27 மார்ச் 2014

ஊடக சாதிவெறி!


தந்தி டிவி முழுக்க முழுக்க தனது நாடார் சாதி பாசத்தை மட்டுமே அடிக்கடி வெளிக்காட்டி கொண்டே இருக்கின்றது. விகடன், தி ஹிந்து, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் தன்னுடைய பார்பனீய சாதி பாசத்தையே காட்டுகின்றது. ஊடகங்கள் சாதிய நீரோட்டத்தில் கலக்க ஆரம்பித்தால், சமுதாயம் தனித்தனியாக பிரித்தாளப்படும்.

அப்போது மிகப்பெரிய சமூகங்கள் பிரிவை வாஞ்சையோடு உபசரித்து, தமிழர் யென்ற ஒற்றுமையை சீர்குலைக்கும் என்ற எதார்த்தம புரிந்துகொள்ளப்படாத வரை இங்கே சமத்துவம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். பெயரளவில் சமத்துவ மக்கள் கட்சி யென்று வைத்துக்கொண்டு நாடார் சாதிக்கான அடையாள கட்சியாக காட்சிப்படுத்தப்படும் சரத்குமாரின் நிலைமையே அனைத்து தலைவர்களும் கையாளாக்கூடும். அப்போது சாதீயம் அனைத்தையும் தீர்மானிக்கும். திராவிடத்தை முற்றிலுமாக அழிக்க முடியாதபோதே, சாதீயம் தலைதூக்கிவிட்டது. இனி திராவிடம் போலவே சாதீயமும் இன்னும் சிலபல ஆண்டுகள் தமிழகத்தை ஆட்டுவிக்கும். அதுவரை ஏற்ற தாழ்வுகளும் தொடரும்.

ஏனெனில், கல்வி முதற்கொண்டு வேலைவாய்ப்பு வரை எல்லாமும் சாதிபடிநிலைகளில் அளவீடு கொள்ளும் பழையமுறை இன்றைக்கும் கூட மாற்றமடையாதவரை எல்லாமும் இங்கே இனி தலைகீழ் தான்!
- இரா.ச.இமலாதித்தன்

அவனின்றி அணுவும் அசையாது!


அரியும் சிவனும் ஒன்று! என்று சொல்வதை பல இடங்களில் கேள்விபட்டிருப்போம். எதனால் ஒன்றென சொன்னார்கள் முன்னோர்? இதனை சற்று ஆராய்ந்தால், பல விசயங்களை புரிந்துகொள்ள முடியும்.

முதலில் நடராச தத்துவம்; இதுதான் அணுவின் அசைவை/ஓட்டத்தை நடனமாக செயல்முறையில் விளக்க உதவுகின்றது. அதனாலேயே ஆடல்வல்லான் என்ற பெயரும் கிடைத்தது. மேலும், செஞ்சடை வானவன் என்றும், சிவந்த நிறமுடையவனென்றும், செம்மேனியனென்றும் பல இடங்களில் சிவனை பற்றிய குறிப்புள்ளது. தென்னாடுடைய சிவனுக்கு எப்படி செஞ்சடை பொருத்தமாக இருக்கும்? தென்னாட்டினருக்கு தலைமுடி கருமைதானே?


சங்கால இலக்கியங்களில் இறைவழிபாட்டை பற்றி பல இடங்களில் செய்தி வந்துள்ளன. அவை தமிழர்களின் ஆன்மீகத்தை பற்றி சொல்லும்போது, இரு தெய்வ வழிபாட்டை மட்டுமே பேசுகின்றன. ஒன்று சேயோன்; மற்றொன்று மாயோன்.

சேயோன் - என்றால் முருகன், சிவன் என்று பொருள். ஏனெனில் சேயோன் என்ற வார்த்தை, சிவப்பு - செம்மை  - செவ்வாய் என திரிந்தே வந்துள்ளது.

செய்யான் = சிவந்தவன், செம்பூரான்.
செய் - சேய் = சிவப்பு, செவ்வாய், முருகன்.
சேய் - சேயன் - சேயான் = செந்நிறத்தான்.
சேயவன் = செவ்வாய், முருகன்.
சேயோன் = முருகன், சிவன்.
சே = சிவப்பு, சேங்கொட்டை.
சே-சேத்து = சிவப்பு.

ஜோதிடத்தில் மேஷம் மற்றும் விருச்சிக ராசியினருக்கு அதிபதி செவ்வாய் என்று வரையறுக்க பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்குரிய கடவுளாக இருப்பவர் முருகன் எனவும் வரையறையுள்ளது. கோவில்களிலுள்ள நவக்கிரக சிலைகளில் செவ்வாய்க்கு சிவப்பு வண்ணத்தினாலுள்ள ஆடையையே சூட்டிருப்பார்கள். திருமால் மருகன் என்ற பெயரும் முருகனுக்குண்டு. சிவப்பு - செவ்வாய் - சேயோன் - முருகன் என்ற ஒப்பீடு சரியாக இருக்குமென நம்புகிறேன்.


சரி அது ஒருபுறம் இருக்கட்டும். அடுத்து, மாயோனுக்கு வருவோம். மாயோன் என்றால் திருமால், விஷ்ணு, கிருஷ்ணன் என்று பொருள். தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் இயற்றிய 'திருமாலை' யில் வரும் பாடலில், "பச்சை மா மலைபோல் மேனி" யென்று புகழ்கிறார். ஏனெனில் பசுமையான மரங்கள் சூழ்ந்த வனத்தை உடையவனாகையால் அவனை பச்சை மா மலை போன்ற மேனி என்கிறார்.

"கார் கொண்ட மேனிக் கடவுள் பெயர்கொண்டு
நீர்கொண்ட பாயல் நிறம்கொண்டு" - கண்ணி : 1

(நீர் = பாற்கடல், பாயல் = படுக்கை)
திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளான். அவனுடைய படுக்கை ஆல் இலை. ஆல் என்பது ஆலமரம். ஆலமரத்தின் இலையின் நிறம் பச்சை. கிளியின் நிறமும் பச்சை. எனவே, திருமால் ஆகிய இறைவனின் படுக்கை ஆகிய ஆல் இலையின் நிறம் கொண்டது கிளி என்று புகழப்படுகிறது. மேலும் பல இடங்களில் பச்சை நிறத்தையும், திருமாலையும் ஒப்பிட்டே குறிப்பிடுகின்றன. பச்சை பட்டுடுத்தி வைகையில் கள்ளழகர் இறங்கினார் என்ற செய்தியும் வருடாவருடம் செய்தி தாள்களில் படிக்கின்றோம்.

மேலே சொல்லியுள்ள இவையனைத்தையும் ஆன்மீக ரீதியிலேயே மெய்ஞானத்தோடு மட்டும் முடிவுக்கு கொண்டுவர விருப்பமில்லை. அதனால், திருமூலன் வாக்கான திருமந்திரத்தோடு அறிவியலையும் இணைத்து விஞ்ஞானத்தோடும் கலக்க விரும்புகின்றேன்.

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே
- திருமந்திரம் 2008வது பாடல்

திருமந்திர பாடலின் மூலமாக அணுவுக்கு அணுவாய்த் திகழும் சிவபெருமானை அணுகுவது கைகூடும் என்ற பொருள் தரும்படி முடித்துள்ளார் திருமூலர்.


இதுவரை மெய்ஞானத்தை பார்த்தோம். இனி விஞ்ஞானத்தின் ஊடாகவும் இவற்றையெல்லாம் ஒப்பிட்டு பார்த்தால் பல பிரமிப்பான விசயங்களை நாம் உணரமுடியும். அணு என்பது எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற துகள்களால் ஆனது. அவற்றுள், புரோட்டான் பச்சை நிறத்திலும், நியூட்ரான் சிவப்பு நிறத்திலும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பச்சை நிறத்தில் உள்ள புரோட்டானே பச்சைமால் என்கிற விஷ்ணுவாகவும்,  சிவப்பு நிறத்திலுள்ள நியூட்ரானே சிவனாகவும் கருதினால் மெய்ஞானத்தில் கூறப்பட்டுள்ள விஞ்ஞான அறிவியல் சற்று விளங்கும்.



 மேலும் ஹிந்து முறையிலான வழிபாடுகளில் முதல் மூன்று தெய்வங்களாக நாம் பாவிப்பது, பிரம்மா - விஷ்ணு - சிவன் உள்ளிட்ட இம்மூவரைதான். இங்கே பிரம்மா - எலக்ட்ரானாகவும், விஷ்ணு - புரோட்டானாகவும், சிவன் - நியூட்ரானகவும் கருத்தில் கொள்தல்தான் ஒரு புது தெளிவை உண்டாக்குமென தீர்க்கமாக நம்புகிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

26 மார்ச் 2014

சிங் + காரவேலன்!



ஒரிசா என்ற கலிங்க நாட்டை கி.மு. 170 முதல் கி.மு. 159
வரை காரவேலன் என்ற புகழ்மிக்க பேரரசன் ஆண்டான். இந்த காரவேலனே "திராமிள சங்காதம்" என்ற தமிழ்வேந்தர் மூவரின் கூட்டணியை அழித்து, வடக்கத்தியர் யாருமே வெல்ல முடியாத சேர-சோழ-பாண்டிய பேரரசுகளை வென்றான் என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பும் காணப்படுகின்றது. இன்றளவும் ஒரிசாவில், கந்தகிரி - உதயகிரி என்ற இரு மலைகளுண்டு. கந்தன் என்றால் எம்பெருமான் முருகன் என்று தெரியும்; எம்பெருமான் முருகன் என்றால் சிங்காரவேலன் என்று தெரியும். இந்த காரவேலனுக்கும், சிங்காரவேலனுக்கும் என்ன தொடர்பு என்பதையும், எதனால் எம்பெருமான் முருகனுக்கு சிங்காரவேலன் என்ற பெயர் வந்ததென்று ஆராய்ந்தாலும் பல புதிய தகவல்கள் கிடைக்கக்கூடும். மேலும், எங்க நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்கடையூரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருமெய்ஞ்ஞானம் என்ற ஊரிலுள்ள சிவாலயத்தின் வரலாற்று குறிப்பில் எம்பெருமான் முருகன் படையெடுத்து மெளரிய பேரரசை வீழ்த்தியதாக குறிப்பு உள்ளது. எல்லாம் எல்லாம்வல்ல எம்பெருமான் முருகனுக்கே வெளிச்சம்.

வெற்றி வேல்! வீர வேல்! அரோகரா!

- இரா.ச.இமலாதித்தன்

அழகிரியின் அஸ்தமனம்!

மு.க.அழகிரியை திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து முற்றிலுமாக நீக்கியுள்ளதால் தமிழ்நாட்டில் புதிதாக ஒன்றும் நடந்துவிட போவதில்லை. மிஞ்சிப்போனால் இன்னொரு திராவிட கட்சி உதயமாகும். இல்லையென்றால் தேசியக்கட்சியில் அழகிரி தனது சகாக்களுடன் ஐக்கியமாகக்கூடும். நாடாளுமன்றத்தில் பேசாமலேயே பயந்து ஓடிய அஞ்சாநெஞ்சன் அழகிரி, இப்போது அடாவடித்தனமாய் பேசிமட்டும் என்னவாகிவிட போகிறது?

முதுபெரும்தலைவர் தா.கிருட்டிணனை வெட்டிக்கொன்று அரசியலில் முன்னுக்கு வந்தாலும் கூட, அந்த இழிஅரசியல் அஸ்தமனம் ஆனதை எண்ணி ஒருவகையில் மகிழ்ச்சியே. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் 2ஜி ஊழல், அடாவடி அரசியல், நில அபகரிப்பு, வார்டு செயலாளர் கூட முதலமைச்சர் போல செயல்பட்டவிதம், தமிழீழ பிரச்சனையில் போலியான தமிழ்பாசம் காட்டி மறக்கமுடியாத அளவுக்கு செய்த வரலாற்றுபிழை, பதவி சுகத்திற்காக கேவலமானதொரு கொள்கை, பேரன் மருமகன் உட்பட்ட அனைவருக்கும் பதவி தந்து வாரிசு அரசியலை பெருமளவுக்கு தமிழக அரசியலில் அறிமுகபடுத்திய திமுகவை வீழ்த்த திமுகவின் மற்றொரு அரசியல் வாரிசான அழகிரியே தனது தம்பி ஸ்டாலினை வீழ்த்த நினைப்பதை சகதமிழ் வாக்களனாக வரவேற்கிறேன்.

ஆக மொத்ததில் இப்போது நடக்கும் அழகிரி உடனான திமுக அரசியல் நாடகத்தை காண்கையில், "நீ காதலிச்சா என்ன? நான் காதலிச்சா என்ன? மொத்ததில் அந்த குடும்பம் நாசாமா போனா சரி..." யென்று வின்னர் படத்தில் வடிவேலு சொல்லும் வசனம்தான் சட்டென்று நினைவுக்கு வருகிறது.

- இரா.ச.இமலாதித்தன்

18 மார்ச் 2014

இசைஞானிக்கு இன்னொரு மகுடம்


உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து இசைஞானி இளையராஜா மட்டுமே 9ம் இடத்தில் இடம்பெற்றுள்ளார் என்பது பெருமைக்குரிய விசயம். இது இந்திய மக்கள் தொகையின் 120 கோடி மக்களில் ஒருவர் என்ற மிகப்பெரிய பிரதிநிதித்துவத்தை காட்டுகிறது. இந்த தரவரிசை கணிப்பீடை நடத்திய 'டேஸ்ட் ஆஃப் சினிமா' என்ற இணையதளம், இசைக்கோர்ப்பு, இசை ஒருங்கிணைப்பு, பாடல் இயற்றும் தன்மை, பாடகராகவே உருவாகிய விதம், இசைக்கருவிகள் கையாளும் வல்லமையென எல்லாதுறைகளிலும் இளையராஜாவின் பெரும்பங்கை சுட்டிக்காட்டிருக்கின்றது. சக தமிழனாக, இசைரசிகனாக இசைஞானி இளையராஜாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரின் சமகாலத்தில் வாழும் மனிதன் என்பதும் கூடுதல் சிறப்பே.

வாழ்த்துகள் ராஜா சார்!

- இரா.ச.இமலாதித்தன்

05 மார்ச் 2014

காவிரி சமவெளி நாகரீகம்



பாகிஸ்தான் - இந்தியா எல்லையில் அமைந்துள்ள 'ஹரப்பா - மெகஞ்சோதாரா - லோத்தல்' யென்ற சிந்துசமவெளி நாகரீகம் தான் உலகில் பழைமையான நாகரீகமென்று பெருமபாலோனோர் சொல்லிக்கொண்டிருந்தாலும், என் அளவில் அதை என் மனம் ஏற்று கொண்டதே கிடையாது. ஏனெனில், எங்க ஊரு நாகப்பட்டினம்தான் பழைமையான ஆதிநாகரீகம் கொண்ட நகரம் என்பதை தீர்க்கமாக நம்புகிறேன். சோழர்களின் துறைமுகமான பூம்புகார் என்ற காவிரிபூம்பட்டினம் தான் உலகில் தலைச்சிறந்த நாகரிக நகரம் என்பது ஆழமான நம்பிக்கை. மேலும், சிந்து நதி நாகரிகத்தை விட காவிரி நதி நாகரிகம் ஒன்றுக்கொன்று சளைத்ததுமில்லை என்பதும் என்னளவிலான எண்ணம்.

அதனோடு தொடர்புடைய ஒன்றை இன்று இங்கே சொல்ல விருப்பபடுகிறேன். கூகுள் மேப் மூலமாக இன்று ஒரு விசயத்தை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள ஈரான் நாட்டின் ஓரிடத்தில் "சரவண்" என்ற பகுதியும், அதனருகிலேயே "சூரன்" என்ற பகுதியும் உள்ளது. சரவண் என்றால் எம்பெருமான் முருகன் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோலவே சூரன் என்றால் எம்பெருமான் முருகன் வதம் செய்த பகைவன் என்பதும் நமக்கு தெரியும். என் கணிப்பின் படி, எங்க ஊரு நாகப்பட்டினம் அருகேயுள்ல சிக்கல் என்ற இடத்திலிருந்து வேல் வாங்கிதான் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு மதம்சார்ந்த நம்பிக்கையாக இன்றளவும் பெருவிமர்சையாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது. அதன்படி இந்த மேப்பில் உள்ள இந்த இரு நகரங்களின் பெயர்களை படிக்கையில் அதன் பெயர்க்காரணமும், அந்த இரு நகரங்களின் ஆதிவரலாற்று விசயங்களை பற்றியும் எனக்குள் ஆர்வமும் - எதிர்பார்ப்பும் அதிகம் ஏற்பட்டது.

- இரா.ச.இமலாதித்தன்

பெண்கள் திருநாள்!

பாட்டி, அம்மாச்சி, ஆத்தா, அப்பத்தா, பெரியம்மா, சின்னம்மா, சித்தி, அத்தை, அக்கா, தங்கை, தோழி, அண்ணி, கொழுந்தியாள், நாத்தனார், மாமியார், மச்சினி, மதனி மற்றும் தன்னுதிரத்தால் உடலுயிர் தந்த அம்மா போன்ற மிகச்சிறந்த உறவுமுறைகளால், ஆண்களின் வாழ்வோடு என்றைக்கும் உறவாடும் அனைத்து பெண் பாலினத்தவருக்கும் அடியேனின் 'பெண்கள் திருநாள் வாழ்த்துகள்!'

- இரா.ச.இமலாதித்தன்

03 மார்ச் 2014

பழகிக்கொள்!

முன்பே கண்டுகளித்த கனவை நோக்கி நகரும் நாடோடிகள் நாம். உறக்கமும் - இறப்பும் வேறுவேறென்று நம்பிக்கொண்டிருக்கும் அதிமேதாவிகள் நாம். காலம் என்பதை உண்மையென கருதி நேரத்தை கணக்கிட்டு நாளை நோக்கி காலம் கழிக்கும் ஒவ்வொரு நொடியும் என்றைக்கோ தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அதற்கு விதியெனும் பெயரும் உண்டு. இங்கே எதுவும் புதிதல்ல; எதுவும் பெரிதல்ல. ஒன்றுமே இல்லாத ஒன்றிலிருந்து உருவாகி, மீண்டும் ஒன்றுமே இல்லாமல் தொலையும் மாயை தானே இந்த சின்னஞ்சிறு வாழ்க்கை. அதை புரியாதவரையில் இங்குள்ள அனைத்தும் சுமையாகவே இருக்கும். குறைந்தபட்சம் அதுவரை வாழ பழகிக்கொள்!

- ஸ்ரீ பரமஹம்ச இமலாதித்தனந்தா

01 மார்ச் 2014

அடடே! தமிழக காவல்துறை

தமிழக அரசு இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்துள்ளது. 56 மீனவர்களின் புகாரை தொடர்ந்து ராமேஸ்வரம் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
-செய்தி.

இனிமே வயசுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன? 500க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்கள் என்று நம்பிக்கொண்டிருந்த தமிழ் மீனவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால், ஹிந்தியாவோ, தமிழக மீனவனை தமிழனாக மட்டுமே பார்த்து கொண்டிருக்கிறது. ஹிந்தியம் எப்போது தமிழனை, சக இந்திய குடிமகனாகவும் பார்க்க ஆரம்பிக்கின்றதோ, அன்றைக்குத்தான் மீனவ பிரச்சனை முடிவுக்கு வரும். அதுவரையிலும்  இதெல்லாம், எலக்‌ஷன் ஸ்டெண்ட். மீனவ வாக்காளர்களின் வாக்கை வாங்குவதற்கான விளம்பர யுக்தி.

கேரள மீனவனை சுட்டுக்கொன்றதற்காக இத்தாலி கப்பலிருந்த இத்தாலி வீரர்களை கைது செய்த கேரள காவல்துறை போல தமிழக காவல்துறைக்கு திராணி இருக்கா? கண்டிப்பாக இல்லை. ஏனெனில், ஹிந்தியம் தமிழனுக்கு ஆதரவாகவும் இல்லை. ஹிந்தியத்தை ஆட்டுவிக்கும் மாபெரும் சக்தியான மைய அரசியலில் தமிழுணர்வுள்ள தமிழனும் இல்லை.

ஹிந்து-கிருஸ்துவம்-இசுலாம் யென எப்படி வேற்பட்டு இருந்தாலும் மலையாளிகள், கடைசிவரை மலையாளிகளாகவே இருக்கின்றார்கள். அதனால்தான், ஹிந்தியத்தின் முக்கிய பொறுப்பில், மிக உயர்ந்த பதவியான வெளியுறவுத்துறை / பாதுகாப்புதுறையென எந்தவொரு பதவியில் இருந்தாலும், தன் இனம் சார்ந்த, தன் மொழி சார்ந்த, தன் மக்கள் சார்ந்த பிரச்சனையில் தன்னுடைய முழு எதிர்ப்பையும் மிக தைரியமாக வெளிக்காட்டுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டிலிருந்து மத்தியசர்க்காரில் தமிழர்கள் இடம்பிடித்தாலும், தன் சுய லாபத்திற்காக மட்டுமே பதவியில் சுகம் காண்கிறார்கள்.

இப்போது, தமிழக காவல்துறை பதிந்திருக்கும் வழக்கு, மத்திய சர்க்காரின் தலையீட்டால் ஒன்றுமில்லாமல் நீர்த்து போவது உறுதி. அதுவரையில் வெறும் வாய்க்கு கிடைத்த அவல் போல, தமிழக காவல்துறையை உலகளாவிய ஸ்காட்லாந்து காவலருக்கு இணையாக தம்பட்டம் அடித்து போலி பெருமை அடைந்து கொள்ளலாம். ஆனால், தமிழக காவல்துறையோ, கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு மீறாமல் தமிழ்நாடு அரசாங்கம் திறந்து வைத்த்திருக்கும் ஒவ்வோரு ஊரின் ஒதுக்குபுறத்திலும் உள்ள டாஸ்மாக் சாராயக்கடையோரம் வசூல் வேட்டை நடத்திக்கொண்டிருப்பார்கள்.

