பசும்பொன் தேவரை பிடிக்காதவர்களும், காமராஜரை பிடித்தவர்களும் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு:-
1936-ல் நகரசபை தேர்தல் நடைபெற்ற இருந்த சமயம், அன்று காமராஜர்
விருதுநகரில் ஒரு சாதாரண காங்கிரஸ் தொண்டர். சிறந்த தேச பக்தராகத்
திகழ்ந்தார். அன்று வாக்குரிமை உள்ள நாடார் சமூகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு
பேர் ஜஸ்டிஸ் கட்சியில் இருத்தால் நகரசபை தேர்தலில் காமராஜரை நிற்க வைக்க
வேண்டுமென பசும்பொன் தேவர் நினைக்கிறார்
ஆனால் காமராஜருக்கு ஓட்டுரிமை இல்லை. காரணம் அவர் பெயரில் எந்த ஒரு
சொத்தும் இல்லை. காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையாரைப் பார்த்து “உங்கள்
மகனை தேர்தலில் நிற்க வைக்கப் போகிறேன். உங்கள் பெயரில் உள்ள வீட்டை
காமராஜ் பெயரில் எழுதி வையுங்கள்” என்று பசும்பொன் தேவர் கேட்கிறார்.
யாருக்கு சொத்து இருக்கிறதோ, யார் வரி செலுத்துகின்றாரோ அவர் தான்
வாக்காளாராக முடியும். அதனால் தான் பசும்பொன் தேவர் சிவகாமி அம்மையாரிடம்
வீட்டை மாற்றி எழுதி வைக்கக் கேட்டார். அதற்கு அந்த அம்மையார் அவர்கள்
“எனக்கு இருப்பது இந்த ஒரு வீடு தான். என் மகனை ஓட்டராக்குவதற்காக இந்த
வீட்டை அவன் பேருக்கு எழுதிவைக்க முடியாது. எனக்கு ஒரு பெண் குழந்தை
இருக்கிறது. நானோ விதவை. எங்கள் சாதியில் ஒரு வீடாவது இருந்தால் தான்
அந்தப் பெண்ணுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைப்பார். என் மகன் காமராஜ்
வீட்டுக்கு உதவாத பிள்ளையாக போய்விட்டான். அவனுக்கு எழுதி வைத்துவிட்டு
நானும் என் பெண்ணும் தெருவில் நிற்கமுடியாது” என்று காமராஜரின் தாயாரும்
மறுத்து விட்டார்.
அதற்கு மேல் பசும்பொன் தேவர் எதுவும்
யோசிக்காமல் நான்கு வெள்ளாட்டை விலைக்கு வாங்கி, அதற்கு விருதுநகர்
நகரசபையில் காமராஜர் பெயரில் வரி செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொண்டு ஒரு தகர
வில்லையை வரிக் கட்டியதன் அடையாளமாக வெள்ளாட்டின் கழுத்தில் கட்டி விட்டு
காமராஜரை வாக்களராக்கி தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார்
பசும்பொன் தேவர்.
பின்பொரு சட்டமன்ற தேர்தல் சமயம், இரவோடு இரவாக
காமராஜரை காரில் தூக்கி போட்டு பட்டிவீரன்பட்டி சென்று அங்கேயுள்ள
சௌந்திரபாண்டிய நாடார் வாழைத் தோப்பில் கொலை செய்து புதைத்துவிட வேண்டும்
என்று காமராஜருக்கு எதிரான அரசியல் எதிரிகள் தீட்டிய திட்டம் பற்றிய தகவல்
பசும்பொன் தேவருக்கு கிடைக்க, உடனே தேவர் விருதுநகருக்கு வருகிறார்.
காமராஜரை சந்தித்து "மேலே சொன்னவைகள் உண்மை தானா?" என்று கேட்கிறார்.
‘ஆமாய்யா, அப்படித்தான் சொல்கிறார்கள்” என்றார் காமராஜர். அன்று இரவே
விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் பொதுக் கூட்டம். காமராஜருக்கு ஓட்டுக்
கேட்டு பசும்பொன் தேவர் பேசினார்.
"இப்போது காமராஜரை கொலை செய்து
தீர்த்துக் கட்டி விடலாம் என்று பேசுவதாக கேள்விப்படுகிறேன். காமராஜர்
ஏழைத்தொண்டன் என்று இங்கே உள்ள ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் நினைத்தால்
அவர்களுக்காக அனுதாபப்படுகிறேன். காமராஜருக்குப் பின்னால் காங்கிரஸ் மகா
சபை இருக்கிறது. அதே மகா சபையில் எங்களைப் போல் எந்தவித தியாகத்திற்கும்
தயாராக உள்ள கோடான கோடிப் பேர் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இதை மீறி காமராஜர் மீது ஒரு ஒரு சிறு துரும்பு படுமேயானால் இங்கே ஜஸ்டிஸ்
கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.வி.ராமசாமி நாடாருக்கு நான்
எச்சரிக்கையாகச் சொல்கிறேன். நீங்கள் வீதியில் நிம்மதியாக நடமாட முடியாது.
இரும்புக் கவசம் போட்டுக் கொண்டுதான் நடமாட முடியும்” என்று வேகமாகப்
பேசினார்.
அந்தப் பேச்சுக்கு பின்னால் பசும்பொன் தேவருடைய
ஆதரவாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து வரலாம், நான் கிராமங்களுக்குப் போய்
ஒட்டுக் கேட்கும் பொழுது எனக்கு போலீஸ் பந்தோபஸ்து வேண்டும் எண்டு
கலெக்டரிடம் கேட்டும் பலன் இல்லாததால், வி.வி.ராமசாமி நாடார்
போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். காமராஜர் சட்டசபைக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டார். பசும்பொன் பெருமகனாருடைய ஆதரவு மட்டும் அன்றைக்கு
காமராஜருக்கு இல்லாமல் இருந்திருக்குமானால் தேர்தலில் வெற்றி பெற முடியாது
என்பது மாத்திரமல்ல, காமராஜரை ஜஸ்டிஸ் கட்சியினுடைய பெரும்புள்ளிகள்
உயிரோடு விட்டு வைத்திருப்பார்களா? என்பது கூட சந்தேகம் தான். கிங்மேக்கர்
என்று அழைக்கப்பட்ட காமராஜரையே அரசியலில் அடையாளப்படுத்திய பசும்பொன்
உ.முத்துராமலிங்கத் தேவர் பற்றி பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையான
விசயமே!
- இரா.ச.இமலாதித்தன்