பெயருக்கு பின்னால் சாதி அவசியமா?

சாதி சார்ந்த பட்டப்பெயரை தன் பெயருக்கு பின்னால் போடலாமா? வேண்டாமா? என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். கரு.பழனியப்பன் அடிக்கடி கருத்து பழனியப்பனாக உருமாறி சொல்லும் எல்லாவற்றையும் அனைவரும் ஏற்க மாட்டார்கள்; ஏற்கவும் முடியாது. தொட்டதற்கெல்லாம் ஹிந்தியத்தை தூக்கிப்பிடிக்கும் நபர்கள் கூட சாதிப்பெயரை தன் பெயரோடு சேர்த்து போட்டுக்கொள்ளும் பெரும்பான்மையான ஹிந்தியர்களை பற்றி பேசுவதே இல்லை.

இந்த விசயத்தில் ஹிந்தியவாதிகள் மட்டுமல்லாது, திராவிடத்தை தோள் மீது சுமக்கும் நபர்களும் கூட, திராவிட நாடுகளென அடையாளப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் வசிக்கும் மலையாளி, கன்னடர், தெலுங்கர்கள் தன் சாதிப்பெயரை போட்டு கொண்டு கெட்டா போய்விட்டார்கள்? என்பதை பற்றி வாய் திறப்பதே இல்லை. மேனன்களும், நாயர்களும், ரெட்டிகளும், ராவ்களும், கவுடாக்களும், நாயுடுக்களும் இதுபோன்ற திராவிட சாதிப்பெயர்கள் இன்றளவும் ஹிந்திய அரசியலோ, திராவிட அரசியலோ, கம்யூனிச அரசியலோ செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்?

திராவிடவாதிகள் கொண்டாடும் ஈ.வெ.ரா.வை பற்றிய திரைப்படத்தை தமிழ்நாட்டில் 'பெரியார்' என்ற பெயரிலும், தமிழகம் தாண்டிய திரையரங்குளில் 'பெரியார் ராமசாமி நாயக்கர்' என்ற பெயரிலும் வெளியிட்டது ஏன்? இதைப்பற்றி விடுதலையே விளக்கமளித்திருந்தது. ஆந்திரா போன்ற பகுதிகளில் சாதிப்பெயரை போடாமல் ஒருவரது பெயரை தனித்து போடுவது மரியாதை குறைவான விசயமாக கருதப்படுவதால் நாயக்கர் பட்டதையும் சேர்த்து போடப்பட்டது. ஆனாலும் அந்த சாதிப் பெயரை மட்டும் குறுக்கே அடித்து காட்டப்பட்டதென முட்டுக்கொடுத்து விளக்கம் கூட தரப்பட்டிருந்தது. ஆனால் அதை எத்தனை பேர் ஏற்றுக்கொண்டார்கள்? இந்த சாதிப்பெயரை பயன்படுத்துவதிலுள்ள எதார்த்தத்தை சொல்ல எவ்வளவோ செய்திகளும் விளக்கங்களும் இருக்கிறது.

'தன்னுடைய சாதிப்பெயரையே பொதுவெளியில் சொல்ல கூச்சப்படும் நபர்களுக்கு மத்தியில், இப்படி சாதிப்பெருமைக்காவும், சாதி திமிருக்காகவும் பட்டப்பெயர்களை பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வது சரியா?' என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். எது சிறுமை? எது அவமானம்? அப்படி நிர்ணயம் செய்தது யார்? இதுபோன்ற உளவியல் தாக்குதலை செலுத்தியவனின் ஆயுதத்தைதானே, தாக்கப்பட்டவனும் எடுக்க வேண்டும்? அந்த லாஜிக்கை விட்டுவிட்டு அவனை சாமி / ஐயா / ஆண்டை என சொல்லி, தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் அந்த பொதுபுத்தியை விட்டுத்தானே முதலில் வெளிவர வேண்டும்?

கபாலி படத்தில் வரும் ஒரு காட்சியில், 'என்னை நீ கோட் சூட் போடக்கூடாதுன்னு சொன்னா அப்படித்தான் போடுவேன்; கெத்தா; ஸ்டைலா, கால் மேல கால் போட்டு உட்காருவேன்டா' என உணர்ச்சி பொங்க நாயகன் கூறும் கருத்தை கேட்டு மெய்சிலிர்த்தால் மட்டும் போதாது. அதை செயலில் காட்டவும் வேண்டும். இங்கே அடிக்கிற வெயிலுக்கு மார்க்கெடிங் எக்சிகியூட்டிவ் மாதிரி கோட்சூட் போட தேவையில்லை. ஆனால் வர்ணாசிரமத்தால் சமூக படிநிலையை திணித்து, குறிப்பிட்டவர்ளை மட்டும் கீழாக காட்டியவனின் முகத்தில் கரியை பூச, அந்த சாதியின் பெயரையே பெருமையாக போட்டுக்கொள்வது தான் மிகச்சரியான எதிர்வினையாக இருக்க கூடும். அதை மறந்து விட்டு, யாருமே சாதிப்பெயரை போட்டுக்கொள்ளாதே என அடாவடி அரசியல் செய்வதை சமத்துவ புரட்சியாக பார்க்க முடியாது.

இன்றளவும் இங்கே ஏகப்பட்ட பேர் கைவிடப்பட்டவர்களாகவும், அநாதைகளாகவும் இருக்கின்றனர். ஆனால் பெரும்பான்மையானோர் தாய் தந்தையோடு தான் வாழ்கின்றனர். எனவே, 'கைவிடப்பட்டவர்களுக்கு இனிசியல் தெரியவில்லை; அதனால் அவர்களுக்காக நாமும் நம் தந்தையின் பெயரான இனிசியலை மறைத்து நம் பெயரை மொட்டையாக எழுதுவோம்; ஏனெனில் அவர்களது தாழ்வு மனப்பான்மைக்கு நாம் காரணமாகி விடக்கூடாது' என யாராவது பேசினால், எப்படி சிரிப்பு வருமோ அப்படித்தான் சிரிப்பு வருகிறது, கருத்து பழனியப்பன்களின் இதுபோன்ற கருத்துகளை கேட்கும் போது!

எதார்த்தம் என்னவெனில், 'யார் தமிழன்?' என அடையாளம் காணவே இந்த பட்டப்பெயர் தான் உதவுகிறது. பல்வேறு மொழி பேசும் இனங்களும், பலதரப்பட்ட இனக்குழுக்களும் இம்மண்ணில் தங்களை போலியாக இம்மண்ணின் மைந்தர்கள் என வேசம் போட்டு அரசியல் செய்யும் அவலத்தை கலையக்கூட, தான் சார்ந்த இந்த சாதியின் பெயரும், பட்டப்பெயரும் தான் பேருதவி செய்கின்றன.

- இரா.ச. இமலாதித்தன் தேவர்.
(அகமுடையார் இனக்குழு, தமிழன்)


0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment