பசும்பொன் தேவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பசும்பொன் தேவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 மார்ச் 2016

அரசியல் களத்தில், நேதாஜியின் பேரனும் - பசும்பொன் தேவரின் பேரனும்!


நேதாஜியின் பேரனுக்கு கூட நேதாஜி உருவாக்கிய பார்வார்ட் ப்ளாக் கட்சியில் உரிய அங்கீகாரம் கொடுக்காததால், இன்றைக்கு அவர் பா.ஜ.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக்க பட்டிருக்கிறார் என்பதுதான் சமகால அரசியல் நிலவரம்.

மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும் மட்டும் தற்போது ஓரளவுக்கு அனைத்து தரப்பட்ட மக்களாலும் அறியப்படுகின்ற பார்வார்ட் ப்ளாக் கட்சியும், அ.இ.அ.தி.மு.க போல அகில இந்திய கட்சிதான் என்ற நிலைக்கு மாறி போய்விட்டது. அப்படிப்பட்ட பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தேசிய தலைவர்களில் ஒருவராக இருந்த பசும்பொன் தேவரின் பேரனுக்கும் கூட பார்வார்ட் ப்ளாக் கட்சி உரிய அங்கீகாரம் கொடுக்காததால் தனியாக பசும்பொன் தேசிய கழகம் என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார்.
ஆனால் இதையே சாதகமாக சொல்லக்கூடும். 'பார்த்தீர்களா, நேதாஜி பேரனோ, பசும்பொன் தேவர் பேரனோ யாராக இருந்தாலும், அவர்களை கட்சியில் இணைக்காமல் வாரிசு அரசியலையும் ஊக்குவிக்காத கட்சியாக பார்வார்ட் ப்ளாக் கட்சி விளங்குகிறது' என வாதத்திற்காக சொல்லிக்கொள்ளலாம்.

சாமானியனாக என் பார்வையில், இருபெரும் தலைவர்களின் பேரன்களும் அரசியல் பக்கமே வராமல் இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை. ஆனால், அவர்கள் இருவருக்கும் அரசியலில் பயணிக்க விருப்பம் இருக்கும் போது, அதை பார்வார்ட் ப்ளாக் கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டதென்றே தோன்றுகிறது.

நேதாஜியும், பசும்பொன் தேவரும் வளர்த்தெடுத்த கட்சியில் அவர்களது பேரன்களை கூட உறுப்பினராக்க முடியவில்லை என்ற எதார்த்தமும் புரியாமல், சாதிக்கட்சி என்று முத்திரையும் குத்தப்பட்டதென்ற உண்மையும் உணராமல், இந்த சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ள பார்வார்ட் ப்ளாக் கட்சி, குறைந்தது ஐந்து தொகுதிகளையாவது அதிமுக கூட்டணியில் வாங்கி, கட்சியை பலமாக்காட்டும்.

ஜெய்ஹிந்த்!

- இரா.ச. இமலாதித்தன்

02 நவம்பர் 2015

ஆயிரம் கோடி ஊழலையும் ஆதரிக்கும் சாதி பாசம்!

"சாதி என்பது பச்சை அநாகரிகம். சாதியையும், நிறத்தையும் பார்ப்பவன்
அரசியலுக்கு லாயக்கில்லை. சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் அர்த்தமி்ல்லை. சாதிக்காக எதையும் செய்பவன், அரசியலில் புகுந்தால் அரசியல் கெடும். சாதியும், நிறமும் அரசியலுக்குமி்ல்லை; ஆன்மீகத்துக்குமி்ல்லை."

- பசும்பொன் தேவர்.

சசிகலா கும்பல் ஆயிரம் கோடிகளுக்கு தியேட்டரை வாங்கி இருக்கிறார்களென ஊடகங்கள் ஆதாரத்தோடு நிரூபித்தும், அதை தி.மு.க. என்ற கட்சியின் ஊழலோடு ஒப்பிட்டு திசை திருப்பி விடுவதை போன்றதொரு கேவலமான செயல் வேறொன்றுமில்லை. பி.ஆர்.பி கிரானைட் ஊழலையும், சசிகலா ஊழலையும் சாதி பாசத்தோடு அணுகும் ஒவ்வொருவரும், பசும்பொன் தேவரின் கொள்கையை தங்களது செருப்பால் மிதித்து, அவரின் உடலின் நெஞ்சத்து குருதியை உறிஞ்சி குடிப்பதற்கு சமம். நேர்மையாக இருக்க தெரியாதவனுக்கு எதற்கு மீசை மயிர்? அதையெல்லாம் மழித்து விட்டு மானம் ரோசமில்லாமல் ஊர் பணத்தை ஊழல் செய்து சுகபோகமாய் வாழும் யாருடைய காலையாவது கழுவி வயிற்றை கழுவலாம். அடத்தூ!

- இரா.ச.இமலாதித்தன்

31 அக்டோபர் 2015

கோவன் கைதை கண்டிப்போம்!



தமிழக அரசின் மதுக்கடைகளை எதிர்த்து 'மக்கள் அதிகாரம்' அமைப்பினர் மூலமாக, “மூடு டாஸ்மாக்கை மூடு", "ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்” என்ற இரண்டு பாடல்களும் வினவுத் தளத்தில் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர் கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது 124 ஏ - தேசத்துரோக நடவடிக்கை, 153 - சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 - அவதூறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துரிமை, பேச்சுரிமையை கூட கொடுக்க இயலாத கையாலாகாத மக்களாட்சி அரசின் வெளிப்பாடுதான் இந்த செயல். தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களை கூட ஆதரித்து பேச, எழுத, செயல்பட உரிமை கொடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வழங்கிய ஜனநாயகத்தின் நேர்மை இதுதானா?
எதை ஆதரிக்க வேண்டும்? எதை எதிர்க்க வேண்டும் என்பதை கூட ஆளும் அரசாங்கங்கள் முடிவெடுத்தால், அது எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்? சர்வாதிகாரத்தின் உட்சம் இது. நாட்டுப்புற பாடகர் தோழர் கோவனை அரசு விடுதலை செய்ய அனைத்து தமிழ் அமைப்புகளும் மிகப்பெரிய அளவிலான போரட்டக்களங்களை உருவாக்க வேண்டும்.

நம்மை அடிமை படுத்திய அந்நியன் அன்று, பேச்சுரிமையை அடக்க பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மீது வாய்ப்பூட்டு சட்டம் தான் போட்டான். இன்று தேவரது ஜெயந்தி நாளில் அவருக்கு போட்ட வாய்பூட்டு சட்டத்தை விட மோசமான கைதை அரங்கேற்றிய அரசாங்கத்தின் நோக்கம் தான் என்ன? குடிபோதைக்கு அடிமையாகி தமிழன் தன் சுயத்தை இழக்க வேண்டும் என்பது தானா? தமிழனின் சிந்தனையை மழுங்கடித்தால் தானே, அந்நியர்கள் ஆட்சியில் அமர முடியுமென்ற ராஜதந்திரமா? தமிழனே போதையிலிருந்து விழித்தெழுந்து தமிழ் மண்ணை தமிழனே ஆள வழிவகை செய்!

- இரா.ச.இமலாதித்தன்

30 அக்டோபர் 2015

முக்குலத்தோர் அரசியல் பேசும் இளைஞர்களே!

முக்குலத்தோர் அரசியல் பேசும் இளைஞர்களே!

பசும்பொன் தேவரை மட்டும் தலைவனாக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் வழிகாட்டிய, ஆன்மீக தலைவராக விவேகானந்தரையும், அரசியல் தலைவராக நேதாஜியையும் ஏற்று கொள்ளுங்கள். மற்ற யாரும் உங்களுக்கு தலைவனாக இருக்க முடியாது. அக்டோபர் மாதம் மட்டும் உயிர்த்தெழும் சாதிக்காரனையெல்லாம் தலைவனென நினைக்காதீர்கள். அந்த மாதிரியான நபர்களையெல்லாம் உறவுக்காரனாகவோ, சாதிக்காரனவோ பாருங்கள், தயவு செய்து தலைவனென சொல்லாதீர்கள். அரசியல் கட்சிகளிடம் ஒன்றிரண்டு சட்டமன்ற தொகுதிகளை யாசகம் கேட்பவன் தலைவனில்லை.
இசுலாம் மார்க்கத்தில் இறைவன் ஒருவனே; ஆனால் இறைத்தூதர்கள் இருப்பது போல, தலைவன் ஒருவனாக பாவியுங்கள். சொந்த பலத்தோடு ஒரு தொகுதியில் சுயேட்சையாக தனித்து நின்று வெற்றி பெற வக்கிலாதவர்களின் பின்னால், மாநில - மாவட்ட - ஒன்றிய பதவிக்காக தயவு செய்து விலை போகாதீர்கள்.

 "அரசியலிலும், ஆன்மீகத்திலும் சாதி பார்க்க கூடாது" என்று சொன்ன பசும்பொன் தேவரையே, சாதி தலைவனாக்கிய பெருமை முழுக்க முழுக்க சாதி அமைப்புகளையே சாரும். "தேசியம் எனது உடல். தெய்வீகம் எனது உயிர்!" என்ற தன் சொல்லுக்கேற்ப வாழ்ந்துகாட்டிய பசும்பொன் தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

அனைத்து தேசபக்தர்களுக்கும் தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்!

மனிதர் குல மாணிக்கத்தை, மறவர் குல மாணிக்கம் என்றீர். பொதுவுடைமை சித்தாந்தவாதியை, பெண் பித்தர்களோடு ஒப்பீடு செய்தீர். விவேகமில்லாத வீரம் முரட்டுத்தனம் என்றவரை, கையில் அரிவாள் கொடுத்தீர். பெண்களின் கூந்தல் மீது கால் வைக்கமாட்டேனென்று சொன்னவரை, கால் மேல் கால் போட்டு எடிட் செய்தீர். உடல் முழுக்க திருநீர் சந்தனத்தோடு மாலை அணிவித்து இருந்தவருக்கு, கிலோ கணக்கில் தங்க சங்கிலிகளை கொடுத்தீர். ஆங்கிலேயன் அஞ்சி வாய்பூட்டு சட்டம் போட்டதை, உங்கள் வாயாலே அசிங்க படுத்தினீர். சாதி வேறுபாடின்றி தன் சொத்தான 32 கிராமங்களையே பகிர்ந்த ஈகியை, தன் வாழ்நாளில் பெண் வாசமின்றி வாழ்ந்த யோகியை, உங்கள் செயல்களாலேயே பாவி ஆக்கினீர். அந்நியரிடமிருந்து நாட்டை காக்க இராணுவத்திற்கு ஆட்களை அனுப்பியவரின் படத்தை வைத்து, தமிழர்களுக்குள் சாதி சண்டையை உருவாக்கினீர். உலக அரசியல் பேசியவரை, உள்ளூர் சாதி அரசியலுக்கு பயன்படுத்தினீர். தேசியத்தலைவனை, உங்க அரசியல் போதைக்காக சாதி தலைவனாக்கினீர். இன்னமும் என்ன செய்ய காத்திருக்கிறீர்?! உங்க அரசியல் அரிப்புக்கு தேவரை சொறியாதீர்.

அனைத்து தேசபக்தர்களுக்கும் தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

14 செப்டம்பர் 2015

சாதிக்கு பின்னாலுள்ள ஊழல்!



தன் பரம்பரை சொத்தையே சாதி வேறுபாடின்றி பிரித்து கொடுத்த பசும்பொன் தேவரின் படத்தை போட்டு, பாரம்பரிய மண்ணையே மலையோடு கூறுபோட்ட பி.ஆர்.பி.க்காக பரிந்து பேசுவது சரியா? கொள்ளையடிக்கிறவனுக்கும், கொலை பண்றவனுக்கும் சாதி தான் கடைசி அஸ்திரம் என்பதற்கு இந்த போஸ்டரும் ஓர் உதாரணம்.

18 ஜூன் 2015

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை அகமுடையார்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்?

அகமுடையார் இனக்குழுவினர் அனைவரும் இந்த பதிவை கண்டிப்பாக படித்து, மற்றவர்களுக்கும் பகிரவும்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை அகமுடையார்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்? இந்த கேள்வியை பல இடங்களில் பலதரபட்டோர் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். எதற்காக இந்த கேள்வியை கேட்கிறார்கள் என்று பார்த்தால் பல விசயங்களின் மூலம் இந்த கேள்வி சரியேயென படும். பொதுவாக பசும்பொன் தேவர் தன்னை சாதிய அடையாளத்தோடு காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் கூட, ஒரேவொரு முறை அவர் சார்ந்த ஆப்பநாடு மறவர் சங்க மாநாட்டு கூட்டத்தில் பங்கேற்று பேசியிருக்கிறார். இது மட்டுமே அவர் கலந்து கொண்ட சுயசாதி கூட்டமாக இருக்கின்றது. மேலும் எந்த இடத்திலும் தன்னை மறவரென சொல்லிக்கொள்ளாமல் சாதி கடந்து தேசிய அரசியலில் ஈடுபட்டவர். அப்படிப்பட்டவரையே மறவர் என்று பெருமை பேசும் சம்பவங்களும் இங்கே அரங்கேறி கொண்டுதான் வருகின்றன.

முக்குலத்தோர் என அடையாளப்படும் கள்ளர் - மறவர் - அகமுடையாரில், மறவர் உரிமை கொண்டு பசும்பொன் தேவரை கொண்டாட பல காரணங்கள் இருக்கின்றன. அதுபோலவே கள்ளர்களும் பசும்பொன் தேவரை கொண்டாட காரணம் உண்டு. ஆங்கிலேயரின் அடக்குறையால் தமிழகத்தில் குற்றப்பரம்பரை சட்டத்தை நிறுவி திட்டமிட்டே கள்ளர் உட்பட பலதரப்பட்ட இனக்குழுக்குளை அடக்கி ஒடுக்கினர். அந்த கைரேகை சட்டத்தை பல்வேறு வடிவங்களில் ஒவ்வொரு காலக்கட்டங்களில் எதிர்த்து கொண்டிருந்த போது, பசும்பொன் தேவரும் தன் பங்களிப்பை கொடுத்து அதற்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வை கொண்டு வர பாடுபட்டார். கடைசியாக அந்த சட்டம் கைவிட பட்டது. ஏதோவொரு வகையில் உதவியிருக்கிறார் என்ற காரணத்திற்காகவே கள்ளர்களும் பசும்பொன் தேவரை கொண்டாடுகிறார்கள்.

இந்த இரண்டு இனக்குழுக்குளும் பசும்பொன் தேவரை கொண்டாட அழுத்தமான காரணங்கள் உண்டு. ஆனால் அகமுடையார்களும் இன்று பசும்பொன் தேவரை கொண்டாட என்ன காரணம் இருக்க முடியுமென ஆராய்ந்தால் நிச்சயமாக ஒன்றுமே இல்லை என்பது தான் பதிலாக கிடைக்கிறது. அகமுடையார்களுக்கு சேர்வை, முதலியார், உடையார், பிள்ளை என்ற பட்டங்கள் போலவே தேவர் என்ற பட்டமும் பெரும்பான்மையாக வழங்கப்பட்டு வருகிறது. அகமுடையார்களுக்கு தஞ்சை - திருவாரூர் - நாகப்பட்டினம் உள்ளடக்கிய டெல்டா பகுதியெங்கும் இந்த தேவர் பட்டமே இருக்கின்றது. இதுபோல கோவை, மதுரை, திருச்சியென தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தேவர் பட்டம் அகமுடையாருக்கு இருக்கின்றன. இந்த தேவர் பட்டம் இருக்கும் அகமுடையாரில் பெரும்பாலானோருக்கு பசும்பொன் தேவரை மறவரென தெரியவே இல்லை, மாறாக, பசும்பொன் தேவரை அகமுடையார் எனவே நம்பிக்கொண்டிருக்கும் நபர்களும் பலருண்டு. இதை நான் என் கண் கூடாகவே பார்த்து, கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்.

என் பெரிய தாத்தாவான அ.பக்கிரிசாமித்தேவர் கூட நேதாஜி படையில் இருந்தவர் தான். எங்கேயோ உள்ள சுபாஷ்சந்திரபோஸுக்கும், திருக்குவளை அருகிலுள்ள பக்கிரிசாமித்தேவருக்கும் என்ன தொடர்பு?யென யோசித்தால், சட்டென பசும்பொன் தேவரே நினைவுக்கு வருவார். அந்த காலம் தொட்டே பசும்பொன் தேவரை, அகமுடையாரென நம்பியிருந்ததை நம்மால் அறிய முடிகிறது. எந்த வகையிலும் அகமுடையாருக்கு ஆதரவாக இல்லாத பசும்பொன் தேவரை, இன்றைக்கு தலையில் வைத்து கொண்டாடி வருவதும் அதே அகமுடையார் இனக்குழு தான். டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் அகமுடையார் வீட்டு திருமணவிழா பதாகைகளில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் படம் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக பசும்பொன் தேவர் படம் இருக்கும். அந்த அளவுக்கு பைக், கார் என எல்லா இடங்களிலும் அகமுடையாரோடு பசும்பொன் தேவரும் இருக்கின்றார் என்றால் அது அகமுடையாரின் அன்பை தான் வெளிப்படுத்துகிறது.

அப்படிப்பட்ட அகமுடையாரை வரலாறு எழுதுகிறேன் என்ற பெயரில் மருதுபாண்டியரையும், அகமுடையாரையும் ஓரம்கட்டிவிட்டு முக்குலத்தோர் என அறியப்படும் கள்ளர்-மறவர்-அகமுடையாரில் இருகுலத்தோர் மட்டும் செயல்படுவது வேதனையான விசயமே. ஆனாலும், அகமுடையாரை புறக்கணித்து விட்டு எந்த வரலாறையும் எழுதவும் முடியாது. இனி எந்த புது வரலாற்றையும் படைக்கவும் முடியாது. இது தான் எதார்த்தம். அகமுடையாருக்கு முக்குலம் தேவையில்லாமல் கூட வருங்காலத்தில் போகலாம். ஆனால் முக்குலம் என்ற குடைக்கு அகமுடையார் கண்டிப்பாக தேவை. ஏற்கனவே முக்குலமென்ற குடைக்குள் பல ஓட்டைகள் விழுந்து கொண்டிருக்கின்றன. அதை சரி செய்ய வக்கில்லாமல், அகமுடையாரை ஒதுக்கினால் முக்குலம் என்ற குடை கிழிந்து தொங்குவதை யாராலும் தடுக்க முடியாது. இன்னும் கூட வெளிப்படையாகவே சொல்கிறேன், எழுத்து என்ற ஆயுதத்தை முக்குலத்தோரில் அகமுடையார் மட்டுமே மிக வீரியமாக பயன்படுத்த முடியும். மற்ற இருவரை விட வரலாற்றை எழுத அதிகம் தகுதி படைத்தவர்கள் அகமுடையார்களே. அதற்கு பல உதாரணங்கள் உண்டு, இன்றைக்கு பசும்பொன் தேவரை பற்றிய வரலாற்று நூலாக பெரிதும் மதிக்கப்படும், "முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்" என்ற நூலை எழுதியதே ஏ.ஆர்.பெருமாள் என்ற அகமுடையார் தான்!

உண்மை வரலாற்றை அகமுடையாரும் எழுத தொடங்கினால் முக்குலம் என்ற பலூன் உடைய தொடங்கும். அகமுடையாரை அனுசரித்து போகவில்லையென்றால், இழப்பு அனைவருக்கும் தான். ஏற்கனவே அரசியலிலும் சரி, பதவியிலும் சரி முக்குலத்தோர் என்ற அடிப்படையில் அகமுடையாருக்கு இழப்பு தான். அதனால் இனி ஏற்படும் எந்த இழப்பும் அகமுடையாருக்கும் பெரிய விசயமே இல்லை என்பதையும் மற்ற இருகுலத்தோரும் புரிந்து கொண்டால் சரி.

- இரா.ச.இமலாதித்தன்

06 பிப்ரவரி 2015

பார்வார்ட் ப்ளாகிற்கு பின்னால் தேவர் சாதி அமைப்புகள்!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரால் தமிழகத்தில் உச்சம் தொட்ட அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியை இன்றைக்கு யார் யாரோ வளர்த்தெடுக்க, கைப்பற்ற நினைக்கிறார்கள். நல்ல விசயம். ஆனால், ”பசும்பொன் தேவரின் பேரன்” என்ற அடையாளத்தோடு அரசியலில் கால் பதித்த திரு.வெள்ளைச்சாமித்தேவரோ, அவருக்கு பின்னால் அரசியலில் நுழைந்த அவரது அண்ணன் திரு.ஜோதி முத்துராமலிங்கத்தேவரோ, ஏன் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியில் இணையாமல் தனியாக, ’பசும்பொன் தேசிய கழகம்’ என்ற அமைப்பில் இருக்க காரணம் என்ன? தேவரின் பேரன் என சொல்லும் இவர்களையே, அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியில் இணைய தடுப்பது யார்? எது இவர்களுக்கு இடையூறாக இருக்கின்றது? தேவரை வைத்து தெருவுக்கு தெரு கட்சி - அமைப்பு - பாசறை - கழகம் - இயக்கம் என அரசியல் செய்யும் யாருக்கும் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியில் இணைந்து செயல்பட விருப்பமில்லையா?

09 ஜனவரி 2015

ஆண்ட பரம்பரை!

இனியும் இந்த ’ஆண்ட பரம்பரை’ போன்ற வெற்று பெருமை பேச்சுகள் எடுபடாது. ஒழுக்கமா இரு, ஓரளவுக்கு படி, நிறையா சம்பாரி, முடிஞ்சா உன் ஆண்ட பரம்பரையிலேயே வறுமையில் வாடும் பத்து பசங்களுக்கான படிப்பு செலவை நீ பண்ணு. அது போதும், உன் பெருமையை உன் சந்ததி பேச. என்னைக்கோ, எவனோ ஆண்டதுக்கு நீ ஏன் இன்னைக்கு பெருமை பேசுற? இன்னைக்கு தமிழ்நாட்டோட முதலமைச்சரே நீ சொல்ற அதே ஆண்ட பரம்பரை தான். அதுனால நீ போய் ஓ.பி.எஸ் கிட்ட உரிமையா எதாச்சும் கேட்டு வாங்க முடியுமா? ஆண்ட பரம்பரைக்கு அடையாளமா மாத்தி வச்சு அரசியல் பண்ற பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு கூட அக்டோபர் 30 அன்னைக்கு தடையில்லாம போக முடியல. இதுல இந்த ஆண்ட பரம்பரை என்ற வீண்பெருமை எதுக்கு? ஆண்டபரம்பரை மட்டும் எல்லாவற்றையும் செய்ய முடியாது. மத்த சாதி சனத்தோட அனுசரணை இல்லாமல் ஒரு அணுவும் அசையாது. எதார்த்தம் இது தான். எல்லாரையுமே சக மனுசனா பாரு. காலம் போக போக எல்லாம் மாறும். இப்போவே அரசு அலுவலங்களில் பெரிய பதவியில் இருப்பது அனைவரும் ஆண்டபரம்பரை இல்லையே. ஆனால், ஆண்டபரம்பரைன்னு சொல்லிக்கிற எல்லாரும் அந்த அரசு அலுவலர்களை ஏதோவொரு சந்தர்பத்தில் சாரு சாருன்னு கெஞ்சிக்கிட்டு தானே கிடக்க வேண்டிருக்கு. மொதல்ல நீ ஆள்றதுக்கான தகுதியை வளர்த்துக்க. அதுக்கப்பறமா இந்த ஆண்டபரம்பரை கோஷம் போடலாம்.

- இரா.ச.இமலாதித்தன்

23 டிசம்பர் 2014

சாதிப்பெயரை நீக்கினால் சாதி ஒழிந்து விடுமா?


 கடந்த ஞாயிறு (21.12.2014)அன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய TNPSC குரூப் 4 தேர்வில் சுமார் பத்து லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளனர். அந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பற்றிய இரு கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன.

001. ’தேசியம் காத்த செம்மல்’ - எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர்

A. பசும்பொன் முத்துராமலிங்கர்
B. காந்தியடிகள்
C. திருப்பூர் குமரன்
D. வீரபாண்டிய கட்டபொம்மன்

002. “வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்” - என எடுத்துரைத்தவர்

A. சுபாஷ் சந்திர போஸ்
B. பசும்பொன் முத்துராமலிங்கர்
C. வீரபாண்டிய கட்டபொம்மன்
D. வேலுத்தம்பி

இந்த இரு கேள்விகளுக்கும் விடையானது பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்பது தான். ஆனால் அவரது முழு பெயரையே சுருக்கி பசும்பொன் முத்துராமலிங்கர் என குறிப்பிட பட்டுள்ளது. இதைத்தவிர மேலும் சில கேள்விகளில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை கீழே பதிவிட்டுள்ளேன்.

01. இராமலிங்கம் பிள்ளை
02. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
03. எஸ். வையாபுரிப்பிள்ளை
04. அ. சிதம்பரநாத செட்டியார்
05. வேங்கட ராஜூலு ரெட்டியார்
06. வைத்தியநாத சர்மா
07. வெ.சாமிநாத சர்மா
08. சி.வை. தாமோதரம் பிள்ளை
09. வேதநாயகம் பிள்ளை
10. வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
11. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
12. ஆளுடைய பிள்ளை
13. வ.வே.சு. ஐயர்

இந்த பெயர்களிலுள்ள் பிள்ளை, செட்டியார், ரெட்டியார், ஐயர் என்பதெல்லாம் சாதிப்பெயர் இல்லையா? அதையெல்லாம் அனுமதித்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ’தேவர்’ என்ற பெயரை மட்டும் புறக்கணித்திருப்பதன் உள்நோக்கம் என்ன? சட்டமோ விதியோ அது அனைவருக்கும் பொதுவானதாக தானே இருக்க வேண்டும்? அப்பறம் ஏன் ஒரு சாரருக்கு மட்டும் எதிரானதாக இருக்கின்றது? ஒரு தேசிய தலைவரின் பெயரை சுருக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? மேலும், அதே வினாத்தாளில் நேரு, படேல், போஸ் என்ற பெயர்களை கொண்ட தேசியத்தலைவர்களின் துணைப்பெயர்களான சாதி / பட்டப்பெயர்களை நீக்காமல் விட்டது ஏன்? தேவர் பற்றாளர்கள் இதற்கெல்லாம் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடுக்க முடியாதா? தகவல் உரிமை சட்டத்தின் மூலம் இதைப்பற்றி விளக்கம் கேட்க முடியாதா? குறைந்தபட்சம் TNPSC அலுவலகத்தையாவது இதற்கான காரணத்தை கேட்டு கண்டனத்தை பதிவு செய்யலாமே? அதை விட்டுவிட்டு இணையத்தில் ”தேவன்டா” என்ற வெற்றுக்கூச்சல்களால் என்ன சாதிக்க போகிறோம்? களத்திற்கு போராட வராதவரை, இன்று பசும்பொன் பெருமகனாரின் பெயரை சுருக்கியவர்கள் நாளை எதை வேண்டுமானாலும் துணிச்சலாக செய்வார்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக கேள்வி கேட்க துணிவும் உணர்வும் உள்ளவர்கள் கீழே உள்ள தொடர்பு எண்களை பயன்படுத்தலாம்.

Phone: +91- 44 - 25300300

மின்னஞ்சல் மூலமாகவும் கேள்வி கேட்க விருப்பமிருந்தால் coetnpsc.tn@nic.in , contacttnpsc@gmail.com இந்த இரு மின்னஞ்சலையும் பயன்படுத்தலாம். வெறும் தேவன்டா என சொல்லிக்கொண்டு திரியும் நபர்கள் இந்த பதிவை வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு கடந்து செல்லலாம். ஜெய்ஹிந்த்!

- இரா.ச.இமலாதித்தன்

25 நவம்பர் 2014

பசும்பொன் தேவரின் குருவான சைதன்ய சுவாமிகளின் ஜீவசமாதி!


தேவர் மீதான கொலை வழக்கு விசாரணை புதுக்கோட்டையில் சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்புச் சொல்லும் நாள் 1959 ஜனவரி 7 ம் தேதி வந்து விட்டது. நீதிபதி அனந்த நாராயணன், சரியாக 2 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்து அமர்ந்தார். 50 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பைப் படித்தார்.

"தேவர் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இமானுவேல் கொலைக்கும் தேவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று யூகிப்பதற்குக் கூட சாட்சியம் இல்லை. எனவே தேவரை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கிறேன்" என்று நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களான குருசாமித் தேவர், காட்டுச்சாமித் தேவர், முனியசாமித் தேவர், சடையாண்டித் தேவர், பெரியசாமித் தேவர் ஆகியோரை சந்தேகத்தின் பலனை அளித்து விடுதலை செய்தார் நீதிபதி. இதர மூன்று பேர்களான அங்குசாமித் தேவர், பேயன் முனியாண்டித் தேவர், தவசித் தேவர் ஆகியோர் கொலைக் குற்றவாளிகளே என்று தீர்மானித்து, ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி.

தேவர் விடுதலை அடைந்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்து, மக்களுக்குக் காட்சி தந்ததும், மக்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, ஆரவாரம் செய்து, கோஷங்கள் எழுப்பிக் கரவொலி செய்தனர். தேவருக்கு பலர் பெரும்பெரும் மாலைகளை அணிவிக்க வந்தனர். ஆனால், தேவரோ, "முழு வெற்றிக்குப் பிறகே மகிழ்ச்சி கொள்ள வேண்டும். மாலைகள் எதுவும் அணிவிக்க வேண்டாம். எல்லாம் இறைவன் திருவருள்படி நடக்கும். எனவே மாலைகளை ஆண்டவனுக்கு அணியுங்கள். என் பொருட்டு இத்தனை ஆர்வத்தோடு கூடிய அனைவருக்கும் நன்றி. அமைதியாகக் கலைந்து செல்க" என்று கேட்டுக்கொண்டார்.

விடுதலை ஆனதும் தேவர் முக்கிய தலைவர்களுடன் புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில், பிரஹதாம்பாள் கோயில், ஐயனார் கோவில் முதலிய ஆலயங்களில் வழிபட்ட பிறகு, அன்று இரவு 8 மணிக்கு ஆடுதுறைக்குப் புறப்பட்டார். அங்கு தேவரின் குடும்ப குருநாதரான ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள் சமாதியில் அஞ்சலி செலுத்தி வணங்கினார். ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள், தேவர் விடுதலை ஆவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை சிறைக்கு வந்து தேவரைப் பார்த்தார். அப்போது தேவர் சுவாமிகளைப் பார்த்து, "சுவாமி உங்களைப் போன்ற மகான்களின் பாதம் சிறையிலே படலாமா?" என்று கேட்டார். அதற்கு சுவாமிகள், "உங்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். நீங்கள் விடுதலை ஆவீர்கள். ஆனால், அப்போது நான் இருக்க மாட்டேன். அதனால் தான் இப்போது வந்தேன்" என்று கூறினார். பிறகு, சுவாமிகள் முன்னரே தான் குறிப்பிட்ட தேதியில் ஆடுதுறைக்கு அருகிலுள்ள காவிரி ஆற்றங்கரைக்கு மேற்கே ஓரிடத்தை தேர்வு செய்து, அந்த இடத்தை தன் பக்தரான செட்டியார் ஒருவரிடம் சொல்லி அதை வாங்க சொன்னார். பிறகு சொன்னது போலவே குறிப்பிட்ட தேதியில் அங்கே சுவாமிகள் ஜீவசமாதி ஆனார். அதனால்தான் விடுதலை ஆனதும் ஆடுதுறைக்குப் போய் சுவாமிகளின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார் தேவர்.

ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகளின் இந்த ஜீவசமாதிக்கு செல்வதற்காக மூன்று முறை முயற்சித்தும் தரிசிக்க முடியாமல் போனதால், நான்காவது முறையாக நேற்று (24.11.2014) மாலை இந்த ஜீவசமாதிக்கு சென்று வந்தேன். தேவர் மீது பற்றுள்ள அனைவரும், நேரமிருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.

செல்லும் வழி:

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையிலிருந்து சூரியனார்கோவில் செல்லும் சாலையில் அரை மைல் தொலைவில் காவிரியாற்றின் மேம்பாலம் ஒன்றுள்ளது. அதற்கு முன்பாகவே இடபக்கமுள்ள அம்மன் கோவிலின் பின்புறமுள்ள தோப்பில் சைதன்ய விநாயகர் கோவில் உள்ளது. அந்த கோவிலிலுள்ள விநாயகர் சிலைக்கு கீழாகவே ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகளின் ஜீவசமாதி உயிர்துடிப்புடன் இருந்து வருகின்றது.

- இரா.ச.இமலாதித்தன்

14 நவம்பர் 2014

நேரு மாமாவும் மவுண்ட் பேட்டனும்!

ஆங்கில ஆட்சியின் போது ஆங்கிலேயர்களுக்கும், காங்கிரஸ் அரசுக்கும் பெரும் தலைவலியாக இருந்தவர்கள் நேதாஜியும் தேவரும். அதன் பிறகு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பொறுப்பேற்றவுடன், அவரை ’ஆசிய ஜோதி’ என்று புகழ்ந்து உலகில் மாமனிதர்கள் பலரும் நேருவை சந்திக்க விரும்பினர். ஆனால் நேருவோ "நான் ஃபார்வர்டு பிளாக் தலைவர் முத்துராமலிங்கத் தேவரை சந்தித்து, அவருடன் கை குலுக்க விரும்புகிறேன்" என்றார்.

ஆனால் பசும்பொன் தேவரோ, "என் தலைவர் நேதாஜியைக் காட்டிக் கொடுத்தக் கையோடு நான் குலுக்க மாட்டேன்” என்று கூறி நேருவின் கையைத் தட்டி விட்டு சென்றார். என்பது கடந்தகால அரசியல் வரலாறு!

”இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி!” என அண்ணன் வே. பிரபாகரன் சொல்லியது போல, வரலாறு தான் நமக்கு வழிகாட்டியே. அப்படிப்பட்ட துரோக வரலாறுகளுக்கு சொந்தக்காரர் நம்ம நேரு மாமா.


மேலும், மவுண்ட்பேட்டன் மனைவியின் மனம் கவர்ந்த நம்ம நேரு மாமா தின வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

நேருவும் - தேவரும்!


1955 ஆம் ஆண்டு வாக்கில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொது செயலாளராக இருந்த சீலபத்ரயாஜி என்பவரை, நேரு தேவரிடம் தூது அனுப்பினார். பார்வர்ட் பிளாக் கட்சியை காங்கிரசோடு இணைத்து விட வேண்டும் என்றும் அதற்கு கைமாறாக தேவர் விரும்பும் எந்த பதவியையும் மத்தியிலோ - மாநிலத்திலோ வகிக்கலாம் என்றும், சீலபத்ரயாஜி தேவரை அவரது பசும்பொன் கிராமத்தில் வந்து சந்தித்து கூறினார் .

சீலபத்ரயாஜி கூறிய கருத்துக்கு தேவர் இணங்கவில்லை. மாறாக சீலபத்ரயாஜியை இம்மாதிரியான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று கண்டித்தார். உடனே சீலபத்ரயாஜி டில்லிக்கு சென்று நேருவிடம் தேவர் ஒத்துக்கொள்ளவில்லை என்ற விவரத்தை கூறினார்.அன்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவராக இருந்த கேப்டன் மோகன்சிங் என்பவரை நேரு அழைத்து பேசி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் காங்கிரசுடன் இணைந்தது என்று அறிக்கை விடச் செய்தார்.

கேப்டன் மோகன் சிங் அறிக்கைக்கு உடனே மறுப்பு அறிக்கை தேவர் கொடுத்தார். அதில், பார்வர்ட் பிளாக் கட்சி காங்கிரசில் இணையவில்லை என்றும், எப்போதும் போல் பார்வர்ட் பிளாக் தனித்து இயங்குகிறது என்றும், கேப்டன் மோகன்சிங் அவரோடு சேர்ந்த சில விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்கள்தான் காங்கிரசில் சேர்ந்தார்களே தவிர, பார்வர்ட் பிளாக் கட்சியானது காங்கிரசோடு இணையவில்லை என்பதை தெளிவாக விளக்கி இருந்தார்.

டில்லிக்கு சென்று மத்தியக் கமிட்டியைக் கூட்டி, அன்றைக்கு அகில இந்திய துணைத் தலைவராக இருந்த ஹேமந்தகுமார் பாசுவே தலைவராக இருக்க வேண்டும் என வற்புறுத்தி, தான் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் போதும் என்று கூறி, துணைத்தலைவர் ஆனார் தேவர். தேவரின் விருப்பத்திற்கு இணங்க ஹேமந்தகுமார்பாசு தலைவர் ஆனார்.

காங்கிரசோடு பார்வர்ட் பிளாக் கட்சியை இணைத்து விடவேண்டுமென்று நேரு செய்த முயற்சியை முறியடித்து, அன்று பார்வர்ட் பிளாக் கட்சியின் தனித்தன்மையை காப்பாற்றி, நேதாஜியால் உருவாக்கப்பட்ட இயக்கத்தை அழியவிடாமல் பாதுகாத்தார் தேவர்.

- இரா.ச.இமலாதித்தன்

(இன்னைக்கு தான் அந்த மாமாவோட பிறந்தநாள்!)

05 நவம்பர் 2014

மூழ்கும் கப்பலில் கார்த்திக்!

காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்கவே நேதாஜி தலைமையில் ’அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சி’ உருவாக்கப்பட்டது. அந்த கட்சியின் மூலமாகவே தமிழக அரசியலில் கால் பதித்த நடிகர் மு.கார்த்திக், பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் அதிலிருந்து விலகி ’அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி’யை உருவாக்கினார். அதுவும் காலப்போக்கில் நாடாளும் மக்கள் கட்சியாக, பெயரளவிலும் - செல்வாக்கிலும் தேய்ந்து போனது.

இனிவரும் காலங்களில் சாதிக்கட்சியை நடத்த யார் விரும்பினாலும், அவர்கள் மருத்துவர் ச.ராமதாசிடமும் - தொல்.திருமாவளவனிடமும் தான் படிப்பினையை கற்க வேண்டும். ஒரு நடிகர் தனிக்கட்சியை தொடங்க விஜயகாந்தையும், அதே நடிகர் சாதிக்கட்சியை உருவாக்க சரத்குமாரிடமும் தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மு.கார்த்திக்குடைய சாதி அரசியலானது, காங்கிரசில் சரணடைந்தது தான் வேதனையின்ம் உச்சம். 

அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்க ஆசைப்படுகிறேனென நேதாஜி சொல்லக் காரணமாக இருந்த, பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவருடைய சமூகத்தை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காகவே, அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழ் மாநில தலைமை பதவியை வழங்கிய கெளரவித்தனர். ஆனால் இன்றைக்கு அதையெல்லாம் எட்டி உதைத்து உதாசினப்படுத்திருக்கும் மு.கார்த்திக் உடைய நிலைப்பாட்டை, நேதாஜி-தேவர் கொள்கைகளை கடைபிடிக்கும் யாராலும் ஏற்க முடியாது. ஆழ்ந்த அனுதாபங்கள்!

- இரா.ச.இமலாதித்தன்

31 அக்டோபர் 2014

தேசியம் என்பது வடக்குக்கு மட்டும் தானா?

இந்தியாவின் இரும்பு மனிதரென வர்ணிக்கப்படும் திரு சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதியை, தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கொண்டாட சொல்லும் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், தெய்வத்திருமனார் - தென்னாட்டு சிங்கம் - தென்னாட்டு திலகர் - தென்னாட்டு போஸ் என்று பலவாறாக வர்ணிக்கப்படும் தேசியத்தலைவர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் பிறந்த தேதியான அக்டோபர் 30ம் தேதியை தேசியமயக்கமாட்ட நாளாக அறிவிக்க தயக்கம் ஏன்? ஒருவேளை பசும்பொன் தேவரவர்கள் தமிழகத்தில் பிறக்காமல், குஜராத்தில் பிறந்திருந்தால் மோடியின் கடைக்கண் பார்வை பட்டிருக்குமோ என்னவோ?

வாயரசுக்கும் வல்லரசுக்கும் வித்தியாசம் உண்டு.

- இரா.ச.இமலாதித்தன்

30 அக்டோபர் 2014

செபஸ்டியன் சைமனின் தேவர் சாதி ஒழிப்பு!

தான் பிறந்த நாளிலிருந்து தனது இறுதி நாள் வரை உ.முத்துராமலிங்கத்தேவர் என்றே சமகால மக்களால் அறியப்பட்டவரின் கையெழுத்து கூட, 'மு.உ.தேவர்' தான். இந்திய அரசியலை தாண்டி, உலகத்தமிழர்களுக்காக ஹிந்து அல்லாத பெளத்தம் உள்ளிட்ட  பல ஆன்மீக சொற்பொழிவாற்ற பல நாடுகளில் கலந்து கொள்ளும் போதும் அவர் உ.முத்துராமலிங்கத்தேவர் தான். உள்ளூர் பள்ளி முதல் உலக நாடுகளுக்கு பயணிக்க தேவைப்படும் கடவு சீட்டு வரை பயன்படுத்திய அவரது பெயரும் உ.முத்துராமலிங்கத்தேவர் தான். அந்த திருப்பெயரை 107 ஆண்டுகள் கழித்தும் இன்றும் உலகெங்கும் பல அரசியல்வாதிகளால் அழைக்கப்படுவதும் உ.முத்துராமலிங்கத்தேவர் என்று தான்!

ஆனால் நேற்றைய மழையில் முளைத்த காளான் போல தமிழக அரசியலில் உருவெடுத்திருக்கும் ’நாம் தமிழர் கட்சி’ மட்டும், தெய்வத்திருமனாரை முத்துராமலிங்கனார் என சுருக்கி தமிழகமெங்கும் போஸ்டர் அடித்திருப்பது கண்டனத்துக்குரியது. பெருந்தமிழனரான பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் பெயரை சுருக்க யாருக்கும் இங்கே உரிமை இல்லை. பெற்றோர் வைத்த ’செபஸ்டியன் சைமன்’ என்ற பெயரை சுருக்கி, தனக்கு தானே ’சீமான்’ என வைத்து கொண்டவரின் தலைமையில் கீழ் இயங்கும் கட்சி எப்படி இருக்கும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

திரு செபஸ்டியன் சைமன் அவர்களே, நீங்க வழக்கம் போல, உங்க சாதிக்கார முதலாளி திரு வைகுண்டராஜனோடும், உங்க சாதிக்கார தொலைக்காட்சி தந்திடிவியோடும், உங்க சாதிக்காரர் திரு. ஆதித்தனார் அன்று உருவாக்கிய நாம் தமிழர் கட்சி என்ற பெயரை காப்பாற்றி கொள்ளுங்கள். எங்களுக்கு ஏற்கனவே தெருவுக்கொரு கட்சி - அமைப்பு -  சங்கம் - பாசறை - கழகம்- இயக்கம்ன்னு எக்கசக்கமா இருக்கு. ஆனாலும் எங்க சாதி கட்சி தேர்தலில் வெற்றி பெறாது. ஏனென்றால் அதிமுகவுக்கு போட்ட முக்குலத்தோரின் ஓட்டு அக்ரிமெண்டே இன்னும் முடியிற மாதிரி தெரியல. அதுனால எங்க ஓட்டு உங்க மாற்று அரசியலுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.


எனவே, உங்கள் வீட்டு சமையலறையில் மட்டும் இனி களமாடுங்கள். தயவு செய்து, எங்கள் தெய்வத்தின் பெயரோடு விளையாட வேண்டாம். மேலும், நரகாசூரனுக்கும். -, சூரபத்மனுக்கும் வீர வணக்கம் வைப்பதோடு உங்களது தமிழ்தேசியப்பற்றை நிறுத்தி கொள்ளுங்கள். எங்களுக்கு உங்களோட உங்க பொங்கச்சோறும் வேண்டாம்; உங்க சங்காதமும் வேண்டாம்!

- இரா.ச.இமலாதித்தன்

13 ஆகஸ்ட் 2014

தேசபக்தி என்பது யாதெனில்...


தேசபக்தி என்பது வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் ரெண்டாவது வாரமும், ஜனவரி மாதம் மூனாவது வாரமும் ஃபேஸ்புக்ல ப்ரோபைல் போட்டோவை மாத்துறதுனால மட்டும் வரப்போறதில்லை. அது உணர்வு சம்பந்தமானது. அந்த உணர்வை வெறும் லைக்குகளால் மட்டும் அளவிட முடியாது.

இன்னைக்கு பல பேருக்கு காந்தி நேருவை மட்டும்தான் அதிகமாக தெரியலாம். ஏன்னா, காந்திங்கிற பேரு தான் கடந்த  60 வருசங்களாக ஆட்சிக்கட்டிலில் உட்கார்ந்திருக்கு. அந்த காந்திக்கும் இப்போதுள்ள காந்திக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை காங்கிரசுக்கும் காந்திக்கும் கூட எந்தவித தொடர்பும் இல்லை என்பதும் தான்.

இன்னும் சொல்லப்போனால் இந்த காங்கிரஸ் என்ற பெயர் கூட இந்தியன்’ன்னு சொல்லிக்கிற யாருக்கும் சொந்தம் கிடையாது. அந்த பேரையும் வெள்ளைக்காரன் தான் உருவாக்கி கொடுத்துட்டு போனான். நாம தான், நேரா கட்டுன வீடு வசதியா இருக்குமேன்னு அதுலயே ஈசியா இவ்ளோ வருசங்களா உட்கார்ந்து காலத்தை ஓட்டிட்டோம்.

இப்போது விசயத்துக்கு வருவோம்.

இங்குள்ள புரட்சியாளர்களுக்கு, காந்தி நேருவை தவிர இந்தியரான பகத்சிங்கையும், இந்தியரல்லாத சே குவேராவையும் கொஞ்சம் பேருக்கு நல்லாவே தெரியும். காரணம் என்னவென்றால், இவங்க ரெண்டு பேரையும்
(DYFI, SFI போன்ற பொதுவுடைமை அமைப்புகள்) கம்யூனிஸ்ட் கைப்பத்தி வச்சுக்கிட்டு புரட்சிங்கிற பெயரில் புடலங்கை வியாபாரம் செய்வதால், இவர்களை அறியக்கூடிய அந்த பாக்கியம் சிலருக்கு கிடைத்துள்ளது.
ஆனால், இந்தியாவுக்கு வெளியே சென்று இந்தியாவை காப்பற்ற இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி பலர் தெரிந்து கொள்ளவே விரும்புவதில்லை. புரட்சி செய்ய வாயளவில் சொன்ன அம்பேத்காரை உள்வாங்கி கொண்ட அளவுக்கு, அந்த புரட்சியை செயலலிலும் காட்டிய நேதாஜியை இவர்கள் துளிகூட நெருங்குவதே இல்லை. இங்கிலாந்து நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை உள்வாங்கி அதை இந்தியாவுக்கு தகுந்தாற்போல ரிமேக் செய்த சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கார் போற்றப்படும் அளவுக்கு கூட இங்கே நேதாஜி போற்றப்படுவதில்லை என்பதே எதார்த்தம். போற்றுதல் கூட வேண்டாம் குறைந்தபட்சம் அவருக்குரிய அங்கீகாரத்தை கூட கொடுப்பதில்லை என்பது வேதனைக்குரிய விசயம்.
 

“இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்”  என்ற உயரிய நோக்கோடு களம்கண்ட நேதாஜியின் மந்திரச்சொல்லாக, ”இரத்தத்தை தாருங்கள்; உங்களுக்கு விடுதலையைப் பெற்று தருகிறேன்!” என்ற ஒரு வரியே இருந்தது.  இந்த ஒற்றைச் சொல்லுக்கு கட்டுப்பட்டு நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் பெரும்பான்மையான இடத்தை தமிழர்களே ஆக்கிரமித்து இருந்தனர். இத்தனை தமிழர்கள் ஐ என் ஏவில் சேர, பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் என்ற மாமனிதர் மட்டுமே காரணமாக இருந்தார். இப்படியான பசும்பொன் தேவரின் அன்பையும், ஆற்றலையும், ஆன்மீக உணர்வையும், வீரத்தையும், விவேகத்தையும் கண்டு தன்னுடைய நெருங்கிய தோழனாக்கி கொண்டார் நேதாஜி. ஆனால் இன்றைய நிலைமையோ வேறு; தேசியத்தலைவரான பசும்பொன் தேவரையும் சாதியத்தலைவராக்கி அழகு பார்க்கிறது திராவிட கட்சிகள்.
 
தமிழர்களின் தேசபக்தி மிக்க தாய்நாட்டிற்கான அர்பணிப்பு குணத்தை கண்டு வியந்த நேதாஜி, ”அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும்!” என சூளுரைத்தார் என்பது ஒட்டுமொத்த தமிழினத்துக்கே பெருமை சேர்க்கும் விசயமாகும்.

பசும்பொன் உ.முத்துராமலிக்கத்தேவர் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இடையிலான அந்த பாசப்பிணைப்பினால் தான், தென் தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்கள் வரை இன்று புத்தம் புதிதாய் பிறக்கும் குழந்தைகளுக்கும்,  போஸ், நேதாஜி, சுபாஷ் என்ற பெயர்கள் சூட்டப்பட்டு கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், மேற்கு வங்காளத்தை விட தமிழ்நாட்டில் தான் அதிக ’நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்கள்’ பெயரளவில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதுதான் தமிழர்களுடைய தேசப்பக்தியின் கைமாறு.

1941 ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கி ஆசாத்ஹிந்த் என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி, ஜனகனமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். 1943 அக்டோபர் 21ல் சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன.

மேலும்,

"நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!" -
இது 15 ஆகஸ்ட் 1945ல் இந்திய தேசிய இராணவத்திற்காக அவர் வெளியிட்ட இறுதி அறிக்கையின் வரிகள். அந்த வரிகள் சரியாக இரண்டே வருடத்திற்குள் மெய்யாக்கப்பட்டது என்பது வரலாறு.

"ஒரு லட்சியத்துக்காக ஒருவன் மடியலாம்; ஆனால் அவன் மாண்டபிறகு ஆயிரம் பேரை அந்தலட்சியம் பற்றிக்கொள்ளும்; ஒரு மனிதன் வாழ்ந்தான் - லட்சியதிற்க்காக உயிரை விட்டான் என்பதை விட வேறென்ன பெருமை வேண்டும்?” - இது நேதாஜி சிறைச்சாலையில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முன் எழுதிய கடிதத்தின் சில வரிகள்.
 

இப்படிப்பட்ட தேசபக்திமிக்க மாபெரும் தலைவனுக்கு பல வருடங்கள் கழித்து 1992ல் ’பாரதரத்னா’ விருதை மத்திய சர்க்கார் கொடுத்தது. ஆனால், நேதாஜியின் குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பாலும், நேதாஜியின் இறப்பு பற்றிய சர்ச்சையினால் உச்சநீதிமன்ற தீர்ப்பாலும் அந்த விருது திரும்ப பெறப்பட்டது. மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிவிட்டது போல ஒரு நிகழ்வு ஒருவார காலமாய் நடந்து கொண்டிருக்கின்றது. பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி இம்முறை நேதாஜிக்கு பாரத ரத்னா விருதை தந்துவிட ஆர்வமாய் இருக்கின்றார் போல.

ஆனால், தேர்தலுக்கு முன் மோடி தந்த வாக்குறுதிகளான, 'நேதாஜி பிறந்தநாள் தேசப்பக்தி தினமாக அனுசரிக்கப்படும். மேலும் நேதாஜி இறப்பு சம்பந்தமான ரகசிய ஆவணங்கள் வெளிக்கொண்டு வரப்படும்' என்றெல்லாம் சொன்ன வாக்குறுதிகள் கேள்விக்குறிகளாக மட்டும் எஞ்சி நிற்கின்றன. திரு நரேந்திர மோடி அவர்கள், நேதாஜி சம்பந்தப்பட்ட இந்த விசயத்திலும் அரசியல் விளம்பரம் செய்யாமல் சீக்கிரமே உலகே எதிர்பார்க்கும் மர்ம முடிச்சை அவிழ்க்கலாம் என்பது என்னைப்போன்ற சாமானியர்களின் எதிர்பார்ப்பு. எது எப்படியோ, நேதாஜியின் தொண்டர்களுக்கு ஆகஸ்ட் 15 என்பது சுதந்திர தினமல்ல; உண்மையான சுதந்திர தினம் என்பது அக்டோபர் 21 தான்!

- இரா.ச.இமலாதித்தன்

15 ஜூலை 2014

கிங்மேக்கர் காமராஜரின் அரசியல் வரலாறு!

பசும்பொன் தேவரை பிடிக்காதவர்களும், காமராஜரை பிடித்தவர்களும் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு:-

1936-ல் நகரசபை தேர்தல் நடைபெற்ற இருந்த சமயம், அன்று காமராஜர் விருதுநகரில் ஒரு சாதாரண காங்கிரஸ் தொண்டர். சிறந்த தேச பக்தராகத் திகழ்ந்தார். அன்று வாக்குரிமை உள்ள நாடார் சமூகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் ஜஸ்டிஸ் கட்சியில் இருத்தால் நகரசபை தேர்தலில் காமராஜரை நிற்க வைக்க வேண்டுமென பசும்பொன் தேவர் நினைக்கிறார்

ஆனால் காமராஜருக்கு ஓட்டுரிமை இல்லை. காரணம் அவர் பெயரில் எந்த ஒரு சொத்தும் இல்லை. காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையாரைப் பார்த்து “உங்கள் மகனை தேர்தலில் நிற்க வைக்கப் போகிறேன். உங்கள் பெயரில் உள்ள வீட்டை காமராஜ் பெயரில் எழுதி வையுங்கள்” என்று பசும்பொன் தேவர் கேட்கிறார். யாருக்கு சொத்து இருக்கிறதோ, யார் வரி செலுத்துகின்றாரோ அவர் தான் வாக்காளாராக முடியும். அதனால் தான் பசும்பொன் தேவர் சிவகாமி அம்மையாரிடம் வீட்டை மாற்றி எழுதி வைக்கக் கேட்டார். அதற்கு அந்த அம்மையார் அவர்கள் “எனக்கு இருப்பது இந்த ஒரு வீடு தான். என் மகனை ஓட்டராக்குவதற்காக இந்த வீட்டை அவன் பேருக்கு எழுதிவைக்க முடியாது. எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நானோ விதவை. எங்கள் சாதியில் ஒரு வீடாவது இருந்தால் தான் அந்தப் பெண்ணுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைப்பார். என் மகன் காமராஜ் வீட்டுக்கு உதவாத பிள்ளையாக போய்விட்டான். அவனுக்கு எழுதி வைத்துவிட்டு நானும் என் பெண்ணும் தெருவில் நிற்கமுடியாது” என்று காமராஜரின் தாயாரும் மறுத்து விட்டார்.

அதற்கு மேல் பசும்பொன் தேவர் எதுவும் யோசிக்காமல் நான்கு வெள்ளாட்டை விலைக்கு வாங்கி, அதற்கு விருதுநகர் நகரசபையில் காமராஜர் பெயரில் வரி செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொண்டு ஒரு தகர வில்லையை வரிக் கட்டியதன் அடையாளமாக வெள்ளாட்டின் கழுத்தில் கட்டி விட்டு காமராஜரை வாக்களராக்கி தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார் பசும்பொன் தேவர்.

பின்பொரு சட்டமன்ற தேர்தல் சமயம், இரவோடு இரவாக காமராஜரை காரில் தூக்கி போட்டு பட்டிவீரன்பட்டி சென்று அங்கேயுள்ள சௌந்திரபாண்டிய நாடார் வாழைத் தோப்பில் கொலை செய்து புதைத்துவிட வேண்டும் என்று காமராஜருக்கு எதிரான அரசியல் எதிரிகள் தீட்டிய திட்டம் பற்றிய தகவல் பசும்பொன் தேவருக்கு கிடைக்க, உடனே தேவர் விருதுநகருக்கு வருகிறார். காமராஜரை சந்தித்து "மேலே சொன்னவைகள் உண்மை தானா?" என்று கேட்கிறார். ‘ஆமாய்யா, அப்படித்தான் சொல்கிறார்கள்” என்றார் காமராஜர். அன்று இரவே விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் பொதுக் கூட்டம். காமராஜருக்கு ஓட்டுக் கேட்டு பசும்பொன் தேவர் பேசினார்.

"இப்போது காமராஜரை கொலை செய்து தீர்த்துக் கட்டி விடலாம் என்று பேசுவதாக கேள்விப்படுகிறேன். காமராஜர் ஏழைத்தொண்டன் என்று இங்கே உள்ள ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் நினைத்தால் அவர்களுக்காக அனுதாபப்படுகிறேன். காமராஜருக்குப் பின்னால் காங்கிரஸ் மகா சபை இருக்கிறது. அதே மகா சபையில் எங்களைப் போல் எந்தவித தியாகத்திற்கும் தயாராக உள்ள கோடான கோடிப் பேர் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். இதை மீறி காமராஜர் மீது ஒரு ஒரு சிறு துரும்பு படுமேயானால் இங்கே ஜஸ்டிஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.வி.ராமசாமி நாடாருக்கு நான் எச்சரிக்கையாகச் சொல்கிறேன். நீங்கள் வீதியில் நிம்மதியாக நடமாட முடியாது. இரும்புக் கவசம் போட்டுக் கொண்டுதான் நடமாட முடியும்” என்று வேகமாகப் பேசினார்.

அந்தப் பேச்சுக்கு பின்னால் பசும்பொன் தேவருடைய ஆதரவாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து வரலாம், நான் கிராமங்களுக்குப் போய் ஒட்டுக் கேட்கும் பொழுது எனக்கு போலீஸ் பந்தோபஸ்து வேண்டும் எண்டு கலெக்டரிடம் கேட்டும் பலன் இல்லாததால், வி.வி.ராமசாமி நாடார் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். காமராஜர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பசும்பொன் பெருமகனாருடைய ஆதரவு மட்டும் அன்றைக்கு காமராஜருக்கு இல்லாமல் இருந்திருக்குமானால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது மாத்திரமல்ல, காமராஜரை ஜஸ்டிஸ் கட்சியினுடைய பெரும்புள்ளிகள் உயிரோடு விட்டு வைத்திருப்பார்களா? என்பது கூட சந்தேகம் தான். கிங்மேக்கர் என்று அழைக்கப்பட்ட காமராஜரையே அரசியலில் அடையாளப்படுத்திய பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் பற்றி பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையான விசயமே!

- இரா.ச.இமலாதித்தன்

18 ஜூன் 2014

இலங்கையில் இசுலாமியர் மீதான தாக்குதலும், பசும்பொன் தேவரும்!



குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து களத்தில் குதித்த வாலிபர்கள் மீது பெருங்காநல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மொத்தம் பதினான்கு பேர் தங்கள் உயிர்களைத் தந்தார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்திற்கு பிறகு, சிவகாசியில், தேவர் திருமகனாருக்கும், காவல்துறை உயர் அதிகாரிக்கும் வாதம் நடக்கிறது.

‘ரேகைச் சட்டத்தை எதிர்த்து நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்கிறான். பசும்பொன் தேவர் அவர்கள் சொல்கிறார்கள்:‘பக்கத்து வீடு பற்றி எரிந்தால் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?’ பக்கத்து வீடு பற்றி எரியும்போது அணைக்காவிட்டால், அடுத்து தன்னுடைய வீடும் தானாக எரியும். இன்றைக்கு இந்த ரேகைச் சட்டம் அப்பாவிகள் மீது பாய்கிறது. நாளைக்கு என் மீதும் பாயாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று கேட்கிறார்.

இந்த வாதம் நடக்கிறபோது, பெரிய காவல்துறை அதிகாரி வருகிறார். ‘எங்கள் ஏகாதிபத்தியம் உலகத்தில் பல நாடுகளில் பரவி இருக்கிறது. மிக சக்தி வாய்ந்தது. உங்களுக்குத் தெரியுமா?’ என ஆங்கிலத்தில் கேட்கிறான். பசும்பொன் தேவரும் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறார். ‘தெரிவேன் நன்றாகத் தெரிவேன், மேலும் தெரிவேன். இதைவிட எத்தனையோ ஏகாதிபத்தியங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து, புல் முளைத்த சரித்திரமும் நான் அறிவேன்’ என்கிறார்.

எங்கள் பேரரசுக்குக் கடல் போன்ற இராணுவ பலம் இருக்கிறது தெரியுமா? என்கிறான் வெள்ளைக்காரன். உடனே சொல்கிறார் பசும்பொன் தேவர்: ‘கடல் போன்ற படை இருக்கிறதா? மானத்தைப் பெரிதாகக் கருதுகிறவனுக்கு, சாவு பொருட்டு அல்ல. சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டம் என்பதை நீ தெரிந்து கொள்’ என்றார்.

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், 2009 காலக்கட்டத்தின் போது, லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது, தங்களை தமிழர்களாக மனதில் கொள்ளாமல், இலங்கை வாழ் இசுலாமியர்கள் அனைவரும் தங்களை மதவாதிகளாகவே கணக்கில் கொண்டு, பெளத்த-சிங்கள இனவெறியர்களுக்கு ஆதரவாக நின்று, மகிந்த ராஜபக்சேவை பாராட்டி ஊர்வலம் போனார்கள். ஆனால் இன்றைய நிலைமையில் தமிழர்களை அழித்த அதே பெளத்த-சிங்கள இனவெறியர்கள் தமிழ் இசுலாமியர்கள் மீதும் அடக்குமுறையை ஏவியுள்ளனர். அன்றைக்கு, தமிழன் வீடு பற்றி எரியும்போது கைக்கட்டி வேடிக்கை பார்த்ததன் விளைவு, இன்று தன் வீடும் பற்றி எரிகிறது. எதிலும் ஒரு தொலைநோக்கு பார்வை வேண்டும் என்பதை அன்றைக்கே பசும்பொன் தேவர் ஒரு முன்னுதாரணமாக இருந்து சென்றுவிட்டார். இனியாவது தமிழ் இசுலாமியர்கள் இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்வார்களா?

- இரா.ச.இமலாதித்தன்