உச்சநீதிமன்ற தீர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உச்சநீதிமன்ற தீர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 பிப்ரவரி 2016

தமிழனை வஞ்சிக்கும் ஹிந்தியம்!

தேர்தல் நேரத்தில் கூட்டணி பேரத்தில் தமிழக சில்லறை கட்சிகளெல்லாம் மும்முரமாக இருக்கும் நேரத்தில், கேவலமானதொரு ஹிந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்று வெளிவந்துள்ளது. விவசாய குடும்பத்தை சேர்ந்த என்னை போன்ற பலருக்கு இந்த தீர்ப்பு ஹிந்தியத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வெறுக்கடிக்கும்.

கேரளாவுக்கும் கர்நாடகாவுக்குமான கெயில் பைப் லைன்களை நேரடியாக அந்த இரு மாநில எல்லைக்குட்பட்ட பகுதியின் வழியாகவே கொண்டு சொல்வதுதான் எளிதான மற்றும் சரியான வழிமுறை. ஆனால் இவ்விரு மாநிலத்தின் விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, மலையாளிகளின் சூழ்ச்சியால் தேவையேயில்லாமல் தமிழக எல்லைக்குள் இந்த கெயில் பைப் லைனை பதிக்க திட்டத்தை மாற்றியமைத்தனர். இதனால் பொருட் செலவும் அதிகம்; பயண தூரமும் அதிகம். ஆனாலும் தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் தர மனமில்லாத காவிரியும் - பெரியார் அணையும் வைத்திருக்கும் கேரள - கர்நாடக மாநிலங்களின் விவசாய நிலமக்கள் பாதிக்காமல் இருக்க தமிழக நிலத்தை கற்பழிக்க நினைத்திருந்தனர்.

அதன்படியே ஹிந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பும் அமைந்து விட்டது.

விவசாயத்தை தமிழனிடமிருந்து முற்றிலுமாக அழித்தொழிக்க நினைக்கும் ஆரிய கூட்டமும், அதற்கு துணை போகும் திராவிட கூட்டமும் இங்கு அழித்தொழிக்கப்படாதவரை நாளுக்கு நாள், தமிழனின் ஒவ்வொரு பாரம்பரிய அடையாளமும் முற்றிலுமாக அழித்தொழிக்கப்படும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

- இரா.ச. இமலாதித்தன்

24 மார்ச் 2015

66 ஏ சட்டம் ரத்து!

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தனி நபர்களின் கருத்துகளை வைத்து, கைது - சிறையென அச்சமூட்டி கொண்டிருந்த 66-ஏ சட்டத்தை உச்சநீதிமன்றம் இன்று தடைவிதித்துள்ளது. “தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.” எனவே அதை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளதை வரவேற்றும் அதே சமயம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வரையறையே இல்லாமல் அவதூறு பரப்புவதை நாம் மறுபரிசீலனை செய்து சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டியதும் இனி அவசியமாகிறது. ஆதாரமே இல்லாமல், யாரை வேண்டுமானாலும் அவன், இவளென்று ஒருமையில் பேசி தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை கருத்து சுதந்திரம் என்ற வகையில் வெளிப்படுத்துவதையும் இங்கு ஏற்றுக்கொள்ள முடியாது.

சுதந்திரம் என்பதிலும் ஒருவித கட்டுப்பாடு இருக்க வேண்டும். அப்போதுதான் அது நமக்கு நிலையாக கிடைக்கும். தவறு எங்கிருப்பினும் தயக்கமில்லாமல், அதை வெளிப்படையாக சுட்டிக்காட்டுவது தான் கருத்து சுதந்திரம். ஆனால், நமக்கு வேண்டாதவர்களை அனுமானத்தின் அடிப்படையில் எதை வேண்டுமானாலும் சொல்வது என்பதெல்லாம் கருத்து சுதந்திரம் என்ற வரைவுக்குள் வருவதில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் நாம், நாகரீகமான முறையில் யார் மீதான தவறையும் சரியான வழியில் வெளிப்படுத்துவோம். அதுதான் ஜனநாயக மக்களின் சரியான எதிர்வினையாக அமையக்கூடும்.

ஒருகாலத்தில், நேற்றைய செய்திகளை இன்றைய தேதியில் கொடுத்து கொண்டிருந்த அச்சு ஊடகங்களை, அன்றைய செய்திகளை அன்றைக்கே தந்த தொலைக்காட்சி ஊடகங்கள் ஏற்கனவே அசைத்து பார்த்து கொண்டிருக்கிறது. ஆனால், அதை விட நொடிக்கு நொடி நேரடியாக செய்திகளை சுடச்சுட தரத்துவங்கிய சமூக வலைதளங்களால், தொலைக்காட்சி ஊடகங்களும் தற்பொழுது ஆட்டம் கண்டு கிடக்கின்றன. இப்போதெல்லாம் சமூக ஊடகங்களில் எந்த தலைப்பு அதிக அளவில் பகிரப்படுகின்றதோ, அதையே தான் தொலைக்காட்சி ஊடகங்களும் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி வெகுநாட்கள் ஆகிவிட்டது. நெட் பேக்குடன் கூடிய ஓர் ஆண்ட்ராய்டு செல்போன் இருந்தால் போதும், அனைவருடனும் எல்லாவிதமான செய்திகளையும் உடனுக்குடன் பகிரமுடியுமென்ற நிலை வந்த பின்னால், மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடக சக்தியே ஓரளவுக்கு நம் பின்னால் வந்து விட்டது எனலாம். எனவே, அதன் தன்மையையும் - அத்தியாவசியத்தையும் உணர்ந்து பொறுப்போடு இயங்குவது நம் ஒவ்வொருவரின் கடமை. ஜெய்ஹிந்த்!

- இரா.ச.இமலாதித்தன்

08 மே 2014

உச்சநீதிமன்றமும் தமிழனும்

ஜல்லிக்கட்டு, மீனவர் பிரச்சனை, நதிநீர் பங்கீடு உள்ளிட்ட தமிழர் நலம் சார்ந்த எந்தவொரு பிரச்சனையிலும் உச்சநீதிமன்றத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதற்கு இன்றைய நாளும் ஓர் உதாரணம்!

கூடன்குளம் அணு உலைக்கு எதிரான மனுவும் தள்ளுபடி!
ஊருக்கொரு அமைப்பு வைத்து இனத்தை காக்க வந்தவர்களாக அவதாரமெடுத்துள்ள தலைவர்கள் அனைவரும், ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்; மிஞ்சிப்போனால் கண்டன போஸ்டர்களோடு இவர்களது போராட்டம் நின்றுவிடுமென்று நினைக்கின்றேன். பார்க்கலாம்...

-இரா.ச.இமலாதித்தன்

ஜல்லிக்கட்டோடு மல்லுக்கட்டும் ஆரியம்!

தமிழர்களின் பாரம்பரியத்தை ஒவ்வொன்றாக அழித்தொழிக்கும் செயல்களை காலம்காலமாக செய்துவரும் ஆரியத்தின் வெற்றியாகவே, ஜல்லிக்கட்டு மீதான தடையென்ற உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை நாம் பார்க்க வேண்டும். வீரம்செறிந்த மறத்தமிழர்களின் வீரவிளையாட்டான ஏறு தழுவதல் என்ற ஜல்லிக்கட்டானது, பண்டையகாலம் தொட்டே தமிழர்களிடையே நடைபெற்றுவரும் கலச்சாரம் சார்ந்த பண்பாட்டு நிகழ்வு. இதை இன்றைக்கு விலங்குகளுக்கு பாதுகாப்பில்லை என்ற பொய்யான பரப்புரையை புதிதாக கையில் எடுத்து, அதில் வெற்றியும் கண்டிருக்கின்றது ஆரியம்.

அசுவமேத யாகம் என்ற பெயரில் பசுக்களை நெருப்பிலிட்டு கொலை செய்யலாம். அதே மாடுகளை பீப் கறிக்காக அடிமாடாக விலைக்கு விற்கலாம். ஆனால், வருடம் ஒருமுறை பாரம்பரியத்தின் நீட்சியாக அதே பசுவை கெளரவிப்பதற்காக் விழா எடுத்து, ஏறுதழுவதல் என்ற ஜல்லிக்கட்டை நடத்தினால் தடை! தமிழன் மாடுகளை மனிதனை விட உயர்வாக நினைக்கும் கூட்டம் என்பதை மறந்து விடுகின்றார்கள்.


ஆடு, மாடுகளை தன் குடும்ப உறவுகள் போல பேணி காத்து, ஒரு ஆட்டுக்குட்டியோ, கன்று குட்டியோ இறந்தால் மூன்றுநாள் துக்கத்தில் பட்டினியாக கிடக்கும் இரக்க குணம் கொண்ட என் தமிழினம், எப்படி அவ்விலங்கினத்தை துன்புறுத்தும்? ஒருவேளை துன்புறுத்துவது உண்மையென கொண்டால் கூட, அதை கட்டுபடுத்த தானே முதலில் முயற்சி எடுத்திருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக ஓரினம் சார்ந்த அடையாளத்தையே தடை செய்வது எவ்வகையில் நியாயமான தீர்ப்பாக இருக்கும்?

விலங்கை கூட குடும்பத்தில் ஒருவர் போல முக்கியத்துவம் கொடுத்து அன்பு செலுத்தும் பண்பை இன்றைக்கும் ஒவ்வொரு கிராமங்களிலும் நேரடியாக பார்க்க முடியும். அப்படிப்பட்ட அன்பிற்கு அடிபணியும் வீரம்செறிந்த கூட்டமான என் சக தமிழர்கள், ஈழத்தில் கொத்து கொத்தாக லட்சக்கணக்கில் கொலை செய்யப்பட்ட போது, இன்றைக்கு விலங்கிற்காக போலியாக நீலிக்கண்ணீர் வடிக்கும் இதே ஆரியம் தான், ஆயுதம் கொடுத்து தமிழினத்தை அழிக்க உதவியது என்பதுதான் தமிழனின் சோக வரலாறு. மேலும், தமிழனை ஒரு மனிதனாக கூட பொருட்படுத்தாமல், விலங்கிற்கு கொடுக்கும் முக்கியவத்தை கூட கொடுக்காமல் பலிவாங்கிய ஆரியத்திற்கு, தமிழனின் உயிர் என்பது விலங்கை விட மலிவானதாகி போய் விட்டது என்பதையும் ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும். ஆரிய சூழ்ச்சியின் நீட்சியாக தமிழனின் அடையாளம் ஒவ்வொன்றாக சிதைக்கப்படுவதற்கு பாரம்பரிய ஜல்லிக்கட்டு தடையும் ஓர் உதாரணம் என்பதை, ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் அவசியமாகிறது.

ஹரப்பா - மெகஞ்சோதரா யென்று பழங்கால நாகரீகத்தை பற்றி பெருமை பேசும் தமிழரல்லாத பலருக்கும், அன்றைய நாகரீக காலத்தில் தோன்றிய காளையை அதே பாரம்பரிய இனப்பெருக்க ஜீன்களோடு கலப்பில்லாமல் வளர்த்து, இன்றைக்கும் பண்டைய பாரம்பரிய அடையாளத்தை பாதுகாத்து வருவது என் தமிழினம் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர்!


ஆடு மாடுகளுக்காகவே வருடத்தில் ஒரு நாள் மாட்டு பொங்கல் வைத்து விழா காண்கின்ற பண்பாட்டு தமிழன், ஆடு மாடு இறந்தால் ஊரையே கூட்டி ஒப்பாரி வைத்து மூன்றுநாள் பட்டினியாக கிடக்கும் பாசக்கார தமிழன், பசுவையே தெய்வமாக வணங்கும் பாரம்பரிய தமிழன், ஜல்லிக்கட்டின் போது வாடியில் இருந்து வெளியே வந்து பத்து நிமிடம் யாரும் அடக்க முடியாத அளவுக்கு திமிராக களம்காணுவதற்காகவே, வருடம் முழுவதும் தீணி போட்டு வளர்க்கும் வீர்ம்செறிந்த தமிழனா, மாட்டை கொடுமைப்படுத்த போகிறான்?

உணர்வில்லா உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம், கேராளவிற்கு அடிமாடாக போகும் மாடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த போகின்றதே தவிர வேறொன்றும் புரட்சி நடந்துவிட போவதில்லை. போராட்ட குணத்தையே மறந்து போன எம்மினத்தான் என்ன செய்ய போகிறான் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சக தமிழனாக, இன்றைய ஜல்லிக்கட்டு தடையென்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது வெறுப்பும் - கோபமும் - ஏமாற்றமும் மட்டுமே என்னுள் மிஞ்சி நிற்கிறது.
- இரா.ச.இமலாதித்தன்

18 பிப்ரவரி 2014

தூக்கும் தமிழரும்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டாலும், "தாமதமாக வழங்கப்படும் எந்தவொரு தீர்ப்பும், மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானதே!"; இந்நாட்டில் பல உயிர்களை கொலை செயதவன், பல லட்சம் கோடிகளை கொள்ளை அடித்தவனெல்லாம் ஊருக்குள்ள வெள்ளையும் சொள்ளையுமா திரியும் போது, அந்த மாதிரியான நபர்களை தண்டிக்கக்கூட இந்த நீதித்துறைக்கு வக்கில்லாமல் போய்விட்டது என்பது வேதனையான விசயமே. ஏனென்றால், நீதித்துறைக்குள்ளும் அரசியல்தான் களம்காண்கிறது. நீதியரசராக யார் பணியில் அமரவேண்டுமென்பதை கூட ஆளும்வர்க்கம் நிர்ணயிக்கும் போது நீதியிலும் பாரபட்சம் இருக்கத்தான் செய்யும் என்பது எதார்த்தம். எது எப்படியோ, வெறும் பெட்டரி வைத்திருந்த குற்றத்திற்காக இத்தனை வருடங்கள் சிறையில் அவதிப்பட்டு, இன்றைக்கோ நாளைக்கோ கொல்லப்படலாம் என்ற மனஉளைச்சலோடே இத்தனை வருடங்கள் சிறைக்குள் காலம் கழித்து, உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்த மூவருக்கும் இனி புதியதொரு மறுவாழ்வு கிடைத்துள்ளது. வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்