16 ஜூன் 2017

யார் அகமுடையார் என தீர்மானிப்பது யார்?



ஊருக்கொரு சங்கம் வைத்திருக்கும் மேன்மை பொருந்திய அகமுடையார் பெரியோர்களுக்கு, தன் இனக்குழுவிற்கான பட்டங்களை பற்றிய அடிப்படை அறிவே அறவே இல்லாமல் இருக்கிறது. தேவர் என்பதோ, சேர்வை என்பதோ, பிள்ளை என்பதோ சாதி அல்ல. அவையெல்லாம் வெறும் பட்டம் மட்டுமே. இவற்றுள், தேவர் என்ற பட்டம் மூன்று சாதிகளுக்கு உண்டு; அதுபோல, சேர்வை என்ற பட்டம் எட்டு சாதிகளுக்கு உண்டு; இந்த வரிசையில் பிள்ளை என்ற பட்டமோ எழுபதுக்கும் மேற்பட்ட சாதிகளுக்கு உண்டு. ஒரே மாதிரியான பட்டங்களை மட்டும் வைத்து, ஒரு இனக்குழுவை ஒன்றாக்கி விட முடியாது.

ஒரு காலத்தில், சேர்வை பட்டம் உள்ளவர்களே அகமுடையார் என தென்னக உறவுகளில் சிலர் நினைத்து கொண்டிருந்தனர்; அதே காலத்தில் டெல்டா உறவுகளில் சிலரோ, தேவர் என்ற பட்டமுள்ளவர்களே அகமுடையார் என நினைத்திருந்தனர். கொங்கு பகுதிகளிலும், அகமுடையார்களுக்கு தேவர் பட்டமே என்பதால், கொங்கு - தெற்கு - டெல்டா என ஒரே இனக்குழு என்ற உண்மையை உணரத்தொடங்கினர். காலம் எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை கொண்டது என்பதற்கிணங்க டெல்டா - தெற்கு என பிரிவினையில்லாமல் பட்டங்களை கடந்து, இன்று அனைவரும் அகமுடையாராக ஒன்றிணைந்து இருக்கின்றனர்.

அதுபோன்றதொரு சூழல் தற்போதும், அகமுடையார்களுக்குள் கொஞ்சம் இடைவெளியை ஏற்படுத்தி வருகிறது. வட மாவட்டங்களிலுள்ள அகமுடையார்களுக்கு முதலியார் - உடையார் - பிள்ளை பட்டங்களே பெரும்பான்மையாக உள்ளது. முதலியார் என்பதால் செங்குந்தர் என்பதாகவும், உடையார் என்பதால் பார்கவகுலம் என்பதாகவும், பிள்ளை என்பதால் வெள்ளாளர் என்பதாகவும் சிலர் குழப்பமடைகின்றனர். இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில், தேவர் பட்டம் உள்ளதால் அகமுடையாரும் - கள்ளரும் ஒன்றென சொல்ல முடியாது; சேர்வை பட்டம் இருப்பதால் வலையரும் - அகமுடையாரும் ஒன்றென சொல்ல முடியாது; பிள்ளை பட்டத்தை பற்றி சொல்லவே வேண்டாம், அது பலதரப்பட்டவர்களுக்கும் அந்த பட்டம் உண்டு. அதுபோலவே முதலியார் பட்டமும், உடையார் பட்டமும், பிள்ளை பட்டமும் அகமுடையாருக்கு உண்டு என்பதையும், அந்த பட்டத்தை மட்டுமே காரணம் சொல்லி, மற்ற இனக்குழுக்களோடு வடக்கத்திய அகமுடையாரை பிரித்து விட முடியாது என்ற உண்மை நிலையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

தென்னகத்தில் 'சேர்வார் / சேர்வை' என்றால் அது அகமுடையாரை மட்டுமே குறிப்பது போல், டெல்டாவில் 'தேவர்' என்றால் அது அகமுடையாரை மட்டுமே குறிப்பது போல், வடக்கத்திய பகுதிகளில் 'முதலியார் /உடையார்' என்றால் அது அகமுடையாரையே குறிக்கும் என்ற எதார்த்தத்ததையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதிரியான உண்மை கள நிலவரங்களை பற்றி தெரியாததாலும், சாதி பட்டங்களை பற்றிய அடிப்படை அறிவில்லாததாலும், அகமுடையார் சங்கத்தின் தலைமை பொறுப்பிலுள்ளவர்களே, பட்டங்களால் அகமுடையாரை பிரிக்க முயல்கின்றனர். தகவல் தொடர்பு ஊடகங்கள் சூழ்ந்த இக்காலத்திலும் கூட, பொறுப்பில் உள்ளவர்கள் அகமுடையார் இனக்குழு பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருப்பது வேதனையான விசயம்.

சென்னையை தலைமையிடமாக கொண்ட 'அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம்' ஆண்டு தோறும் அதிக மதிப்பெண் பெற்ற அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த 10 / +2 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. ஆனால் அதற்கான அடிப்படை தகுதியாக 'முக்குலதோர் - அகமுடையார் மட்டும்' என்ற அளவீடும் வைத்திருக்கின்றனர். இந்த லாஜிக்கே புரியவில்லை. போலியான அரசியல் கூட்டமைப்பான 'முக்குலம்' என்ற இல்லாத ஒன்றை அகமுடையாருக்கான அளவீடாக வைப்பது எவ்வகையில் நியாயம்?

திருவண்ணாமலை பகுதியிலுள்ள அகமுடையார் இனக்குழு சேர்ந்த சகோதரி இந்தாண்டு +2ல் 1136 மதிப்பெண் பெற்றிருக்கிறார். பொருளாதார சூழ்நிலையால் மேற்படிப்புக்காக சிரமப்படுவதால், அங்குள்ள உறவினரின் ஒத்துழைப்போடு சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்திற்கு, கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். சங்கத்தை சேர்ந்தவர்களோ, வடக்கிலுள்ள அகமுடையார்கள் வேறு; முக்குலத்தோர் அகமுடையார் வேறு என்று, அரிய கண்டுபிடிப்பாக புது(?) வரலாறை சொல்லி விண்ணப்பத்தை மறுத்திருக்கின்றனர். இந்த மாதிரியான கூத்தையெல்லாம் கண்டு, சிரிப்பதா? கோபப்படுவதா?

ஒரு பக்கம், முக்குலத்தோர் என பேசும் மறவர் தலைமையிலான அமைப்புகளும், கள்ளர் தலைமையிலான அமைப்புகளும் கூட திருண்ணாமலை போன்ற வட மாவட்டங்களில், முதலியார் - உடையார் பட்டம் கொண்ட அகமுடையார்களை ஒன்று திரட்டி மாநாடு கூட்டம் நடத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம், தென்னகத்தை சேர்ந்த அகமுடையார் அமைப்புகளும், வடக்கிலுள்ள அகமுடையார் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் வலுவான கட்டமைப்பை உருவாக்கி அகமுடையார் இனக்குழுவின் ஒற்றுமையை ஒருங்கிணைக்கும் வேளையில், அறியாமையில் இருக்கும் அகமுடையாரின பெரியோர்களின் இதுபோன்ற செயல்கள் மனவருத்தத்தை கொடுக்கிறது.

தன் இனக்குழு பற்றிய வரலாற்று உண்மைகள், தெரிந்தால் பேசலாம்; தெரியவில்லை என்றால் அமைதி காக்கலாம். அரைகுறையாக தெரிந்து கொண்டு குழப்பும் (சங்கம் / அமைப்பு / இயக்கம்) பதவியிலுள்ள பெரியோர்கள், கொஞ்சம் தன் இனக்குழு சார்ந்த வரலாற்றை கொஞ்சம் அறிந்து கொள்ள முற்படுங்கள். அதன் பிறகு, தலைவராகவும் - செயலாளராகவும் - பொறுப்பாளராகவும் - அமைப்பாளராகவும் பதவியை அலங்கரியுங்கள்.

- இரா.ச. இமலாதித்தன்

#அகமுடையார் #தேவர் #சேர்வை #முதலியார் #உடையார் #பிள்ளை #Agamudayar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக