நாகப்பட்டினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாகப்பட்டினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 டிசம்பர் 2017

இராமதேவரும் - முகமது நபியும்!

முகமது நபிகளை புகழ்ந்து கொண்டே சித்தர்களை தவறாக விமர்சிக்கும் எண்ணமுள்ளவர்கள் சித்தர்களில் ஒருவரான இராமதேவரின் வரலாற்றை தேடி படித்து உண்மை உணரலாம். எங்கள் நாகப்பட்டினத்திலிருந்து மெக்கா சென்ற மகான் இவர். யாகோபுவாக சிலகாலம் வாழ்ந்து பின்னாட்களில் இராமதேவராகவே அழகர்மலையில் ஜீவசமாதி ஆகிருக்கிறார்.
(நாகப்பட்டினம் - இராமதேவர் - காசி - சட்டநாதர் - மெக்கா - யாகோபு - முகமது நபி - அழகர்மலை...)

17 ஜனவரி 2016

தடை போட்டாலும் நாகையில் ஜல்லிக்கட்டு!

எங்க நாகப்பட்டினம் மாவட்டம், தண்ணிலாபாடி என்ற என் மச்சான் ஊருல கூட இந்த வருசம் சல்லிக்கட்டு நடத்தி இருக்காங்க. தண்ணிலாபாடியில் அகமுடையார்களும் - படையாட்சிகளும் பெரும்பான்மையாக வாழும் கிராமம். இவர்கள் தவிர பள்ளர்களும் - பறையர்களும் என இந்த நான்கு தமிழ்சாதிகள் மட்டுமே உள்ள அந்த கிராமத்தில், சல்லிக்கட்டுக்காக முறையாக வளர்க்கபடாத 30 முரட்டு காளைகளை ஒரு திடலில் இறக்கி விட்டு இளைஞர்களெல்லாம் அடக்கி வீர விளையாட்டு ஆடியிருக்கிறார்கள்.


இதுவரை எங்களது பகுதியில் இது மாதிரியாக மஞ்சுவிரட்டு நடந்தது கிடையாதென நினைக்கிறேன். ஆனால் PETA போன்ற பீப் அமைப்புகளால் சல்லிக்கட்டே இதுவரை நடக்காத ஊர்களிலும் இம்முறை இவ்விழா நடத்தப்பட்டிருக்கிறது. முறையாக, வாடி வாசல் போன்ற கட்டமைக்கப்பட்ட திடல் எதுவுமில்லாத போதும் தடையை உடைக்க நினைத்திருக்கிறார்கள் என்பது தான் பெருமையான விசயம். தென் தமிழகத்தில் நான்கைந்து பகுதியில் நடைப்பெற்று கொண்டிருந்த சல்லிக்கட்டை, தமிழ்நாடெங்கும் நடைபெற வைத்திருக்கும் சல்லிக்கட்டை எதிர்த்த துரோகிகளுக்கும் - எதிரிகளுக்கும் நன்றி கூற வேண்டியது அவசியமாகிறது.

மேலும், எங்க நாகப்பட்டினத்திலும் சல்லிக்கட்டு நடந்தது என பெருமைப்பட வைத்து, தண்ணிலாபாடியில் மஞ்சுவிரட்டை நடத்துவதற்காக 30 காளைகளை மாரியம்மன் கோவில் திடலில் கொண்டு வர சொல்லி, உள்ளூர் உறவுக்கார இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்து விழாவை வெற்றிகரமாக நடத்தி காட்டிய, முன்னாள் ஊ.ம.தலைவரான அத்தான் திரு. வி.எஸ்.குமார் அகமுடையாருக்கு வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

16 ஜனவரி 2016

என் பார்வையில் இந்த வாரம்!

இந்த டாஸ்மாக் போராளிகள், ஏற்கனவே ஆளும் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகரில் ட்ராபிக் ராமசாமியை வெற்றிப்பெற வைத்து எம்.எல்.ஏ.வாக ஆக்கிவிட்டார்கள். அடுத்து ஐ.ஏ.எஸ் சகாயத்தையும் முதல்வர் ஆக்காமல் ஓய மாட்டார்கள்!

#

கீதை நாயகர்களுக்கு குரான் மீது தான் வெறுப்பு போல. பைபிளை ஆரத்தழுவி அணைத்து கொள்வது எந்த வேதநியாயமென தெரியவில்லை.
சத்தியம் டிவி கூட ஸ்லீப்பர் செல் தான்!

#

நாகப்பட்டினம் அகமுடையார் நலச்சங்கத் தொடக்க விழா!
லலிதா மகால், 20.12.2015.
திரு. பி.வி.ராஜேந்திரன்
திரு. மரு. டி.ராஜா
திரு. ஏ.கே.எம்.காசிநாத தேவர்
திரு. ஏ.ஆர்.வடிவேல் தேவர்
திரு. மரு. எஸ்.தர்மராஜ்
திரு. தி.அரப்பா
திரு. பாலமுருகன் அகமுடையார்

உள்ளிட்ட அகமுடையார் பெருமக்களின் வருகையோடும், பெருமளவிலான பெண்களின் வருகையோடும் ஆயிர கணக்கான உறவினர்களின் மத்தியில் நாகையில் அகமுடையார் விழா சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.

#

தஞ்சையை சுற்றி 111 கி.மீ. வரை, சிம்ம ராசி.
இது மனிதர்களுக்கான ராசி அல்ல; மண்ணுக்கான ராசியை பற்றிய பதிவு.
சோழநாட்டு டெல்டாகாரன்!

#

சத்தியம் டிவி கூட இல்லுமினாட்டி வகையறா தான். இளையராஜா கிட்ட கேட்ட மாதிரி ஜெயலலிதா கிட்ட பீப் சாங் பத்தி கேட்க இவிங்களுக்கு வக்கிருக்கா ?

#

பீப் சாங் பற்றிய நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, இளையராஜா என்னதான் பேசிருந்தாலும், அதை விமர்சிக்க யாருக்கும் அறுகதை இல்லை. இந்த விசயத்தில் நான் இளையராஜா பக்கம்.

இதோ ஆரம்பிச்சிட்டாருல்ல; சொரூபம், ஜெபம்ன்னு... இனிமேலாவது இளையராஜா கிட்ட காப்பி அடிக்காம, சொந்தமா ட்யூன் போடுங்க. நாங்களும் உங்கள பாராட்ட காத்துக்கிட்டு இருக்கோம்!

#

பங்காளி பங்காளி என கூப்பிட்டதால், என் பெற்றோர் வைத்த பெயரான இமலாதித்தன் என்ற என்னுடைய பெயரையே மறந்து விட்டேன்.
உங்களை விட்டால் எனக்கென்று யாருமில்லை!

#

கண்கள் பணித்தது; இதயம் இனித்தது!
இனி தந்தி டிவி விவாதங்களில் தி.மு.க பங்கேற்கும்.

06 டிசம்பர் 2015

நான் நேரில் கண்ட சம்பவம்!



மிகப்பெரிய பதவியில் இருக்கும் அந்த அரசியல்வாதி, மழைவெள்ளத்தால் தேங்கிநின்ற தண்ணீரை வடியவைக்க நாற்பது அம்பது ஆட்களோடு வருகிறார். தன் சகாக்களின் வண்டியையெல்லாம் பக்கத்து தெருவில் வரிசையாக நிறுத்திவிட்டு கொஞ்சம் தூரம் நடக்கிறார். தூர்வாறும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அங்கே அருகில் வருகிறார். சட்டென தேங்கிருந்த நீரின் ஒருதுளி, அவரது சலவை செய்யப்பட்ட வெள்ளை சட்டையில் பட்டுவிடுகிறது. உடனே கோபம் கொப்பளித்து, தன் உதவியாட்களிடம் சொல்லி வாட்டர் பாட்டிலை கொண்டு வரச்சொல்லி, அந்த தண்ணீரையே தண்ணீரால் துடைக்கிறார். இதையெல்லாம் கூடியிருந்த இளைஞர் பட்டாளம் செல்போனில் போட்டோ பிடிக்கிறது. ஆனால், அவரின் எடுபிடிகளால் மிரட்டப்பட்டு எடுத்த போட்டோக்களையெல்லாம் டெலிட் செய்யப்படுகிறது. இதற்கிடையில், அவருக்கு அருகில் சென்ற அவருடைய கேமராமேன்கள் "அண்ணன்! இப்போ அந்த மம்வெட்டிய கையி் பிடிச்சு க்ளீன் பண்ணுங்க அண்ணன்..." ன்னு சொன்ன உடனேயே மூன்று போட்டோகிராஃபரின் கேமராக்களையும் பார்க்காமலேயே போட்டோவுக்கு வெகு இயல்பாக போஸ் கொடுத்து விட்டு, மடித்து கட்டிருந்த தன் கட்சிக்கரை போட்ட வெள்ளவேட்டியை இறக்கி விட்டு காரில் பறந்து விட்டார். காத்திருக்கிறோம் 2016 தேர்தலுக்காக! அவரை பதவியில் இருந்து பறக்க வைக்க...

- இரா.ச.இமலாதித்தன்.

10 நவம்பர் 2015

நாகை ’தேவ நதி'யின் ஒரு பகுதி!



இந்த பெருமழையின் விளைவாக, எங்க நாகப்பட்டினத்தின் எல்லையான 'கோட்டைவாசல்' பகுதியில் காட்டாற்று வெள்ளம் போல பாய்ந்தோடும், 'தேவ நதி'யின் ஒரு பகுதி!

26 அக்டோபர் 2015

அதிமுகவும் - ஆட்சித்தலைவரும்!



"ஆட்சித்தலைவர்" என்ற உடன் அதையும் கட்சிப்பதவின்னு நினைச்சிட்டாய்ங்க போல... கலெக்டரையும் கட்சிக்காரனுக்கும் திறமை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே உண்டு.
சு.பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்.,
நாகப்பட்டினம் ஆட்சியர்.

30 மே 2015

அதிமுக அமைச்சர்களின் பதவிக்காலம் எதுவரை?

இன்னைக்கு எங்க ஊர் நாகப்பட்டினத்துல, "நாகையின் சூப்பர் சிங்கர்" என்ற நிகழ்ச்சியின் இறுதி சுற்று லலிதா மஹாலில் நடந்துச்சு. கொஞ்ச நேரம் பார்க்கலாமேன்னு போனோம். கடைசி ரெண்டு மூனு வரிசைக்கு முன்னாடி உள்ள சீட்ல உட்கார்ந்தோம். கொஞ்ச நேரத்துல அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் வேளாண் அமைச்சருமான திரு.ஜீவானந்தம் அவரது சகாக்கள் இருவரோடு அரங்கிற்குள் வந்தார். பெரும்பாலனோர் அவரை கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை. ஒருசிலர் எழுந்து வணக்கம் சொல்லிட்டு, அமர்ந்து விட்டனர். அவரும் எனது இருக்கைக்கு அருகிலேயே தான் அமர்ந்திருந்தார். கொஞ்ச நேரத்துல விழா ஏற்பட்டாளர்கள், அவரை கண்டுகொண்டு முதல் வரிசையிலுள்ள இருக்கையில் அமர வைத்தனர். பரிசு பெறணுமேன்னு உயிரை கொடுத்து ஒரு பொண்ணு பாட்டு பாடிட்டு இருந்துச்சு. எப்போ பாடி முடிக்கும்ன்னு காத்திருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், திரு. ஜீவானந்தத்தை வரவேற்றார். "அமைச்சர் ஜீவானந்தம் அவர்களை வரவேற்கிறோம்!" என இருமுறை அமைச்சரென கூறினார். ஆனால், திரு.ஜீவானந்தம் இன்று எம்.எல்.ஏ.வும் இல்லை, மா.செ.வும் இல்லை. அதை யாரும் மறுப்பேதும் சொல்லவில்லை. சொல்ல வந்தது அதைப்பற்றி இல்லை.

அதிமுக அரசில் யார் எம்.எல்.ஏ? யார் அமைச்சர்? என்பது கூட ஓட்டு போட்ட வாக்களனுக்கே தெரியாமல் போய்விடுகிறது. அது தான் ஜெயலலிதாவின் சாதனையென நினைக்கிறேன். யார் எத்தனை மாதம்? எந்தெந்த பதவியில் இருப்பாரென கூட தெரியாத நிலையில் எப்படி ஸ்திர தன்மையோடு செயலாற்ற முடியும்? பரவாயில்லை, இப்போதைய மா.செ.வும், மீன்வளத்துறை அமைச்சருமான திரு.ஜெயபால் அவர்கள் இத்தனை மாதங்கள் தாக்கு பிடித்திருக்கிறார் என்பது பெரும் சாதனை தான். அதற்கும் இடையூறுகளாக பல உண்மை செய்திகள் மேலிடத்திற்கு சென்றிருக்கிறது. இன்றைக்கு கூட நாகை நீலாயதாட்சி உடனுறை சிவன் கோவில் தேரோட்டத்தில் இரு மீனவ கிராம அமைப்புகளுக்கு இடையே பெரும் மோதல். இரு தரப்பிலும் பலருக்கு காயம். பத்திரிகையாளர்கள் கூட தாக்கப்பட்டிருக்கின்றனர். பார்க்கலாம், என்ன நடக்குமென்பதை...

- இரா.ச.இமலாதித்தன்

12 ஜனவரி 2015

கோபிநாத் என்ற ஜூனியர் மேஜர் சுந்தர் ராஜன்!

ஜனவரி 12ம் தேதி நாகப்பட்டினத்திலுள்ள தனியார் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்று பேசிய கோபிநாத்தின் பேருரையை லோக்கல் கேபிள் சேனல்ல தொடர்ச்சியா போட்டுக்கிட்டே இருக்காய்ங்க. அப்படி என்னதான் நம்மாளு பேசினாரு பார்த்தா, மேஜர் சுந்தர்ராஜனே தோத்து போற அளவுக்கு மொதல்ல ஆங்கிலத்திலும் அடுத்து தமிழிலும் என வரிக்கு வரி மொழிமாற்றம் செய்து இப்படியே பேசிக்கிட்டு இருந்தாப்ள. ”நாக்கு தமிழ் மணக்கும் நன்னாகை”ன்னு எங்க ஊரை பத்தி பெருமையா சொல்லுவாங்க. ஆனால் Gopinath அவர்களின் மேஜர் சுந்தர்ராஜன் சாயலில் அமைந்த அந்த பேச்சை சகிக்க முடியல, இனியாது மாத்திக்கிங்கண்ணே! கோபிநாத் என்ற ஜூனியர் மேஜர் சுந்தர் ராஜனாக மாறிவிட வேண்டாம்ண்ணே!

01 நவம்பர் 2014

நாகை மைந்தர் தான் தென்னிந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார்!



எம்.கே.தியாகராஜ பாகவதர் நடிப்பில் 1944ம் ஆண்டு வெளிவந்த ‘ஹரிதாஸ்’ திரைப்படம் தொடர்ச்சியாக மூன்று வருடஙகள் ஓடியது. இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடித்ததில்லை. மேலும், திரையுலகில் 1934ம் ஆண்டு நுழைந்ததிலிருந்து மொத்தமாகவே 14 படங்களில் மட்டுமே நடித்த எம்.கே.பாகவதரின் பெரும்பாலான படங்கள் வருடகணக்கில் ஓடி தொடர் சாதனைகளை படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரும் - எங்க நாகப்பட்டின மாவட்டத்து காரருமான எம்.கே. தியாகராஜ பாகவதர் (Mayavaram Krishnamurthy Thyagaraja Bhagavathar) நினைவு நாளான (01 நவம்பர் 1959) இன்று, நாகப்பட்டினத்து காரனாய் பெருமையோடு அவரை நினைவுகூறுகிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

31 அக்டோபர் 2014

நாகப்பட்டினத்தில் தேவர்சிலை தேவர் சமுதாயக்கூடம் திறப்புவிழா






எங்க நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்து அருகிலேயே தேவர் சமுதாயக்கூடமும், கூடவே பசும்பொன் தேவர் சிலையும் நேற்றைய (அக்டோபர் 30, 2014) தேவர்ஜெயந்தி அன்று திறந்தாச்சு! சமுதாயக்கூடமும் - தேவர்பெருமகானரின் சிலையும் அமைய முழு முயற்சி எடுத்த திமுக நகர செயலாளர் திரு. போலீஸ் பன்னீர் அண்ணன் உள்ளிட்ட அனைத்து சமுதாய பெரியோர்களுக்கும் என் நன்றி!

- இரா.ச.இமலாதித்தன்

29 அக்டோபர் 2014

சூரசம்ஹாரத்திற்கும் நாகப்பட்டினத்திற்குமான தொடர்பு!

இன்னைக்கு எம்பெருமான் முருகனின் சூர சம்ஹாரம்! அதைப்பற்றி எனக்கு தோன்றிய சிறு ஆய்வு. நாகப்பட்டினமும் கடல் நகரம். திருச்செந்தூரும் கடல் நகரம். மேலும், முருகனின் அறுபடை வீடுகளில் கடலோரத்தில் அமைந்துள்ள ஒரே பிரசித்தி பெற்ற தலமாகவும் திருச்செந்தூர் விளங்குகிறது. இந்த விசயத்தை மையமாக வைத்தே இந்த பதிவு அமைய உள்ளது. மாற்று கருத்துகள் இருந்தால் கூறவும்.

நாகப்பட்டினம் அருகேயுள்ள சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் வதம் செய்யும் நிகழ்வு தான் சூரசம்ஹாரம். சிக்கல் கோவிலுக்கு அருகேயே அரை மைல் தொலைவில் பொரவச்சேரி என்ற பொருள்வைத்தச்சேரி இருக்கு. அங்கு தான் எம்பெருமான் முருகனின் கல்லினால் ஆன மூலவர் சிலையும் இருக்கு. ஆனால், சிக்கல் கோவிலுனுள் ஐம்பொன்னினால் ஆன உற்சவர் மட்டுமே உள்ளது. ஆனால், அந்த உற்சவருக்கும் சூரசம்ஹார நாளில் வேர்வை வியர்க்கும் என்பது காலம் காலமாக நடந்து வரும் அதிசய நிகழ்வு. சிக்கல் - பொரவச்சேரி இது இரண்டு ஊர்களுமே கடலுக்கு அருகே இல்லை. மேலும், நாகப்பட்டினதில் கூட ஆறுமுகனுக்காக தனி ஆலயமாக குமரன் கோவில் நகரத்தின் மைய பகுதியில் இருக்கின்றது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஒரு முருகன் கோவில் சாமாந்தான் பேட்டை என்ற கடலோர கிராமத்தில் இருக்கின்றது. இந்த கோவிலுக்கு அருகில்தான் நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகமும் இருக்கின்றது.

பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கிய அந்த கோவிலுக்கும், சிக்கலுக்கும் ஏறத்தாழ 10 மைல் தொலைவு இருக்கும். அந்த கோவிலில் வள்ளி-தெய்வானை இல்லாமல் எம்பெருமான் திருமுருகன் தனியே போர்கோலத்தில் தான் காட்சியளிக்கின்றார். என் கணிப்பின் படி, சிக்கலில் வேலும் ஆசீர்வாதமும் வாங்கியவுடன் பொருள்வைத்தச்சேரியில் ஆயுத தடவாளங்களை கட்டமைத்து, அப்படியே தரை மார்க்கமாக சாமந்தான்பேட்டைக்கு வந்து அங்கு தங்கிருந்து, பிறகு கடல்வழியாக திருச்செந்தூருக்கு போர்கலங்களோடு எம்பெருமான் முருகனின் கடற்படையினர் பயணித்திருக்க வேண்டும்.

மேலும், எம்பெருமான் முருகன், யாரிடம் வேல் வாங்கினார் என்பது எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாக பார்வதி என தெரிந்திருக்கும். ஆனால், சிக்கல் கோவிலிலுள்ள பார்வதியின் திருப்பெயர் வேல்நெடுங்கன்னி அம்மன். அந்த வேல்நெடுங்கன்னி அம்மன் தான் காலப்போக்கில் முடவனுக்கு கடலோரத்தில் காட்சியளித்த வேளாங்கன்னி மாதாவாக விளங்கி வருகிறார். இங்கே மதமாற்றம் மனிதனுக்கு மட்டுமல்ல, கடவுளுக்கும் தான் என்பது மாரியம்மன் - மரியே என மருவி விட்ட இந்த விசயத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வேல்நெடுங்கன்னி என்ற வேளாங்கன்னி மாதாவுக்கும் கடலோரத்தில் தான் சர்ச் என்ற மாதா கோவில் இருக்கின்றது. இந்த முறையில் யோசித்தால், ஒருவேளை சாமந்தான்பேட்டையிலிருந்து வேல் உள்ளிட்ட ஆயுத தடவாளங்களுடன் கிளம்பி, வேளாங்கன்னி என்ற இந்த கடல் வழி மார்க்கமாகவே எம்பெருமான் முருகனின் கடற்படை திருச்செந்தூருக்கு பயணித்திருக்க வேண்டும், அப்போதும் அங்கு பார்வதி காட்சியளித்து எம்பெருமான் முருகனுக்கு ஆலோசனைகளையும், ஆசிகளையும் வழங்கிருக்க கூடும்.

இதுபோலவே, சிக்கலிலுள்ள எம்பெருமான் முருகனின் திருப்பெயர் சிங்கார வேலன் ஆகும். இந்த சிங்கார வேலனுக்கும் ஒரிசாவுக்கும் ஒரு தொடர்புண்டு. அந்த தொடர்பும் போர் சம்பந்தப்பட்டது தான். அதுபோல திருச்செந்தூர் முருகனுக்கும், குன்று இருக்குமிடமெல்ல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கிணங்க, திருப்பதியிலுள்ள வேல்கொண்ட ஈசனுக்கும் கூட ஒரு தொடர்புண்டு. அதுவும் போர் ஆயுதமான வேல் சம்பந்தப்பட்டது தான். இவையெல்லாம் என்னுடைய தனிப்பட்ட அனுமானங்களே. இவை பொய்யாக கூட போகலாம். எல்லாம் உண்மைகளும் எம்பெருமான் முருகனுக்கே தான் வெளிச்சம்!

வீர வேல்! வெற்றி வேல்!

- இரா.ச.இமலாதித்தன்

16 அக்டோபர் 2014

நாகையின் நாயகர்கள்!

கண்ணகி, காரைக்கால் அம்மையார், கம்பன் மட்டுமல்ல, இந்த இமலாதித்தனும் பிறந்த ஊருதாங்க நம்ம நாகப்பட்டினம்!

நாகப்பட்டினத்தில் பிறந்த கம்பனுக்கு கல்யாணம் ஆய்டுச்சா? இல்லையா?ன்னு தெரியல. இவரை தவிர நாகப்பட்டினத்தில் பிறந்த காரைக்கால் அம்மையாருக்கும், கண்ணகிக்கும் கல்யாணம் ஆனது என்னவோ உண்மைதான். ஆனால், கல்யாணத்துக்கு பிறகு தான் ஒரு மிகப்பெரிய வரலாறே உருவானது. ஒன்று மாங்கனியால்! இன்னொன்று சிலம்பினால்! இன்று இருவருமே வள்ளுவர் சொன்னது போல தெய்வத்துள் வைக்கப்பட்டு விட்டனர். இதை எதுக்கு சொல்றேன்னா, நாங்களும் நாக்கு தமிழ் மணக்கும் நாகப்பட்டினத்து காரன் தான்... எங்களுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை. கல்யாணம் ஆனதுக்கு அப்பறமா நாங்களும் தெய்வம் தான்!

”எப்போ கல்யாணம்? எப்போ கல்யாண சாப்பாடு போடுவீங்க? சீக்கரமா மெரேஜ் ட்ரீட் கொடுங்க.”ன்னு ஒருநாளைக்கு ரெண்டு பேராவது சுழற்சி முறையில் இப்படி கேட்குறதுனாலேயே, இனி நித்தியானந்தா மாதிரி ஆய்டலாம்ன்னு இருக்கேன்.

சீடர்கள்* தொடர்புக்கு:-

ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சா இமலாதித்தனந்தா
ஆதித்த பாலபீடம்
ஆதித்தனந்தபுரம்
நாகப்பட்டினம்.

( *பெண்களுக்கு முன்னுரிமை )


- இரா.ச.இமலாதித்தன்

26 ஜூன் 2014

அரசு மருத்துவமனையில் ஒரு நாள்!

நேற்று முழுவதும் நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் தான் என் பொழுது கழிந்தது. என் மச்சானுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதால், மருத்துவமனையிலேயே அண்ணன் தம்பி மாமன் மச்சான்களோடு அஞ்சு ஆறு பேரா சுத்திக்கிட்டு இருந்தோம். ஒரு பெண் தீக்குளிப்பு, ஒரு இளைஞன் பைக் விபத்து, ஒரு நடுத்தரவயதுள்ளவரின் வெட்டுக்குத்து கேஸ் என மூன்று சம்பங்களை மருத்துவமனை வளாகத்துக்குள் பார்க்க முடிந்தது.

அந்த பெண்ணின் தீக்குளிப்புக்கான காரணம் தெரியவில்லை. சொந்த பந்தமெல்லாம் சேர்ந்து பொம்பளய்ங்களோட அழுகுரலை கேட்கமே மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு.

பைக் விபத்தில் இறந்தவரின் வயது 30க்குள் தான் இருக்கும். பொலிரோ ஜீப் மோதி ஸ்பாட் அவுட். அண்ணன் தம்பி நண்பர்கள் அப்பா அம்மான்னு எல்லாரும் இறந்த இளைஞனை பற்றி சொல்லி அழும் போது மனசே உடைஞ்சிருச்சு. நண்பர்கள் யார் யாருக்கோ போன் போட்டு "என் தம்பி என்னைய விட்டு போய்ட்டான். என் தம்பி செத்துட்டான்"னு சொல்லி சொல்லி அழும் அண்ணனின் குரலை கேட்டும் ஒவ்வொருத்தனுக்கும் கண்ணில் கண்ணீர் வந்தே தீரும்.

மூனாவது வந்த வெட்டுகுத்து கேஸ்ல, கடப்பாறையால முகத்துல குத்தி இருக்காய்ங்க. அந்த நடுத்தர வயதுள்ளவர் கொஞ்சம் குடிபோதையில் இருந்ததால் படுகாயம் அடைந்திருந்தார். கையில் அரிவாள் வெட்டு, நெத்தியில் கடப்பாறை குத்துயென மிக மோசமான நிலையில் அட்மிட் செய்யப்பட்டார்.

தீக்குளிப்பை தவிர மற்ற இரண்டு சம்பவமும் மது போதையில் வந்தது தான். சாலையோரமெல்லாம் டார்கெட் வைத்து டாஸ்மாக்கை திறக்கும் இந்த அரசாங்கம் பாவத்தை மட்டுமே சம்பாரித்து கொண்டிருக்கின்றது. தமிழன் தினம் தினம் குடிபோதையில் மரணித்து கொண்டிருக்கின்றான்.

ஒரு மணிநேரம் கழித்து என் மச்சான்கள் மூவரும் வா மார்சரி போய் அந்த ரெண்டு பாடியையும் பார்த்துட்டு வருவோம்ன்னு கட்டாயபடுத்தி என்னை பிணவறைக்கு அழைச்சிட்டு போனாய்ங்க. தீக்குளித்த பெண்ணை கண்ணாடி பாக்ஸ்ல வைத்திருந்தனர். ஆக்ஸிடண்ட் ஆனவரை அப்படியே தரையில் போட்டு வைத்திருந்தனர். பிணவறை பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னலோரம் உறவினர்கள் எல்லாம் அவனது உடலை பார்த்து தேம்பி தேம்பி அழுதவாறு நின்று கொண்டிருந்தனர். அந்த இளைஞனை பெத்த தகப்பன், ஒரு கையில் அந்த இளைஞனின் நண்பனனையும், இன்னொரு கையில் மூத்த மகனையும் இறுக பிடித்து மெதுவாக அந்த பிணவறையை விட்டு தூர அழைத்து வந்தார். அதுவரை அவர் அழவில்லை. மற்ற இருவரும் தான் விடாமல் அழுது கொண்டிருந்தனர். பிணவறையை விட்டு கொஞ்ச தூரம் போனதும் மூனு பேருமே ஒப்பாரி வைத்து அழுததை பார்க்கும் போது என் மனசு வலிக்கிற மாதிரி இருந்துச்சு. இறப்பின் வலியும், இழப்பின் வலியும் என்னால் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது.

அநாதை போல அவனது உடல் அந்த பிணவறையில் ஜன்னலோரம் கிடந்த காட்சியை பார்த்து விட்டு. "மனுசனோட வாழ்க்கை இவ்வளவு தான்!" என்று, முரட்டுத்தனமான என் மச்சான்களே என்கிட்ட சொன்னாய்ங்க. நாலு பேருமே கணத்த இதயத்துடன் வெளியேறினோம் பிணவறையை விட்டு!

- இரா.ச.இமலாதித்தன்

09 டிசம்பர் 2013

வாழ்த்துகள்!

விஜய்டிவி ஜூனியர் சூப்பர் சிங்கரில் அறிமுகமான சோழநாட்டு பொண்ணு மன்னார்குடி அனு ஆனந்த் பாடியுள்ள "பண்ணையாரும் பத்மினியும்" படத்துல வர 'எனக்காக பொறந்தாயே' யென்ற பாட்டுதான் என்னோட லேட்டஸ்ட் ஃபேவரைட். அந்த அனுவோட ஹஸ்கி வாய்ஸ் எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கும். இந்த பாட்டுல மெட்சூர் ஃபிமேல் சிங்கரா அந்த புள்ள பாடியிருக்குறதான் ஹைலைட்டே!

பொண்ணுங்க குரலுக்கு வயசு வித்தியாசமே இல்ல. ஆனால் ஆம்பள பசங்களுக்குதான் குறிப்பிட்ட வயசு வரைக்கும் மெட்சூர் வாய்ஸ் வரவே மாட்டுது.

ஏய் புள்ள எட்டாங்கிளாஸ் படிக்கிற அனு, வாழ்த்துகள்!

------------------------------------------------------------------------------------------
அட்ரஸ் / ரூட் சொல்றதுல தமிழனை அடிச்சிக்க முடியாது போல. நாலஞ்சு பேரு நிக்கிற இடத்துல பைக்கை நிப்பாடி தெரியாத ஊருக்கு வழி கேட்டால், அடிச்சு பிடிச்சு போட்டிப் போட்டுக்கிட்டு சொல்றாய்ங்க.

உங்கள மாதிரியான ஆளுங்களாலதான் அடிக்கடி புயலும் - மழையும் நம்ம நாகப்பட்டினம் பக்கமே வருது. நீடுழி வாழ்க!

16 ஆகஸ்ட் 2011

மனம் குரங்கு! மதம் சேவல்! நான் இனி...?



என்னன்னமோ சிந்தனைகள் மனதுக்கும்,மூளைக்கும் இடையே பயணித்துக்கொண்டிருக்கும் இந்த மாலைநேர வேளையில் எதையாவது ஒன்றை எழுதி பதிவேற்றி விடவேண்டுமென்ற எண்ணத்தோடு எழுத ஆரம்பிக்கின்றேன்.ஆனாலும் இன்னும் என்னவென்பது முடிவு செய்யப்படவில்லை.

காலம் என்ற இயந்திர குதிரை எவ்வளவு வேகமாக நம்மை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது என்பதை யோசிக்கும் வினாடிகளில் கூட அது பல மைல்களுக்கு அப்பால் கடந்து மறைகிறது.இதையேன் இப்போது சொல்கிறேனென்றால், என்னைப்பற்றிய ஒரு பின்னோக்கிய பயணத்தைதான் இங்கே தொடரப்போகிறேன் என்பதாலேயே.

நாகப்பட்டினம் சோழர்களுக்கு மட்டுமில்லாமல் சாமானியனான எனக்கும்கூட பட்டினமாகவே திகழ்ந்து வருகிறது.வேளாங்கண்ணியில் கிருத்துவமும், நாகூரில் இசுலாமும் இங்கே அரவணைக்க படுவதோடு, ஒரு மாதம் மேலாக திருவிழாக் காணும் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் போல, பல கோயில்களோடு இந்துக்களுக்கும் உறைவிடமாய் இருந்து வருகிறது. இது நான் பிறந்த ஊரு என்பதால் மட்டுமே தூக்கி பிடிக்கவேண்டிய அவசியமில்லை.ஆனாலும் மும்மதத்தையும் முழுதாய் ஏற்கும் நாகப்பட்டினத்திலே பிறந்தேனென்று சொல்லிக் கொள்வதுகூட, என்னை சார்ந்த ஓர் உள்ளார்ந்த செய்திக்கான ஒரு முடிச்சே என்பதையும் அடுத்தடுத்த வரிகளில் நீங்களே புரிந்துகொள்ள நேரிடும்.

நாகை அரசு மருத்துவமனையில் நான் பிறப்பெடுத்த அந்நாளின், என் தாயின் கட்டிலுக்கு இருபுறமும் குழந்தை பெற்றெடுத்தது இசுலாம்,கிருத்துவம் மதத்தை சார்ந்த நாகைப்புறவாசிகளே.

நான் பிறந்த தேதியில் அதே மருத்துவமனையில் பத்து பதினைந்து பேரு பிறந்திருக்கலாம்.ஆனாலும் இன்றைக்கும் எனக்கு நினைவுக்கு வருவது, இந்த இரண்டு குடும்பங்களை தான். இங்கே குடும்பம் என்பதை குறிப்பிடுவதை விட, இரண்டு மதத்தினர் யென்று சொல்வதுதான் எனக்கு சரியாக இருக்கும்.

என்னுடைய எண்ணவோட்டங்களால் நான் ஒரு மதவாதியாய் இருப்பது போல உங்களது பார்வைக்கு தெரியக்கூடும். ஆனால் அது அப்படியானதல்ல. பிறர் மதங்களை மதிக்கவும், தன் மதத்தை நேசிக்கவும் பழகிக்கொண்டிருக்கிறேன்.இது சமீபத்தில் வந்த சிந்தனையாகக்கூட இருக்கலாம்; ஆனாலும் முன்கூட்டியே வந்திருந்தால், ஒருசில நிகழ்வுகளில் வெகுசிலரை எழுத்துகளால் காயப்படுதிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.பட்டறிந்த பின்பு வரும் ஞானமெல்லாம், இந்த பட்டறிவு தருவதில்லை.

அரட்டை,வம்பு,விடாப்பிடியான பேச்சு என்றெல்லாம் இன்றைய பொழுதுகளில், நான் தீவிரமாய் இயங்கினாலும்  நான் பிறந்த அரைமணி நேரம் வரையிலும் நான் எந்த வித அழுகையோ,முனகல்கலையோ, கத்தலுமின்றி அப்படியே கிடந்தேனாம். அப்போது அழுது துடித்த என் பாட்டியும், அம்மாவும் இருக்கின்ற கடவுளுக்கெல்லாம் விண்ணப்பம் வைத்துக்கொண்டிருந்த வேளையில், அருகிலுள்ள இரு மதத்தினரும் ஏசுவையும், அல்லாஹ் வையும்  வேண்டி சேவல் வேண்டிவிட சொன்னார்களாம்.அதுபோலவே, நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி சர்ச்சென்று மூன்று ஆன்மீகத்தலங்களுக்கும் வேண்டுதலை வைக்க, அரைமணி நேரத்திற்கு பின்பாக நான் அழத்தொடங்கினேனாம்.நல்லோரை வாழ வைக்கவும், தீயோரை வீழ வைக்கவும் மட்டுமே தேவைப்பட்ட இறைவன் என்னை அழ வைக்கவும் கூட தேவைப்பட்டிருகிறான்.அந்த இறைவன் அருளால் நான் சந்தோசமாகவே இருக்கிறேன் இப்போதும் கூட.

மதம் என்ற வழியில் பயணிக்கும்போது, பாதை மாறுமே  தவிர  இறைவனென்ற ஊர் ஒன்றாகவே இருக்கும்.