24 ஜூன் 2016

சுவாதி கொலைக்கு பின்னாலும் அரசியல்!

நிகழ்வு 1:

பேஸ்புக்ல ஒரு மணிநேரத்துக்கு ஒரு போட்டோவை அப்லோட் பண்ற பொண்ணுங்களை பார்த்தாலே எரிச்சலாகும். இன்னைக்கு நிலவரபடி, பொண்ணு பேருல ஒரு ஃபேக் ஐடி, ஸ்டேடஸ்ல ஒரேவொரு புள்ளி வச்சாலே இரண்டாயிரம் லைக், ஆயிரம் கமெண்ட், ஐநூறு ஷேர் பண்ற ஆளுக இங்க இருக்காங்க. இந்த லட்சணத்துல தன்னோட போட்டோவை போட்டு சந்தோசப்படுற பொண்ணுங்களும் இருக்கத்தான் செய்றாங்க. அந்த போட்டோவுக்கு, செல்லம், க்யூட், அழகு, சூப்பர்மா, கலக்குறடி, தேவதை, செம்ம, இப்படியாக வழியும் ஆண்கள் ஒருபக்கம் இருக்க, அதை தனக்கான அழகியலின் அளவீடாக எடுத்துக்கொண்டு பெருமை பட்டுக்கொள்ளும் பெண்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்பறம் எவனாவது மனம்பிறழ்ந்தவன் அந்த போட்டோவை மார்பிங் செய்து, பலான வாட்சப்-ஃபேஸ்புக் குரூப்ல ஷேர் பண்ணின பிறகு நீலிக்கண்ணீர் வடித்து என்ன ஆகபோகுது?

ஊசி இடம் கொடுக்காமல் நூல் உள் நுழையவே முடியாது. ஆனால், ஊசிகள் தான் நூலை வலுக்கட்டாயமாக உள்ளே நுழைக்க பெரும் முயற்சிகள் செய்கின்றன என்பதுதான் சமகால எதார்த்தம். இங்கே சொல்லப்பட்டுள்ள எந்த வார்த்தையிலும் பெண்ணடிமைத்தனமோ, ஆணாதிக்கபோக்கோ இல்லை. கமெண்ட்களில் வழியும் ஆண்களோ, போட்டோக்களை பகிர்ந்து தன்னழகை பற்றி யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லாமென அனுமதிக்கும் பெண்களோ, இந்த இருவரிடமும் தவறுள்ளது. ஆனால், பல பிரச்சனைகளுக்கான வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் பெண்களே பெரும்பாலான பாலியல் குற்றங்களுக்கு காரணகர்த்தாக்களா இருக்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது!

நிகழ்வு 2:

சுவாதி கொலைக்கு எதிராக ஒய்.ஜி.மகேந்திரன் பதிவிட்ட சொல்லாடல்களில் தவறு இருக்கிறதே தவிர, அவரது கருத்துகளில் எந்தவொரு தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட சுவாதி, சாதியால் பறையராகவோ - பள்ளராகவோ இருந்திருந்தால், தமிழ்நாட்டின் போரட்டக்களமே வேறுமாதிரியாக இருந்திருக்கும். நாடார்களின் தந்தி தொலைக்காட்சியும் - நியூஸ்7 தொலைக்காட்சியும், உடையாரின் புதியதலைமுறை தொலைக்காட்சியும் தொடர் நேரலையாக இக்கொலைக்காக பல விவாதங்களை ஊடகங்களெல்லாம் நடத்திருக்கும். திருமாவளவன் - கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் அவசர கதியிலான கண்டன பேட்டிகள் அனைத்து அச்சு ஊடகங்களிலும் முதல் பக்கத்தை ஆக்கிரமித்திருக்கும். ம.க.இ.க. - பெ.வி.மு. போன்ற நக்சல் ஆதரவு இயக்கங்களும், மகளிர் சங்கங்களும், மனித உரிமை கழகங்களும், உண்மையறியும் குழுக்களும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும், தமிழ்நாட்டை அனல்பறக்க தெறிக்கவிட்டிருப்பார்கள்.

இதெல்லாம் சுவாதி விசயத்தில் துளி கூட நடக்கவில்லை என்பதற்கான ஒரே காரணம், அந்தப்பெண் பட்டியல் சாதி (தலித்) அல்லாத இதர பிற்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் தானே?! இந்த விசயத்தில் ஒய்.ஜி.மகேந்திரனின் கருத்தோடு மட்டும் ஒத்து போகிறேன்; அவர் பயன்படுத்திய கடினமான சொல்லாடலோடு அல்ல! தன்னோட சாதிக்காரனுக்கு வராத வரைக்கும், ரத்தமெல்லாம் தக்காளிசட்னி தான்!

மெட்ராஸ் படத்துல இரண்டு காட்சிகளில் ஒரு விசயத்தை மிக ஆழமாக பதிந்திருப்பார் இயக்குனர் ரஞ்சித். 'ஒரு பெண்ணை காதலிக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டா, நம்மள செருப்பால அடிச்சாலும் அந்த பொண்ணை விடாம துரத்தணும்; எப்படியாவது கரக்ட் பண்ணிடணும்' இதுதான் அந்த ஒன்லைன் மேட்டர். இப்படியாக இளைஞர்களின் ஆழ்மனதில் நஞ்சு விதையை விதைத்த இயக்குனர் ரஞ்சித் என்னதான் சொல்ல வருகிறார்? என்று ஆராய்ந்தால் ஒன்றுதான் புரிகிறது.

ஒரு பெண் பின்னாடியே ஒருத்தன் விடாப்பிடியாக துரத்தி துரத்தி காதலிக்கிறான்னு வச்சிப்போம். அந்த பொண்ணுக்கு இவன் மேல கொஞ்சம் கூட விருப்பமே இல்லாமல், அவனிடம் நாகரீகமாக சொன்னாலும், கோபமாக சொன்னாலும், அந்த பெண்ணை விட்டுவிட்டு ஒதுங்கிவிட கூடாது. திரும்ப திரும்ப அந்த பொண்ணை டார்ச்சர் பண்ணி, மிரட்டியாவது காதலை சம்மதிக்க வைக்க ட்ரை பண்ணணும். முடியாத பட்சத்தில், இந்த மணிகண்டன் மாதிரியான நபர்கள் சொன்னதுபோல, 'கோபத்துல உணர்ச்சி வசப்பட்டு கொன்னுடணும்!' இதுதான் ரஞ்சித்தின் ஆண்டைகளை பொசுக்குற கூட்டத்திற்கான செய்தி. ஆனால் இந்த சுவாதி விசயத்தில் பொசுக்க மறந்துவிட்டு, உணர்ச்சி வசப்பட்டு குத்திட்டாய்ங்க. அவ்ளோதான் வித்தியாசம்.

த்தூ...

22 ஜூன் 2016

இனிய வாழ்த்துகள் இளைய தளபதி!

"அவமானங்களை சேகரித்து வை; வெற்றி உன் வசமாகும்!" - இந்த வாசகம் இளையதளபதி விஜய்க்கு தான் கச்சிதமாக பொருந்தும். அவர் சினிமா துறைக்கு வந்தது முதற்கொண்டு, இப்போது வரையிலும் அவரை விமர்சிக்காத வண்டு சிண்டுகளே கிடையாது. சமூக ஊடகங்கள் தலையெடுத்ததற்கு பின்னால், விஜயை எந்தளவுக்கு தரம் தாழ்ந்து விமர்சிக்க முடியுமோ அந்தளவுக்கு இழிவுபடுத்தி வருகின்றனர் என்பது விஜய் உள்பட அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். விமர்சனம் தான் தன்னை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என்பதை தெளிவாக புரிந்து கொண்ட விஜய், இவற்றையெல்லாம் கண்டு சோர்வடைந்தது இல்லை.

