08 மே 2014

ஜல்லிக்கட்டோடு மல்லுக்கட்டும் ஆரியம்!

தமிழர்களின் பாரம்பரியத்தை ஒவ்வொன்றாக அழித்தொழிக்கும் செயல்களை காலம்காலமாக செய்துவரும் ஆரியத்தின் வெற்றியாகவே, ஜல்லிக்கட்டு மீதான தடையென்ற உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை நாம் பார்க்க வேண்டும். வீரம்செறிந்த மறத்தமிழர்களின் வீரவிளையாட்டான ஏறு தழுவதல் என்ற ஜல்லிக்கட்டானது, பண்டையகாலம் தொட்டே தமிழர்களிடையே நடைபெற்றுவரும் கலச்சாரம் சார்ந்த பண்பாட்டு நிகழ்வு. இதை இன்றைக்கு விலங்குகளுக்கு பாதுகாப்பில்லை என்ற பொய்யான பரப்புரையை புதிதாக கையில் எடுத்து, அதில் வெற்றியும் கண்டிருக்கின்றது ஆரியம்.

அசுவமேத யாகம் என்ற பெயரில் பசுக்களை நெருப்பிலிட்டு கொலை செய்யலாம். அதே மாடுகளை பீப் கறிக்காக அடிமாடாக விலைக்கு விற்கலாம். ஆனால், வருடம் ஒருமுறை பாரம்பரியத்தின் நீட்சியாக அதே பசுவை கெளரவிப்பதற்காக் விழா எடுத்து, ஏறுதழுவதல் என்ற ஜல்லிக்கட்டை நடத்தினால் தடை! தமிழன் மாடுகளை மனிதனை விட உயர்வாக நினைக்கும் கூட்டம் என்பதை மறந்து விடுகின்றார்கள்.


ஆடு, மாடுகளை தன் குடும்ப உறவுகள் போல பேணி காத்து, ஒரு ஆட்டுக்குட்டியோ, கன்று குட்டியோ இறந்தால் மூன்றுநாள் துக்கத்தில் பட்டினியாக கிடக்கும் இரக்க குணம் கொண்ட என் தமிழினம், எப்படி அவ்விலங்கினத்தை துன்புறுத்தும்? ஒருவேளை துன்புறுத்துவது உண்மையென கொண்டால் கூட, அதை கட்டுபடுத்த தானே முதலில் முயற்சி எடுத்திருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக ஓரினம் சார்ந்த அடையாளத்தையே தடை செய்வது எவ்வகையில் நியாயமான தீர்ப்பாக இருக்கும்?

விலங்கை கூட குடும்பத்தில் ஒருவர் போல முக்கியத்துவம் கொடுத்து அன்பு செலுத்தும் பண்பை இன்றைக்கும் ஒவ்வொரு கிராமங்களிலும் நேரடியாக பார்க்க முடியும். அப்படிப்பட்ட அன்பிற்கு அடிபணியும் வீரம்செறிந்த கூட்டமான என் சக தமிழர்கள், ஈழத்தில் கொத்து கொத்தாக லட்சக்கணக்கில் கொலை செய்யப்பட்ட போது, இன்றைக்கு விலங்கிற்காக போலியாக நீலிக்கண்ணீர் வடிக்கும் இதே ஆரியம் தான், ஆயுதம் கொடுத்து தமிழினத்தை அழிக்க உதவியது என்பதுதான் தமிழனின் சோக வரலாறு. மேலும், தமிழனை ஒரு மனிதனாக கூட பொருட்படுத்தாமல், விலங்கிற்கு கொடுக்கும் முக்கியவத்தை கூட கொடுக்காமல் பலிவாங்கிய ஆரியத்திற்கு, தமிழனின் உயிர் என்பது விலங்கை விட மலிவானதாகி போய் விட்டது என்பதையும் ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும். ஆரிய சூழ்ச்சியின் நீட்சியாக தமிழனின் அடையாளம் ஒவ்வொன்றாக சிதைக்கப்படுவதற்கு பாரம்பரிய ஜல்லிக்கட்டு தடையும் ஓர் உதாரணம் என்பதை, ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் அவசியமாகிறது.

ஹரப்பா - மெகஞ்சோதரா யென்று பழங்கால நாகரீகத்தை பற்றி பெருமை பேசும் தமிழரல்லாத பலருக்கும், அன்றைய நாகரீக காலத்தில் தோன்றிய காளையை அதே பாரம்பரிய இனப்பெருக்க ஜீன்களோடு கலப்பில்லாமல் வளர்த்து, இன்றைக்கும் பண்டைய பாரம்பரிய அடையாளத்தை பாதுகாத்து வருவது என் தமிழினம் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர்!


ஆடு மாடுகளுக்காகவே வருடத்தில் ஒரு நாள் மாட்டு பொங்கல் வைத்து விழா காண்கின்ற பண்பாட்டு தமிழன், ஆடு மாடு இறந்தால் ஊரையே கூட்டி ஒப்பாரி வைத்து மூன்றுநாள் பட்டினியாக கிடக்கும் பாசக்கார தமிழன், பசுவையே தெய்வமாக வணங்கும் பாரம்பரிய தமிழன், ஜல்லிக்கட்டின் போது வாடியில் இருந்து வெளியே வந்து பத்து நிமிடம் யாரும் அடக்க முடியாத அளவுக்கு திமிராக களம்காணுவதற்காகவே, வருடம் முழுவதும் தீணி போட்டு வளர்க்கும் வீர்ம்செறிந்த தமிழனா, மாட்டை கொடுமைப்படுத்த போகிறான்?

உணர்வில்லா உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம், கேராளவிற்கு அடிமாடாக போகும் மாடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த போகின்றதே தவிர வேறொன்றும் புரட்சி நடந்துவிட போவதில்லை. போராட்ட குணத்தையே மறந்து போன எம்மினத்தான் என்ன செய்ய போகிறான் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சக தமிழனாக, இன்றைய ஜல்லிக்கட்டு தடையென்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது வெறுப்பும் - கோபமும் - ஏமாற்றமும் மட்டுமே என்னுள் மிஞ்சி நிற்கிறது.
- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக