ஈ.வெ.ரா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈ.வெ.ரா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 ஜூன் 2017

பெயருக்கு பின்னால் சாதி அவசியமா?

சாதி சார்ந்த பட்டப்பெயரை தன் பெயருக்கு பின்னால் போடலாமா? வேண்டாமா? என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். கரு.பழனியப்பன் அடிக்கடி கருத்து பழனியப்பனாக உருமாறி சொல்லும் எல்லாவற்றையும் அனைவரும் ஏற்க மாட்டார்கள்; ஏற்கவும் முடியாது. தொட்டதற்கெல்லாம் ஹிந்தியத்தை தூக்கிப்பிடிக்கும் நபர்கள் கூட சாதிப்பெயரை தன் பெயரோடு சேர்த்து போட்டுக்கொள்ளும் பெரும்பான்மையான ஹிந்தியர்களை பற்றி பேசுவதே இல்லை.

இந்த விசயத்தில் ஹிந்தியவாதிகள் மட்டுமல்லாது, திராவிடத்தை தோள் மீது சுமக்கும் நபர்களும் கூட, திராவிட நாடுகளென அடையாளப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் வசிக்கும் மலையாளி, கன்னடர், தெலுங்கர்கள் தன் சாதிப்பெயரை போட்டு கொண்டு கெட்டா போய்விட்டார்கள்? என்பதை பற்றி வாய் திறப்பதே இல்லை. மேனன்களும், நாயர்களும், ரெட்டிகளும், ராவ்களும், கவுடாக்களும், நாயுடுக்களும் இதுபோன்ற திராவிட சாதிப்பெயர்கள் இன்றளவும் ஹிந்திய அரசியலோ, திராவிட அரசியலோ, கம்யூனிச அரசியலோ செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்?

திராவிடவாதிகள் கொண்டாடும் ஈ.வெ.ரா.வை பற்றிய திரைப்படத்தை தமிழ்நாட்டில் 'பெரியார்' என்ற பெயரிலும், தமிழகம் தாண்டிய திரையரங்குளில் 'பெரியார் ராமசாமி நாயக்கர்' என்ற பெயரிலும் வெளியிட்டது ஏன்? இதைப்பற்றி விடுதலையே விளக்கமளித்திருந்தது. ஆந்திரா போன்ற பகுதிகளில் சாதிப்பெயரை போடாமல் ஒருவரது பெயரை தனித்து போடுவது மரியாதை குறைவான விசயமாக கருதப்படுவதால் நாயக்கர் பட்டதையும் சேர்த்து போடப்பட்டது. ஆனாலும் அந்த சாதிப் பெயரை மட்டும் குறுக்கே அடித்து காட்டப்பட்டதென முட்டுக்கொடுத்து விளக்கம் கூட தரப்பட்டிருந்தது. ஆனால் அதை எத்தனை பேர் ஏற்றுக்கொண்டார்கள்? இந்த சாதிப்பெயரை பயன்படுத்துவதிலுள்ள எதார்த்தத்தை சொல்ல எவ்வளவோ செய்திகளும் விளக்கங்களும் இருக்கிறது.

'தன்னுடைய சாதிப்பெயரையே பொதுவெளியில் சொல்ல கூச்சப்படும் நபர்களுக்கு மத்தியில், இப்படி சாதிப்பெருமைக்காவும், சாதி திமிருக்காகவும் பட்டப்பெயர்களை பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வது சரியா?' என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். எது சிறுமை? எது அவமானம்? அப்படி நிர்ணயம் செய்தது யார்? இதுபோன்ற உளவியல் தாக்குதலை செலுத்தியவனின் ஆயுதத்தைதானே, தாக்கப்பட்டவனும் எடுக்க வேண்டும்? அந்த லாஜிக்கை விட்டுவிட்டு அவனை சாமி / ஐயா / ஆண்டை என சொல்லி, தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் அந்த பொதுபுத்தியை விட்டுத்தானே முதலில் வெளிவர வேண்டும்?

கபாலி படத்தில் வரும் ஒரு காட்சியில், 'என்னை நீ கோட் சூட் போடக்கூடாதுன்னு சொன்னா அப்படித்தான் போடுவேன்; கெத்தா; ஸ்டைலா, கால் மேல கால் போட்டு உட்காருவேன்டா' என உணர்ச்சி பொங்க நாயகன் கூறும் கருத்தை கேட்டு மெய்சிலிர்த்தால் மட்டும் போதாது. அதை செயலில் காட்டவும் வேண்டும். இங்கே அடிக்கிற வெயிலுக்கு மார்க்கெடிங் எக்சிகியூட்டிவ் மாதிரி கோட்சூட் போட தேவையில்லை. ஆனால் வர்ணாசிரமத்தால் சமூக படிநிலையை திணித்து, குறிப்பிட்டவர்ளை மட்டும் கீழாக காட்டியவனின் முகத்தில் கரியை பூச, அந்த சாதியின் பெயரையே பெருமையாக போட்டுக்கொள்வது தான் மிகச்சரியான எதிர்வினையாக இருக்க கூடும். அதை மறந்து விட்டு, யாருமே சாதிப்பெயரை போட்டுக்கொள்ளாதே என அடாவடி அரசியல் செய்வதை சமத்துவ புரட்சியாக பார்க்க முடியாது.

இன்றளவும் இங்கே ஏகப்பட்ட பேர் கைவிடப்பட்டவர்களாகவும், அநாதைகளாகவும் இருக்கின்றனர். ஆனால் பெரும்பான்மையானோர் தாய் தந்தையோடு தான் வாழ்கின்றனர். எனவே, 'கைவிடப்பட்டவர்களுக்கு இனிசியல் தெரியவில்லை; அதனால் அவர்களுக்காக நாமும் நம் தந்தையின் பெயரான இனிசியலை மறைத்து நம் பெயரை மொட்டையாக எழுதுவோம்; ஏனெனில் அவர்களது தாழ்வு மனப்பான்மைக்கு நாம் காரணமாகி விடக்கூடாது' என யாராவது பேசினால், எப்படி சிரிப்பு வருமோ அப்படித்தான் சிரிப்பு வருகிறது, கருத்து பழனியப்பன்களின் இதுபோன்ற கருத்துகளை கேட்கும் போது!

எதார்த்தம் என்னவெனில், 'யார் தமிழன்?' என அடையாளம் காணவே இந்த பட்டப்பெயர் தான் உதவுகிறது. பல்வேறு மொழி பேசும் இனங்களும், பலதரப்பட்ட இனக்குழுக்களும் இம்மண்ணில் தங்களை போலியாக இம்மண்ணின் மைந்தர்கள் என வேசம் போட்டு அரசியல் செய்யும் அவலத்தை கலையக்கூட, தான் சார்ந்த இந்த சாதியின் பெயரும், பட்டப்பெயரும் தான் பேருதவி செய்கின்றன.

- இரா.ச. இமலாதித்தன் தேவர்.
(அகமுடையார் இனக்குழு, தமிழன்)


23 பிப்ரவரி 2016

என்னமோ ஏதோ!

-01-

இக்கட்டான வேளையிலும் கூட  ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் அடிமைகளை, ஜெயா நியூஸ் அல்லாத மற்ற நியூஸ் சேனல்களில் மக்கள் புலம்புவதை மட்டும் பார்க்க சொல்லுங்க. அவர்களின் வலியும், வேதனையும் புரியக்கூடும்.

-02-

மூச்சுக்கு முன்னூறு தடவ கூறு போட்டு விஜய் டிவியில வித்துக்கிட்டு இருந்த அந்த ஹைடெக் சிட்டி 'அருண் எக்ஸல்லோ' இருந்த இடத்த, இப்போ போட் ஹவுஸாவா மாத்திட்டாங்க?

-03-

கோவிலெங்கும் வாட்சப்போடு தான், அனைத்து கோவில்களிலும் தரிசனம் செய்து கொண்டிருந்தனர், இளவட்டமெல்லாம்!

-04-

கடவுள் மறுப்பாளராக காட்டிக்கொண்ட வடுகர் ஈ.வெ.ரா.வை இரட்சிக்க வந்த கடவுள் போல அர்சித்த காலமெல்லாம் தலைகீழாய் மாறிபோனது. ஆரியருக்காக ஆங்கிலேயன் சூட்டிய ஹிந்து என்ற மாயை உடைத்து வீரத்தமிழர்களாக முன்னிற்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆரியனுக்காக திராவிடன் என்ற போர்வையில் வடுகர்களும், திராவிடனுக்கு எதிராக ஆன்மீகம் என்ற பெயரில் பிராமணர்களும், தமிழர் முதுகில் ஏறி பயணித்த பாதையெல்லாம் முடிவுற தொடங்கி இருக்கிறது.
இவற்றிற்கெல்லாம் சீமானும் ஒரு காரணம் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. வெற்றியோ தோல்வியோ களத்தில் நிற்பதில் தான் அரசியல் ஆண்மை அடங்கிருக்கிறது. அந்த வகையில், சாதி மத ஆதரவின்றி அனைத்து தொகுதிகளிலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துகள்!

-05-

கடந்த நாலரை வருடங்களாக பள்ளம் படுகுழிகளோடு நாறிப்போயிருந்த சாலைகள் அனைத்தும், தேர்தலுக்காக அவசரகதியில் அரைவேக்காட்டு தனமாய் தார் பூசப்பட்டு மாறிப்போயிருக்கின்றன. கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல்வாதிகளும் தெளிவாகத்தான் இருக்கின்றனர். ஆனால் அதை உணர வக்கற்ற வாக்காளர்களான மக்கள் தான், இலவசங்களுக்காக கையேந்தி மதிமயங்கி கிடக்கின்றனர்; டாஸ்மாக், ரேசன் கடையென!

-06-

எனக்கு தெரிந்து பெரும்பாலானோர் மகாமகத்திற்காக எங்க டெல்டாவின் புண்னியபூமியான கும்பகோணத்திற்கு சென்று வந்து கொண்டிருக்கின்றனர். அனைவருக்கும் ஆன்மீக நாட்டம் பெருக்கெடுத்து விட்டதா? என தெரியவில்லை. நானும் கூட நேற்றைக்கு முந்தைய நாள் சென்று வந்தேன்.
அண்மைகாலமாக கோவில் வழிபாட்டுத்தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. குறிப்பாக இளைஞர்களும் பக்தி மார்க்கத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவதையும் அறியமுடிகிறது. இந்த மண்ணின் தன்மை படிப்படியாக அதன் பூரணத்தை அனுபவிக்க தொடங்கி இருப்பதாகவே உணர்கிறேன்.

நன்றி இறைவா!


17 செப்டம்பர் 2015

இரு துருவங்களும் ஒரே தேதியில்!

ஈ.வெ.ரா., மோடி என இரு துருவங்களும் ஒரே தேதியில் பிறப்பெடுத்த விநோதம் போன்றே பல அரசியல் பங்களிப்பார்கள் அடியேன் பிறந்த இந்த செப்டம்பரில் தான் பிறந்திருக்கிறார்கள் என்பது கூட ஒருவகையில் மகிழ்ச்சியே! விமர்சனம் செய்தாவது இவர்களையெல்லாம் காலம் கடந்து நினைவில் வைத்திருக்க போகிறது இந்த மானுட சமூகம். மறக்கமுடியுமா செப்டம்பரை?!

19 மார்ச் 2015

திராவிடமெனும் தீரா விடம்!



உயிர்பலி கூடாது!ன்னு சொன்ன வள்ளலார் இராமலிங்க சுவாமிகளும் ஹிந்து மதம் தான். ஆனால், ஹிந்து மதத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் பின்னோக்கி சொல்லும் திராவிட கழக கொழுந்துகள், மாட்டை அறுக்கும் போராட்டத்தை தமிழ் புத்தாண்டான்று அரங்கேற்ற ஆயத்தமாகியுள்ளது. பகுத்தறிவு என்பது "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்ற குறளின் அடிப்படையில் தான் அமைய வேண்டும். ”நான் சொல்றதையும் அப்படியே நம்பாத. அது உன் அறிவுக்கும் சரின்னு பட்டால் மட்டும் ஏற்றுக்கொள்!”ன்னு திராவிடர் கழகத்தை உருவாக்கிய ஈ.வெ.ரா.வே சொல்லியிருக்கிறார். ஆனால் வீரமணி போன்றோர் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் இது மாதிரியான புரட்சி(?)களையெல்லாம் ஓட்டாக்கி, எந்த கட்சிக்காவது தந்துவிட கணக்கு போடுகிறார். தப்பு கணக்கு என்றைக்கும் பலிக்க போவதில்லை.

திராவிட கழகத்திற்கு உண்மையாகவே ஹிந்துத்துவ ஆதிக்க பொது புத்தியை எதிர்க்க வேண்டுமென்ற கொள்கை இருந்தால், நேருக்கு நேராக ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகளுக்கு சவால் விடுத்து பாரிய அளவில் போராட்டம் நடத்தலாம். ஆனால், ’தமிழ் பெண்களின் கழுத்திலுள்ள தாலியை அறுப்பேன்’ என போராட்டம் செய்வதை விட கேவலமான செயல் வேறேதுமில்லை. உண்மையாகவே கி.வீரமணிக்கு பகுத்தறிவு இருந்தால், பெண்களின் மாராப்புக்குள் ஒளிந்து கிடக்கும் தாலியை அறுப்பதை விட, பெண்களின் கண்களை தவிர மற்ற அனைத்தையும் மறைத்து அடிமை போல ஆணாதிக்க மனோபாவத்தில் நடத்தும் இசுலாமியர்களின் பர்தாவை அகற்றும் போராட்டத்தை அல்லவா நடத்திருக்க வேண்டும்? திராணி இருந்தால் இது போன்ற பெண்ணடிமை தனத்தை எதிர்த்த ஈ.வெ.ரா.வின் கொள்கையை செயலில் காட்டலாம். மாறாக, காலம் காலமாக பண்பாட்டு காலச்சாரத்தின் அடையாளமாக இருக்கும், பசுக்களையும், தாலிகளையும் அறுத்துதான் பகுத்தறிவை நிரூபணம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதை திராவிடர் கழகமும் புரிந்து கொள்ளும் காலம் தொலைவில் இல்லை. எல்லாவற்றும் எதிர்வினை உண்டு. அதிலும் குறிப்பாக அரசியலாக்கப்படும் எல்லா வினைகளுக்கும், கண்டிப்பாக எதிர்வினைகளும் மோசமாகவே இருக்கும் என்பது வரலாறு. பார்க்கலாம், திராவிட கழகத்தின் எதிர்காலத்தை???

- இரா.ச.இமலாதித்தன்

02 டிசம்பர் 2014

ஈ.வெ.ரா. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா?

எப்போதோ ஈ.வெ.ரா.வை அவதூறாக பேசிவிட்டதாக ஹெச்.ராஜா மீது இரு பிரிவுகளில் இப்போது வழக்கு போட்டிருக்கின்றனர். ஆனால் சமீபத்தில் வைகோ பற்றி பேசியதற்கான எதிர்வினையா இதுவென தெரியவில்லை. ஆனால் இதிலுள்ள ஒற்றுமை என்னவெனில் ஈ.வெ.ரா.வும், வைகோவும் நாயக்கர் சாதியை சார்ந்தவர்கள் என்பது தான். மேலும், திராவிடர் கழகம் என்ற பெயரில் ஊர் ஊராக மேடை போட்டு சகட்டு மேனிக்கு இவனே, அவனேன்னு ஹிந்து மத கடவுளையே (மட்டும்) இழிவு படுத்தும் போது அப்போதெல்லாம் யாரும் இவர்கள் மீது வழக்கு கொடுத்த மாதிரி தெரியவில்லை. தமிழை காட்டுமிராண்டி மொழியென்றும், தமிழனை முட்டாள், அயோக்கியன், தகுதியற்றவன் எனவும் பேச்சிலும் - எழுத்திலும் விசத்தன்மையான அவதூறுகளை தெளித்த ஈ.வெ.ரா. ஒன்னும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லையே. இந்த ஈ.வெ.ரா விசயத்தில் ஹெச்.ராஜா மீது தவறேதுமில்லை. அப்படி அவர் மீது தவறென்றால் காலம் காலமாக ஹிந்து மத கடவுள்களை மட்டும் ஒருமையில் பேசி வரும் ஈ.வெ.ரா.வை பின்பற்றும் அனைத்து திராவிடர் கழகங்களையெல்லாம் தமிழகத்திலிருந்து ஹிந்து மத உணர்வாளர்கள் தான் காலி செய்ய வைக்க வேண்டும்.

24 நவம்பர் 2014

கீழ வெண்மணியும் - வரலாறும்!

விவசாய அறுவடை கூலியாக தரும் ஒரு படி நெல்லிலிருந்து இரு படி நெல் தரவேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டதால் ‘நெல் உற்பத்தியாளர்’ சங்கத்திற்குத் தலைவராக இருந்த இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் அடியாட்களால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் துயர சம்பத்திற்கு பிறகு 'கீழ வெண்மணி' என்ற கிராமம் தமிழக கம்யூனிசத்தின் ஆணிவேராக மாறிபோனது. 36க்கு 12 என்ற நீள அகலம் கொண்ட ஒரு சிறிய வீட்டுக்குள் வைத்து 44 பேரும் தீ வைத்து கொளுத்தப்பட்டனர். இறந்தவர்களில் இரண்டு கர்ப்பிணிகள் உள்பட 20 பெண்கள்; 13 வயதிற்கும் குறைவான 19 சிறுவர்கள்; 70 வயது பெரியவர் உள்பட 5 ஆண்களென மொத்தம் 44 அப்பாவிகள் கொல்லப்பட்ட பிறகும், தன் சாதியை சார்ந்த ஒருவரால் இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டதை அறிந்திருந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கடைசி வரையிலும் எந்தவித பெரிய எதிர்ப்பையும் காட்டவில்லை என்பதும் துரோக வராலாற்றுக்கு ஒரு சான்று. அப்படிப்பட்ட கீழ வெண்மணிக்கு மூன்று மைல் தொலைவில் தான் வண்டலூர் எனும் கிராமமும் உள்ளது.

டெல்டாவில் பெரும்பாலான விவசாயம் சார்ந்த கிராமங்களிலெல்லாம் கம்யூனிசம் மிக வலுவாக கால் பதித்திருந்த நிலையில், கீழவெண்மணிக்கு மிக அருகிலுள்ள வண்டலூரில் கிளை செயலாளர் என்ற மிகச்சிறிய பதவியில் இருந்த என் தந்தை இரா.சம்பந்தம் அவர்களின் தீவிர முயற்சியால், தீவிர கம்யூனிசத்தொண்டர்களை திராவிட கட்சியான அ.இ.அ.தி.மு.க.வில் இணைத்தார் என்பது கடந்த கால வரலாறு. இங்கே திராவிடம் - கம்யூனிசம் என்று ஒப்பிட்டு பேசி எது சரி? எது தவறு? என்பதையெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால், எளியவனுக்கும் நேர்மையான மனத்திடத்துடன் கூடிய ஆளுமை திறனிருந்தால், எந்தமாதிரியான களத்திலும் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை சொல்லவே இந்த பதிவு. மேலும், கம்யூனிசம் பரவியிருந்த மண்ணில் திராவிடத்தை திணித்திருக்கும் போது, திராவிடம் பரவியிருக்கும் இக்காலத்தில் தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாதா என்ன? முடியும்.

வரலாறு என்பது மன்னர் என்று நிறுவுவதில் மட்டுமல்ல; மண் சார்ந்த புது மாற்றத்திலும் உண்டு.

- இரா.ச.இமலாதித்தன்