எங்க ஊரு நாகப்பட்டினம் எல்லையில் மூன்றுக்கும் மேற்பட்ட மாநில எல்லைகள் இருக்கு. ஏனெனில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாவட்டமான காரைக்கால் என்ற மாவட்டமே நாகப்பட்டினத்திற்க்குள் தான் இருக்கிறது. இந்த நாகப்பட்டினம் எல்லைகள் இழுத்து மூடப்பட்டால், காரைக்கால் என்ற மாவட்டமே ஸ்தம்பித்துத்தான் போகும். அதனாலோ என்னவோ தமிழக குடிமகன்கள் டாஸ்மாக் பக்கம் போகமால அடிக்கடி காரைக்காலுக்கும் போக்குவரத்தாக சென்றுவருவார்கள். இதை சாதாகமாக பயன்படுத்தி, அங்கே ஒவ்வொரு சோதனை சாவடியிலும் அஞ்சுக்கும் பத்துக்கும் கையை ஏந்தி யாசகம் வாங்கி கொண்டிப்பார்கள், நம்மூர் ஸ்காட்லாந்து ரேஞ்ச் போலீஸ்காரர்கள். இதுதான் எதார்த்தம்.

இந்த எதார்த்தம் புரியாமலேயே, காவல்துறையை கையில் வைத்திருக்கும் ஜெயலலிதா, விருப்பப்படும் போதெல்லாம் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கொண்டிருப்பார்கள்; பதக்கம் கொடுத்து கொண்டிருப்பார்கள்; பலவித விலையில்லா அறிவிப்புகளை அறிப்பார்கள்; பதவி உயர்வு - சம்பள உயர்வுயென குறிப்பிட இடைவெளியில் அறிவிப்புகள் அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். கடைசி வரையிலும், காவல்துறையின் அடிப்படை ஊழல்வாத கட்டமைப்பை மாற்ற மாட்டார்கள். ஏனெனில், இந்த போலீஸ்கள் தான் போலி என்கவுண்டருக்கும், தேசியபாதுகாப்பு சட்டத்திற்கும், குண்டர் சட்டம் போடுவதற்கும், அரசியல் எதிரிகளை நள்ளிரவில் கைது செய்வதற்காகவும் தேவைப்படுவார்கள் என்பதால்!

- இரா.ச.இமலாதித்தன்

களப்பிரர்

பல தமிழ் இலக்கியங்கள் உருவாக காரணமாக அமைந்த கி.பி. 300 - கி.பி. 600 வரை தமிழகத்தை அரசாட்சி செய்த "களப்பிரர்" காலத்தை, இருண்டகாலம் என்று சொல்வதுதான் வரலாற்று அறிஞர்களின் தந்திரமே அடங்கியுள்ளது. 300 வருடங்கள் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையே ஆண்டிருக்கும் ஒரு பேரரசு பற்றிய கல்வெட்டு ஆதாரம் உள்பட எந்தவித ஆதார தரவுகளுமே இல்லையென சொல்லி மிகப்பெரிய உண்மையை மூடிமறைப்பதன் நோக்கம் மட்டும் புரியவேயில்லை. இன்னைக்கு வரைக்கும் வரலாற்று ஆய்வாளர்களால் "களப்பிரர்" யாரென்று தெளிவான ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை என்பதும் ஏமாற்றம் அளிக்க கூடியதாகவே இருக்கின்றது. ஆய்வாளர்கள் அனைவரும் ஆளாளுக்கு ஒரு விளக்கம் கொடுத்து, அனுமானத்தின் அடிப்படையிலேயே "களப்பிரர்" பற்றிய தங்களது கருத்துகளை சொல்லி வருகிறார்களே தவிர, தீர்க்கமாக, #களப்பிரர் யாரென்று இதுவரை யாரும் சொன்னதாக தெரியவில்லை. அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும், முன்னூறு வருடங்கள் சேர-சோழ-பாண்டிய-பல்லவ நாட்டை ஆண்ட களப்பிரர்களின் வீரத்தை போற்றுகிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்