08 டிசம்பர் 2016

ஜெயலலிதா இறப்பிற்கு பிறகான அரசியல்!

ஜெயலலிதா இறப்பிற்கு பிறகான நாள்தோறும் அரங்கேறும் அரசியல் சதுரங்கங்களில் சில...

01. ஊடகங்களின் நம்பகத்தன்மை:

ஏற்கனவே தந்தி போன்ற காட்சி ஊடகங்களை பற்றி சொல்லவே வேண்டாம். பாண்டே, ஹரிகரன் போன்றோர் வாய் கூசாமல் யாராருக்கோ கூஜா தூக்குகிறார்கள். ஆனால் ஓரளவுக்கு அச்சு ஊடகங்களாவது நேர்மையாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான்காவது தூணும் துருபிடித்தே கிடக்கிறது. தி ஹிந்து போன்ற நாளிதழ் மீதான மதிப்பே கேள்விக்குறியாகிறது. நக்கீரன், ஜூவி, ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிக்கைகளில் வரும் அனுமானத்தின் அடிப்படையிலும், நேரில் பார்த்தது போலவே கற்பனையாக எழுதும் நாலாந்திர தகவல்களை அரை பக்கத்திற்கு வெளியிட்டு வருகிறார்கள்.

02. திராவிட அரசியல்வாதிகளின் நிலைப்பாடு:

கி.வீரமணி, வைகோ போன்றவர்களின் செயல்பாடுகளும், அறிக்கைகளும், சந்தேகம் கொள்ள வைக்கிறது. கட்சிக்காரர்களுக்கே இல்லாத அக்கறை இவர்களுக்கு எதற்கு? சொந்த கட்சியை வலுப்படுத்த வக்கில்லாதவர்கள், தன்னைவிட பலமடங்கு வலுவுள்ள கட்சிக்கு அறிவுரை வழங்குவதன் உள்நோக்கம் என்ன? என்பதும் புரியவில்லை.

03. சிகிச்சை பின்னணி:

அப்பல்லோவை மட்டும் குறை சொல்லும் யாருமே, எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகை பற்றி வாயையே திறப்பதில்லை. அப்பல்லோ, எய்ம்ஸ், லண்டன் மருத்துவர் பீலே என அனைவரையும் கட்டுப்படுத்தும் அதிகார மையம் யாரென்றே தெரியவில்லை. அதிமுகவுக்கோ, ஜெயலலிதாவுக்கோ தொடர்பில்லாத கெளதமி கூட பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதும் அளவிற்கு முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறார். இது போன்ற நடிகைக்கு வந்த அக்கறை கூட சம்பந்தபட்டவர்களுக்கு இல்லை என்பதும் குழப்பத்தை வலுப்படுத்துகிறது.

04. நிரந்தர பொது செயலாளர் என்று சொன்னதன் மர்மம்:

இத்தனை நாட்களாக ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை நிரந்தரமான பதவியாக ஜெயலலிதாவின் விருப்பத்தோடு மாற்றியமைக்கப்பட்ட தலைவர், பொதுசெயலாளர் பதவிக்கு இப்போது ஏன் இவ்வளவு போட்டி? இத்தனை வருடங்களாக அதிமுகவின் நிரந்தர தலைவர் எம்.ஜி.ஆர். என்பதும், அதிமுகவின் நிரந்தர பொதுசெயலாளர் ஜெயலலிதா என்றுதானே இருந்தது. ஆனால் ஜெயலலிதா இறந்தபின்னால் அந்த பதவிக்கு பலர் போட்டி போடுவதன் மர்மம் என்னவாக இருக்க முடியும்? வெறும் பதவி சுகம் மட்டும் காரணமென நினைத்து எளிதாக கடந்து செல்ல முடியவில்லை.

05. சசிகலா நடராஜன்:

போயஸ்கார்டனிலிருந்து ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ததாக சொல்லி சசிகலா உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமே வெளியேற்றப்பட்ட பிறகு, மன்னிப்பு கடிதத்தில் சொன்னவற்றை சசிகலா மறந்து விட்டாரா? "இனி என் குடும்பத்தோடு உறவே வைக்க மாட்டேன்; எனக்கு எந்த பதவியும் வேண்டாம்; உங்கள் தங்கையாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்;" என்று சொன்னது உண்மையெனில் இப்போது ஏன் அந்த வாக்குறுதியை மீறினார்.

இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான்.

அதிமுகவை உருவாக்கியது எம்.ஜி.ஆர்; அவரே தான் ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வந்தார். கொள்கை பரப்பு செயலாளர் என்ற பதவியையும் புதிதாக உருவாக்கி, அதற்கென தனியறையையும் ஏற்படுத்தி ஜெயலலிதாவுக்கு கொடுத்தார். எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஜெ அணி - ஜா அணியென பிரிவினை வந்தபோது, அடுத்த தலைமையாக ஜெயலலிதாவை மக்களும் தொண்டர்களும் ஏற்றனர். ஜெயலலிதாவை புரட்சி தலைவியாக உருவாக்கியது தொண்டர்கள் தானே தவிர, நடராஜனும் - திருநாவுக்கரசும் அல்ல என்ற எதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த எதார்த்தத்தை கூட புரிந்து கொள்ள முடியவில்லையென்றால் இழப்பு அஇஅதிமுக என்ற கட்சிக்கு இல்லை; அந்த கட்சியின் மூலம் ஆதாயம் அடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் தான்!

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக