தேசபக்தி என்பது யாதெனில்...


தேசபக்தி என்பது வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் ரெண்டாவது வாரமும், ஜனவரி மாதம் மூனாவது வாரமும் ஃபேஸ்புக்ல ப்ரோபைல் போட்டோவை மாத்துறதுனால மட்டும் வரப்போறதில்லை. அது உணர்வு சம்பந்தமானது. அந்த உணர்வை வெறும் லைக்குகளால் மட்டும் அளவிட முடியாது.

இன்னைக்கு பல பேருக்கு காந்தி நேருவை மட்டும்தான் அதிகமாக தெரியலாம். ஏன்னா, காந்திங்கிற பேரு தான் கடந்த  60 வருசங்களாக ஆட்சிக்கட்டிலில் உட்கார்ந்திருக்கு. அந்த காந்திக்கும் இப்போதுள்ள காந்திக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை காங்கிரசுக்கும் காந்திக்கும் கூட எந்தவித தொடர்பும் இல்லை என்பதும் தான்.

இன்னும் சொல்லப்போனால் இந்த காங்கிரஸ் என்ற பெயர் கூட இந்தியன்’ன்னு சொல்லிக்கிற யாருக்கும் சொந்தம் கிடையாது. அந்த பேரையும் வெள்ளைக்காரன் தான் உருவாக்கி கொடுத்துட்டு போனான். நாம தான், நேரா கட்டுன வீடு வசதியா இருக்குமேன்னு அதுலயே ஈசியா இவ்ளோ வருசங்களா உட்கார்ந்து காலத்தை ஓட்டிட்டோம்.

இப்போது விசயத்துக்கு வருவோம்.

இங்குள்ள புரட்சியாளர்களுக்கு, காந்தி நேருவை தவிர இந்தியரான பகத்சிங்கையும், இந்தியரல்லாத சே குவேராவையும் கொஞ்சம் பேருக்கு நல்லாவே தெரியும். காரணம் என்னவென்றால், இவங்க ரெண்டு பேரையும்
(DYFI, SFI போன்ற பொதுவுடைமை அமைப்புகள்) கம்யூனிஸ்ட் கைப்பத்தி வச்சுக்கிட்டு புரட்சிங்கிற பெயரில் புடலங்கை வியாபாரம் செய்வதால், இவர்களை அறியக்கூடிய அந்த பாக்கியம் சிலருக்கு கிடைத்துள்ளது.
ஆனால், இந்தியாவுக்கு வெளியே சென்று இந்தியாவை காப்பற்ற இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி பலர் தெரிந்து கொள்ளவே விரும்புவதில்லை. புரட்சி செய்ய வாயளவில் சொன்ன அம்பேத்காரை உள்வாங்கி கொண்ட அளவுக்கு, அந்த புரட்சியை செயலலிலும் காட்டிய நேதாஜியை இவர்கள் துளிகூட நெருங்குவதே இல்லை. இங்கிலாந்து நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை உள்வாங்கி அதை இந்தியாவுக்கு தகுந்தாற்போல ரிமேக் செய்த சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கார் போற்றப்படும் அளவுக்கு கூட இங்கே நேதாஜி போற்றப்படுவதில்லை என்பதே எதார்த்தம். போற்றுதல் கூட வேண்டாம் குறைந்தபட்சம் அவருக்குரிய அங்கீகாரத்தை கூட கொடுப்பதில்லை என்பது வேதனைக்குரிய விசயம்.
 

“இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்”  என்ற உயரிய நோக்கோடு களம்கண்ட நேதாஜியின் மந்திரச்சொல்லாக, ”இரத்தத்தை தாருங்கள்; உங்களுக்கு விடுதலையைப் பெற்று தருகிறேன்!” என்ற ஒரு வரியே இருந்தது.  இந்த ஒற்றைச் சொல்லுக்கு கட்டுப்பட்டு நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் பெரும்பான்மையான இடத்தை தமிழர்களே ஆக்கிரமித்து இருந்தனர். இத்தனை தமிழர்கள் ஐ என் ஏவில் சேர, பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் என்ற மாமனிதர் மட்டுமே காரணமாக இருந்தார். இப்படியான பசும்பொன் தேவரின் அன்பையும், ஆற்றலையும், ஆன்மீக உணர்வையும், வீரத்தையும், விவேகத்தையும் கண்டு தன்னுடைய நெருங்கிய தோழனாக்கி கொண்டார் நேதாஜி. ஆனால் இன்றைய நிலைமையோ வேறு; தேசியத்தலைவரான பசும்பொன் தேவரையும் சாதியத்தலைவராக்கி அழகு பார்க்கிறது திராவிட கட்சிகள்.
 
தமிழர்களின் தேசபக்தி மிக்க தாய்நாட்டிற்கான அர்பணிப்பு குணத்தை கண்டு வியந்த நேதாஜி, ”அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும்!” என சூளுரைத்தார் என்பது ஒட்டுமொத்த தமிழினத்துக்கே பெருமை சேர்க்கும் விசயமாகும்.

பசும்பொன் உ.முத்துராமலிக்கத்தேவர் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இடையிலான அந்த பாசப்பிணைப்பினால் தான், தென் தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்கள் வரை இன்று புத்தம் புதிதாய் பிறக்கும் குழந்தைகளுக்கும்,  போஸ், நேதாஜி, சுபாஷ் என்ற பெயர்கள் சூட்டப்பட்டு கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், மேற்கு வங்காளத்தை விட தமிழ்நாட்டில் தான் அதிக ’நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்கள்’ பெயரளவில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதுதான் தமிழர்களுடைய தேசப்பக்தியின் கைமாறு.

1941 ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கி ஆசாத்ஹிந்த் என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி, ஜனகனமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். 1943 அக்டோபர் 21ல் சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன.

மேலும்,

"நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!" -
இது 15 ஆகஸ்ட் 1945ல் இந்திய தேசிய இராணவத்திற்காக அவர் வெளியிட்ட இறுதி அறிக்கையின் வரிகள். அந்த வரிகள் சரியாக இரண்டே வருடத்திற்குள் மெய்யாக்கப்பட்டது என்பது வரலாறு.

"ஒரு லட்சியத்துக்காக ஒருவன் மடியலாம்; ஆனால் அவன் மாண்டபிறகு ஆயிரம் பேரை அந்தலட்சியம் பற்றிக்கொள்ளும்; ஒரு மனிதன் வாழ்ந்தான் - லட்சியதிற்க்காக உயிரை விட்டான் என்பதை விட வேறென்ன பெருமை வேண்டும்?” - இது நேதாஜி சிறைச்சாலையில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முன் எழுதிய கடிதத்தின் சில வரிகள்.
 

இப்படிப்பட்ட தேசபக்திமிக்க மாபெரும் தலைவனுக்கு பல வருடங்கள் கழித்து 1992ல் ’பாரதரத்னா’ விருதை மத்திய சர்க்கார் கொடுத்தது. ஆனால், நேதாஜியின் குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பாலும், நேதாஜியின் இறப்பு பற்றிய சர்ச்சையினால் உச்சநீதிமன்ற தீர்ப்பாலும் அந்த விருது திரும்ப பெறப்பட்டது. மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிவிட்டது போல ஒரு நிகழ்வு ஒருவார காலமாய் நடந்து கொண்டிருக்கின்றது. பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி இம்முறை நேதாஜிக்கு பாரத ரத்னா விருதை தந்துவிட ஆர்வமாய் இருக்கின்றார் போல.

ஆனால், தேர்தலுக்கு முன் மோடி தந்த வாக்குறுதிகளான, 'நேதாஜி பிறந்தநாள் தேசப்பக்தி தினமாக அனுசரிக்கப்படும். மேலும் நேதாஜி இறப்பு சம்பந்தமான ரகசிய ஆவணங்கள் வெளிக்கொண்டு வரப்படும்' என்றெல்லாம் சொன்ன வாக்குறுதிகள் கேள்விக்குறிகளாக மட்டும் எஞ்சி நிற்கின்றன. திரு நரேந்திர மோடி அவர்கள், நேதாஜி சம்பந்தப்பட்ட இந்த விசயத்திலும் அரசியல் விளம்பரம் செய்யாமல் சீக்கிரமே உலகே எதிர்பார்க்கும் மர்ம முடிச்சை அவிழ்க்கலாம் என்பது என்னைப்போன்ற சாமானியர்களின் எதிர்பார்ப்பு. எது எப்படியோ, நேதாஜியின் தொண்டர்களுக்கு ஆகஸ்ட் 15 என்பது சுதந்திர தினமல்ல; உண்மையான சுதந்திர தினம் என்பது அக்டோபர் 21 தான்!

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment