எண்ண வேண்டிருக்கிறது. 2000ம் ஆண்டு 'ஹேராம்' படத்தில் குஜராத் கலவரத்தை முன்னதாகவே காட்சிப்படுத்திருப்பார். 2003ல் 'அன்பே சிவம்' படத்திலேயே சுனாமி பற்றி பேசிருப்பார்; 'தசாவதாரம்' படத்தில் எபலோ வைரஸ் பற்றி முன்னதாகவே சொல்லிருப்பார். அந்த பட்டியலில் இப்போது பாபநாசமும் சேர்ந்திருக்கிறது.

எதிரணியில் ஓ.பி.எஸ்.:

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜெ. அணி, ஜா. அணி என இரண்டாக பிளவுப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு, சசி அணி, தீபா அணி, ஓ.பி.எஸ். அணி என மூன்றாக பிளவுபட்டு நிற்கிறது. போற போக்கை பார்த்தால், ஜெயலலிதா பிறந்த நாளன்று ஜெ.தீபா தனிக்கட்சி தொடங்குவதற்கு முன்னதாகவே ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்கிவிடுவார் போல; ஊரே அந்த கும்பலை நடிப்பதாக கழுவி ஊற்றுகிறது; ஆனால் அந்த கும்பலோ, ஓ.பி.எஸ் நடிப்பதாக சொல்கிறது, தங்கள் கட்சியின் தலைமையே நடிகர்கள் தான் என்பதை மறந்து! போயஸ் கார்டனை, 'அம்மாவின் இல்லம்' என இரண்டொருமுறை அழுத்தம் திருத்தமாக ஓ.பி.எஸ் சொன்னதில் கூட ஏதோவொரு செய்தியை அதன்பின்னால் மறைமுகமாக சொல்லிருக்கிறாரோ என தோன்ற வைக்கிறது.

”சிங்கப்பூர், மலேசியா, லண்டன் என உலகின் எல்லா பகுதியிலிருந்தும் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தரச்சொல்லி தொடர்ச்சியாக என்னுடைய செல்போனுக்கு அதிக கால்கள் வருகிறது. அவர்கள் நிறைய செலவு செய்து, வாட்சப், பேஸ்புக் மூலமாக ஒரு பெரிய நெட்வொர்க்கை உருவாக்கி பலரும், ஓ.பி.எஸை ஆதரிக்க சொல்கிறார்கள்.” என தந்தி தொலைக்காட்சியின் 'கேள்விக்கென்ன பதில்' நிகழ்ச்சியில் ஓ.எஸ்.மணியன் இப்படி சொல்கிறார். அந்த பெரிய நெட்வொர்க், தானா சேர்ந்த கூட்டம். அதுவும் ஜியோவால் சேர்ந்த கூட்டம் என்பதை சசிகலா குடும்பத்தின் ஆதரவாளரான  அவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை போல. :)

சசிகலாவின் அவசரம்:

ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆர்வத்தை ஊட்டியதே நான் தான் என்று சசிகலா சொல்லிருக்கிறார். ஊட்டியது, அரசியல் ஆர்வத்தையா? இல்லை ஆகாரத்துல விசத்தையா?ன்னு மக்கள் கேட்கிறார்கள். நல்லவேளை இந்த கொடுமையையெல்லாம் கேட்க ஜெயலலிதா இப்போது உயிரோடு இல்லை.

பொதுச்செயலாளர் பதவிக்கே தகுதி இல்லையென கட்சி விதிகள் சொல்கின்றன; அதற்குள்ளாக, அவைத்தலைவர், பொருளாளர் என சக பெருந்தலைமைகளில் உள்ளவர்களையே நீக்கினால் யாருக்கும் லாபம்? ஒட்டுமொத்த தொண்டர்களில் 99% பேர் தற்காலிக பொதுச்செயலாளருக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். அதனால் அவர்களை கட்சியிலிருந்து நீக்கிவிட முடியுமா? இன்னும் சொல்லப்போனால், கட்சி விதிகளின் படி, தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது. அவசர அவசரமாக, தவறான வழிகாட்டுதலால், மிகத்தவறான முடிவுகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆத்திக்காரனுக்கு புத்தி மட்டும் என்பது போல, தான்தோன்றித்தனமாக அந்த கூடாரத்திலுள்ள பலரும் பலதரப்பட்ட முடிவுகளை எடுப்பதால் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் முதன்மை காரணம்; தங்க முட்டையிடும் வாத்தை கொன்ற பிறகு அதன் மூலம் இத்தனை வருடங்களாக கிடைத்த லாபம் மட்டும் எப்படி இனி கிடைக்கும்?

ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆவதை பற்றி அவரே முடிவு செய்வாரென அப்பல்லோ ரெட்டி சொன்னதை ஏற்றவர்கள், ஆளுநர் ராவை மட்டும் எதிர்ப்பது ஏன்? அவரே முடிவு செய்யட்டுமே?! 75 நாட்கள் அப்பல்லோவில் நடந்ததும் தெரியவில்லை; 5 நாட்களாக கூவத்தூரில் நடப்பதும் தெரியவில்லை. இதையெல்லாம் பொறுமையாக மக்கள் வேடிக்கை பார்க்கவில்லையா? அவ்வளவு ஏன் அவசரம்?

”ஜெயலலிதாவின் சடலம் தான் அப்பல்லோவிற்குள் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே ஜெயலலிதா இறந்து விட்டார்; அவர் இறந்த பிறகு தான் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார்; அவரது உடலை பதப்படுத்தப்படுத்தவே கன்னத்தில் மூன்று துளைகள் இடப்பட்டன” என அப்பல்லோவில் பணிபுரிந்த ராமசீதா சொல்லிருக்கிறார். அப்படியெனில் இதில் பலர் கூட்டு களவாணிகளாக இருந்திருக்கின்றனரோ என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆனால் இதுவரையிலும் அதைப்பற்றி யாருமே வாயை திறக்காமல் கள்ள மெளனம் காக்கின்றனர் என்பது கூட மிக அழுத்தமான சந்தேகங்களை அனைவரது மனதிலுள் எழுப்பி வருகிறது.

கூவத்தூர் கூத்து:

"நாங்க ஜாலியா இருக்கோம்!"ன்னு சொல்கின்ற பன்னாடைகளில் ஒன்றிரெண்டாவது ஆளே காலியாகி பாடையில் தான் போகுமென தோன்றுகிறது. நீங்க குடியும், குடித்தனமாக கூவத்தூரில் கூத்தடிக்கத்தான் வாக்களித்தோமா? நல்ல காற்று, நல்ல தண்ணீர், நல்ல சுற்றுச்சூழல் இவையெல்லாம் அந்த ஸ்டார் ஹோட்டலில் மட்டும் தான் கிடைக்கிறதா? தமிழ்நாட்டில் வேறெங்கும் கிடைக்காதா? ஊர்க்காரனுக்கே யாரென தெரியாதவனையெல்லாம், ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக அடையாளம் காட்டியதன் விளைவை இன்று அனுபவிக்கிறோம். கூவத்தூரில் குதூகலமாய் கும்மியடித்து கொண்டிருக்கும் இந்த அரசியல் பொறுக்கிகளெல்லாம், தன்னுடைய தொகுதிக்குள் செல்லும் போது, கண்டிப்பாக அடையாளம் தெரியாதவர்களால் செருப்படி வாங்குவார்கள்.
130 எம்.எல்.ஏ.க்களுக்கும் தங்களுக்கு வாக்களித்த அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் எண்ணம் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், காசுக்காக கூத்தாடி கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுக்கே அவமானமாக இருக்காதா? மானங்கெட்ட அரசியலின் உச்சம் இது. த்தூ!

குடியும், குடித்தனமாக தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த பேரம் என்ற போதை இரண்டு நாட்கள் கடந்தும் தெளியவில்லை. கறிக்கடையில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகளுக்கும் கூட இலைதழையென கவனிப்பு அதிகமாகவே இருக்கும்; ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் அந்த ஆடுகளெல்லாம் மட்டன் பீசுகளாக மேலே தொங்கவிட பட்டிருக்கும். இதுதான் இன்றைக்கு கூவத்தூரில் கூத்தடித்து கொண்டிருக்கும் எம்.எல்.ஏ.க்களும் விரைவில் நடக்கவிருக்கிறது. ஆனால், இந்த அரசியல் செம்மறி ஆடுகளை தோலுரித்து தொங்கவிடப்பட போவது, அந்த கூடாரமா? இல்லை; மக்கள் அதிகாரமா? என்பதற்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும்.

இனி குடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம்:

அனைத்து திறமையுமுள்ள தினகரனுக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும். அந்த பதவிக்குரிய அனைத்து தகுதிகளும் அவருக்கு உண்டு. ஜெயலலிதாவிற்கு அரசியலில் அடைக்கலம் கொடுத்த சசிகலாவையே வழிநடத்திய தினகரனே முதல்வராக வேண்டுமென்ற கோரிக்கைகளும் விரைவில் எழும். ஊசாலுடும் இந்த உயிருக்கு நிறைய செலவழித்து இன்று தற்காலிக சுவாசத்தோடு இயங்க வைக்கப்பட்டுள்ளது; நிரந்தரம் என்பதே இங்கில்லை, நிரந்தர பொதுச்செயலாளர் போல; இனி ஒவ்வொரு நாட்களும் எண்ணப்படும், கூடவே ஜாலியாக இருந்த 124 தலைகளையும் தான்!

- இரா.ச. இமலாதித்தன்

03 பிப்ரவரி 2017

கச்சா எண்ணெய்யும், கழிசடை அரசியலும்!


மூன்று பக்கம் கடலாலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதியை 'தீபகற்பம்' என்கிறார்கள். இதே போல் மூன்று பக்கமும் கடல் எல்லைகளையே பெரும்பான்மையாக கொண்டிருக்கும் ஹிந்தியா என்ற கூட்டாட்சி நாடும் தீபகற்பமே. ஆனால், அந்த தீபகற்ப நாட்டிற்குட்பட்ட கடலில் கலந்த கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்க வழி தெரியாமல் கக்கூஸ் வாளியில் கசடுகளை அள்ளி கொண்டிருக்கின்றது வல்லரசாக போகும் ஹிந்திய அரசு.

ஜென் கதை ஒன்றில், கடவுளை கண்டுகொண்டேன் என்ற இறுமாப்போடு சென்ற சீடன் ஒருவன், கடற்கரை ஓரத்தில் ஒரு சிறுவன் தன் கைகளால் கடல் நீரை அள்ளிக்கொண்டு வந்து கரையோர குழியில் நிரப்பிக்கொண்டிருப்பதை பார்ப்பான். அப்போது அச்சிறுவனை இடைமறித்து என்ன செய்கிறாய்? என கேட்கும் போது, நான் கடல்நீரை இரைக்க போகிறேனென சொல்லுவான். அதெப்படி முடியும்? என ஏளனமாக கேட்கும் சீடனை பார்த்து, அந்த சிறுவன் சொல்லுவான்; நீங்கள் மட்டும் கடவுளை கண்டுவிட்டதாக சொல்வது மட்டும் முடிகின்ற காரியமா? என சொல்லி அச்சீடனுக்கு ஆன்மீக உண்மையை புரிய வைப்பான்.

அதுபோலத்தான் ஹிந்திய அரசும், கடல்நீரை குடிநீராக்குவோம்; ஹிந்திய பெருங்கடலை சுற்றியுள்ள நாடுகளை நமக்கு சாதகமாக்குவோம்; கொழும்பு போன்ற அண்டை நாடுகளின் துறைமுகங்களுக்கு கப்பல் விடுவோம்; என சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்ததாக சொல்லி, ஹிந்திய பொருளாதாரத்தை ஐசியூ வார்டில் வைத்து சர்ஜரி செய்து நடைபிணமாக்கி விட்டிருக்கிறார்கள். அதானிகளும், அம்பானிகளும், மல்லையாக்களும் மன்னராக வாழும் இந்த மக்களாட்சி நாட்டில் தான், மதத்தின் பெயரால் பெரும்பான்மை மக்கள் அடிமையாக்கவும் படுகிறார்கள்.

சந்திராயன், ஆதித்யா என செவ்வாய், சூரியன், சந்திரன் என பிரபஞ்சத்திலுள்ள மற்ற கிரகங்களுக்கெல்லாம் செயற்கைகோள்களை செலுத்தி ஆய்வு செய்கின்ற அதே நேரத்தில், நாம் வாழும் பூமி என்ற இந்த கோளில் மூன்றில் இருமடங்கு சூழ்ந்துள்ள கடற்பரப்பை ஆய்வு செய்யவும், மேலும் அந்த கடற்பரப்பில் ஏற்படும் சேதங்களை சரி செய்யவும், கடல்களால் ஏற்படும் பேரழிவை தடுக்கவும், முன்முயற்சி எடுப்பதுதான் ஒரு நல்லரசுக்கான அடையாளம் என்பதை ஹிந்திய ஆட்சியாளர்களுக்கு அந்த பாரத மாதா எப்போது புரிய வைக்க போகிறாளோ தெரியவில்லை.

பாரத் மாதாகி ஜே!

- இரா.ச. இமலாதித்தன்