அப்துல் கலாம்!நல்லவேளை, இதுவரையிலும் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. வீரமும், விவேகமும் இல்லாதவர்கள் தான் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பதை மேதகு அப்துல்கலாம் அவர்களின் மறைவிற்கு பின்னால் நாம் உணர முடிகிறது. பதவிக்காவும், பணத்துக்காகவும், தங்களின் புகழ் அனுதாபத்திற்காகவும் அரசியல்வாதிகளுக்காக தற்கொலை நாடகத்தை அரங்கேற்றிய கும்பல்கள், பெருந்தமிழர் கலாம் விசயத்தில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கின்றன என்பது மட்டுமே சற்று ஆறுதலான விசயம்.

எண்ணங்கள் தான் பிரபஞ்சத்தை நிர்ணயிக்கின்றன என்ற மாபெரும் தத்துவத்தை, ”கனவு” என்ற பெயரில் ஆழமாக அனைவரது மனதிலும் பதிய வைத்து, அறிவை விசாலப்படுத்த கற்றல் பண்பை வளர்க்க உத்வேகம் தந்து கொண்டிருந்த, முனைவர் கலாமுடைய இழப்பு வருத்தமாய் அமைந்தாலும், அவரது கருத்துகளை தாங்கி பயணிக்கும் அனைவரும் நிச்சயமொரு நாள் இந்த பிரபஞ்சத்தையே தன் வசப்படுத்துவார்கள் என்பதில் மாற்றுகருத்தே இல்லை என்பதும் மகிழ்வான நிகழ்வு. ஏனெனில், கலாம் இனி எக்காலத்திலும் புறக்கணிப்பட முடியாத சக்தி!

- இரா.ச.இமலாதித்தன்

யார் கடவுள்?

கடவுளிடம் சில கேள்விகள்:

1.கடவுள் உலகத்தை படைத்தார் என்றால் அவர் படைக்கும் முன் இங்கேஎன்ன இருந்தது? எதை பார்த்து இந்த உலகை படைத்தார் ஏனென்றால் நாம் ஏதோ ஒரு பொருளை உருவாக்க வேண்டுமென்றால் ஏதாவது ஒரு மூலக்கூறு நமக்கு தேவை? ஆகவே கட வுள் உலகத்தை படைக்க பயன்படுத்திய மூலக்கூறு எது? இல்லை அவரின் கற்பனையில் உருவாக்கினாரா? அவ்வளவு பெரிய ஞானத்தை அவருக்கு யார் கற்றுத்தந்தது இல்லை அவரே ஒரு கற்பனையா?

2.கடவுள் கற்ச்சிலைகளில் இருக்கிறார் என்றால் அந்த சிலைவடிக்கும் கலையை மனிதன் கற்றுக்குகொள்ளும் வரை கடவுள் ஏங்கு ஒளிந்திருந்தார்? எப்படி சிலை வடிக்க தெரியாத மனிதனுக்கு அருள் புரிந்தார்? அப்படி கற்ச்சிலையே இல்லாத அந்தக்காலத்திலேயே கடவுளை மனிதன் உணர்ந்தான் என்றால் கற்ச்சிலை வடிப்பதின் அவசியம் என்ன?

3.கடவுள் என்பவர் ஒருவர்தான் என்றால் அவர் படைத்தது சூரியன் சந்திரன் இரவு பகல் நன்மை தீமை ஆண் பெண் இப்படி இருவகையாய் இருப்பதின் காரணம் என்ன?

4.கடவுள் ஒளி வடிவானவர் என்றால் அவர் படைத்த பொருட்களிலெல்லாம் இருளும் (நிழல்)சேர்ந்து ஏன் வந்தது?

5.கடவுள் அன்பானவர் என்றால் அன்பை போலவே கோபம் சோகம் திருட்டு பொய் போன்ற இன்னூம் சில பல உணர்வுகளையும் ஏன் தந்தார் இல்லை இதுபோன்ற உணர்விலும் அவர் இருக்கிறாரா?

6.கடவுள் உருவம் இல்லாதவர் என்றால் நாம் இறந்த பின்பு நல்லவர்களை வலது புறமாகவும் தீயவர்களை இடது புறமாகவும் எப்படி நிற்க சொல்லமுடியும்?

7.கடவுள் எல்லோருக்கும் சமமானவர் நல்லவர் என்றால் நல்லவர்களை சொர்க்கத்திலும் தீயவர்களை நரகத்திலும் ஏன் பிரித்து பார்க்கிறார்?

இப்படி நீள்கிறது இன்னும் பல கேள்விக்குறிகள்....??

இப்படிக்கு கடவுள் பக்தன்
தினேஷ்
----------------------------------------------------------------------------
- இது நண்பர் தினேஷ் (Dinesh Wave) அவர்களுடைய பதிவு. அவரது கேள்விகளுக்கு அடியேனின் பதில்கள்:-
--------------------------------------------------------------------------

1.கடவுள் எதையும் படைக்கவில்லை. மாறாக படைக்கப்பட்டதாக நம்ப படுவதை கடவுளின் கருணையென நம்புகிறோம்.

2.கடவுள் கற்ச்சிலைகளில் இருக்கிறார் என யாரும் சொல்லவில்லை. ஆனால் கற்சிலையை ஒரு எண்ணக்குவியலுக்கான ஒரு கருவியாக பார்க்கலாம். மேலும் கலை என்பதே அறிவு சம்பந்தப்பட்டது. அந்த அறிவால் விளைந்த கலையை மனிதன் கற்று கொண்ட பிறகு அந்த அறிவுக்கு அடையாளமாக கடவுளை அடையாளப்படுத்தினர். இங்கே அருள் என்பது வெளியிலிருந்து கடவுள் போல யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை. அது உள்ளுக்குள்ளாகவே இருந்து ஒவ்வொருவருக்கும் வெவ்வேறானதொரு குறிப்பிட்ட காலத்தில் வெளிப்படுகிறது.

3.உட்சபட்ச அறிவே கடவுள். ஒரேவோர் அறிவால் நன்மையும் தீமையும் செயல்படுத்த முடியும் போது சூரியன் சந்திரன் இரவு பகல் ஆண் பெண் இப்படி இருவகையாய் இருப்பதில் தவறேதுமில்லை.

4. இருள் இருப்பதால் தானே ஒளிக்கு தேவை இருக்கிறது. இன்னும் சொல்லப்போனாலும் இருளும், ஒளியும் வேறுவேறல்ல. இரண்டிற்குள்ளும் இரண்டு தன்மைகளும் இருக்கின்றன. அதனால் கடவுள் ஒளி மட்டும் பொருந்தியவர் அல்ல. இருள் சூழ்ந்தும் கடவுள் இருக்கலாம்.

5. கடவுள் அன்பானவர் மட்டுமல்ல. நாம் உணர்ந்தால் தான் கடவுளே. அதனால் எல்லா உணர்விலும் கடவுள் தன்மை இருக்கின்றது.

6. ஒளிக்கு உருவமுண்டு. அதனால் வலதும் இடதும் இருக்கலாம்.

7. கடவுள் சமமானவர். அதனாலேயே சமவிகிதத்தில் பலன்களை தருகிறார். சொர்க்கம் நரகம் என்பது போன்ற ஏற்றத்தாழ்வுகள் இருப்பது சரிதான். ஆனால் நாம் கற்பனை செய்துள்ளது போன்ற சொர்க்கமும், நரகமும் இருப்பதில்லை. மாறாக, தனித்தனி நிலைகளாக வகைபடுத்தப்பட்டிருப்பார்கள். வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது குறள். நாம் புனிதனாக வாழ்ந்து முடித்தால் தெய்வமாகவே வைக்கப்படுவோம்.

- இரா.ச.இமலாதித்தன்.

பாகுபலியின் தந்தை ரிஷபதேவர், அகம்படி நந்தி தேவர் ஓர் ஒப்பீடு!

அகம்படி தொழிலுக்கு சம்பந்தபட்ட அகமுடையார்களுக்கு, நந்தி தேவரே முழுமுதற் குருவாகவும் விளங்குகிறார். சைவ சமயத்தில் சிவனுக்கு பிறகாக நந்திதேவரே முன்னிறுத்தப் படுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

”மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டு ஆரும் திறந்து அறிவார் இல்லை
பொய்த்தாள் இடும்பையைப் போய் அற நீவிட்டு அங்கு
ஐத்தாள் திறக்கில் அரும் பேறது ஆமே” -திருமந்திரம்.

ஆதி வழிபாட்டு முறையான சமணத்தில் ஆதிநாதனுக்கு அடுத்த முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர் ஆவார். ரிஷபதேவர் தொடங்கி மஹாவீரர் வரைக்குமாக ஆகமொத்தம் சமணத்தில் 24 தீர்த்தங்கரர்கள் உண்டு. ரிஷபதேவர் போடன்பூர் என்ற நாட்டின் மன்னராக இருந்தார். ரிஷப தேவருக்கும், நந்தி தேவருக்கும் ஓப்பீட்டளவில் பெரிய தொடர்புண்டு. ரிஷபம்-நந்தி என்ற இரண்டுமே காளையைத்தான் குறியீடாக நமக்கு உணர்த்துகிறது.

சைவ மதத்திற்குட்பட்ட சிவன் கோவில்களில் வணங்கப்படும் காலபைரவர், சூரியன், சந்திரன் அனைத்துமே சமணத்திலிருந்து பின்பற்றப்பட நீட்சியே. இன்றைய நாட்டார் வழிபாடாக கிராமங்களில் திகழும் ஐயனார் உள்பட சமணக்கடவுள்களே. எங்கள் குலதெய்வம் கூட, நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்பலம் அருகிலுள்ள கடிநெல்வயல் கிராமத்தில் வீற்றிருக்கும் வேம்படையார் என்கிற வேம்படி ஐயனார் தான். இது போன்ற பல வழிபாட்டு முறைகளுக்கு ஆதியாக சமணமே இருந்துள்ளது சமணத்தின் மீதான ஆரிய கலப்பே ஹிந்து மதமாக மறு உருவாக்கம் பெற்றது என்பது என் கணிப்பு.

சமணத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபதேவருக்கு நூறு புதல்வர்கள் என்பதும், அவர்களில் முதல் மகனது பெயர் பரதன், இரண்டாவது மகனின் பெயர் பாகுபலி என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும். நம் நாட்டுக்கு பாரத நாடு, பாரதம் என பெயர் வரக்கூட இந்த ரிஷபதேவர் தான் ஒருவகையில் காரணமாகிறார்.

பாகுபலிக்கு கோமதீஸ்வரர் என்ற பெயரும் உண்டு, இதே பெயரில் மூலவராக உள்ள பல சிவன் கோவில்களும் இங்குண்டு. வரலாறு படி, ரிஷபதேவருக்கு பிறகு முடிசூடும் போர்க்கள போட்டியில் மூத்த இளவரசன் பரதன் தோற்க, இளையவர் பாகுபலி வெற்றி பெறுகிறார். அந்த தோல்வியால் மனமுடைந்த தன் அண்ணன் பரதனுக்காக ஆட்சியை விட்டுக்கொடுத்து துறவறம் மேற்கொள்வார் பாகுபாலி. இதேபோன்றதொரு காட்சியை சிலப்பதிகாரத்திலும் இளங்கோவடிகள் மூலமாக நாம் காணமுடியும்.

சமீபத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி படத்தில், பரதனின் பெயராக பல்லாள தேவன் என்ற பெயரையும் அவரது அப்பாவாக பிஜ்ஜால தேவன் என்ற பெயரையும் மாற்றி, பாகுபலியை தம்பி மகனாக சித்தரித்து இருக்கின்றனர் என்றாலும் கூட, அப்படிப்பட்ட சமண,சைவ மதம் உள்பட பாரதத்திற்கும் தொடர்புடைய பாகுபலி பற்றிய படமெடுத்து அதன் மூலம் இந்தளவுக்கு கோடிகணக்கில் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்திருக்கும் இயக்குனர் ராஜமெளலிக்கு எம் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

காமராஜர் பிறந்தநாள்!

கருவேல மரங்களை போலவே முதுகளத்தூர் கலவரத்தையும் தென்னகத்தில் விதைத்த கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்தநாள் இன்று! கருவேலமரங்கள் விருட்சமாகி விவசாயத்தையே இன்று பாழாக்கி விட்டது, அதுபோலவே முதுகளத்தூர் கலவரமோ பெருந்தீயாய் இரு சமுதாயத்தையே வீணாக்கி கொண்டிருக்கிறது என்பது கூட பல சிறந்த சாதனைகளை செய்த கர்மவீரர் காமராஜருக்கு கரும்புள்ளியாக அமைந்து விட்டது என்பதையும் யாராலும் மறுக்க முடியாது!