ஹிந்தி திணிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹிந்தி திணிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 மே 2021

பழனிவேல் தியாகராஜனின் நேர்காணல்! - ஒரு பார்வை.



        சமீபத்தில் ஓர் ஆங்கில தொலைக்காட்சிக்கு தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நேர்காணலை பார்க்கும் வாய்ப்பு சமூக ஊடகங்களில் வாயிலாக கிடைத்தது. அந்த நேர்காணலில் பேசியிருந்த திரு. பழனிவேல் தியாகராஜனின் கருத்துகளோடு முழுதும் உடன்படுகின்றேன். ஹிந்தியை கொண்டு வந்து சமஸ்கிருதத்தை நாட்டிலுள்ள அனைவரிடமும் திணிப்பதே பாஜகவை இயக்கும் அவர்களின் நோக்கம். அனைத்து திட்டத்திற்கும் ஹிந்தியில் பெயர் சூட்டுவது. ஹிந்தி தெரியாத மாநிலங்களின் தேர்தல் பிரச்சாரங்கள் உட்பட அனைத்து கூட்டத்திலும் ஹிந்தியிலேயே பேசுவது. ஊடகவியலாளர்கள் சந்திப்பிலும், மாநில முதல்வர்களோடு கூடிய இணைய சந்திப்பிலும், ஹிந்தியில் தான் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும் எதேச்சதிகார போக்கு. சுதந்திர நாள், குடியரசு நாள் விழாவிலும், மாநிலங்களின் பெயர் பலகைகளிலெல்லாம் ஹிந்தியிலேயே பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் மொழி திணிப்பு. இப்படியாக, ஹிந்தி தான் தேசிய மொழியென ஒரு மாயையை உருவாக்க இவர்களது ஆட்சியாண்டுகளில் முயல்கின்றனர்.

        யூட்யூபில் எந்தவொரு வீடியோவை தேடினாலும் ஹிந்தி வீடியோக்களே முன்னதாக வந்து நிற்கும். தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள், பெங்காலிகள், மராட்டியர்கள் என ஹிந்தியல்லாதோரே அவர்களது மொழிகளை அதிகம் பயன்படுத்தும் ஃபேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்களிலும் ஹிந்தியே முன் நிற்கின்றன. மைக்ரோசாப்ட் போன்ற பல இணையங்களில் இந்தியா என்ற நாட்டிற்கு ஹிந்தி மொழிக்கு மட்டும் இடம் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தியாவில் உள்ளோர் எல்லாருமே ஹிந்தியரா என்ன?

        ஹிந்தியே தெரியாத மக்களுக்கு மான்கிபாத் யாருக்கு புரியும்? குடிமக்களின் குரல்வளையை நெரித்து விட்டு மனதின் குரல் என்ற கூப்பாடு தேவையா? யார் கேள்வி கேட்டாலும் ஹிந்தியில் பேசுவது. ஊடக சந்திப்பில் ஹிந்தியை மட்டுமே பேசுவது. ஹிந்தியில் மட்டுமே கேள்வி கேட்க சொல்லி ஆணையிடுவது. ஹிந்தியில் மட்டுமே எம்.பி.களுக்கும், மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்புவது. இப்படியாக நாலாந்தர மக்களாக ஹிந்தி மொழி பேசாத அனைவரையும் நினைக்கும் பாஜகவின் கோரதாண்டவத்திற்கும் முடிவு உண்டு. காலவெளியில் அவர்களின் போலி பிம்பங்கள் சுக்குநூறாய் உடையும். அந்நாள் இந்த இந்திய ஒன்றிய கூட்டாட்சிகளுக்கு இரண்டாம் சுதந்திரநாளாக அமையும்.

- இரா.ச. இமலாதித்தன்

20 ஜூன் 2014

ஹிந்தி திணிப்புக்குள் அகதிகள் தினம்!

ஹிந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் எதிர்க்க வேண்டிய அவசியம் தமிழனுக்கில்லை, அவன் மீது தமிழ் அல்லாத மொழியை திணிக்காத வரை. ஹிந்தி மட்டுமே அறிவு என்பது போல நினைக்க வேண்டிய தேவையில்லை. வல்லபாய் படேல் இல்லையென்றால் இந்தியா என்ற ஒரு கட்டமைப்பு உருவாகி இருக்குமா என்பது சந்தேகமே; ஏனெனில் ஒவ்வொரு மாகாணமும் தனித்தனி மொழி/பாரம்பரியம்/கலாச்சாரம் என பலவாறாக அடையாளப்படுகிறது. அதனாலேயே இந்தியாவில் ஹிந்தி மட்டுமே ஆட்சி மொழி கிடையாது என்றும், ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக வைத்து கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. இன்னைக்கு புதுசா வந்து எல்லாத்தையும் ஹிந்தி மயமாக்க நினைப்பது தவறு. அதை கண்டிப்பது ஹிந்தி அல்லாத ஒவ்வொரு தாய்மொழிக்காரனுக்கும் உரிமை உண்டு. என் மொழி எனக்கு உன் மொழி எனக்கு. ஏற்கனவே கொஞ்சகொஞ்சமாய் அழிந்துவரும் எம்தாய்மொழியை இதுபோன்ற அரசாங்க அறிவிப்பும் அழிவுக்கே வழி வகுக்கும்.
தமிழினம் மட்டுமல்ல
தமிழும் தான்
தவித்துக்கொண்டிருக்கின்றது
இறுதி சடங்குக்காக!

#அகதிகள் தினம் இன்று!


 - இரா.ச.இமலாதித்தன்