சுயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 செப்டம்பர் 2021

வாழ்த்துகள் சொல்வதென்ன அத்தனை பிரமாதமான விசயமா?


        ன் மீது இத்தனை அன்பு வைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நன்றி! இத்தனை பேர்களின் வாழ்த்து என்ன செய்து விட போகிறது? ஒரு பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் சொல்வதென்ன அத்தனை பிரமாதமான விசயமா? என என்னிடம் யாராவது கேட்டால், இல்லையென்றோ ஆமாமென்றோ சொல்லத் தெரியவில்லை.


        ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் வரவின் பின்னால் பிறந்தநாள் உள்ளிட்ட எந்தவொரு நாட்களையும், சம்பந்தப்பட்ட நபரே மறந்தாலும் அவரது நட்பு வட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு அந்த நாளிலுள்ள சிறப்பை சுட்டிக்காட்ட அது தயங்குவதில்லை. அப்படித்தான் அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிறந்தநாளோ, திருமணநாளோ, நல்லதோ, கெட்டதோ எம்மாதிரியாக இருந்தாலும் கடந்த ஆண்டின் மெமரிஸ் வழியாக கூட அனைவருக்கும் காட்டிக்கொடுத்து விடுகிறது. இப்படியான ஒன்றின் மூலமாக பலரிடமிருந்து பெறப்படும் வாழ்த்துகளை வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது? என்று பலர் நினைக்கவும் வாய்ப்புண்டு. இதில் பெருமை ஏதுமில்லை தான். ஆனால் அதை தாண்டிய ஒரு பலம் அதிலுள்ளது. ”நமக்கென யாருமில்லையோ!” என்ற மிகப்பெரும் தனிமையை அது ஆழ்மனதில் இருந்து நீக்கும் பேரொளியாக இருக்கிறது.


        எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து ஒவ்வோர் ஆண்டுமே, என்னுடைய பிறந்தநாளை பெரிதும் கொண்டாடும் எண்ணவோட்டத்தில் நான் இருந்ததில்லை. இந்த நாளும் மற்றைய நாள் போன்றது தான் என்ற மனநிலையில் தான் இருந்திருக்கிறேன். ஆனாலும், அன்றைய நாள் விடுமுறை நாளாக இருந்தால், வேதாரண்யம் அருகிலுள்ள கடிநெல்வயலில் உள்ள குலதெய்வ கோவிலான (வேம்புடையார் என்கிற) வேம்படி ஐயனாரை தரிசிக்க செல்வேன். வேலை நாட்களெனில், அந்த வாரத்தில் ஒரு நாள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவதுண்டு. இல்லையெனில், அன்றைய நாளின் காலையிலோ, மாலையிலோ அருகிலிருக்கும் சிவாலயத்திற்கோ, முருகன் கோவிலுக்கோ செல்வதுண்டு. அதிகபட்சம் ஓர் அர்ச்சனையோடு அன்றைய நாள் கடந்து விடும். ஆனால், நமக்கு மட்டுமே தெரிந்த நாளானது, இந்த சமூக ஊடகங்களின் தயவால் ஊரறிய தம்பட்டம் அடிக்கப்படுகிறது. அந்த ஓசையினால், நானும் ஏதோ ஆடிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி இதில் கொண்டாட்டமோ, பெருமிதமோ வேறொன்றுமில்லை.
 
        இன்னும் சொல்வதென்றால். நான் பிறந்தது ஆங்கில நாட்காட்டி படி, செப்டம்பர் 21. அப்படியானால் தமிழ் மாதம் புரட்டாசி ஐந்தாம் நாள். அதிலும் நட்சத்திரப்படி புரட்டாசி கேட்டை அன்று என் பிறந்தநாள் இதுவென கணக்கிலெடுத்திருக்கிறேன். புரட்டாசி முதல் சனிக்கிழமையை கணக்கில் எடுத்திருக்கிறேன்; புரட்டாசி ஐந்தாம் தேதியை கணக்கிலெடுத்திருக்கிறேன்; புரட்டாசி வளர்பிறை ஷஷ்டி திதியை கணக்கில் எடுத்திருக்கிறேன். இப்படியாக என் பிறந்தநாளை பலவாறு கணக்கில் கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் இதை பற்றி ஆய்வுகளையெல்லாம் கடந்து அமைதியாக கடந்திருக்கிறேன்.


        ஆர்குட், கூகிள் பஸ் காலத்திலிருந்தே இதே ஊடகத்தில் நிறைய கசப்பான நிகழ்வுகளும், பலரின் வசவுகளையும், கேலி கிண்டல், மிரட்டல்கள் என பலதரப்பட்ட விமர்சனங்களையும் பார்த்து வந்திருக்கின்றேன். ஆர்குட் முழுவதும் மூடப்பட்ட பின்னால், 2009ம் ஆண்டு முதல் இந்த ஃபேஸ்புக்கின் வாயிலாக இயங்கி வருகின்றேன். அன்றிலிருந்து இன்று வரை என் நட்பு வட்டத்தில் இணைந்திருந்தவர்களை கணக்கிலெடுத்தால், விலகியவர்களின் பட்டியலே ஆயிர கணக்கில் இருக்கும். ஆனாலும், ஆர்குட் காலத்திலிருந்து இன்று வரை நட்பிலிருக்கும் உறவுகளும் இன்னும் உண்டு.

 
        இந்த சமூக ஊடகங்களின் உதவியால், என்னை உடன்பிறந்தானாக பார்க்கும் அன்பிற்கினிய அண்ணன்களும், தம்பிகளும், பாசமிகு பங்காளிகளும் இங்கே கிடைத்திருக்கின்றனர் என நினைக்கையில் வேறென்ன சொத்துபத்து நமக்கு வேண்டும் என, மன உளைச்சலுக்கு ஆளான நேரங்களில் ஆசுவாசப்படுத்தி கொண்டதும் உண்டு. எவ்வித கைமாறும் செய்யாமல், ஊரெங்கும் இத்தனை பேர் எனக்கென அன்பொழுக பாசத்தோடு அரவணைக்க தோள் கொடுக்க இருக்கின்றனர் என நினைக்கையில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

 
        என் வாழ்வில் எனக்கு நேர்ந்த எல்லாவிதமான சுக துக்கங்களில் உள்ள மனக்குமுறல்களை என் நெருங்கிய உறவினர்களோடு, என் குடும்பத்தினரோடு பகிர்ந்ததை விட, இங்குள்ள இணைய உறவுகளோடு அலைபேசியின் வாயிலாக நான் பகிர்ந்து கொண்ட செய்திகளே அதிகம். இப்படியானதொரு பிணைப்பை, நெருக்கத்தை ஆர்குட், ஃபேஸ்புக், வாட்சப் போன்ற சமூக ஊடகங்களே சாத்தியப்படுத்திருக்கின்றன. இணையம் கொடுத்திருக்கும் இப்படியானதொரு வாய்ப்பை அனுபவிக்கும் நாம் அனைவருமே இந்த விசயத்தில் கொடுத்து வைத்தவர்களே.

        ஏதோ பழைய நோட்டு தாள்களில் கிறுக்கி கொண்டிருந்தவனை, நல்லா எழுதுறீங்கற. எழுதுங்க, தொடர்ச்சியா எழுதுங்க, உங்களுக்கு நல்லா எழுத வருது... என நம்பிக்கையூட்டி எனக்கென ஓர் அடையாளத்தை என் எழுத்துகளின் மூலமாகவே எனக்கு கொடுத்ததும் இதே சமூக ஊடகங்களில் இயங்கிய உறவுகள் தான். பூகோள ரீதியாக அவர்களெல்லாம் ஆளுக்கொரு மூலையில் மாவட்டமாக, நகரமாக, ஊராக பிரிந்து இருந்தாலும், என் மீது இத்தனை நெருக்கமும், பாசமும், அன்பும், உரிமையும் வைத்திருக்கின்ற இத்தனை பெரிய உறவு கூட்டத்தை எனக்களித்த இப்பிரபஞ்ச பேரருளுக்கு இந்நாளிலும் என் நன்றி!

- இரா.ச. இமலாதித்தன்


10 நவம்பர் 2017

மாற வேண்டியது நானல்ல, நீங்கள் தான்!


#விஜய் #சீமான் #தமிழ்தேசியம் #அகமுடையார் #வரலாறு#வாணாதிராயர் #சேரர் #மாவலி #மருது #பாண்டியர்#ராஜராஜசோழன் #சோழம் #ஆன்மீகம் #இசை #அரசியல்#சோதிடம் #சித்தரியல் #இளையராஜா #குலதெயவம்#நாகப்பட்டினம் #திருமறைக்காடு #ஊர்ப்பெருமை #குலப்பெருமைஇப்படியாக எந்த வரையறைக்குள்ளும் அடைக்க முடியாத பல விருப்பங்களும் அதன் மீதான ஆழமான பார்வையும் எனக்குண்டு. உங்கள் விருப்பத்திற்கேற்ப என்னை திருத்த முயலாதீர்கள்; நான் யாரையும் திருத்த முயற்சிப்பதில்லை; திருத்துவதற்காக இங்கே வரவுமில்லை. இங்கே எனக்கு உடன்பாடுள்ள பதிவுகளை விட, பிடிக்காத பதிவுகளே என் கண்ணில் அதிகம் தென்பட்ட போதிலும், அதை வெகு எளிதாக கடந்து செல்கிறேனே தவிர, யாரிடமும் அறிவுரை கூறுவதில்லை. புரிதலுக்கு நன்றி!

09 அக்டோபர் 2017

09 செப்டம்பர் 2017

பெற்றெடுத்தவர்களின் திருமண நாள்!




இந்த உடலுயிர் உருவாக காரணமாக இருந்த என்னை பெற்றெடுத்தவர்களின் திருமண நாள் இன்று! எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளுக்கு நன்றி.
09/09
இரா.சம்பந்த தேவர்
(த/பெ. அ.இராமமிர்த தேவர்)
தி.இந்திரா
(த/பெ. வ.திருவேங்கடம் பிள்ளை)

03 ஆகஸ்ட் 2017

ஆன்மீகமெனும் நவீன வணிகம்!



இந்த மனதை வெறும் பார்வையாளனாக வேடிக்கை பார்ப்பது போல, கவனிக்கையில் ஒன்று மட்டும் புரிகிறது; நமக்கு பிடிக்காத சின்னச்சின்ன விசயங்கள் ஏதாவதொன்று நடந்தாலும் அதை நோக்கியே ஒட்டுமொத்த கவனத்தையும் திசை திருப்பி, இந்த மனது எண்ணங்களை குவிக்கிறது. மாறாக, எவ்வளவு பெரிய மகிழ்வான விசயங்கள் நடந்திருந்தாலும் அதை வெகு சுலபமாக இந்த மனது மறக்கடிக்க முயல்கிறது; அதோடு அடுத்தடுத்து எதையாவது செய்ய வைக்க முனைகிறது; அந்த செய்கைகளின் நீட்சியாக ஏதாவதொரு எதிர்வினை கிடைப்பதும் கூட, சின்னஞ்சிறிய வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. இவ்வாறான குழப்பத்தையெல்லாம் தொடர்ச்சியாக இந்த மனது எளிதாகவும் - விரைவாகவும் செய்து விடுகிறது. இவற்றை உன்னிப்பாக கவனித்தாலே மனதினுள் எழும் (ஆணவம் - பொறாமை - மாயை என்ற இம்மூன்று மலங்களிலிருந்தும்) பல குழப்பங்களிலிருந்து உடனடியாக வெளிவந்து விடலாம். இம்மாதிரியான சம்பந்தமேயில்லாத வருத்தத்திலிருந்து வெளிவருவதோடு மட்டுமில்லாமல், அதை நிரந்தரமாக மாற்றவும் எளிய வழிகள் உள்ளன.

01. குறிப்பிட்ட இடைவெளியில் அடையக்கூடிய இலக்கு என்ற ஒன்றை நிர்ணயித்து கொண்டு, அவ்விலக்கு பற்றி சிந்தனையோடே அனைத்தையும் வெகுவிரைவாக கடந்து கொண்டே இருங்கள்.

02. இன்றைய நிலை மகிழ்ச்சியோ / சோகமோ எப்படியானதாக இருந்தாலும், நாளை இது நம்மோடு இல்லாமல் கூட போகலாம் என உணர்ந்து, எண்ணங்களுக்கு எவ்வித வலுவும் சேர்க்காமல் இந்த நிமிடத்தை இயல்பாக அனுபவியுங்கள்.

03. ஒருவேளை எந்தவித மாறுதலும் இல்லாமல் ஒரே மாதிரியாக இந்த பொழுது கடந்து கொண்டிருந்தால், அதை மகிழ்ச்சி என்ற வரையறைக்குள் வைத்தே அனுபவிக்க பழகிக் கொள்ளுங்கள்.

04. தன் குரலையும், தன் உருவத்தையும், தன் எழுத்துக்களையும், செல்பேசி - கண்ணாடி - பேனா உதவியோடு மீளுருவாக்கம் செய்து கவனித்து பாருங்கள்.

05. தன்னை உறவு - நட்பு - இறை என யாரோடும் தொடர்பு படுத்தாமல், நான் யாரென யோசித்து பார்த்து விட்டு வெறுமனே அனைத்தையும் கேள்வியேதும் கேட்காமல் கவனிக்க தொடங்குங்கள்.

இந்த மனதை கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். பல பிரச்சனைகளிலிருந்தும் நிரந்தரமாக வெளிவரலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

(Courtesy: பரமஹம்ச இமலாதித்தனந்தாவின் 'ஆன்மீகமெனும் நவீன வணிகம்' எனும் நூலிலிருந்து, பக்.21-22)

07 ஜூலை 2017

எம்.எஸ்.தோனியும் 80களும்!





(முன் குறிப்பு: 1980-1989களில் பிறந்தவர்களுக்கான ஒரு சிறிய நினைவூட்டல் பதிவு இது)


எளிய நடுத்தர குடும்பத்தில் பிறப்பெடுத்து வளர்ந்து மேலெழுந்து நிற்பது தான் தற்போதைய சூழலில் மிகப்பெரிய சவாலான விசயம். இந்த 80களில் பிறந்தவர்களும் கூட இது போன்றதொரு மிகப்பெரிய சவால்களை சமாளிப்பவர்கள் தான். ஏனெனில் 1980 முதல் 1989 வரையிலான இடைப்பட்ட பத்து வருடங்களில் பிறந்தவர்கள் அனைவருமே குழப்பமான சூழலில் வளர பழக்கப்பட்டவர்கள். அந்த இடைப்பட்ட வருடத்தில் பிறந்தவன் என்ற முறையில் என்னையே பலவற்றிற்குள் சோதனைக்குட்படுத்தி பார்த்திருக்கிறேன். அவற்றுள் சிலவற்றை மட்டும் கீழே வகைப்படுத்திருக்கிறேன்.

SW/MW அலைவரிசை எங்கள் அபிமான அப்துல் அமீது போன்றோரின் இனிய குரல்களில் இலங்கை வானொலிகளையும், தென்கச்சியாரின் இன்றொரு தகவலை தினந்தோறும் கேட்டு ரசித்தோம். திரைச்சித்திரம் என முழு படத்தையும் ஒலிவடிவிலேயே கேட்டிருக்கிறோம். அதைத்தொடர்ந்து ஒனிடா - பானசோனிக் - சாலிடர் என்ற ப்ளாக் அண்ட் ஒயிட் தொலைக்காட்சிகள் வாயிலாக ஞாயிறுக்கிழமைகளை கொண்டாடி இருக்கிறோம். டேப் ரெக்ராக்டர் கேசட், டெக் எனத்தொடங்கி சிடி - டிவிடி - பென்ட்ரைவ் - ப்ளூரே டிஸ்க் வரைக்கும் பதிவு செய்து பாடல்களையும், படங்களையும் ரசித்துக்கொண்டிருக்கிறோம். ப்ளாக் அன்ட் ஒய்ட் / கலர் டெஸ்க்டாப் மானிட்டரில் கணினி செயல்பாட்டை தொடங்கி LCD/LED மானிட்டர் வரைக்கும் பயன்படுத்தி வருகிறோம். பப்ளிக் டெலிபோன் பூத்களும், டெலிபோன் இன்ஸ்ட்ருமென்ட்களும், ப்ளாக் அன்ட் ஒயிட் பட்டன் வைத்த செல்போன்களும் பயன்படுத்த தொடங்கி, இன்று டச் மாடல்களான ஆன்ட்ராய்டுகளோடும் அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறோம்.

சிக்கல் பக்கம் ஆண்டனாவை திருப்பி தூர்தர்ஷனுக்காக தவமிருந்திருக்கிறோம். ஸ்ரீகிருஷ்ணா, மகாபாரதம், ஜங்கிள் புக், மாதவன் இருவேடங்களில் நடித்த ராஜ் கஹானி என்ற அரச கதை, சக்திமான், என பல டப்பிங் தொடர்களின் அதிதீவிர ரசிகர்களாக இருந்திருக்கிறோம். ஒலியும் ஒளியுமென்ற வாரந்திர வெள்ளிக்கிழமை புதுப்பாடல்களுக்காக காத்திருந்திருக்கிறோம். DD1, DD5 என காத்திருந்த வேளையில் ஈழம் பக்கம் ஆண்டனாவை திருப்பி சக்தி டிவி, ரூபவாகினி, சிரிச போன்ற அங்குள்ள தமிழ்/சிங்கள சேனல்களை பார்த்து குதூகலித்திருக்கிறோம். உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக 'வானத்தை போல' படத்தை வெளிவந்த ஓரிரு மாதங்களிலேயே சிரச சேனலில் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம்.

அதே காலத்தில் வானொலிகளெல்லாம் FM என்ற வடிவில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட அலைவரிசையில் அணிவகுத்தது. நாகப்பட்டினத்தை சேர்ந்த எங்கள் பகுதிக்கு காரைக்கல் பண்பலை தான் விடிவெள்ளியாக திகழ்ந்திருக்க, பாதி நேரம் ஹிந்தியே ஆக்கிரமித்திருந்த நேரத்தில் இலங்கையிலிருந்து சக்தி எஃப்பெமும், சூரியன் எஃப்பெமும் 24x7 தமிழில் பாடல்களை ஒலிபரப்புவதை கேட்பவதற்காக வில்லேஜ் விஞ்ஞானி போல வடி தட்டை வைத்தே புதுப்புது ஆண்டனாக்களை உருவாக்கி கேட்டு ஈழத்தமிழோடு ரசித்திருக்கிறோம். அப்போது தான் தமிழகத்தில் தனியார் அலைவரிசையாக ரேடியோ மிர்ச்சியும் வந்தது; பனிக்காலங்களில் அதையும் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்.

ஊருக்கொரு டிவி என்றிருந்த நிலையில் அடுத்து தெருக்கொரு டிவி என்ற நிலையில் வளர்ச்சி வந்த நிலையிலேயே, கலர் டிவியும் அதிகமாக அடியெடுத்து வைத்தது. முக்கால் சைக்கிள், டி.வி.எஸ் 50, பஜாஜ் எம் 80 என்ற வரிசையாக புதுப்புது வாகன படையெடுப்புகளில் பயணித்திருந்தோம். புது மாப்பிள்ளைக்கான சீதன பைக்காகி போன டி.வி.எஸ் விக்டர், ஹிரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் போன்றவற்றின் வருகையும், பல்சர், அவஞ்சர் தொடங்கி இப்போது TVS Apache RTR 200, Suzuki Gixxer, Yamaha FZ-FI, Honda Hornet என அனைத்தோடும் பயணித்து கொண்டிருக்கிறோம்.

ரஜினி - கமலை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் இடையே புது என்ட்ரி கொடுத்த விஜயை எங்களின் அடுத்த உச்ச நட்சத்திரமாக பார்த்தோம். மனதை தொட்டு சொல்லச்சொன்னால், இன்றைய அஜித் ரசிகர்களாக இருக்கும் 80களின் ஆட்களெல்லாம் ஆரம்பத்தில் விஜய் ரசிகனாகத்தான் இருந்திருப்பார்கள். கேலிக்கிண்டலுக்காகவே தனக்கு விஜயை பிடிக்குமென சொல்லத் தயங்கியவர்களே இங்கு அதிகம்; அது பெரிய கதை. இப்போது சிம்பு - தனுஷ், சிவக்கார்த்திக்கேயன் - விஜய் சேதுபதி - அசோக் செல்வன் எனவும், குஷ்பூ- மீனா- சிம்ரன்-நக்மா- ரம்பா என ரசித்து கொண்டிருந்த காலம் மறந்து கீர்த்தி சுரேஷ் - ஸ்ரீதிவ்யா - லெஷ்மி மேனன் - நயன்தாரா எனவும் நீளும் பட்டியலிலுள்ள பல இளநடிகர்களையும் ரசித்து கொண்டிருக்கிறோம்.

இசையுலகில் இளையராஜாவையும், கூடவே ரஹ்மானையும் ஒருசேர ரசித்தோம். அதோடு நிற்காமல் இன்று ஜி.வி. பிரகாஷ், அனிருத், சந்தோஷ் நாராயணனோடும் லயித்து நிற்கிறோம். கே.எஸ்.ரவிக்குமார் - வாசு - மணிரத்னத்தோடு ஷங்கர் - கெளதம் - வினோத் - நலன் குமாரசாமி - கார்த்திக் சுப்புராஜையும் கொண்டாடுகிறோம். டூரிங் டாக்கீஸ்லிருந்து மல்டி ஃப்ளெக்ஸ் சினிமாவையும் அதே உற்சாகத்தோடு தான் கண்டு கொண்டிருக்கிறோம்.

இப்படியாக உணவு - உடை - இசை - ரசனை என எல்லாவற்றிலும் 70களின் சாயலும் 90களின் சாயலும் கலந்து, எங்களுக்கென அடையாளமின்றி தனித்து நிற்கிறோம். 70களின் கடைசி தலைமுறையாகவும், 90களின் முதல் தலைமுறையாகவும் 80களில் பிறந்தவர்களான நாங்கள் கலப்படமான குழப்பம் நிறைந்த வரையறையோடு தான் இன்றளவும் இருக்கிறோம். இயற்கையோடு இயங்கிருந்ததோடு மட்டுமில்லாமல், அறிவியல் தொழிட்நுட்பத்தின் அபிரிவிதமான வளர்ச்சியையும் அதன் போக்கிலேயே அனுபவித்து கொண்டிருப்பவர்கள் என்ற சுயபெருமையும் எமக்குண்டு. என்றுமே மாறாத மாற்றம் என்ற ஒன்றில் சிக்கியும் தப்பி பிழைத்த எம்மைப்போன்ற 80களில் பிறந்த எம்.எஸ்.தோனிக்கு(07.07.1981) இனிய வாழ்த்துகள்! :)

- இரா.ச. இமலாதித்தன்
   (21.09.1985)

(பின் குறிப்பு: தோனி பற்றி எந்த குறிப்பும் இதில் இருக்காதென்றாலும், 90க்கு பிறகு பிறந்தவர்களும் தல தல என தலையில் வைத்து கொண்டாடும் தலைமைத்துவ சூட்சமத்தை எளிய குடும்பத்திலிருந்து 80களில் பிறப்பெடுத்த தோனி நமக்கு(80's) சமகாலத்திலேயே கற்றுக் கொடுத்திருக்கிறார்; அதற்காகவே அவர் பிறந்த நாளில், அவர் படத்தோடும், அவர் பெயரோடும் இப்பதிவு)

21 மே 2015

கல்யாணம் முதல் கலாய்த்தல் வரை!

அண்ணன் ஒருத்தரு சாட்ல வந்து, மிச்சத்த உன் கல்யாணத்துல பேசிக்கலாம்ன்னு சொன்னாரு. அதுக்கு இன்னும் காலம் இருக்குண்ணான்னு சொன்னேன். ஏன் உன் லவ்வை இன்னும் உங்க அப்பாகிட்ட சொல்லலையான்னு கேட்குறாரு. என்னது லவ்வா?ன்னு கேட்டேன். பதிலே சொல்லாம ஆஃப்லைன் போயிட்டாரு.


-o-o-o-o-o-o-o-o-o-

 பங்காளிக யெல்லாம் கல்யாண பத்திரிகை வைக்கிறாய்ங்க. இல்லைன்னா ஜாதகம் பொண்ணுன்னு பேசுறாய்ங்க. ப்ரொஃபைல்ல என்கேஜூடுன்னு மாத்திடுறாய்ங்க. யோவ், உங்களையெல்லாம் நம்பித்தான் கொஞ்சம் ஆறுதலா இருக்கேன். நீங்க பாட்டுக்கு திடுதிப்புன்னு இப்படி பண்ணிட்டா நான் எங்கய்யா போறது? தனிமரமா ஆக்கிட்டு போய்டாதீங்கய்யா... என் மனசு தாங்காது!

04 டிசம்பர் 2014

பங்காளிகளுக்காக!

பங்காளி பங்காளின்னு உயிரையே கொடுக்கிற மாதிரி பாசத்தை பொழியிற பாதி பேரு தன்னோட கல்யாணதுக்கு கூட அழைப்பு கொடுக்க மாட்டாய்ங்க. அப்பறம் என்ன மயிருக்கு இவிய்ங்கள நான் நம்பணும்? ஆர்குட் முதல் ஃபேஸ்புக் வரை பல பேரை பல வருசமா பார்த்து கடந்தாச்சு.

ஒரு பங்காளி என்ன பண்ணினாருன்னா, நாகை டவுன்ல உள்ள என் வீட்டையெல்லாம் வசதியாக கடந்து 20 மைல்களுக்கு அப்பாலுள்ள, ஓர் அரசியல் தலைவருக்கு தன்னுடைய கல்யாண பத்திரிகையை கொண்டு போய் கொடுத்தாரு. பிறகு எனக்கு போன்ல கூப்பிட்டு கல்யாணத்து அழைப்பு கொடுத்தாரு. அவர் கல்யாணத்துக்கு நான் போகல. ஏன் போகலைன்னு சொல்லித்தான் தெரியணும்ன்னு இல்ல. நாகையில உள்ள எளியவனான என வீட்டுக்கு நேர்ல வந்து பத்திரிகை கொடுத்தால் தனக்கு அவமானம் என நினைத்த அவர், என் ஏரியாவை கடந்து டவுனுக்கு வெளியே உள்ள அரசியல் தலைவருக்கு நேரில் சென்று பூ பழமெல்லாம் கொடுத்து பத்திரிகை வைத்து வந்தார். அந்த பங்காளிக்கு, காசு பணம் பேரு புகழெல்லாம் வரும் போகும் என்பதும், உண்மையான நட்பு எல்லாரிடமும் வருவதில்லை என்பதும் தெரியாமல் போய்டுச்சேன்னு நினைச்சேன்; சிரிச்சேன்.

இலவச அறிவுரை:

ஃபேஸ்புக் ப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கிற மொத்த பேருல வெறும் 10%க்கும் குறைவான ஆளுங்க கிட்ட மட்டும் தான் நம்ம வாழ்க்கையில நடக்குற நல்லது கெட்டதுக்கு உரிமையோட கூப்பிட முடியுமும். மத்ததெல்லாம் சும்மா அண்ணே, தம்பி, பங்காளி, சகோ, ப்ரோ, ஜி, பாஸுன்னு வாயால வடை சுடுற கேஸ் தான். அதுனால சோசியல் நெட்வொர்க் பழக்க வழக்களை வச்சு நட்பின் தரத்தையும், உறவின் தரத்தையும் எடை போட கூடாது.

- இரா.ச.இமலாதித்தன்

14 ஜூன் 2014

சாதி மதம் நான்!

போலியா வாழ்றதை விட உண்மையா வாழ்றதுதான் அழகுன்னு நினைக்கிறேன். அது சாதியோ, மதமோ எதுவா இருந்தாலும், வெளிப்படையா இருந்தால் நல்லாருக்கும். சிலபேரு மனசுக்குள்ள ஒன்னு, வெளியில ஒன்னுன்னு நடிக்கிறாங்க. ஆனால் எதார்த்தத்தில், சாதி இல்லாம எல்.கே.ஜி கூட சேரமுடியாது. அரசாங்க வேலையும் சரி, அரசு சம்பந்தமான எல்லாவித பயன்பாடுகளுக்கும் சரி, சாதியும், சாதி சான்றிதழும் கட்டாயம் தேவைப்படுகின்றது. மேலும் சாதீய இடஒதுக்கீடும் இன்றும் நடைமுறையில் தானே இருக்கு. சாதி ரீதியான ஒதுக்கீடுகள் போன்ற ஏற்ற தாழ்வுகள் களையப்படும் வரை சாதி, மதம் பற்றி பேசாமல் இருக்கவும் முடியாது. மேலும், சாதி என்பது ஒருவரின் பாரம்பரிய அடையாளம். அந்த சாதியையே வைத்து பிரிவினை பார்ப்பதுதான் தவறு.

சாதியோ - மதமோ இதுபோன்ற பலவித அடையாளங்களை இழந்து எதையுமே பெற போவதில்லை. ஏனெனில், ஒட்டுமொத்த இந்தியாவின் அடையாளமே பாரம்பரியமும், கலாச்சாரமும் தான். இந்த மாதிரியான பழமை காக்க சாதியும் அவசியம். எதையுமே பேசி தெளிவடைதல் தான் நல்லது. பேசாமலே இருப்பதால் மட்டும் எல்லாம் சரியாகிவிட போவதில்லை. நான் எந்தவிதத்திலும் சாதியை வைத்து யாரையும் பிரிவினையாக பார்த்தது இல்லை. அதுக்காக எந்த இடத்திலும் என் சாதி, மத அடையாளத்தை மறைத்ததும் இல்லை. இதை சாதிவெறி - மதவெறி என்று சுருக்கிவிட முடியாது. இதுபோன்ற சாதி-மத கலாச்சார வேர்களை பலவீனப்படுத்தி விட்டு சமுதாய மரத்தை ஒருபோதும் பலப்படுத்தி விட முடியாது.

நமது தாத்தாக்களின் காலங்களில் ஒவ்வொருவரின் பெயருக்கு பின்னாலும் சாதி இருந்தது. யாரிடமும் சாதிவெறி இருந்தது இல்லை. ஆனால் இன்று, பெயருக்கு பின்னால் சாதி இல்லை; அளவுக்கு அதிகமான சாதி அமைப்புகளும், சாதி சங்கங்களும், சாதி கட்சிக்களும் உருவாகி விட்டன. முன்பை விட இன்று சாதி ஒரு மாபெரும் நிர்ணயசக்தியாக உருவெடுத்துள்ளது. ஆன்மீக விழாவிற்கு சென்றாலே, சாதிவெறியின் காரணமாக பெட்ரோல் குண்டு வீசியும், கற்களால் அடித்தும் அப்பாவிகளை கொலை செய்யும் காலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. இவற்றிற்கெல்லாம் எது/யார் காரணம்? சாதியை வைத்து பதவி சுகத்திற்காக மக்களை அந்நியப்படுத்திய திராவிட அரசியல்தானே. எனவே, முதலில் திராவிடம் ஒழிப்போம். பிறகு சாதீய ஏற்றதாழ்வுகளை ஒழிப்போம்!

- இரா.ச.இமலாதித்தன்

09 மே 2014

+2 முதல் வேலை வரை!

2002ம் வருசம் +2 எக்ஸாம் எழுதிட்டு எப்படியாவது பாஸ் ஆகிடணும்ன்னு, குலதெய்வம் கோவிலான வேதாரண்யம் - கருப்பம்புலம் அருகிலுள்ள கடிநெல்வயல் வேம்புடையார் என்ற வேம்படி ஐயனார்கிட்ட எப்படியெல்லாம் வேண்டிக்கிட்டேன் என்பதை இப்போ நினைச்சாலும் சிலிர்ப்பாதான் இருக்கு. எப்படியோ என்குலசாமி ஐயனார் என்னை பாஸ் பண்ண வச்சிட்டாரு.

பள்ளி, கல்லூரிகளில் நன்றாக படித்த பலர் வாழ்க்கையில் வெற்றியடைந்திருக்கின்றார்கள். ஆனால், அவர்களை விட சுமாராக படித்து வருடமொருமுறை வகுப்பறைகளை சம்பிரதாயத்திற்காக கடந்த பலரே வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கின்றார்கள். அதனால், படிக்கும் காலத்தில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்து மட்டுமே, யாருடைய வருங்கால வெற்றிகளையும் கணித்துவிட முடியாது. எனவே, +2ல் ஜஸ்ட் பார்டர்ல பாஸ் ஆன அனைவருக்கும் என் வாழ்த்துகள்!

10ல 348
12ல 677
இதுதான் அடியேனின் பள்ளிக்கால பொதுத்தேர்வு வரலாறு!


+2 தேர்வு முடிவுகள் வந்ததிலிருந்து மாணவர்களை கவர அனைத்து நாளிதழ்களும் கல்லூரி சேர்க்கை விளம்பரத்தையே முன்னிறுத்தி கொண்டிருக்கின்றன. ஆனால், மூன்று - நான்கு வருடங்களுக்கு முன்பாக இதே மாதிரியான விளம்பரத்தை பார்த்து ஏதோவொரு கல்லூரியில் இன்றைக்கு படிப்பை முடித்த பலரும், அதே நாளிதழின் ஏதாவதொரு மூலையில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் வேலைவாய்ப்புக்கான விளம்பரத்தை தேடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த எதார்த்தம் புரியாத, பெரும்பாலான பள்ளி மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர செம்மறிஆட்டு கூட்டம் போல அருகிலுள்ள கல்லூரிவாசலில் தவமிருக்கின்றனர்.

- இரா.ச.இமலாதித்தன்

06 பிப்ரவரி 2014




2009ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதிக்கு முன்னாடியே பலகாலங்கள் ஆர்குட் - கூகிள் குரூப்ஸ் - கூகிள் பஸ் - ப்ளாக்கர் யென்று இணையத்தில் செயல்பட்டிருந்தாலும், 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிதான் எனக்கு ஃபேஸ்புக் அறிமுகம் ஆனது. அப்போது மூலமான என் பதிவுகளும் இங்கே ஆரம்பமானது. இணையம் மூலமாக எத்தனையோ நபர்களை கடந்த ஏழெட்டு வருடங்களில் கடந்து வந்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக ஆர்குட்டில் பல உறவுகள் கிடைத்தார்கள். அதன் பிறகு கூகிள் குழுமம் மூலமாக பல நண்பர்கள் கிடைத்தார்கள். அதன் பிறகு ஃபேஸ்புக் மூலமாகத்தான் அதிகமான உறவுகளும் நண்பர்களும் அறிமுகமானார்கள். ஃபேஸ்புக்கில் கடந்த ஐந்து வருடமாக செயல்பட்டிருந்தாலும் இன்னமும் பல புதிய நபர்களை கடந்து கொண்டே வந்திருக்கின்றேன். என்னை இன்னமும் புதியவனாகவே அடையாளப்படுத்தி கொண்டிருக்கும் எம்பெருமான் முருகா நன்றி!

- இரா.ச.இமலாதித்தன்

01 பிப்ரவரி 2014

இமலாதித்தவியல் - முன்னேற்றம்

எதார்த்தம் என்னவென்பதை நாம் புரிந்து கொள்ளாதவரை அடுத்தக்கட்டத்தை நோக்கி நாம் நகரவே முடியாது. கூட்டமாக இருக்கும் போது, எல்லாமும் நமக்கு சாதகமானது போலத்தான் தெரியும். தனித்து நின்று சுயத்தை உணரும்போதுதான், நம்முடைய பலவீனமும் - பலமும் தெரியும். அந்த நிதர்சனத்தை உணரும் தருவாயில், நாம் பல வாய்ப்புகளை நழுவ விட்டிருப்போம் என்பதும் புரியவரும். எதுவாகினும் தனி மனித முன்னேற்றமில்லாமல், சமுதாய முன்னேற்றமடைய வாய்ப்பே இல்லை. எனவே, கடந்தகால மாயையிலேயே நிகழ்காலத்திலும் வாழாமல், எதிர்காலத்தை பற்றிய விழிப்புணர்வும் நமக்கு வேண்டும். அப்போதுதான், அடுத்த தலைமுறையும், நம்மை நினைத்து கொஞ்சமாவது பெருமிதப்படும். எனவே, முதலில் நீ முன்னேறு; அதன் பிறகு ஒட்டுமொத்த சமுதாயத்தையே முன்னேற்றலாம்.

- இமலாதித்தவியல்