தேர்தல் என்னும் ஏமாற்றுவேலை!இராமானுஜமும், சாணக்கியனும் கூட தினகரனிடம் தோற்றுவிடுவார்கள் போல! (89,65,80,000ரூபாய் ÷ 4000ரூபாய் = 2,24,145வோட்டுகள்.)  கண்டிப்பா 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.

தேர்தல் விதிமுறை மீறப்பட்டதாக சொல்லி, தேர்தலை ரத்து செய்வது தேவையேயில்லை. யார் அந்த விதிமுறைகளை மீறினார்களோ, அது சம்பந்தமான ஆதாரங்கள் இருந்தால் அதை வைத்தே அவர்களை வேட்பாளர்கள் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்துவிட்டு மீதமுள்ளவர்களை களத்தில் வைத்து தேர்தலை நடத்தி விடலாம். யாரோ ஒரு வேட்பாளர் வீதிமீறி இருப்பதால், ஒட்டுமொத்த தேர்தலை நிறுத்துவது வீண்வேலை. நேர்மையான முறையில் களம்காணும் அத்தொகுதியின் மற்ற வேட்பாளர்கள் மட்டும் ஏமாளிகளா என்ன? இப்படி தேர்தலை ரத்து செய்வதனால் பண விரயம்; காவலர்கள் / அலுவர்களின் நேர விரயம்;

இப்படியாக எல்லா தேர்தலையும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் என ஒத்திவைத்தே சென்றால் யாருக்கு லாபம்? மீண்டுமொருமுறை இதைவிட அதிகமாக பணப்பட்டுவாடா செய்வார்கள். அவர்களுக்கு பயமே வராது. ”பணத்தை அள்ளி வீசுவோம், நிச்சயமாக தேர்தலில் வெற்றி கிடைத்து விடும். இல்லையென்றால் தேர்தலே தள்ளி போய்விடும்!” என ஒவ்வொரு வேட்பாளரும் நினைத்து விட்டார்கள். தேர்தல் முறையிலான மக்களாட்சி என்பது அதன் மரியாதையையே இழந்து விடுமே?!

தினகரன் தரப்பு தான் 89 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பட்டுவாடா கொடுத்தது என்பதற்கான ஆதாரம் தேர்தல் ஆணையத்திடம் இருக்குமேயானால், அதை வைத்தே தினகரனை இந்த தேர்தல் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யலாமே? ஏன் அதை தேர்தல் ஆணையம் செய்யவில்லை? அதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லையெனில் அதை எதிர்க்காமல் இருப்பது ஏன்? தேர்தல் ஆணையம், சி.பி.ஐ. போன்றவை தன்னாட்சி கொண்ட தனி அதிகாரமுள்ள ஆளும் அரசாங்கத்தின் சார்பற்ற அரசு அமைப்புகள் என்ற மாயையும் இதுபோன்ற நிகழ்வுகளால் சமீப காலமாக சாமானியர்களின் பொதுபுத்தியிலிருந்து சுக்குநூறாய் உடைத்தெறியப்படுகிறது.

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment