31 December 2016

ஆண்டின் முதல் நாள் உறுதிமொழி ஏதெனில்...

31 டிசம்பர் 2016க்கும், 01 ஜனவரி 2017க்கும் இடையே ஒரேவொரு நாள் மட்டுமே வித்தியாசம். மற்றபடி எந்தவித மாற்றமும் வந்துவிட போவதில்லை. நாம் நமக்குள்ளாகவே சிலவற்றை மாற்றிக்கொள்ளாத வரை எந்த மாற்றமும் நம்மை சுற்றி நடந்து விடாது. புத்தாண்டிலிருந்து ஏதாவதொரு கெட்டப்பழக்கத்தை விடப்போவதாக பலரும் சொல்லிக் கேள்விப்படுகிறோம். உண்மையில் எது கெட்டப்பழக்கம்?யென தெரிந்த பின்பே அந்த பழக்கம் நம்மோடு நிரந்தரமாக இருக்க வாய்ப்பில்லை. காரணம் மனதளவில் அது கெட்ட பழக்கமென ஆழமாக பதிந்த பிறகு, அந்த பழக்கம் படிப்படியாக நம்மை விட்டு விலகிவிடும். முதலில் எது கெட்ட பழக்கம்? எது நல்ல பழக்கம்? என்ற சுய மதிப்பீடு செய்து பார்த்தாலே போதுமானது. தனியாக அதற்கென நாள் குறித்து எதையும் விட்டொழிக்க வேண்டியதில்லை.

பெரும்பான்மையானவர்கள் கெட்டப்பழக்கம் என அவர்களுக்குள்ளாகவே கருதுவது, குடிபழக்கத்தையும் - புகை பழக்கத்தையும் தான். தெரிந்த தவறுகளுக்கு தீர்மானம் போட்டு திருத்த வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அவர்களால் விட்டொழிக்க முடியாமல் போனபின்பு தான் இப்படியெல்லாம் மெனக்கெட வேண்டிருக்கிறது. இப்படியான புகை/மது போன்ற உடல் நலத்திற்கு சம்பந்தப்பட்ட பழக்கத்தை விடுவதற்கு முன்னதாக, மனதளவிலான சில பழக்கங்களை உங்களின் ஆழ்மனதுக்குள் மாற்றிக்கொள்ளுங்கள். 'நான் என்ற ஈகோ - தனிப்பட்ட புகழ் பேசி கிடைக்கின்ற சுய பெருமை - தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு பொறாமை படுவது - இவற்றிற்கெல்லாம் பின்விளைவாக உருவாகின்ற அர்த்தமற்ற அதீத கோபம்' யென்ற இதுபோன்ற பழக்கங்களை விட்டொழித்து பாருங்கள். 2017 மட்டுமல்ல; ஒவ்வொரு புத்தாண்டும் மகிழ்வாகவே அமையும்.

- இரா.ச. இமலாதித்தன்

12 December 2016

தமிழ்நாட்டு அரசியலில் டெல்டாவின் ஆதிக்கம்!

கால்நூற்றாண்டு கால தமிழ்நாட்டு அரசியலின் கவனிக்கதக்க விசயங்களாக, தஞ்சாவூர் மற்றும் 'So Called' முக்குலத்தோர் என்ற இந்த இரண்டு மட்டுமே தோன்றுகிறது.

முதலில் தஞ்சாவூர்...

தமிழக அரசியலில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தை உள்ளடக்கிய டெல்டா பகுதியே மிக முக்கிய பங்காற்றி இருக்கிறது; பங்காற்றி கொண்டும் இருக்கிறது. திமுகவில் மு.கருணாநிதி, க.அன்பழகன், முரசொலிமாறன், கோ.சி.மணி, டி.ஆர்.பாலு எனவும்... அதிமுகவில் எம்.நடராஜன் குடும்ப உறுப்பினர்களெனவும் பலரது பங்களிப்பு உலகறிந்த விசயம். ஆளுங்கட்சி - எதிர்கட்சி என்ற எல்லா நிலைகளிலும் டெல்டாவை சார்ந்தவர்களின் பங்கு பெருமளவு இருந்து கொண்டே வந்திருக்கிறது.

அடுத்ததாக 'So Called' முக்குலத்தோர்...

தமிழகத்தில் பெரும்பான்மை சமூகங்களாக வன்னியர், கொங்கு வெள்ளாளர், பட்டியல் சாதியினர் இருந்த போதும் கூட கள்ளர் - மறவர் - அகமுடையார் உள்ளிட்ட 'So Called' முக்குலத்தோர் என்ற கூட்டமைப்பை சேர்ந்தவர்களே அரசியலில் அதிகளவுக்கு ஆளுமை செய்திருக்கிறார்கள். அது பரபரப்பான சூழலான இப்போதும் கூட தொடந்து கொண்டேதான் வருகிறது.

மூன்றாவதாக இடம் யாருக்கு?

அடுத்து தற்போதைய அரசியல் கட்சிகளின் வலிமை, அவர்களின் ஓட்டு சதவீதம், எத்தனையாவது இடம் என்ற நம்பர்களை பற்றியெல்லாம் ஒப்பிட்டு பார்த்தால், அதிமுக - திமுக - பாஜக என்ற நிலை வந்துவிட்டது. மேலும், தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக பாஜக தன்னை பிரகடனப்படுத்த தயாராகி விட்டதாகவே தோன்றுகிறது. சென்ற தேர்தலில் எதிர்கட்சியாக இருந்த தேமுதிக, தவறாம முடிவுகளால் வைகோவுடன் கூட்டணி வைத்து தங்களது சின்னத்தையே இழந்து தடுமாறி நிற்கிறது.

எதிர்கட்சியாக திமுக இல்லாத போது எதிர்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் செய்ய தவறிய அரசியலை, பாமக சரியாக செய்த போதும், தற்போதைய சூழலில் கடந்த கால சாதி முத்திரையை அன்புமணி ராமதாஸ் தலையெடுத்த பின்னால் ஓரளவுக்கு மறைய தொடங்கிருக்கிறது. அதன் நீட்சியாக 2021 தேர்தலில் பாமகவின் பங்கு முக்கியத்துவம் பெறக்கூடும். ஆனால் இப்போதைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கின்ற பாஜக, தென்னிந்திய அரசியலில் முழுமையாக களமிறங்க காத்துக்கொண்டே இருந்தது. கர்நாடகாவை தொடர்ந்து, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னால் தமிழகத்திலும் பாஜகவிற்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அரசியல் செண்டிமெண்ட்டில், 'So Called' முக்குலத்தோரும் - தஞ்சாவூரும்...

ஆட்சியமைக்கும் திராணியுள்ள திராவிட கட்சிகளில், திமுகவின் தலைமையானது ஒருங்கிணைந்த தஞ்சாவூர் காரர்களிடமே இருக்கிறது. அதுபோலவே, அதிமுகவின் தலைமையானது 'So Called' முக்குலத்தோர் + ஒருங்கிணைந்த தஞ்சாவூர் காரர்களிடமே இருக்கிறது. தேசிய கட்சிகளில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கட்சி மாறி வந்த திருநாவுக்கரசருக்கு கொடுத்திருக்கின்றனர். காரணம் 'So Called' முக்குலத்தோர் கோட்டாவில் அவர் மறவர். இந்த கணக்கீட்டின் படி பார்த்தால், மூன்றாவது கட்சியாக பரிமாணம் பெற்றுள்ள பாஜக, இந்த வாய்ப்பை நழுவ விடாமல், பாஜகவின் தலைமையை 'So Called' முக்குலத்தோருக்கு வழங்கலாம். அதுவே சரியான காய் நகர்த்தலாக இருக்க முடியும்.

இப்படியானதொரு தகுதியுள்ளவராக 'So Called' முக்குலத்தோராகவும், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் காரராகவும் உள்ள திரு. கருப்பு முருகானந்தம் அவர்களுக்கு பாஜகவின் தலைமை பொறுப்பை கொடுக்கலாம். மத்திய இணையச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கமானவராகவும், மாநில செயலாளர், மாநில பொது செயலாளர், மாநில துணைத்தலைவர் உள்ளிட்ட முக்கிய கட்சி பதவியில் இருந்த கருப்பு முருகானந்தம் அவர்களை, பாஜகவின் மாநில தலைவராக்கினால் தமிழக அரசியலில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

- இரா.ச.இமலாதித்தன்

08 December 2016

ஜெயலலிதா இறப்பிற்கு பிறகான அரசியல்!

ஜெயலலிதா இறப்பிற்கு பிறகான நாள்தோறும் அரங்கேறும் அரசியல் சதுரங்கங்களில் சில...

01. ஊடகங்களின் நம்பகத்தன்மை:

ஏற்கனவே தந்தி போன்ற காட்சி ஊடகங்களை பற்றி சொல்லவே வேண்டாம். பாண்டே, ஹரிகரன் போன்றோர் வாய் கூசாமல் யாராருக்கோ கூஜா தூக்குகிறார்கள். ஆனால் ஓரளவுக்கு அச்சு ஊடகங்களாவது நேர்மையாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான்காவது தூணும் துருபிடித்தே கிடக்கிறது. தி ஹிந்து போன்ற நாளிதழ் மீதான மதிப்பே கேள்விக்குறியாகிறது. நக்கீரன், ஜூவி, ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிக்கைகளில் வரும் அனுமானத்தின் அடிப்படையிலும், நேரில் பார்த்தது போலவே கற்பனையாக எழுதும் நாலாந்திர தகவல்களை அரை பக்கத்திற்கு வெளியிட்டு வருகிறார்கள்.

02. திராவிட அரசியல்வாதிகளின் நிலைப்பாடு:

கி.வீரமணி, வைகோ போன்றவர்களின் செயல்பாடுகளும், அறிக்கைகளும், சந்தேகம் கொள்ள வைக்கிறது. கட்சிக்காரர்களுக்கே இல்லாத அக்கறை இவர்களுக்கு எதற்கு? சொந்த கட்சியை வலுப்படுத்த வக்கில்லாதவர்கள், தன்னைவிட பலமடங்கு வலுவுள்ள கட்சிக்கு அறிவுரை வழங்குவதன் உள்நோக்கம் என்ன? என்பதும் புரியவில்லை.

03. சிகிச்சை பின்னணி:

அப்பல்லோவை மட்டும் குறை சொல்லும் யாருமே, எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகை பற்றி வாயையே திறப்பதில்லை. அப்பல்லோ, எய்ம்ஸ், லண்டன் மருத்துவர் பீலே என அனைவரையும் கட்டுப்படுத்தும் அதிகார மையம் யாரென்றே தெரியவில்லை. அதிமுகவுக்கோ, ஜெயலலிதாவுக்கோ தொடர்பில்லாத கெளதமி கூட பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதும் அளவிற்கு முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறார். இது போன்ற நடிகைக்கு வந்த அக்கறை கூட சம்பந்தபட்டவர்களுக்கு இல்லை என்பதும் குழப்பத்தை வலுப்படுத்துகிறது.

04. நிரந்தர பொது செயலாளர் என்று சொன்னதன் மர்மம்:

இத்தனை நாட்களாக ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை நிரந்தரமான பதவியாக ஜெயலலிதாவின் விருப்பத்தோடு மாற்றியமைக்கப்பட்ட தலைவர், பொதுசெயலாளர் பதவிக்கு இப்போது ஏன் இவ்வளவு போட்டி? இத்தனை வருடங்களாக அதிமுகவின் நிரந்தர தலைவர் எம்.ஜி.ஆர். என்பதும், அதிமுகவின் நிரந்தர பொதுசெயலாளர் ஜெயலலிதா என்றுதானே இருந்தது. ஆனால் ஜெயலலிதா இறந்தபின்னால் அந்த பதவிக்கு பலர் போட்டி போடுவதன் மர்மம் என்னவாக இருக்க முடியும்? வெறும் பதவி சுகம் மட்டும் காரணமென நினைத்து எளிதாக கடந்து செல்ல முடியவில்லை.

05. சசிகலா நடராஜன்:

போயஸ்கார்டனிலிருந்து ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ததாக சொல்லி சசிகலா உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமே வெளியேற்றப்பட்ட பிறகு, மன்னிப்பு கடிதத்தில் சொன்னவற்றை சசிகலா மறந்து விட்டாரா? "இனி என் குடும்பத்தோடு உறவே வைக்க மாட்டேன்; எனக்கு எந்த பதவியும் வேண்டாம்; உங்கள் தங்கையாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்;" என்று சொன்னது உண்மையெனில் இப்போது ஏன் அந்த வாக்குறுதியை மீறினார்.

இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான்.

அதிமுகவை உருவாக்கியது எம்.ஜி.ஆர்; அவரே தான் ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வந்தார். கொள்கை பரப்பு செயலாளர் என்ற பதவியையும் புதிதாக உருவாக்கி, அதற்கென தனியறையையும் ஏற்படுத்தி ஜெயலலிதாவுக்கு கொடுத்தார். எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஜெ அணி - ஜா அணியென பிரிவினை வந்தபோது, அடுத்த தலைமையாக ஜெயலலிதாவை மக்களும் தொண்டர்களும் ஏற்றனர். ஜெயலலிதாவை புரட்சி தலைவியாக உருவாக்கியது தொண்டர்கள் தானே தவிர, நடராஜனும் - திருநாவுக்கரசும் அல்ல என்ற எதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த எதார்த்தத்தை கூட புரிந்து கொள்ள முடியவில்லையென்றால் இழப்பு அஇஅதிமுக என்ற கட்சிக்கு இல்லை; அந்த கட்சியின் மூலம் ஆதாயம் அடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் தான்!

- இரா.ச. இமலாதித்தன்