சேர்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேர்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 செப்டம்பர் 2017

அகமுடையாருக்கு பட்டம் தான் முக்கியமா?





முக்குலத்தோர் என்றோ முதலியார் என்றோ எந்தவொரு சாதியும் இல்லாத போது, முப்பது வருடங்களுக்கும் மேலாக அதை மட்டுமே வைத்து அரசியலுக்காக பகடைக்காய் ஆக்கப்பட்டிருந்த அகமுடையார்களெல்லாம், எப்போது இந்த பட்டங்களை கடந்து அகமுடையார்களாக ஒன்றிணைவார்களென உண்மை உணர்ந்த உணர்வாளர்கள் பலரும் ஏங்கிய நாட்கள் உண்டு. இது எவ்வளவு கடினமானது என்ற எதார்த்தத்தை அறிந்து எத்தனையோ பேர் 'அகமுடையார்' என்ற ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தி வெவ்வேறு வழிகளில் அந்த இலக்கை அடையும் நேரத்தில் சிலர் செய்யும் குழப்பங்கள் கோபத்தை மட்டுமே வர வைக்கிறது.


என்னளவில் எனக்கு தந்தை வழியில் தேவர் பட்டம்; தாய் வழியில் பிள்ளை பட்டம். இந்த இரு பட்டங்களை மட்டுமே எல்லா இடங்களிலும் தூக்கி கொண்டிருந்தால் அகமுடையார் என்ற அடையாளத்தோடு எல்லாவற்றிலும் இயங்க முடியாது. ஆனால் இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், தன் சுயபெருமை பேசுவதற்காக மட்டுமே தனிப்பட்ட பட்டங்களை முன்னிறுத்தி அகமுடையார் என்ற எழுச்சியை சிலர் பாழாக்கி கொண்டிருக்கிறார்கள்.

வெண்ணெய் நிரம்பும் நேரத்தில் பானையை உடைத்த கதை போல சிலர் செய்யும் செய்கைகளால், இனி அகமுடையார் சார்ந்த அனைத்து பதிவுகளிலும் தேவன்டா என்றோ, தேவர் என்ற என் பட்டத்தையோ கீழே பதியலாமென இருக்கிறேன். சொந்த வரலாற்றையும் தேடத்தெரியாது. அகமுடையார் யாரென்ற வரலாறும் தெரியாது. தற்போதைய தேவை எதுவென்றும் தெரியாது. ஒற்றுமைக்கான வழியும் தெரியாது. ஆனால், சாதிப்பெயரான அகமுடையார் என்பதை கூட சொல்லிக்கொள்ள வெட்கப்பட்டுக்கொண்டு பட்டத்தை மட்டுமே தூக்கி சுமக்கும் இந்த கூட்டத்தை நம்பி ஒரு மயிரையும் பிடுங்க முடியாது.

- இரா.ச. இமலாதித்தன் தேவர்

#Mukkulathor #Mudaliar #Thevar #Agamudayar


பட்டத்தை மட்டுமே தூக்கி பிடிக்கும் அகமுடையார்கள், இந்த பறையர் இனக்குழுவை சேர்ந்த ஒருவரின் பதிவுக்கு பதில் சொன்னால் மகிழ்ச்சி. போற போக்கை பார்த்தால், அகமுடையார் என்ற இனக்குழுவே வரலாற்றில் இல்லைன்னு சொல்லிடுவாய்ங்க போல.

கோட்டைப்பற்று தேவன்டா! :)

(லிங் கீழே கமென்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.)

16 ஜூன் 2017

யார் அகமுடையார் என தீர்மானிப்பது யார்?



ஊருக்கொரு சங்கம் வைத்திருக்கும் மேன்மை பொருந்திய அகமுடையார் பெரியோர்களுக்கு, தன் இனக்குழுவிற்கான பட்டங்களை பற்றிய அடிப்படை அறிவே அறவே இல்லாமல் இருக்கிறது. தேவர் என்பதோ, சேர்வை என்பதோ, பிள்ளை என்பதோ சாதி அல்ல. அவையெல்லாம் வெறும் பட்டம் மட்டுமே. இவற்றுள், தேவர் என்ற பட்டம் மூன்று சாதிகளுக்கு உண்டு; அதுபோல, சேர்வை என்ற பட்டம் எட்டு சாதிகளுக்கு உண்டு; இந்த வரிசையில் பிள்ளை என்ற பட்டமோ எழுபதுக்கும் மேற்பட்ட சாதிகளுக்கு உண்டு. ஒரே மாதிரியான பட்டங்களை மட்டும் வைத்து, ஒரு இனக்குழுவை ஒன்றாக்கி விட முடியாது.

ஒரு காலத்தில், சேர்வை பட்டம் உள்ளவர்களே அகமுடையார் என தென்னக உறவுகளில் சிலர் நினைத்து கொண்டிருந்தனர்; அதே காலத்தில் டெல்டா உறவுகளில் சிலரோ, தேவர் என்ற பட்டமுள்ளவர்களே அகமுடையார் என நினைத்திருந்தனர். கொங்கு பகுதிகளிலும், அகமுடையார்களுக்கு தேவர் பட்டமே என்பதால், கொங்கு - தெற்கு - டெல்டா என ஒரே இனக்குழு என்ற உண்மையை உணரத்தொடங்கினர். காலம் எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை கொண்டது என்பதற்கிணங்க டெல்டா - தெற்கு என பிரிவினையில்லாமல் பட்டங்களை கடந்து, இன்று அனைவரும் அகமுடையாராக ஒன்றிணைந்து இருக்கின்றனர்.

அதுபோன்றதொரு சூழல் தற்போதும், அகமுடையார்களுக்குள் கொஞ்சம் இடைவெளியை ஏற்படுத்தி வருகிறது. வட மாவட்டங்களிலுள்ள அகமுடையார்களுக்கு முதலியார் - உடையார் - பிள்ளை பட்டங்களே பெரும்பான்மையாக உள்ளது. முதலியார் என்பதால் செங்குந்தர் என்பதாகவும், உடையார் என்பதால் பார்கவகுலம் என்பதாகவும், பிள்ளை என்பதால் வெள்ளாளர் என்பதாகவும் சிலர் குழப்பமடைகின்றனர். இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில், தேவர் பட்டம் உள்ளதால் அகமுடையாரும் - கள்ளரும் ஒன்றென சொல்ல முடியாது; சேர்வை பட்டம் இருப்பதால் வலையரும் - அகமுடையாரும் ஒன்றென சொல்ல முடியாது; பிள்ளை பட்டத்தை பற்றி சொல்லவே வேண்டாம், அது பலதரப்பட்டவர்களுக்கும் அந்த பட்டம் உண்டு. அதுபோலவே முதலியார் பட்டமும், உடையார் பட்டமும், பிள்ளை பட்டமும் அகமுடையாருக்கு உண்டு என்பதையும், அந்த பட்டத்தை மட்டுமே காரணம் சொல்லி, மற்ற இனக்குழுக்களோடு வடக்கத்திய அகமுடையாரை பிரித்து விட முடியாது என்ற உண்மை நிலையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

தென்னகத்தில் 'சேர்வார் / சேர்வை' என்றால் அது அகமுடையாரை மட்டுமே குறிப்பது போல், டெல்டாவில் 'தேவர்' என்றால் அது அகமுடையாரை மட்டுமே குறிப்பது போல், வடக்கத்திய பகுதிகளில் 'முதலியார் /உடையார்' என்றால் அது அகமுடையாரையே குறிக்கும் என்ற எதார்த்தத்ததையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதிரியான உண்மை கள நிலவரங்களை பற்றி தெரியாததாலும், சாதி பட்டங்களை பற்றிய அடிப்படை அறிவில்லாததாலும், அகமுடையார் சங்கத்தின் தலைமை பொறுப்பிலுள்ளவர்களே, பட்டங்களால் அகமுடையாரை பிரிக்க முயல்கின்றனர். தகவல் தொடர்பு ஊடகங்கள் சூழ்ந்த இக்காலத்திலும் கூட, பொறுப்பில் உள்ளவர்கள் அகமுடையார் இனக்குழு பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருப்பது வேதனையான விசயம்.

சென்னையை தலைமையிடமாக கொண்ட 'அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம்' ஆண்டு தோறும் அதிக மதிப்பெண் பெற்ற அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த 10 / +2 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. ஆனால் அதற்கான அடிப்படை தகுதியாக 'முக்குலதோர் - அகமுடையார் மட்டும்' என்ற அளவீடும் வைத்திருக்கின்றனர். இந்த லாஜிக்கே புரியவில்லை. போலியான அரசியல் கூட்டமைப்பான 'முக்குலம்' என்ற இல்லாத ஒன்றை அகமுடையாருக்கான அளவீடாக வைப்பது எவ்வகையில் நியாயம்?

திருவண்ணாமலை பகுதியிலுள்ள அகமுடையார் இனக்குழு சேர்ந்த சகோதரி இந்தாண்டு +2ல் 1136 மதிப்பெண் பெற்றிருக்கிறார். பொருளாதார சூழ்நிலையால் மேற்படிப்புக்காக சிரமப்படுவதால், அங்குள்ள உறவினரின் ஒத்துழைப்போடு சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்திற்கு, கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். சங்கத்தை சேர்ந்தவர்களோ, வடக்கிலுள்ள அகமுடையார்கள் வேறு; முக்குலத்தோர் அகமுடையார் வேறு என்று, அரிய கண்டுபிடிப்பாக புது(?) வரலாறை சொல்லி விண்ணப்பத்தை மறுத்திருக்கின்றனர். இந்த மாதிரியான கூத்தையெல்லாம் கண்டு, சிரிப்பதா? கோபப்படுவதா?

ஒரு பக்கம், முக்குலத்தோர் என பேசும் மறவர் தலைமையிலான அமைப்புகளும், கள்ளர் தலைமையிலான அமைப்புகளும் கூட திருண்ணாமலை போன்ற வட மாவட்டங்களில், முதலியார் - உடையார் பட்டம் கொண்ட அகமுடையார்களை ஒன்று திரட்டி மாநாடு கூட்டம் நடத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம், தென்னகத்தை சேர்ந்த அகமுடையார் அமைப்புகளும், வடக்கிலுள்ள அகமுடையார் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் வலுவான கட்டமைப்பை உருவாக்கி அகமுடையார் இனக்குழுவின் ஒற்றுமையை ஒருங்கிணைக்கும் வேளையில், அறியாமையில் இருக்கும் அகமுடையாரின பெரியோர்களின் இதுபோன்ற செயல்கள் மனவருத்தத்தை கொடுக்கிறது.

தன் இனக்குழு பற்றிய வரலாற்று உண்மைகள், தெரிந்தால் பேசலாம்; தெரியவில்லை என்றால் அமைதி காக்கலாம். அரைகுறையாக தெரிந்து கொண்டு குழப்பும் (சங்கம் / அமைப்பு / இயக்கம்) பதவியிலுள்ள பெரியோர்கள், கொஞ்சம் தன் இனக்குழு சார்ந்த வரலாற்றை கொஞ்சம் அறிந்து கொள்ள முற்படுங்கள். அதன் பிறகு, தலைவராகவும் - செயலாளராகவும் - பொறுப்பாளராகவும் - அமைப்பாளராகவும் பதவியை அலங்கரியுங்கள்.

- இரா.ச. இமலாதித்தன்

#அகமுடையார் #தேவர் #சேர்வை #முதலியார் #உடையார் #பிள்ளை #Agamudayar

01 செப்டம்பர் 2016

'சேர்வை ப.அரங்கசாமி முதலியார்'



('சேர்வை ப.அரங்கசாமி முதலியார்' இடம்: வேலூர்.)

அகமுடையார்களின் பட்டங்களான சேர்வையும், முதலியாரும் ஒரே பெயருக்குள்ளாகவே முன்னும்பின்னுமாக ஒன்றாகி போனதற்கான ஒரு சின்ன எடுத்துக்காட்டு இது. சேர்வை, தேவர், முதலியார், பிள்ளை, உடையார், நாயக்கர் என்று வட்டாரங்களுக்கேற்ப வெவ்வேறான பட்டங்களால் அறியப்பட்டாலும், இனக்குழுவாக #அகமுடையார் என்ற ஒற்றை அடையாளமாய் ஒன்றிணைந்தது தான் நிகழ்கால சாதனை. இதுவே வருங்காலத்திற்கான நிகழ்கால வரலாறு.

பட உதவி: விமல் உடையார், செல்வராஜ சோழன்

16 ஏப்ரல் 2016

அகமுடையார்!

சேர்வை பட்டம் 8 சாதிகளுக்கு உண்டு; பிள்ளை பட்டம் 80 சாதிகளுக்கு மேல் உண்டு; தேவர் பட்டம் 3 சாதிகளுக்கு உண்டு; முதலியார் பட்டம் 2 சாதிகளுக்கு உண்டு; இந்த அத்தனை பட்டங்களும் அகமுடையாருக்கு உண்டு. இந்த அடிப்படை வரலாற்று அறிவே துளியும் இல்லாமல், 'யாரெல்லாம் அகமுடையார்?' என வரையறுக்கும் சிலருக்கு பதில் அளிக்காமலே விலகி விடலாமென தோன்றுகிறது. ஆனால் பதில் நம்மிடம் இல்லையென அவர்கள் நினைத்து விட கூடாதென்பதாலும், அவர்களின் கருத்து தான் சரியென தவறாக புரிந்து கொண்டுவிட கூடாதென்பதாலும் தான் சில இடங்களில் பதில் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.

முழுமையான வரலாறே தெரியாமல் அகமுடையார் யார் என சொல்ல யாருக்குமே அறுகதை இல்லை. அரசியல் ஆதாயத்திற்காகவும், தங்களது சுய தேவைக்காகவும் சாதியை வரையறை செய்யும் சிலரால் தான், ஒட்டுமொத்த வரலாறும் பாழாகிறது. அகமுடையாருக்கு பட்டங்கள் பலவாகினும், சாதி ஒன்றுதான். அடியேன், தேவர் பட்டமுள்ள அகமுடையார் சாதியை சேர்ந்தவன் என்பதையும், தேவர் என்று ஒரு சாதியே இல்லை என்பதையும், சிலருக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.

- இரா.ச. இமலாதித்தன்

25 மார்ச் 2016

அறவழி வந்தோர் அகமுடையார்!



எனக்கு தெரிந்து நான் இதுவரையிலும் நூறுக்கும் மேற்பட்ட பழம்பெரும் சிவன் கோவில்கள் தரிசித்து இருக்கிறேன். தஞ்சை சுற்று வட்டார பகுதிகளில் நான் பல கோவில்களில் 'சேர்வை' என்ற பட்டத்தோடும், பல பெயர்களோடு பின்னிணைப்பாக 'சேர்வை' பட்டம் போட்டுள்ள பலரது பெயர்களையும் கல்வெட்டில் பார்த்திருக்கிறேன். இது பற்றிய மேலதிக ஆய்வு செய்தால் அகமுடையாரின் ஆன்மீக பணியின் முக்கியத்துவம் புரியவரும்.
அறவழி வந்தோர் அகமுடையார்!

படம்: நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், திருத்தேவூர் மாடக்கோவில்.

02 பிப்ரவரி 2016

அகமுடையாரும் தமிழும்!


ஓம் என்ற பிரணவ மந்திரத்தில் அகரம் - உகரம் - மகரம் என்ற இந்த மூன்றும் அடங்கியுள்ளது.

இதே போல, சேர்வை - முதலியார் - தேவர் என்ற முப்பெரும் பட்டங்களோடு சேர்த்து பல்வேறு பட்டங்களால் அடையாளப்படும் தனிப்பெரும் தமிழ்குடியான அகமுடையார் என்பதற்குள்ளும், அகரம் - உகரம் - மகரம் அடங்கியுள்ளது.

‪#‎அகமுடையார்‬

25 ஜனவரி 2016

நேதாஜி சிலையும் - அகமுடையாரும்!




மருதுசீமையான சிவகங்கையில் பல எதிர்ப்புகளுக்கும் - இடையூறுகளுக்கும் - அச்சுறுத்தலுக்கும் அசராமல், உலகிலேயே முதன்முறையாக நேதாஜி உயிரோடு இருக்கும் போதே, அவருக்கு சிலை வைத்த பெரும்புகழ் அகமுடையார் குலத்தோன்றல் ஐயா கே.சுந்தராஜன் சேர்வையையே சேரும். இன்று உலகெங்கிலும் ஊருக்கொன்றும் கூட நேதாஜியின் சிலையை திறக்கலாம்; ஆனால் அன்றைய காலச்சூழல் என்பது முற்றிலும் வேறு; அப்படியானதொரு காலவெளியான 1944 யில் இந்திய தேசிய இராணுவம் மணிப்பூரில் இம்பால் வழியாக இந்தியாவில் நுழைந்ததன் வெற்றியைக் குறிப்பதற்காக, நேதாஜியின் சிலை சுதந்திரமடைவதற்கு முன்பாகவே சிவகங்கையில் நிறுவப்பட்டது. 1946யில் நேதாஜி பிறந்தநாளான ஜனவரி 23ம் தேதியன்று அவரது சிலையை கம்பீரத்தோடு திறந்து வைத்தார் கே.சுந்தர்ராஜன் சேர்வை!


நேதாஜி கட்டமைத்த தேசிய இராணுவத்தில் பணியாற்றிய எங்கள் பெரிய தாத்தாவான அ.பக்கிரிசாமித்தேவரின் பிறந்தநாள் எதுவென தெரியாது; ஆனாலும், தமிழ் தேசிய தலைவர் அண்ணன் வே.பிரபாகரனின் வழிகாட்டியான நேதாஜியின் பிறந்தநாளில், வீரமிகு அ.பக்கிரிசாமித்தேவரையும், வீரமிகு கே.சுந்தர்ராஜன் சேர்வையையும் அவர்களது பேரனாக நினைவுகூர்வதில் பெருமகிழ்ச்சி.

தேச தந்தைக்கு புகழ் வணக்கம்!

- இரா.ச. இமலாதித்தன்

#நேதாஜி #சுந்தர்ராஜன்சேர்வை #அகமுடையார்

12 ஜனவரி 2016

அகமுடையார் அரசியல்!

அகமுடையார் சாதியிலுள்ள வாக்காளர்களுக்கு தற்போதைய அரசியல் சூழலை ஆழமாக உணரும் பக்குவம் இருந்தால், நிச்சயமாக ஜெயலலிதாவுக்கு சொம்பு தூக்க மாட்டார்கள். அதிமுகவை வரும் தேர்தலில் புறக்கணிப்பார்கள்.

என் ஓட்டு, இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு எதிராகவே இருக்கும். இந்த விசயத்தில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை விட, முதலில் யாரை புறக்கணிக்கணும் என்பதில் ஒரு தெளிவு இருக்கணும்.

அகமுடையார் ஓட்டு அந்நியருக்கும் இல்லை!
அகமுடையார் ஓட்டு அதிமுகவும் இல்லை!

#

முதலியார் - சேர்வை - தேவர் - உடையார் - பிள்ளை - வாணாதிராயர்- மணியக்காரர் - பல்லவராயர் - நாட்டார் - நாயக்கர் - அம்பலம் - தந்துடையார் - அதிகாரி - தேசிகர் உள்ளிட்ட பல பட்டங்களை கொண்ட "அகமுடையார்" தமிழ்க்குடியானது தமிழகமெங்கும் பூர்வகுடிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.
ஒரே பட்டம் பல சாதிகளுக்கும் இருப்பதால் தான், இங்குள்ள பல சாதிகளுக்குள் நிறைய குழப்பம் ஏற்படுகிறது. ஆனால் சாதி சான்றிதழ் வாயிலாகவும், வரலாற்றின் வாயிலாகவும், பல பட்டங்களை கொண்ட "அகமுடையார்" சாதியானது, ஒரே மரபு வழி வந்தவர்களே என்பது நிரூபணம் செய்யப்பட்ட ஒன்று.
(பட்டம் : தேவர், பிரிவு : பதினெட்டு கோட்டைப்பற்று நாடு, சாதி : அகமுடையார்)
அகமுடையார்களாக ஒன்றிணைவோம்!
- இரா.ச.இமலாதித்தன்.

18 செப்டம்பர் 2015

சொல்றவன் இல்ல; செய்றவன் தான் சேர்வை!

"சொல்றவன் இல்ல; செய்றவன் தான் சேர்வை!" - ஐவராட்டம் படத்தில் வரும் பஞ்ச்.

செஞ்சிட்டாய்ங்க...


                                                  படம்: பயமறியான் பாலா சேர்வை

13 ஜூன் 2015

அம்மா உணவகத்தின் முன்னோடி ராமு சேர்வை!

அரசியல் விளம்பரத்திற்காக திறக்கப்பட்ட 'அம்மா உணவக'த்திற்கு முன்னோடியாக, விளம்பரம் ஏதுமின்றி 'வள்ளி ஹோட்டல்' என்ற பெயரில் மதுரையில் கடந்த 48 ஆண்டுகளாக குறைந்த விலையில் உணவளித்து சேவை செய்து வந்த திரு.இராமு சேர்வையின் மனைவியான பூர்ணத்தம்மாள் உடல்நலக்குறைவால் இரு நாட்களுக்கு முன்பாக இயற்கை எய்தினார்.
சொல்றவன் இல்ல; செய்றவன் தான் சேர்வை!

11 ஜூன் 2015

தமிழகத்தில் அகமுடையார் ஒரு பார்வை

"வீட்டுக்கு ஓர் அவரைக்கொடியும், நாட்டுக்கு ஓர் அகமுடையார் குடியும் போதும்!" - முதுமொழி

வீட்டில் அவரைச்செடி விரிந்து படர்ந்து வளருமோ அதுபோலவே அகமுடையார் குடியும் நாடெங்கும் செறிந்து பெரும்பான்மையாக வாழ்வார்கள் என்று பொருள் படுகிறது. உண்மையாகவே தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அகமுடையார் இனக்குழு பூர்வகுடியாகவே இருக்கின்றது. தென் தமிழகம், டெல்டா, வடதமிழகம் என அனைத்து இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

Surnames:-

வட (பல்லவம்)தமிழகம்: முதலியார், பிள்ளை, உடையார்.
திருச்சியை உள்ளிட்ட (சோழம்) டெல்டா: தேவர், பிள்ளை, தேசிகர், பல்லவராயர்.
தென் (பாண்டியம்) தமிழகம்: சேர்வை, தேவர், பிள்ளை, மணியக்காரர், அதிகாரி.
கொங்கு மண்டலத்தில் அகமுடையார் அனைவருக்கும் பெரும்பான்மையாக தேவர் பட்டமே.

உடையார், பிள்ளை, நாயக்கர், பல்லவராயர், வானவராயன், வல்லவராயன், நாட்டார், மணியக்காரர், தேசிகர், அதிகாரி என 'அகமுடையார்' இனக்குழுவுக்கு தமிழகமெங்கும் பலப் பட்டப்பெயர்கள் (SurNames) இருந்தாலும், சேர்வை, முதலியார், தேவர் என்ற இந்த முப்பெரும் பட்டங்கள் தான் பெரும்பான்மையாக இருக்கின்றது.

திருவண்ணாமலை, வேலூர் போன்ற பகுதிகளில் வீதிகளுக்கே உதாரணத்திற்கு ”சேர்வை மாணிக்க முதலியார் தெரு” என்று பல இருக்கின்றன. பல்லவராயர் பட்டப்பெயர்களோடு திருச்சி திருவெறும்பூருக்கு அருகிலுள்ள சுற்று வட்டார பகுதிகளில் அகமுடையார்கள் வசிக்கின்றனர். நாகையின் கல்வி தந்தை வலிவலம் தேசிகர் பெயரிலேயே கல்வி நிறுவனங்கள் உண்டு. நாட்டார் பட்டம், பேராவூரணி பட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ”புண்ணியரசு நாட்டு” அகமுடையார்களுக்கு உண்டு.

திமுகவின் முன்னாள் அமைச்சரான திரு பொன்முடியின் பட்டமும் உடையார் தான். திருக்கோவிலூர் என்ற நடுநாட்டை சுற்றியுள்ள அகமுடையார்களுக்கு உடையார் பட்டம் பெருமளவுக்கு உண்டு. காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு கே.வி.தங்கபாலுவின் பட்டமும் கூட அகமுடைய நாயக்கர் தான். தஞ்சைக்கு அருகிலுள்ள கரந்தை தமிழ்வேள் உமாமகேசுவரன் பிள்ளை மட்டும் இல்லையென்றால் இன்றைக்கு அகமுடையார் அனைவரும் ஃபார்வேர்ட் கம்யூனியிட்டிலேயே இருந்திருப்போம். அவரின் முயற்சியால் தான் இன்று அகமுடையார்கள் பிசி பட்டியலில் இருக்கின்றனர். இல்லையென்றால் இந்நேரம் பார்பனர்களோடு முட்டி மோதி கொண்டிருந்திருக்க வேண்டும். பட்டங்கள் இங்கு பல உண்டு. ஆனால் அனைவரும் அகமுடையார் என்ற புரிதலும் வேண்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

பட்டம்: தேவர்
பிரிவு: பதினெட்டு கோட்டை பற்று
இனக்குழு: அகமுடையார்

14 மார்ச் 2015

ஐவராட்டம் - விமர்சனம்!



சிவகங்கையும், ஐவர் ஆடும் கால்பந்தாட்டமும் தான் கதைக்களம். சீனியர் - ஜூனியர் விளையாட்டு வீரர்களுக்கிடையில் ஊருக்கு பொதுவான கால்பந்தாட்ட மைதானத்தை யார் பயன்படுத்துவது என்பதற்கான ஈகோவுடன் கூடிய போட்டி, இரு அணிகளுக்கு இடையே பந்தயமாகிறது. இரு அணிகளுக்கு இடையேயான பந்தயத்தில் தோற்பவர்கள் அந்த மைதானத்தை பயன்படுத்த கூடாது என்ற இலக்குடன் களமிறுங்கி, கடைசியில் ஜூனியர் அணி தோல்வியை தழுவுகிறது.

மாவட்ட அளவிலான பந்தயத்தில் கடந்த இரு வருடங்களாக கோப்பையை சீனியர் அணியே கைப்பற்றிய நிலையில், அந்த வெற்றிக்கு காரணமான பயிற்சாளர் ஜெயபிரகாஷின் இரண்டாவது தம்பி வேற்று சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு புறக்கணிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக வேறொரு பயிற்சியாளரை வைத்து களம் காண்கிறது ஜெயபிரகாஷுடைய முதல் தம்பியின் சீனியர் அணி. மற்றொரு அணியான ஜூனியர் அணிக்கு தானாக முன் வந்து பயிற்சி அளிக்கிறார் மாஜி பயிற்சியாளர். ஜூனியர் - சீனியர் என்ற அண்ணன் தம்பிகளுக்குள் நடக்கும் ஆட்டத்தில் வெற்றி யாருக்கு என்பது தான் படத்தின் க்ளைமேக்ஸ். படத்தில் காதலுக்கும் பஞ்சமில்லை. மெல்லிய இழை போல காதலும் ஐவராட்டத்தில் நம் மனதை ஆட்கொள்கிறது. ஹிரோயின் நித்யா ஷெட்டி அப்படியே பார்ப்பதற்கு, சுப்ரமணியபுரம் ஹிரோயின் சுவாதி போலவே இருக்கிறார். படத்தில் காதல் மட்டுமல்ல, நித்யாவும் அழகு தான்.

ஐவராட்டத்தில் ’பசங்க’ சிவக்குமாரின் இரு மகன்களாக, ஜெயப்ரகாஷின் உண்மையான இரு மகன்களும் (நிரஞ்சன், துஷ்யந்த்) நடித்துள்ளனர் என்பது சிறப்பம்சம். ஐவராட்டம் என்பது ஐவர் கால் பந்தாட்டம் மட்டுமின்றி, ஜெயப்ரகாஷ் மற்றும் அவரது இரு தம்பிகள் அடுத்து ஜெயப்ரகாஷின் நிஜ மகன்கள் இருவர் உள்ளிட்ட இந்த ஐவரின் ஆட்டம் தான் இந்த படமே. முதல்பாதி மிக விரைவாக முடிவடைவதை இடைவேளை வரும்போது தான் புரிந்து கொள்ள முடிகிறது. இரண்டாம் பாதி கால்பந்தாட்ட போட்டிகளுக்குள், சென்னை 600028 போல தீவிரமாக பயணித்து படமும் வேகமாக க்ளைமேக்ஸை நெருங்குகிறது. படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை. சுசீந்தரனின் முதல் படமான 'வெண்ணிலா கபாடி குழு' மாதிரியாகவும், வெங்கட்பிரவுவின் முதல் படமான 'சென்னை 600028' மாதிரியும், மிதுன் மாணிக்கத்தின் முதல் படமான 'ஐவராட்டமும்' விளையாட்டை மையப்படுத்தி பட்டையை கிளப்புகிறது. விளையாட்டோடு குடும்பம், காதல், காமெடி, செண்டிமெண்ட், ஆக்சன், போட்டி, பொறாமை என்ற பல கூறுகளும் திரைக்கதையில் பக்காவாக பொருந்தியுள்ளது. சுசீந்திரன், வெங்கட்பிரபு வரிசையில் கண்டிப்பாக மிதுன்மாணிக்கதிற்கும் தமிழ் சினிமாவில் நிச்சயமொரு இடம் உண்டு என்பதை தியேட்டர் விட்டு வெளியேறும் போது மனதில் ஓடியது.

வீரமங்கை வேலுநாச்சியார் ஆண்ட மண்ணில் நடைபெறும் கால்பந்தாட்ட போட்டிக்கு வருகை தரும் ஆண்டியப்பன் சேர்வையை வரவேற்கும் வர்ணனையின் போது, ஆண்டியப்பன் சேர்வையாகவே ஜெயப்ரகாஷ் கணகச்சிதமாக பொருந்திருக்கிறார். ”சொல்றவன் இல்ல; செய்றவன் தான் சேர்வை!” என வசனங்களிலும், நடை உடை பாவனைகளிலும் ஊர் பெரியவராகவே மிடுக்காக வாழ்ந்திருக்கிறார் ஜே.பி. படத்தின் டைட்டில் போடுவதற்கு முன்பாக புறநானாறு பாடல் வரிகள் வரும், கூடவே இரு தடவை மாமன்னர் மருது பாண்டியர்களின் படமும் வரும். அடுத்து டைட்டில் பாடலில், ”சொன்ன சொல்ல வாழ வைக்கும் தேவரோட பூமி; முத்துராமலிங்கம் தான்டா எங்க குலசாமி!” என தெக்கத்தி கதைக்களம் தான் ஐவராட்டம் என்பதை ஆரம்பத்திலேயே சொல்லாமல் சொல்லிவிடுகிறார் அறிமுக இயக்கனர் மிதுன் மாணிக்கம்.

சாதி மாறி காதல் செய்வதால் குடும்பத்தை விட்டு புறக்கணிப்படுவதை உணர்த்தும் வசனம், அனைவரையும் புருவம் உயர்த்த வைக்கிறது. ”குழந்தைக்கிட்ட சாதிவெறியை காட்டாதீங்க. புடிச்சிருந்தது காதலிச்சேன். அவளும் மனுசிதான்!”ன்னு சொல்லிருக்கும் இயக்குனர் மிதுன் மாணிக்கத்தின் நேர்மையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஐவராட்டம் இரு வேறு குடும்பத்திலுள்ள அண்ணன் தம்பிகளுக்குள் நடக்கும் பாச போராட்டம். கண்டிப்பாக எந்தவித வன்முறை காட்சிகளும், துளி ஆபாசமும், சாதி துவேசமும் இல்லாத ஓர் நல்லப்படம் ’ஐவராட்டம்’. கண்டிப்பாக குழந்தைகளோடு, குடும்பத்தோடு, நண்பர்களோடு பார்க்கலாம். ஐவராட்டம் - தமிழ் சினிமாவின் ஆரவாரமில்லா ஆர்பாட்டம்!

- இரா.ச.இமலாதித்தன்