இடைத்தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இடைத்தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 ஏப்ரல் 2017

தேர்தல் என்னும் ஏமாற்றுவேலை!



இராமானுஜமும், சாணக்கியனும் கூட தினகரனிடம் தோற்றுவிடுவார்கள் போல! (89,65,80,000ரூபாய் ÷ 4000ரூபாய் = 2,24,145வோட்டுகள்.)  கண்டிப்பா 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.

தேர்தல் விதிமுறை மீறப்பட்டதாக சொல்லி, தேர்தலை ரத்து செய்வது தேவையேயில்லை. யார் அந்த விதிமுறைகளை மீறினார்களோ, அது சம்பந்தமான ஆதாரங்கள் இருந்தால் அதை வைத்தே அவர்களை வேட்பாளர்கள் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்துவிட்டு மீதமுள்ளவர்களை களத்தில் வைத்து தேர்தலை நடத்தி விடலாம். யாரோ ஒரு வேட்பாளர் வீதிமீறி இருப்பதால், ஒட்டுமொத்த தேர்தலை நிறுத்துவது வீண்வேலை. நேர்மையான முறையில் களம்காணும் அத்தொகுதியின் மற்ற வேட்பாளர்கள் மட்டும் ஏமாளிகளா என்ன? இப்படி தேர்தலை ரத்து செய்வதனால் பண விரயம்; காவலர்கள் / அலுவர்களின் நேர விரயம்;

இப்படியாக எல்லா தேர்தலையும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் என ஒத்திவைத்தே சென்றால் யாருக்கு லாபம்? மீண்டுமொருமுறை இதைவிட அதிகமாக பணப்பட்டுவாடா செய்வார்கள். அவர்களுக்கு பயமே வராது. ”பணத்தை அள்ளி வீசுவோம், நிச்சயமாக தேர்தலில் வெற்றி கிடைத்து விடும். இல்லையென்றால் தேர்தலே தள்ளி போய்விடும்!” என ஒவ்வொரு வேட்பாளரும் நினைத்து விட்டார்கள். தேர்தல் முறையிலான மக்களாட்சி என்பது அதன் மரியாதையையே இழந்து விடுமே?!

தினகரன் தரப்பு தான் 89 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பட்டுவாடா கொடுத்தது என்பதற்கான ஆதாரம் தேர்தல் ஆணையத்திடம் இருக்குமேயானால், அதை வைத்தே தினகரனை இந்த தேர்தல் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யலாமே? ஏன் அதை தேர்தல் ஆணையம் செய்யவில்லை? அதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லையெனில் அதை எதிர்க்காமல் இருப்பது ஏன்? தேர்தல் ஆணையம், சி.பி.ஐ. போன்றவை தன்னாட்சி கொண்ட தனி அதிகாரமுள்ள ஆளும் அரசாங்கத்தின் சார்பற்ற அரசு அமைப்புகள் என்ற மாயையும் இதுபோன்ற நிகழ்வுகளால் சமீப காலமாக சாமானியர்களின் பொதுபுத்தியிலிருந்து சுக்குநூறாய் உடைத்தெறியப்படுகிறது.

27 மே 2015

அரசியல் வியாபாரிகளின் கையில் அரசு இயந்திரம்!

அரசியல் வியாபாரம்:

எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து இறுதிவரை நான் விடுதலைப்புலிகள் மீதும், அண்ணன் பிரபாகரன் மீதும் அதீத பற்றுள்ளவன் தான். என்ன மாதிரியோ அல்லது என்னை விடவோ அதிக பற்றுள்ள எத்தனையோ பேரை என் சமகாலத்தில் நான் பார்த்து பழகிருக்கிறேன். ஆனால், திரு.சீமான் ஒரேவொரு தடவை ஈழத்தில் அண்ணன் பிரபாகரனோடு பேசி வந்த ஒரே காரணத்திற்காக, தன் வாய்க்கு வந்ததையெல்லாம் பொது மேடையில் உளறி தள்ளுவதை ஓர் ஈழ ஆதரவாளனாக என்னால் துளி கூட ஏற்க முடியவில்லை. அண்ணன் பிரபாகரன் படத்தை வைகோவுக்கு அடுத்த படியாக பாரிய அளவில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இளந்தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமை திரு.சீமானுக்கு உண்டு. அதற்காக, அவர் சொல்லும் கதையையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பது, அண்ணன் பிரபாகரனுக்கு செய்யும் துரோகமாகும். தமிழக அரசியலில் நல்ல அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள திரு.சீமானுக்கு வாழ்த்துகள். மேலும், திராவிடத்தின் நீட்சியான தமிழ் தேசியத்தை சொல்லி ஆட்சி அமையுங்கள், கெஜ்ரிவால் போல முதலமைச்சர் ஆகுங்கள். என் ஓட்டும், என் வாழ்த்தும் உங்களுக்கு உண்டு. ஆனால் பா.ம.க.வை வன்னியர் சாதி கட்சியென்று சொல்லிக்கொண்டு, நாடர் சாதியை சார்ந்த ஆதித்தனார் அன்று ஆரம்பித்த நாம் தமிழர் கட்சியை இன்றும் வைத்து கொண்டு, வைகுண்டராஜனோடு சேர்ந்து கொண்டு நாடார் சாதி அரசியலை தமிழ்தேசியம் என, அப்பாவி இன உணர்வாளர்களான என் சக இளந்தமிழர்களை தயவு செய்து ஏமாற்றாதீர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்


அரசு இயந்திரம்:


ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தேதிக்கும் ஆர்கேநகர் இடைத்தேர்தல் தேதிக்கும் உள்ள காலஇடைவெளியை கணக்கிடுகையிலேயே தேர்தல் ஆணையத்தின் நடுநிலை புரிகிறது. யார் சொன்னது? நீதித்துறையும், தேர்தல் ஆணையமும் சுயாட்சி அதிகாரம் கொண்டதென்று...? எல்லாமும் அரசியலாகி விட்டது. பணம் தான் அதை ஆட்டி வைக்கிறது. வாழ்க அரசியல்வாதிகளின் வியூகம்!

16 பிப்ரவரி 2015

வருங்கால முதல்வர் வளர்மதி!

ஜெயலலிதாவை விட 46,233 வாக்குகள் அதிகம் பெற்று, ஜெயலலிதாவை விட 55,027க்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திருவரங்கத்தில் வெற்றி பெற்றுள்ள வளர்மதிக்கு வாழ்த்துகள்! வரபோகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுக்கும் 1000/-ரூபாய்க்கு குறையாமல் கொடுத்தால் தான் எந்தவொரு கட்சிக்கும் வெற்றி நிச்சயம் என்பதும் இதன் மூலம் உறுதியாகிறது. ஒரு கழுதையை வேட்பாளாராக்கினாலும் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கும் ராஜதந்திரம் பணத்திற்கு உண்டு என்பதை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டிய தருணமிது.

2011 சட்டசபைத் தேர்தல்:

ஜெயலலிதா (அ.இ.அ.தி.மு.க) 1,05,328 வாக்குகள்
ஆனந்த் (தி.மு.க) 63,840 வாக்குகள்
வித்தியாசம் 41,488 வாக்குகள்

2015 இடைத் தேர்தல் :

வளர்மதி (அ.இ.அ.தி.மு.க) 1,51,561 வாக்குகள்
ஆனந்த் (தி.மு.க) 55,046 வாக்குகள்
வித்தியாசம் 96,515 வாக்குகள்

வருங்கால முதல்வர் வளர்மதிக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!!!