01 மார்ச் 2014

அடடே! தமிழக காவல்துறை

தமிழக அரசு இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்துள்ளது. 56 மீனவர்களின் புகாரை தொடர்ந்து ராமேஸ்வரம் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
-செய்தி.

இனிமே வயசுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன? 500க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்கள் என்று நம்பிக்கொண்டிருந்த தமிழ் மீனவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால், ஹிந்தியாவோ, தமிழக மீனவனை தமிழனாக மட்டுமே பார்த்து கொண்டிருக்கிறது. ஹிந்தியம் எப்போது தமிழனை, சக இந்திய குடிமகனாகவும் பார்க்க ஆரம்பிக்கின்றதோ, அன்றைக்குத்தான் மீனவ பிரச்சனை முடிவுக்கு வரும். அதுவரையிலும்  இதெல்லாம், எலக்‌ஷன் ஸ்டெண்ட். மீனவ வாக்காளர்களின் வாக்கை வாங்குவதற்கான விளம்பர யுக்தி.

கேரள மீனவனை சுட்டுக்கொன்றதற்காக இத்தாலி கப்பலிருந்த இத்தாலி வீரர்களை கைது செய்த கேரள காவல்துறை போல தமிழக காவல்துறைக்கு திராணி இருக்கா? கண்டிப்பாக இல்லை. ஏனெனில், ஹிந்தியம் தமிழனுக்கு ஆதரவாகவும் இல்லை. ஹிந்தியத்தை ஆட்டுவிக்கும் மாபெரும் சக்தியான மைய அரசியலில் தமிழுணர்வுள்ள தமிழனும் இல்லை.

ஹிந்து-கிருஸ்துவம்-இசுலாம் யென எப்படி வேற்பட்டு இருந்தாலும் மலையாளிகள், கடைசிவரை மலையாளிகளாகவே இருக்கின்றார்கள். அதனால்தான், ஹிந்தியத்தின் முக்கிய பொறுப்பில், மிக உயர்ந்த பதவியான வெளியுறவுத்துறை / பாதுகாப்புதுறையென எந்தவொரு பதவியில் இருந்தாலும், தன் இனம் சார்ந்த, தன் மொழி சார்ந்த, தன் மக்கள் சார்ந்த பிரச்சனையில் தன்னுடைய முழு எதிர்ப்பையும் மிக தைரியமாக வெளிக்காட்டுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டிலிருந்து மத்தியசர்க்காரில் தமிழர்கள் இடம்பிடித்தாலும், தன் சுய லாபத்திற்காக மட்டுமே பதவியில் சுகம் காண்கிறார்கள்.

இப்போது, தமிழக காவல்துறை பதிந்திருக்கும் வழக்கு, மத்திய சர்க்காரின் தலையீட்டால் ஒன்றுமில்லாமல் நீர்த்து போவது உறுதி. அதுவரையில் வெறும் வாய்க்கு கிடைத்த அவல் போல, தமிழக காவல்துறையை உலகளாவிய ஸ்காட்லாந்து காவலருக்கு இணையாக தம்பட்டம் அடித்து போலி பெருமை அடைந்து கொள்ளலாம். ஆனால், தமிழக காவல்துறையோ, கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு மீறாமல் தமிழ்நாடு அரசாங்கம் திறந்து வைத்த்திருக்கும் ஒவ்வோரு ஊரின் ஒதுக்குபுறத்திலும் உள்ள டாஸ்மாக் சாராயக்கடையோரம் வசூல் வேட்டை நடத்திக்கொண்டிருப்பார்கள்.

எங்க ஊரு நாகப்பட்டினம் எல்லையில் மூன்றுக்கும் மேற்பட்ட மாநில எல்லைகள் இருக்கு. ஏனெனில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாவட்டமான காரைக்கால் என்ற மாவட்டமே நாகப்பட்டினத்திற்க்குள் தான் இருக்கிறது. இந்த நாகப்பட்டினம் எல்லைகள் இழுத்து மூடப்பட்டால், காரைக்கால் என்ற மாவட்டமே ஸ்தம்பித்துத்தான் போகும். அதனாலோ என்னவோ தமிழக குடிமகன்கள் டாஸ்மாக் பக்கம் போகமால அடிக்கடி காரைக்காலுக்கும் போக்குவரத்தாக சென்றுவருவார்கள். இதை சாதாகமாக பயன்படுத்தி, அங்கே ஒவ்வொரு சோதனை சாவடியிலும் அஞ்சுக்கும் பத்துக்கும் கையை ஏந்தி யாசகம் வாங்கி கொண்டிப்பார்கள், நம்மூர் ஸ்காட்லாந்து ரேஞ்ச் போலீஸ்காரர்கள். இதுதான் எதார்த்தம்.

இந்த எதார்த்தம் புரியாமலேயே, காவல்துறையை கையில் வைத்திருக்கும் ஜெயலலிதா, விருப்பப்படும் போதெல்லாம் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கொண்டிருப்பார்கள்; பதக்கம் கொடுத்து கொண்டிருப்பார்கள்; பலவித விலையில்லா அறிவிப்புகளை அறிப்பார்கள்; பதவி உயர்வு - சம்பள உயர்வுயென குறிப்பிட இடைவெளியில் அறிவிப்புகள் அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். கடைசி வரையிலும், காவல்துறையின் அடிப்படை ஊழல்வாத கட்டமைப்பை மாற்ற மாட்டார்கள். ஏனெனில், இந்த போலீஸ்கள் தான் போலி என்கவுண்டருக்கும், தேசியபாதுகாப்பு சட்டத்திற்கும், குண்டர் சட்டம் போடுவதற்கும், அரசியல் எதிரிகளை நள்ளிரவில் கைது செய்வதற்காகவும் தேவைப்படுவார்கள் என்பதால்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக