முட்டாள்களாக்கப்படுவது வாக்காளர்கள் தான்!

சுவாதி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராம்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் இதை சாப்பிட்டார்; அதை சாப்பிட்டார்; இரண்டு இட்லி சாப்பிட்டாரென ப்ளாஷ் நியூஷ்ல போட்டாய்ங்க. அதுல கூட ஒரு லாஜிக் இருந்துச்சு. ராம்குமார் சாப்பிட்ட அந்த எச்சில் தட்டை பார்த்தாவது குத்துமதிப்பா எதையாவது சொல்ல முடியும்.
ஆனால், மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா விசயத்தில், அவர் தங்கிருக்கு அந்த ப்ளாக் / வார்டு பக்கமே எட்டிப்பார்க்க முடியாது. குறைந்த பட்சம் அவர் சாப்பிட்ட எச்சில் தட்டை கூட பார்க்க முடியாத அடிமைகள் கூட்டம், 'ஜெயலலிதா இரண்டு இட்லி சாப்பிட்டார்!' என்று சொல்வதையெல்லாம் ஊடகங்கள் ப்ளாஷ் நியூஷில் போடும்போது தான், விஜயகாந்த் காரித்துப்பினது ஞாபகத்துக்கு வருகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டால், அந்த அரசின் நிர்வாகத்தை முதலமைச்சருக்கு மாற்றாக தலைமையேற்கும் இடத்தில் இருக்கும் மாநில மாண்புமிகு ஆளுநரே, வார்டு பக்கம் மட்டும் தான் போக முடிந்திருக்கிறது என்பதை கவனிக்கையில், 'அதிகாரம் மையம்' யார்? என்பதில் கூட குழப்பம் வருகிறது. ஒரு வார்டில் பல அறைகள் இருக்கும் என்பதால், குறிப்பிட்ட அந்த அறைக்கு போக முடிந்ததா? என்பதை பற்றி அந்த அறிக்கையில் சரியான விளக்கமும் ஒன்றுமில்லை என்பதாலும், இது முழுமையற்ற அறிக்கையாகவே தோன்றுகிறது.

பொன்.ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர் போன்ற தேசிய கட்சி தலைவர்களும், வைகோ, திருமாவளவன் போன்ற மாநில கட்சியின் தலைவர்களும், கம்யூனிஸ்ட்களும், இந்தளவுக்கு முட்டுகொடுப்பதை பார்க்கையில் குழப்பம் தான் வருகிறது. அதிமுகவை நேரடியாக எதிர்க்கும் திராணியுள்ள அரசியல் கட்சிகள் எதுவும் இப்போது இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. ஒருவழியாக, சசிகலா புஷ்பாவின் அதிரடியால் ஓ.பி.எஸ் மீண்டுமொரு நாகராஜசோழன் எம்.எல்.ஏ.வாக உருவெடுத்திருக்கிறார். இம்முறை நேரடியாகவே சசிகலா நடராஜனுக்கு கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதுதான் அவருக்குள்ள ஒரே சிக்கல். ஏனெனில் இனி நிழல் முதலமைச்சரே, சசிகலா நடராஜன் தான்.

நிர்வாக வசதிக்காக முதலமைச்சர் வகித்த அனைத்து துறை பொறுப்புகளையும் ஓ.பி.எஸ்.சிடம் கொடுத்திருப்பது தவறான முன்னுதாரணம். இந்த முடிவை எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் கூட வரவேற்றிருக்கிறார். நாளை ஆட்சிக்கட்டிலில் ஒருவேளை கருணாநிதி அமர்ந்தால் கூட, பெயருக்கு முதல்வராக அவருக்கு பதவியை கொடுத்துவிட்டு மற்ற பொறுப்புகளை ஸ்டாலினே கவனிக்கலாமென நினைத்திருக்க இதுவொரு முன்னோட்டமாக இருக்குமென நம்பியிருக்கலாம். அப்படியெனில், இனி முதலமைச்சர் என்ற பதவியே தேவையில்லையே? என்ற கேள்வி பாமரனுக்குள்ளும் எழத்தோன்றும்.

இலாகாக்கள் அற்ற முதலமைச்சர் ஆளும் மாநிலத்தை உருவாக்கியுள்ள பாஜகவின் ஆதரவுடன் கூடிய முயற்சியின் மூலம், சசிகலா நடராஜனிடம் இம்முறை சசிகலா புஷ்பா தோற்று போயிருக்கிறார் என்றே சொல்லலாம். ஆனாலும், இது தற்காலிக தோல்விதான். இனி தான் உண்மையான வெற்றி யாருக்கு என்பது புரியவரும். ஆனால், இத்தனை நாட்களாக முட்டாள்களாக்கப்படுவது என்னமோ அப்பாவி வாக்காளர்கள் தான்!

- இரா.ச. இமலாதித்தன்

சமூக ஊடகங்களால் நினைவூட்டப்படும், பிறந்தநாள் தேதி!

ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் இல்லையென்றால் என் போன்ற பலரின் பிறந்தநாளெல்லாம் குறிப்பிட்ட ஒருசிலரை தவிர எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதலில் நம்மை இணைத்த இணையத்திற்கு நன்றி! ஒருமுறை இப்படித்தான் சகோ. சக்தி கணேஷின் பிறந்தநாள் தவறுதலான தேதி பதியப்பட்டிருந்ததால் அதையே அவரது பிறந்த தேதி என நம்பி, பலரும் வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தனர். வேற வழியில்லாமல், இல்லாத பிறந்த நாளுக்காக நன்றியையும் சகோ.சக்தி சொன்னார். என் விசயத்தில், இந்த வருட பிறந்த நாளுக்காக 20ம் தேதியே, "போராளிக்கு வாழ்த்துகள்!" என அண்ணன் கடிநெல்வயல் செந்தில் அவர்கள் முதல் வாழ்த்தை முதல் நாளே தொடங்கி வைத்திருந்தார்.

தொடர்ச்சியாக மூன்று நாட்கள், பங்காளி, அண்ணா, தம்பி, தோழர், நண்பா, சார், மகனே, மச்சி, மாப்ள, சகோ, பங்கு, ப்ரோ, சகோதரா, போராளி, தங்கமே, தலைவா, ஜி, இமல், இமலா, பாலாஜி, இமலாதித்தன் என பல்வேறு உறவு முறைகளோடு வாழ்த்துகளை சொன்ன அனைவரது வார்த்தைகளாலும் மகிழ்ச்சியடைந்தேன். அண்ணன் நாச்சிக்குளம் சரவணன், சகோ சத்தியேந்திரன், பங்காளி உதயகுமார், தம்பி விமல் போன்றோரின் போட்டோஷாப் வாழ்த்துகளும், பங்காளிகள் சிவக்குமார் சேர்வை, மருது பரணி மற்றும் தம்பி சேகர் சேர்வை போன்றோர் அவர்களது முகப்பு படமாக என் படத்தை வைத்திருந்ததும், சகோ சக்தி கணேஷ் அவர்கள் 'அகமுடையார் ஒற்றுமை' தளத்தில் (21ம் தேதியை 20ம் தேதியாக முன்கூட்டியே) வாழ்த்துகள் சொல்லிருந்த விதமும் மகிழ்ச்சியாக இருந்தது.

தமிழர்களின் வாழ்வியல் கணக்கீட்டின் படி ஒரு நாளின் தொடக்கம் என்பது சூரிய உதயத்திற்கு பிறகுதான். தோராயமாக காலை 6 மணிக்கு தான் ஒரு நாள் தொடங்குகிறது. ஏசு பிறந்ததை மையமாக கொண்ட கிரிகோரியன் நாட்காட்டியை பயன்படுத்தி அரை ஆங்கிலேயனாக்கப்பட்ட நாமும், பண்டைய தமிழர் பகுத்த சிறுபொழுதான (10PM - 2AM) யாமம் என்ற பொழுதிற்குட்பட்ட 12 மணிக்கே ஒரு நாள் தொடங்கி விட்டதாக தவறான கணிப்பிலேயே காலத்தை கடத்தி கொண்டிருக்கிறோம். 20ம் தேதி இரவு 12 மணிக்கே தொடர்புகொண்டு வாழ்த்திய சகோ வாரப்பூர் கார்த்தி, தோழன் சோழன், நண்பன் சிவநேசன் உள்ளிட்ட பலருக்கும் நன்றியை மட்டுமே சொல்லிக்கொண்டேன். எல்லாருமே ஒரு சின்ன அங்கீகாரத்திற்கு தானே ஓடிக்கொண்டிருக்கின்றோம். நாம் வேண்டாமென்று சொன்னாலும், புகழ் என்ற மூன்றெழுத்து போதைக்கு அனைவருமே அடிமை தான் எனும்போது, நான் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? குடி பழக்கம் இல்லாத போதும், பலரது வாழ்த்துகளால் நானும் போதைக்கு உட்பட்டிருந்தேன் என்பது உண்மை தான்.

இந்த மாதிரியான வெறும் வாழ்த்துகளால் ஒன்றும் ஆகிட போவதில்லை என்பது தெரிந்த விசயம் தான். ஆனாலும் இதே முகநூலில் கடந்த ஏழு வருடங்களில் எத்தனையோ விமர்சனங்களாலும், அவதூறுகளாலும், வயது வித்தியாசமின்றி யாரென்றே தெரியாத என்னைவிட சின்னஞ்சிறு சிறுவர்களாலும் ஒருமையிலும் தூற்றப்பட்டிருக்கிறேன்; அப்போதும் கொஞ்சம் வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனாலும் என் செயல்பாட்டு பாதையை மாற்றிக்கொள்ளவில்லை. ஒரு பெரிய களோபரத்தின் போது அமைதியாக மெளனித்திருக்கும் போது, நரிக்குடியை சேர்ந்த தம்பி சுந்தரபாண்டியன் அவரது பதிவுகளால் என் மெளனத்தை கலைத்தார். இப்போதும் கூட நீண்ட பதிவில் சுந்தர பாண்டியன் எனக்கான வாழ்த்துகளை அவர் சொல்லிருந்தார். நானும் அவரை என் உடன்பிறவா தம்பியாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதில் கூட அவருக்கும் சந்தேகம் இருக்கிறது போல.

2008லிருந்து இந்த முகநூலில் பல அவமானங்களை சந்தித்திருக்கின்றேன். நான் சார்ந்த அகமுடையார் சமுதாயத்திற்காக எழுதிய வெறும் எழுத்துகளுக்காக, கள்ளர் மறவர் உள்ளிட்ட பல மாற்று சாதியினரால் பலமுறை விமர்சனத்திற்கு உட்பட்டிருக்கிறேன். இத்தனை வருடங்களில் பல குழுக்களோடு பயணித்திருக்கின்றேன்; ஒவ்வொரு குழுக்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொஞ்ச நாட்களிலேயே செயல்பாட்டோடு இருந்த பலரும் காணாமல் போயிருக்கின்றனர். ஆனாலும் இன்னுமும் நான் மட்டும் அதே உயிர்ப்போடு இயங்கி கொண்டிருக்கிறேன் என்பது மட்டுமே ஒரே ஆறுதல் எனக்கு. பேராசிரியர் அசோக் அண்ணன் போன்ற நான் மதிக்கும் மூத்தோர் பலரும் என்னை பல வார்த்தைகளால் பேரன்போடு வாழ்த்திருந்தனர். அதிலும் குறிப்பாக 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!' என்பது போல... முனைவர் திரு. அரப்பா சார் அவர்களின் வாழ்த்துகளாலும் அவர் என்மீது வைத்திருந்த நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை கீழே கொடுத்திருக்கிறேன்.

/தம்பி இமலாதித்தன்...

நாகபட்டிணத்திலிருந்து புறப்பட்டிருக்கும்
சமுதாய ஆய்வாளன்..

எதையும் சிந்தித்து
சமூகநலனை முன்னிறுத்தி
முகநூலில் தன் பக்கப்பதிவினை
செப்பனிடுபவன்...

சந்திப்பின்போதெல்லாம்
சமுதாய ஆய்வுகுறித்தே அதிக
நேரத்தை ஒதுக்கச்செய்பவன்..

இவன் பதிவுகள் வரலாற்று ரீதியாக
ஆதாரப்பூர்வமானவை என்பதால்
பகிர்வுகள் அதிகம் இருக்கும்.

சொல்லும் பொருளை எளிதில்
புரிந்துகொண்டு துணிச்சலுடன்
எதிர்கொள்ளும் திறனுடன்
சமூகப்பதிவு செய்பவன்..

இவனைப்போன்ற தம்பிகள்
10பேர் இருந்தால்
எம் சமூக மாற்றத்தைச் செய்து முடிப்பேன்
என்று அண்ணா சொன்னது
இவனுக்குப்பொருந்தும் என்று
நினைப்பதுண்டு..

சமுதாயத்தைச்செப்பனிட
முடியாமல் போகும்போதெல்லாம்
இவன் முடிப்பான் என்ற தெம்பு வரும்..

இன்று இவன் பிறந்தநாள்..
வாழட்டும் பல்லாண்டு
நோயற்ற வாழ்வுபெற்று.../

இதற்கு மேல் வேற என்ன வேண்டும்? என்மீது அன்பு கொண்ட ஒரு சிலரோடாவது பயணிக்கிறேன் என்ற மன நிறைவை தந்த அனைவருக்கும் உறவுக்காரனாக நன்றி!

மகிழ்ச்சி.

- இரா.ச. இமலாதித்தன்

திருவோணத்திருநாள் வாழ்த்துகள்!



மகாபலி என்ற அகம்படி குலத்தில் உதித்த மன்னனின் முற்பிறவி, எலியென்பது சமய நம்பிக்கை. முற்பிறவியில், வேதாரண்யம் என்ற திருமறைக்காட்டு நாதர் கோவிலுள்ள அணைகின்ற நிலையிலிருந்த விளக்கை எதேச்சையாக தூண்டிவிட்டதால், அடுத்த பிறவியில் மனிதம் போற்றும் மன்னனாக பிறந்ததாக மகாபலியின் முற்பிறவி பற்றிய புராண வரலாறு சொல்லுகிறது. சேர நாட்டை ஆண்ட தமிழ் மன்னனான மாவலி சக்கரவர்த்தி, ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளில் தன் ஆண்ட மண்ணை காண வருகிறார் என்பதே ஓணம் பண்டிகையின் சிறப்பு.

அனைவருக்கும் திருவோணத்திருநாள் வாழ்த்துகள்!

காவிரியும் தமிழனும்!

காவிரிக்காக, கன்னடமே தீப்பற்றி எரிகிறது; இங்கே, ஜெயலலிதா காலில் விழுந்து கிடப்பதை தவிர வேறவொன்றுமே சாதிக்காத, சாதி தலைவனெல்லாம் இப்போதே அக்டோபர் மாத அலப்பறைகளுக்காக அடி போட்டு கொண்டிருக்கின்றான். கல்லணையை கட்டிய கரிகாலன் பிறப்பெடுத்த இரும்புத்தலை மண்ணோ, இன்று துருபிடித்து கிடக்கிறது; பசும்பொன்னை தவிர வேறெந்த அரசியலும் தெரியாத செம்மறியாட்டு கூட்டத்தில், சாதி தலைவர்கள் ஊருக்கு ஒருத்தர் உண்டு; ஆனால், சாதிக்கத்தான் சங்கம் வளர்த்த இந்த தமிழ் நானிலத்தில் ஓர் ஆளில்லை.

கன்னட வெறியர்களிடம் அடிவாங்கியது அந்தவோர் அப்பாவி தமிழ் இளைஞன் மட்டுமல்ல; ஜெயலலிதா போன்ற தமிழரல்லாதவர்களை, வெறும் 200 ரூபாய்க்காக ஆட்சியில் அமர வைத்த ஒட்டுமொத்த தமிழ்நாட்டு காரனுக்குமான அடிதான் அது... இந்த மாதிரியான விசயத்துக்கெல்லாம் காந்திய வழியை விட, நேதாஜிய வழி தான் சரியாக இருக்கும். ஆனால், இங்கே நேதாஜியை ஆதரிக்கிற ஆட்கள் கூட, சீமானை எதிர்க்கிறார்கள்; அப்பறம் எப்படி மாற்றம் நிகழும்? யாராலும் விமர்சிக்கப்படாத ஓர் அரசியல்வாதி இதுவரையிலும் உண்டா? சீமானும் அரசியல்வாதிதான்; ஆனால் சீமான் கையிலெடுத்த அரசியல் தமிழனுக்கானது. அதை நாம் ஆதரிக்க வேண்டும்.

சீமானை குறை சொல்லும் எந்தவொரு யோக்கிய சிகாமணிகளும் தமிழ் தேசிய அரசியலை பேச மாட்டார்கள்; ஆனால், தமிழ் தேசிய ஆட்சிக்கு விதை போடும் சீமான் போன்றவர்களையும், 'விமர்சனம்' என்ற பெயரில், 'தமிழர்' என்ற பதத்தை 'டம்ளர்' என்று இழிவுபடுத்தி மல்லாக்க படுத்துக்கொண்டு மார்பில் துப்பில் கொள்வார்கள். இதுதான் தமிழர்களின் இன எழுச்சி அரசியல் தோல்விக்கான அடிப்படை. காவிரி, பெரியாறு, கிருஷ்ணா போன்ற நதிநீர் பிரச்சனைகளுக்கெல்லாம் நிரந்தர தீர்வு காண, தமிழ்நாட்டில் தமிழுணர்வுள்ள தமிழர் ஆட்சி நிறுவினால மட்டுமே சாத்தியம். இப்போது இருப்பது போல தமிழ்நாடு என்பது பெயரளவில் மட்டுமில்லாமல், தமிழர்களுக்காக தமிழர்களே ஆளும் நாடாக மாறும் போதுதான், இதுபோன்ற இனவாத பிரச்சனைகள் முற்றிலுமாக களையப்படும். அதுவரையிலும் 'பாரத் மாதாகி ஜே!' என சொல்லிக்கொண்டு இன உணர்வற்ற ஹிந்தியனாய் வாழ்வதென்பது, நம்மை நாமே ஏமாற்றி கொள்ளும் தற்கொலைக்கு சமமானது.

- இரா.ச. இமலாதித்தன்

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே!"

- திருமூலர், திருமந்திரம்.

கோவில்கள் நிறைந்த ஊரென்றால் கும்பகோணம், காஞ்சிபுரம், மதுரை என பல்வேறுவிதமாக சொல்லப்பட்டாலும், நாகப்பட்டினத்திற்கும் கோவில்களுக்கும் அதிக தொடர்புண்டு. கிருத்துவர்களுக்கான வேளாங்கன்னி (வேல்நெடுங்கன்னி - சிக்கல் முருகன் கோவிலிலுள்ள அம்மனின் பெயர்) தேவாலயமும், இசுலாமியர்களுக்கான நாகூர் தர்காவும், நாகைக்கு உட்பட்ட 10 மைல் தொலைவிற்குள்ளாகவே இருக்கின்றன; இந்த ஒரு செய்தியே போதும், நாகப்பட்டினம் என்ற இந்த பழம்பெரும் நகரத்தின் ஆன்மீக சமத்துவ அடையாளத்தை புரிந்துகொள்ள முடியும்.

சோழர், பாண்டியர், பல்லவர் கலை நயம் மட்டுமில்லாத போர்த்துக்கீசியர் ஆட்சிக்காலத்தில் சீர்படுத்திக்கொடுத்த மலைக்கோவில், அகத்தியர் வழிப்பட்ட கோவில், யாளி பலிபீட வாகனமாய் இருக்கும் கோவிலெனெ புகழ் பெற்ற 12 சிவன்கோவில்கள் நாகையில் உண்டு. கோரக்கர், அழுகணி, ராமதேவர், சட்டமுனி, மாங்கொட்டை சித்தர் என பல ஜீவசமாதிகள் நாகையில் உண்டு. காசியில் இராமதேவரால் கண்டெடுக்கப்பட்ட சட்டநாதர் சிலையை மூலவராக கொண்ட சிவன் கோவிலும் நாகையில் உண்டு. காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி போல, நாகை நீலாயதாட்சி உடனுறை காயாரோகனேஸ்வர சிவன் கோவிலும் நாகையில் உண்டு. இதே காயாரோகணேஸ்வரர் கோவில் குஜராத்திலும் உண்டு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ராகு கேது நிவர்த்தி தலமாகவும், நாகை/நாகூர் என பெயர் வர காரணமான நாகநாதர் கோவில்களும் இரண்டு உண்டு. மேலும், 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயன்மார் அவதரித்த மீனவ நகரம் இது.

சிவபுரி, ராஜ்தானி, நாகை காரோணம், திருநாகை, குலசேகரவல்லிப்பட்டினம், நாகப்பட்டினம் என பல புராதன பெயர்களை தன்னகத்தே கொண்ட பழம்பெரும் நகரம். நாவலந்தீவு, நாகர் வாழ்ந்த நகரம் என பல வரலாற்று கூறுகள் இம்மண்ணிற்கு உண்டு. ஒவ்வொரு வீதிக்கும் ஒரு அம்மன் கோவிலோ அல்லது விநாயகர் கோவிலோ என பலதரப்பட்ட கோவில்கள் இல்லாத தெருக்களே இங்கு கிடையாது. 108 திவ்ய தேசங்களென சொல்லப்படும் வைணவக்கோவில்களில் ஒன்றான செளந்தரராஜ பெருமாள் கோவிலும் இங்கு ரொம்பவே விசேசம். புரட்டாசி மாதம் அந்த கோவில் பக்தர்களின் கூட்டத்தால் அலைமோதும்; பெருமாள் கோவிலின் அருகே இருக்கும் தெருக்களை கடக்கவே பல மணி நேரம் ஆகும்.

முச்சந்தி மாரியம்மன், முச்சந்தி காளியம்மன் என பல அம்மன் கோவில்கள் இருந்தாலும், நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலே பிரசித்தி பெற்ற கோவில்; வருடம் தோறும் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக விழாக்கள் நடைபெறும்; இங்கே செடில் என்ற குழந்தைகளை வைத்து சுற்று மரத்தின் மீது வைத்து சுற்றி நிவர்த்திக்கடன் செய்வது முக்கிய நிகழ்வாகும். மேலும், முச்சந்தி விநாயகர், இரட்டை விநாயகர், சித்தி விநாயகர், வலம்புரி விநாயகர் என 20க்கும் மேற்பட்ட பிள்ளையார் கோவில்களும் உண்டு. வருடந்தோறும் 'சக்தி விநாயகர் குழு' என்ற அமைப்பு மூலம் சுற்று வட்டார ஊர்களிலிருந்து நூற்றுக்கணக்கான விநாயகர்கள் தனித்தனி வாகனத்தில் நாகையிலிருந்து நாகூர் வரை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பது விசேசமான நிகழ்வாகும். மேலும், 'விஸ்வரூப விநாயகர் குழு' மூலம் 32 அடியுள்ள பிரமாண்ட விநாயகர் உருவ ஊர்வலத்தை காண, ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி அன்றும் நாகை நகரமே விழாக்கோலம் பூணும். அப்படிப்பட்ட இந்நாளில் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

இங்கே யார் புனிதர்?

புனிதர் பட்டம் யாருக்கு? எதனடிப்படையில் கொடுக்கப்படுகிறது என்பது தெரியுமா? இறந்தவர்களுக்கு (மட்டுமே) கொடுக்கப்படும் புனிதர் பட்டத்தின் பின்புலத்திலும் சில விதிமுறைகள் இருப்பதாக வாடிகன் தலைமையகம் சொல்லலாம். அதிலும், ரோமன் கத்தோலிக் கிருஸ்துவர் அல்லாத வேறு கிருஸ்துவர்களுக்கு இந்த புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்று ஆராய்ந்து பார்த்தால் இல்லையென்றுதான் தோன்றுகிறது. இறந்தபின்னால் ஓரிரு அற்புதங்கள் செய்யும் ஒருவருக்கே புனிதர் பட்டம் தரப்படுவதாக சொல்லப்படுகிறது. அப்படி பார்த்தால், தமிழர்களின் குலதெய்வ வழிபாடான ஐயனார் போன்ற நாட்டார் வழிபாட்டுமுறையில் எத்தனையோ அற்புதங்கள் காலம்காலமாக நடைப்பெற்று கொண்டே இருக்கின்றன; அத்தகைய அற்புத நிகழ்வுகளுக்கு தொடர்புடைய பூசாரிகளும், சாமியாடிகளும், குறிசொல்லிகளும் கூட வாடிகன் விதிமுறைப்படி புனிதர்கள் தான்... நாம் தான் அவர்களுக்கு சரியான அங்கீகாரம் கொடுப்பதில்லை.

அன்னை தெரசா, அவர் வாழ்ந்த காலத்திலேயே புனிதர் தான்; அதில் எவ்வித மாற்றுகருத்தும் இல்லை. ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால், ஏழை மக்களுக்காக அவர் எவ்வளவோ சேவை செய்த போதும், இந்தியாவில் கொண்டு வந்த 'மதமாற்றம் தடை சட்ட'த்தை எதிர்த்தார் என்ற ஒற்றை செயல்பாடு தான் அவர் மீதான பிம்பத்தை உடைக்கிறது. மதம் கடந்த மனிதாபிமான சேவை செய்யும் போதுதானே ஒருவர், புனிதர் ஆக முடியுமென்ற கேள்வியும் அனைவருக்குள்ளும் எழக்கூடும். கடந்தகாலம் எப்படியோ?! ஆனால், 1997ல் உயிரிழந்த அன்னை தெரசாவிற்கு 19 ஆண்டுகள் கழித்து 2016ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கிய வாடிகனை விட, அவர் உயிரோடு இருக்கும் போதே இந்திய கூட்டாட்சி நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா'வை 1980ம் ஆண்டே வழங்கி இருக்கும் இம்மண்ணின் பண்பு போற்றதக்கது.

மதம் கடந்து மனிதம் மலரட்டும்!

- இரா.ச. இமலாதித்தன்

'சேர்வை ப.அரங்கசாமி முதலியார்'



('சேர்வை ப.அரங்கசாமி முதலியார்' இடம்: வேலூர்.)

அகமுடையார்களின் பட்டங்களான சேர்வையும், முதலியாரும் ஒரே பெயருக்குள்ளாகவே முன்னும்பின்னுமாக ஒன்றாகி போனதற்கான ஒரு சின்ன எடுத்துக்காட்டு இது. சேர்வை, தேவர், முதலியார், பிள்ளை, உடையார், நாயக்கர் என்று வட்டாரங்களுக்கேற்ப வெவ்வேறான பட்டங்களால் அறியப்பட்டாலும், இனக்குழுவாக #அகமுடையார் என்ற ஒற்றை அடையாளமாய் ஒன்றிணைந்தது தான் நிகழ்கால சாதனை. இதுவே வருங்காலத்திற்கான நிகழ்கால வரலாறு.

பட உதவி: விமல் உடையார், செல்வராஜ சோழன்