05 செப்டம்பர் 2016

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே!"

- திருமூலர், திருமந்திரம்.

கோவில்கள் நிறைந்த ஊரென்றால் கும்பகோணம், காஞ்சிபுரம், மதுரை என பல்வேறுவிதமாக சொல்லப்பட்டாலும், நாகப்பட்டினத்திற்கும் கோவில்களுக்கும் அதிக தொடர்புண்டு. கிருத்துவர்களுக்கான வேளாங்கன்னி (வேல்நெடுங்கன்னி - சிக்கல் முருகன் கோவிலிலுள்ள அம்மனின் பெயர்) தேவாலயமும், இசுலாமியர்களுக்கான நாகூர் தர்காவும், நாகைக்கு உட்பட்ட 10 மைல் தொலைவிற்குள்ளாகவே இருக்கின்றன; இந்த ஒரு செய்தியே போதும், நாகப்பட்டினம் என்ற இந்த பழம்பெரும் நகரத்தின் ஆன்மீக சமத்துவ அடையாளத்தை புரிந்துகொள்ள முடியும்.

சோழர், பாண்டியர், பல்லவர் கலை நயம் மட்டுமில்லாத போர்த்துக்கீசியர் ஆட்சிக்காலத்தில் சீர்படுத்திக்கொடுத்த மலைக்கோவில், அகத்தியர் வழிப்பட்ட கோவில், யாளி பலிபீட வாகனமாய் இருக்கும் கோவிலெனெ புகழ் பெற்ற 12 சிவன்கோவில்கள் நாகையில் உண்டு. கோரக்கர், அழுகணி, ராமதேவர், சட்டமுனி, மாங்கொட்டை சித்தர் என பல ஜீவசமாதிகள் நாகையில் உண்டு. காசியில் இராமதேவரால் கண்டெடுக்கப்பட்ட சட்டநாதர் சிலையை மூலவராக கொண்ட சிவன் கோவிலும் நாகையில் உண்டு. காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி போல, நாகை நீலாயதாட்சி உடனுறை காயாரோகனேஸ்வர சிவன் கோவிலும் நாகையில் உண்டு. இதே காயாரோகணேஸ்வரர் கோவில் குஜராத்திலும் உண்டு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ராகு கேது நிவர்த்தி தலமாகவும், நாகை/நாகூர் என பெயர் வர காரணமான நாகநாதர் கோவில்களும் இரண்டு உண்டு. மேலும், 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயன்மார் அவதரித்த மீனவ நகரம் இது.

சிவபுரி, ராஜ்தானி, நாகை காரோணம், திருநாகை, குலசேகரவல்லிப்பட்டினம், நாகப்பட்டினம் என பல புராதன பெயர்களை தன்னகத்தே கொண்ட பழம்பெரும் நகரம். நாவலந்தீவு, நாகர் வாழ்ந்த நகரம் என பல வரலாற்று கூறுகள் இம்மண்ணிற்கு உண்டு. ஒவ்வொரு வீதிக்கும் ஒரு அம்மன் கோவிலோ அல்லது விநாயகர் கோவிலோ என பலதரப்பட்ட கோவில்கள் இல்லாத தெருக்களே இங்கு கிடையாது. 108 திவ்ய தேசங்களென சொல்லப்படும் வைணவக்கோவில்களில் ஒன்றான செளந்தரராஜ பெருமாள் கோவிலும் இங்கு ரொம்பவே விசேசம். புரட்டாசி மாதம் அந்த கோவில் பக்தர்களின் கூட்டத்தால் அலைமோதும்; பெருமாள் கோவிலின் அருகே இருக்கும் தெருக்களை கடக்கவே பல மணி நேரம் ஆகும்.

முச்சந்தி மாரியம்மன், முச்சந்தி காளியம்மன் என பல அம்மன் கோவில்கள் இருந்தாலும், நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலே பிரசித்தி பெற்ற கோவில்; வருடம் தோறும் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக விழாக்கள் நடைபெறும்; இங்கே செடில் என்ற குழந்தைகளை வைத்து சுற்று மரத்தின் மீது வைத்து சுற்றி நிவர்த்திக்கடன் செய்வது முக்கிய நிகழ்வாகும். மேலும், முச்சந்தி விநாயகர், இரட்டை விநாயகர், சித்தி விநாயகர், வலம்புரி விநாயகர் என 20க்கும் மேற்பட்ட பிள்ளையார் கோவில்களும் உண்டு. வருடந்தோறும் 'சக்தி விநாயகர் குழு' என்ற அமைப்பு மூலம் சுற்று வட்டார ஊர்களிலிருந்து நூற்றுக்கணக்கான விநாயகர்கள் தனித்தனி வாகனத்தில் நாகையிலிருந்து நாகூர் வரை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பது விசேசமான நிகழ்வாகும். மேலும், 'விஸ்வரூப விநாயகர் குழு' மூலம் 32 அடியுள்ள பிரமாண்ட விநாயகர் உருவ ஊர்வலத்தை காண, ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி அன்றும் நாகை நகரமே விழாக்கோலம் பூணும். அப்படிப்பட்ட இந்நாளில் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக