30 அக்டோபர் 2018

அகமுடையாருக்கு, பசும்பொன்னா? காளையார்கோவிலா?



அகமுடையார்களெல்லாம் பசும்பொன்னுக்கு செல்லுங்கள்; செல்லாமல் இருங்கள்; அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், "திருப்பத்தூருக்கும் - காளையார் கோவிலுக்கும் ஸ்டாலின் வரவில்லை, ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் வரவில்லை, திமுகவின் முக்கிய தலைவர்கள் வரவில்லை; அதிமுகவின் முக்கிய தலைவர்கள் வரவில்லை; முதல்வரோ, எதிர்க்கட்சித்தலைவரோ, மற்ற அரசியல் கட்சித் தலைவர்களோ, யாரும் வரவில்லை; ஆனால் பசும்பொன்னுக்கு மட்டும் இவர்கள் செல்கிறார்கள்; திட்டமிட்டே அகமுடையார்களை அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணிக்கின்றன." என்பது போன்ற விமர்சனங்களை தவிருங்கள்.

இன்னும் சொல்லப்போனால் இப்படியான விமர்சனங்கள் தேவையே இல்லை. அப்படி விமர்சித்தே ஆக வேண்டுமென நீங்கள் விரும்பினால், அக்டோபர் 24ம் தேதி திருப்பத்தூருக்கு வராத, அக்டோபர் 27ம் தேதி காளையார்கோவிலுக்கு வராத அகமுடையார்களை முதலில் விமர்சியுங்கள். குறிப்பாக திருப்பத்தூருக்கும், காளையார்கோவிலுக்கும் வராமல், அக்டோபர் 30ஆம் தேதி மட்டும் பசும்பொன் செல்லும் அகமுடையார்களை விமர்சியுங்கள். இந்த விசயத்தில் முதலில் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் அரசியல் கட்சி தலைவர்களல்ல; அவர்களை நாம் விமர்சிக்க வேண்டிய தேவையுமில்லை. அவர்கள் ஓட்டுரசியல் செய்யும் தலைவர்கள். அவர்களின் பார்வையில், கள்ளர் - மறவர் - அகமுடையர் என்ற 'சோ கால்டு' முக்குலத்தோர் போற்றும் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளில் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் சென்று வந்தால், நமக்கும் அவர்களது ஆதரவு கிடைக்கும்; ஓட்டுரசியலுக்கு இந்த வாக்கு வங்கி தேர்தல் நேரங்களில் தங்களுக்கு பயன்படுமென்ற நம்பிக்கையில் தான் வருகின்றனர். அப்படியான அரசியல் கணக்கீடுகளோடு பசும்பொன் வருபவர்களை விமர்சிப்பது வீண்.

போலியான முக்குலத்தோர் அரசியலை நம்பி விலாங்கு மீன் போல, 'அகமுடையார் ஒற்றுமை - முக்குலத்தோர் ஒற்றுமை' என இரட்டை குதிரையில் சவாரி செய்யும் அகமுடையார்களிடம் முதலில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். மக்கள்தொகை எண்ணிக்கையிலும், விகிதிச்சார அடிப்படையிலும், அகமுடையாருக்கு கிடைத்திருக்க வேண்டிய அரசியல் அங்கீகாரம் இதுவரை கிடைக்கவே இல்லை என்பதை தெளிவு படுத்துங்கள். அகமுடையாருக்கான தொகுதிகளை, பதவிகளை, கள்ளரும் - மறவரும் 'சோ கால்டு' முக்குலத்தோர் என்ற முகமூடிகளால் ஆக்கிரமித்து கொள்கின்றனர் என்ற உண்மையை உணர்த்துங்கள்.