கன்னடரான ரஜினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அதே கூட்டம், பச்சைத்தமிழனான விஜயை மட்டும் திட்டமிட்டே தமிழ்நாட்டில் அவமதிக்கிறது. ஒரு கமர்சியல் நடிகனாக, டான்ஸ் - ஃபைட் - காமெடி - செண்டிமெண்ட் என விஜயிடம் அனைத்துமே இருக்கிறது. ஆனாலும் அதையே குறை கூறி விஜயை விமர்சிக்கின்றனர் இணையதளவாசிகள். இந்த விசயத்தில் விஜய் தெளிவாகவே இருக்கிறார். 'தன்னுடைய படம் ரசிகர்களுக்கானது; அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவே படம் நடிக்கிறேன்' என்பதே அவரது அளவீடாக இருக்கிறது.

43வது வயதிலும் இளைய தளபதியாகவே உடலை பராமரிக்கும் விஜய்க்கு, ஒவ்வொரு படத்திலும் கெட்டப் மாற்றி கமல் - விக்ரம் போல உலக நாயகனாக உருவெடுக்கும் ஆசையெல்லாம் இல்லை; ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் குட்டி சுட்டீஸ்களுக்கு சூப்பர் ஸ்டாராக இருப்பதே அவருக்கு திருப்திகரமாக இருக்கிறது. இன்றைக்கு விஜய் மீது மிகவும் இழிவான விமர்சனத்தை வைக்கும் ஒவ்வொரு இணையதள வாசியும், அவர்களது குழந்தை பருவத்தில் விஜயை ரசிக்காமல் இருந்திருக்க முடியாது என்பதுதான் எதார்த்தமான உண்மை. திரையில் ஒரு ஹீரோ தோன்றினால் அவரிடம் என்னென்ன எதிர்பார்ப்போமோ அதையெல்லாம் தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்டு, பாமர ரசிகனின் சூப்பர் ஸ்டாராக திகழும் இளைய தளபதிக்கு என் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

19 ஜூன் 2016

இனிய தந்தையர் திருநாள் வாழ்த்துக்கள்!


ஓர் ஆண் தன்னுடைய வாழ்க்கையின் முழுமைத்துவத்தை புரிந்து கொள்ள ஆரம்பிப்பதே, தனக்கென ஒரு குழந்தை பிறந்ததற்கு பிறகு தான்! அதுவரையிலும், எதிர்காலம் பற்றிய எவ்வித திட்டமிடலின்றி ஊர்சுற்றியாக, சேமிப்பின் முக்கியத்துவத்தை உணராமல் ஊதாரியாக இருந்த அனைத்து ஆண்களும், அப்பா என்ற பதவிக்கு வந்தபின்னால் தனக்கான பொறுப்புகளை உணர்ந்து தன்னை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறார்கள்; எதையுமே பொறுமையாக, கவனமாக, ரொம்பவே யோசித்து செயல்படுத்துகிறார்கள். இளமையின் வேகம் குறைந்து, அனுபவமிக்கவராகவும் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பெருமைகொண்ட மாண்புமிகு அப்பா என்ற பதவியை வகிக்கும் திரு. இரா.சம்பந்த தேவரான என் அப்பாவின் தியாகத்தையும் உழைப்பையும் இந்நாளில் நினைவுகூர்கிறேன். பக்கத்துல தான் அப்பா இருக்காங்க; இருந்தாலும் இந்த வாழ்த்துகளெல்லாம் நேரில் சொல்ல தோனவில்லை. அது பக்தி; பாசம்; பயம்; தலைமுறை இடைவெளி. இப்படி ஆயிரம் அர்த்தம் இருந்தாலும், விலகியே ரசிக்கிறேன் என் அப்பாவை.

இனிய தந்தையர் திருநாள் வாழ்த்துக்கள்!

13 ஜூன் 2016

உண்மையான கபாலி யார்?

ஜூன் 14ல் உலகில் எங்கோவொரு மூலையில் பிறந்த சே குவேராவை கொண்டாடும் அதே வேளையில், எம் டெல்டா மண்ணில் பிறப்பெடுத்த ”வாட்டக்குடி இரணியன் - ஜாம்பவனோடை சிவராமன் - மணலி கந்தசாமி - மலேயா கணபதி” போன்ற தமிழ்குடியான அகமுடையார் குலத்தில் தோன்றிய பொதுவுடைமை போராளிகளையும் போற்றி கொண்டாடுவோம்!

"கலகம் செய்து ஆண்டையரின்
கதை முடிப்பான்

பறையிசை அடித்திட்டு பாட்டு கட்டு
ஏய் இத்தன நாளா கூட்டுக்குள்ள
இனிமே வாரான் நாட்டுக்குள்ள
எதிரிகூட்டம் ஆடி போச்சே

நாங்க எங்க பிறந்தா
அட உனக்கென்ன போடா
தமிழனுக்காக வந்து நின்னவன்
தமிழன் தானடா

மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது"

இந்த பாடல் வரிகளின் மூலம் புரிந்து கொண்டது ஒன்றைத்தான். அது, இப்போது தான் நீண்ட வருட உழைப்பினால் அனைத்து சாதியும் ஒன்றாக தமிழ் தேசிய பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறோம்; ஆனால், அந்த கருத்தியலை உடைக்கிறது கபாலி பாடல் வரிகள். மேட்டுக்குடி, ஆண்டை, போன்ற சக தமிழ் சாதிகளை சேந்த அனைவருமே ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிரி என்பது போலவும், ஈ.வெ.ரா., ரஜினி போல எங்கே பிறந்தாலும் இங்கே பிழைப்புக்காக நடித்தால் அவர்களெல்லாம் தமிழன் தான் என குழப்பம் விளைவிக்கும் புதிய தமிழ் தேசிய கருத்தியலை விதைத்திருக்கிறார் ரஞ்சித்.

'அமைதியா ஒதுங்கி போறதை' பற்றி ரஜினிமுருகன் கிளைமேக்ஸ்ல சிவகார்த்திகேயன் சொல்ற வசனம் தான், கபாலி பாடல் வரிகளை கேட்ட பிறகு நினைவுக்கு வந்து போகிறது. எவனோ ஒரு சாதிக்காரன் என்னைக்கோ செய்த ஆண்டான் - அடிமைத்தனத்தை வைத்து, இத்தனை காலம் கடந்த பின்னாலும் அதே சாதியை சார்ந்த ஒட்டுமொத்த சாதிக்காரனும் அப்படியே இருப்பானென்ற பொதுபுத்தியை ரஜினி போன்ற நடிகனை வைத்து விசம கருத்தை திணிக்கும் ரஞ்சித்தின் சிந்தனை தீ பற்றி கருகட்டும்.

டெல்டாவில் பள்ளர்/பறையர்களை பண்ணையடிமைகளாக பாவித்த தன் சொந்த சாதி தேவர் வீட்டு பண்ணையார்களை எதிர்த்து போராடிய வாட்டாகுடி இரணியன், ஜாம்பவனோடை சிவராமன், மலேயா கணபதி, மணலி கந்தசாமி போன்றவர்களை இம்மண்ணிற்கு கொடுத்த அகமுடையார் இனக்குழுவை சார்ந்தவனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்; ஆனால் ஒரு போதும், ஆண்டையாக இருக்க நினைத்து கூட பார்த்ததில்லை. எதார்த்தம் இப்படி இருக்க, தமிழ் தேசியத்தை குழி பறித்து, பலி போடும் கபாலிக்கள் என்னை போன்ற பலருக்கு தேவையேயில்லை. கபாலி காலியானால் மகிழ்ச்சி!

டெல்டா மண்ணின் பொதுவுடைமை போராளியும், மலேசியாவில் ரப்பர் தோட்டத்தில் பணி புரிந்த தொழிலாளர்களின் உரிமைக்கு குரல் கொடுத்த 'அகில மலேயா தொழிலாளர் சம்மேள'த்தின் தலைவரும், தம்பிக்கோட்டை ஆறுமுகத்தேவரின் மகனுமான, "மலேயா கணபதி" என்ற அகமுடையாரின் வரலாற்றை திருடி, பறையர் வரலாறு போல திரைக்கதையை அமைத்திருக்கிறார் பா.ரஞ்சித். காப்பி அடித்ததற்கு கைமாறாக குறைந்த பட்சம், படத்திற்கான பெயரையாவது 'கணபதி' என வைத்திருக்கலாம்.

கணபதி டா!

கபாலி படத்தின் கதைக்கரு எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள விக்கிபீடியா லிங் மூலம் தெரிந்து கொள்ள முடியும்!

https://ta.wikipedia.org/wiki/எஸ்._ஏ._கணபதி

12 ஜூன் 2016

ஆன்மீகம் எதுவென உணருங்கள்!

நம் எண்ணங்களுக்கு அபூர்வமான ரகசிய சக்தி உண்டு. நாம் எதை நோக்கி அதிகம் கவனம் செலுத்துகிறோமோ, அது நம்மருகே எந்த முயற்சியுமே இல்லாமல் கவர்ந்திழுக்கப்படும். எதை அதிகமாக சிந்திக்கிறாமோ அது தொடர்பான அனைத்தும் நமக்கு வசமாகும். அதற்கு முதன்மையான அடிப்படை தகுதி, நம்பிக்கை மட்டுமே. ஒரு விசயம் கிடைக்குமென நம்பி, அதை கேட்டால், அதை நாம் நிச்சயம் பெற முடியும். இங்கே அதை யாரிடம் கேட்பது என்பதில் குழப்பம் வந்தால், ஒரு கருங்கல்லிடம் கூட கேட்கலாம். ஆனால் சந்தேகமில்லாமல், கேட்க வேண்டும்; கிடைக்குமென்ற ஒற்றை நம்பிக்கையோடு கேட்க வெண்டும். நிச்சயம் அது கிடைத்தே தீரும். தூணிலும் துரும்பிலும் இருக்கும் அந்த பரம்பொருள் நமக்காக வரங்களை கொடுக்க காத்திருக்கிறது. ஆனால், நாம் தான் அதை கவனிக்க தவறிக்கொண்டிருக்கிறோம்.

அந்த பரம்பொருளானது, எந்த மதத்தினாலும் காப்புரிமை வாங்கப்பட்டு, எவராலும் உருவாக்கப்பட்ட இறைவனல்ல. அது இயல்பாகவே நம்மை சூழ்ந்திருக்கும் ஒட்டுமொத்த 'பிரபஞ்சம்' தான். பல்லாயிர கிரகங்கள் உட்பட பலநூறு சூரிய சந்திரன்களையும் பால்வெளியில் பேரண்டமாய் சுமந்திருக்கும் அந்த ஒற்றை கூரையான பிரபஞ்சமே பேரம்பலம். அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் என்பது போல, நம்முள்ளுள்ள உள்ளொளியும் கடவுள் தான்; அந்த கடவுளே சிற்றம்பலம். இதை புரிந்தாலே பரம்பொருள் ரகசியம் எளிதாக நம் சிற்றறிவுக்கு அம்பலமாகி விடும். அதன் பின்னால், அந்த அருட்பெரும் ஜோதியோடு உறவாடி, நாமே கடவுளாகலாம்.

தாய்மொழியில், தமிழ்மொழியால் உரையாட தெரியாதவன் கடவுளாகவே இருக்க முடியாது; அவனை கடவுளென சொல்ல தகுதியுமில்லை; அவன் கடவுளாக இருக்க வாய்ப்புமில்லை. எனவே, சிற்றம்பலமும் - பேரம்பலமும் உறவாடும் போது, அங்கே அரபியோ, ஹீப்ருவோ, சமகிருதமோ எதுவும் தேவையில்லை. ஏனெனில் கடவுளுக்கென மொழியுமில்லை; கடவுளை தொடர்பு கொள்ள மொழியும் தேவையில்லை. "அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லாகி யாங்கு" என்ற திருக்குறளின் வரிகளுக்கேற்ப, பொருளோடு அருளையும் சேர்த்து பேரம்பலத்தானோடு சரணாகதியடைந்து, நீங்களும் கடவுளோடு கடவுளாக ஐக்கியமாகுங்கள். இறைத்தூதர் என்ற யாரையும் கடவுளாக்கி கடைசி வரையில் கடைக்கோடியிலேயே காலம் தள்ளாதீர்கள்.

- இரா.ச. இமலாதித்தன்