வாழ்த்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 செப்டம்பர் 2021

வாழ்த்துகள் சொல்வதென்ன அத்தனை பிரமாதமான விசயமா?


        ன் மீது இத்தனை அன்பு வைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நன்றி! இத்தனை பேர்களின் வாழ்த்து என்ன செய்து விட போகிறது? ஒரு பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் சொல்வதென்ன அத்தனை பிரமாதமான விசயமா? என என்னிடம் யாராவது கேட்டால், இல்லையென்றோ ஆமாமென்றோ சொல்லத் தெரியவில்லை.


        ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் வரவின் பின்னால் பிறந்தநாள் உள்ளிட்ட எந்தவொரு நாட்களையும், சம்பந்தப்பட்ட நபரே மறந்தாலும் அவரது நட்பு வட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு அந்த நாளிலுள்ள சிறப்பை சுட்டிக்காட்ட அது தயங்குவதில்லை. அப்படித்தான் அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிறந்தநாளோ, திருமணநாளோ, நல்லதோ, கெட்டதோ எம்மாதிரியாக இருந்தாலும் கடந்த ஆண்டின் மெமரிஸ் வழியாக கூட அனைவருக்கும் காட்டிக்கொடுத்து விடுகிறது. இப்படியான ஒன்றின் மூலமாக பலரிடமிருந்து பெறப்படும் வாழ்த்துகளை வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது? என்று பலர் நினைக்கவும் வாய்ப்புண்டு. இதில் பெருமை ஏதுமில்லை தான். ஆனால் அதை தாண்டிய ஒரு பலம் அதிலுள்ளது. ”நமக்கென யாருமில்லையோ!” என்ற மிகப்பெரும் தனிமையை அது ஆழ்மனதில் இருந்து நீக்கும் பேரொளியாக இருக்கிறது.


        எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து ஒவ்வோர் ஆண்டுமே, என்னுடைய பிறந்தநாளை பெரிதும் கொண்டாடும் எண்ணவோட்டத்தில் நான் இருந்ததில்லை. இந்த நாளும் மற்றைய நாள் போன்றது தான் என்ற மனநிலையில் தான் இருந்திருக்கிறேன். ஆனாலும், அன்றைய நாள் விடுமுறை நாளாக இருந்தால், வேதாரண்யம் அருகிலுள்ள கடிநெல்வயலில் உள்ள குலதெய்வ கோவிலான (வேம்புடையார் என்கிற) வேம்படி ஐயனாரை தரிசிக்க செல்வேன். வேலை நாட்களெனில், அந்த வாரத்தில் ஒரு நாள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவதுண்டு. இல்லையெனில், அன்றைய நாளின் காலையிலோ, மாலையிலோ அருகிலிருக்கும் சிவாலயத்திற்கோ, முருகன் கோவிலுக்கோ செல்வதுண்டு. அதிகபட்சம் ஓர் அர்ச்சனையோடு அன்றைய நாள் கடந்து விடும். ஆனால், நமக்கு மட்டுமே தெரிந்த நாளானது, இந்த சமூக ஊடகங்களின் தயவால் ஊரறிய தம்பட்டம் அடிக்கப்படுகிறது. அந்த ஓசையினால், நானும் ஏதோ ஆடிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி இதில் கொண்டாட்டமோ, பெருமிதமோ வேறொன்றுமில்லை.
 
        இன்னும் சொல்வதென்றால். நான் பிறந்தது ஆங்கில நாட்காட்டி படி, செப்டம்பர் 21. அப்படியானால் தமிழ் மாதம் புரட்டாசி ஐந்தாம் நாள். அதிலும் நட்சத்திரப்படி புரட்டாசி கேட்டை அன்று என் பிறந்தநாள் இதுவென கணக்கிலெடுத்திருக்கிறேன். புரட்டாசி முதல் சனிக்கிழமையை கணக்கில் எடுத்திருக்கிறேன்; புரட்டாசி ஐந்தாம் தேதியை கணக்கிலெடுத்திருக்கிறேன்; புரட்டாசி வளர்பிறை ஷஷ்டி திதியை கணக்கில் எடுத்திருக்கிறேன். இப்படியாக என் பிறந்தநாளை பலவாறு கணக்கில் கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் இதை பற்றி ஆய்வுகளையெல்லாம் கடந்து அமைதியாக கடந்திருக்கிறேன்.


        ஆர்குட், கூகிள் பஸ் காலத்திலிருந்தே இதே ஊடகத்தில் நிறைய கசப்பான நிகழ்வுகளும், பலரின் வசவுகளையும், கேலி கிண்டல், மிரட்டல்கள் என பலதரப்பட்ட விமர்சனங்களையும் பார்த்து வந்திருக்கின்றேன். ஆர்குட் முழுவதும் மூடப்பட்ட பின்னால், 2009ம் ஆண்டு முதல் இந்த ஃபேஸ்புக்கின் வாயிலாக இயங்கி வருகின்றேன். அன்றிலிருந்து இன்று வரை என் நட்பு வட்டத்தில் இணைந்திருந்தவர்களை கணக்கிலெடுத்தால், விலகியவர்களின் பட்டியலே ஆயிர கணக்கில் இருக்கும். ஆனாலும், ஆர்குட் காலத்திலிருந்து இன்று வரை நட்பிலிருக்கும் உறவுகளும் இன்னும் உண்டு.

 
        இந்த சமூக ஊடகங்களின் உதவியால், என்னை உடன்பிறந்தானாக பார்க்கும் அன்பிற்கினிய அண்ணன்களும், தம்பிகளும், பாசமிகு பங்காளிகளும் இங்கே கிடைத்திருக்கின்றனர் என நினைக்கையில் வேறென்ன சொத்துபத்து நமக்கு வேண்டும் என, மன உளைச்சலுக்கு ஆளான நேரங்களில் ஆசுவாசப்படுத்தி கொண்டதும் உண்டு. எவ்வித கைமாறும் செய்யாமல், ஊரெங்கும் இத்தனை பேர் எனக்கென அன்பொழுக பாசத்தோடு அரவணைக்க தோள் கொடுக்க இருக்கின்றனர் என நினைக்கையில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

 
        என் வாழ்வில் எனக்கு நேர்ந்த எல்லாவிதமான சுக துக்கங்களில் உள்ள மனக்குமுறல்களை என் நெருங்கிய உறவினர்களோடு, என் குடும்பத்தினரோடு பகிர்ந்ததை விட, இங்குள்ள இணைய உறவுகளோடு அலைபேசியின் வாயிலாக நான் பகிர்ந்து கொண்ட செய்திகளே அதிகம். இப்படியானதொரு பிணைப்பை, நெருக்கத்தை ஆர்குட், ஃபேஸ்புக், வாட்சப் போன்ற சமூக ஊடகங்களே சாத்தியப்படுத்திருக்கின்றன. இணையம் கொடுத்திருக்கும் இப்படியானதொரு வாய்ப்பை அனுபவிக்கும் நாம் அனைவருமே இந்த விசயத்தில் கொடுத்து வைத்தவர்களே.

        ஏதோ பழைய நோட்டு தாள்களில் கிறுக்கி கொண்டிருந்தவனை, நல்லா எழுதுறீங்கற. எழுதுங்க, தொடர்ச்சியா எழுதுங்க, உங்களுக்கு நல்லா எழுத வருது... என நம்பிக்கையூட்டி எனக்கென ஓர் அடையாளத்தை என் எழுத்துகளின் மூலமாகவே எனக்கு கொடுத்ததும் இதே சமூக ஊடகங்களில் இயங்கிய உறவுகள் தான். பூகோள ரீதியாக அவர்களெல்லாம் ஆளுக்கொரு மூலையில் மாவட்டமாக, நகரமாக, ஊராக பிரிந்து இருந்தாலும், என் மீது இத்தனை நெருக்கமும், பாசமும், அன்பும், உரிமையும் வைத்திருக்கின்ற இத்தனை பெரிய உறவு கூட்டத்தை எனக்களித்த இப்பிரபஞ்ச பேரருளுக்கு இந்நாளிலும் என் நன்றி!

- இரா.ச. இமலாதித்தன்


01 ஜனவரி 2018

ஆங்கில புத்தாண்டு 2018!

முப்பது ஆண்டுகள் பிழைப்பிற்காக இங்கே வாழ்ந்தவனெல்லாம் 'பச்சை தமிழன்' என்றால், முந்நூறு ஆண்டுகள் ஆள்வதற்காக இங்கே வாழ்ந்தவனும் 'ப்ரோ ஹிந்தியன்' தானே? அப்போ அவனோட புத்தாண்டான ஜனவரி 1ம் தேதியை கொண்டாட மட்டும் ஏன் எதிர்க்கிறீங்க? முதலாவது சரியென்றால், இரண்டாவதும் சரி தானே? உலகத்தாருக்கு உண்மையான புத்தாண்டெனில் பூமியின் நகர்வான அது 'வடவோட்டம் - தென்னோட்டம்' தான். அப்படியெல்லாம் கணக்கீடு செய்து யாருமிங்கே கொண்டாடவில்லை; ஏனெனில் நாளும் தேதியும் நாமளாக வைத்து கொண்டதுதான்; கொண்டாடக்கூடிய எல்லாவற்றையும் ரிஷிமூலமெல்லாம் பார்க்காமல் மகிழ்வோடு கொண்டாடுங்கள். வாழ்க்கைல ஷந்தோஷம்தாங்க முக்யம்; ஜெய்ஹிந்த்!

ஆங்கில புத்தாண்டை எதிர்ப்பவர்களெல்லாம், ஏன் புதுக்காலண்டர் வாங்க துடியாய் துடிக்கிறீர்கள்? மாத சம்பளம் போன்ற பொருளாதார வருமானம் முதல் அனைத்து கணக்கு வழக்குகளும் ஆங்கிலத்தேதியோடு தான் பின்னிக்கிடக்கிறது என்பதை உணருங்கள். இங்குள்ளவர்களில், உங்களுடைய பிறந்த தேதி எதுவென கேட்டால், 99.9% பேர் ஆங்கிலத்தேதியை தான் சொல்கிறார்கள்; அதோடு அவர்களின் பிறந்த வருடம் எதுமென கேட்டால், 100% பேர் இதே ஆங்கில ஆண்டை மட்டும் தான் சொல்கிறார்கள். இப்படியான எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், மதம் சார்ந்தே எல்லாவற்றையும் பார்க்கும் அணுகுமுறையை இந்த ஆண்டாவது மாற்ற முயலுங்கள்.

Image may contain: 3 people, people smiling, text


ஆங்கில புத்தாண்டை கொண்டாட வேண்டாமென இங்குள்ள எல்லாருக்கும் பாடமெடுக்கும் பாஜகவினர், நரேந்திர மோடிக்கும் பாடமெடுப்பார்களென நம்புகிறோம்.

30 டிசம்பர் 2017

'அகமுடையார் குலத்தோன்றல்' மருத்துவர் ந.சேதுராமன் அவர்களுக்கு பவளவிழா பிறந்தநாள் வாழ்த்துகள்!

Image may contain: 1 person, smiling, closeup

'மீனாட்சி மிஷன்' மருத்துவமனையின் நிறுவனரும், 'மகாசேமம்' என்ற சுயநிதி உதவிக்குழுமத்தின் நிறுவனரும், 'அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக'த்தின் நிறுவனத்தலைவருமான வாராப்பூர் ஜமீன்கோட்டை பெற்றெடுத்த 'அகமுடையார் குலத்தோன்றல்' மருத்துவர் ந.சேதுராமன் அவர்களுக்கு பவளவிழா பிறந்தநாள் வாழ்த்துகள்!

26 நவம்பர் 2017

தமிழினத்தின் தலைவன்!



ஓர் உயரிய கொள்கைக்காக ஒரு தலைவன் போராடினான் என்பதை விட, எத்தனை பேரை போராட வைத்தான் என்பதில்தான் அந்த போராட்டத்தின் வெற்றியே இருக்கிறது. அந்த வகையில் என் அண்ணன் மேதகு. வேலுப்பிள்ளை பிராபகரன் தான், சமகால வரலாற்றில் யாருக்கும் நிகரற்ற தலைவன் என்பதில் மாற்றுகருத்தே இல்லை.
நீ இருக்கிறாயா? இல்லையா? என்று ஆராய விரும்பவில்லை; தலைவனாகவோ - இறைவனாகவோ தமிழர்கள் அனைவரும் உன்னை போற்றிக்கொண்டே இருப்போம். உன் மீதான நம்பிக்கையில் நாங்கள் என்றும் உன்னோடும் - உணர்வோடும் - தமிழோடும் - புலிக்கொடியோடும் இருப்போம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!
எங்களின் தாகம்! தமிழீழ தாயகம்!

08 நவம்பர் 2017

செந்தமிழனுக்கு அகவை வாழ்த்துகள்!





யார் தமிழன்? என்ற மாற்றோரின் ஏளனப்பேச்சையே தன் வசமாக்கி 'நாம் தமிழர்' என்ற கம்பீர அடையாளத்தோடு, சமகால தமிழ்தேசிய அரசியலில் தலைவனாய் திகழும் 'மருது சீமை'யில் பிறப்பெடுத்த எம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு, 48வது அகவை திருநாள் வாழ்த்துகள்!

10 அக்டோபர் 2017

சரவெடி வடிவேலு!





ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல வருகின்ற விசயத்தை ஒரு படம் சொல்லிவிடும். அதனால் தான் இணையமெங்கும் மீம்ஸ் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. அரசியல், சினிமா, விளையாட்டு என அனைத்தையும் விமர்சிக்க இந்த மீம்ஸ் தான் இன்றைய ட்ரெண்ட். அப்படி பார்த்தால், இன்றைய நிலவரப்படி வடிவேலு நடித்த கதாப்பாத்திரங்களையோ, பெயர்களையோ, அவரது உடலியல் அசைவுகளையோ, அவரது வார்த்தைகளையோ பயன்படுத்தாத தமிழ் மீம்ஸ்களே இல்லை; இதை மீம்ஸ் கிரியேட்டர்கள் அனைவருமே ஒத்துக்கொள்வார்கள். அரசியல் சாயங்களால் திரைப்படங்களில் இடைப்பட்ட காலங்களில் அவர் நடிக்காமல் போயிருந்தாலும் கூட, மக்களுக்கும் அவருக்குமான தொடர்பு இன்னும் அதிகமாகவே இருந்தது; அதிலும் குறிப்பாக இணையத்தில் இயங்கும் இளைஞர்கள் மத்தியில், வடிவேலு புறக்கணிக்க முடியாத இடத்தில் இருந்தார். காரணம், மீம்ஸ்.


ஆஹான்...
வட போச்சே...
முடியல்ல...
ஆணியே புடுங்க வேணாம்
வேணாம் வலிக்குது...
பில்டிங் ஸ்ட்ராங்கு பேஷ்மட்டம் வீக்கு
இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு?
உனக்கு வந்தா ரத்தம்; எனக்கு வந்தா தக்காளி சட்னியா?
ஏரியாவுக்கு வாடா...
கிணத்தை காணும்...

இப்படியாக இன்னும் எத்தனையோ தனித்துவ வார்த்தைகளை நம்முள் ஆழமாக விதைத்து நம்மை மகிழ்வித்து மகிழும் 'வைகை புயல்' வடிவேலுவின் 57வது பிறந்தநாள் இன்று!

- இரா.ச. இமலாதித்தன்

(பி.கு: வடிவேலுவிடன் உங்களுக்கு பிடித்த காமெடியோ, ஸ்டில்லோ, காட்சியோ, வசனமோ இருந்தால் கமெண்ட் செய்யுங்கள்.)

#HBDVadivelu #Vadivelu

29 செப்டம்பர் 2017

ஆயுதபூஜை வாழ்த்துகள்!



அரைகுறையான பகுத்தறிவு என்ற பெயராலோ, இடையில் வந்த மதத்தின் பெயராலோ இம்மாதிரியான சிறப்புமிக்க நாளை கொண்டாடமல் இருக்காமல் இருப்பது தான் மூடநம்பிக்கை. 'தூய்மை'யை போலியான விளம்பரத்திற்காக செயல்படுத்தாமல், அறிவுப்பூர்மாக அன்றைக்கே ஆண்டுக்கொரு ஒரு நாளை ஒதுக்கி நமக்குள் கட்டாயமாக திணித்தவர்களுக்கு நன்றி!

உறவுகளுக்கு, ஆயுதபூஜை வாழ்த்துகள்!

21 செப்டம்பர் 2017

மெர்சல் - டீசர்!






அடியேன் பிறந்து சரியாக ஒரு வருடம் கழித்து அதே நாளில் பிறப்பெடுத்திருக்கும் அன்பிற்கினிய உடன்பிறவா இளைய சகோதரர் இயக்குனர் Atlee Kumar க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 'தளபதி' சூப்பர் ஸ்டார் விஜய் அவர்களின் 'மெர்சல்' ட்ரைலரையும் இந்நாளில் வெளியிட்டமைக்கும் ரசிகனாக வாழ்த்துகள்!

(விஜய் + ரஹ்மான் + அட்லி என்ற தமிழ் அக தமிழர்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'மெர்சல்' நிச்சயம் மிரட்டலான வெற்றியை பெறுமென நம்புகிறேன்.)

மிகச்சிறப்பு!



"இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட, நீ தோத்துட்ட என உன் முன்னால் நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது" என்ற விவேகத்தில் பேசிய அஜித் பஞ்ச் போல, இந்த மாதிரியான தடையெல்லாம் ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான்!

"நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும்; நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்"

#PeaceBro!



எண்ணம் போல் வாழ்க்கை; ஆளப்போறான் தமிழன்!

ஒருவேளை மெர்சல் படத்தலைப்பு பிரச்சனைக்கு தீர்வே கிடைக்கவில்லையென்றால் 'ஆளப்பிறந்தவன்' என்று கூட வைக்கலாம்.

09 செப்டம்பர் 2017

பெற்றெடுத்தவர்களின் திருமண நாள்!




இந்த உடலுயிர் உருவாக காரணமாக இருந்த என்னை பெற்றெடுத்தவர்களின் திருமண நாள் இன்று! எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளுக்கு நன்றி.
09/09
இரா.சம்பந்த தேவர்
(த/பெ. அ.இராமமிர்த தேவர்)
தி.இந்திரா
(த/பெ. வ.திருவேங்கடம் பிள்ளை)

25 ஆகஸ்ட் 2017

விநாயகர் சதுர்த்தி!

மூலாதாரம் முதற்கொண்டு முதுகெலும்பு வாயிலாக மூளை வரையிலான மனிதனின் உச்சபட்ச முதுபெரும் முதன்மை அறிவை போற்றும் அடையாளத்திருநாள் வாழ்த்துகள்!

21 ஜூன் 2017

சூப்பர் ஸ்டார் விஜய்!






ஏறுதழுவும் காளைகள் பின்புலத்தில் மட்டுமில்லாது படத்தின் தலைப்பிலும் பாய்ந்து கொண்டிருக்கிறது. தந்தையின் உதவியால் 'இளைய தளபதி' விஜயாக சினிமாவுக்குள் வந்தாலும், அதன் பின்னால் தன் உழைப்பால், தன் திறமையால் மட்டுமே உண்மையான 'சூப்பர் ஸ்டார்' விஜயாக வளர்ந்து நின்றாலும், 'தமிழன்' விஜய் என்பது தான் அவருக்கு மிக கச்சிதமாக பொருந்துகிறது. ஹேட்டர்ஸ்களால் எத்தனை விதமான தரக்குறைவான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், அனைத்தையுமே தனக்கான படிகற்களாக நினைத்து மேலேழுந்து நிற்கும் திரு.விஜயின் திரைவருகைக்கு முன்பும் சரி, பின்பும் சரி, எத்தனையோ பிரபலமான அப்பாக்கள் தன் மகனை, சினிமாத்துறையில் நிலை நிறுத்த இன்றளவும் மெனக்கெடுகின்றனர்; ஆனால், யாரும் அவர்களது இலக்கை எட்டியதாக தெரியவில்லை. எத்தனை பெரிய ஜாம்பவான்களால் ஆரம்ப கால வாய்ப்பை மட்டுமே தன் மகனுக்கு உருவாக்கி கொடுக்க முடியும். அதை தொடர்ந்து தன்னை நிரந்தரமாக்க, நிச்சயமாக சுய திறமையும், கடின உழைப்பும், உண்மையான ஈடுபாடும் வேண்டும். அந்த வகையில் 'எங்கள் சூப்பர் ஸ்டார்' விஜய்க்கு நிகர் என்றைக்கும் அவர் மட்டுமே!

(கண்ணாடி பார்வையில் மெர்சல் என்பது விஜய் போல தெரியும். ஆக்கம்: பிரகாஷ் காளீஸ்வரன்)


எங்கள் நாகப்பட்டினத்தில் முதன்முறையாக மாபெரும் அரசியல் அடையாள மாநாடு போட்டு, 'எங்கள் தமிழ் மீனவனை சிங்களவன் தாக்கினால், இங்குள்ள தமிழர்களெல்லாம் ஒன்றிணைந்து இலங்கையையே உலக வரைபடத்திலிருந்து நீக்குவோம்' என உணர்ச்சி வசப்பட்டு பேசியதால் சிங்கள இனவாத அரசால் அவரது படம் திரையிடப்படாமல் முடக்கப்பட்டும் கூட, தன் படத்திற்கு தமிழர்களின் அடையாளமான 'புலி' என பெயர் வைக்கும் போதும், 'அகதியான மக்களுக்கு தனி நாடு வேண்டும்' என 'வில்லு' பட காலத்திலேயே பாடல் வரிகளில் தன் விருப்பத்தை சேர்க்கும் போதும், சமீபத்தில் BehindWoods கொடுத்த 'People's most favorite and most popular actor' என்ற விருதை பெற்றுக்கொண்ட நிகழ்ச்சியில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை பற்றி பேசாமல் விவசாயிகளுக்காக, 'வல்லரசு ஆவதை பிறகு பார்க்கலாம்; விவசாயிகளுக்கான நல்லரசாக இருங்கள்' என அரசாளும் அரசாங்கங்களை எதிர்த்து உணர்வோடு குரல் கொடுக்கும் போதும் தமிழனாக விஜய் பலரது மனங்களுக்கு நெருக்கமாகி விடுவதை எந்தவொரு ஹேட்டர்ஸாலும் தடுத்துவிட முடியாது.

எங்கள் சகோதரர் இயக்குனர் அட்லியின் மெர்சல் திரைப்படம், மெர்சலான வெற்றிபெற்று ஹாட்ரிக் அடிக்க வாழ்த்துகள்! வருங்காலத்தில் நிச்சயமொரு நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியை அலங்கரிக்க போகும், எங்கள் தளபதி விஜய் அவர்களுக்கு 43ம் அகவை நல் வாழ்த்துகள்!

  ரசிகனாக,
- இரா.ச. இமலாதித்தன்

#IamWaiting 4 #Mersal

18 ஜூன் 2017

தந்தையர் திருநாள் வாழ்த்துகள்!




ஓர் ஆண் தன்னுடைய வாழ்க்கையின் முழுமைத்துவத்தை புரிந்து கொள்ள ஆரம்பிப்பதே, தனக்கென ஒரு குழந்தை பிறந்ததற்கு பிறகு தான்! அதுவரையிலும், எதிர்காலம் பற்றிய எவ்வித திட்டமிடலின்றி ஊர்சுற்றியாக, சேமிப்பின் முக்கியத்துவத்தை உணராமல் ஊதாரியாக இருந்த அனைத்து ஆண்களும், அப்பா என்ற பதவிக்கு வந்தபின்னால் தனக்கான பொறுப்புகளை உணர்ந்து தன்னை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறார்கள்; எதையுமே பொறுமையாக, கவனமாக, ரொம்பவே யோசித்து செயல்படுத்துகிறார்கள். இளமையின் வேகம் குறைந்து, அனுபவமிக்கவராகவும் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட பெருமைகொண்ட மாண்புமிகு அப்பா என்ற பதவியை வகிக்கும் திரு. இரா.சம்பந்த தேவரான என் அப்பாவின் தியாகத்தையும் உழைப்பையும் இந்நாளில் நினைவுகூர்கிறேன்.

தமிழுணர்வு, அரசியல் ஆர்வம், விடுதலைபுலிகள் ஆதரவு, தலைமைத்துவ பண்பு, சிக்கனமாக கையாளுதல், ஆடம்பரமில்லா வாழ்வு, தாய் பாசம், குடும்ப பொறுப்பு, சமுதாய பங்களிப்பு, மற்றவர்களை அணுகும் விதம், நாட்குறிப்பு போலவே கணக்கு வழக்குகளை கையாளும் உத்தி, எளியோரையும் தன் வசப்படுத்தும் குணம், இடர்பாடான சுப/துக்க நிகழ்வுகளை கூட நேர்த்தியாக ஒருங்கிணைக்கும் வல்லமை, பாகுபாடில்லாத பழகும் முறை, நினைவாற்றலுடனான செயல்பாடு, இப்படி எத்தனையோ விசயங்களை இன்னுமும் என் வாழ்நாளில் என் தந்தை திரு. இரா.சம்பந்த தேவரிடமிருந்தே கற்று கொண்டிருக்கிறேன். நான்கு முழ வெள்ளை வேட்டி, முழங்கை வரை மடித்த முழு வெள்ளை சட்டையென்ற தனித்துவ ஆடை அடையாளத்தை அவரது பதின்ம வயதிலிருந்து இப்போது வரை மாற்றியதே இல்லை. அவரது மகன் என்ற பெருமையான ஒற்றை அடையாளத்தை எனக்களித்த இப்பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி!

மேலே சொல்லிருக்கின்ற எந்தவொரு விசயத்தையும் இப்போது வரையிலும் என் அப்பாவிடம் பகிர்ந்து கொண்டதே இல்லை. கூச்சமா? கால இடைவெளியா? பக்குவமின்மையா? இப்படி எது காரணமென தெரியவில்லை. அதனாலேயே வருடாவருடம் இங்கேயே சொல்லி விட்டு, இந்நாளை கடந்து விடுகிறேன். அது பக்தி; பாசம்; பயம்; தலைமுறை இடைவெளி. இப்படி ஆயிரம் அர்த்தம் இருந்தாலும், விலகியே ரசிக்கிறேன் என் அப்பாவை.

இனிய தந்தையர் திருநாள் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

17 ஜூன் 2017

எங்களிலிருந்து ஒரு இசை நாயகன் உதயமாகிறான்!




இசைஞானி இளையராஜா என்ற பெயர் போல, 'போத்திராஜா' என்ற பெயரும் இனி இசைத்துறையில் நீங்காதவொரு இடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் அதிகமாகவே இருக்கிறது. தெற்கத்தி மண்ணின் மணம் சார்ந்த மக்களிசையை பாடலாக்கிருக்கும் முதற்முயற்சியே முத்தாய்ப்பாய் அமைந்திருக்கிறது. தானே எழுதி, தானே இசையமைத்து, தானே பாடி, சகோ.போத்திராஜா உருவாக்கி இருக்கும் 'மொய் - தாய்மாமன் வாரான்டி' என்ற பாடல் அனைவரையும் நிச்சயமாக கவரும். இந்த பாடல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. இதுவரையிலும் தாய்மாமன் வாரான்டி பாடலை எத்தனை முறை கேட்டேனென தெரியவில்லை; கணக்கு வழக்கில்லாமல் கேட்டு கொண்டிருக்கிறேன். தாய் மாமனின் உரிமையையும், சீர் பற்றியும், மொய் பற்றியும் பெருமைகளை பாடும் இப்பாடல் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன்.

ஏறி இறங்கி கொண்டிருக்கும் பொருளாதார சூழலிலும், தன் உழைப்பில் சம்பாரித்த பணத்தையே முதலீடாக போட்டு, தன் திறமையால் மட்டுமே சிங்கிள் பாடலை வெளியிடுவது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். சினிமாத்துறையில் பிரபலமான தனுஷ், சிம்பு போன்றவர்கள் பலரின் உதவியோடு எழுதி பாடினாலேயே ஆஹா ஓஹோவென மெய் சிலிர்க்கும் அதே வேளையில், பிரபலங்களின் எவ்வித பின்புலமுமின்றி இசைத்துறையில் காலடி பதிக்கும் எளியவரான போத்திராஜா போன்ற திறமைசாலிகளையும் பாராட்டுவோம்.

மதுரை மண்ணின் மைந்தனான போத்திராஜாவின் எழுத்து - இசை - குரலாக உருவாகியிருக்கும் 'மொய் - தாய்மாமன் வாரான்டி' என்ற பாடல், 18.06.2017 ஞாயிறன்று மதுரை செக்கனூரணியிலுள்ள ஜெயஸ்ரீ மகாலில் நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்படுகிறது. போத்திராஜாவின் தந்தையான தெய்வத்திரு கே.ஆர்.பாண்டி சேர்வையின் ஆசியோடு, எங்கள் 'பெரிய மருது' போத்திராஜாவின் இந்த இசைப்பயணம் இனிவரும் நாட்களிலெல்லாம் சிறப்பாக அமைந்து, இசையுலகில் மிகப்பெரிய உச்சத்தை தொட அன்பு சகோதரனாக எம் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

(இனி பலருடைய செல்போனின் ரிங்டோனாக மாறப்போகும் 'தாய்மாமன் வாரானடி' பாடல் தேவைப்படுவோர், என்னுடைய வாட்சப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்.)

08 மார்ச் 2017

இனிய மகளிர்நாள் வாழ்த்துகள்!

பெண்களை ஆண்கள் அடக்கி ஆள்வது போன்ற மாயையை இன்னும் எத்தனை காலத்திற்கு சொல்லிக்கொண்டே இருக்க போகிறார்களென தெரியவில்லை. யார் அந்த ஆண்கள்? என அவர்களுக்கு இன்னும் தெரியவே இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மிகப்பெரிய வட்டம், ஒரு புள்ளியிலிருந்தே தொடங்குவது போல, அவர்களை அடக்கும் ஆண்களும் கூட தங்கள் குடும்பத்தில் தான் இருக்கிறார்களென்ற உண்மையை ஒத்துக்கொள்ள பழகிக்கொள்வது தான் நேர்மையாகவும் இருக்க முடியும். ஆணாதிக்கம் என்ற போர்வைக்குள், ஒட்டுமொத்த ஆண்களையும் இன்னும் தூற்றிக்கொண்டிருக்காமல்ம், தன் வீட்டிலிருந்தே ஆணாதிக்கம் என்ற அடிமைதனத்தை எதிர்க்கும் சக்தியை எல்லாம்வல்ல அந்த பரம்பொருளின் அம்சமான பராசக்தி அவர்களுக்கு இந்நாளிலாவது அளிக்கட்டும்!

இனிய மகளிர்நாள் வாழ்த்துகள்!

01 ஜனவரி 2017

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ் தேசியத்தின் மீது தீவிர நம்பிக்கை இருந்தாலும், ஆன்மீக ஜோதிடத்தின் நம்பிக்கையாளனாக சித்திரை ஒன்றாம் தேதியை தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாட தோன்றுகிறது. தையோ, சித்திரையோ, அதுவொரு தேசிய இனத்தின் புத்தாண்டாக மட்டுமே அமைகிறது. ஆனால் உலகமயமாக்கப்பட்ட சமகால சூழலில், இயேசுவின் பிறப்பை மையப்படுத்திய ஆங்கில நாட்காட்டியின் ஜனவரி ஒன்றாம் தேதியையும் இங்கு யாராலும் புறக்கணிக்க முடிவதில்லை என்பதே எதார்த்தம். மேலும், உலகின் அனைத்துதரப்பட்ட மக்களின் தொடர்புமொழியாகவும், இரண்டாம் அலுவல் மொழியாகவும் மாறிப்போன ஆங்கில புத்தாண்டை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவும் முடியாது.

பச்சையப்பா கல்லூரியில் 1921ம் ஆண்டு எங்கள் நாகப்பட்டினத்தை சேர்ந்த மறைமலை அடிகளாரின் தலைமையிலான திரு.வி.க. உள்ளிட்ட குழுவினரின் ஆய்வுமுடிவின் படி, திருவள்ளுவர் பிறந்த ஆண்டை உறுதி செய்தனர். அவர்களது ஆய்வின் படி, இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்னதாகவே வள்ளுவர் பிறந்தார் என்பதை வைத்து தனித்துவ நாட்காட்டியும் உருவாக்கப்பட்டது. அதன் தொட்ர்ச்சியாக தமிழக அரசு கி.பி.1972ம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று, அரசிதழிலும் வெளியிட்டு தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் ஆண்டு என்ற தமிழர்களுக்கான பொது ஆண்டுமுறையை கடைபிடித்தும் வருகிறது.

இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்னரே பல்லாயிரம் ஆண்டுகள் பண்பாட்டு கூறுகளோடு வாழ்ந்த தமிழ் பேரினத்தின் நீட்சியான சமகால தமிழனாக, கி.பி. 2017ம் ஆண்டை மனமகிழ்வோடு வரவேற்கிறேன். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற முன்னோரின் வாக்குப்படி அனைத்து உறவுகளுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

22 ஜூன் 2016

இனிய வாழ்த்துகள் இளைய தளபதி!

"அவமானங்களை சேகரித்து வை; வெற்றி உன் வசமாகும்!" - இந்த வாசகம் இளையதளபதி விஜய்க்கு தான் கச்சிதமாக பொருந்தும். அவர் சினிமா துறைக்கு வந்தது முதற்கொண்டு, இப்போது வரையிலும் அவரை விமர்சிக்காத வண்டு சிண்டுகளே கிடையாது. சமூக ஊடகங்கள் தலையெடுத்ததற்கு பின்னால், விஜயை எந்தளவுக்கு தரம் தாழ்ந்து விமர்சிக்க முடியுமோ அந்தளவுக்கு இழிவுபடுத்தி வருகின்றனர் என்பது விஜய் உள்பட அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். விமர்சனம் தான் தன்னை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என்பதை தெளிவாக புரிந்து கொண்ட விஜய், இவற்றையெல்லாம் கண்டு சோர்வடைந்தது இல்லை.

கன்னடரான ரஜினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அதே கூட்டம், பச்சைத்தமிழனான விஜயை மட்டும் திட்டமிட்டே தமிழ்நாட்டில் அவமதிக்கிறது. ஒரு கமர்சியல் நடிகனாக, டான்ஸ் - ஃபைட் - காமெடி - செண்டிமெண்ட் என விஜயிடம் அனைத்துமே இருக்கிறது. ஆனாலும் அதையே குறை கூறி விஜயை விமர்சிக்கின்றனர் இணையதளவாசிகள். இந்த விசயத்தில் விஜய் தெளிவாகவே இருக்கிறார். 'தன்னுடைய படம் ரசிகர்களுக்கானது; அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவே படம் நடிக்கிறேன்' என்பதே அவரது அளவீடாக இருக்கிறது.

43வது வயதிலும் இளைய தளபதியாகவே உடலை பராமரிக்கும் விஜய்க்கு, ஒவ்வொரு படத்திலும் கெட்டப் மாற்றி கமல் - விக்ரம் போல உலக நாயகனாக உருவெடுக்கும் ஆசையெல்லாம் இல்லை; ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் குட்டி சுட்டீஸ்களுக்கு சூப்பர் ஸ்டாராக இருப்பதே அவருக்கு திருப்திகரமாக இருக்கிறது. இன்றைக்கு விஜய் மீது மிகவும் இழிவான விமர்சனத்தை வைக்கும் ஒவ்வொரு இணையதள வாசியும், அவர்களது குழந்தை பருவத்தில் விஜயை ரசிக்காமல் இருந்திருக்க முடியாது என்பதுதான் எதார்த்தமான உண்மை. திரையில் ஒரு ஹீரோ தோன்றினால் அவரிடம் என்னென்ன எதிர்பார்ப்போமோ அதையெல்லாம் தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்டு, பாமர ரசிகனின் சூப்பர் ஸ்டாராக திகழும் இளைய தளபதிக்கு என் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

31 மார்ச் 2016

ரமணன்!



இன்றோடு பணி நிறைவு செய்யும் பள்ளி மாணவர்களின் போற்றுதலுக்குரிய, 'எங்கள் சோழநாட்டு அகமுடையார் குலத்தோன்றல்' திரு ரமணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

வீ மிஸ் யூ தேவரே!

09 மார்ச் 2016

மலையாண்ட அள்ளியில் சிவராத்திரி விழா!



மகா சிவராத்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள ’மலையாண்ட அள்ளி’யில், ’மூவேந்தர் இளைஞர் நற்பணி மன்றம்’ சார்பாக அன்னதானம் செய்து விழாவை சிறப்பித்த அகமுடையார் உறவுகளுக்கு வாழ்த்துகள்!

08 மார்ச் 2016

இனிய சர்வதேச பெண்கள் திருநாள் நல் வாழ்த்துகள்!

தன் கூட பிறந்த அக்கா தங்கச்சியை மதிக்காமல், அதட்டி - உருட்டி, அடக்கி - அடிச்சு வளர்க்க ஆசைப்படும் அண்ணங்களும் தம்பிகளும் தான், இன்றைக்கு பெண்கள் நாள் வாழ்த்துகளை பெருமையாக பகிர்ந்து கொள்கின்றனர்.
முதலில் தன்னை மாற்றி கொள்ள பழகி கொள்ளுங்கள். சக மனுசியாக வீட்டிலுள்ள பெண்களை பார்க்காமல், சகஜமாகவும் பேசாமல் இருக்கும் போக்கை முதலில் கைவிடுங்கள். இப்படிப்பட்ட அண்ணன் தம்பிகள் இருக்கும் வீட்டிலுள்ள பெண்களுக்கு தான், காதல் திருமணங்களும் அதிகமாக நடக்கின்றன என்பதையும் ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்.

இனிய சர்வதேச பெண்கள் திருநாள் நல் வாழ்த்துகள்!

04 மார்ச் 2016

+2 மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

இன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் எழுதும் அனைவருக்கும், குறிப்பாக வழக்கம் போல இம்முறையும் மாணவிகளுக்காக முதல் இடங்களையும், தேர்ச்சி சதவீதத்தையும் விட்டுகொடுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!