03 ஆகஸ்ட் 2017

ஆன்மீகமெனும் நவீன வணிகம்!



இந்த மனதை வெறும் பார்வையாளனாக வேடிக்கை பார்ப்பது போல, கவனிக்கையில் ஒன்று மட்டும் புரிகிறது; நமக்கு பிடிக்காத சின்னச்சின்ன விசயங்கள் ஏதாவதொன்று நடந்தாலும் அதை நோக்கியே ஒட்டுமொத்த கவனத்தையும் திசை திருப்பி, இந்த மனது எண்ணங்களை குவிக்கிறது. மாறாக, எவ்வளவு பெரிய மகிழ்வான விசயங்கள் நடந்திருந்தாலும் அதை வெகு சுலபமாக இந்த மனது மறக்கடிக்க முயல்கிறது; அதோடு அடுத்தடுத்து எதையாவது செய்ய வைக்க முனைகிறது; அந்த செய்கைகளின் நீட்சியாக ஏதாவதொரு எதிர்வினை கிடைப்பதும் கூட, சின்னஞ்சிறிய வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. இவ்வாறான குழப்பத்தையெல்லாம் தொடர்ச்சியாக இந்த மனது எளிதாகவும் - விரைவாகவும் செய்து விடுகிறது. இவற்றை உன்னிப்பாக கவனித்தாலே மனதினுள் எழும் (ஆணவம் - பொறாமை - மாயை என்ற இம்மூன்று மலங்களிலிருந்தும்) பல குழப்பங்களிலிருந்து உடனடியாக வெளிவந்து விடலாம். இம்மாதிரியான சம்பந்தமேயில்லாத வருத்தத்திலிருந்து வெளிவருவதோடு மட்டுமில்லாமல், அதை நிரந்தரமாக மாற்றவும் எளிய வழிகள் உள்ளன.

01. குறிப்பிட்ட இடைவெளியில் அடையக்கூடிய இலக்கு என்ற ஒன்றை நிர்ணயித்து கொண்டு, அவ்விலக்கு பற்றி சிந்தனையோடே அனைத்தையும் வெகுவிரைவாக கடந்து கொண்டே இருங்கள்.

02. இன்றைய நிலை மகிழ்ச்சியோ / சோகமோ எப்படியானதாக இருந்தாலும், நாளை இது நம்மோடு இல்லாமல் கூட போகலாம் என உணர்ந்து, எண்ணங்களுக்கு எவ்வித வலுவும் சேர்க்காமல் இந்த நிமிடத்தை இயல்பாக அனுபவியுங்கள்.

03. ஒருவேளை எந்தவித மாறுதலும் இல்லாமல் ஒரே மாதிரியாக இந்த பொழுது கடந்து கொண்டிருந்தால், அதை மகிழ்ச்சி என்ற வரையறைக்குள் வைத்தே அனுபவிக்க பழகிக் கொள்ளுங்கள்.

04. தன் குரலையும், தன் உருவத்தையும், தன் எழுத்துக்களையும், செல்பேசி - கண்ணாடி - பேனா உதவியோடு மீளுருவாக்கம் செய்து கவனித்து பாருங்கள்.

05. தன்னை உறவு - நட்பு - இறை என யாரோடும் தொடர்பு படுத்தாமல், நான் யாரென யோசித்து பார்த்து விட்டு வெறுமனே அனைத்தையும் கேள்வியேதும் கேட்காமல் கவனிக்க தொடங்குங்கள்.

இந்த மனதை கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். பல பிரச்சனைகளிலிருந்தும் நிரந்தரமாக வெளிவரலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

(Courtesy: பரமஹம்ச இமலாதித்தனந்தாவின் 'ஆன்மீகமெனும் நவீன வணிகம்' எனும் நூலிலிருந்து, பக்.21-22)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக