இன்னுமா இருக்கிறது காதல்?இப்போதெல்லாம் காதல் என்பதற்கான விளக்கம் வெறும் ஆண்-பெண் சார்ந்த பாலியல் ரீதியானதாக வரையறுக்கப்பட்டுள்ளது போன்றதொரு மாயையே இங்கே நிலவுகிறது. காதல் என்ற மூன்றெழுத்திற்குள்ளாக, வெறும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத சாதனை சரித்திரமும், சல்லாப சாபக்கேடும் உள்ளடங்கி நிற்கிறது. காதல் யென்ற வசீகரத்தை, அன்பு யென்ற 'மை'தான் மையப்புள்ளியாக இருந்து நம்மை இங்கே ஆக்கிரமிக்க காரணமாய் இருக்கிறது.

அன்பு எல்லோரிடம் காட்டப்பட வேண்டிய ஒன்று தான். ஆனாலும், இந்த அன்பானது பாசத்தையும், பரிவையும், இரக்கத்தையும், நட்பையும் பல பரிமாணங்களில் கொடுத்தாலும் அது முழுமையடைந்ததாக தெரியவில்லை. அன்பின் பரிமாணத்தில் அதிமுக்கியமானதாக காதல் யென்ற ஒன்றே கருதப்படுகிறது. இந்த காதல்தான் பெரும்பாலான உறவுகளை மறக்கடிக்கும் வல்லமை பெற்றது. முன்பின் அறிமுகமில்லாத யாரோ ஒருவரால் கூட நாம்  பரவசப்பட இந்த காதல் முதன்மை காரணமாய் அமைகிறது.


சமீப காலமாக இந்த காதலுக்கு இணையமென்ற களம் இளைஞர்களுக்கான ஒரு பாலமாக அதிவேகமாய் உருவெடுத்து வருகிறது. இணைய பங்காளிப்பாளர்களில், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை தெரியாதவர் வெகுசிலரே இருக்கக் கூடும். முன்பெல்லாம் ஈ-மெயில் கணக்கை தொடங்கவும், அதன் மூலம் மடல் அனுப்பி கருத்துகளை பகிர்ந்து கொள்ளவுமே அதிகம் இணையம் பயன்பட்டது. சில நேரங்களில் உலக - உள்ளூர் நடப்புகளை அறியவும் இணையம் பேருதவியாக அமைந்தது. இப்போதெல்லாம் இணையம் என்பது காதலை பரிமாறிக்கொள்ள மட்டுமே பெரும்பாலானோருக்கு பயன்படுகிறது.


கணினி வாயிலான இணைய இணைப்பு இல்லாதவர்கள், செல்லிடபேசியின் வாயிலாக இணையத்தில் இணைந்து தங்களுக்கான நட்பு வட்டங்களை இணைத்து கொள்கிறார்கள். இந்த நட்பு வட்டங்களானது நாளடைவில் ஒருவித நெருக்கத்தை ஏற்படுத்தித் தருகிறது. குறிப்பாக மாற்று பாலினம் சார்ந்த நாட்பானது பெரும்பாலும் காதலென்று அவர்களே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது.


சென்னையில் மெரீனா கடற்கரையோரம் இந்த காதல்படும் பாடு இருக்கே, அந்த புனிதத்தை வெறும் எழுத்தில் சொல்லி மாளாது. எழுத்தில் மட்டுமே அதை எளிதாக பொதுவில் சொல்லவும் முடியாது. திருச்சி போன்ற மற்ற பெருநகரங்களுக்கு முக்கொம்பு போன்ற சுற்றுலா தளங்களும், தஞ்சை போன்ற சிறு நகரங்களுக்கு பெருவுடையார் கோவில் சுற்று சுவர்களும் தான், இன்றைய காதலை வெகு விமர்சியாக வளர முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இதுபோல ஒவ்வொரு நகரங்களுக்கும் இந்த மாதிரியான ஏதாவதொன்று பின்புலமாக இருந்து இன்றுவரை காதலை வளர்த்துக்கொண்டு தான் இருக்கின்றன.


இப்போதெல்லாம் நாளிதழ்களை, இந்த காதல் சம்பந்தமான பல செய்திகளையே அநேக பக்கங்கள் ஆக்கிரமித்து கொள்கின்றன. பயனுள்ள செய்திகளுக்கு பக்கத்தின் ஏதாவதொரு மூலையில் சிறியதாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த காதல் சார்ந்த வழக்குகள், கொலைகள், இதுபோன்ற குற்றங்களுக்கு முதல் பக்கத்திலும் இடம் கொடுக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக 'கள்ளக்காதல்' யென்ற தலைப்பிடப்பட்ட செய்திகள்தான் அதிகம் பிரசுரமாகின்றன. அதற்குத்தான் வாசகர்கள் மத்தியில் மவுசும் அதிகம் என்பதை புரிந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள், மற்றவர்களது காதலை வைத்து தங்களுடைய காரியத்தையும் வியாபார ரீதியாக பெருக்கி சாதித்து கொள்கிறார்கள்.


ஒருதலை பட்சமான காதல் என்பதெல்லாம் வெகுவாக குறைந்தே விட்டது எனலாம். அந்த மாதிரியான ஒருதலை பட்ச காதலால் இப்போது தற்கொலைகளும் குறைந்து விட்டன. ஏன், இந்த காலத்தில் எல்லோருமே காதலிக்கவே இல்லையா? தோல்வியே அவர்களுக்கு இல்லையா? என்பதெல்லாம் நீங்கள் கேட்க கூடிய ஒன்றுதான். ஆனாலும். இன்றைய காதல் வெறும் கண்ணாமூச்சி ஆட்டம் போலதான். யாரும் யாரையும் தோற்கடிக்கலாம். அதற்காக இங்கே யாரும் துவண்டு போவதில்லை. இப்போதைய பெரும்பாலான காதல்கள், தோல்வியையே சந்திப்பதில்லை. இங்கே தோற்பது, ஓர் ஆணின் தேவை அல்லது ஒரு பெண்ணின் திருப்தி அல்லது இருவரின் கனவு, ஆசை போன்ற இத்தியாதிகள் மட்டுமே. கண்டிப்பாக காதல் தோற்பதில்லை. ஏனெனில் இதெல்லாம் காதலே இல்லை. இதுவொரு சபலம்; அது சல்லாபமாய் மாறி கடைசியில் வேறொரு மாற்றை இருவருமே தேடி கடந்து செல்ல வழி வகுக்கிறது.


இந்த காதல் என்பது இதயத்தில் அம்பு துளைக்கும் மனதியல் சார்ந்ததாக இப்போது இல்லை. இதயம் என்பது இரத்தம் சுத்திகரிப்பு செய்வதை போல, இன்றைய நவீன காதல்களும் மனதில் படிந்திருக்கும் சபலத்தை சுத்திகரிப்பு செய்துக்கொண்டிருக்கிறது. இதுவொரு இளைய தலைமுறையின் உடலியல் சார்ந்த ஒத்திகை நிகழ்வாகி விட்டது. போர் ஒத்திகையில் அநேகமாக யாரும் இறப்பதில்லை. அது போன்றே திருமண ஒத்திக்கையாகிவிட்ட இந்த காதலும், இன்னுமா இருக்கிறது என்ற கேள்வியே என் மனதில் மேலோங்கி எழ செய்கிறது. விதிவிலக்குகள் எல்லாவற்றுக்கும் உண்டு. காதலும் விதிவிலக்கே!