ஏ.ஆர்.ரஹ்மானை பின் தொடரும் ஹாரிஸ் ஜெயராஜ்!

"கெத்து" படத்தில் வரும் 'தேன்காற்று வந்தது' பாடலும், அப்படியே "ஐ" படத்தில் வரும் 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள்' என்ற பாடலை அச்சு அசலாக வழக்கம் போல ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து காப்பியடித்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். ட்யூன் மட்டுமில்லாமல் இடையில் வரும் ஆர்கெஸ்ட்ரா இன்ஸ்ட்ருமெண்ட் வரைக்கும் காப்பியடித்திருக்கிறார்.

ரஹ்மானின் ஒரு பாடல் ஹிட்டான உடனேயே அந்த பாடலை பாடிய அதே பாடகர்களை அழைத்து வந்தே, அதே ட்யூனில் அடுத்த ஒருசில மாதங்களில் ஹாரிஸ் ஜெயராஜ் ட்யூன் போட்டு அந்த பாடலை ஹிட்டாகி விடுவார். இதை அவரின் பாடல்களையும், ரஹ்மானின் பாடல்களையும் நன்றாக கவனித்தால் எளிதாக புரிந்து கொள்ளலாம். இன்னொரு பக்கம், ரஹ்மானும் யாரையோ பார்த்து இன்ஸ்பையர் ஆகிதான் ட்யூன் போடுகிறார். ஆனால் ஹாரிஸை போல அப்படியே காப்பியடிக்கவில்லை என்ற புரிதலும் எனக்குண்டு.
ஐ படத்தில் அந்த பாடலை ஹரிசரணையும், ஸ்ரேயாகோஷலையும் பாட வைத்திருப்பார் ரஹ்மான். கெத்து படத்தில் ஹரிசரணையும், ஷாசாதிருப்பதியையும் பாட வைத்திருக்கிறார் ஹாரிஸ். பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

சமீபத்தில் ரஹ்மானிடமிருந்து உடனுக்குடன் காப்பியடித்தது, "கடல்" படத்தில் வரும் சக்திஸ்ரீ கோபாலன் பாடிய 'நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்' பாடல் தான். அந்த பாடகியையே பாட வைத்து, அதே ட்யூனில், அதே ஆர்கெஸ்ட்ரா அமைப்போடு இன்னொரு பாடலையும் தன்னோட ஹிட் லிஸ்டில் சேர்த்த கொண்ட பெருமைக்குரியவர், ஹாரிஸ் ஜெயராஜ்.
மின்னலே தொடங்கி, 12பி, உன்னாலே உன்னாலே, லேசா லேசா, காக்க காக்க, வாரணம் ஆயிரம், சாமுராய், தொட்டி ஜெயா, தாம் தூம், கோ, என்றென்றும் புன்னகை, உள்ளம் கேட்குமே என ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த பல படங்களின் பாடலுக்கு நான் பரம ரசிகனாக இருந்தாலும், அவர் காப்பிகேட் செய்வதை ஏற்கவே முடியவில்லை. இதுவும் ஒரு (கலைத்)திருட்டு தான். அவரிடம் இதைப்பற்றி கேட்டால், கமல் மாதிரி நானும் மற்றவர்களிடமிருந்து இன்ஸ்பையர் ஆகினேனே தவிர காப்பியடிக்கவில்லையென சொல்லக்கூடும்.

இசை நம் வாழ்வியலோடு இரண்டற கலந்த முதன்மை கூறாகி விட்டது. அதனால் ஹாரிஸ் ஜெயராஜ் போன்றவர்கள், சொந்தமாக ட்யூன் போட்டால் இன்னும் புதுப்புது இசைவடிவங்கள் நமக்கு கிடைக்கலாம். காலம் எல்லாவற்றையும் மாற்றும்; ஹாரிஸ் ஜெயராஜும் ஒருநாள் மாறுவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment