23 ஏப்ரல் 2021

புத்தக வாசிப்பா? பெருமை பீற்றலா?!


எத்தனை புத்தகங்களை படித்தேன், யாராருடைய எழுத்துகளையெல்லாம் வாசித்தேன், எந்தெந்த துறைகளிலுள்ள நூல்களை புரட்டினேன் என பலரது பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
 
எளிய மக்களின் வாழ்வியல், ஆண்டான் அடிமையெனும் சாதிய அடக்குமுறை, சமூக புரட்சியாளர்களின் அனுபவங்கள், வணிகமயமாக்கலின் கோரமுகம், மதங்களுக்கு பின்னாலுள்ள அரசியல், உலகமெங்கும் நடக்கும் இயற்கை வளம் சூறையாடல், எல்லை கடந்து நாடு பிடிக்கும் நாடகங்கள், வல்லாதிக்க நாடுகளின் போர் அரசியல், இப்படியாக ஆளாளுக்கு என்னென்ன படித்தேனென, இங்கே பட்டியலிட்டு பீற்றிக்கொள்வதை தவிர அதனால் என்ன பிரயோசனம் இருக்கிறதென தெரியவில்லை.

இப்படி சொல்வதால் மற்றவர்களையும் படிக்க தூண்டும் உளவியல் இருக்கிறதென முட்டு கொடுப்பதை ஏற்க முடியாது. எழுதியவன் ஏட்டை கெடுத்தான்; படிச்சவன் பாட்டை கெடுத்தான் என்ற கதை தான் இங்கே நிலவுகிறது. தனக்கான ஒரு வட்டத்தை வைத்து கொண்டு தங்களைத்தாங்களே மெத்த படித்தவர்கள், வாசிப்பனுபவம் இருப்பவர்கள் போல மாற்றிமாற்றி புகழ்வதும் ஒருவித மனப்பிறழ்வு தான். சுற்றி இருப்பவர்கள் மத்தியில் ஒருவித மாயையை உருவாக்கி, தங்களை அறிவுஜீவியாக காட்டிக்கொள்ளும் யுக்திக்குதான் இந்த புத்தக வாசிப்பு கதைகளெல்லாம் தேவைப்படுகிறதே ஒழிய, அப்படி படித்தவர்களால் எந்த பலனும் மற்றவர்களுக்கு இல்லை.
 
நிறைய படித்தவர்களாக அடையாளப்படுபவர்களில் பெரும்பாலனோர், தங்களது சுயத்தை மறைத்து, தன் மனதிற்கு நெருக்கமான அடையாளத்தை மறைத்து, இல்லாத நடுநிலை பக்கம் நிற்பது போல போலியாக காட்டி கொள்கின்றனர். நிறைய நூல்களை வாசித்தவர்கள், நிஜத்தில் அந்த வாசிப்பில் கிடைத்த அனுபவறிவை போலவே வாழ்வதில்லை. அப்படி வாழ்வதாக நடித்து, சுற்றியுள்ளவர்களை ஏமாற்றி மட்டுமே வருகின்றனர். எழுத படிக்கவே தெரியாத பாமரர்களிடம் இல்லாத எந்த சிறப்பும், பல நூல்களை படித்ததாக பட்டியலிடம் நபர்களிடம் இல்லவே இல்லை என்பதே உண்மை.

- இரா.ச. இமலாதித்தன்

18 ஏப்ரல் 2021

இந்து அறநிலையத்துறையும், ஜக்கி வாசுதேவும்!

        "ஜக்கி வாசுதேவ், திராவிடர். எதிர்ப்போம். பிரசாந்த் கிஷோர், ஆரியர். ஆதரிப்போம்." என பேசும் திராவிட அரசியல் பேசும் ஆட்கள் அனைவருமே மக்களை ஏமாற்றும் செயல்களையே செய்கின்றனர். இங்கே நடைபெறும் அனைத்து வணிகம் சார்ந்தது தான். அது, அரசியலோ, ஆன்மீகமோ, மருத்துவமோ, விளையாட்டோ, எதுவாகினும் அனைத்தும் வணிகமயமாகி விட்டன.

        கோவில்களை பற்றி ஜக்கி வாசுதேவ் பேசியதும் கொந்தளிக்கும் நபர்கள், இந்து அறநிலையத்துறையில் உள்ள ஊழல்களை பற்றி பேசுவதில்லை.
இந்து அறநிலையத் துறைக்கான அமைச்சர் உள்ளிட்ட அரசு ஊழியர்களால், கட்சி ஆட்களின் தலையீட்டால் கோவில்களுக்கு உள்ளேயும், வெளியேயும் ஆன்மீகத்தின் பெயரில் லஞ்சமே தலைவிரித்து ஆடுகின்றன. கிறிஸ்துவ மத பற்றாளருக்கு இந்து ஆலயத்தில் அரசு பணி வழங்கிய போக்கும் ஊழலின் நீட்சியே.
 
        கோவில் மூலவரை விரைவாக தரிசிக்க உருவாக்கப்பட்டிருக்கும் வி.ஐ.பி. தரிசனத்தில் அர்ச்சகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையேயுள்ள உடன்படிக்கையால் ஏற்படும் சிரமங்களெல்லாம் பாமர பக்தர்களின் மீது தான் விழுகின்றன. கோவிலுள்ள உண்டியல்களில் கூட அர்ச்சகர்களுக்கும், அறநிலையத்துறை ஊழியர்களுக்கும் உள் இடஒதுக்கீடு உண்டு. பணம் யாருக்கென்ற அடிதடி போட்டிகளும் ஆங்காங்கே நடைபெறுவதை பார்த்துக்கொண்டு தான் கடக்கின்றோம்.
 
        சிலை கடத்தலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மிகப்பெரும் ஆன்மீக அடையாளமாய் இருக்கும் பெரியாட்களே முதன்மையாக இருக்கின்றனர். கோவிலுக்கு சொந்தமான சிலைகள் காணாமல் போவதும், மூலவருக்கான தங்க வைர நகைகள் பரவலாக எடைகுறைப்பு செய்யப்படுவதையும் அன்றாட செய்திகளாக பார்த்து வருகிறோம். பெரும்பாலான கோவில்களில் தட்சிணை வைக்கவில்லையென்றால் தரிசனமே கிடைக்காது. படியில் அமர்ந்திருக்கும் அர்ச்சகர், எழுந்து கூட தீபாராதனை தட்டை காட்டுவதில்லை. விபூதி குங்கும பிரசாதம் கூட தட்சினையை பொறுத்தே வழங்கப்படுகிறது. இவையெல்லாம் கோவிலுக்குள் நடைபெறும் கூத்துகள்.

        ஒவ்வொரு கிராமக்கோவில்களும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்து விட்டன. அனைத்து கோவில்களிலும் உற்சவர் சிலைகள் உண்டு. பெரும்பாலும் அவையெல்லாம் ஐம்பொன் சிலைகளாக இருக்கும். ஒவ்வொரு மாதாந்திர வருடாந்திர திருவிழாக்களின் பொழுது, வீதிவுலா செய்யும் உற்சவர் சிலையை அந்தெந்த கோவிலில் வைக்க விடுவதே இல்லை. பாதுகாப்பு காரணங்களை காட்டி, பல மைல் தொலைவிலுள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் எடுத்து கொண்டு போய் விடுகின்றனர். கோவில் திருவிழாவின் பொழுது வசூல் செய்து வாங்கிய அந்த உற்சவர் சிலையை எடுத்து வர, இந்து அறநிலையத்துறை ஊழியர்களுக்கு முறைப்படி ஒருமாதம் முன்பே கடிதம் கொடுத்து, ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுத்தால் தான் உற்சவர் ஊருக்கு வருவார். இல்லையெனில் கெடுபிடிகள் தான். சில ஊர்களில் லஞ்சம் கொடுத்து சமாளிக்க முடியாததாலும், கெடுபிடிகள் அதிகமிருப்பதாலும் ஊர்க்காரர்களே வசூலித்து மற்றுமொரு உற்சவர் சிலையை வாங்கி வைத்து அறநிலையத்துறையின் கெஞ்சிக் கொண்டிருக்காமல் திருவிழாவை சிறப்பாக செய்து முடிக்கின்றனர்.
இதெல்லாம் நேரடியாக கண்ட, கேட்டுணர்ந்த நிகழ்வுகள். இந்து அறநிலையத் துறையை பற்றி சுட்டிக்காட்ட இதுமாதிரியாக பல செய்திகள் உண்டு.

அடுத்து கோவில்களுக்கு வெளியே நடைபெறும் சம்பவங்களை பார்த்தால், பெரும்பாலான சிறு நகரங்களிலும், பல கிராமங்களிலும் உள்ள பல வீட்டு மனைகள் கோவில் நிலங்களே. மேலும், நகர்புற வணிகவளாகங்கள், முக்கிய இடங்களெல்லாம் பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டு மிக சொற்பமான குத்தகை/வாடகை பணம் கூட சரிவர தரப்படுவதில்லை. இன்னும் ஒருபடி மேலாக போய், பல கோவில் இடங்கள் தனியாரின் சொத்தாகி கூட கை மாறியிருக்கின்றன. அதிலுள்ள உரிமையாளர்களில் மாற்று மதத்தினரும் உண்டு. கிராமப்புறங்களிலுள்ள எளிய மக்களை தவிர, பெரும்பாலான கோவில் நிலங்களின் உரிமையாளர்கள் அனைவருமே கட்சி ஆட்களாகவும், ஏதாவதொரு கட்சியின் உள்ளூர் தலைவர்களுக்கு வேண்டிய ஆட்களாகவுமே இருக்கின்றனர்.
 
        இந்து அறநிலையத்துறையை திமுகவும், அதிமுகவும் மாறிமாறி தங்களது கட்சியின் சொத்துகளாக்கி ஆக்கிரமித்த கதையெல்லாம் ஒவ்வொரு தனிநபருக்கும் தெரியாமல் இல்லை. நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கி வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதால் தான், கர்நாடகத்தில் இருந்து இங்கே வந்து ஆன்மீகத்தை மூலதனமாக்கி கார்ப்ரேட் நிறுவனம் போல கட்டமைத்து தொழில் செய்யும் ஜக்கி வாசுதேவ் போன்றோர் கோவில்களை கைப்பற்ற களமிறக்கப்பட்டிருக்கின்றனர். நாம் எதிர்க்க வேண்டியது ஜக்கி வாசுதேவை மட்டுமல்ல; அவரை எதிர்க்கும் கட்சி ஆட்களையும் தான். இரு தரப்புக்குமே இங்குள்ள கோவில்கள் மீது அக்கறையெல்லாம் இல்லை. கோவில்களை சார்ந்திருக்கும் அனைத்து சொத்துகளையும் கையகப்படுத்த நினைக்கும் வணிக சண்டையே இவர்களுக்கு முதற் நோக்கமாக இருக்கிறது.
 
- இரா.ச. இமலாதித்தன்