01 August 2017

அவசர காலங்களில் ஹிந்தியா தாக்குபிடிக்குமா?
சென்னை - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை (ஈ.சி.ஆர்) சாலையில் அவசர காலங்களில் விமானங்கள் தரையிறங்க ஹிந்திய விமானப்படை அனுமதி தந்துள்ளதை எப்படி பார்க்க வேண்டும்?

- என்ற இந்த கேள்விக்குள் ஆயிரம் பதில்கள் அடங்கிருக்கின்றன.

இவர்கள் சொல்லும் அந்த அவசரக்காலம் என்பது எது?


ஒருவேளை போர்ச்சுழல் மிகுந்த காலத்தை தான், அவசரக்காலமென சொல்கிறார்களா?

வடக்கு வாழ தெற்கு தேயத்தான் வேண்டுமா?

ஒட்டுமொத்த ஹிந்திய நாட்டின் குப்பைத்தொட்டியாக தென்னகம் திகழ்வது போதாதா?

போர்க்காலங்களில் மனித அரண்களாக்கி பலிகடாவாக எம்மை பயன்படுத்த திட்டம் தானே இது?

அவசரக்காலம் என்பது தமிழ்நாட்டில் மட்டும் தானா?

ஹிந்தியா முழுமைக்கும் இதுபோன்ற அவசரக்காலங்கள் வரவே வராதா?

மற்ற மாநிலங்களிலெல்லாம் இதுபோன்ற நெடுஞ்சாலைகளை விமானப்படை குத்தகைக்கு எடுத்திருக்கிறதா?

இப்படியாக எத்தனையோ கேள்விகளை கேட்கலாம். சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பதில் வரவே வராது; ஆனால் வெகுஎளிதாக ஆன்ட்டி ஹிந்தியன், தேசத்துரோகி, நக்சலைட், மாவோயிஸ்ட், தீவிரவாதி என்ற பட்டங்கள் மட்டும் சட்டென வந்து விடும். இங்கே கவனிக்கவேண்டிய விசயம் என்னவெனில், இஸ்ரோ முதற்கொண்டு அணு உலை வரைக்குமான எல்லாவற்றையும் தென்னகம் தான் தன்னகத்தே கொண்டிருக்கிறது; வாழ்வோ சாவோ எல்லாவற்றிலும் பரிசோதனை முயற்சிக்கு பயன்பட்டுக்கொண்டிருப்பது தமிழர்களும், தமிழ் மண்ணும் தான். இனி, சீனா - அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் இலங்கை போன்ற நாலாந்திர நாடுகளின் உதவியோடு தமிழ்க்கடலோரம் போர் முற்றுகையிட்டால் ஒட்டுமொத்த ஹிந்தியமும் வீழ்ந்து போகும். ஆனால் அதற்கு முன்னரே தமிழினம் சின்னாபின்னமாகும். இதன் அறிகுறியாகவே தமிழ்ச்சாலையான கிழக்கு கடற்கரையோர சாலையை விமானப்படை மறைமுகமாக கையகப்படுத்திருக்கிறது.

ஹிந்தியத்தின் லட்சணத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இரண்டுமே கூகிள் மேப் தான்; ஒன்று கூகிள்.கோ.யூகே, இரண்டாவது கூகிள்.கோ.இன்; முதல் படத்திலுள்ள ஐரோப்பிய ஒன்றிய கூகிள் மேப்பின் படி, ஹிந்திய வரைபடத்தில் காஷ்மீரும், அருணாச்சல பிரதேசமும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பூகோள ரீதியாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக உள்ள ஹிந்திய கூகிள் மேப்பின் படி, ஒருங்கிணைந்த ஹிந்தியாவிற்குள் காஷ்மீரும், அருணாச்சல பிரதேசமும் பூகோள ரீதியாக உள்ளிருக்கிறது. குறைந்தபட்சம் உலகளாவிய இந்த கூகிள் மேப்பிலாவது, ஒற்றை தேச அடையாளமான வரைபட எல்லையை வரையறுத்து, அதை டிஜிட்டலில் கூட காப்பாற்ற முடியாத வக்கற்றர்கள் தான் அவசர காலங்களில் இம்மண்ணை காப்பாற்ற போகிறார்களா?

- இரா.ச. இமலாதித்தன்

#Google #GoogleMaps #Hindia #China #Pakistan #Map #hindustan

31 July 2017

ரேசன் பொருட்கள் மானிய ரத்து - ஒரு பார்வைவயல்களெல்லாம் வீடுகளாகி பல வருடங்கள் ஆகியாச்சு. ஊரோர ஒதுக்குபுறமெல்லாம் நியூ சிட்டிகளாகவும், புது நகரங்களாகவும் மாறி, முப்போகம் விளைந்த நிலங்களிலெல்லாம் வீடுகள் முளைத்து நிற்கின்றன. ப்ரீட்ஜுக்கு முன்பாகவே புளிசோறுவை கண்டுபிடித்த ஆதித்தமிழனின் எச்சங்களெல்லாம் ஏசி, ப்ரீட்ஜ்களோடு வாழத்தொடங்கி வருடங்கள் பல கடந்து விட்டன. குழந்தைகளாலும் மருமகள்களாலும் கைவிடப்பட்ட எத்தனையோ குடும்பங்கள் பென்ஷன் பணத்தையும் ரேசன் மானிய பொருட்களையும் நம்பியே ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதே எதார்த்தம்.

கல்விக்கு லோன் தர மறுக்கும் இதே வங்கிகள் தான், காருக்கு லோன் தர நடையாய் நடக்கிறார்கள். டோல்கேட் தொடங்கி ஜி.எஸ்.டி. வரைக்கும் வரிகட்டியே வாழ்க்கை நடத்தும் அனைவரையுமே பான்கார்டு முதற்கொண்டு ரேஷன்கார்டு வரைக்கும் ஆதார் கார்டோடு இணைக்க சொல்லும் போதே தெரியும்; ஹைடெக் பிச்சைக்காரர்கள் அதிகம் வாழும் நாடாக ஹிந்தியா மாறுமென!

த்தூ... உங்க ரேஷன் பொருட்கள் மட்டுமல்ல; உங்க டெல்லியும், உங்க ஹிந்தியும், உங்க ஆட்சியும் கூட எங்களுக்கு வேண்டாம். ஜென்ம சனி போல் பாடுபடுத்தும், எம்மை விட்டு எப்போது தொலையப் போகிறீர்கள்? அறுபது ஆண்டுகாலம் இல்லாது சமீப காலங்களாக அடிமையாக்க நினைக்கும் வடக்கத்திய ஆண்டைகளே, எம்மண்ணை எமக்கே கொடு; நாங்களே எங்களை ஆண்டு கொள்கிறோம்.

ஒருபக்கம், தமிழ்நாட்டை தாங்கள் தான் ஆள்வதாக நினைத்துக்கொண்டிருக்கும் பாஜகவின் பினாமி ஆட்சியான எடப்பாடி அரசாங்கமோ மாநிலத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலிருந்து மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட புனிதமானவர்களுக்கு மாத சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது.

மறுபக்கம், அம்பானி - அதானி போன்ற வணிகர்களுக்கு பினாமியாக இருந்து கொண்டு, மதத்தையும் - பேச்சையும் மட்டுமே முதலீடாக கொண்டு மாநிலங்களிலெல்லாம் குட்டைகளை குழப்பி ஆட்சியென்ற மீன் பிடிக்கும் ஹிந்திய அரசாங்கமோ, நடுத்தர/ஏழை குடும்பங்களின் வாழ்வாதரங்களில் ஒன்றான மானியமாக தரப்பட்ட ரேசன் பொருட்கள் வரைக்கும் ரத்து செய்ய துடிக்கிறது.

சவலப்பிள்ளை போல தலை மட்டும் பெரிதாகி, உடல் முழுதும் சுருங்கி கிடக்கும் வருங்கால வல்லரசுக்கு நடுத்தர வர்க்கத்தில் பிறப்பெடுத்த உழவர் பெருங்குடி மகனாக எம் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

கூகிள் மேப்ஸ் - தமிழ் ஊர்ப்பெயர்கள்!ஹிந்தியா முழுமைக்கும் ஹிந்தியை திணிக்க முயல்கின்ற வேளையில், கூகிள் மேப்ஸ் நிறுவனமானது தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப்பெயர்களை தமிழ் மொழியிலேயே கொடுத்திருப்பது மகிழ்ச்சியான விசயம் தான். இது மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும்; ஏனெனில் ஹிந்தியா முழுமைக்குமான பகுதிகளிலுள்ள ஊர்ப்பெயர்கள் அனைத்துமே ஆங்கிலம் மற்றும் அந்தெந்த வட்டார மொழியிலேயே கொடுத்திருக்கிறது கூகிள். இதற்கிடையில், மொழி வழியே உள்ள பிழைகளையும் சுட்டிக்காட்டி வேண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக எங்கள் டெல்டாவை எடுத்துக்கொண்டால், இங்குள்ள கணிசமான ஊர்ப்பெயர்கள் தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.


(எ-டு)

மணக்கரை - மன்னரை
பாலக்குறிச்சி - பலக்குறிச்சி
கச்சநகரம் (கச்சனம்) - கட்சணம்
ஆலத்தம்பாடி - அளத்தம்பாடி
கொருக்கை - கோரிக்கை
தலைஞாயிறு - தலைநயர்

இப்படி பலப் பெயர்கள் திருத்தப்பட வேண்டிருக்கிறது. இதுபோலவே மற்ற மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான ஊர்ப்பெயர்களும் பிழையோடுதான் இருக்கக்கூடும். அதையும் சரி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

- இரா.ச. இமலாதித்தன்

#Google #GoogleMaps

25 July 2017

பிக்பாஸ் - கொசுறுகள்!


காயத்ரி - ஜூலி - நமீதா

சீரியல் வில்லிகளுக்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களையெல்லாம் விட கேவலமான மனநிலை இவளுக கிட்ட இருக்கு. என்ன மாதிரியான கேடு கெட்ட ஜென்மங்க இவளுக? த்தூ...

***

தான் நடித்த குறும்படத்தையெல்லாம் பற்றி வாயை திறக்காமல் அதை மறைத்து பொதுஜனம் போல ஏமாற்றிய பச்சோந்தி ஜூலியை விட, 'என்க்கு டமில் கொஞ்சம் கொஞ்சும் தான் வரும்' என சீன் போடும் நடிகைகளுக்கு மத்தியில் 'நான் அரசுப்பள்ளியில் தான் படித்தேன்' என வெளிப்படையாக சொன்ன ஓவியா ஒருபடி மேல் தான்!

(எங்கள் பள்ளி: அரசு மேல்நிலைப்பள்ளி, தேவூர், நாகப்பட்டினம்)

***

கமல்ஹாசனை புகழ்வதற்காக பரமக்குடியை பலரும் அடிக்கடி பயன்படுத்தி கொ'ல்'கிறார்கள். 'எல்லாத்துக்கும் காரணம்' பரணியும், 'அக்கா அக்கா' என சசிகலாவை நினைவுபடுத்தும் ஜூலியும் கூட பரமக்குடி தான் என்பதை அந்த பலரும் வசதியாக மறந்து விடுகிறார்கள். தமிழக பாஜக தலைவர்களுக்கும், அதிமுக அமைச்சர்களுக்கும் மட்டுமல்ல; பிக்பாஸ் பார்ப்பவர்கள் அனைவருக்குமே தற்போதைய சூழலில் பரமக்குடி தான் பிரச்சனையே!

***

மீசை முளைக்காதது; பல்லு போனது; தாடி நரைத்தது; தலைமுடி கொட்டியது; தொப்பை;
வத்தல்; நெட்டை; குட்டை; கருப்பு; சிவப்பு; திக; கம்யூனிஸ்ட்; பாஜக; காங்கிரஸ்; திமுக; அதிமுக; தல தளபதி குரூப் என அனைத்து தரப்பட்டவர்களாலும் சூழப்பட்ட 'ஃபேஸ்புக் - ட்விட்டர்' என எல்லா பக்கமும் ஓவியா எனும் ஒரு நாயகி உருவாகிறாள்!

***

நூறு சிவாஜி, ஐம்பது நாகேஷ், பத்து மனோரமாவை தனக்குள் கொண்டுள்ள ஒரு திறமைமிகு நடிகையை தமிழ் சினிமா தத்தெடுத்து, கலைத்துறைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!

வெல்கம் ஜூலி :)

***

பிக் பாஸ் வீட்டை 'ஃபைவ் ஸ்டார் ஜெயில்' என நமீதா சொன்ன உடனேயே கொஞ்சம் கூட யோசிக்காமல், சசிகலாவையும் - பார்பன அக்ரஹாராவையும் பற்றி மறைமுகமாக தாக்கி ரியாலிட்டி ஷோவிலும் அரசியல் பேசிய கமலின் யுக்தி அழகு!

***

வடக்கு வளர்கிறது; தெற்கு தேய்கிறது என்பதை போல, பிக்பாஸுலும் லூசு கூமுட்டை மாதிரி பேசிக்கிறாய்ங்க. நமீதாவை விட ஓவியா பேமஸா என கேட்கும் இவர்களின் பொது புத்திக்கு, பாலிவுட் சினிமாவில் ஆதிக்கம் செலுத்துவதெல்லாமே தெற்கத்தியர்கள் தான் என்பதை மார்க்கெட்டில்லாத கோலிவுட் அரைகுறைகளுக்கு ஏன் தெரியவில்லை?

***

ஜூலி: அக்கா, நான் வெளிய போன என்னை எல்லாரும் காரி துப்புவாங்கன்னு ஓவியா சொல்றாக்கா?
காயத்ரி: என் கூடவே இரு; நான் தான் இருக்கேன்ல?!

இன்னும் கொஞ்ச நாளுல நீயே அங்க இருப்பியான்னு தெரியல. இந்த லட்சணத்துல அந்த 'பேமஸ்' டயலாக்கை வேற சொல்லிக்கிட்டு திரியுறியா நீ?

***

ஆரம்பத்திலிருந்து காயத்ரி-ஜூலியை பார்க்கும் போது அரசியல் சகோதரிகளான ஜெ-சசி தான் அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தது; இது எனக்கு மட்டும் தானோயென்று நினைத்திருந்தேன்; ஆனால், இதே விசயத்தை பலரும் சொல்வதை பார்க்கையில் மனநிறைவை தருகிறது.

***

பிக்பாஸூல் தினமும் காலையில் அவர்களையெல்லாம் எழுப்பும் விதமாக ஒலிபரப்பப்படும் பாடல்கள் எல்லாமே சமூக ஊடகங்களின் தாக்கத்தையே பிரதிபலிக்கிறது. ஓவியா சோகமாக இருந்தப்போ காலையிலேயே சோகபாட்டு, ஓவியா சந்தோசமா இருந்தப்போ 'செஞ்சிட்டாளே வச்சு செஞ்சிட்டாளே' என டைமிங் பாடலென சமூக ஊடகங்களில் இயங்கும் புரட்சிப்படையின் மனசாட்சியையே எழுப்புகிறார்கள்.

***

ஜூலி என்ற வீரப்பெண்மணி போருக்கு தயாராகிட்டு இருக்குதாம்...
யோவ், காலா காதுல கேட்குதா?!

***

"உண்மையை சொல்லத்தான் தைரியம் வேண்டும்; பொய் சொல்ல பயமே போதும்; ஒருமுறை உண்மை பேசிப் பார்; உன்னை நீயே பெருமையாக உணர முடியும்!"

- 'கயல்விழி' ஓவியா

***

எதிரே இருப்பது கமலாகவே இருந்தாலும் மற்றவர்கள் போலவும், 'ஓவர் ஆக்டிங்' ஜூலி போலவும் நடிக்காமல் தன்னுடைய தனித்துவத்துவ அடையாளமான, கபடமற்ற கண்களின் வழியே சிரிப்பு - வெளிப்படையான பேச்சு - தப்பென தோன்றினால் மன்னிப்பு கேட்பதும் - சரியென தோன்றினால் கெத்தா இருக்கிறதும் - மனசுல பட்டதை யாருக்கும் பயப்படாமல் பேசுவதும் தான், ஓவியா! என்பதை மீண்டுமொருமுறை இன்றும் நிரூபணம் செய்திருக்கிறார்.

***

கண்ணகிக்கு போட்டியாக மாதவி வந்ததாக இலக்கியங்கள் கூறலாம்; ஆனால் இன்றளவில் எத்தனை பிந்து மாதவி வந்தாலும், ஓவியாவை முந்த வாய்ப்பில்லை. ஏனெனில் இங்கே யாரும் கோவலன் இல்லை!

#OviyaArmy #SaveOviya #Oviya #BiggBoss #Rajini

17 July 2017

புதிர்கள் நிறைந்த ஆடி மாதம்!

திருமணமான புதுமண தம்பதிகளை ஆடி மாதம் விலகி இருக்க சொல்லிவிட்டு, "ஆடி பட்டம் தேடி விதை!" என உழவிற்கு மட்டும் உயிரூட்டியது எதற்கென புரியவில்லை. முதலாவது தாம்பத்யம் சார்ந்த விசயத்தை பற்றி பேச வந்தால், அதற்கொரு கணக்கு சொல்லப்படுகிறது. ஆடியிலிருந்து பத்தாவது மாதம் சித்திரை வரும்; அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஆடி மாதம் தம்பதிகள் ஒன்றிணைந்து கரு உருவாகி விட்டால் அது சித்திரையில் குழந்தையாக பிறக்கும்; அப்போதுள்ள சித்திரை வெயிலின் தாக்கத்தை அக்குழந்தையால் தாங்கி கொள்ள முடியாதென அறிவியல் சித்தாந்தங்களும் சொல்லப்படுகிறது.  புதுமண தம்பதிகள் இல்லாத மற்றவர்களோ அல்லது திருமணமாகி ஒரு வருடத்தை கடந்தவர்களோ, ஆடியில் தாம்பத்ய உறவாடி சித்திரையில் பிள்ளை பெற்றெடுக்க மாட்டார்களா? அப்படி பெற்றெடுத்தால் அப்போது சித்திரை வெயில் அக்குழந்தையை பாதிக்காதா?

அடுத்து, ஆடியில் விதை விதைத்தால் தையில் அறுவடை செய்யலாம் என்ற முதுமொழியும் கூட நெல் சார்ந்த உழவர்களுக்கு மட்டுமே பொருந்த கூடியதாக இருக்கிறது. ஆனால், சிறு தானியங்களை விதைத்துண்ட உழவர்களுக்கு இந்த ஆடி முதலான தை வரையிலான ஆறு மாத கணக்கெல்லாம் தேவையே இல்லை. மேலும், நெல் சார்ந்த சாகுபடியையே மூன்று போகம் விளைவிக்க செய்து பழக்கப்பட்டவர்களுக்கும் கூட, ஆடி மாத கணக்கெல்லாம் பயனற்ற ஒன்று.

பன்னிரு மாதங்களும், தட்சிணாயணம் - உத்திராயணம் என இரண்டு பகுதியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. தை முதலான ஆறு மாதங்கள் உத்திராயணம் என்றும், ஆடி முதலான ஆறு மாதங்கள் தட்சிணாயணம் என்றும் வகைப்படுத்த பட்டிருக்கிறது. சூரிய வட ஓட்டத்தை (உத்திராபதி) உத்திராயணம் என்றும், சூரிய தென் ஓட்டத்தை (தெட்சிணாமூர்த்தி) தட்சிணாயணம் என்றும் சொல்வதும் ஏதோவொரு குறியீடாகவே தோன்றுகிறது. தையை முதலாக கொண்ட ஆறு மாதங்களான உத்திராயணம் என்பது வானுலக தேவர்களுக்கு ஒருநாளைய பகல் பொழுதாகவும், அதுபோல ஆடியை முதலாக கொண்ட ஆறு மாதங்களான தட்சிணாயணம் என்பது வானுலக தேவர்களுக்கு ஒருநாளைய இரவு பொழுதாகவும் உருவகப்படுத்தி வைத்திருக்கின்றனர். குழப்பம் நிறைந்த இவற்றை பற்றியெல்லாம் சொல்ல நிறையவே இருக்கிறது.

இப்போது இரவின் நடுநாயகமாக திகழும் நிலவை பற்றி பார்ப்போம்.
தானே ஒளிரக்கூடிய தன்மையில்லாமல் சூரியனின் ஒளியை உட்கிரகித்து வெளிச்சம் கொடுத்தாலும் நிலவானது, நம் மனதுக்கு நெருக்கமான ஒன்றாகவும், தெளிந்த அறிவையும், உற்சாகத்தையும் கொடுக்கும் வல்லமையையும் உடையதாகவும் இருக்கிறது. ஜாதகத்தில் கூட சந்திரன், மனதிற்கான மனோ காரகன் என்றே சொல்லப்படுகின்றது. ஒருவரின் ஜாதக கட்டத்தில் சந்திரன் எந்த ராசிக்கட்டத்தில் இருக்கிறதோ, அதுவே அந்த ஜாதகரின் ஜென்ம ராசியாகவும் கணிக்கப்படுகின்றது.

இந்த ஆடி மாதத்தில் தான், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை,  ஆடி பெளர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என சிறப்புமிகு நாட்களும் அதிகமாக வருகின்றது. மேலும், முன்னோர்களின் ஆன்ம அலைகளோடு தொடர்பு கொள்ள ஏதுவான மாதமும் இதுவே தான். என்னதான், சூரியனை தொடர்பு படுத்திய வட ஓட்டம், தென் ஓட்டம் என்ற ஆறாறு மாதங்களாக வகைபாடிருந்தாலும், நிலவை மையப்படுத்தியே ஒவ்வொரு மாதத்தின் நாட்களெல்லாம் வகைபடுத்தப்படுகிறது என்பது குறிப்பிடதக்க விசயமாகவும் இங்கே இருக்கிறது.

நம் முன்னோர் சார்ந்தும், குலம் சார்ந்தும், வழிவழியாக தொடர்ந்து வருகின்ற குல தெய்வ வழிபாட்டையெல்லாம் சிறு தெய்வ வழிபாடென சொல்லிவிட்டு பெருந்தெய்வத்தை பெருங்கோவில்களில் அடையாளப்படுத்தினார்கள். ஆனால் அந்த பெருங்கோவில்களிலும் கூட, பெளர்ணமிக்கும் அமாவாசைக்கும் இடைப்பட்ட நாட்களை வளர் பிறை - தேய் பிறை என பிரித்துதான் இரண்டு பதினைந்து நாட்களாக வழிபாடு செய்கின்றனர். (நான்காம் நாள்) சதுர்த்தி, (ஆறாம் நாள்) சஷ்டி, (எட்டாம் நாள்) அஷ்டமி, (ஒன்பதாம் நாள்) நவமி, (பத்தாம் நாள்) ஏகாதசி, சிவராத்திரி, பிரதோஷம், பெளர்ணமி, அமாவாசை என அனைத்து நாட்களுமே நிலவை மையப்படுத்தியே பகுக்கப்பட்டு விழாவாக பெருங்கோவில்களில் கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதம் என்பதே முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும் மாதம். அதனால் தான் அம்மாதத்தில் ஆறு, கடல்களில் நீராடி கரையோரம் பித்ரு காரியங்கள், பிதுர் தர்ப்பணம் போன்றவற்றை தம் குல முன்னோர்களுக்கு கொடுத்து அவர்களின் ஆசீர்வாதத்தை பெறுகிறார்கள். ஆடி முதலான ஆறு மாதங்களும் அந்த வானுலக தேவர்களுக்கு வேண்டுமானால புராணப்படி இருளாக இருந்துவிட்டு போகட்டும். பொதுவாக முதலிரவு என்பதே இருளில் நடப்பது தானே? எனவே புது மண தம்பதிகள், ஆடியில் கூடியே இருங்கள்; மாறிகிடக்கும் காலச்சூழலில் பெரும்பாலான மாதங்களில் சித்திரையை தாண்டிய வெயிலே சுட்டெரிக்கிறது என்பதால், வெயில் அதிகமுள்ள சித்திரையில் குழந்தை பிறந்தாலும் பரவாயில்லை; சமாளித்து கொள்ளலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

13 July 2017

மகான் சுந்தரானந்தர் சித்தர்!

பிறப்பு: ஆவணி - ரேவதி / ஆவணி மாதம், ரேவதி நட்சத்திரம் (மூன்றாம் பாதம்)
குலம்: அகமுடையார்
குரு: சட்டை முனி
ஜீவ சமாதி: மதுரை


சுந்தரானந்தர் இயற்றிய சில நூல்கள்:

சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
சுந்தரானந்தர் சோதிட காவியம்
சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
சுந்தரானந்தர் விஷ நிஷவாணி
சுந்தரானந்தர் கேசரி
சுந்தரானந்தர் மூப்பு
சுந்தரானந்தர் தண்டகம்
சுந்தரானந்தர் காவியம்
சுந்தரானந்தர் சுத்த ஞானம்
சுந்தரானந்தர் தீட்சா விதி
சுந்தரானந்தர் பூசா விதி
சுந்தரானந்தர் அதிசய காரணம்
சுந்தரானந்தர் சிவயோக ஞானம்

'போகர் 7000' என்ற நூலில் சுந்தரானந்தர் பற்றி போகர் குறிப்பிடபட்டுள்ள சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை;

பாரினிலே யின்னமொரு மார்க்கங்கேளு பாலான புலிப்பாணி மைந்தாகேளு
சீரிலகுஞ் சுந்தரனா னந்தர்தாமே சீரான மரபதுவும் ஏதென்றாக்கால்
ஆரியனார் தாமுரைத்த நூலில்தாமும் வப்பனே #அகமுடையர் என்னலாகும்
சூரியன்போல் தலைமுறைகள் இருபத்தெட்டு சொல்லுதற்கு நாவில்லைப் பாவில்லைதானே (5721)

பிறந்தாரே டமரகர் யாரென்றாக்கால் பேரான சுந்தரனார் மைந்தனப்பா
இறந்ததொரு சுந்தரர்க்கு மைந்தனப்பா எழிலான பிள்ளையது ரெண்டாம்பிள்ளை
துறந்ததொரு ஞானியப்பா சைவஞானி சுத்தமுள்ள #வீராதி வீரனப்பா
மறந்ததொரு மார்க்கமெல்லாம் மாந்திரீகத்தால் மகத்தான புத்தியினால் அறிந்தசித்தே (5919)

சித்தான யின்னமொரு மகிமைசொல்வேன் சீர்பாலா புண்ணியனே பகலக்கேளிர்
முத்தான ஞானியிலும் உயர்ந்தஞானி முனையான சுந்தரனார் சித்துதாமும்
புத்தியுள்ள பூபாலன் தான்பிறந்த புகழான மாதமது யாதென்றாக்கால்
சுத்தமுள்ள #ஆவணியாந் திங்களப்பா சுடரான சுந்தரனார் பிறந்தார்தானே (5920)

தானான #ரேவதியாம் மூன்றாங்காலாம் தண்மையுடன் பிறந்ததொரு நாளுமாச்சு
கோனான சுந்தரனார் வுளவுகேட்டால் கொற்றவனே #கிக்கிந்தர் மலையினுச்சி
தேனான #நவகண்ட ரிஷியார்தம்மின் சிறப்பாக யவர்தமக்கு #பேரனாகும்
மானான மகத்துவங்கள் உள்ளசித்து மண்டலத்தில் சிவஞான சித்துபாரே (5921)

பத்தான மகிமையது என்னசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாலாகேளிர்
செத்துமே சாகாமல் காயங்கொண்டு சேனைநெடுங் காலமது வரையிலப்பா
முத்தான மோட்சவழி பெறுவதற்கு முத்தான பத்துமகா ரிஷியார்தாமும்
சுத்தமுடன் #கிரேதாயி னுகத்திலப்பா சுந்தரனே தவசிருந்து சித்துபாரே (6907)

சுந்தரானந்தர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டர் என்றும், தனது குருவான சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது. இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது. போகர் தனது நூல்களில் ஒன்றான 'போகர் - 7000' நூலில் பல இடங்களில் சுந்தரானந்தரை பற்றி குறிப்பிடுகிறார். வீராதி வீரனென்றும், அழகானவரென்றும் சுந்தரானந்தரை பற்றி இந்நூலில் போகர் புகழ்ந்து பேசுகிறார்.

மேலும், இவர் கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட மகரிஷியின் பேரன் என்றும் போகர் குறிப்பிடுகிறார். தோற்றத்தின் காரணமாக காரணப்பெயராக விளங்கிய சுந்தரானந்த சித்தருக்கு வல்லப சித்தர் என்ற பெயருமுண்டு. இவர் பதின்மூன்றுக்கும் அதிகமான நூல்களையும், வேளாண்மை சார்ந்த சில நுணுக்கமான விஷயங்களையும் ஆருடங்களையும் இயற்றியுள்ளார். பதினெண் சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனி சந்நிதி அமைந்திருக்கிறது. ரேவதி நட்சத்திரத்தை உடையவர்கள், சுந்தரானந்தரை வணங்குவதால் மனமகிழ்வோடு வாழ்வின் உயர்ந்த நிலையை அடையலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

07 July 2017

எம்.எஸ்.தோனியும் 80களும்!

(முன் குறிப்பு: 1980-1989களில் பிறந்தவர்களுக்கான ஒரு சிறிய நினைவூட்டல் பதிவு இது)


எளிய நடுத்தர குடும்பத்தில் பிறப்பெடுத்து வளர்ந்து மேலெழுந்து நிற்பது தான் தற்போதைய சூழலில் மிகப்பெரிய சவாலான விசயம். இந்த 80களில் பிறந்தவர்களும் கூட இது போன்றதொரு மிகப்பெரிய சவால்களை சமாளிப்பவர்கள் தான். ஏனெனில் 1980 முதல் 1989 வரையிலான இடைப்பட்ட பத்து வருடங்களில் பிறந்தவர்கள் அனைவருமே குழப்பமான சூழலில் வளர பழக்கப்பட்டவர்கள். அந்த இடைப்பட்ட வருடத்தில் பிறந்தவன் என்ற முறையில் என்னையே பலவற்றிற்குள் சோதனைக்குட்படுத்தி பார்த்திருக்கிறேன். அவற்றுள் சிலவற்றை மட்டும் கீழே வகைப்படுத்திருக்கிறேன்.

SW/MW அலைவரிசை எங்கள் அபிமான அப்துல் அமீது போன்றோரின் இனிய குரல்களில் இலங்கை வானொலிகளையும், தென்கச்சியாரின் இன்றொரு தகவலை தினந்தோறும் கேட்டு ரசித்தோம். திரைச்சித்திரம் என முழு படத்தையும் ஒலிவடிவிலேயே கேட்டிருக்கிறோம். அதைத்தொடர்ந்து ஒனிடா - பானசோனிக் - சாலிடர் என்ற ப்ளாக் அண்ட் ஒயிட் தொலைக்காட்சிகள் வாயிலாக ஞாயிறுக்கிழமைகளை கொண்டாடி இருக்கிறோம். டேப் ரெக்ராக்டர் கேசட், டெக் எனத்தொடங்கி சிடி - டிவிடி - பென்ட்ரைவ் - ப்ளூரே டிஸ்க் வரைக்கும் பதிவு செய்து பாடல்களையும், படங்களையும் ரசித்துக்கொண்டிருக்கிறோம். ப்ளாக் அன்ட் ஒய்ட் / கலர் டெஸ்க்டாப் மானிட்டரில் கணினி செயல்பாட்டை தொடங்கி LCD/LED மானிட்டர் வரைக்கும் பயன்படுத்தி வருகிறோம். பப்ளிக் டெலிபோன் பூத்களும், டெலிபோன் இன்ஸ்ட்ருமென்ட்களும், ப்ளாக் அன்ட் ஒயிட் பட்டன் வைத்த செல்போன்களும் பயன்படுத்த தொடங்கி, இன்று டச் மாடல்களான ஆன்ட்ராய்டுகளோடும் அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறோம்.

சிக்கல் பக்கம் ஆண்டனாவை திருப்பி தூர்தர்ஷனுக்காக தவமிருந்திருக்கிறோம். ஸ்ரீகிருஷ்ணா, மகாபாரதம், ஜங்கிள் புக், மாதவன் இருவேடங்களில் நடித்த ராஜ் கஹானி என்ற அரச கதை, சக்திமான், என பல டப்பிங் தொடர்களின் அதிதீவிர ரசிகர்களாக இருந்திருக்கிறோம். ஒலியும் ஒளியுமென்ற வாரந்திர வெள்ளிக்கிழமை புதுப்பாடல்களுக்காக காத்திருந்திருக்கிறோம். DD1, DD5 என காத்திருந்த வேளையில் ஈழம் பக்கம் ஆண்டனாவை திருப்பி சக்தி டிவி, ரூபவாகினி, சிரிச போன்ற அங்குள்ள தமிழ்/சிங்கள சேனல்களை பார்த்து குதூகலித்திருக்கிறோம். உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக 'வானத்தை போல' படத்தை வெளிவந்த ஓரிரு மாதங்களிலேயே சிரச சேனலில் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம்.

அதே காலத்தில் வானொலிகளெல்லாம் FM என்ற வடிவில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட அலைவரிசையில் அணிவகுத்தது. நாகப்பட்டினத்தை சேர்ந்த எங்கள் பகுதிக்கு காரைக்கல் பண்பலை தான் விடிவெள்ளியாக திகழ்ந்திருக்க, பாதி நேரம் ஹிந்தியே ஆக்கிரமித்திருந்த நேரத்தில் இலங்கையிலிருந்து சக்தி எஃப்பெமும், சூரியன் எஃப்பெமும் 24x7 தமிழில் பாடல்களை ஒலிபரப்புவதை கேட்பவதற்காக வில்லேஜ் விஞ்ஞானி போல வடி தட்டை வைத்தே புதுப்புது ஆண்டனாக்களை உருவாக்கி கேட்டு ஈழத்தமிழோடு ரசித்திருக்கிறோம். அப்போது தான் தமிழகத்தில் தனியார் அலைவரிசையாக ரேடியோ மிர்ச்சியும் வந்தது; பனிக்காலங்களில் அதையும் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்.

ஊருக்கொரு டிவி என்றிருந்த நிலையில் அடுத்து தெருக்கொரு டிவி என்ற நிலையில் வளர்ச்சி வந்த நிலையிலேயே, கலர் டிவியும் அதிகமாக அடியெடுத்து வைத்தது. முக்கால் சைக்கிள், டி.வி.எஸ் 50, பஜாஜ் எம் 80 என்ற வரிசையாக புதுப்புது வாகன படையெடுப்புகளில் பயணித்திருந்தோம். புது மாப்பிள்ளைக்கான சீதன பைக்காகி போன டி.வி.எஸ் விக்டர், ஹிரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் போன்றவற்றின் வருகையும், பல்சர், அவஞ்சர் தொடங்கி இப்போது TVS Apache RTR 200, Suzuki Gixxer, Yamaha FZ-FI, Honda Hornet என அனைத்தோடும் பயணித்து கொண்டிருக்கிறோம்.

ரஜினி - கமலை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் இடையே புது என்ட்ரி கொடுத்த விஜயை எங்களின் அடுத்த உச்ச நட்சத்திரமாக பார்த்தோம். மனதை தொட்டு சொல்லச்சொன்னால், இன்றைய அஜித் ரசிகர்களாக இருக்கும் 80களின் ஆட்களெல்லாம் ஆரம்பத்தில் விஜய் ரசிகனாகத்தான் இருந்திருப்பார்கள். கேலிக்கிண்டலுக்காகவே தனக்கு விஜயை பிடிக்குமென சொல்லத் தயங்கியவர்களே இங்கு அதிகம்; அது பெரிய கதை. இப்போது சிம்பு - தனுஷ், சிவக்கார்த்திக்கேயன் - விஜய் சேதுபதி - அசோக் செல்வன் எனவும், குஷ்பூ- மீனா- சிம்ரன்-நக்மா- ரம்பா என ரசித்து கொண்டிருந்த காலம் மறந்து கீர்த்தி சுரேஷ் - ஸ்ரீதிவ்யா - லெஷ்மி மேனன் - நயன்தாரா எனவும் நீளும் பட்டியலிலுள்ள பல இளநடிகர்களையும் ரசித்து கொண்டிருக்கிறோம்.

இசையுலகில் இளையராஜாவையும், கூடவே ரஹ்மானையும் ஒருசேர ரசித்தோம். அதோடு நிற்காமல் இன்று ஜி.வி. பிரகாஷ், அனிருத், சந்தோஷ் நாராயணனோடும் லயித்து நிற்கிறோம். கே.எஸ்.ரவிக்குமார் - வாசு - மணிரத்னத்தோடு ஷங்கர் - கெளதம் - வினோத் - நலன் குமாரசாமி - கார்த்திக் சுப்புராஜையும் கொண்டாடுகிறோம். டூரிங் டாக்கீஸ்லிருந்து மல்டி ஃப்ளெக்ஸ் சினிமாவையும் அதே உற்சாகத்தோடு தான் கண்டு கொண்டிருக்கிறோம்.

இப்படியாக உணவு - உடை - இசை - ரசனை என எல்லாவற்றிலும் 70களின் சாயலும் 90களின் சாயலும் கலந்து, எங்களுக்கென அடையாளமின்றி தனித்து நிற்கிறோம். 70களின் கடைசி தலைமுறையாகவும், 90களின் முதல் தலைமுறையாகவும் 80களில் பிறந்தவர்களான நாங்கள் கலப்படமான குழப்பம் நிறைந்த வரையறையோடு தான் இன்றளவும் இருக்கிறோம். இயற்கையோடு இயங்கிருந்ததோடு மட்டுமில்லாமல், அறிவியல் தொழிட்நுட்பத்தின் அபிரிவிதமான வளர்ச்சியையும் அதன் போக்கிலேயே அனுபவித்து கொண்டிருப்பவர்கள் என்ற சுயபெருமையும் எமக்குண்டு. என்றுமே மாறாத மாற்றம் என்ற ஒன்றில் சிக்கியும் தப்பி பிழைத்த எம்மைப்போன்ற 80களில் பிறந்த எம்.எஸ்.தோனிக்கு(07.07.1981) இனிய வாழ்த்துகள்! :)

- இரா.ச. இமலாதித்தன்
   (21.09.1985)

(பின் குறிப்பு: தோனி பற்றி எந்த குறிப்பும் இதில் இருக்காதென்றாலும், 90க்கு பிறகு பிறந்தவர்களும் தல தல என தலையில் வைத்து கொண்டாடும் தலைமைத்துவ சூட்சமத்தை எளிய குடும்பத்திலிருந்து 80களில் பிறப்பெடுத்த தோனி நமக்கு(80's) சமகாலத்திலேயே கற்றுக் கொடுத்திருக்கிறார்; அதற்காகவே அவர் பிறந்த நாளில், அவர் படத்தோடும், அவர் பெயரோடும் இப்பதிவு)

05 July 2017

அகம்படியர் குல தேவி - மீனாட்சி!

"வாகை சூடும் சுகுண தேவராகும்
தமிழர் வானவ அகம்படியர் குல தேவி
வாணி மாதங்கி
திருகூடலூர் தங்கி வளர்வாம்
மீனாம்பிகை என் உமையாளே!"

- மீனாட்சி திருப்புகழ்


மதுரை மீனாட்சியை போற்றிய பாடல்களில் 'மீனாட்சி திருப்புகழ்' என்னும் பாடல் தொகுப்பும் ஒன்று. இப்பாடலை மகாகவி பாரதியாரின் சீடரான மணிமன்ற அடிகள் இயற்றிருக்கிறார்.

(நன்றி: கவிஞர் இரா.பொற்கைப்பாண்டியன், அண்ணன் வெங்கடேஷ்)

04 July 2017

தமிழ்த்தாய் வாழ்த்தும் - பிக் பாஸ் ஷோவும்!


கேரள ஆலப்புழாவில் பிறப்பெடுத்த பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய 'மனோன்மணீயம்' என்ற கவிதை நாடக நூலில் வரும் ஒரு பாடலை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக தமிழக அரசு அறிவித்தது. இந்நாடக நூல், லிட்டன் பிரபு ஆங்கிலத்தில் எழுதிய ‘இரகசிய வழி' என்ற நூலை தழுவி அமைந்தது என்பதும், எங்களது நாகப்பட்டினம் நாராயணசாமி பிள்ளை என்பவரே, பெ. சுந்தரம் பிள்ளையவர்களின் தமிழாசிரியராக இருந்தவர் என்பதும் கூடுதல் தகவல்.

"ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!" என்ற உண்மையை உரக்கச்சொன்ன வரிகள் நீக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை எழுதியது, (எங்க வேதாரண்யத்தை சேர்ந்தவரும் சமரச சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியருமான) தாயுமானவர் என தவறுதலாக #BiggBossடிராமாவில் ஜூலி சொல்லிவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை பாடி முடிக்கிறார். அந்த நிகழ்வில் தமிழ் வாத்தியார் போல வீற்றிருந்த கவிஞர் சினேகன் வாய்மூடி மெளனியாய் வேடிக்கை பார்க்கிறார். என்ன இது, தமிழுக்கு வந்த சோதனை?

இத்தனை வருட வரலாற்றில் முதன்முறையாக விஜய் டிவியெல்லாம் தன் பெயரையே தமிழ் படுத்தி செம்மொழியை தூக்கி பிடிக்கிறதும், 'தமிழ்க்கடவுள் முருகன்' என்ற நாடகத்தை உருவாக்குவதும், அனைத்து பொருட்களின் பெயர்களையும் ஹிந்தியிலேயே அச்சடித்து பதஞ்சலி என்ற நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் பாபா ராம்தேவையும் தமிழ் பேச வைத்து யோகா சொல்ல வைக்கிறதுமென தமிழை மையப்படுத்தியே விஜய் டிவியில் அனைத்தும் நகர்கிறது. ஆனால் இவற்றிற்கு பின்புலமாக உள்ளவற்றை, எல்லாரோலும் புரிந்து கொள்வது தான் சிரமமாக இருக்கிறது.

- இரா.ச. இமலாதித்தன்

29 June 2017

சான்டோ சின்னப்பா தேவர் எனும் தன்னம்பிக்கை சகாப்தம்!

'தேவர் மகன்' போல எத்தனை திரைப்படங்கள் வருடத்திற்கு வந்தாலும், என்றைக்குமே திரைத்துறையின் ஒரே "தேவர்", அகமுடையார் குலத்தோன்றல் சான்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் மட்டுமே! ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் இருக்கும் போது, மிகப்பெரிய நீதித்துறை பதவியிலிருருந்த யாரோ ஒரு தயிர்சாத பிரியர் கேள்வி கேட்டிருந்தார், "காளைகளுக்கு பதிலாக காட்டிலுள்ள சிங்கத்தை அடக்க முடியுமா?" என்று. அப்போதைய நேரத்தில் சாண்டோ சின்னப்பா தேவர் சிங்கத்தின் மீது கை வைத்து தடவி கொடுக்கின்ற படமும், எங்கள் வேதாரண்யம் பி.வி.தேவர் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் படமும் தான் அதிகளவில் சமூக தளங்களில் பரபரப்பாக பரவிக்கொண்டிருந்தது என்பதும் இங்கே நினைவு கூற வேண்டிருக்கிறது.


தீவிர முருக பக்தர்
பாமர ரசிகர்
ஆகச்சிறந்த உழைப்பாளி
கட்டழகான மாவீரர்
மிகச்சிறந்த மனிதர்
மாபெரும் தயாரிப்பாளர்

இப்படியான பல அடையாளங்களும், பெருமைகளும் அவருக்கு இருந்தாலும், "மருதமலை மாமணியே முருகையா... தேவரின் குலம் காக்கும் வேலையா..." என்ற பாடலில் கூறப்படும் வரிகளுக்கு சொந்தக்காரரான தேவரின் குலம் சார்ந்த எம்மை காக்கும் எம்பெருமான் திருமுருகனின் தீவிர பக்தரான திரைத்துறையின் ஒரே அடையாளச்சொல்லான எங்கள் தேவருக்கு 102வது புகழ் வணக்கம்!

(28 ஜூன் 1915 – 08 செப்டம்பர்1978)

- இரா.ச. இமலாதித்தன்

#Agamudayar #Thevar

28 June 2017

இமலாதித்தவியல்"எதற்கெடுத்தாலும் எல்லா இடங்களிலும் தன்னை மிகைப்படுத்தி கொள்கின்ற அனைத்துமே, தன்னை விரைவாகவே அழித்து கொள்ளும்; தன்னிருப்பை, தன்னுழைப்பை வெளிக்காட்டுவதற்காக மட்டுமென சொல்லிக்கொண்டாலும், தற்புகழ்ச்சிக்காக செய்யப்படுகின்ற புகழ் என்ற போதைக்கு, நிச்சயம் தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் அழிக்கும் வல்லமை உண்டு. தனக்கான தனித்துவ அடையாளத்தை நிலைநிறுத்த விரும்பினால், தன் அடையாளத்தை எல்லா இடங்களிலும் நிறுவிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமேதுமில்லை. எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், எல்லாவற்றிலும் 'நான், நாங்கள், என்னுடைய, எனது, எமது, எங்கள், எங்களுடைய' என்ற எண்ணங்களே எதிர்மறை கருத்தியலை தனக்குத்தானே உருவாக்கி தன்னையே வீழ்த்தும். செயலை தொடர்ந்து, தன்னை முன்னிலை படுத்திக்கொள்ளாமல் அநேகரோடும் இணைந்து வேடிக்கை போல, தன்னையும், தன் செயல்களையும் பார்த்து கடந்து செல்ல பழகிக்கொள்வதே, நிலைத்த வெற்றிக்கான ஒரே வழி."

- இமலாதித்தவியல்

24 June 2017

கண்ணதாசன் என்றும் நிரந்தரமானவன்!

"எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன், ஆகவே, இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு" என்று வெளிப்படையாகவே தன்னைப்பற்றி விமர்சனம் செய்து கொண்ட கவியரசர் கண்ணதாசனுக்கு நிகர் அவர் மட்டுமே. தான் எழுதிய சினிமா பாடல்களில், அரசியல், காதல், தத்துவம், ஆன்மிகம், ஜோதிடம், இலக்கியம், அனுபவம் என அனைத்தையுமே விரிவாக வரிகளாக்கிய பெருமை கவியரசரை மட்டுமே சேரும்.

தன்னை கவிஞராக மட்டுமின்றி, நடிகராகவும், இதழாசிரியராகவும் பன்முகத்தன்மையை வெளிக்காட்டியவர். அதிலும் முக்கியமாக சிவகங்கையில் நகரத்தார் பின்புலத்தில் பிறந்து வளர்ந்ததால், சிவகங்கை சீமையை 1780 முதல் 1801 வரை ஆண்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் வாழ்க்கை வரலாற்றை பெரும்பொருட்செலவில் 'சிவகங்கை சீமை' என்ற பெயரில் திரைக்காவியத்தையும் தயாரித்து தன் ஊருக்கு பெருமை சேர்த்தவர். மேலும், கவியரசர் எப்போது வெளிநாடு போவதாக இருந்தாலும் அகமுடையார் குலத்தோன்றலான சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார் என்பதும் குறிப்பிடதக்க விசயம்.

"பாமர ஜாதியில் தனி மனிதன்
நான் படைப்பதனால் என் பேர் இறைவன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!"

இப்படியாக ஐயாயிரத்துகும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் மூலம், தமிழால் தமிழர்கள் மத்தியில் இன்று வரைக்கும் மரணமில்லா பெருவாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் செட்டிநாட்டு முத்தையாவான கவியரசர் கண்ணதாசனின் இடத்தை நிரப்ப இன்னும் ஒரு கவிஞர் இதுவரை இங்கில்லை.

தான் அனுபவித்த வாழ்க்கையையே ஆய்வு செய்து எழுத்துகளாக்கி, எட்டாவது வரை படித்திருந்தாலும், யாரும் எட்டாத உயரத்தை அடைந்த கவியரசர் கண்ணதாசன் என்ற கவிதை பொக்கிஷம் அவதரித்த 90ம் அகவை நாள் இன்று!

புகழ் வணக்கம்!

- இரா.ச. இமலாதித்தன்

21 June 2017

சூப்பர் ஸ்டார் விஜய்!


ஏறுதழுவும் காளைகள் பின்புலத்தில் மட்டுமில்லாது படத்தின் தலைப்பிலும் பாய்ந்து கொண்டிருக்கிறது. தந்தையின் உதவியால் 'இளைய தளபதி' விஜயாக சினிமாவுக்குள் வந்தாலும், அதன் பின்னால் தன் உழைப்பால், தன் திறமையால் மட்டுமே உண்மையான 'சூப்பர் ஸ்டார்' விஜயாக வளர்ந்து நின்றாலும், 'தமிழன்' விஜய் என்பது தான் அவருக்கு மிக கச்சிதமாக பொருந்துகிறது. ஹேட்டர்ஸ்களால் எத்தனை விதமான தரக்குறைவான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், அனைத்தையுமே தனக்கான படிகற்களாக நினைத்து மேலேழுந்து நிற்கும் திரு.விஜயின் திரைவருகைக்கு முன்பும் சரி, பின்பும் சரி, எத்தனையோ பிரபலமான அப்பாக்கள் தன் மகனை, சினிமாத்துறையில் நிலை நிறுத்த இன்றளவும் மெனக்கெடுகின்றனர்; ஆனால், யாரும் அவர்களது இலக்கை எட்டியதாக தெரியவில்லை. எத்தனை பெரிய ஜாம்பவான்களால் ஆரம்ப கால வாய்ப்பை மட்டுமே தன் மகனுக்கு உருவாக்கி கொடுக்க முடியும். அதை தொடர்ந்து தன்னை நிரந்தரமாக்க, நிச்சயமாக சுய திறமையும், கடின உழைப்பும், உண்மையான ஈடுபாடும் வேண்டும். அந்த வகையில் 'எங்கள் சூப்பர் ஸ்டார்' விஜய்க்கு நிகர் என்றைக்கும் அவர் மட்டுமே!

(கண்ணாடி பார்வையில் மெர்சல் என்பது விஜய் போல தெரியும். ஆக்கம்: பிரகாஷ் காளீஸ்வரன்)


எங்கள் நாகப்பட்டினத்தில் முதன்முறையாக மாபெரும் அரசியல் அடையாள மாநாடு போட்டு, 'எங்கள் தமிழ் மீனவனை சிங்களவன் தாக்கினால், இங்குள்ள தமிழர்களெல்லாம் ஒன்றிணைந்து இலங்கையையே உலக வரைபடத்திலிருந்து நீக்குவோம்' என உணர்ச்சி வசப்பட்டு பேசியதால் சிங்கள இனவாத அரசால் அவரது படம் திரையிடப்படாமல் முடக்கப்பட்டும் கூட, தன் படத்திற்கு தமிழர்களின் அடையாளமான 'புலி' என பெயர் வைக்கும் போதும், 'அகதியான மக்களுக்கு தனி நாடு வேண்டும்' என 'வில்லு' பட காலத்திலேயே பாடல் வரிகளில் தன் விருப்பத்தை சேர்க்கும் போதும், சமீபத்தில் BehindWoods கொடுத்த 'People's most favorite and most popular actor' என்ற விருதை பெற்றுக்கொண்ட நிகழ்ச்சியில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை பற்றி பேசாமல் விவசாயிகளுக்காக, 'வல்லரசு ஆவதை பிறகு பார்க்கலாம்; விவசாயிகளுக்கான நல்லரசாக இருங்கள்' என அரசாளும் அரசாங்கங்களை எதிர்த்து உணர்வோடு குரல் கொடுக்கும் போதும் தமிழனாக விஜய் பலரது மனங்களுக்கு நெருக்கமாகி விடுவதை எந்தவொரு ஹேட்டர்ஸாலும் தடுத்துவிட முடியாது.

