அழகிரியின் அஸ்தமனம்!

மு.க.அழகிரியை திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து முற்றிலுமாக நீக்கியுள்ளதால் தமிழ்நாட்டில் புதிதாக ஒன்றும் நடந்துவிட போவதில்லை. மிஞ்சிப்போனால் இன்னொரு திராவிட கட்சி உதயமாகும். இல்லையென்றால் தேசியக்கட்சியில் அழகிரி தனது சகாக்களுடன் ஐக்கியமாகக்கூடும். நாடாளுமன்றத்தில் பேசாமலேயே பயந்து ஓடிய அஞ்சாநெஞ்சன் அழகிரி, இப்போது அடாவடித்தனமாய் பேசிமட்டும் என்னவாகிவிட போகிறது?

முதுபெரும்தலைவர் தா.கிருட்டிணனை வெட்டிக்கொன்று அரசியலில் முன்னுக்கு வந்தாலும் கூட, அந்த இழிஅரசியல் அஸ்தமனம் ஆனதை எண்ணி ஒருவகையில் மகிழ்ச்சியே. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் 2ஜி ஊழல், அடாவடி அரசியல், நில அபகரிப்பு, வார்டு செயலாளர் கூட முதலமைச்சர் போல செயல்பட்டவிதம், தமிழீழ பிரச்சனையில் போலியான தமிழ்பாசம் காட்டி மறக்கமுடியாத அளவுக்கு செய்த வரலாற்றுபிழை, பதவி சுகத்திற்காக கேவலமானதொரு கொள்கை, பேரன் மருமகன் உட்பட்ட அனைவருக்கும் பதவி தந்து வாரிசு அரசியலை பெருமளவுக்கு தமிழக அரசியலில் அறிமுகபடுத்திய திமுகவை வீழ்த்த திமுகவின் மற்றொரு அரசியல் வாரிசான அழகிரியே தனது தம்பி ஸ்டாலினை வீழ்த்த நினைப்பதை சகதமிழ் வாக்களனாக வரவேற்கிறேன்.

ஆக மொத்ததில் இப்போது நடக்கும் அழகிரி உடனான திமுக அரசியல் நாடகத்தை காண்கையில், "நீ காதலிச்சா என்ன? நான் காதலிச்சா என்ன? மொத்ததில் அந்த குடும்பம் நாசாமா போனா சரி..." யென்று வின்னர் படத்தில் வடிவேலு சொல்லும் வசனம்தான் சட்டென்று நினைவுக்கு வருகிறது.

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment