அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 ஏப்ரல் 2016

யாருக்காக இந்த அரசு?

கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு அரசாங்க பணிகளை புறக்கணித்து வரும், மிகப்பெரிய பொறுப்புகளிலுள்ள பதவியில் இருக்கும் அரசு பணியாளர்களை பற்றி எந்த ஊடகமும் வாயே திறக்கவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து அரசு பணிகளும் முற்றிலுமாக முடங்கி கிடக்கிறது. ஆனாலும் அதை பற்றியெல்லாம் 'என் தலைமையிலான ஆட்சி' என்று நொடிக்கொரு முறை தம்பட்டம் அடித்து கொள்ளும் ஜெயலலிதாவுக்கும் கவலையில்லை.

அந்த அரசு அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளையாவது நிறைவேற்றி தரலாம். இல்லையென்றால் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி இந்த வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட சொல்லலாம். எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு, ஒரு அரசு தேவையா?!
மக்களுக்காகவே அரசு. மக்களுக்கு சேவை செய்யவே, அரசாங்க அலுவலர்களுக்கு சம்பளம். மக்களின் தேவையறிந்து மக்களுக்கு பணியாற்றவே, அரசியல்வாதிகளுக்கு அரசாங்க பதவிகளை மக்கள் வழங்கியுள்ளனர். "மக்களுக்காகவே நான், எனக்கென்று யாருமில்லை" என்ற சொன்னதெல்லாம், வெறும் வார்த்தைகளாகவே இருக்கிறது என்பதை இனியாவது ஜெயலலிதா புரிந்து கொள்ளட்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

18 ஆகஸ்ட் 2015

மருது பாண்டியர்களை நினைவு படுத்தும் மருத மரம்!



சுமார் 80 முதல் 90 அடி உயரம் வரை வளர்ந்து நிழல் பரப்பும் இந்த மருதமரம், ஆற்றின் இருகரைகளுக்கும் அழகு சேர்க்கும் அழகிய மரமாகும். இந்தியா முழுவதிலும் மற்றும் மியான்மர், ஸ்ரீலங்காவிலும் இம்மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மருத மரத்தின் விதை, பட்டை, பழம் என அனைத்துமே மருத்துவ் குணம் கொண்டவை. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இவற்றிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள்.
ஆந்திராவில் ஸ்ரீசைலம் ’தலைமருது' தலமாகக் கருதப்படுகிறது. இதற்குத் தெற்கே தமிழகத்தில் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ’இடைமருது’ தலமாகவும், நெல்லை மாவட்டத்தில் திருப்புடைமருதூர் ’கடைமருது’ தலமாகவும் உள்ளன. இந்த மூன்று முக்கிய திருத்தலங்களிலும் தல மரமாக மருத மரமுமே போற்றப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த மருதமரத்தை மாமன்னர் மருதுபாண்டியர்களாகவும், ஈஸ்வரனாகவும் வழிபட்டு வருவது காலம் காலமாய் நடந்துவரும் நிகழ்வு. அந்த புனிதம் பொருந்திய மருதமரத்தை நெடுஞ்சாலைத்துறை அகற்ற முயற்சிப்பது வேதனையான விசயம். வெளிநாடுகளில் வெறும் சிறுதிடலை கூட நினைவு சின்னமாக போற்றி பாதுகாத்து கொண்டிருக்கும் வேளையில், இங்கே பல நூறு வருட பாரம்பரியமிக்க நினைவு சின்னங்களை கூட அழிக்க துடிப்பது எவ்வகையில் நியாயம்? அன்று மன்னர் அசோகர் நம் மனதில் விதைத்து விட்டு போன மரம் வளர்க்கும் எண்ணத்தை நம்மாழ்வார், கலாம் யென பல புனிதர்கள் சொல்லிவிட்டு சென்று விட்டனர். ஆனால் இங்கே நடப்பது எல்லாமே தலைகீழ் தான். பண்பாடு கலச்சாரமென ஊறிப்போன இந்த மண்ணில் பலரது நம்பிக்கை சார்ந்த விசயங்களிலாவது அரசு தலையிடாமல் இருக்கலாம். ஒவ்வொரு விசயத்திற்கும் இன்னொரு மாற்று இருக்கத்தான் செய்கின்றன. அப்படி மாற்று திட்டம் இருக்கும் போதிலும் நெடுஞ்சாலைத்துறைக்கு அந்த மருதமரம் தான் ஒரேகுறியாக இருப்பதுதான் ஏனென்று புரியவில்லை.

- இரா.ச.இமலாதித்தன்