29 அக்டோபர் 2019

ஆழ்துளை கிணறுக்கு பின்னாலுள்ள அரசியல்!



ஆழ்துளை கிணறை மூடாமல் இருந்தது யார் தவறு? இதற்கு மேல் ஓர் அரசாங்கம் என்னதான் செய்ய முடியும்? இராணுவத்தை ஏன் அழைக்கவில்லை? மத்திய பேரிடர் மீட்புப்படையை தாமதித்து அழைத்தது ஏன்? ஆகாரம் தண்ணீர் இல்லாமல் நான்கு நாட்களாக ஒரு குழந்தை எப்படி உயிரோடு இருக்கும்? இன்னும் எத்தனையோ ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமலேயே திறந்து தான் கிடக்கின்றன; அத்துறைக்கான அரசு ஊழியர்கள் ஏன் இதையெல்லாம் கவனித்து நடவடிக்கை எடுக்கவில்லை? ஊடகங்களின் வாயிலாக காதில் பூவை சுற்றி நம்மை ஏமாற்றி விட்டனர்; குழந்தை விழுந்த அன்றே இறந்திருக்குமல்லவா? அரசிற்கு பழிச்சொல் வரதாவாறு என்னென்ன செய்ய முடியுமோ அதைத்தானே செய்ய முடியும்? அந்த ஆழ்துளை கிணறை மூடாமலிருந்த அந்த குடும்பத்தினரை கைது செய்யுமா அரசு?இந்த உயிரிழப்பிற்கு எத்தனை லட்சம் இழப்பீடு கொடுக்கலாம்? சந்திராயன், மங்கல்யான் என விண்ணுக்குள் நுழைய முடிந்த இவர்களால், நூறடி மண்ணுக்குள் நுழைய முடியவில்லையா?

இப்படியாக ஆளாளுக்கொரு கேள்விக்கணைகளும், முன்முடிவுகளும் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.

சுர்ஜித் என்ற பெயருக்கு பின்னாலுள்ள வில்சன் தான் இங்கே மிகநுட்பமாக அரசியலாக்கப்படுகிறது. வாட்சப் குழுக்களில் ஃபார்வார்டு செய்யப்பட்ட, ஆழ்துளை கிணறு மீட்பு வழிகளுக்கான அநேக பரிந்துரைகள் ஆலோசிக்கப்பட வேண்டியவைகள் தான். இதே போன்றதொரு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை சீன பாதுகாப்பு படையினர் எளிய தொழிற்நுட்பம் வாயிலாக சில நிமிடங்களில் மீட்டெடுத்த காணொளிகள் இன்னும் நமக்கு பல பாடங்களை சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ட்விட்டர் டாப் ட்ரெண்டிங் வாயிலாக மோடி, ராகுலின் அனுதாபத்தை தவிர வேறேதும் நடந்ததாக தெரியவில்லை. இது தொடர்பாக மற்ற மாநிலங்களில் எவ்வித அதிர்வலைகளும் ஏற்படவில்லை.

பின்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா என பல நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் சென்று அங்குள்ள தொழில்நுட்பங்களை அறிந்து வந்த முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர் பெருமக்கள், ஏன் ஆழ்துளை கிணற்றை மறந்து போனார்கள்? 'அறம்' என்ற திரைப்படம், சமீபத்தில் நினைவூட்டியும் கூட இன்னமும் பல ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமலேயே கிடக்கின்றன என்பதுதானே உண்மை.

புதிய கருவிகளையோ, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளையோ வெளிக்கொண்டு வரும் எளிய விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்த வேண்டியது அரசின் தலையாய கடமை. ஆனால், அவர்களை உதாசீனப்படுத்தி அலைய விடுவதாலேயே அவர்களின் அறிவின் வெளிப்பாட்டில் உருவான கண்டுபிடுப்புகளெல்லாம் அடுத்த நாட்டின் அரசுடைமையாகி விடுகிறது.

கடந்த நான்கு நாட்களும் பலரது தூக்கங்களை கலைத்து, நேரலை வர்ணனை செய்து இறந்த சடலத்தை உயிரோடு இருக்கலாமென சொல்லிச்சொல்லியே தங்களது டி.ஆர்.பி. ரேட்டிங்கை போட்டிப்போட்டு ஏற்றிக் கொண்டன அனைத்து செய்திச்சேனல்களும். நாம் எதை பார்க்க வேண்டும்? எதை நோக்கி சிந்திக்க வேண்டும்? எதற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டுமென்பதை இந்த ஊடகங்களே முடிவு செய்கின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்று. எல்லாவற்றிற்கும் கருத்துச்சொல்லிகளாக உருமாறிப்போன பத்திரிகையாளர்கள், தமிழ்நாட்டில் தான் அதிகமிருப்பதாக இம்மாதிரியான செய்திச்சேனல்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

#SaveSurjith #PrayforSurjith #RipSurjith என ஹாஷ்டேக்கில் பதிவிட்டு கடந்து செல்வதோடு இல்லாமல், இம்மாதிரியான விபத்தை தடுப்பது எப்படியென்று ஊடகங்களை பேச வைப்பதும், இவ்விபத்துகளால் மரணம் நிகழாமலிருக்க இனிமேல் என்னென்ன வழிமுறைகளை எடுக்க போகிறது இந்த அரசாங்கம் என்ற கேள்விகளை கேட்பதும் நம் கடமை தான். வழக்கம்போல, நாங்கள் எவ்வளோ முயற்சித்தோம் பலனிக்கவில்லையென்ற சினிமாவில் வரும் டாக்டர்களின் பதில் போல சமாளிக்காமல் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் இறங்குவதே ஆள்வோரின் உடனடித்தேவை. மேலும், மக்களின் அனுதாபத்தையும், கண்ணீரையும் தங்களது டீ.ஆர்.பி.க்காக பரபரப்பாக்கும் ஊடகங்களெல்லாம் தங்களைத்தாங்களே திறனாய்வு செய்து திருந்த வேண்டியதும் இப்போதைய தேவை தான். நூறடி ஆழத்திலிருந்து மட்டுமல்ல, இவர்களிடமிருந்தும் மீட்டெடுக்கப்பட்ட சுர்ஜித் வில்சனென்ற அந்த பிஞ்சுக்குழந்தையின் ஆன்மா, இறைவனடியலாவது இனி இளைப்பாறட்டும்.

- இரா.ச. இமலாதித்தன்