21 ஏப்ரல் 2017

சமகால அரசியலில் மொழி திணிப்பு!


ஈழம் ஒருகாலத்தில் தமிழர் மண். கலிங்கமென்ற ஒரிசாவிலிருந்து பெரும்படையோடு நாடுகடந்து இடம்பெயராமல் இருந்திருந்தால் அங்கும் அனைத்து ஊர்களின் பெயர்களும் இன்றளவும் தமிழிலேயே இருந்திருக்கும். ஆனால் பல சூழ்ச்சிகளால் இனக்கலப்பு ஏற்பட்டு உருவான பெளத்த சிங்கள இனவாதிகளால், ஈழமண்டலத்தின் பெரும்பாலான பகுதிகள் சிங்களப்பெயர்களோடு தான் மொழிமாற்றப்பட்டு இருக்கின்றன. விடுதலைப் புலிகளால் வடகிழக்கு பகுதிகள் மட்டும் கொஞ்சம் தமிழில் தாக்குபிடித்திருந்தது. அதிலும் கூட அழகான யாழ்பாணம் என்ற பெயரும் 'ஜப்னா'வாக உருமாறியதும் மொழியழிப்பின் அடையாளமே.

இதில் தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கா என்ன? எங்கள் வேல்நெடுங்கன்னி, வேளாங்கன்னி ஆனது; திருவல்லிக்கேணி, ட்ரிப்லிக்கேன் ஆனது; செங்குன்றம், ரெட்ஹில்ஸ்; பாரிமுனை, பாரீஸ் கார்னர் என பல இடங்களிலும் மேற்கத்திய மொழி மாற்றம். அதுபோல எங்கள் திருமறைக்காடு, வேதாரண்யம் ஆனது; எங்கள் மயிலாடுதுறை, மாயவரம் ஆனது; முதுகுன்றம், விருத்தாச்சலம் ஆனது. இப்படியாக ஆங்கில / சமகிருத மொழிதிணிப்பு எல்லா ஊர்களிலும் அரங்கேறி பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன.

தமிழனால் தமிழர்களை வைத்து கட்டிய பெருங்கோவில்களிலெல்லாம், சமகிருத மொழியால் தான் முதன்மை பூசை. தமிழ் தெரியாத கடவுள்கள் தமிழ்நாட்டில் தான் அதிகமுண்டு. அதை தட்டிக்கேட்ட ஆறுமுகசாமி போன்ற தமிழர்கள், வானிலிருந்து அனுப்பட்டதாக கருதப்படும் தீட்சிதர்களால் விரட்டி அடித்து இன்றவரே விண்ணிற்கே சென்றுவிட்டார். அந்த தில்லை சிதம்பரம் கோவிலில் பட்டியல் சாதியை சேர்ந்தவரான நந்தனார் சென்ற வழியையே அடைத்து வைத்து ஆளுமை செய்கிறது, யாராலும் பேசப்படாத மொழியான சமகிருத ஏகாதிபத்தியர்களால். இதுதான் இங்கு நிகழ்ந்த, நிகழும் நிலவரம்.

ஆட்சி மொழியாக்கக்கூடிய எல்லா தகுதியும் இருந்தும் புறக்கணிப்பட்ட தமிழ் மொழியை பேசும் தமிழ்நாட்டின் சாலையெங்கும் கூட ஹிந்தியில் மைல்கற்களை அமைத்து வருகிறது ஹிந்திய அரசு. இப்படியான மொழியழிப்பு கொள்கைகள் எல்லாவற்றோடும் ஒத்துப்போகும் சீனாவை மட்டும் ஏன் கண்டிக்க வேண்டும்? என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் தோன்றுவது இயல்பான ஒன்று. இந்த எதார்த்ததை புரிந்து கொண்டாலே அருணாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனத்தில் பெயர் வைப்பத்திருக்கும் சீனாவின் செயல்பாடும் தவறில்லையென்றே தோன்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக