24 செப்டம்பர் 2014

செவ்வாய்க்கு அரோகரா!

பண்டைய தமிழர்களின் கடவுள் வழிபாடானது, ”மாயோன் - சேயோன்” என்ற இரு கடவுள்களை மையப்படுத்தியே இருந்தது. இங்கே, மாயோன் என்றால் பெருமாள்; சேயோன் என்றால் முருகன்.

சேய் - செவ்வாய் = (முருகனுக்கு உகந்த) கிழமை
சேய் - சிவப்பு =  (ராசி, கிரக, உடை) நிறம்
சேய் - செம்மை = (அழகின் வடிவமான) கந்தன்
சேய் - சேயோன் = (ஆதி தமிழ்கடவுள் பெயர்) முருகன்
சேய் - சேவல் = (அடையாள இலச்சினையுடன் கூடிய )கொடி
சேய் - குழந்தை  = (பாலகன், இளையவன்) குமரன்

தமிழ் இலக்கியங்களில், குறிஞ்சி நிலத்தின் கடவுளாகவே முருகன் குறிப்பிடப்படுகிறார். மேலும், ஜோதிடத்தில் ”மேஷம் - விருச்சிகம்” என்ற இரு ராசிகளுக்கும் அதிபதியாக செவ்வாய் இருக்கின்றார். அந்த செவ்வாய்க்கான கடவுளாக முருகன் விளங்குகின்றார். தமிழ் வழி பார்த்தாலும், சமகிருத வழி பார்த்தாலும், இன்னும் எப்படி பார்த்தாலும் செவ்வாய்க்கும் முருகனுக்கும் உள்ள தொடர்பை யாராலும் மறுக்க முடியாது.

அப்படிப்பட்ட செவ்வாய் கிரகத்திற்குள், முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக நுழைந்துள்ள 'Mars Orbiter Mission'  என்ற ’மங்கள்யான்’ செயற்கை கோளின் திட்ட இயக்குநரான திரு. சு.அருணன் உள்ளிட்ட அனைத்து ISRO விஞ்ஞானிகளுக்கும், மெய்ஞானத்தையும் - விஞ்ஞானத்தையும் ஒன்று சேர்ந்த இந்நாளில் எம் வாழ்த்துகள்!

முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா!

- இரா.ச.இமலாதித்தன்

17 செப்டம்பர் 2014

தமிழன் ஆளட்டும்!

திரைத்துறையில் 'தயாரிப்பாளர் - இயக்குனர் - நடிகர் - கவிஞர் - இசையமைப்பாளர்' யென மிகப்பெரிய உச்சத்தை அடைந்திருந்த பலராலும், அவர்களது வாரிசுகளை அதே திரைத்துறையில் ஜொலிக்க வைக்க முடியவில்லை என்பதே எதார்த்தம். ஆனால், மிகப்பெரிய இயக்குனர்களாக இல்லாத போதும் திரு. எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் திரு. கஸ்தூரி ராஜா போன்றோரின் மகன்களான திரு. விஜய் மற்றும் திரு. தனுஷ் இருவரும் திரைத்துறையில் சாதித்திருப்பதை பார்க்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கின்றது. திரைத்துறையில் வந்த புதிதிலிருந்து, பிறரின் ஏளனத்திற்கும் - புறக்கணிப்புகளுக்கும் - அவமானத்திற்கும் அதிகமாக ஆளானவர்கள் திரு. தனுசும் - திரு. விஜயும் தான். அவர்கள் பட்ட அந்த அவமானங்களே இன்றைக்கு அவர்களை மிகப்பெரிய ஆளாக்கி விட்டுருக்கின்றது.

இத்தனை பெரிய ரசிகர்கள் கூட்டத்தை இன்றைக்கு தனக்கு பின்னால் வைத்திருந்தும் கூட இன்னமும் திரு. விஜய் தரக்குறைவாகவே விமர்சிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார். அது வெறும் விமர்சனம் மட்டுமல்ல. காரணம் என்னவெனில், தமிழன் இனி தலையெடுத்து விடக்கூடாதென்ற வார்த்தைகளின் விசம் பலருக்கு தெரியாமலேயே அவர்களுக்குள் திணிக்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் அள்ளி தெளிக்கப்படுகின்றது. திரு. விஜயை எதிர்ப்பதற்கு பின்னால் ஆரிய சித்தாத்தங்களை கொள்கையாக கொண்ட ஊடகங்களின் பங்கும் பெருமளவு உண்டு என்பதை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என்பது தெரியவில்லை. சக தமிழனாக திரு. விஜய் அரசியலுக்கு வருவதுதான் சரியானதாக எனக்கு படுகிறது. அரசியலில் தலையெடுப்பதற்கான சரியான நேரமிது. இனியாவது தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆளட்டும்!

- இரா.ச.இமலாதித்தன்

16 செப்டம்பர் 2014

அமைச்சருக்கும் அடி சறுக்கும்!

         நாகப்பட்டினத்தை சேர்ந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சரான மாண்புமிகு திரு. கே.ஏ.ஜெயபால் அவர்கள் மீனவர் சமுதாயத்தை சார்ந்தவர் என்பது அனைவருக்குமே தெரிந்த விசயம். அதனால் தான் மீன்வளத்துறைக்கு அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டார். சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய நாகப்பட்டினம் என்பது ஒரு கடலோர மாவட்டம் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால், மீனவ சமுதாயத்தினர் மட்டுமே நாகப்பட்டினத்தில் இல்லை. நாகூரும் - வேளாங்கன்னியும் - சிக்கலும் மதச்சின்னங்களுக்கு அடையாளமாக திகழ்ந்து வருவது நாகப்பட்டினத்திற்கு கிடைத்த பெருமைகளில் ஒன்று. ஏனெனில், இசுலாம் - கிருத்துவம் - ஹிந்து உள்ளிட்ட அனைத்து தரப்பட்ட சாதி-மத மக்களும் நாகை மாவட்டத்தை பூர்வகுடியாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆனால், மாண்புமிகு அமைச்சர் திரு.கே.ஏ.ஜெயபால் அவர்கள், தனது பதவியை பயன்படுத்தி தன்னுடைய சாதி மக்களுக்கு மட்டுமே அனைத்து தரப்பட்ட உதவிகளையும் செய்து வருவது, மாற்று இன-சாதி மக்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தி வருகிறது.

இன்னும் சொல்லப்போனால், தேர்தலின் போது அவரது சாதி மக்களின் ஓட்டு கூட முழுமையாக அவருக்கு கிடைக்கவில்லை. ஏனெனில் தொகுதி மறுசீரமைப்பினால், பெரும்பாலான மீனவ கிராமங்கள் நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியின் வரம்புக்குள் இல்லை. ஆனால், 51.20% வாக்குகளோடு மிகப்பெரிய வெற்றியை திரு.கே.ஏ.ஜெயபால் அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தது, மாற்று மத-சாதிகளை சார்ந்த வாக்களர்களே. ஆனால், தான் வெற்றி பெற்று அமைச்சரானதும், தன்னுடைய சாதி மக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து விட்டு, மற்ற மத-சாதி மக்களின் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமலே இருப்பது எந்த விதத்தில் நியாயம்? :(

இதையெல்லாம் ஏன் கேட்கிறேனென்றால், நான் உள்பட என் குடும்பத்தினர் அனைவரும் திரு.கே.ஏ.ஜெயபால் அவர்களுக்கு வாக்களித்தோம் என்ற தார்மீக உரிமையில் தான். அன்றைய சோழர்காலத்தில் பெரும்புகழோடு  திகழ்ந்த துறைமுக நகரமான நாகப்பட்டினம் இன்னமும் பழமை மாறாமலேயே இருக்கின்றது. அதுவும், இத்தனை ஆட்சியாளர்கள் வந்தபிறகும் புதுமையென்ற பொலிவே இல்லாமல் பழமையாகியே கிடக்கின்றது என்பதே வருத்தமான யதார்த்தம். மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் தானே உங்களுக்கு வாக்களித்தோம். ஆனால், இன்னமும் பாதாளச்சாக்கடை பணிகளால், மாவட்ட தலைநகரின் பிரதான சாலைகள் கூட புதுபிக்கப்படவில்லையே. மேலும், பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட ஏராளமான நலத்திட்ட அறிவிப்புகள் வெறும் அறிப்புகளாக மட்டுமே கிடப்பில் கிடக்கின்றன. இதற்காகவா வாக்களித்தோம்? :(

வழக்கம் போல அடுத்த சட்டமன்றத் தேர்தலின் போதுதானே இந்த சாமானியர்களை தேடி வருவீர்கள். அப்போது, நான் உங்களுக்கு எதிராக வாக்களிப்பேன். இங்கே நான் என்பது நான் மட்டுமல்ல. என்னைப்போன்ற பல சாமானியர்களும் தான். ஜெய்ஹிந்த்!

- இரா.ச.இமலாதித்தன்

13 செப்டம்பர் 2014

ஆண்களின் புலம்பலாகி போனதா திருமணம்?

பல ஆண்களின் புலம்பல், ”எங்கு தேடியும் பெண் கிடைப்பதே இல்லை” என்பதை விட, ”எங்கு போனாலும் பெண் கொடுப்பதில்லை” என்பது தான்.

இதற்கான காரணமாக சொல்லப்படும் பெண் சிசுக்கொலை என்பதையெல்லாம் நிச்சயமாக ஏற்க முடியாது. 1980-1990 இந்த பத்து வருடங்களில் பிறந்த ஆண்களுக்கு தான் திருமணத்திற்கான வரன் அமைய கொஞ்சம் சிக்கல் இருக்கு. மத்தபடி 90களுக்கு பிறகு பிறந்த எந்த ஆண்களுக்கும் திருமணத்திற்கான வரனாக அமையும் பெண் எளிதாக கிடைத்து விடும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஏனெனில்,  80களில்தான் ஆண்குழந்தை மீதான மோகம் பெற்றோர்களிடம்
அதிகம் இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் அது பெரும்பான்மையாக இல்லை.

திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் இருக்க முதல் காரணம், பெண்கள் மட்டும் தான். ஏனென்றால், ’வீட்டில் இருந்தால் துணி துவைக்கணும், வீட்டை கூட்டி பெருக்கி சமையல் செய்யணும், வெளிய கூட போக முடியாம வீட்டிற்க்குள்ளயே அடைஞ்சு கிடக்கணும்’ என்பதற்காகவே பெரும்பாலான பெண்கள் கல்லூரி (P.G) மேற்படிப்பை மேற்கொள்கிறார்கள்.

கல்லூரி வாழ்க்கையும், சமுதாய வளர்ச்சியும் இப்போதுள்ள பெண்களுக்கு ஒரு கனவுலக மாற்றத்தை கொடுத்து வருகிறது. எப்படியென்றால், ”வெளிநாட்டுல செட்டில் ஆகிற மாதிரியான மாப்பிள்ளை, ஐ.டி. துறையில் பெரும் தொகை சம்பளம் வாங்கும் மாப்பிள்ளை, வீட்டிற்கு ஒரே பையனாக இருக்கும் மாப்பிள்ளை, வீடு - தோப்பு - சொத்து பத்து நிறையா இருக்கிற மாப்பிள்ளை, முக்கியமா, தனக்கு நிகராவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ படிப்பை முடித்த மாப்பிள்ளை மட்டும் தான் தனக்கு கணவனாக வர வேண்டும்!” என்ற திருமண வயதை எட்டியுள்ள பெண்களின் கட்டளைகளால் தான், வெகுபலருக்கு திருமணம் தாமதமாகின்றது. இதை, நமது அக்கம் பக்கத்து வீடுகளிலும், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் நேரடியாக காண முடிவதால், வலுவான ஆதாரத்தோடும் கூட இதைப்பற்றி விளக்க முடியும்.
விதிவிலக்குகள் எல்லா இடத்திலும் உண்டு. அதை மட்டுமே உதாரணம் காட்டி ”நான் அப்படி இல்லையே!, அவள் அப்படி இல்லையே! எங்கள் வீட்டில் நாங்க அப்படி நினைச்சதே இல்லை!”யென சில பெண்களை மட்டும் சுட்டிக்காட்டினால் அதற்கு அடியேன் பொறுப்பல்ல.
இதை தவிரவும், ’மணமகனின் நிறம் - சாதி உட்பிரிவு - சம்பளம் - வசிக்கும் ஊர்’ என்பதெல்லாம் திருமணத்திற்கான முக்கிய இடத்தை பிடிக்கின்றன. பெண்ணுக்கு வரன் தேடும் பெற்றோர்கள், வசதி அதிகமாக இருப்பின் தங்களுக்கு மருமகனாக வரப்போகும் ஆண்களின் சுய ஒழக்கம் பற்றி கவலைப்படுவதே இல்லை என்பது தான் வருத்தமான விசயம். ”குடி-புகை உட்பட பல தகாத பழக்கம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை; பணம் தான் எக்கசக்கமாக இருக்கின்றதே!” என்ற பொருளாதாரம் என்ற எண்ணத்தில் மட்டுமே தங்களது பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர்.

பெரும்பான்மையாக 80-90களில் உள்ள ஆண்களுக்கு திருமண தாமதம் ஏற்பட முழுக்க முழுக்க திருமண வயதுடைய பெண்களின் சுயநலம் நிரம்பிய சுகபோக மோகமும் - ஈகோவும், பெண்களை பெற்ற பெற்றோர்களின் பணம் மீதான தீராக்காதலும் தான் காரணமாக அமைகின்றது.

- இரா.ச.இமலாதித்தன்

12 செப்டம்பர் 2014

இன்றைய தமிழ்நாட்டின் நிலை?!

ஊரெங்கும் டாஸ்மாக் கடைகளை திறந்து இலக்கு வைத்து விற்பனை செய்து தமிழனை போதைக்கு அடிமையானவனாகவும், எல்லாவற்றையும் ’விலையில்லா’ என்று சொல்லி தமிழனை இலவசத்திற்காக ஏங்கும் பிச்சைக்காரனாகவும் ஆக்கிவிட்டு, பொருளாதார உற்பத்தி குறித்த மத்திய புள்ளி விவரயியல் பட்டியலில், 03.39 சதவீத வளர்ச்சியுடன் தமிழ்நாடு கடைசி இடத்தைப் பெற்றிருக்கிறது என்றால், அது ஆட்சியாளர்களின் ஆளுமைத்திறனைத்தான் வெளி காட்டுகின்றது. ”போலியான விளம்பரங்களால், உண்மையான வெற்றியை பெற்றுவிட முடியாது!” என்பதற்கான எளிய உதாரணம்தான் இது. பீகார் கூட 10.23 சதவீத வளர்ச்சி பெற்றிருக்கிறது. தமிழன் விழித்து கொள்ளாத வரை தமிழனுக்கு தான் வெட்கக்கேடு.

இது ஒரு புறம் இருக்க,


வேட்பாளரை பயத்தால் மிரட்டி, பலம் கொண்டு கடத்தி, பணத்தால் வாபஸ் பெற செய்து அன் அப்போஸ்டாக வெற்றி பெறுவது ஒரு வழி. இல்லையென்றால், வாக்களர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுவது மற்றொரு வழி. இது இரண்டுமே முடியாத பட்சத்தில், வெற்றி பெற்ற மாற்றுக்கட்சி வேட்பாளரை பணம்/பதவி ஆசை காட்டி தன் பக்கம் இழுத்து ஒட்டுமொத்த வெற்றியையும் தன்வசமாக்குவது கடைசி வழி. இது தான் தற்போதைய அதிமுக ஃபார்முலா!

பலமான எதிர்கட்சியாக உருவெடுக்க தமிழக பா.ஜ.க.விற்கு தகுதி இருப்பது போல தெரியவில்லை. உட்கட்சி பூசலால் தனக்கு தானே அழிவை தேடிக்கொண்டு, மீண்டுமொரு சத்தியமூர்த்தி பவனாக தான் கமலாலயமும் மாறும் போல.சரியான - நம்பிக்கையான - வீரமான - உணர்வான - விசுவாசமான ஒரு வேட்பாளரை கூட தேர்ந்தெடுக்க முடியாத வக்கற்ற நிலையையில் தமிழக பா.ஜ.க இருக்கிறதென்றால், அதன் வருங்காலமும் கடந்தகால காங்கிரஸ் போலத்தான் முடியும்.

இந்த இழவுக்காக தான் தமிழக வாக்களர்கள், ’அதிமுக வேண்டாம்னா திமுக! திமுக வேண்டாம்ன்னா அதிமுக!’ன்னு ஒரு தெளிவான முடிவுக்கு வந்துடுறாங்க போல.


- இரா.ச.இமலாதித்தன்

11 செப்டம்பர் 2014

செப்டம்பர் 11 - மறக்க முடியுமா?

அவன் தோற்றம் இராணுவம்
அதில் மீசைதான் அடையாளம்!
அவனுள் குடிபுகுந்தது வறுமை
அவனது எழுத்துக்குள்
ஆடம்பரமாய் பிறப்பெடுத்தது வீரம்!
ஆனந்த சுதந்திரம் அடையுமுன்பே
அதை அனுபவிக்க வைத்த தீர்க்கதர்சி!
அவன் பெயருக்குள்
எம்பெருமான் முருகன் இருப்பான்!
அவன் எழுத்துக்களால்
பாரெங்கும் தீப்பிழம்பாய்
என்றைக்கும் எம்மோடு இருப்பான்!
அவன் பார்ப்பான் தான்
எதையுமே அகண்டு விரிந்து
தொலைநோக்கோடு பார்ப்பான் தான்!
அவனது இறப்பு முப்பத்தெட்டு
அவன் எழுத்துக்கிங்கே மூப்பேது?

- இரா.ச.இமலாதித்தன்

’தேசிய மகாகவி’ சி.சுப்ரமணிய பாரதியின் 93ம் வருட வீர வணக்க நினைவேந்தல் நாள் இன்று. வீரவணக்கம்!

10 செப்டம்பர் 2014

நேர்மை தோற்பதில்லை!

காஞ்சிபுரத்தில் கோடிக்கணக்கில் கொள்ளை போன மணல்திருட்டை தடுத்ததோடு, அசுத்துமான குளிர்பானங்களை விற்ற ஒரு பன்னாட்டு குளிர்பான ஆலைக்கு மிக தைரியமாக சீல் வைத்தார். மதுரையில்
ரூ. 16,000 கோடி கல் குவாரி கொள்ளையை அம்பலப்படுத்தினார்.  1935ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ. 11.5 கோடி நஷ்டத்தில் செயல்பட்டு கொண்டிருந்ததை ஒரே ஆண்டில் ரூ. 2.5 கோடி இலாபத்தில் செயல்பட வைத்தார்.

இப்படியெல்லாம் செய்த நேர்மையான ஓர் அரசு அலுவலருக்கு பரிசாக, இந்த வாரத்தின் 48 மணி நேரத்துக்குள் இரண்டு முறை பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார். தன்னுடைய 23 ஆண்டு பணிக் காலத்தில் 24 முறை இடமாற்றம் செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றார் ”லஞ்சம் தவிர்த்து! நெஞ்சம் நிமிர்த்து!” யென்ற வார்த்தைக்கு சொந்தக்காரரான திரு. உ.சகாயம் ஐ.ஏ.எஸ்.

ஒரு நபரை உயிரோட இருக்கும் போது உரிய அங்கீகாரம் கொடுக்காமல் கண்டு கொள்ளாமலே இருந்து விட்டு, இறப்புக்கு பின்னால் அவரு அப்படி- இப்படி, ஆகா - ஒகோ!ன்னு புகழ்வது தான் தமிழர்களோட குணமே. அந்த மாதிரியாகத்தான் திரு. உ.சகாயம் ஐ.ஏ.எஸ் விசயத்தில் தமிழர்களாகிய நாம் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். :( 

“பொய் தான் பயப்படும்; உண்மை பயப்படாது!”ன்னு சொல்வாங்க. அதுபோல இத்தனை அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் நெஞ்சுறுதி குறையாமல், தான் காலடி எடுத்து வைக்கின்ற எந்த துறையிலும் அத்துறையை வளர்ச்சி பாதைக்கு மாற்றி தன்னுடைய முத்திரையை பதிக்கும் நேர்மையாளனுக்கு என் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்