22 ஏப்ரல் 2017

வைகையாற்று அரசியல்!


வைகை அணையில் நீர் ஆவியாகமால் இருப்பதற்காக தெர்மகோல்களை 10 லட்சம் ரூபாய்க்கு செலவழித்ததாக சொல்லிருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ. ”அடுத்தவன் ஆட்டோவின் கண்ணாடியை திருப்பினால், என்னோட ஆட்டோ எப்படி ஓடும்?” என்ற கருணாஸின் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. அந்த காமெடியன் கருணாஸ் கூட கூவத்தூரிலும் சரி, அடுத்து தன் சொந்த அமைப்பை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளையும் பூண்டோடு நீக்கியதிலும் சரி, இடைவிடாமல் சினிமாவை போலவே அரசியலிலும் காமெடிதான் செய்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்டவர்களை தான் எம்.எல்.ஏ.க்களாக உருவாக்கிருக்கிறார் என்பது, ஜெயலலிதாவின் நிர்வாக திறனுக்கும், ஆளுமைக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

10 லட்சம் ரூபாய்க்கு தெர்மகோல் வாங்கியதாக சொல்லிவிட்டு, பத்து பதினைந்து தெர்மகோல்களை ஆற்றில் மிதக்கவிட்டு ஒட்டுமொத்த வைகை நதியின் நீர் ஆவியாவதை தடுத்துவிட்டதாக பேட்டிக்கொடுத்த சில நிமிடங்களேயே அவையெல்லாம் காற்றில் பறந்து கரையை கடந்துவிட்டன. இந்தமாதிரியான யோசனைகளை எந்த மங்குனிகள் சொல்கிறர்களென தெரியவில்லை. அவ்வளவு விலையுர்ந்ததா இந்த தெர்மகோல்கள் என்றும் புரியவில்லை. இல்லாத ஊருக்கு சாலை போட்டதாக கணக்கில் காட்டிய அரசியல் வாதிகளும், மாயவரத்திலிருந்து மயிலாடுதுறை வரைக்கும் சாலை போட்டதாக, இருக்கின்ற ஓர் ஊருக்கு இருபெயர்களை வைத்தே போலி கணக்கு காட்டும் கோமாளிகளும், இருபது குடும்பமேயுள்ள ஒரு கிராமத்திற்கு ஐந்தாறு மயானக்கூடங்களை கட்டி அரசாங்க பணத்தில் தின்று கொழுப்படுத்தவர்கள் நிறைந்த மக்களாட்சி நாடு இது.

வெப்பம் அதிகமாவது எதனால்? அதை தடுக்க என்ன வழியென்று யோசிக்காமல், இப்படி சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடுமா? மரங்களை அதிகமாக வளர்க்க புதிய திட்டங்களை உருவாக்கி, விழிப்புணர்வை பொதுமக்களிடையே விதைக்கலாம். கோலா/பெப்சி போன்ற அந்நிய குளிர்பான தொழிற்சாலைகளுக்கு வைகை ஆற்றில் ஆழ்துளையிட்டு நீர் எடுப்பதை தடுக்க சட்டமியற்றலாம். டெல்டா  உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்த காவிரித்தாயின் ஆற்று வழித்தடங்களிலெல்லாம் நூற்றுகணக்கான லாரிகளை கொண்டு மணல்களை சுரண்டும் மாஃபியாக்களை கைது செய்யலாம். ஆற்றின் இருமருங்கிலும் சோலார் சிஸ்டம் அமைத்து, இந்த கடுமையான வெப்பத்தை சூரிய ஆற்றலாகவும், அதை மின் சக்தியாகவும் சேமிக்கலாம். இதுமாதிரி எத்தனையோ உருப்படியான விசயங்கள் செய்ய வேண்டிய நேரத்தில், இப்படி முட்டாள்தனமாக செயல்படுவதை விட, ஓர் ஆணியையும் பிடுங்காமல் இருக்கலாம். ஏனெனில் நீங்க புடுங்கிறது எல்லாமே தேவையில்லாதது தான்!

- இரா.ச. இமலாதித்தன்

21 ஏப்ரல் 2017

பெருந்தமிழர் பெருமாள்தேவருக்கு புகழ் வணக்கம்!



இன்றைக்கு எத்தனையோ நூல்கள் முத்துராமலிங்கத் தேவர் பற்றி வந்திருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் விதை போட்டவர் ஏ.ஆர்.பெருமாள் தேவர் என்ற அகமுடையார். அவர் எழுதிய ”முடிசூடா மன்னர் முத்துராமலிங்கத்தேவர்” என்ற நூலை படிக்காதவர் பெரும்பாலும் இருக்க முடியாது. இன்றைக்கு அகமுடையாரை தரம் தாழ்த்தி பதிவிடும் நபர்களும் இந்த பெருமாள் தேவரின் எழுத்துகளை ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் வாசிக்காமல் இருந்திருக்கவே முடியாது. இதன் மூலமாகவே எழுத்தில் யார் ஆளுமை செலுத்துகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கலாம்.

முத்துராமலிங்கத் தேவர் தன் சொத்துகளை பிரித்து பலருக்கும் கொடுத்த போது, அதை ஓர் அறக்கட்டளையாக்க வேண்டுமென மெனக்கெட்டு செயல்படுத்தி காட்டியவர் ஏ.ஆர்.பெருமாள் தேவர். அருப்புக்கோட்டையில் இராமுத்தேவரின் மகனாக அவதரித்த இவர், பதிமூன்றாம் வயதிலேயே அரசியலில் காலடி பதித்து இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1971, 1974ம் ஆண்டுகளில் அருப்புக்கோட்டை தொகுதியில் வெற்றி வாகை சூடிய அரு.இரா. பெருமாள் தேவர், அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தேசியத்தலைவராகவும் இருந்தார் என்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமைக்குரிய விசயம்.

இப்படியான ஆளுமையைக் கொண்டு தேசியக்கட்சியில் பணியாற்றி, எழுத்தாளராகவும், அரசியல் வாதியாகவும், பொதுவுடைமை சித்தாந்தவாதியாகவும், கொள்கை பிடிப்போடு கடைசிவரை திகழ்ந்த ஏ.ஆர்.பெருமாள் தேவரின் 19ம் ஆண்டு நினைவேந்தல் (17.05.1921 - 21.04.1998) இன்று! பெருமைமிகு பெருந்தமிழருக்கு அடியேனின் புகழ் வணக்கம்!

சமகால அரசியலில் மொழி திணிப்பு!


ஈழம் ஒருகாலத்தில் தமிழர் மண். கலிங்கமென்ற ஒரிசாவிலிருந்து பெரும்படையோடு நாடுகடந்து இடம்பெயராமல் இருந்திருந்தால் அங்கும் அனைத்து ஊர்களின் பெயர்களும் இன்றளவும் தமிழிலேயே இருந்திருக்கும். ஆனால் பல சூழ்ச்சிகளால் இனக்கலப்பு ஏற்பட்டு உருவான பெளத்த சிங்கள இனவாதிகளால், ஈழமண்டலத்தின் பெரும்பாலான பகுதிகள் சிங்களப்பெயர்களோடு தான் மொழிமாற்றப்பட்டு இருக்கின்றன. விடுதலைப் புலிகளால் வடகிழக்கு பகுதிகள் மட்டும் கொஞ்சம் தமிழில் தாக்குபிடித்திருந்தது. அதிலும் கூட அழகான யாழ்பாணம் என்ற பெயரும் 'ஜப்னா'வாக உருமாறியதும் மொழியழிப்பின் அடையாளமே.

இதில் தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கா என்ன? எங்கள் வேல்நெடுங்கன்னி, வேளாங்கன்னி ஆனது; திருவல்லிக்கேணி, ட்ரிப்லிக்கேன் ஆனது; செங்குன்றம், ரெட்ஹில்ஸ்; பாரிமுனை, பாரீஸ் கார்னர் என பல இடங்களிலும் மேற்கத்திய மொழி மாற்றம். அதுபோல எங்கள் திருமறைக்காடு, வேதாரண்யம் ஆனது; எங்கள் மயிலாடுதுறை, மாயவரம் ஆனது; முதுகுன்றம், விருத்தாச்சலம் ஆனது. இப்படியாக ஆங்கில / சமகிருத மொழிதிணிப்பு எல்லா ஊர்களிலும் அரங்கேறி பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன.

