இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 ஜூன் 2021

என் பார்வையில் இளையராஜா!



சிறு நகரங்களில் இயங்கும் தனியார் பேருந்துகளின் தனிச்சிறப்பே இளையராஜா பாடல்கள் தான். இன்றைக்கும் பட்டி தொட்டியெங்கும் பிரைவேட் டவுன் பஸ்களின் மவுசுக்கு இதுவே முதற்காரணம்.
பனிக்கால ஜன்னலோர இருக்கை, மாலை நேர ரயில் பயணம், மழைச்சாரல், சூடான காபி, தன்னந்தனியாய் நெடுந்தூர பயணம், என எந்த மாதிரியான சூழலையும் இளையராஜா பாடல்களே பலரது மனதையும் குதூகலமாக்குக்கின்றன.
2k கிட்ஸ், 90s கிட்ஸ், 80s கிட்ஸ்(?) என யாராக இருந்தாலும், இளையராஜா பாடல்கள் இல்லாமல் அவர்களது வீட்டு காதணி விழா, திருமணங்கள் உள்பட எந்த சடங்குகளும் முழுமை அடைவதே இல்லை.
கோவில் திருவிழாக்காலங்களிலும், பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜையென ஆண்டுதோறும் நடக்கின்ற எல்லா கொண்டாட்டங்களிலும் இன்றைய சந்தோஷ் நாராயணன் காலத்திலும் அன்றைய இளையராஜா பாடல்களை ஒலிபரப்பாமல் எந்த திருவிழாவும் முடிவடைவதில்லை.
காதல் தோல்வி, ஏமாற்றம், விரக்தி, துரோகம், பொருளாதார நெருக்கடியென பல விதங்களில் தனித்து விடப்பட்டவர்களின் மனங்களிலுள்ள காயா ரணங்களுக்கான ஒரே மருந்து இளையராஜா பாடல்களே. மதுவும், புகையும் உடலுக்கு கேடெனும் பொழுதும் அந்த இரண்டோடும் கூடி கொஞ்சி குலாவும் வேளையிலும் செவிகளில் பாயும் இளையராஜாவின் இசைகளே ஒரு சாராருக்கு சொர்க்க போதையாக இன்றளவும் இருக்கிறது.
இதுபோல சுட்டிக்காட்ட எத்தனையோ செய்திகள் இளையராஜாவின் இசையில் ஆயிரம் உண்டு. ஒரு பானை சோற்றுக்கு எத்தனை சோற்றை பதம் பார்ப்பது? எளிமையாக சொல்ல வேண்டுமெனில், பெரு மகிழ்ச்சியோ, கடுங்கோபமோ, மீளாத்துயரமோ, இப்படியான எல்லாவித உணர்வுகளுக்கும் தீனி போடும் ஒரே மருந்து இளையராஜாவின் இசை தான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. எளிதாக சொல்ல வேண்டுமெனில், இன்றைய அசுர வளர்ச்சியடைந்த சமூக ஊடகங்களில் இளையராஜா பாடல்களை பகிராத பதிவர்களே இல்லையென சொல்லலாம். வாட்சப் ஸ்டேடஸ், பேஸ்புக் ஸ்டோரி, டிவிட்டர், இன்ஸ்டாகிராமென இளையராஜா தான் பலரின் ஒரே ஆபத்துதவி கண்டன்ட். விமர்சனம் செய்தாவது அவரை நினைப்படுத்திக் கொண்டே இருக்கும் நபர்களும் இங்குண்டு. அவர்கள் பத்தில் ஓரிரண்டு ஆட்களாக இருப்பார்கள்.
இளையராஜாவை வானளாவ உயர்த்துவதால் எம்.எஸ்.விசுவநாதனும், டி.கே.இராமமூர்த்தியும், கே.வி. மகாதேவனும், ஏ.ஆர்.ரஹ்மானும், யுவன் சங்கர் ராஜாவும், ஜி.வி.பிரகாஷ்ராஜூம் எங்கேயும் குறைந்தவர்களாக்கப் படவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். டி.ராஜேந்தரும், சங்கர் போஸூம், கங்கை அமரனும் கூட இளையராஜாவின் இசைக்கு நிகரான பல சிறப்பான பாடல்களை கொடுத்திருக்கின்றனர். அவர்களது பாடல்களையும் இளையராஜவின் கணக்கில் எழுதி, ரசித்து வருவோரின் எண்ணிக்கை இங்கே ஏராளம். இன்றைய நாட்களில் இசை ரசிகர்களால் பலவிதமான விமர்சனங்களுக்கு உட்படும் ஹாரீஸ் ஜெயராஜின் எத்தனையோ பாடல்களுக்கு பல லட்சம் பேர் வெறியர்களாக இருப்பது தான் இந்த இசையின் வெற்றி.
புனிதமென்றோ, இழுக்கென்றோ இசையில் எதுவுமில்லை. காப்புரிமைக்காக தன் பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்துவதில் நடந்து கொண்ட விதமும், தற்புகழ்ச்சியும், கோபமும் என இளையராஜா மீது விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. ஏற்கிறேன். ஆனாலும், அவரவர் செவியும், மனமும், அறிவும் முடிவு செய்யும் வரையறைகளுக்கு இளையராஜா போன்ற சமகால இறைத்தூதர்களை புறந்தள்ளுவது அறமாகாது. ஏ.ஆர்.ரஹ்மானை போலவே இளையராஜாவின் இசையையும் ரசிக்கும் பாமரனனாக எனக்குண்டான திருப்தியில் இப்பதிவை எழுதிருக்கின்றேன். அவர், இவரென இசையில் யாரும் பெரிதில்லை. இசையே பெரிது தான். உங்களுக்குள் உள்ள இறைவனை, விலகி நின்று அருகில் தரிசிக்கும் மாயவித்தை இசைக்குள் உள்ளது. எனவே அதை அனுபவியுங்கள். இசையோடு வாழுங்கள்; உங்களோடு இளையராஜாவும் வாழ்வார்!
- இரா.ச. இமலாதித்தன்

பின்னிணைப்பு:

OTD Facebook Memories!
தனிமையில் இரவோடு தவித்த பொழுதுகள் எல்லாமே, உன் இசையாலே சுகமாய் கழிந்தது. ஆன்மீக ஞானம் உள்ளவனாலேயே மிகப்பெரும் இசை கலைஞனாக உருவெடுக்க முடியுமென்பதை உலகிற்கு நிரூபித்து, கடுந்தவம் செய்த ஞானி பெறும் வரம் அவரை மட்டுமே சாரும்போது, உன் தவத்தால் நீ பெற்ற வரம் உன்னைவிட எங்களையல்லவா சந்தோசப்படுத்திக் கொண்டிருக்கிறது. தொடரட்டும் உன் தவம்.
இசைஞானிக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்
!
- இரா.ச. இமலாதித்தன்
02.06.2012

*

தென்கோடி பண்ணைபுரத்தை பலகோடி பேர்களுக்கு பாதை போட்டு காட்டி, இசை போதையூட்டிய இளைய இசையரசனுக்கு என்றும் பதினாறே!
- இரா.ச. இமலாதித்தன்
02.06.2015

*

இரவு நேர ரயில் பயணங்களிலும், நெடுந்தூர பேருந்து ஜன்னலோர இருக்கையிலும், ஆள் அரவமற்ற நெடுஞ்சாலை பைக் பயணத்திலும், உறக்கம் தொலைத்த எல்லா இரவுகளிலும், இதுபோல பல நேரங்களில் இசையே என்னோடு நட்பின் துணையாய், தாயின் ஆறுதலாய் இருந்திருக்கிறது.
என்னை ஆட்கொண்ட பெரும்பாலான இசையின் காரணகர்த்தாவாக விளங்கும் இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள். ஆன்மீகப்பற்றுள்ள எங்கள் இசையாண்டவன், இன்னும் பல ஆண்டுகள் அந்த இறையருளால் நீடுழி வாழட்டும்!
'ஏழை பேச்சு அம்பலம் ஏறாது' என்ற கருத்தியலை உடைத்தெறிந்து, இசையுலகில் புது ராஜாங்கம் அமைத்து, அதை அவாளுக்கும் பறைசாற்றிய இசையரசனின் கடைகோடி பாமர ரசிகர்களில் ஒருவனாக என் வாழ்த்துகளும்!
- இரா.ச. இமலாதித்தன்
02.06.2016

17 ஜூன் 2017

எங்களிலிருந்து ஒரு இசை நாயகன் உதயமாகிறான்!




இசைஞானி இளையராஜா என்ற பெயர் போல, 'போத்திராஜா' என்ற பெயரும் இனி இசைத்துறையில் நீங்காதவொரு இடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் அதிகமாகவே இருக்கிறது. தெற்கத்தி மண்ணின் மணம் சார்ந்த மக்களிசையை பாடலாக்கிருக்கும் முதற்முயற்சியே முத்தாய்ப்பாய் அமைந்திருக்கிறது. தானே எழுதி, தானே இசையமைத்து, தானே பாடி, சகோ.போத்திராஜா உருவாக்கி இருக்கும் 'மொய் - தாய்மாமன் வாரான்டி' என்ற பாடல் அனைவரையும் நிச்சயமாக கவரும். இந்த பாடல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. இதுவரையிலும் தாய்மாமன் வாரான்டி பாடலை எத்தனை முறை கேட்டேனென தெரியவில்லை; கணக்கு வழக்கில்லாமல் கேட்டு கொண்டிருக்கிறேன். தாய் மாமனின் உரிமையையும், சீர் பற்றியும், மொய் பற்றியும் பெருமைகளை பாடும் இப்பாடல் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன்.

ஏறி இறங்கி கொண்டிருக்கும் பொருளாதார சூழலிலும், தன் உழைப்பில் சம்பாரித்த பணத்தையே முதலீடாக போட்டு, தன் திறமையால் மட்டுமே சிங்கிள் பாடலை வெளியிடுவது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். சினிமாத்துறையில் பிரபலமான தனுஷ், சிம்பு போன்றவர்கள் பலரின் உதவியோடு எழுதி பாடினாலேயே ஆஹா ஓஹோவென மெய் சிலிர்க்கும் அதே வேளையில், பிரபலங்களின் எவ்வித பின்புலமுமின்றி இசைத்துறையில் காலடி பதிக்கும் எளியவரான போத்திராஜா போன்ற திறமைசாலிகளையும் பாராட்டுவோம்.

மதுரை மண்ணின் மைந்தனான போத்திராஜாவின் எழுத்து - இசை - குரலாக உருவாகியிருக்கும் 'மொய் - தாய்மாமன் வாரான்டி' என்ற பாடல், 18.06.2017 ஞாயிறன்று மதுரை செக்கனூரணியிலுள்ள ஜெயஸ்ரீ மகாலில் நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்படுகிறது. போத்திராஜாவின் தந்தையான தெய்வத்திரு கே.ஆர்.பாண்டி சேர்வையின் ஆசியோடு, எங்கள் 'பெரிய மருது' போத்திராஜாவின் இந்த இசைப்பயணம் இனிவரும் நாட்களிலெல்லாம் சிறப்பாக அமைந்து, இசையுலகில் மிகப்பெரிய உச்சத்தை தொட அன்பு சகோதரனாக எம் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

(இனி பலருடைய செல்போனின் ரிங்டோனாக மாறப்போகும் 'தாய்மாமன் வாரானடி' பாடல் தேவைப்படுவோர், என்னுடைய வாட்சப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்.)

31 ஜனவரி 2016

ஏ.ஆர்.ரஹ்மானை பின் தொடரும் ஹாரிஸ் ஜெயராஜ்!

"கெத்து" படத்தில் வரும் 'தேன்காற்று வந்தது' பாடலும், அப்படியே "ஐ" படத்தில் வரும் 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள்' என்ற பாடலை அச்சு அசலாக வழக்கம் போல ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து காப்பியடித்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். ட்யூன் மட்டுமில்லாமல் இடையில் வரும் ஆர்கெஸ்ட்ரா இன்ஸ்ட்ருமெண்ட் வரைக்கும் காப்பியடித்திருக்கிறார்.

ரஹ்மானின் ஒரு பாடல் ஹிட்டான உடனேயே அந்த பாடலை பாடிய அதே பாடகர்களை அழைத்து வந்தே, அதே ட்யூனில் அடுத்த ஒருசில மாதங்களில் ஹாரிஸ் ஜெயராஜ் ட்யூன் போட்டு அந்த பாடலை ஹிட்டாகி விடுவார். இதை அவரின் பாடல்களையும், ரஹ்மானின் பாடல்களையும் நன்றாக கவனித்தால் எளிதாக புரிந்து கொள்ளலாம். இன்னொரு பக்கம், ரஹ்மானும் யாரையோ பார்த்து இன்ஸ்பையர் ஆகிதான் ட்யூன் போடுகிறார். ஆனால் ஹாரிஸை போல அப்படியே காப்பியடிக்கவில்லை என்ற புரிதலும் எனக்குண்டு.
ஐ படத்தில் அந்த பாடலை ஹரிசரணையும், ஸ்ரேயாகோஷலையும் பாட வைத்திருப்பார் ரஹ்மான். கெத்து படத்தில் ஹரிசரணையும், ஷாசாதிருப்பதியையும் பாட வைத்திருக்கிறார் ஹாரிஸ். பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

சமீபத்தில் ரஹ்மானிடமிருந்து உடனுக்குடன் காப்பியடித்தது, "கடல்" படத்தில் வரும் சக்திஸ்ரீ கோபாலன் பாடிய 'நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்' பாடல் தான். அந்த பாடகியையே பாட வைத்து, அதே ட்யூனில், அதே ஆர்கெஸ்ட்ரா அமைப்போடு இன்னொரு பாடலையும் தன்னோட ஹிட் லிஸ்டில் சேர்த்த கொண்ட பெருமைக்குரியவர், ஹாரிஸ் ஜெயராஜ்.
மின்னலே தொடங்கி, 12பி, உன்னாலே உன்னாலே, லேசா லேசா, காக்க காக்க, வாரணம் ஆயிரம், சாமுராய், தொட்டி ஜெயா, தாம் தூம், கோ, என்றென்றும் புன்னகை, உள்ளம் கேட்குமே என ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த பல படங்களின் பாடலுக்கு நான் பரம ரசிகனாக இருந்தாலும், அவர் காப்பிகேட் செய்வதை ஏற்கவே முடியவில்லை. இதுவும் ஒரு (கலைத்)திருட்டு தான். அவரிடம் இதைப்பற்றி கேட்டால், கமல் மாதிரி நானும் மற்றவர்களிடமிருந்து இன்ஸ்பையர் ஆகினேனே தவிர காப்பியடிக்கவில்லையென சொல்லக்கூடும்.

இசை நம் வாழ்வியலோடு இரண்டற கலந்த முதன்மை கூறாகி விட்டது. அதனால் ஹாரிஸ் ஜெயராஜ் போன்றவர்கள், சொந்தமாக ட்யூன் போட்டால் இன்னும் புதுப்புது இசைவடிவங்கள் நமக்கு கிடைக்கலாம். காலம் எல்லாவற்றையும் மாற்றும்; ஹாரிஸ் ஜெயராஜும் ஒருநாள் மாறுவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

27 மார்ச் 2015

ஹாரிஸ் ஜெயராஜ் - காப்பிகேட் ரசிகன்!

'நண்பேன்டா' படத்துல க்ளாசிக்கல் சாயலில் "ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா?" என்ற பாட்டு கேட்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. காப்பியடிச்சாலும் கேட்டு ரசிக்கிற மாதிரி ட்யூன் போடுறதுல, ஹாரிஸ் ஜெயராஜை அடிச்சிக்க இங்கே ஆளே கிடையாது. மியூசிக் காப்பிக்கேட் விசயத்துல தேவா தொடங்கி அனிருத் வரை ஒரு ஆளு கூட ஹாரிஸ் பக்கதுல கூட வரவே முடியாது. அதுக்கெல்லாம் ஒரு சின்ன உதாரணம் என்னன்னா, ரஹ்மான் எந்த பாட்டு போட்டாலும், அடுத்த சில மாதங்களிலேயே ரஹ்மான் பாட்டுல பாடுன அதே சிங்கரை வைத்து, அதே இன்ஸ்ட்ரூமெண்ட்களை பயன்படுத்தி, அதே மாதிரி ட்யூன் போடுற தைரியம் ஹாரிஸை தவிர வேற யாருக்கும் இங்க இல்லை. திருட்டுத்தனம் பண்ணினாலும் நாலு பேருக்கு தெரியாத மாதிரி நாசூக்கா பண்ணனும்ன்னு வடிவேலு சொல்ற மாதிரியான தைரியமும் தன்னம்பிக்கையும் உள்ள இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் பல பாடல்களுக்கு நான் பெரிய ரசிகன். அதுல சில கீழே:-

12பி - பூவே வாய் பேசும் போது
உள்ளம் கேட்குமே - என்னை பந்தாட பிறந்தவளே, ஓ மனமே
லேசா லேசா - லேசா லேசா
உன்னையறிந்தால் - உனக்கென்ன வேணும் சொல்லு
இரண்டாம் உலகம் - கனிமொழியே, மன்னவனே
என்றென்றும் புன்னகை - என்னை சாய்த்தாளே, வான் எங்கும்
காக்க காக்க - ஒரு ஊரில் அழகே உருவாய்
மின்னலே - வசீகரா
நண்பன் - நல்ல நண்பன்
பச்சைக்கிளி முத்துச்சரம் - காதல் கொஞ்சம், உன் சிரிப்பினில்
சாமுராய் - மூங்கில் காடுகளே, ஆகாய சூரியனை
தொட்டி ஜெயா - உயிரே என்னுயிரே
துப்பாக்கி - போய் வரவா
வாரணம் ஆயிரம் - நெஞ்சுக்குள் பெய்திடும், முன் தினம்
வேட்டையாடு விளையாடு - உயிரிலே
யான் - நெஞ்சே நெஞ்சே
உன்னாலே உன்னாலே - முதல்நாள் இன்று, ஜூன் போனால்

வாழ்த்துகள் ஹாரிஸ் ஜி!