எங்கள் சகோதரர் இயக்குனர் அட்லியின் மெர்சல் திரைப்படம், மெர்சலான வெற்றிபெற்று ஹாட்ரிக் அடிக்க வாழ்த்துகள்! வருங்காலத்தில் நிச்சயமொரு நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியை அலங்கரிக்க போகும், எங்கள் தளபதி விஜய் அவர்களுக்கு 43ம் அகவை நல் வாழ்த்துகள்!

  ரசிகனாக,
- இரா.ச. இமலாதித்தன்

#IamWaiting 4 #Mersal

18 June 2017

தந்தையர் திருநாள் வாழ்த்துகள்!
ஓர் ஆண் தன்னுடைய வாழ்க்கையின் முழுமைத்துவத்தை புரிந்து கொள்ள ஆரம்பிப்பதே, தனக்கென ஒரு குழந்தை பிறந்ததற்கு பிறகு தான்! அதுவரையிலும், எதிர்காலம் பற்றிய எவ்வித திட்டமிடலின்றி ஊர்சுற்றியாக, சேமிப்பின் முக்கியத்துவத்தை உணராமல் ஊதாரியாக இருந்த அனைத்து ஆண்களும், அப்பா என்ற பதவிக்கு வந்தபின்னால் தனக்கான பொறுப்புகளை உணர்ந்து தன்னை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறார்கள்; எதையுமே பொறுமையாக, கவனமாக, ரொம்பவே யோசித்து செயல்படுத்துகிறார்கள். இளமையின் வேகம் குறைந்து, அனுபவமிக்கவராகவும் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட பெருமைகொண்ட மாண்புமிகு அப்பா என்ற பதவியை வகிக்கும் திரு. இரா.சம்பந்த தேவரான என் அப்பாவின் தியாகத்தையும் உழைப்பையும் இந்நாளில் நினைவுகூர்கிறேன்.

தமிழுணர்வு, அரசியல் ஆர்வம், விடுதலைபுலிகள் ஆதரவு, தலைமைத்துவ பண்பு, சிக்கனமாக கையாளுதல், ஆடம்பரமில்லா வாழ்வு, தாய் பாசம், குடும்ப பொறுப்பு, சமுதாய பங்களிப்பு, மற்றவர்களை அணுகும் விதம், நாட்குறிப்பு போலவே கணக்கு வழக்குகளை கையாளும் உத்தி, எளியோரையும் தன் வசப்படுத்தும் குணம், இடர்பாடான சுப/துக்க நிகழ்வுகளை கூட நேர்த்தியாக ஒருங்கிணைக்கும் வல்லமை, பாகுபாடில்லாத பழகும் முறை, நினைவாற்றலுடனான செயல்பாடு, இப்படி எத்தனையோ விசயங்களை இன்னுமும் என் வாழ்நாளில் என் தந்தை திரு. இரா.சம்பந்த தேவரிடமிருந்தே கற்று கொண்டிருக்கிறேன். நான்கு முழ வெள்ளை வேட்டி, முழங்கை வரை மடித்த முழு வெள்ளை சட்டையென்ற தனித்துவ ஆடை அடையாளத்தை அவரது பதின்ம வயதிலிருந்து இப்போது வரை மாற்றியதே இல்லை. அவரது மகன் என்ற பெருமையான ஒற்றை அடையாளத்தை எனக்களித்த இப்பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி!

மேலே சொல்லிருக்கின்ற எந்தவொரு விசயத்தையும் இப்போது வரையிலும் என் அப்பாவிடம் பகிர்ந்து கொண்டதே இல்லை. கூச்சமா? கால இடைவெளியா? பக்குவமின்மையா? இப்படி எது காரணமென தெரியவில்லை. அதனாலேயே வருடாவருடம் இங்கேயே சொல்லி விட்டு, இந்நாளை கடந்து விடுகிறேன். அது பக்தி; பாசம்; பயம்; தலைமுறை இடைவெளி. இப்படி ஆயிரம் அர்த்தம் இருந்தாலும், விலகியே ரசிக்கிறேன் என் அப்பாவை.

இனிய தந்தையர் திருநாள் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

17 June 2017

எங்களிலிருந்து ஒரு இசை நாயகன் உதயமாகிறான்!
இசைஞானி இளையராஜா என்ற பெயர் போல, 'போத்திராஜா' என்ற பெயரும் இனி இசைத்துறையில் நீங்காதவொரு இடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் அதிகமாகவே இருக்கிறது. தெற்கத்தி மண்ணின் மணம் சார்ந்த மக்களிசையை பாடலாக்கிருக்கும் முதற்முயற்சியே முத்தாய்ப்பாய் அமைந்திருக்கிறது. தானே எழுதி, தானே இசையமைத்து, தானே பாடி, சகோ.போத்திராஜா உருவாக்கி இருக்கும் 'மொய் - தாய்மாமன் வாரான்டி' என்ற பாடல் அனைவரையும் நிச்சயமாக கவரும். இந்த பாடல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. இதுவரையிலும் தாய்மாமன் வாரான்டி பாடலை எத்தனை முறை கேட்டேனென தெரியவில்லை; கணக்கு வழக்கில்லாமல் கேட்டு கொண்டிருக்கிறேன். தாய் மாமனின் உரிமையையும், சீர் பற்றியும், மொய் பற்றியும் பெருமைகளை பாடும் இப்பாடல் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன்.

ஏறி இறங்கி கொண்டிருக்கும் பொருளாதார சூழலிலும், தன் உழைப்பில் சம்பாரித்த பணத்தையே முதலீடாக போட்டு, தன் திறமையால் மட்டுமே சிங்கிள் பாடலை வெளியிடுவது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். சினிமாத்துறையில் பிரபலமான தனுஷ், சிம்பு போன்றவர்கள் பலரின் உதவியோடு எழுதி பாடினாலேயே ஆஹா ஓஹோவென மெய் சிலிர்க்கும் அதே வேளையில், பிரபலங்களின் எவ்வித பின்புலமுமின்றி இசைத்துறையில் காலடி பதிக்கும் எளியவரான போத்திராஜா போன்ற திறமைசாலிகளையும் பாராட்டுவோம்.

மதுரை மண்ணின் மைந்தனான போத்திராஜாவின் எழுத்து - இசை - குரலாக உருவாகியிருக்கும் 'மொய் - தாய்மாமன் வாரான்டி' என்ற பாடல், 18.06.2017 ஞாயிறன்று மதுரை செக்கனூரணியிலுள்ள ஜெயஸ்ரீ மகாலில் நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்படுகிறது. போத்திராஜாவின் தந்தையான தெய்வத்திரு கே.ஆர்.பாண்டி சேர்வையின் ஆசியோடு, எங்கள் 'பெரிய மருது' போத்திராஜாவின் இந்த இசைப்பயணம் இனிவரும் நாட்களிலெல்லாம் சிறப்பாக அமைந்து, இசையுலகில் மிகப்பெரிய உச்சத்தை தொட அன்பு சகோதரனாக எம் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

(இனி பலருடைய செல்போனின் ரிங்டோனாக மாறப்போகும் 'தாய்மாமன் வாரானடி' பாடல் தேவைப்படுவோர், என்னுடைய வாட்சப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்.)

16 June 2017

யார் அகமுடையார் என தீர்மானிப்பது யார்?ஊருக்கொரு சங்கம் வைத்திருக்கும் மேன்மை பொருந்திய அகமுடையார் பெரியோர்களுக்கு, தன் இனக்குழுவிற்கான பட்டங்களை பற்றிய அடிப்படை அறிவே அறவே இல்லாமல் இருக்கிறது. தேவர் என்பதோ, சேர்வை என்பதோ, பிள்ளை என்பதோ சாதி அல்ல. அவையெல்லாம் வெறும் பட்டம் மட்டுமே. இவற்றுள், தேவர் என்ற பட்டம் மூன்று சாதிகளுக்கு உண்டு; அதுபோல, சேர்வை என்ற பட்டம் எட்டு சாதிகளுக்கு உண்டு; இந்த வரிசையில் பிள்ளை என்ற பட்டமோ எழுபதுக்கும் மேற்பட்ட சாதிகளுக்கு உண்டு. ஒரே மாதிரியான பட்டங்களை மட்டும் வைத்து, ஒரு இனக்குழுவை ஒன்றாக்கி விட முடியாது.

ஒரு காலத்தில், சேர்வை பட்டம் உள்ளவர்களே அகமுடையார் என தென்னக உறவுகளில் சிலர் நினைத்து கொண்டிருந்தனர்; அதே காலத்தில் டெல்டா உறவுகளில் சிலரோ, தேவர் என்ற பட்டமுள்ளவர்களே அகமுடையார் என நினைத்திருந்தனர். கொங்கு பகுதிகளிலும், அகமுடையார்களுக்கு தேவர் பட்டமே என்பதால், கொங்கு - தெற்கு - டெல்டா என ஒரே இனக்குழு என்ற உண்மையை உணரத்தொடங்கினர். காலம் எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை கொண்டது என்பதற்கிணங்க டெல்டா - தெற்கு என பிரிவினையில்லாமல் பட்டங்களை கடந்து, இன்று அனைவரும் அகமுடையாராக ஒன்றிணைந்து இருக்கின்றனர்.

அதுபோன்றதொரு சூழல் தற்போதும், அகமுடையார்களுக்குள் கொஞ்சம் இடைவெளியை ஏற்படுத்தி வருகிறது. வட மாவட்டங்களிலுள்ள அகமுடையார்களுக்கு முதலியார் - உடையார் - பிள்ளை பட்டங்களே பெரும்பான்மையாக உள்ளது. முதலியார் என்பதால் செங்குந்தர் என்பதாகவும், உடையார் என்பதால் பார்கவகுலம் என்பதாகவும், பிள்ளை என்பதால் வெள்ளாளர் என்பதாகவும் சிலர் குழப்பமடைகின்றனர். இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில், தேவர் பட்டம் உள்ளதால் அகமுடையாரும் - கள்ளரும் ஒன்றென சொல்ல முடியாது; சேர்வை பட்டம் இருப்பதால் வலையரும் - அகமுடையாரும் ஒன்றென சொல்ல முடியாது; பிள்ளை பட்டத்தை பற்றி சொல்லவே வேண்டாம், அது பலதரப்பட்டவர்களுக்கும் அந்த பட்டம் உண்டு. அதுபோலவே முதலியார் பட்டமும், உடையார் பட்டமும், பிள்ளை பட்டமும் அகமுடையாருக்கு உண்டு என்பதையும், அந்த பட்டத்தை மட்டுமே காரணம் சொல்லி, மற்ற இனக்குழுக்களோடு வடக்கத்திய அகமுடையாரை பிரித்து விட முடியாது என்ற உண்மை நிலையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

தென்னகத்தில் 'சேர்வார் / சேர்வை' என்றால் அது அகமுடையாரை மட்டுமே குறிப்பது போல், டெல்டாவில் 'தேவர்' என்றால் அது அகமுடையாரை மட்டுமே குறிப்பது போல், வடக்கத்திய பகுதிகளில் 'முதலியார் /உடையார்' என்றால் அது அகமுடையாரையே குறிக்கும் என்ற எதார்த்தத்ததையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதிரியான உண்மை கள நிலவரங்களை பற்றி தெரியாததாலும், சாதி பட்டங்களை பற்றிய அடிப்படை அறிவில்லாததாலும், அகமுடையார் சங்கத்தின் தலைமை பொறுப்பிலுள்ளவர்களே, பட்டங்களால் அகமுடையாரை பிரிக்க முயல்கின்றனர். தகவல் தொடர்பு ஊடகங்கள் சூழ்ந்த இக்காலத்திலும் கூட, பொறுப்பில் உள்ளவர்கள் அகமுடையார் இனக்குழு பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருப்பது வேதனையான விசயம்.

சென்னையை தலைமையிடமாக கொண்ட 'அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம்' ஆண்டு தோறும் அதிக மதிப்பெண் பெற்ற அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த 10 / +2 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. ஆனால் அதற்கான அடிப்படை தகுதியாக 'முக்குலதோர் - அகமுடையார் மட்டும்' என்ற அளவீடும் வைத்திருக்கின்றனர். இந்த லாஜிக்கே புரியவில்லை. போலியான அரசியல் கூட்டமைப்பான 'முக்குலம்' என்ற இல்லாத ஒன்றை அகமுடையாருக்கான அளவீடாக வைப்பது எவ்வகையில் நியாயம்?

திருவண்ணாமலை பகுதியிலுள்ள அகமுடையார் இனக்குழு சேர்ந்த சகோதரி இந்தாண்டு +2ல் 1136 மதிப்பெண் பெற்றிருக்கிறார். பொருளாதார சூழ்நிலையால் மேற்படிப்புக்காக சிரமப்படுவதால், அங்குள்ள உறவினரின் ஒத்துழைப்போடு சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்திற்கு, கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். சங்கத்தை சேர்ந்தவர்களோ, வடக்கிலுள்ள அகமுடையார்கள் வேறு; முக்குலத்தோர் அகமுடையார் வேறு என்று, அரிய கண்டுபிடிப்பாக புது(?) வரலாறை சொல்லி விண்ணப்பத்தை மறுத்திருக்கின்றனர். இந்த மாதிரியான கூத்தையெல்லாம் கண்டு, சிரிப்பதா? கோபப்படுவதா?

ஒரு பக்கம், முக்குலத்தோர் என பேசும் மறவர் தலைமையிலான அமைப்புகளும், கள்ளர் தலைமையிலான அமைப்புகளும் கூட திருண்ணாமலை போன்ற வட மாவட்டங்களில், முதலியார் - உடையார் பட்டம் கொண்ட அகமுடையார்களை ஒன்று திரட்டி மாநாடு கூட்டம் நடத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம், தென்னகத்தை சேர்ந்த அகமுடையார் அமைப்புகளும், வடக்கிலுள்ள அகமுடையார் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் வலுவான கட்டமைப்பை உருவாக்கி அகமுடையார் இனக்குழுவின் ஒற்றுமையை ஒருங்கிணைக்கும் வேளையில், அறியாமையில் இருக்கும் அகமுடையாரின பெரியோர்களின் இதுபோன்ற செயல்கள் மனவருத்தத்தை கொடுக்கிறது.

தன் இனக்குழு பற்றிய வரலாற்று உண்மைகள், தெரிந்தால் பேசலாம்; தெரியவில்லை என்றால் அமைதி காக்கலாம். அரைகுறையாக தெரிந்து கொண்டு குழப்பும் (சங்கம் / அமைப்பு / இயக்கம்) பதவியிலுள்ள பெரியோர்கள், கொஞ்சம் தன் இனக்குழு சார்ந்த வரலாற்றை கொஞ்சம் அறிந்து கொள்ள முற்படுங்கள். அதன் பிறகு, தலைவராகவும் - செயலாளராகவும் - பொறுப்பாளராகவும் - அமைப்பாளராகவும் பதவியை அலங்கரியுங்கள்.

- இரா.ச. இமலாதித்தன்

#அகமுடையார் #தேவர் #சேர்வை #முதலியார் #உடையார் #பிள்ளை #Agamudayar

11 June 2017

216 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்புத்தீவு பிரகடன நிகழ்வு!

மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறப்பெடுத்தது அகமுடையார் இனக்குழு என்பதால் அவரை அகமுடையார் இனக்குழுவை சேர்ந்தவர் மட்டுமே உரிமை கொண்டாட வேண்டிய கட்டாயமில்லை. எடுத்துக்காட்டாக, அம்பேத்கர், ஈ.வெ.ரா., வ.உ.சிதம்பரம் பிள்ளை, முத்துராமலிங்கத்தேவர், காமராஜர் போன்றவர்களை தேசிய கட்சிகளும், திராவிட கட்சிகளும், ஹிந்துத்துவ அமைப்புகளும், இன்னபிற புரட்சிகர அமைப்புகளும் பயன்படுத்துகின்றனர்; இப்படி இவர்களை பலரும் பயன்படுத்துவதால் எவ்வித குழப்பமும் யாருக்கும் வந்ததில்லை. எத்தனை பேர் இவர்களின் படங்களையும், பெயர்களையும் பயன்படுத்தினாலும் கூட அவர்களது தனித்த அடையாளம் ஒருபோதும் மாறப்போவதே இல்லை.


தாய் மண்ணில் கோலோச்சிய அந்நியர்களின் அடக்குமுறைக்கு எதிராக, அனைத்து இனக்குழுக்களையும் இணைத்து தான் 'வீரசங்கம்' என்ற அரசியல் கூட்டமைப்பையே மருதுபாண்டியர்கள் உருவாக்கினர். பொது ஆண்டு 1801 ஜுன் மாதம் 12ம் தேதி, ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகிலேயே முதன் முதலாக 'ஜம்புத்தீவு' போர் பிரகடனத்தை 'வீரசங்கம்' என்ற கூட்டமைப்பின் சார்பாக திருச்சி-திருவரங்கத்தில் சின்ன மருதுபாண்டியர் வெளியிட்டார்.

வரலாற்று சிறப்புமிக்க ஜம்புத்தீவு பிரகடனத்தை வெளியிட்டு 216 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை யாரும் கண்டு கொள்ளவே இல்லை என்ற ஏக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்திருக்கிறது. ஒரு தலைமுறை என்பது சராசரியாக 33 ஆண்டுகள்; அந்த வகையில் கணக்கிட்டால், ஏறத்தாழ ஏழு தலைமுறைகள் கடந்து, இந்த 2017ம் ஆண்டில் தமிழ்தேசியவீரச்சங்கம் சார்பாக திருச்சி திருவரங்கத்தில் மாபெரும் வரலாற்று மீட்பு நிகழ்வு ஜூன் 12ம் தேதி நடக்கவுள்ளது. மாமன்னர் மருது பாண்டியர்கள் 216 ஆண்டுகளுக்கு முன்பாக, எந்தவொரு குறிப்பிட்ட இனக்குழுவின் அடையாளமுமின்றி 'வீரசங்கம்' என்ற எப்படியான கூட்டமைப்பை உருவாக்கி 'ஜம்புத்தீவு' பிரகடனத்தை வெளியிட்டனரோ, அதே போன்ற நிகழ்வை தமிழ் தேசிய வீரச்சங்கம்அமைப்பினர் மீண்டும் நம் சமகாலத்தில் அந்தவொரு களத்தை உருவாக்கி தந்திருக்கிறார்கள்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக, தமிழ் தேசிய அடையாளத்தோடு அரசியலில் பயணிக்கும் பழ.நெடுமாறன், சீமான், வேல்முருகன், தனியரசு உள்ளிட்ட அனைத்து தமிழ் இனக்குழுவை சேர்ந்த தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். இப்படியான மாபெரும் வரலாற்று மீட்பு நிகழ்வை ஒருங்கிணைக்கும் சகோ. மருதுபாலா உள்ளிட்ட அனைத்து உறவினர்களுக்கு நன்றியும், விழா சிறக்க வாழ்த்துகளும்!

தமிழ் தேசிய அரசியல் மீது நம்பிக்கையுள்ளவர்களும், மாமன்னர் மருதுபாண்டியர்கள் மீது உணர்வுள்ளவர்களும், ஜூன் 12ம் தேதி காலை 8 மணிக்கு திருச்சி திருவரங்கத்தில் ஒன்று கூடுங்கள்; சந்திப்போம்.

- இரா.ச. இமலாதித்தன்

05 June 2017

பெயருக்கு பின்னால் சாதி அவசியமா?

சாதி சார்ந்த பட்டப்பெயரை தன் பெயருக்கு பின்னால் போடலாமா? வேண்டாமா? என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். கரு.பழனியப்பன் அடிக்கடி கருத்து பழனியப்பனாக உருமாறி சொல்லும் எல்லாவற்றையும் அனைவரும் ஏற்க மாட்டார்கள்; ஏற்கவும் முடியாது. தொட்டதற்கெல்லாம் ஹிந்தியத்தை தூக்கிப்பிடிக்கும் நபர்கள் கூட சாதிப்பெயரை தன் பெயரோடு சேர்த்து போட்டுக்கொள்ளும் பெரும்பான்மையான ஹிந்தியர்களை பற்றி பேசுவதே இல்லை.

இந்த விசயத்தில் ஹிந்தியவாதிகள் மட்டுமல்லாது, திராவிடத்தை தோள் மீது சுமக்கும் நபர்களும் கூட, திராவிட நாடுகளென அடையாளப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் வசிக்கும் மலையாளி, கன்னடர், தெலுங்கர்கள் தன் சாதிப்பெயரை போட்டு கொண்டு கெட்டா போய்விட்டார்கள்? என்பதை பற்றி வாய் திறப்பதே இல்லை. மேனன்களும், நாயர்களும், ரெட்டிகளும், ராவ்களும், கவுடாக்களும், நாயுடுக்களும் இதுபோன்ற திராவிட சாதிப்பெயர்கள் இன்றளவும் ஹிந்திய அரசியலோ, திராவிட அரசியலோ, கம்யூனிச அரசியலோ செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்?

திராவிடவாதிகள் கொண்டாடும் ஈ.வெ.ரா.வை பற்றிய திரைப்படத்தை தமிழ்நாட்டில் 'பெரியார்' என்ற பெயரிலும், தமிழகம் தாண்டிய திரையரங்குளில் 'பெரியார் ராமசாமி நாயக்கர்' என்ற பெயரிலும் வெளியிட்டது ஏன்? இதைப்பற்றி விடுதலையே விளக்கமளித்திருந்தது. ஆந்திரா போன்ற பகுதிகளில் சாதிப்பெயரை போடாமல் ஒருவரது பெயரை தனித்து போடுவது மரியாதை குறைவான விசயமாக கருதப்படுவதால் நாயக்கர் பட்டதையும் சேர்த்து போடப்பட்டது. ஆனாலும் அந்த சாதிப் பெயரை மட்டும் குறுக்கே அடித்து காட்டப்பட்டதென முட்டுக்கொடுத்து விளக்கம் கூட தரப்பட்டிருந்தது. ஆனால் அதை எத்தனை பேர் ஏற்றுக்கொண்டார்கள்? இந்த சாதிப்பெயரை பயன்படுத்துவதிலுள்ள எதார்த்தத்தை சொல்ல எவ்வளவோ செய்திகளும் விளக்கங்களும் இருக்கிறது.

'தன்னுடைய சாதிப்பெயரையே பொதுவெளியில் சொல்ல கூச்சப்படும் நபர்களுக்கு மத்தியில், இப்படி சாதிப்பெருமைக்காவும், சாதி திமிருக்காகவும் பட்டப்பெயர்களை பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வது சரியா?' என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். எது சிறுமை? எது அவமானம்? அப்படி நிர்ணயம் செய்தது யார்? இதுபோன்ற உளவியல் தாக்குதலை செலுத்தியவனின் ஆயுதத்தைதானே, தாக்கப்பட்டவனும் எடுக்க வேண்டும்? அந்த லாஜிக்கை விட்டுவிட்டு அவனை சாமி / ஐயா / ஆண்டை என சொல்லி, தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் அந்த பொதுபுத்தியை விட்டுத்தானே முதலில் வெளிவர வேண்டும்?

கபாலி படத்தில் வரும் ஒரு காட்சியில், 'என்னை நீ கோட் சூட் போடக்கூடாதுன்னு சொன்னா அப்படித்தான் போடுவேன்; கெத்தா; ஸ்டைலா, கால் மேல கால் போட்டு உட்காருவேன்டா' என உணர்ச்சி பொங்க நாயகன் கூறும் கருத்தை கேட்டு மெய்சிலிர்த்தால் மட்டும் போதாது. அதை செயலில் காட்டவும் வேண்டும். இங்கே அடிக்கிற வெயிலுக்கு மார்க்கெடிங் எக்சிகியூட்டிவ் மாதிரி கோட்சூட் போட தேவையில்லை. ஆனால் வர்ணாசிரமத்தால் சமூக படிநிலையை திணித்து, குறிப்பிட்டவர்ளை மட்டும் கீழாக காட்டியவனின் முகத்தில் கரியை பூச, அந்த சாதியின் பெயரையே பெருமையாக போட்டுக்கொள்வது தான் மிகச்சரியான எதிர்வினையாக இருக்க கூடும். அதை மறந்து விட்டு, யாருமே சாதிப்பெயரை போட்டுக்கொள்ளாதே என அடாவடி அரசியல் செய்வதை சமத்துவ புரட்சியாக பார்க்க முடியாது.

இன்றளவும் இங்கே ஏகப்பட்ட பேர் கைவிடப்பட்டவர்களாகவும், அநாதைகளாகவும் இருக்கின்றனர். ஆனால் பெரும்பான்மையானோர் தாய் தந்தையோடு தான் வாழ்கின்றனர். எனவே, 'கைவிடப்பட்டவர்களுக்கு இனிசியல் தெரியவில்லை; அதனால் அவர்களுக்காக நாமும் நம் தந்தையின் பெயரான இனிசியலை மறைத்து நம் பெயரை மொட்டையாக எழுதுவோம்; ஏனெனில் அவர்களது தாழ்வு மனப்பான்மைக்கு நாம் காரணமாகி விடக்கூடாது' என யாராவது பேசினால், எப்படி சிரிப்பு வருமோ அப்படித்தான் சிரிப்பு வருகிறது, கருத்து பழனியப்பன்களின் இதுபோன்ற கருத்துகளை கேட்கும் போது!

எதார்த்தம் என்னவெனில், 'யார் தமிழன்?' என அடையாளம் காணவே இந்த பட்டப்பெயர் தான் உதவுகிறது. பல்வேறு மொழி பேசும் இனங்களும், பலதரப்பட்ட இனக்குழுக்களும் இம்மண்ணில் தங்களை போலியாக இம்மண்ணின் மைந்தர்கள் என வேசம் போட்டு அரசியல் செய்யும் அவலத்தை கலையக்கூட, தான் சார்ந்த இந்த சாதியின் பெயரும், பட்டப்பெயரும் தான் பேருதவி செய்கின்றன.

- இரா.ச. இமலாதித்தன் தேவர்.
(அகமுடையார் இனக்குழு, தமிழன்)


03 June 2017

தமிழக அரசியலில் வரலாற்றில் தவிர்க்க முடியா பக்கம்!


முள்ளி வாய்க்காலுக்கு முன்பும் சரி; பிறகும் சரி, ஆயிரம் விமர்சனங்களும் துரோகங்களும் இருந்தாலும், ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இன்று வரை தமிழக அரசியலில் கருணாநிதி என்ற பெயரை உச்சரிக்காமல் அரசியல் பேசாதவர் யாருமில்லை. கருணாநிதியே பேச முடியாமல் ஒதுங்கி இருக்கும் இன்றைக்கும் கூட அவரை விமர்சித்தாவது பதிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்களாலே அரசியலில் வளர்ந்தவர்கள் இங்கே ஏராளம். அந்த வரிசையில் கருணாநிதி என்ற பெயர் என்றைக்கும் தமிழக அரசியலில் இடம்பெற்றே தீரும். எங்களது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்ற சிறிய கிராமத்திலிருந்து வெறும் மஞ்சள் பையோடு மட்டும் சென்று, உலகளாவிய புகழ் பெற்ற கருணாநிதியின் ஆற்றல் வியப்பிற்குரியது.

தன் பேச்சையும், எழுத்தையும் மட்டுமே முதலீடாக கொண்டு உலக பணக்கார வரிசையில் தன் குடும்பத்தை நிலைநிறுத்திய வல்லமை இனி வேறு யாருக்கும் வாய்க்க போவதில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளில் எத்தனையோ பேர் திருட்டு ரயில் ஏறி தினம் தினம் சென்னைக்கு வந்திருக்கலாம். ஆனால் யாருமே மற்றொரு கருணாநிதியாக புகழ் வெளிச்சத்திற்கு வர முடியவில்லை என்பதே எதார்த்தம். நரேந்திர மோடி, பன்னீர்செல்வம், இளையராஜா, ரஜினிகாந்த் போல எளியவர்களும் மிகப்பெரிய உச்சத்தை தொட முடியுமென்ற நம்பிக்கையை அன்றைக்கே விதைத்த கருணாநிதியை புறக்கணித்து விட்டு, தமிழக அரசியலின் முழுமையான வரலாற்று பக்கங்களை ஒருபோதும் நிரப்ப முடியாது.

- இரா.ச. இமலாதித்தன்

30 May 2017

எல்லாவற்றிக்குள்ளும் ஒரு செய்தி இருக்கிறது!

நிகழ்வு: 01

இந்த மூன்று நடிகைகளின் சந்திப்புகளை கவனிக்கும் போது, கமல்ஹாசனின் மேனாள் துணைவியும், #LifeAgainFoundation என்ற உலகளாவிய தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவருமான கெளதமி மட்டுமே அடக்க ஒடுக்கமாய் அமர்ந்திருப்பது போல தெரியும்.

illusion!
நிகழ்வு: 02

#DravidaNadu என்ற ட்ரெண்டிங் மலையாளிகளின் ஆதரவால் ட்விட்டரில் மிக பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்போது கவனித்த திராவிடநாடு என்ற பெயரிலுள்ள இரு ப்ரோபைல்களை இங்கே இணைத்திருக்கிறேன். அதிலுள்ள ஒரு ப்ரோபைலின் முகப்பு படத்தின் லோகோவில், ஆப்பிளும், நாகமும், ஏழு கண்களும், முக்கோண வடிவத்திற்குள் இருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வு: 03

விரைவில்... உங்கள் ViJAY டிவியில் BiGG BOSS.
ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது.
i WiLL BE WATCHiNG!
நிகழ்வு: 04

ஐ!

இந்த இரு படங்களில் மட்டுமில்லாது இந்த இரு நிகழ்வுகளுக்கு பின்னாலும் ஏகப்பட்ட குறியீடுகள் இருக்கின்றன.

27 May 2017

சைவம்? அசைவம்!


எந்த கடவுளும் நேரடியாக வந்து, இதை சாப்பிடு; அதை சாப்பிடாதே என யாரிடமும் சொல்லவில்லை. தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப, அந்தெந்த பகுதிகளுக்கேற்ப கிடைக்கும் அனைத்தையும் சாப்பிட்டு பரிணாம வளர்ச்சியடைந்தவன் மனிதன் தான். அதன் பிறகு பகுத்தறிந்து இதை சாப்பிடலாம்; அதை சாப்பிட வேண்டமென்று பட்டியலிட்டதும் இந்த மனிதன் தான்.

"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி, முனிவராய், தேவராய் செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்'' என திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சொல்கிறார்.

'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என சொன்ன இராமலிங்க அடிகளாரின் சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் கீரையை கூட சாப்பிடுவதில்லை; காரணம் கீரையை வேர் வரை பிடிங்கி ஓர் உயிரை சாகடித்து உண்பதால் அம்மார்க்கத்தினர் அதை உணவில் சேர்ப்பதில்லை. மாடு மட்டுமல்ல; மாடு சாப்பிடும் புல் கூட ஓர் உயிர் தான். அந்த மாட்டின் ரத்தத்தின் ஒருபகுதியான பால் கூட அசைவம் தான்.

எனவே கடவுளின் பெயரைச்சொல்லியோ, மதவாதிகளின் ஆதரவிற்காகவோ, எதையும் அதிரடியாக தடை செய்வதில் உடன்பாடில்லை. இவ்வுலகில் 'உணவுச் சங்கிலி' என்பது சரியான விகிதத்திலேயே தான் இயற்கையால் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றின் தேவை அதிகமானால், அந்த தேவைக்கான உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமே தவிர, அந்த தேவையையே முடக்க கூடாது. உலகளாவிய அளவில் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஹிந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பதை கவனித்தாலே, தடை செய்ய வேண்டியது எதுவென புரியும். வணிக சூழ்ச்சிகளால் சூழப்பட்ட உலகமயமாக்கலில் இனப்பெருக்கம் என்பதை கூட மேற்கத்திய நாட்டவன் கொடுக்கும் ஊசியை நம்பி வாழ பழகி விட்டோம். எனவே, நாம் இப்படித்தான் கருத்தடை, பலித்தடையென தடை போட்டு நம் வீரியத்தை தொலைத்து, கண்டவனிடமும் ஜெர்சி மாடுகளை போல இனி வருங்கால சந்ததி உள்பட எல்லாவற்றையும் யாசகம் தான் பெறுவோம்.

மாட்டின் கொம்புகளுக்கு கூட வண்ணம் தீட்ட கூடாதென்று தடை போடும் காரணத்தை கூட ஏனென யாரும் கேட்டதாக தெரியவில்லை. ஒருவேளை கொம்புகளுக்கு வண்ணம் பூசினால் மாடு இறந்துவிடுமா? ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு கொம்புக்கு வண்ணமடித்தால் தானே தனி மிடுக்கே வரும்? இதெல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இன்னைக்கு மாட்டுக்கு தடை போட்டதும் மனமகிழ்கிறோம். ஒருவேளை ஜெயலலிதாவின் அறிவிப்பு போல, நாளை நம் குலசாமி கோவில்களில் பலியிடும் ஆட்டையும், சேவலையும் தடை போடும் சூழல் வரும் போது தான், அதன் தேவை புரியும். மாட்டுக்கறிக்காக எதையும் இங்கு சொல்லவில்லை; மாட்டுக்கறியெல்லாம் சாப்பிடும் பழக்கமும் எனக்கில்லை.

- இரா.ச. இமலாதித்தன்

26 May 2017

காலா - குறிப்பிடும் குறியீடு என்ன?


கரிகாலனை ஏன் கொன்றார்கள்? யார் தூண்டுதலில் கொன்றார்கள்? என்பதே புரிந்து கொள்ள முடியாத பெரிய கதை. அண்ணன் பிரபாகரனுக்கும் இதே பெயர் உண்டு. கபாலியும், காலனும் அழிக்கும் கடவுளின் பெயர்களே; காலா என்பது கருமையையும் குறிக்கிறது. இப்படிப்பட்ட பல குழப்பத்திற்கு இடையே, அந்த பெயரில் ரஜினியை வைத்து என்ன செய்ய போறாப்ளயோ, 'குறியீடு' ரஞ்சித்?! ஒருவேளை ரஜினி சொன்ன அந்த அக்கப்'போர்' இது தான் போல!

காலா (கரிகாலன்)மலேசியாவில் தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்து, சீன/தமிழ் தொழிலாளர்களுக்குள் சம்பள முறையில் ஏற்றத்தாழ்வு இருந்ததை எதிர்த்து களம் கண்டவர் தான் அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த தம்பிக்கோட்டையின் 'மலேயா' கணபதி தேவர். நேதாஜி உருவாக்கிய ஐ.என்.ஏ.விலும் பயிற்றுனராகவும் பணியாற்றியவர். பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் இறங்கியதாகவும், சட்டத்திற்குப் புறம்பாக ஒரு கைத்துப்பாக்கி, ஆறு சுற்றுத் துப்பாக்கிக் குண்டுகளையும் வைத்திருந்தார் என்றும் மலேயா கணபதியின் மீது குற்றம் சாட்டப்பட்டது. கோலாலம்பூர் நீதிமன்றம் மலேயா கணபதிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இவரின் வரலாற்றை ஓரளவுக்கு தழுவித்தான், தலித்திய சிந்தனையோடு 'கபாலி' திரைப்படமாக ஏற்கனவே உருவாக்கினார் பா.ரஞ்சித். அந்த படத்தில் கோட் ஷூட்டெல்லாம் ரஜினி போட்டிருந்தார்.

இப்போது மீண்டும், இந்த போஸ்டரில் ரஜினியை கைலி கட்ட வைத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். அநேகமாக இதை பார்க்கும் போது, பட்டியல் சாதி மக்களுக்காக தன் சொந்த சாதியான அகமுடையார் பண்ணையார்களையும், பண்ணையடிமை தனத்தையும் எதிர்த்து களம் கண்ட பொதுவுடைமை போராளிகளான வாட்டக்குடி இரணியன் தேவர் மற்றும் மணலி கந்தசாமி தேவரின் போராட்ட வாழ்க்கையைத் தான் கதைக்களமாக உருவாக்கி இருக்கக்கூடுமென நினைக்கிறேன். ஒருவேளை இப்படி இல்லாமல் கூட போகலாம்; ஆனால் அதற்கான தரவுகளை மணலி கந்தசாமி, வாட்டக்குடி இரணியன், ஜாம்பனோடை சிவராமன் போன்ற அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த இப்போராளிகளின் கதையை தழுவித்தான் பொதுவுடைமை தனத்தை திரைப்படமாக்க முடியும்.

(கபாலி படம் தொடங்கப்பட்ட போது கூட, அந்த படத்தின் கதை மலேயா கணபதி தேவரின் கதையை தழுவிய படம் தானென்று ஆரம்பத்திலேயே முகநூலில் பதிவிட்டு இருந்தேன். அப்போது அதை விமர்சித்த பலரும், கபாலி படம் வந்த பின்னால், மலேசியா நாளேடுகளும், மலேசியா தொழிலாளர் போராட்டத்தை பற்றி விவரமறிந்தவர்களும், மலேயா கணபதி தான் 'கபாலி' கதையின் நிஜ ஹீரோ என சொன்ன பின்னரே என் மீதான விமர்சனத்தை நிறுத்திக்கொண்டனர்.)

- இரா.ச. இமலாதித்தன்

#Guess #அகமுடையார்
1956ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி நாக்பூரில், பீம்ராவ் அம்பேத்கர் தனது ஐந்து லட்சம் ஆதரவாளர்களோடு அதிகாரப்பூர்வமாக விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார். ஆனால் ஹிந்தியாவை பொறுத்தவரை சமணம், பெளத்தம் என்ற எல்லாமே ஹிந்து என்ற ஒற்றை அடையாளத்திற்குள்ளாகவே அடைபட்டு விடும் என்பது இயக்குனர் ரஞ்சித்திற்கு தெரியாமல் இருக்க போவதில்லை. ஆனால், இதிலுள்ள இரண்டு குறியீடுகளை மையப்படுத்தியே ரஜினி + ரஞ்சித் மீண்டுமொரு கூட்டணியில் 'காலா' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

தலித்திய சிந்தனையாளரான ரஞ்சித்திற்கு, மராட்டியரான ரஜினி இரண்டாம் முறையும் கிடைத்திருக்கிறார். ஏற்கனவே அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த 'மலேயா' கணபதி தேவர் என்ற தொழிற்சங்க போராளியின் கதையை ரெஃபரன்சிற்காக உள்வாங்கி, 'கபாலி' என்ற தலித்தியவாதியாக ரஜினியை உருமாற்றி திரைக்கதை அமைத்திருந்தார். இப்போது கடல் கடந்து போகாமல், ஹிந்தியாவிற்குள்ளாகவே கடலோரமாக மும்பை வரை பயணித்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். இந்த 'காலா' கதைக்கள பின்னணி, ரஜினியின் பூர்வீக பூமியான மராட்டியத்திலேயே இருப்பதாக போஸ்டரின் மூலம் அறிய முடிகிறது. இங்கேயும் ரெஃபரன்சிற்கு வரதாபாய் என்ற அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த வரதராஜ முதலியாரே ரஞ்சித்தின் தலித்திய கதைக்கருவிற்கு தேவைப்படுவார்.

என்னதான் அம்பேத்கரியம் பேசினாலும் கடைசியில் கபாலி திரைப்படமானது பறையர் இனக்குழுவிற்கான அடையாளப்படம் போல சமூக ஊடகங்களில், அச்சாதியை சார்ந்தவர்களே பரப்புரை செய்தனர். இப்போது மீண்டும் நீலமும், கருப்பும், சிவப்பும் வண்ணக்குறியீடுகளோடு காலாவை வெளிக்கொண்டு வந்தாலும், அது மற்றுமொரு கபாலியின் நீட்சியாகவே சம்பந்தப்பட்ட பலராலும் பரப்புரை செய்யப்படும். இதிலுள்ள சிக்கல் என்னவெனில், மராட்டியரான ரஜினியை மள்ளரியம் பேசும் நபர்களால், கெய்க்வாட் என்ற பட்டம் கொண்ட அவர் சார்ந்த சாதியான குர்மியை, தமிழ் குடும்பர் என்ற பட்டத்தோடு இணைத்து தேசிய அளவிலான மள்ளரியம் பேசத்தொடங்கி பல ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போதைக்கு உலகளாவிய மள்ளரியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு கதை; நிற்க.

ஏற்கனவே மெட்ராஸில் மஞ்சள்Xநீலம் குறியீடு வைத்ததால் வட மாவட்ட இளைஞர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இப்போது பர்ஸ்ட்லுக் போஸ்டரிலேயே, கரிகாலன், சிவப்பு, கருப்பு, அம்பேத்கர், பெளத்தம், மும்பை, தாராவி, மராட்டியம் என பல குறியீடுகள் தென்படுவதால், இனிவரும் விமர்சனங்களையெல்லாம் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை காலம் தான் பதில் சொல்லும். பார்க்கலாம்; காலா வரட்டும்.

- இரா.ச. இமலாதித்தன்

24 May 2017

பொதுவெளியில் நாம் தமிழராக இருப்போம்!


தமிழ், தமிழரென பேசும் திரு.சீமானை அந்த தமிழர்களே ஏற்கவில்லையென தமிழரல்லாத கே.டி.ராகவன் சொல்லிருக்கிறார். சினிமா இயக்குனர் என்பதுதான் திரு.சீமானின் அடையாளமென்றும் சொல்லிருக்கிறார்; பூநூல் மட்டுமே அரசியல் அடையாளமாக இருக்க வேண்டுமென நினைக்கும் பொதுபுத்தியில் செருப்பால் அடித்து, களம் காணும் திரு.சீமான் எத்தனையோ இளந்தமிழர்களை நாம்தமிழராக இயக்கி கொண்டிருக்கும் தமிழ் இயக்குனர் தான் என்பதில் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியே. வா, போ என பேசுவதுதான் தமிழ் கலாச்சராமாயெனவும் கே.டி.ராகவன் கேட்டிருக்கிறார். அன்பு அதிகமுள்ள உறவுமுறைகளுக்குள் வா, போ மட்டும் தான் இருக்கும். இந்த ஆண்டான் அடிமை தன்மையை உருவாக்கிய ஆரிய வந்தேறிகளின் வர்ணாசிரமம் இங்கே இல்லாமல் இருந்திருந்தால், இதே வா,போ என்ற ஒருமைதான் இம்மண்ணில் இன்றும் உயிர்ப்போடு அன்பின் அடையாளமாய் மாறியிருக்கும்.

தென் தமிழகத்திலுள்ள தன் சொந்த ஊருக்குட்பட்ட தொகுதியை விட்டுவிட்டு, வட தமிழகத்திலுள்ள மேனாள் அமைச்சர் தொகுதியில் ஒரு வோட்டுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பட்டுவாடா செய்யப்பட்ட சூழலில், தன் மக்களிடமே பணம் வசூலித்து களம் கண்ட திரு.சீமான் தோற்றதில், அவருக்கு எந்த இழப்புமில்லை. தமிழனுக்காக போராடிய திரு.சீமானை, அந்த தமிழர்களே ஏற்றுக்கொள்ளாமல் தோற்கடித்து விட்டனர் என தொலைக்காட்சி விவாதங்களில் கண்டவனெல்லாம் பேசும் நிலைக்கு ஆளாக்கி விட்டோமேயென நினைத்து அத்தொகுதியின் வாக்களர்கள் தான் வருத்தப்பட வேண்டும்; ஏனெனில் இது அவர்களுக்கான தோல்வி. திரு.சீமான் பேச்சுக்காகவே கூட்டம் கூட ஆயிரக்கணக்கான பேர் இங்குண்டு. ஆனால் ராகவன் போன்றோர்களின் பேச்சைக்கேட்க கூட இம்மண்ணில் ஆளில்லை என்பதே எதார்த்த களநிலவரம். மாற்றுக்கருத்துகளும், விமர்சனங்களும் கூட திரு.சீமான் மீது சிலருக்கு இருக்கலாம். ஆனால் பொதுவெளியில் தமிழர் போலவே இயங்கி கொண்டிருக்கும் தமிழரல்லாதவர்களிடம் எப்போதுமே அண்ணன் சீமானை விட்டுக்கொடுக்க கூடாது; நாம் தமிழர்!

- இரா.ச. இமலாதித்தன்

20 May 2017

தா.கி.யும் திமுகவும்!
சிவகங்கை மாவட்டத்திலுள்ள கொம்புக்கரனேந்தல் எனும் ஊரில் 10.02.1937ல் அகமுடையார் இனக்குழுவில் பிறப்பெடுத்த மேனாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தா.கிருட்டிணன், தி.மு.க.வின் தென்மண்டல அடையாளமாக திகழ்ந்தவர். இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், அதனை தொடர்ந்து சட்டபேரவை உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றிய இவரை 'தா.கி' என்றே அழைக்கலாயினர்.

சிவகங்கையின் மாவட்டச் செயலாளராக தனது ஆதரவாளர் சிவராமனைக் கொண்டு வர அழகிரி கடும் முயற்சி செய்தார். இதற்கு தா.கி முட்டுக்கட்டையாக இருந்தார். இதுபோன்ற பல விசயங்களில் கட்சி வளர்ச்சிக்காக அழகிரியின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்திய தா.கி.யை ஒழித்துக்கட்ட வேண்டுமென அழகிரி நினைத்தார். தென் தமிழகத்தில் தா.கி.யின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத மு.க.அழகிரியின் தூண்டுதலால் அவரது கூலிப்படையினர் வெட்டிக்கொலை செய்த நாள் இன்று; சரியாக பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக 20.5.2003ல் மதுரையில் தா.கி. கொலை தொடர்பாக மதுரை அண்ணாநகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து மு.க.அழகிரி, மேனாள் துணை மேயர் மன்னன், திமுக செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார். கோபி, தி.மு.க நிர்வாகிகள் முபாரக் மந்திரி, கராத்தே சிவா உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்தது;

மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு கடந்த 2006ம் ஆண்டில் தி.மு.க ஆட்சியில் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சித்தூர் நீதிமன்றமோ, தா.கி. தன்னைத்தானே வாக்கிங் செல்லும் போது தன் கழுத்தை வெட்டிக்கொண்டார் என முடிவு செய்து, மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேரையும் விடுதலை செய்தது.

அழகிரி தன்னை மிரட்டியதாகவும், அழகிரியின் நடவடிக்கைகள் குறித்தும் கருணாநிதிக்கே பல கடிதங்களை எழுதியுள்ளார் தா.கி. அந்தக் கடிதங்களையெல்லாம் தன் மகனுக்காக கண்டுகொள்ளாமல் மெளனம் காத்தவர் தான் இந்த கருணாநிதி. பக்கத்து நாட்டு பிரச்சனையை, 'தமிழினத்தின் தலைவர்' என்று அழைக்கப்படும் கருணாநிதியால் தீர்க்க முடியாதென ஈழ விசயத்தில் முட்டுக்கொடுப்பதை கூட பெரும்பாலானோர் ஏற்கவில்லை. ஆனால் சொந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் கொலை செய்யப்பட்டதை கூட கண்டுகொள்ளாமல் தன் பிள்ளை, தன் குடும்பமென கை கட்டி வேடிக்கை பார்த்த கருணாநிதியை தா.கி.யின் ஆன்மா கூட மன்னிக்காது.

சொல்லி வைத்தாற்போல் சில ஆண்டுகளுக்கு முன்பாக இதே நாளில் தான், கருணாநிதியின் மகளான கனிமொழியும் 2ஜி வழக்கு தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதே போல், எந்த அதிகார பதவி ஆசைப்பட்டு தா.கி.கொலை செய்யப்பட்டாரோ, அந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட அனைவருமே இன்றைக்கு அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டு அடையாளமற்று கிடக்கின்றனர் என்பது மட்டும் தான் ஓரளவுக்கு ஆறுதலான விசயம்.

தா.கி. என்ற மாபெரும் ஆளுமைமிக்க செயல்வீரர் துரோகிகளால் கொலை செய்யப்பட்ட நாள் இன்று. (20 மே 2003)

14ம் ஆண்டு நினைவேந்தல் வீர வணக்கம்

- இரா.ச. இமலாதித்தன்

07 May 2017

செந்தமிழ் திருமகன் உமா மகேசுவரன் பிள்ளை (1883- 1941)

அகமுடையார் குலத்தோன்றல் 'தமிழவேள்' கரந்தை உமாமகேசுவரன் பிள்ளை! இவர் மட்டும் முயற்சி எடுக்காவிட்டால் சாதி வகைபாட்டியலில் முற்பட்டோர் பட்டியலில் இருந்த அகமுடையாரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைந்திருக்கவே முடியாது. இட ஒதுக்கீடே இல்லாமல் தவித்திருக்கும் சமூகமாய் அகமுடையார் இனக்குழு இன்றளவும் இருந்திருக்கும். தமிழை செம்மொழியாக்க வேண்டுமென 1919லேயே கரந்தை தமிழ் சங்கத்தின் மூலமாக தீர்மானம் நிறைவேற்றிய, தமிழ்த்தாய் வாழ்த்தை முதன்முதலாக பயன்படுத்திய பெருமைக்குரிய பெருந்தமிழருக்கு 134 வது புகழ் வணக்கம்!

சுந்தரனார் எழுதிய மணோன்மனியம் நூலிலுள்ள பாடலை, தமிழ்த்தாய் வாழ்த்தாக முதன்முதலில் அறிமுக படுத்தியவர்.

ஸ்ரீமான், ஸ்ரீமதி போன்ற அந்நிய மொழியேற்றத்தை எதிர்த்து, திருமகன், திருவாட்டி என தனித்தமிழில் திருத்தியவர்.

பத்திராதிபர், சந்தா, விலாசம், வி.பி.பி. என்பனவற்றுக்கும் பதிலாக பொழிற்றொண்டர், கையொப்பத் தொகை, உறையுள், விலை கொளும் அஞ்சல் போன்ற தனித்தமிழ் வார்த்தைகளை உருவாக்கி தந்தவர்.

1911ம் ஆண்டில் ஐந்தாம் தமிழ்ச்சங்கமாக, தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கியவர்.

பல்லாயிர கணக்கான நூல்களை விலை கொடுத்து வாங்கி, அவற்றையெல்லாம் தமிழாய்வுக்காக தனி நூலகத்தை உருவாக்கியவர்.

தமிழ்ப்பொழில் என்ற தமிழ் மொழிக்கான மாத இதழை தொடங்கி தொடர்ச்சியாக நடத்தியவர்.

பார்பனரல்லாதவர் பட்டப்படிப்பு படிக்கவே இக்கட்டான சூழல் நிரம்பிய காலக்கட்டத்தில், அகமுடையார் இனக்குழுவில் பிறந்த இவர் சட்டம் படித்து, இலவசமாக வழக்குரைஞர் பணியையும் திறன்பட சேவை செய்தவர்.

தமிழை செம்மொழியாக்க வேண்டுமென்று 1900 காலக்கட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியவர்.

பார்பனர் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அரசியலில், பார்பனரில்லாத கட்சியான 'நீதிக்கட்சி' தொடங்க காரணகர்த்தர்களில் ஒருவராக இருந்தவர்.

முற்பட்டோர் பட்டியலில் இருந்த அகமுடையாரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து இட ஒதுக்கீடு பெற வழி செய்தவர்.

"வான வரிவைக் காணும்போ தெல்லாம் உமாமகேசுரன் புகழே என் நினைவில்வரும்" என பாரதிதாசனால் புகழப்பட்டவர்.

இப்படியான பல பெருமைகளை கொண்ட தமிழவேள் உமா மகேசுவரன் பிள்ளையவர்கள், 07.05.1883ல் அவதரித்து 09.05.1941ல் இம்மண்ணை விட்டு மறைந்தாலும், அவர் புகழ் எப்போதும் மறையாது.

புகழ் வணக்கம்!

- இரா.ச. இமலாதித்தன்