தமிழனால் தமிழர்களை வைத்து கட்டிய பெருங்கோவில்களிலெல்லாம், சமகிருத மொழியால் தான் முதன்மை பூசை. தமிழ் தெரியாத கடவுள்கள் தமிழ்நாட்டில் தான் அதிகமுண்டு. அதை தட்டிக்கேட்ட ஆறுமுகசாமி போன்ற தமிழர்கள், வானிலிருந்து அனுப்பட்டதாக கருதப்படும் தீட்சிதர்களால் விரட்டி அடித்து இன்றவரே விண்ணிற்கே சென்றுவிட்டார். அந்த தில்லை சிதம்பரம் கோவிலில் பட்டியல் சாதியை சேர்ந்தவரான நந்தனார் சென்ற வழியையே அடைத்து வைத்து ஆளுமை செய்கிறது, யாராலும் பேசப்படாத மொழியான சமகிருத ஏகாதிபத்தியர்களால். இதுதான் இங்கு நிகழ்ந்த, நிகழும் நிலவரம்.

ஆட்சி மொழியாக்கக்கூடிய எல்லா தகுதியும் இருந்தும் புறக்கணிப்பட்ட தமிழ் மொழியை பேசும் தமிழ்நாட்டின் சாலையெங்கும் கூட ஹிந்தியில் மைல்கற்களை அமைத்து வருகிறது ஹிந்திய அரசு. இப்படியான மொழியழிப்பு கொள்கைகள் எல்லாவற்றோடும் ஒத்துப்போகும் சீனாவை மட்டும் ஏன் கண்டிக்க வேண்டும்? என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் தோன்றுவது இயல்பான ஒன்று. இந்த எதார்த்ததை புரிந்து கொண்டாலே அருணாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனத்தில் பெயர் வைப்பத்திருக்கும் சீனாவின் செயல்பாடும் தவறில்லையென்றே தோன்றும்.

20 ஏப்ரல் 2017

மாமன்னர் சின்னமருதுபாண்டியருக்கு 264வது புகழ்வணக்கம்!



சிவகங்கையை கி.பி.1780 முதல் கி.பி.1801 வரை ஆண்ட மருதிருவரில் ஒருவரான மாமன்னர் சின்ன மருது அவர்கள் பிறப்பெடுத்த நாள் இன்று. பூமாரங் என்ற வளரி வீச்சை பற்றி இன்று உலகெங்கும் பேசப்பட்டாலும், அதை வெள்ளைக்காரனுக்கு கற்றுக்கொடுத்து ஆவணப்படுத்திய பெருமைக்கு காரணமாக இருந்திருக்கிறார் சின்ன மருது. உருவத்தில் கருத்த நிறத்திலும், உள்ளத்தில் வெள்ளையாகவும் திகழ்ந்த சின்னமருதுவின் சிவந்த இரத்தம் தான் சிவகங்கை மண்ணின் வீரத்தின் அடையாளமாக இன்றளவும் திகழ்கிறது.

உலகிலேயே முதன் முறையாக ஐரோப்பியர்களுக்கு எதிராக திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கத்திலும் கி.பி.1801 ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி 'ஜம்புத்தீவு பிரகடனம்' வெளியிட்ட பெருமைக்குரியவர் சின்ன மருது. தன் குடிவழி முழுக்க அழித்தொழிக்கும் எண்ணத்தில் செயற்பட்ட ஐரோப்பிய இழிபிறவிகள் கூட்டத்தை சேர்ந்த வெல்ஷ் என்ற வெள்ளையன் கூட சின்னமருதுவின் மகன் துரைசாமியை இயலொணா நிலையில் கண்டதை பற்றியும், சின்னமருதுவின் வீரத்தை பற்றியும் கண்ணீர் ததும்ப பதிவு செய்திருக்கிறார்.

கரடி கருத்தான் போன்ற துரோகிகளின் கூட்டத்தினரால் காட்டிக்கொடுக்கப்பட்டும் கூட, தாங்கள் கட்டிய காளையார்கோவில் கோபுரம் தகர்க்கப்படக் கூடாதென்பதற்காக தன்னுயிரை கொடுக்க முன்வந்தார் சின்னமருது. தங்கள் மன்னன் மட்டுமா இறப்பது? அவர்களோடு நாங்களும் செத்து மடிகிறோமென சூளுரைத்து 500க்கும் மேற்பட்ட பல்வேறு இனக்குழுக்களை சேர்ந்தவர்களும் 1801ம் ஆண்டு அக்டோபர் 24ல் உயிர்கொடை தந்தனர் என்பது வரலாற்றில் மறக்க முடியாத சுவடுகளாகி போனது. அப்படிப்பட்ட தியாகத்திற்கும், வீரத்திற்கும், ஆளுமைக்கும் பெயர்போன சின்னமருதுவை இந்நாள் மட்டுமின்றி எந்நாளும் நெஞ்சில் வைத்து போற்றுவோம்!

எம் முப்பாட்டான் மாமன்னர் சின்னமருதுபாண்டியருக்கு 264ம் ஆண்டு புகழ் வணக்கம்!

15 ஏப்ரல் 2017

ஒரு நாயகன் உதயமாகிறான்!



யாரை எத்தனை மாதங்கள் காதலிப்பது என்பதை கூட தனிமனித உரிமையோடு அணுகிய நயன்தாராதான், இனிவரும் நாட்களில் யாரோடு ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டுமென்பதையும் முடிவு செய்ய வேண்டுமே தவிர; நாம் அல்ல! 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், தோன்றின் புகழோடு தோன்றுக' என்ற குறள்களுக்கேற்ப சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் சரவணன் சொன்னதில் எந்த தவறுமில்லை; பவர் ஸ்டார் சீனிவாசன் கூட சமீபத்தில் சூப்பர் ஸ்டார் தான் எனக்கு போட்டியென சொன்னதையும், முன்பொரு தடவை இதே மாதிரி சொல்லிருந்த லிவிங் ஸ்டார் லிவிங்ஸ்டனையெல்லாம் கடந்து தானே வந்திருக்கிறோம். வேகமாக சுழலும் காலச்சக்கரத்தில் தன்னை நிலைநிறுத்த தெரிந்தவை மட்டுமே தாக்குபிடிக்குமென்பதற்கு 'துள்ளுவதோ இளமை' தனுஷ் கூட ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு தான். இதுவும் கடந்து போகும்!

14 ஏப்ரல் 2017

பீம்ராவ் அம்பேத்கருக்கு புகழ் வணக்கம்!



"ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக்கப்பட்ட மனோன்மணீயம் நூலிலுள்ள நீக்கப்பட்ட பாடல் வரி இது. வழக்கொழிந்த ஆரியம் என்ற உண்மையை சொன்னதற்கே அவ்வரி தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இப்படி கோலோச்சிக்கொண்டிருந்த அப்போதைய ஆரிய பார்ப்பனீய அரசியல் சூழலில் கூட, "நான் என்ன செய்ய வேண்டும் என்பதே என் கவலை. அடுத்தவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று யோசிப்பது அல்ல!" என அழுத்தம் திருத்தமாக சொல்லி தனது கொள்கையிலிருந்து கடைசிவரை மாறாமல் அரசியலில் பயணித்து இன்றளவும் உயிர்ப்போடு அடையாளப்பட்டு கொண்டிருக்கும் பிராமணரல்லாத பீமராவ் அம்பேத்கர் அவர்களுக்கு பிராமணரல்லாதவனாய் புகழ் வணக்கம்!

10 ஏப்ரல் 2017

தேர்தல் என்னும் ஏமாற்றுவேலை!



இராமானுஜமும், சாணக்கியனும் கூட தினகரனிடம் தோற்றுவிடுவார்கள் போல! (89,65,80,000ரூபாய் ÷ 4000ரூபாய் = 2,24,145வோட்டுகள்.)  கண்டிப்பா 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.

தேர்தல் விதிமுறை மீறப்பட்டதாக சொல்லி, தேர்தலை ரத்து செய்வது தேவையேயில்லை. யார் அந்த விதிமுறைகளை மீறினார்களோ, அது சம்பந்தமான ஆதாரங்கள் இருந்தால் அதை வைத்தே அவர்களை வேட்பாளர்கள் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்துவிட்டு மீதமுள்ளவர்களை களத்தில் வைத்து தேர்தலை நடத்தி விடலாம். யாரோ ஒரு வேட்பாளர் வீதிமீறி இருப்பதால், ஒட்டுமொத்த தேர்தலை நிறுத்துவது வீண்வேலை. நேர்மையான முறையில் களம்காணும் அத்தொகுதியின் மற்ற வேட்பாளர்கள் மட்டும் ஏமாளிகளா என்ன? இப்படி தேர்தலை ரத்து செய்வதனால் பண விரயம்; காவலர்கள் / அலுவர்களின் நேர விரயம்;

இப்படியாக எல்லா தேர்தலையும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் என ஒத்திவைத்தே சென்றால் யாருக்கு லாபம்? மீண்டுமொருமுறை இதைவிட அதிகமாக பணப்பட்டுவாடா செய்வார்கள். அவர்களுக்கு பயமே வராது. ”பணத்தை அள்ளி வீசுவோம், நிச்சயமாக தேர்தலில் வெற்றி கிடைத்து விடும். இல்லையென்றால் தேர்தலே தள்ளி போய்விடும்!” என ஒவ்வொரு வேட்பாளரும் நினைத்து விட்டார்கள். தேர்தல் முறையிலான மக்களாட்சி என்பது அதன் மரியாதையையே இழந்து விடுமே?!

தினகரன் தரப்பு தான் 89 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பட்டுவாடா கொடுத்தது என்பதற்கான ஆதாரம் தேர்தல் ஆணையத்திடம் இருக்குமேயானால், அதை வைத்தே தினகரனை இந்த தேர்தல் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யலாமே? ஏன் அதை தேர்தல் ஆணையம் செய்யவில்லை? அதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லையெனில் அதை எதிர்க்காமல் இருப்பது ஏன்? தேர்தல் ஆணையம், சி.பி.ஐ. போன்றவை தன்னாட்சி கொண்ட தனி அதிகாரமுள்ள ஆளும் அரசாங்கத்தின் சார்பற்ற அரசு அமைப்புகள் என்ற மாயையும் இதுபோன்ற நிகழ்வுகளால் சமீப காலமாக சாமானியர்களின் பொதுபுத்தியிலிருந்து சுக்குநூறாய் உடைத்தெறியப்படுகிறது.

07 ஏப்ரல் 2017

கருப்பு இம்மண்ணின் பெருமைமிகு அடையாளம்!



நிறத்தால் கருப்பானவன் என்பதில் எனக்கு பெருமையே. இம்மண்ணின் பூர்வகுடிகளின் இயல்பான நிறமே கருப்பு தான். அதனால் பிறப்பால் இம்மண்ணின் மைந்தனென அடையாளப்படுவதும் கூட இந்த கருப்பு தான். ஆரியர்கள் போன்ற அந்நியர்கள் தான் கருப்பில்லாத நிறத்தில் மனம் முழுக்க கருத்த எண்ணங்களோடு எம்மண்ணை சூழ்ச்சியால் ஆக்கிரமித்தனர். அரப்பா நாகரீகத்தை அழித்தொழித்த வரலாற்று பெருமையை தன்னகத்தே கொண்டவர்களின் வழிவந்த தருண்விஜய் போன்றோர்கள், எம்மைப்போன்ற கருப்பர்களோடு சகித்துக்கொண்டு எம் மண்ணில் ஏன் வாழ/ஆள வேண்டும்? கைபர் போலான் கணவாய் வழியே கால்நடையாக நாடோடியாய் கடந்து வந்தது போலவே, இப்போதும் மீண்டும் தங்களது சொந்த பகுதிக்கே கிளம்பிச்செல்லலாமே?

ராமனும், கண்ணனும் என்ன நிறமென்பதை சகிப்புத்தன்மையுடைய வந்தேறிகள் நினைவூட்டிக்கொள்ள வேண்டும். கலப்பில்லாத நிறம் கருப்பு என்பதையும் இனிமேலாவது அந்த அந்நியர்கள் உணர வேண்டும். "இன்றைய ஹிந்தியா முழுமைக்குமுள்ள நிலத்திற்கு சொந்தக்காரர்கள், இம்மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி தமிழர்கள் தான்!" என்பதை 'வந்தேறி' பற்றிய கேள்விக்கு, நிறத்தால் சிவப்பாய் இருந்த பீமராவ் அம்பேத்கர் அன்றைக்கே இவ்வுண்மையை ஊரறிய சொல்லிருப்பதே தமிழர்களின் பாரம்பரியத்திற்கான சாட்சி. வந்தேறிகளே எங்களையும், எம் மண்ணையும், எம் பண்பாட்டையும், எம் ஆன்மீகத்தையும், சுரண்டியது போதும்; எங்களைப்போன்ற கருப்பர்களை விட்டு வெளியே கிளம்புங்கள்!

சிவப்பாய் இருக்கும் இவர்கள் செய்யும் கூத்துகளுக்கெல்லாம் முட்டுக்கொடுக்கின்ற தமிழக பாஜக தலைமையாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், தற்பொழுது தலைமையாக இருக்கும் தமிழிசை செளந்தரராஜனுக்கும் இல்லாத சகிப்புத்தன்மையா தருண் விஜய்க்கு இருக்கிறது? வேண்டுமென்றால், சிவப்பாய் இருக்கின்ற சு.சுவாமியையோ, ஹெச்.ராஜாவையோ இங்கே தலைமையாக்குங்கள் பார்ப்போம். 'கருப்பு' தான் இம்மண்ணின் அடையாளம். அதை நாளைவொருநாள் தமிழக தலைமை பதவிக்கான சரியான தலைவராக (ஒருவர்) வரும்போது 'கருப்பை' பற்றி தருண் விஜய் புரிந்து கொள்வார்.

02 ஏப்ரல் 2017

தமிழகத்தை ஆளப்போகும் விஷால் ரெட்டிக்கு வாழ்த்துகள்!



தமிழ் திரைத்துறைக்கு சம்பந்தப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராக தெலுங்கரான விஷால் ரெட்டி ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டார்; இப்போது தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலிலும் விஷால் ரெட்டியே வெற்றி பெற்று தலைவராகவும் ஆகிவிட்டார். அடுத்து வழக்கம்போல தமிழர் பெயரிலோ, திராவிடர் பெயரிலோ ஒரு கட்சியை ஆரம்பித்து வருங்கால தமிழக முதலமைச்சராக வேண்டியதுதான் மிச்சமிருக்கிறது. புரட்டாசி தளபதி, புண்ணாக்கு தளபதியென ப்ளக்ஸ் பேனர் வைத்து காலில் விழுந்துகிடக்க காத்திருக்கிறது அடிமைகளின் பொதுபுத்தியை கொண்ட தமிழினம்.

தமிழர்களுக்கு தலைவனாக தமிழனுக்கு தகுதி இல்லையென்ற பெரும்பான்மை சாமானியர்கள் கருத்துருவாக்கத்தை உடைக்கவே வெள்ளையாக இருக்கிற தமிழரல்லாத அந்நியர் வேறு யாரோ சொன்னால் தான் எடுபடும் நிலை இங்குள்ளது. அதுபோலவே சண்டக்கோழி, திமிரு, மருது போன்ற தென் தமிழகம் சார்ந்த கதையில் நடித்த ஒரே காரணத்தினாலே விஷால் ரெட்டி கூட, இங்குள்ளவர்களுக்கு தெக்கத்திக்காரனாகி விடுகிறார். மேலும், மலையாளியையும், கன்னடனையும் தலைவனென தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் இந்த மாதிரியான செம்மறியாட்டு அடிமைகளை அரசாள விஷால் ரெட்டி போன்ற தெலுங்கன் தான் லாயக்கு.

வாழ்த்துகள் விஷால்!