அக்டோபர் 24ல் திருப்பத்தூருக்கோ, அக்டோபர் 27ல் காளையார் கோவிலுக்கோ, எத்தனை கள்ளர் / மறவர் வந்து போகிறார்கள்? வரவே இல்லையென்றும் சொல்ல முடியாது; ஆனால் பசும்பொன்னுக்கு செல்பவர்களில் எத்தனை சதவீதம் பேர் காளையார்கோவிலுக்கும், திருப்பத்தூருக்கும் வந்தார்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள். அமைப்பு சார்ந்தோ, தங்களது தலைவர்களுக்காகவோ ஒருவேளை அவர்கள் வந்திருக்கலாம். தனித்து, கள்ளரும் மறவரும் காளையார்கோவில் / திருப்பத்தூர் வந்திருப்பார்களா என்றால், மிக சொற்பமான எண்ணிக்கையில் வந்து இருக்கலாம். ஆனால் அகமுடையார்களின் நிலைப்பாடோ வேறொன்றாக இருக்கிறது. தொடர்ச்சியாக திருப்பத்தூருக்கோ, காளையார்கோவிலுக்கோ வருகிறார்களோ இல்லையோ, ஆனால் பசும்பொன்னுக்கு அகமுடையார்கள் செல்கின்றனர். இந்த விசயத்தில் மனமாற்றம் ஏற்படாத வரை, வெளியிலிருந்து ஒரு மாற்றம் ஏற்பட போவதே இல்லை.

அகமுடையார்கள் பசும்பொன்னுக்கு போவதோ, போகாமலிருப்பதோ அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், காளையார்கோவிலுக்கும், திருப்பத்தூருக்கும் வரவே மாட்டேன்; ஆனால் பசும்பொன்னுக்கு கண்டிப்பாக செல்வேனென இப்படியான எண்ணவோட்டத்தில் இருக்கும் அகமுடையார்கள் மாறாதவரை, ஹிந்திய தேசிய / திராவிட / தமிழ்தேசிய அரசியல் கட்சிகளின் அரசியல் பார்வையும் மாறாது. அவர்களை விமர்சிக்கும் முன், இதுமாதிரி நமக்குள்ளேயே உள்ள முரண்களை கலைந்து, குறைகளை சரிசெய்ய நாம்தான் முன்வர வேண்டும். அப்போது தான், அகமுடையாருக்கான அரசியல் அங்கீகாரம் முழுமையாக கிடைக்க வாய்ப்புகளும் உருவாகும்.

- இரா.ச. இமலாதித்தன்

26 அக்டோபர் 2018

மாமன்னர் மருதுபான்டியர்கள் யாருக்கு சொந்தம்?



மாமன்னர் மருதுபாண்டியர்கள் குறிப்பிட்ட இனக்குழுவிற்கு மட்டும் உரிமையானவர்கள் இல்லை; ஒட்டுமொத்த தமிழினத்திற்கே அடையாளமானவர்கள்; இது உண்மை தான்; ஆனால் இத்தனை நாட்கள், அகமுடையார்கள் கொண்டாடவில்லையென்றால், என்றைக்கோ மருதரசர் புகழை, கரடி கருத்தான் போன்ற காட்டிக்கொடுத்த துரோகிகளின் வம்சாவழியினரால் இருட்டடிப்பு செய்திருப்பார்கள். சிவகங்கை சீமை ஆட்சிப்பட்டியல் கல்வெட்டில் கூட, எம் மன்னவர்களின் பெயர்களை இடம்பெற செய்யாத அளவிற்கான அவலநிலையே இன்றளவும் தொடர்கிறது; இந்த அநியாயத்தை அகமுடையார்களை தவிர வேறு யாராவது கண்டித்தது உண்டா?
கொலை காரனுக்கும், கொள்ளை காரனுக்கும், தொடை நடுங்கிக்குமென கண்டவனக்கெல்லாம் தமிழ்நாடெங்கும் சிலை இருக்க, மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு மதுரையை தவிர வேறெங்கும் முழு உருவ சிலைகள் உண்டா? 1780 முதல் 1801 வரை சிவகங்கையை ஆண்ட மருதுபாண்டியர்களின் சிலையை, இன்றளவும் கூட அங்கே வைக்க முடியாத அளவிற்கு துரோகம் உச்சத்தில் இருக்கிறது. இதுதான் கள எதார்த்தம். சாதியம் தாண்டி தமிழ் தேசியத்தை, மண்ணுரிமை மீட்பை, மக்கள் புரட்சியை எமக்குள் விதைத்து சென்ற ஆண்டவர்கள் அவர்கள்; எங்கள் வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரிய அவர்களை, ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் கொண்டாட முன்வரும்போது நாங்கள் அவர்கள் பின்னால் நிற்போம். அதுவரை நாங்கள் முன்னெடுக்கும் எங்கள் கொண்டாட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.
- இரா.ச. இமலாதித்தன்
#மருதுபாண்டியர் #MarudhuPandiyar #அகமுடையார் #Agamudayar