பேரறிவாளன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேரறிவாளன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 பிப்ரவரி 2014

ஏழு பேரின் விதியை மாற்றிய விதி எண் 110 அறிப்பு!



பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் இதே வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனக்கு தெரிந்து, தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் வெளியிடப்பட்ட நல்ல அறிவிப்பு இது மட்டுமே. நேற்று உச்சநீதிமன்றம் மூவரின் தூக்கை ரத்து செய்த அதேவேளையில், முக்கியமானதொரு ஆலோசனையையும் தமிழ்நாடு அரசுக்கு வழங்கி இருந்தது என்பதும் குறிப்பிடதக்க அம்சம். அது என்னவெனில், 23 வருடங்கள் சிறைவாசம் கண்டுள்ள இவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசுதான் இனி முடிவு செய்ய வேண்டுமென்று அனைத்து பொறுப்பையும் விவேகமாக தமிழக அரசின் மீது வைத்துவிட்டனர். அதனாலேயே, நீதியரசர் சதாசிவம் தலைமையிலான மூவரின் ஆலோசனையை, இன்று அரசியல் லாபமாக மாற்றிக்கொண்டுவிட்டார் ஜெயலலிதா.

ஒருவேளை இந்த அறிவிப்பை ஜெயலலிதா இன்று சட்டமன்றத்தில் அறிவிக்காவிடில், தமிழ் ஆர்வலர்கள், ஈழ ஆதரவாளர்கள், நடுநிலைவாதிகள் என அனைவரும் ஜெயலலிதாவை குற்றம் சாட்ட தொடங்கிவிடுவார்கள் என்பதை நன்றாகவே அறிந்திருந்த ஜெயலலிதா, இதை தனக்கு சாதகமாகவே பயன்படுத்தி கொண்டுவிட்டார். நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடிக்கின்ற இந்த காலக்கட்டத்தில், இப்படியொரு அறிவிப்பு கண்டிப்பாக ஜெயலலிதாவிற்கு லாபத்தைத்தான் தரும் என்பது என் அனுமானம்.

இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விசயமே, நேற்றைய தீர்ப்பின் சாரம்சத்தைத்தான். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்த வேளையில், மூவரின் விடுதலையை தமிழக அரசின் பொறுப்புக்கே விடும்போது, அதை காங்கிரஸ் அல்லாத எந்தவொரு கட்சியும் தனக்கு சாதகமாகத்தான் பயன்படுத்த பார்க்கும் என்று உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்களின் கணிப்பு இன்று வெற்றியடைந்திருக்கிறது. இந்த விடுதலை பற்றிய அறிவிப்பை சரியானதொரு நேரத்தில் தமிழக அரசின் மீதே திசைதிருப்பி அதை வெற்றியடையவும் வைத்த நீதியரசர் திரு சதாசிவம் அய்யாவிற்கு அடியேனின் நன்றி!

- இரா.ச.இமலாதித்தன்

18 பிப்ரவரி 2014

தூக்கும் தமிழரும்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டாலும், "தாமதமாக வழங்கப்படும் எந்தவொரு தீர்ப்பும், மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானதே!"; இந்நாட்டில் பல உயிர்களை கொலை செயதவன், பல லட்சம் கோடிகளை கொள்ளை அடித்தவனெல்லாம் ஊருக்குள்ள வெள்ளையும் சொள்ளையுமா திரியும் போது, அந்த மாதிரியான நபர்களை தண்டிக்கக்கூட இந்த நீதித்துறைக்கு வக்கில்லாமல் போய்விட்டது என்பது வேதனையான விசயமே. ஏனென்றால், நீதித்துறைக்குள்ளும் அரசியல்தான் களம்காண்கிறது. நீதியரசராக யார் பணியில் அமரவேண்டுமென்பதை கூட ஆளும்வர்க்கம் நிர்ணயிக்கும் போது நீதியிலும் பாரபட்சம் இருக்கத்தான் செய்யும் என்பது எதார்த்தம். எது எப்படியோ, வெறும் பெட்டரி வைத்திருந்த குற்றத்திற்காக இத்தனை வருடங்கள் சிறையில் அவதிப்பட்டு, இன்றைக்கோ நாளைக்கோ கொல்லப்படலாம் என்ற மனஉளைச்சலோடே இத்தனை வருடங்கள் சிறைக்குள் காலம் கழித்து, உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்த மூவருக்கும் இனி புதியதொரு மறுவாழ்வு கிடைத்துள்ளது. வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்