27 ஜூலை 2012

விமர்சனம் என்பது யாதெனில்...

இணையத்தில் சமூக வலைதளங்களில் எல்லா வயதினரும் அங்கம் வகிக்கின்றனர். ஆனாலும், பெரும்பாலனவர்கள் இளைஞர்களே. ஒருவரை விமர்சிக்க இவர்கள் எடுக்கும் ஆயுதம், கார்ட்டூன் போன்ற இவர்களே கணினியின் மென்பொருள் உதவியோடு உருவாக்கும் ஒளிப்படங்களே.

இங்கே விமர்சிக்கபடுவபர்களில் பெரும்பாலும் அரசியல்வாதிகளும், நடிகர்களும் தான். சமீப காலமாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் பெரும்பாலும், காங்கிரஸ்காரர்களே. தமிழ்நாட்டை பொறுத்தவரை இங்குள்ள அனைத்து அரசியல் தலைவர்களில் யாரும் விதிவிலக்கு அல்ல. பாரபட்சமில்லாமல் அனைவருமே பந்தாடப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். 

அனைவருமே விமர்சிக்க படுகிறார்கள் என்பது ஒரே ஆறுதலென்றாலும், உடலியலியல் மற்றும் நிறத்தின் அடிப்படையிலான விமர்சனங்கள் அதிகமாகி கொண்டிருக்கின்றன என்பது வருத்தமளிக்கின்றனகுறிப்பாக, நாராயணசுவாமியை உடலியல் தோற்றத்தை வைத்து மிக கேவலமாக விமர்சிக்கும் யாருமே, மன்மதன் அல்ல. கண்ணாடியில் முகத்தை பார்த்து தங்களுக்கு தாங்களாகவே 'இதுக்கு மேலேயுமா அழகு வேணும்?' யென்று முணுமுணுத்துக்கொண்டு, கணினி தொழிநுட்ப உதவியுடன் தங்களை மிக அழகாக செதுக்கி கொள்கிறார்கள். அவர்களைப்போல போலியான அழகை வெளிக்காட்டிக்கொள்ள தெரியாத நாராயணசுவாமி போன்றவர்கள், அவர்களுக்கு விலங்கின் தோற்றமாகத்தான் தெரியும். விஞ்ஞான அறிவியலின் கூற்றுபடி, விமர்சிக்கும் அனைவரும் அதே விலங்கினத்தில் இருந்துதான் பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்  என்பதை மறந்துவிட்டுதான் இதையெல்லாம் செய்கிறார்கள் போல.  

ஈழத்தமிழர்களை கொன்றொழிக்க காராணமாக இருந்த காங்கிரஸ் இயக்கத்தை தமிழகத்தில் இல்லாதொழிக்க வேண்டியது நம் கடமைதான்; ஆனால், தன்னுடைய தலைமைக்கு உண்மையான விசுவாசியாய் இருக்கிற ஒரு சக தமிழனை, மற்றொரு தமிழனே இழிவாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த மாதிரியான வண்ணத்தையும், உருவத்தையும் யாரும் பிறப்பதற்கு முன்பாக தீர்மானித்து உயிராய் உருவெடுக்க வில்லை. அது ஒருவகையில் இயற்கையான ஒரு நிகழ்வு. 

உடலியல் ரீதியாக ஒருவரை விமர்சனம் செய்யும் நீங்களும், ஒருநாள் இழமையான/ அழகான உங்களது உடலை இழக்கத்தான் போகிறீர்கள். முதுமையான காலத்தில், நீங்கள் விமர்சித்த அதே விலங்கினத்தின் தோற்றம் உங்கள் மீதும் ஏற்படக்கூடும். 

உங்களுக்கு ஒருவரை பிடிக்காத போது, அதை விமர்சனம் என்ற போர்வைக்குள் மிகவும் கீழ்த்தரமான முறையில் தாக்குவது, உங்களது கீழ்த்தரமான புத்தியையே அது காட்டும். 

சமீப காலமாக, இந்த கணினியின் துணையோடு, குறிப்பிட்ட ஒருசில நடிகர்களை அவர்களின் முகத்தோற்றத்தையும், உடலியல் கூறுகளையும் மிகவும் அருவருக்க தகுந்த வகையில் சித்தரித்து அதை ஒளிப்படமாக இணையத்தின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனது குரூர புத்தியை வெளிக்காட்டி வருகிறார்கள் ரசிகர் என்ற முகமூடியில். பதிலுக்கு, இன்னொரு நடிகரின் ரசிகர் பட்டாளங்களும் அதற்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்த, வேறொரு ஒழிப்படத்தை உருவாக்கி தங்களை மேதாவிகளாக காட்டிக்கொள்கிறார்கள். அதற்கு அந்தந்த நடிகர்களின் ரசிகர்களின் குழுமம் அதை ஆதரிப்போது போன்றே தெரிகிறது. குறிப்பாக விஜய், அஜித், சூர்யா தான் இப்போதைக்கு இவர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறார்கள். 

இது போன்ற கீழ்த்தரமான, முகம் சுழிக்கும் வகையில் செயல்படும் நபர்களை யார் தட்டிக்கேட்பது யென்ற போட்டியில், யாருமே கண்டுகொள்வதில்லை. மாறாக அதை ஆதரிப்பது போல அமைதி காப்பதும் ஒருவகையில் ஆபத்தில்தான் முடிய போகிறது என்பது மட்டுமே நிதர்சனம். ஆனால், அதை யாருமே புரிந்து கொண்டது போல தெரியவில்லை. 'இந்த பூனைக்கு யார் மணி கட்டுவார்கள்?' யென்று நானும் மற்றவர்களை  போலவே அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருகிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்