21 டிசம்பர் 2017

ஆன்மீக குறியீடுகள்!

ஆங்கிலப்படங்களை மட்டுமே வைத்துக்கொண்டு அறிவியலை புரிந்து கொள்ள முடியாது என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. உதாரணங்களையெல்லாம் ஆங்கில படங்களோடும், மேற்கத்திய சாயல்களோடுமே தொடர்புபடுத்தி காட்டுகின்றனர். அவர்களுக்காகவே ஓர் ஆங்கில படமான அவதாரை எடுத்துக்கொண்டால், அப்படத்தை பழங்குடியினரோடு தொடர்புபடுத்துவதோடு நிறுத்தாமல், அதே அவதாரில் காட்டப்பட்டிருக்கும் மரத்தை ஆலமரமாகவும் எடுத்து கொள்ளலாம். நாகரீகம் என்பது நகர்தலின் அடையாளம்; எல்லா நாகரீக குழுக்களின் வேர் என்பது ஆதியில் பழங்குடியிலிருந்து தோன்றியதாகவே இருக்கும். உலக நாகரீகங்கள் பலவும் ஆற்றங்கரைகளை நோக்கிய நகர்தலில் இருந்தே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
ஆலமரம் என்பது மயானத்தின் குறியீடு. இங்கே மயானம் என்பதை மெய்ஞானத்தின் திரிபாக பார்க்கலாம். ஆலமர்செல்வன் என்பதற்கோ தெட்சிணாமூர்த்தி என்பதற்கோ பல காரணங்கள் பின்னாட்களில் அவரவருக்கு தகுந்தாற்போல் ஆலமரத்தை வைத்து கருத்துருவாக்கம் செய்யப்பட்டிருக்கலாம். எதார்த்தத்தில் பிறப்பு என்று ஒரு நிகழ்வு நடக்குமாயின் அதன் நீட்சியாக இறப்பு என்ற நிகழ்வும் நடந்தே தீரும். அந்த இறப்பினால் எவ்வுடல் அழிந்தாலும், அவர்களின் விந்து சுக்கில இணைவால் விட்டுச்சென்ற பல்வேறு உடல்களுக்குள்ளும் பல்லுயிர்கள் வாழ்ந்து கொண்டே தான் இருக்க கூடும். உடலுயிர் என்ற ஆலமரம் மறுசுழற்சியானாலும் விழுதுகள் போல இங்கே பல்லுயிர்களுக்குள் அவ்வுடல் பரிணமித்து கிடக்கும். இது சார்ந்த குறியீடே ஆலமரமும், மயானமும் என்பது என் அனுமானம்.
ஆய்வுக்காக நீங்களே தேடிப்பாருங்கள்; சுடுகாடோ - இடுகாடோ எங்கெல்லாம் இயல்பாகவே மெய்ஞானமென்ற மயானம் அமைந்துள்ள இடங்களிலெல்லாம் ஆலமரமும் அமைந்திருக்கும். தற்போது போல, காண்ட்ராக்ட் காரர்களால் உருவாக்கப்பட்ட இன்ஸ்டட்ண்ட் மயானங்களில் ஆலமரங்கள் இருப்பதில்லை. இந்த ஆலமரத்திற்கும் சுடலை மாடனுக்கும் மிக நீண்ட தொடர்புண்டு. சுடலை+மாடன் என்பதை பிரித்தாலே எளிதாக பொருள் கொள்ளவும் முடியும். சுடலை மாடன் என்பது நாட்டார் வழிபாடுகளில் முதன்மையானதாக கொள்ளலாம்; இதனை முன்னோர் வழிபாடாகவும் எடுத்து கொள்ளலாம்; சிவ வழிபாட்டின் தொடக்கம் என்பதாகவும் எடுத்து கொள்ளலாம். இவையெல்லாம் அவரவர் பார்வையை பொறுத்தது.
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவனின் வார்த்தைகளின் வழியே பல உண்மைகள் மறைந்து கிடப்பதை உணரலாம். அந்த வகையில், இந்த முக்கோணங்களை பற்றிய ஆய்வு பெரும்பாலானோரிடம் பல்வேறு கோணங்களில் வெளிப்பட்டு வருகிறது. இதை பற்றி பலரும் தனக்கான கற்பனை குவியல்களை கொட்டிக்கொண்டே இருக்கின்றனர். பலரும் இதை பெரும்புதிராக்கி குளிர் காய்கின்றனர். என்னளவில் இந்த முக்கோண கதையெல்லாம் நம்முள் உள்ள வடிவங்களே. அதை புற வடிவங்களாக்கி பார்ப்பதால் மட்டுமே உண்மை வெளிப்படப்போவதில்லை. அண்டமும் பிண்டமும் ஒன்றென சொல்லும் சித்தர்களின் வாக்குக்கேற்ப, உட்புறமுள்ள இவ்வடிவங்களை எங்கெங்கோ தேடி, கண்டதையெல்லாம் அந்த வடிவத்தோடு தொடர்புபடுத்த வேண்டியதில்லை. அதன் மீதான என்னுடைய பார்வை வேறு.
அறுகோணமாகவும் ஐங்கோணமாகவும் பார்க்கப்படும் இரு தலைகீழ் முக்கோணங்களை, மூன்று கோணங்களில் பார்க்க முடியும். ஒன்றாவது, ஆண் பெண்ணாக உருவகப்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவது, முதுகெலும்பின் நுனியும் அடியுமாக பார்க்கலாம். மூன்றாவது, சூரிய சந்திரனாகவும் பார்க்க முடியும். இங்குள்ள அனைத்தும், ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவே அமைந்திருக்கிறது. எவையும் இங்கு தனித்டில்லை. எல்லாவற்றையுமே விரிவாக சொல்வது நேர விரயம்; மற்றவர்களின் சிந்தனையையும் மழுங்கடிக்கவே இது செய்யும். எனவே உங்களது பார்வையின் கோணத்தை மாற்றுங்கள். இங்கே சொல்லப்பட்ட / சொல்லப்படும் கருத்தியல்கள் எல்லாமே உண்மையின் பக்கமில்லை என்பதை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள். உங்களது பார்வையை ஆழமாகவும், விரிவாகவும் கவனிக்க தொடங்கினாலே பல உண்மைகள் வெகு எளிதாக புரிய வரக்கூடும்; ஏனெனில் இந்த எண்ணங்களுக்கு எல்லாவற்றையும் விட வீரியம் அதிகம். கேள்விகள் கேட்குமிடத்தில் மட்டும் இருக்காமல், பதில்களை அறிந்தவராகவும் மாற, முதலில் அனைத்தையும் கவனிக்க தொடங்கி, தேடலோடு பயணியுங்கள்; எல்லாமே நிச்சயம் புரியவரும். நாம் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டுமென்பதை எதிரி தான் முடிவு செய்கிறானென்ற தத்துவத்திற்கேற்ப கைப்பற்றப்பட்ட நம் ஆயுதத்தை, மீண்டெழுந்து நாமே அதை மீட்டெடுத்தால் எல்லாமும் சாத்தியமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக