மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 ஏப்ரல் 2017

சமகால அரசியலில் மொழி திணிப்பு!


ஈழம் ஒருகாலத்தில் தமிழர் மண். கலிங்கமென்ற ஒரிசாவிலிருந்து பெரும்படையோடு நாடுகடந்து இடம்பெயராமல் இருந்திருந்தால் அங்கும் அனைத்து ஊர்களின் பெயர்களும் இன்றளவும் தமிழிலேயே இருந்திருக்கும். ஆனால் பல சூழ்ச்சிகளால் இனக்கலப்பு ஏற்பட்டு உருவான பெளத்த சிங்கள இனவாதிகளால், ஈழமண்டலத்தின் பெரும்பாலான பகுதிகள் சிங்களப்பெயர்களோடு தான் மொழிமாற்றப்பட்டு இருக்கின்றன. விடுதலைப் புலிகளால் வடகிழக்கு பகுதிகள் மட்டும் கொஞ்சம் தமிழில் தாக்குபிடித்திருந்தது. அதிலும் கூட அழகான யாழ்பாணம் என்ற பெயரும் 'ஜப்னா'வாக உருமாறியதும் மொழியழிப்பின் அடையாளமே.

இதில் தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கா என்ன? எங்கள் வேல்நெடுங்கன்னி, வேளாங்கன்னி ஆனது; திருவல்லிக்கேணி, ட்ரிப்லிக்கேன் ஆனது; செங்குன்றம், ரெட்ஹில்ஸ்; பாரிமுனை, பாரீஸ் கார்னர் என பல இடங்களிலும் மேற்கத்திய மொழி மாற்றம். அதுபோல எங்கள் திருமறைக்காடு, வேதாரண்யம் ஆனது; எங்கள் மயிலாடுதுறை, மாயவரம் ஆனது; முதுகுன்றம், விருத்தாச்சலம் ஆனது. இப்படியாக ஆங்கில / சமகிருத மொழிதிணிப்பு எல்லா ஊர்களிலும் அரங்கேறி பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன.

தமிழனால் தமிழர்களை வைத்து கட்டிய பெருங்கோவில்களிலெல்லாம், சமகிருத மொழியால் தான் முதன்மை பூசை. தமிழ் தெரியாத கடவுள்கள் தமிழ்நாட்டில் தான் அதிகமுண்டு. அதை தட்டிக்கேட்ட ஆறுமுகசாமி போன்ற தமிழர்கள், வானிலிருந்து அனுப்பட்டதாக கருதப்படும் தீட்சிதர்களால் விரட்டி அடித்து இன்றவரே விண்ணிற்கே சென்றுவிட்டார். அந்த தில்லை சிதம்பரம் கோவிலில் பட்டியல் சாதியை சேர்ந்தவரான நந்தனார் சென்ற வழியையே அடைத்து வைத்து ஆளுமை செய்கிறது, யாராலும் பேசப்படாத மொழியான சமகிருத ஏகாதிபத்தியர்களால். இதுதான் இங்கு நிகழ்ந்த, நிகழும் நிலவரம்.

ஆட்சி மொழியாக்கக்கூடிய எல்லா தகுதியும் இருந்தும் புறக்கணிப்பட்ட தமிழ் மொழியை பேசும் தமிழ்நாட்டின் சாலையெங்கும் கூட ஹிந்தியில் மைல்கற்களை அமைத்து வருகிறது ஹிந்திய அரசு. இப்படியான மொழியழிப்பு கொள்கைகள் எல்லாவற்றோடும் ஒத்துப்போகும் சீனாவை மட்டும் ஏன் கண்டிக்க வேண்டும்? என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் தோன்றுவது இயல்பான ஒன்று. இந்த எதார்த்ததை புரிந்து கொண்டாலே அருணாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனத்தில் பெயர் வைப்பத்திருக்கும் சீனாவின் செயல்பாடும் தவறில்லையென்றே தோன்றும்.

18 செப்டம்பர் 2015

முதல் ஹிந்தி எதிர்ப்பு, பாம்பன் சுவாமிகளுடையது!

இந்தியை முதன் முதலில் எதிர்த்தவர் 'தமிழ்த்துறவி' பாம்பன் அடிகளார்
சனவரி 25ஆம் நாள் என்பது இந்தி எதிர்ப்பு ஈகியரின் நினைவு நாளாகும். இந்த ஆண்டில் தான் 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரின் 50ஆம் ஆண்டு விழாவும் தொடங்க உள்ளது. 1938ஆம் ஆண்டு தமிழறிஞர்களாகிய மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்பு தீ இன்னும் தமிழர்களிடத்தில் அணைய வில்லை. தமிழர்களின் மரபு என்பது அடிப்படையில் ஆரிய- வடமொழி எதிர்ப்பு தன்மை உடையதே இதற்குக் காரணமாகும்.

ஆன்மிகத் தளத்தில் நின்று கொண்டு வடமொழியை இராமலிங்க வள்ளலாரும், அதுபோல் இந்திமொழியை தமிழ்த்துறவி பாம்பன் அடிகளார் என்பவரும் எதிர்த்து வந்துள்ளனர்.

இந்த உண்மைகளை மூடிமறைத்து இந்தி எதிர்ப்பு உணர்வை முதன் முதலில் தோற்றுவித்தவர் ஈ.வெ.ரா.பெரியார் என்றும், அவரே சித்திரபுத்திரன் எனும் புனைப்பெயரில் 7.3.1926இல் தனது குடியரசு இதழில், "தமிழுக்குத் துரோகமும் இந்திமொழியின் ரகசியமும்" என்ற தலைப்பில் கட்டுரை தீட்டினார் என்றும் வரலாறு எழுதுவோர் ஆராய்ச்சி செய்யாது நுனிப்புல் மேய்வோராய் எழுதி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிராய் ஆன்மிகத் தளத்தில் நின்று 1899ஆம் ஆண்டில் முதற்குரல் கொடுத்தவர் குமரகுருதாச சுவாமிகள் என்றழைக்கப்படும் பாம்பன் அடிகளார் என்பதே உண்மையான வரலாறாகும்.
பாம்பன் அடிகளார் இராமேசுவரம் பாம்பனில் 1853ஆம் ஆண்டு பிறந்தவர். சைவநெறி மீதும், முருகன் மீதும் தீராப்பற்று கொண்டவர். வடமொழியிலும், தமிழ்மொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர். அவர் 6600 அருந்தமிழ் பாடல்களை இயற்றியுள்ளார். இவரால் வடமொழி கலவாமல் தனித் தமிழ் நடையில் எழுதப்பட்ட "சேந்தன் செந்தமிழ்" எனும் நூல் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். 1929ஆம் ஆண்டு மறைந்த இவருக்கு சென்னை திருவான்மியூரில் சமாதி கோயில் கட்டப்பட்டுள்ளது.

பாம்பன் அடிகளார் இந்தியை எதிர்த்ததன் காரணம் என்னவெனில், இந்தி நுழைந்து விட்டால் தமிழர்களின் சைவ சமயமும், தமிழ்மொழியும் அழிந்து விடும் என்று அஞ்சினார். வேறு பாடையான இந்தியை வளர்க்க முற்படும் வடநாட்டவரின் சுயநலத்திற்கு ஆதரவளிக்கக் கூடாது என்பதையும், தமிழ்மொழியை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரப்பும் பணியில் தமிழர்கள் ஈடுபட வேண்டும் என்பதையும் 1899ஆம் ஆண்டு வெளியிட்ட தனது 'திருப்பா' எனும் சாத்திர நூலில் குறிப்பிட்டுள்ளார். இதன் வரிகள் இதோ:
பாடை பதினேட்டேயன்று பண்டைப் பரதகண்ட சாத்திரங்கள் பகர்ந்தவாறு கடந்து எத்தனையோ பாடைகளிஞ் ஞான்று காணப்படல் காலந்தோறும் கன்மதன்மங்கள் வேறுபடுமென்பதைக் காட்டுகின்ற தென்பதூஉம், அவ்வேறுபாட்டிற்கியையப் பன்முகத்தாலுந் தமிழ் பல்கு வழியினைத் தேடல் வேண்டுமென்பதூஉம், அப் பல்கலின்மையால் வடநாட்டிலும் மற்றை நாட்டிலுந் தமிழ் வேதப் பெருமையினையும் ஆக்கிய வருளாளர் பெருமையினையுமறியாக் குறையானது வடமொழி பிறமொழியென்பவற்றின் கண்ணவேயே விருப்பத்தையும் பிற மத வேட்கையையும் பெருமயக்கத்தையும் பெருக்கு கின்றதென்பதூஉம் தமிழ்நலன் இற்றென வறியாது

" இந்தி முதலிய வேறு பாடைகளை யிந்நாட்டகத்தும் விருத்தி செய்ய விழையும் வடநாடரது சுயநலத்தினை யாதரித்தல் தமிழர் கடன்மை யன்றென்பதூஉம் "

தலைவனருளற்புதமும், கண்டுகூறு முண்மையுமுட் கொண்டிலகு தமிழ்வேதம் இனிது வியாபிக்கின் இந்நிலவுலகெங்கணுஞ் சைவ சமயமே தலைப்படுமென்பதும், அஞ்ஞான்று ஆன்மலாப வவாவுடையா ரனைவரும் இவ்வுலகினை நேடாதிருக்க நியாய முற்றென்பதூஉம் இங்ஙனங் கொளக் கிடப்பனவாம்.
(திருப்பா நூன்முகம் பக்க.எ. 17.)

பாம்பன் அடிகளார் இந்நூன்முகத்தை புதுப்பாக்கமெனும் குமாரபுரத்தில் புதுப்பேட்டை அமீர் மகால் அருகில் தங்கி 26.7.1920ஆம் ஆண்டில் இரண்டாம் பதிப்பிலும் வரைந்திருக்கிறார்கள்.

1899ஆம் ஆண்டு இந்தி என்பது தமிழ்நாட்டில் திணிக்கப்படாத காலம். வடநாட்டினரின் இந்தியை திணிக்க முற்படும் உணர்வை முன் கூட்டியே அறிந்து பாம்பன் அடிகளார் எழுதியது வியப்பிற்குரியது.

எனவே, இந்தி எதிர்ப்பு வரலாற்றை எழுதுவோர் இனியாவது ஈ.வெ.ரா.பெரியாருக்கு முன்னரே இந்தி எதிர்ப்புக்கான விதை ஊன்றிய பாம்பன் அடிகளாரை இந்தி எதிர்ப்பு வரலாற்றின் பக்கங்களில் குறிப்பிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

(தகவல்: மு.வலவன் எழுதிய "முருகனைப் பாடிய மூவர்" நூலிலிருந்து.)
நன்றி: Kathir Nilavan