விஜய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 நவம்பர் 2018

சர்கார் - திராவிட அரசியலின் முகமூடி அவிழ்ப்பு!



சூப்பர் ஸ்டார் விஜயின் 'சர்கார்' படத்தில் முழுக்க முழுக்க குறியீடுகளே நிரம்பிருக்கின்றன; அனைத்துமே அரசியல் குறியீடுகள். கடந்த ஐம்பதாண்டு கால திராவிட அரசியலின் ஆணிவேரை அசைத்து பார்த்திருக்கிறது இந்த படம். திராவிட அரசியலில் நடந்த / நடக்கின்ற, நாம் கண்டும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்று கொண்டிருக்கின்ற அத்தனை அவலங்களையும், இந்தப்படம் பேசி இருக்கிறது.

பழ.கருப்பையா பாத்திரம் அப்படியே கருணாநிதியை நினைவுபடுத்துகிறது. ராதாரவியின் பாத்திரம் மூன்றுபேரை ஒத்திருக்கிறது; ராதாவியை 'ரெண்டு' என அடையாளப்படுத்தப்படுவதிலும் குறியீடு இருக்கிறது. அந்த இரண்டாம் இடத்தில் உள்ளவர்கள் அன்பழகன் - துரைமுருகன் - ஸ்டாலின். இந்த மூவரில் குறிப்பாக ஸ்டாலினையும் துரைமுருகனையும், ராதாரவியின் செயல்பாடுகள் நினைவுபடுத்துகிறது. தாய் கழகத்துடன் இணைப்பு விழா என்பது போன்ற அரசியல் நிகழ்வில் மின்னொளி விளக்கில் பழ.கருப்பையாவின் உருவம் அப்படியே கருணாநிதியை போலவே இருக்கும்.

பழ.கருப்பையாவின் மகளாக வரும் வரலட்சுமியின் பாத்திரம், மூன்றுபேரை நினைவுபடுத்துவதாக இருக்கிறது; ஒன்று, கனிமொழி; இரண்டு, ஜெயலலிதா; மூன்று, சசிகலா. அடுத்து, பழ.கருப்பையாவும், ராதாரவியும் வரலட்சுமியை 'பாப்பா' என்றே எல்லா இடங்களிலும் அழைப்பதும், விஜய் கூட ஓரிடத்தில் 'பாப்பா' என நேரடியாக சொல்வதும், வரலட்சுமியின் கதாபாத்திர பெயர் 'கோமளவல்லி' என்று இருப்பதும், அப்படியே ஜெயலலிதாவையே நினைவூட்டுகிறது. மேலும் அந்த வரலட்சுமியின் கதாபாத்திரம் மூவரை உள்ளடக்கிய கலவையான பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளதால், அம்மூவரின் குணாதிசயங்களையும், நடவடிக்கைகளையும் அந்த பாத்திரம் வெளிக்காட்டுகிறது.

படத்தின் டைட்டிலில் சூரியனோடு சிங்கம் இருக்கின்ற கொடியை கொண்ட அரசுக்கும், புலிக்கொடியை கொண்ட அரசுக்கும் போர் நடந்து, இறுதியாக புலிக்கொடி வெல்வதாக காட்டிருக்கின்றனர். மேலும், கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆக்கிரமிப்பது போலவும் ஒரு காட்சி கட்டப்பட்டிருக்கும். பிறகு, நேதாஜியும் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஜானகி தேவரும் இராணுவ உடையோடு படை வீரர்களுக்கு இடையே நடந்து வரும் காட்சி காட்டப்படும்; அதனை தொடர்ந்து காந்தி, நேரு, அம்பேத்கர், ஈ.வெ.ரா., காமராஜர் என பட்டியல் நீளும். கடைசியாக ஒரு கருடன் பறந்து வந்து, இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டுக்குள் புகுவதை போன்றதொரு காட்சியும் அமைத்து இருப்பார்கள். கூடவே புலிக்கொடி பெரிதாக காட்டப்படும்.

இந்த புலிக்கொடிக்கு பின்புலமாக மூன்று வரலாற்று நிகழ்வுகள் இருக்கின்றன; முதலாவது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே (ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற) சோழர்கள் தெற்காசியாவையே புலிக்கொடியோடு ஆண்டனர். அதற்குப் பிறகான நேதாஜியின் புலிக்கொடியும், ஐரோப்பிய கிழக்கிந்திய கம்பெனியின் வணிக கூட்டாட்சிக்கு எதிராக இந்திய தேசிய இராணுவத்தை கட்டமைத்து, வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியது. மூன்றாவதாக, புலிக்கொடி அண்ணன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூலம் மீண்டும் பட்டொளி வீசி பறக்க விடப்பட்டது; உலக வரலாற்றில்ல் ஒரு போராளி இயக்கம் முப்படைகளை வைத்திருந்த பெருமைமிகு சாதனையையும் தமிழீழ புலிக்கொடி உருவாக்கி கொடுத்தது.



சுந்தர் ராமசாமியாக வரும் விஜய் தன்னை மீனவனாகவே பல இடங்களில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். தனது பூர்வீகம் இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவக் குடும்பம் என்பதாகவும், தன்னுடைய அப்பா சிங்கள ராணுவத்தால் கடலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் சொல்லிருப்பார். தொடர்ச்சியாக பக்கத்து நாட்டு இராணுவம் தமிழ் மீனவர்களை சுட்டுக் கொல்கிறது என்பதையும் பேசிருப்பார்.

மெர்சலில் பல இடங்களில் வருவது போல தன்னிரு கைகளை குறுக்கு வெட்டாக வைத்து கருட முத்திரையை சர்க்காரிலும் அரசியல் மேடையில் க்ளோசப் காட்சியாக விஜய் காட்டியிருப்பார். மேலும் நான்கைந்து காட்சிகளில் இரண்டு கைகளையும் விரித்து சிறகுகள் போல ஒரு குறியீட்டை காட்டியிருப்பார்.

கருணாநிதி, அண்ணாதுரை, அண்ணா அறிவாலயம், அண்ணா சிலை, மதிமுக கட்சிக்கொடி, ஸ்டாலின், துரைமுருகன், சூரிய சிங்கக் கொடி, புலிக்கொடி, கிழக்கிந்திய கம்பெனி, கருடன், ஜெயலலிதா, கனிமொழி, சவுக்கு சங்கர், மெரினா சமாதி, அ.இ. என தொடங்குகின்ற கட்சிப்பெயர், அப்போலோ மருத்துவமனை வீடியோ காட்சிகள், ஒரு தலைவரின் மரணத்தை வைத்து செய்யப்படுகின்ற அரசியல், இப்படியான அனைத்து தரப்பட்ட திராவிட அரசியலின் இன்னொரு முகத்தை பல குறியீடுகளோடு இந்த சர்க்கார் சொல்லிருக்கிறது.

கோமலவள்ளி என்ற பெயருக்கு பதிலாக வேறொரு பெயரை வைத்திருந்தால், திமுக, அமமுக போல அதிமுகவும் நேரடியாக சர்காரை எதிர்த்திருக்க மாட்டார்கள். கோமலவள்ளி தான் ஜெயலலிதா என நம்பும் இவர்களுக்கு மாசிலாமணியாக வரும் பழ.கருப்பையா யார்? ஐம்பத்தைந்து வருட அரசியல், மூன்றாம் தலைமுறை அரசியல், தலைவர் முகமே ஒரு பிராண்ட், என்பதெல்லாம் தமிழக அரசியலில் யாரை குறிக்கிறது? பெயரளவில் மட்டும் கோமலவள்ளியாக வரும் வரலட்சுமியின் நடை, உடை, பேச்சு, உடல்மொழி இவையெல்லாம் யாரை குறிக்கிறது? தலைவர் தலைவரென சொல்லும் 'ரெண்டு' ராதாரவியின் உடல்மொழி யாரை முன்னிறுத்துகிறது? இவையெல்லாம் யாருக்குமே தெரியவில்லையா? இல்லை; தெரிந்தும் தெரியாததது போலவே இருக்கின்றீர்களா?

விஜயின் அரசியல் வருகையை பற்றியெல்லாம் இன்றைக்கு தலைப்பு செய்திகளாக ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனால் தனது முதல் அரசியல் நகர்வை 2011ம் ஆண்டே நாகப்பட்டினத்தில் தான் விஜய் தொடங்கினார். குறிப்பாக மீனவர்கள் பிரச்சினைக்காக அவரது முதல் அரசியல் கூட்டம் நாகையில் தான் நடந்தது. இந்த கண்டன கூட்டமானது, பெரிய கட்சியின் அரசியல் மாநாடு போல மாறிப்போனது. அன்று கூடிய கூட்டத்தையும், நிரம்பிருந்த வாகன நெரிசலையும் அவ்வளவு எளிதாக இங்குள்ள எந்த அரசியல்வாதியாலும் மறந்துவிட முடியாது. அன்றைய கூட்டத்தில், "தொடர்ச்சியாக தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தி, கொன்று கொண்டிருந்தால் உலக வரைபடத்தில் இருந்து இலங்கை காணாமல் போகும்" என்று அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதன் பின்னால் அவரது படங்களெல்லாம் இலங்கையில் திரையிட முடியாத அளவுக்கு கூட பிரச்சினை உருவானது.

இந்த படத்திலும் சாட்டை முத்துக்குமார் என்ற பத்திரிகையாளர் சேகரித்த முக்கிய தகவல்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை, நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒருவரே கொடுப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அப்போது விஜய் சொல்லுவார் "இந்த இன்னிங்சில் முக்கியமான ஓவரின் பெரிய சிக்ஸர் நீங்கள்தான்" என்று... இதை அந்த அரசியல் கண்ட பொதுக்கூட்டத்தோடும் ஒப்பிட்டு பார்க்க முடியும்.

டைட்டில் காட்சியில் ஈ.வெ.'ராமசாமி'யின் படத்தை காட்டியும், கதாநாயகனுக்கு சுந்தர் 'ராமசாமி' என்ற பெயரை வைத்திருந்தும், அந்த ஈவேராவின் அரசியல் சித்தாந்தத்தை மையப்படுத்திய 50 ஆண்டுகால திராவிட அரசியலின் மற்றொரு முகத்தை கிழித்திருக்கும் துணிச்சலுக்கு பாராட்டுகள்!மற்றபடி இந்த படம் அனைவருக்கும் பிடிக்குமா? பிடிக்காதா? என்பதை பற்றியெல்லாம் யோசிக்கவே தேவையில்லை. நம்மை சுற்றியுள்ள ஓட்டரசியலை யார் தான் பேசுவது? என்ற பூனைக்கு மணி கட்டிருக்கின்றனர். அன்று விஜய் சொன்னது போல, உண்மையாவே அரசியலில் மெர்சல் செய்திருக்கின்றனர். உள்ளூர் அரசியலுக்குள்ளும் உலகரசியலின் பங்கு இருப்பதை புரிந்து கொண்டவர்களுக்கு சர்க்காரின் தேவையும் புரியக்கூடும். ரசிகனாக, தமிழனாக, வாக்காளனாக, இந்த சர்க்கார் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்திருக்கிறது.

- இரா.ச. இமலாதித்தன்




11 டிசம்பர் 2017

குறியீடு!

பார்வையின் கோணத்தை விரிவாக்கினால், பல கேள்விகளுக்கான பதில்களை இந்த கண்களே தந்து விடும்!




இன்னுமா இந்த 'கன்னித்தீவு'க்கு ஒரு முடிவு வரல?! கதையை எப்படி முடிக்கிறதுன்னு முழி பிதுங்கி, வேற வழியே இல்லாம கடைசியா 'கருடன் - பாம்பு' வரைக்கும் வந்துட்டாய்ங்க. இன்னும் என்ன மாதிரி பில்டப்பெல்லாம் கொடுத்து பீதியை கிளப்ப போறாய்ங்களோ முருகா!? என் தாத்தா காலத்தில் ஆரம்பிச்ச கதையை, என் பேரன் காலம் வரைக்கும் கொண்டு போவாய்ங்க போல; சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்கய்யா... 

08 நவம்பர் 2017

பண மதிப்பிழப்பில் விஜய்!



பண மதிப்பிழப்பை பற்றி என்னவென்றே தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு மோடிக்கு முட்டுக்கொடுத்த ரஜினி - கமல் உள்பட சக நடிகர்களுக்கு மத்தியில், தனித்துவத்தோடு ஊடகங்களில் எதிர்ப்பை பதிவு செய்த ’தளபதி’ விஜய் போற்றுதலுக்குரியவர்.


25 அக்டோபர் 2017

மெர்சல் - ஒரு பார்வை!



நடிக்கிறது மட்டும் தான் என் வேலை; நடித்து கொடுத்த அந்த படத்தின் இசை வெளியீடு உள்ளிட்ட எவ்வித ப்ரோமோஷன்களுக்கும் வராமல், அந்த படம் ரிலீஸானால் என்ன? ரிலீஸ் ஆகாமல் போனால் என்ன? அந்த தயாரிப்பாளர் எவ்வளவு சிரமப்பட்டால் எனக்கென்ன? என அந்த படத்தில் பின்புலமாக பணியாற்றிய நூற்றுக்கணக்கான கலைஞர்கள் உள்ளிட்ட யாரைப்பற்றியும் கவலைப்படாமல் தன் சம்பள பணத்தை மட்டும் கறாராக வாங்கி கொண்டு ஒதுங்கி கொள்ளாமல், தான் நடித்த படத்திற்கு பல சிக்கல்களும், இடையூறுகளும் - தடைகளும் பல்வேறு திசைகளிலிருந்து வரும் போது, அதை வேடிக்கை மட்டும் பார்க்காமல் தன்னை நம்பியவர்களுக்காக ஆளும் வர்க்கத்திடமும் இறங்கி போய் பேசுறதுக்கு கூட, நல்லெண்ணமும் மனசும் வேணும். இந்த விசயத்தில் விஜய், தளபதி அல்ல; தலைவன்!





விமர்சனம்:

இல்லுமினாட்டி என்ற சொல் சிலருக்கு நகைப்புக்குரியதாக மாறிவிட்டது. இந்த இல்லுமினாட்டி என்பவர்கள் வேற்று கிரக வாசிகள் அல்ல; நம்மோடு கலந்துவிட்ட பின்னாலும், நம்முளிலிருந்து விலகி நிற்கும் உலகையாளும் அந்த கூட்டத்திற்கு ஏதாவதொரு பெயர் இருந்துவிட்டு போகட்டும். என்னளவில், எம்.என்.சி.களே நவீனகால உலகை ஆளும் வர்க்கத்தினர்; அவர்களை பற்றி கத்தியில் தோலுறித்திருக்கிறார். அந்த வகையில், இன்னொரு மிகப்பெரும் மர்மங்கள் நிறைந்த உலகெங்கும் கிளைகள் வைத்திருக்கும் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துமனைகளின் மற்றுமொரு கோர முகத்தை மெர்சலில் கிழித்திருக்கிறார் தளபதி விஜய்.


ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் ஹிந்தியா, ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்பு, சிசேரியன் பிரசவம், இறந்த தன்னுடைய மகளை தன் தோளில் சுமந்து சென்ற தந்தை, மிக்சர் அரசியல்வாதிகள் என யாரும் சொல்ல தயங்குகிற பல விசயங்களை பற்றி எதிர்வினையாற்றி இருக்கிறார். இலவச மிக்சர் - டிவி - கிரையண்டர்களை தரும் அரசு, ஏன் இலவச மருத்துவம் தரவில்லையென்ற கேள்வியும், பெண்களின் தாலியறுக்கும் சாரயத்திற்கு ஏன் ஜி.எஸ்.டி. வரி இல்லையென்ற கேள்வியும் புரட்சியின் அடையாளம். இது தவிர, தமிழ் சார்ந்த பாரம்பரியத்தையும், (கருப்பு உள்ளிட்ட) குலதெய்வம் வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் காட்சி படுத்திருக்கும் விதம் உள்ளிட்ட பல விசயங்களில் கலக்கிருக்கிறார் அட்லி.

என்னை கவர்ந்த காட்சிகளில் சில... தொடக்க காட்சியிலும் - இறுதி காட்சியிலும் சைகை மூலமும் விஜய் காட்டிருக்கும் கருட முத்திரையும், இதை தவிர முக்கியமான பல இடங்களில் காட்டப்பட்டிருக்கும் கருடன் குறியீடும் தான்!

மெர்சல் உண்மையாவே மிரட்டல். செந்தமிழன் சீமான் விதைத்த வினையெல்லாம் காட்சிகளாக அட்லியின் மூலம் பிரதிபலித்திருக்கிறது. ரசிகனாக மட்டுமில்லாமல் தமிழனாக எனக்கு மெர்சல் பிடித்திருக்கிறது.

#Mersal




தலைவா படத்தின் டைட்டிலில் வரும் "Time to Lead" இப்போதுதான் மெர்சலின் மூலம் தொடங்கிருக்கிறது. தளபதியாக இருக்கும் ஒருவரை, தமிழனாக தலைமையேற்க ஆரியர்கள் ஆசைப்படுகிறார்கள் போல. மதவெறியை சாமானியர்களிடம் திணிப்பதற்காக ஜோசப் விஜய் என்றோ, யூசுப் விஜய் என்றோ எப்படி வேண்டுமானாலும் ஷர்மாக்கள் மெர்சலின் மூலம் மிரண்டு போய் உளறினாலும், விஜயை தமிழனாக ஆதரிக்க ஆன்ட்டி ஹிந்தியன்கள் பலரும் இங்கிருக்கின்றனர்.

மதவெறியர்கள், அட்லியின் சாதி மதம் வரைக்கும் அலசி ஆராய ஆரம்பித்துவிட்டனர். அட்லி, திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஹிந்து - அகமுடையார். அது மட்டுமில்லாமல் ஜோசப் என திசைதிருப்பப்படும் விஜயின் அம்மா ஷோபாவும் ஹிந்து - அகமுடையார் தான். திலிப்குமாராக பிறந்த ஏ.ஆர்.ரஹ்மானின் அப்பாவான சேகரும் ஹிந்து - அகமுடையாரே. இம்மூவரின் தாய்மார்களும் பிறப்பால் ஹிந்துதான் என்பதை பாரத மாதவை வணங்கும் ஹிந்துத்துவ வெறியர்கள் உணர வேண்டும்.

#Mersal


எந்த கடவுளை வணங்க வேண்டும்? எந்த மார்க்கத்தை பின்பற்ற வேண்டும்? என்பதெல்லாம் தனிநபர் உரிமை. அதை வைத்து பிரித்தாளும் சூழ்ச்சி செய்யும் இவர்களால் எப்படி அகண்ட பாரதத்தை உருவாக்க முடியும்? ஒரே பெயரில் இருக்கிற கூட்டாட்சி நாட்டையே துண்டு துண்டாக துண்டிக்கத்தானே இவர்கள் துடிக்கின்றனர். ஜோசப் மட்டுமல்ல; யூசுப்பும், இமலாதித்தனும் சேர்ந்து வாழ்ந்திருப்பது தானே மக்களாட்சி நாடு. ஹிந்துக்களை தவிர மற்ற அனைவரையும் நாடு கடத்த விரும்புகிறார்களா இவர்கள்? கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு; விமர்சனம் சொல்பவரையெல்லாம் தனிநபர் தாக்குதல் நடத்தி, அவ்வளவு எளிதாக ஒதுக்கி விட முடியாது. ஜோசப் விஜயை, ஹிந்துவான நான் ஆதரிக்கிறேன். என்னைப்போல் இன்னும் எத்தனையோ சோ கால்டு ஹிந்துக்களும் ஜோசப் விஜயை ஆதரித்து கொண்டுதான் இருக்கின்றனர்; இருப்பார்கள்.


#Mersal




தளபதியாக இருந்தவரை அனைத்து வடக்கத்திய செய்தி ஊடகங்கள் மூலமாக சூப்பர் ஸ்டார் ஆக்கிய அனைவருக்கும் நன்றி!

#Mersal #SuperStarVijay






இந்த ஆட்சியின் குளறுபடிகளை பற்றி பாஜகவை சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு பதில் இருக்கா? என்பதை பற்றியும், பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவின் மகனுடைய நிறுவனத்தின் சொத்தானது ரூ 50,000லிருந்து ஒருசில வருடங்களிலேயே பல்லாயிரம் கோடிகளை தொட்டது எப்படி என்பதை பற்றியும் அண்ணன் சீமான் கேட்க வேண்டும்.

#Seeman #NTK #Mesal


மெர்சலில் வரும் ஒரு காட்சிக்காக மதவெறியோடு திசை திருப்பி பொங்குவது ஏன்? மெர்சலில் சொல்லப்படும் சங்கிலி கருப்பனுக்கு கோவில் கட்ட வேண்டுமா? வேண்டாமா? என்பது குலதெய்வ (நாட்டார்) வழிபாட்டை செய்யும் வழக்கமுள்ள தமிழர்களின் பிரச்சனை. சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனையை கட்டியதாகவா மெர்சலில் அட்லி சொல்லிருக்கிறார்? பெரும்பாலான குலசாமி கோவில்கள் இன்றைக்கும் வெட்டவெளியின் ரகசியத்தை வெளிக்காட்டுவது போலவே, கோபுரமெல்லாம் இல்லாமல் தானே இருக்கிறது; கோபுரம் எழுப்பிய குலசாமி கோவில்கள் கூட, பெருங்கோவிலின் பாதிப்பால் ஏற்பட்ட சமீபத்திய மாற்றம் தானே? கல்லையும், வேலையும், சூலத்தையும், மரத்தையும் வணங்கியது தானே தமிழர்களின் குலதெய்வ வழிபாட்டின் அடிப்படை. இயற்கையோடு இயைந்த வழிபாடாக கோவில் சுவரே இல்லாத எங்களுக்கு, கோவிலும் கோபுரமும் ஒரு விசயமே இல்லை. ஷர்மாக்கள் போன்ற ஆரிய பிராமணர்கள் மட்டுமே பெருங்கோவில் கருவறைக்குள் சென்று பூசை செய்யலாமென இத்தனை வருடங்கள் நாட்டாமை செய்தவர்களுக்கு கேரள அரசாங்கம் தந்த பேரடி போதாதா? தென்னகத்தில் மகான் வைகுண்டரால் 'அய்யா வழி' என்ற மார்க்கம் ஏன் உருவானது என்பதை பற்றி கொஞ்சம் யோசித்தாலே இதன் பின்னாலுள்ள உண்மை புரியும்.




#Mersal




கேஷ்லெஸ் எக்கானமிக்காக டிஜிட்டல் ஹிந்தியாவாக வளர்ச்சியடைந்த காலகட்டமான 2017லேயே கோவில்களை விட கழிவறை தான் முக்கியமெனில், மெர்சல் படத்தில் 70களில் வருகின்ற அப்பா விஜய் கேரக்டர் பார்வையில் கோவிலை விட மருத்துவமனை தானே முக்கியமாக தெரிந்திருக்கும்?

#Mersal






மிக அதிகளவிலான வாக்குகளை தமிழ்நாடு சாரணர் தலைவர் தேர்தலில் பெற்றவரும், பல ஆன்ட்டி ஹிந்தியன்களை உருவாக்கியருமான மரியாதைக்குரிய ஹெச்.ராஜா சர்மா அவர்கள், மெர்சல் படத்தை நெட்டில் (தமிழ்ராக்கர்ஸ்) பார்த்ததாக 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியின் 'அக்னி பரீட்சை' விவாதத்தில் சொல்லிருக்கிறார். இதைப்பற்றி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் அன்பிற்குரிய இணையப்போராளி 'புரட்சி தளபதி' விஷால் ரெட்டி அவர்கள் என்ன முடிவெடுக்க போகிறார்?

#Mersal




மெர்சலுக்காக #MersalVsModi என்றிருந்த ட்விட்டர் ட்ரெண்ட் தற்போது, #TamiliansVsModi ஆகி விட்டது. அஜித்-விஜய்-சூர்யா என்ற ரசிக வேறுபாட்டை கடந்து தமிழராக ஒன்றிணைந்திருக்கிறார்கள்; மிகச்சிறப்பு. இதே ஹாஷ்டேக்கில் ஹிந்திக்காரனுங்களும் ஏதேதோ ஹிந்தியிலேயே கதறிகிட்டு இருக்கானுங்க. என்னதான் கூட்டாட்சியாக இருந்தாலும், தமிழ்நாடு எப்போதுமே தனிநாடு தான்.

தமிழன்டா எந்நாளும்; சொன்னாலே திமிறேரும்! காற்றோடு கலந்தாலும், அதுதான் நம் அடையாளம்!

#Mersal






மெர்சலுக்காக ராகுல்காந்தியையும் தமிழில் ட்விட் செய்ய வைத்த சார்ந்தோர் அனைவருக்கும் நன்றி!

#Mersal






குறியீடுகளை வார்த்தையில் வைத்த 'அருமைபிரகாசம்' கருணாகரனின் ட்வீட்டும் அருமை!

#Mersal






நீ பற்ற வைத்த நெருப்பொன்று, பற்றி எரிய உனை கேட்கும்!

#Mersal





சிபிஐ, இன்கம்டாக்ஸ், ரிபப்ளிக் டிவி, வரிசையில் போட்டோஷாப் அப்ளிகேசனும்...

#Mersal






வேறுவழியே இல்லாமல், 'காலா'வதியான சூப்பர்ஸ்டார் பட்டத்தை வைத்திருப்பவரும் மெர்சலுக்கு வாயை திறந்திருக்கிறார்.

சிறப்பு.

#Mersal





சூப்பர் ஸ்டார் விஜயின் #Thalapathy62 படத்திற்கான டைட்டிலாக "ஜோசப் விஜய் எனும் நான்" என்று கூட ஏ.ஆர்.முருகதாஸ் வைக்கலாம்.

#MyOpinion

- இரா.ச. இமலாதித்தன்

09 அக்டோபர் 2017

08 அக்டோபர் 2017

தலைவன் உருவாக யுகம் தேவைப்படலாம்!

("ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவைப்படுகிறது!" - தளபதி விஜய், மெர்சல் டீசரிலிருந்து...)
உண்மை தான்.
தலைவனாகும் தகுதி ஒரு சிலருக்கு பிறப்பிலேயே இயல்பாக அமைந்து விடுகிறது. வேறு சிலருக்கு பிறந்ததற்கு பின்னால், அத்தகுதியை சூழல்கள் உருவாக்கி கொடுக்கின்றன. ஆனால், இந்த இரு வகையினருமே பெரும்பாலும் தன்னையறிந்து கொள்ளாமலேயே ஆளுமைமிக்க அந்த தகுதியை பயன்படுத்துவதில்லை; சரியான நேரத்தில் முடிவெடுக்க தெரியாமல், தகுதி இருந்தும் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் இங்குண்டு. வரலாற்று நிகழ்வுகளை ஆழ்ந்து கவனிக்கும் போது, விரல் விட்டு எண்ணுமளவிற்கு வெகு சிலருக்கு தான், தலைவனாகும் தகுதியை, பிறப்பும் - சூழலும் - நேரமும் உருவாக்கி கொடுத்திருக்கிறது. எனக்கு தெரிந்து இவையனைத்தும் சரியாக பொருந்தி வரலாற்றில் நிலை நிறுத்திக்கொண்டது, மாமன்னர் மருது பாண்டியர்கள் தான்!

21 செப்டம்பர் 2017

மெர்சல் - டீசர்!






அடியேன் பிறந்து சரியாக ஒரு வருடம் கழித்து அதே நாளில் பிறப்பெடுத்திருக்கும் அன்பிற்கினிய உடன்பிறவா இளைய சகோதரர் இயக்குனர் Atlee Kumar க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 'தளபதி' சூப்பர் ஸ்டார் விஜய் அவர்களின் 'மெர்சல்' ட்ரைலரையும் இந்நாளில் வெளியிட்டமைக்கும் ரசிகனாக வாழ்த்துகள்!

(விஜய் + ரஹ்மான் + அட்லி என்ற தமிழ் அக தமிழர்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'மெர்சல்' நிச்சயம் மிரட்டலான வெற்றியை பெறுமென நம்புகிறேன்.)

மிகச்சிறப்பு!



"இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட, நீ தோத்துட்ட என உன் முன்னால் நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது" என்ற விவேகத்தில் பேசிய அஜித் பஞ்ச் போல, இந்த மாதிரியான தடையெல்லாம் ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான்!

"நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும்; நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்"

#PeaceBro!



எண்ணம் போல் வாழ்க்கை; ஆளப்போறான் தமிழன்!

ஒருவேளை மெர்சல் படத்தலைப்பு பிரச்சனைக்கு தீர்வே கிடைக்கவில்லையென்றால் 'ஆளப்பிறந்தவன்' என்று கூட வைக்கலாம்.

09 ஆகஸ்ட் 2017

ஆளப்போறான் தமிழன்!



"ஆளப்போறான் தமிழன்"
எழுத்தில் பிழை இருக்கலாம்; கருத்தில் பிழையே இல்லை! இனி இம்மண்ணை தமிழன் ஆள்வான்.
சீமானுக்கு நன்றி.

21 ஜூன் 2017

சூப்பர் ஸ்டார் விஜய்!






ஏறுதழுவும் காளைகள் பின்புலத்தில் மட்டுமில்லாது படத்தின் தலைப்பிலும் பாய்ந்து கொண்டிருக்கிறது. தந்தையின் உதவியால் 'இளைய தளபதி' விஜயாக சினிமாவுக்குள் வந்தாலும், அதன் பின்னால் தன் உழைப்பால், தன் திறமையால் மட்டுமே உண்மையான 'சூப்பர் ஸ்டார்' விஜயாக வளர்ந்து நின்றாலும், 'தமிழன்' விஜய் என்பது தான் அவருக்கு மிக கச்சிதமாக பொருந்துகிறது. ஹேட்டர்ஸ்களால் எத்தனை விதமான தரக்குறைவான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், அனைத்தையுமே தனக்கான படிகற்களாக நினைத்து மேலேழுந்து நிற்கும் திரு.விஜயின் திரைவருகைக்கு முன்பும் சரி, பின்பும் சரி, எத்தனையோ பிரபலமான அப்பாக்கள் தன் மகனை, சினிமாத்துறையில் நிலை நிறுத்த இன்றளவும் மெனக்கெடுகின்றனர்; ஆனால், யாரும் அவர்களது இலக்கை எட்டியதாக தெரியவில்லை. எத்தனை பெரிய ஜாம்பவான்களால் ஆரம்ப கால வாய்ப்பை மட்டுமே தன் மகனுக்கு உருவாக்கி கொடுக்க முடியும். அதை தொடர்ந்து தன்னை நிரந்தரமாக்க, நிச்சயமாக சுய திறமையும், கடின உழைப்பும், உண்மையான ஈடுபாடும் வேண்டும். அந்த வகையில் 'எங்கள் சூப்பர் ஸ்டார்' விஜய்க்கு நிகர் என்றைக்கும் அவர் மட்டுமே!

(கண்ணாடி பார்வையில் மெர்சல் என்பது விஜய் போல தெரியும். ஆக்கம்: பிரகாஷ் காளீஸ்வரன்)


எங்கள் நாகப்பட்டினத்தில் முதன்முறையாக மாபெரும் அரசியல் அடையாள மாநாடு போட்டு, 'எங்கள் தமிழ் மீனவனை சிங்களவன் தாக்கினால், இங்குள்ள தமிழர்களெல்லாம் ஒன்றிணைந்து இலங்கையையே உலக வரைபடத்திலிருந்து நீக்குவோம்' என உணர்ச்சி வசப்பட்டு பேசியதால் சிங்கள இனவாத அரசால் அவரது படம் திரையிடப்படாமல் முடக்கப்பட்டும் கூட, தன் படத்திற்கு தமிழர்களின் அடையாளமான 'புலி' என பெயர் வைக்கும் போதும், 'அகதியான மக்களுக்கு தனி நாடு வேண்டும்' என 'வில்லு' பட காலத்திலேயே பாடல் வரிகளில் தன் விருப்பத்தை சேர்க்கும் போதும், சமீபத்தில் BehindWoods கொடுத்த 'People's most favorite and most popular actor' என்ற விருதை பெற்றுக்கொண்ட நிகழ்ச்சியில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை பற்றி பேசாமல் விவசாயிகளுக்காக, 'வல்லரசு ஆவதை பிறகு பார்க்கலாம்; விவசாயிகளுக்கான நல்லரசாக இருங்கள்' என அரசாளும் அரசாங்கங்களை எதிர்த்து உணர்வோடு குரல் கொடுக்கும் போதும் தமிழனாக விஜய் பலரது மனங்களுக்கு நெருக்கமாகி விடுவதை எந்தவொரு ஹேட்டர்ஸாலும் தடுத்துவிட முடியாது.

எங்கள் சகோதரர் இயக்குனர் அட்லியின் மெர்சல் திரைப்படம், மெர்சலான வெற்றிபெற்று ஹாட்ரிக் அடிக்க வாழ்த்துகள்! வருங்காலத்தில் நிச்சயமொரு நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியை அலங்கரிக்க போகும், எங்கள் தளபதி விஜய் அவர்களுக்கு 43ம் அகவை நல் வாழ்த்துகள்!

  ரசிகனாக,
- இரா.ச. இமலாதித்தன்

#IamWaiting 4 #Mersal

13 ஜனவரி 2017

ரசிகனின் பார்வையில் பைரவா!

திரையில் எம்ஜிஆர், ரஜினி ஃபார்மலா தான் எனக்கு பிடிக்கும். அதே பாணியில் சமகாலத்தில் கமர்சியல் எண்டர்டெயினராக தன்னை வெளிப்படுத்தும் இளையதளபதி விஜயைத்தான் எனக்கு பிடிக்கும்; இந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையெல்லாம் விட இளைய தளபதி என்ற அடையாளமே போதுமென்று விஜயே ஒரு மேடையில் சொல்லிருக்கிறார்; ஆனாலும் அவரை சூப்பர் ஸ்டார் விஜயாகவே பார்க்க விரும்புகிறேன். இது என் தனிப்பட்ட விருப்பம். எம்ஜிஆர் மலையாளி, ரஜினி கன்னட மராத்தியர் என்ற விமர்சனம் அப்போதிலிருந்தே இங்கு உண்டு. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு தமிழன், திரைத்துறையில் சூப்பர் ஸ்டார் என்ற இடத்திற்கு மிக அருகிலோர் உச்சபட்ச நிலையை தொட்டிருப்பதால், விஜயை ஆதரிக்க வேண்டுமென்ற விருப்பமும் எனக்குண்டு. என்னுடைய இந்த நிலைப்பாட்டை விமர்சிப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பவெறுப்பு சம்பந்தபட்டது. அதைப்பற்றியெல்லாம் எப்போதும் கவலைப்பட போவதில்லை.

இப்போது பைரவா பற்றி சிலவற்றை எழுதலாமென்று நினைக்கிறேன். முதலில், எனக்கு பைரவா ரொம்பவே பிடித்திருக்கிறது. துப்பாக்கி + கத்தி + தெறி என்ற கடைசி விஜய் ஹிட்லிஸ்ட் படங்களின் பட்டியலில் இந்த படமும் சேருமென்றே நினைக்கிறேன். காமெடி, ஃபைட், டான்ஸ், குத்துப்பாட்டு, செண்டிமெண்ட், ரொமான்ஸ் என்ற ஒரு கமர்சியல் ஃபார்மலா படத்தில், சமூகத்தில் நடக்கின்ற சமகால பிரச்சனையை பற்றிய மெசேஜை பைரவாவில் சொல்லிருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதை சுட்டிக்காட்டிய அதே வேளையில், அதே சோசியல் மீடியாவால் தான் சென்னை வெள்ளத்திலிருந்த சென்னையை மீட்க முடிந்ததென்ற உண்மையை திரையில் மிக அழுத்தமாக விஜய் சொல்லிருக்கிறார். கூடவே மீம்ஸ் உருவாக்கி தவறானவர்களை பொதுவெளிக்கு அடையாளப்படுத்த முடியுமென்பதையும் காட்சி படுத்திருக்கிறார் இயக்குனர் பரதன். திரைத்துறையில் வெற்றிப்பெற்றவர்களுக்கே அடுத்த வாய்ப்பு கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கும் வேளையில், விஜய் மீண்டுமொரு வாய்ப்பை பரதனுக்கு கொடுத்ததன் பின்னணி பெருந்தன்மையுடன் கூடிய விஜயின் மனசாட்சிக்கு சம்பந்தப்பட்ட ஒன்று. கிடைத்த அந்த வாய்ப்பையும் பரதன் நேர்மையாகவே பயன்படுத்தி இருக்கிறாரென்று நினைக்கிறேன்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தால் கொல்லப்பட்ட 90க்கும் அதிகமான குழந்தைகள், தாம்பரம் பள்ளி வாகனத்தின் உள்ளேயிருந்த ஓட்டையில் விழுந்து இறந்த மாணவி, கள்ளக்குறிச்சியில் அங்கீகாரமில்லாத செவிலியர் கல்லூரியின் கிணற்றில் விழுந்து தன்னுயிரை விட்ட மூன்று மாணவிகள் என கல்வித்துறையில் நடந்த, நடக்கின்ற அவலங்களையும், அதனை கண்டு கொள்ளாத அரசு நிர்வாகத்தையும் கண்டிக்கும் சமூக அக்கறைக்காகவே இப்படத்தை க்ளாஸ் என வகைப்படுத்தலாம். டயலாக் டெலிவரி, காமெடி, ஆக்‌ஷன் சீக்வென்ஸ், டான்ஸ், ஸ்டைல் என எல்லாவற்றிலும் விஜய், இப்படத்தை மாஸ் ஆக்கிருக்கிறார். சினிமாவின் இலக்கணம் பற்றியெல்லாம் கணக்கீடு செய்யாமல் பாமர ரசிகனாக எனக்கு பைரவா பிடித்திருக்கிறது. உங்களுக்கும் கூட பிடிக்கலாம்; எந்த ரசிகனின் கண்ணாடியையும் அணியாமல் பார்த்தால் உங்களுக்கும் தனியாக வந்த இந்த பைரவாவை பிடிக்கலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

22 ஜூன் 2016

இனிய வாழ்த்துகள் இளைய தளபதி!

"அவமானங்களை சேகரித்து வை; வெற்றி உன் வசமாகும்!" - இந்த வாசகம் இளையதளபதி விஜய்க்கு தான் கச்சிதமாக பொருந்தும். அவர் சினிமா துறைக்கு வந்தது முதற்கொண்டு, இப்போது வரையிலும் அவரை விமர்சிக்காத வண்டு சிண்டுகளே கிடையாது. சமூக ஊடகங்கள் தலையெடுத்ததற்கு பின்னால், விஜயை எந்தளவுக்கு தரம் தாழ்ந்து விமர்சிக்க முடியுமோ அந்தளவுக்கு இழிவுபடுத்தி வருகின்றனர் என்பது விஜய் உள்பட அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். விமர்சனம் தான் தன்னை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என்பதை தெளிவாக புரிந்து கொண்ட விஜய், இவற்றையெல்லாம் கண்டு சோர்வடைந்தது இல்லை.

கன்னடரான ரஜினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அதே கூட்டம், பச்சைத்தமிழனான விஜயை மட்டும் திட்டமிட்டே தமிழ்நாட்டில் அவமதிக்கிறது. ஒரு கமர்சியல் நடிகனாக, டான்ஸ் - ஃபைட் - காமெடி - செண்டிமெண்ட் என விஜயிடம் அனைத்துமே இருக்கிறது. ஆனாலும் அதையே குறை கூறி விஜயை விமர்சிக்கின்றனர் இணையதளவாசிகள். இந்த விசயத்தில் விஜய் தெளிவாகவே இருக்கிறார். 'தன்னுடைய படம் ரசிகர்களுக்கானது; அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவே படம் நடிக்கிறேன்' என்பதே அவரது அளவீடாக இருக்கிறது.

43வது வயதிலும் இளைய தளபதியாகவே உடலை பராமரிக்கும் விஜய்க்கு, ஒவ்வொரு படத்திலும் கெட்டப் மாற்றி கமல் - விக்ரம் போல உலக நாயகனாக உருவெடுக்கும் ஆசையெல்லாம் இல்லை; ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் குட்டி சுட்டீஸ்களுக்கு சூப்பர் ஸ்டாராக இருப்பதே அவருக்கு திருப்திகரமாக இருக்கிறது. இன்றைக்கு விஜய் மீது மிகவும் இழிவான விமர்சனத்தை வைக்கும் ஒவ்வொரு இணையதள வாசியும், அவர்களது குழந்தை பருவத்தில் விஜயை ரசிக்காமல் இருந்திருக்க முடியாது என்பதுதான் எதார்த்தமான உண்மை. திரையில் ஒரு ஹீரோ தோன்றினால் அவரிடம் என்னென்ன எதிர்பார்ப்போமோ அதையெல்லாம் தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்டு, பாமர ரசிகனின் சூப்பர் ஸ்டாராக திகழும் இளைய தளபதிக்கு என் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

17 ஏப்ரல் 2016

தெறி!



அகமுடையார்களான, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் அட்லி உள்ளிட்ட இம்மூவேந்தர்களின் கூட்டணியில் உருவான 'தெறி' படம் பார்த்தேன். எனக்கு ரொம்பவே படம் பிடித்து போனது. ஒவ்வொரு முறையும் துப்பாக்கி போலவே எல்லா படங்களையும் விஜயால் தர முடியாது; அப்படி அவர் அது மாதிரியான படங்களை தொடர்ச்சியாக தந்தால், விஜய் ஒரே மாதிரியான படங்களிலேயே நடிக்கிறாரென இணையதள நக்கீரன்கள் குற்றம் சுமத்துவார்கள். பொதுவாக விஜய் படத்தின் டீசர் வந்தாலே, அதையே திரைவிமர்சனம் போல பல்வேறு மீம்ஸ் உருவாக்கி தரம் தாழ்ந்து விமர்சித்து சுகம் காணும் கூட்டம் அதிகமாகி வரும் இச்சூழலில், சேகுவேரா படம் பதித்த டீசர்ட்டை அணிந்து கொள்வது போலவே விஜயை கிண்டல் செய்வதும் கூட ஒரு ட்ரெண்ட் செட்டாகி விட்டது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

விஜய் - அஜித் என்ற ஒப்பீட்டுளவில், தெறியை வீரம் படத்தோடு ஒப்பிட்டால், என் பார்வையில் தெறி நூறு மடங்கு வீரத்தை விட சிறப்பாக தான் இருக்கிறது. மிகப்பெரிய நட்சத்திர தகுதியுள்ள நடிகரின் படம் எப்படி இருக்க வேண்டுமோ, அந்த திரை இலக்கணத்தின் படியே தெறி படமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ரசிகர்களுக்கான இந்த படத்தில், காமெடி - செண்டிமெண்ட் - ஃபைட் - டான்ஸ் - லவ் என அனைத்து மசாலாக்களையும் குறைவில்லாமல் தந்திருக்கிறார் அட்லி. மேலும் வசனம் - ஒளிப்பதிவு - எடிட்டிங் - பின்னணி இசையென படத்திற்கு முக்கியமான எல்லா துறையிலும் குறையே சொல்ல முடியாத அளவிற்கு ஒரு டீமை கை வசம் வைத்துள்ள இயக்குனர் அட்லி பாரட்டுக்குரியவர்.

தெறியில் 'மருதமலை' வடிவேலுக்கான இடத்தை மொட்டை ராஜேந்திரன் திறம்பட நடித்து வைகைபுயலின் இடத்தை சமன் செய்திருக்கிறார். ஃபேமிலி ஆடியன்ஸ் கூட்டம் தியேட்டரில் அதிகமாக இருக்கும் போதே, இது ரசிகர்களுக்கான படம் மட்டுமல்ல என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. அப்பா - மகள், கணவன் - மனைவி, அம்மா - மகன் என பல உறவுகளை விஜயே வெவ்வேறு பரிமாணங்களில் பளிச்சென வெளிப்படுத்தி, படம் நெடுகிலும் தெறிக்க விட்டிருக்கிறார். வழக்கமாக, ஃபைட் - காமெடி - பஞ்ச்களுக்கு மட்டுமே கைத்தட்டல் வருமென நினைத்திருந்தாலும், இவை அல்லாத பல சீன்களுக்கும் கண்ணீருடன் கூடிய கைத்தட்டல்களும் திரையரங்கத்தை திணறடித்தன.

இங்கே இணையத்தில் எவ்வளவு வன்மத்தோடு விமர்சனம் வைத்தாலும், ஒரு படத்தை வெற்றியடைய வைக்கும் வல்லமையுள்ள தாய்க்குலங்களும், குழந்தை பட்டாளங்களும், தெறியை மிகப்பெரிய வெற்றி பெற வைப்பார்களென நம்புகிறேன்!

குறிப்பாக, குறுகிய காலத்தில் ஐம்பதாவது படத்தை தொட்டுள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் அட்லி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்ட தெறிக்கு பின்புலமாக இருந்த மூவரோடு, பக்கபலமாக இருந்து தெறிக்க விட்டிருக்கும் இளைய தளபதி விஜய்க்கும் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

04 அக்டோபர் 2015

வாழ்த்துகள் இளையதளபதி விஜய்!

ஏறக்குறைய அனைத்து அஜித் ரசிகர்களும், தங்களால் முடிந்த அளவுக்கு எவ்வளவு கீழ்த்தரமாக வன்மத்தை வார்த்தைகளால் விமர்சனம் என்ற பெயரில் எழுதமுடியுமோ, அந்தளவுக்கு எழுதி விட்டார்கள். விஜய் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை. ஆனால் ஒருவன் எப்போது தடுமாறி கீழே விழுவான்?என காத்திருந்து மேலேறி மிதிக்கும் கேவலமான செயல்களை வெறும் லைக்குக்காகவும், தன்னுடைய காழ்ப்புணர்ச்சியை வெளிக்காட்டவும் முயற்சிப்பதுதான், 'நடிகனின் ரசிகனல்ல; நல்ல மனிதனின் ரசிக'னென சொல்லிக்கொள்ளும் நபர்களின் செயலா?

ஒரு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றால் அது இயக்குனரின் திறமையென புகழும் அறிவுஜீவிகள், ஒருவேளை ஒரு திரைப்படம் தோல்வியடைந்தால் அது நடிகனை மட்டும் குறை கூறுவது எந்தவகையிலும் சரியென படவில்லை. பல அவமானங்களையும், பலரது விமர்சனங்களையும் தாண்டித்தான் இந்த உயரிய உட்ச நிலையை விஜய் அடைந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மீண்டும், தொடர்ச்சியாக மெகாஹிட் திரைப்படங்களை கொடுக்க, ரசிகனாக என் வாழ்த்துகள், இளைய தளபதி!

- இரா.ச.இமலாதித்தன்.

06 ஆகஸ்ட் 2015

அஜித் - சிம்பு - விஜய்

அஜித்தின் ரசிகராகவே சிம்பு இருக்கட்டுமே. அதனால் சிம்புவை தவிர வேற யாருக்கும் நஷ்டமும், லாபமும் கிடைத்துவிட போவதில்லை. மூன்று வருடம் இழுபறியாக இருந்த வாலு படம் வெளிவருவதற்கு விஜய் உதவியது மனிதபிமான அடிப்படையில் சக நடிகனாக இருப்பதால் மட்டும் தானென நினைக்கிறேன். இதையே மையபடுத்தி அஜித்-விஜயைகலாய்ப்பதும், சிம்புவிடம் இதைப்பற்றி அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டு தர்மசங்கடம் படுத்துவதும் என இணையத்தில் சுற்றித்திரியும் மனம்பிறழ்ந்த வெறியர்களால் ஒரு மயிரும் ஆகப்போவதில்லை. இவய்ங்க இங்க தான் தலடா, தளபதிடான்னு கத்திக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் கோடிகணக்கில் சம்பாரிச்சுக்கிட்டு சந்தோசமா இருக்காய்ங்க. அந்த நடிகர்களை அவர்களது தொழிலை செய்ய விட்டுவிட்டு, இவிய்ங்க தன்னொட வயித்து பொழப்பை பார்தாலாவது, பெத்தவங்களுக்கு புரோஜனமாபோகும்!

23 அக்டோபர் 2014

கத்தி - விமர்சனம்

கத்தி, சமூக விழிப்புணர்வு படம். விவசாயத்தையும் - கிராமத்தையும் மையப்படுத்திய கதைக்களத்தில், முதல் பாதி மனதை கவரும் கமர்சியல் என்றாலும், இரண்டாம் பாதி மனதை சுடும் சோசியல். இது திரு.விஜய் படமாகவும், திரு.முருகதாஸ் படமாகவும் இருக்க இந்த இரண்டும் தான் காரணமாக இருக்கின்றது. மேலும், துப்பாக்கி - தேசியத்தின் மீதான சாடல் என்று சொன்னால், கத்தி - தமிழகத்தின் சாடல் என்றே சொல்லலாம். படத்தின் பல இடங்களில் சோசியல் பஞ்ச் இருக்கு. கூடவே, எங்க ஊரு நாகப்பட்டினத்தையும் டெல்டாவையும் சொல்லி, மிக முக்கியமாக மீத்தேன் பிரச்சனையை சுட்டிக்காட்டி திரு.விஜய் பேட்டி கொடுக்கும் காட்சி நச்.

வெறும் தண்ணி தானே? அப்படின்னு நிருபர் கேட்கும் போது, 2ஜிங்கிறது வெறும் காத்து தான். அதுல பல லட்சம் கோடி ஊழல் பண்ணலைன்னா? பதில் கேள்வி கேட்பாரு திரு.விஜய். அது போலவே ஐயாயிரம் கோடி ஊழல்ன்னு அழுத்தம் திருத்தமாக எல்லா தரப்பு அரசியல் ஊழலையும் காட்டமாக பதிவு செய்திருக்கின்றது இந்த கத்தி.

மேலும், நீயா நானா, மானாட மயிலாட போன்ற ரியாலிட்டி ஷோக்களின் தில்லுமுல்லுவையும், கூடவே செய்தி சேனல் - பத்திரிகைகளின் ஊடக விபச்சாரத்தையும் தோலுரித்து காட்டிருக்கும் விதம் அருமை. திரையரங்கினுள் பல வசனங்களுக்கு கைத்தட்டலும் விசில் சத்தமும் காதை கிழிக்கின்றது. படத்தில் வரும் பெரும்பாலான வசனங்கள், விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயி மகனான எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதே உண்மை. வைகை ஆற்றில் ஒரு நாளில் 1 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி தென் தமிழகத்தின் வறட்சிகளில் ஒரு காரணமாக இருந்து வரும் பெப்சி / கோலா கம்பெனி உள்ளிட்ட அனைத்து பன்னாட்டு நிறுவனங்களின் கோரமுகத்தை பதம் பார்த்திருக்கும் இந்த கத்தி, கண்டிப்பாக விஜயின் ஹிட் லிஸ்டில் இணைய போகின்றது. தாராளமாக பார்க்கலாம். கத்தி, நல்லாருக்கு.

- இரா.ச.இமலாதித்தன்

21 அக்டோபர் 2014

தமிழுணர்வால் பாதிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?

லைக்கா என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை எதிர்க்கும் எந்த தமிழ் அமைப்புக்காவுது, பாரத ரத்னா விருதை ராஜபக்சேவிற்கு கொடுக்க சொல்லிருக்கும் சுப்ரமணியசுவாமியை எதிர்க்க திராணி இருக்கா? அப்படி எந்தவொரு அறிக்கையும் வந்தமாதிரி தெரியலை. பணம் போட்டு படத்தை வெளியிடுறவனை மிரட்டினால் அடி பணிவான்; நமக்கும் இலவசமாக விளம்பரம் கிடைக்கும் என்பதை தவிர வேறெந்த சமூக அக்கறையும் இருந்த மாதிரி தெரியவில்லை. தமிழகமெங்கும் சிங்களவர்களின் நிறுவனங்கள் எக்கசக்கமாய் இருக்கின்றது. அதை எதிர்த்து மூட வக்கில்லை. இந்த லட்சணத்துல அம்மாவிற்கு நன்றின்னு வெட்கமே இல்லாமல், அறிக்கை விட்டு சமாதானம் ஆகுறதுக்கு பேரு தான் இவர்களின் தமிழுணர்வு. 

அதெப்படி, லைக்கா என்ற பெயர் இல்லாமல் படம் வெளி வந்தால் எல்லாம் சரி ஆகிடுமா? எப்படி பார்த்தாலும், அந்த படத்தோட தயாரிப்பாளர் லைக்காவும் - ஐங்கரனும் தானே? அந்த படத்தின் லாப நஷ்டமும் இந்த இரு நிறுவனத்துக்கும் தானே? அப்பறம் எப்படிடா வெட்கமே இல்லாமல் நன்றின்னு சொல்லிட்டு வெள்ளையும் சொள்ளையுமா அலையுறீங்க? இனிமே தமிழ் தமிழுனர்வுன்னு எந்த போராட்டத்தை கையில் எடுக்காமல், நவ துவாரங்களையும் மூடிகிட்டு போங்கடா நொன்னைங்களா!

தந்தி - புதிய தலைமுறை தொலைக்காட்சிகளில் இன்றைய (21.10.2014) சிறப்பு விவாதங்களும் தமிழ் அமைப்புகளின் கத்தி திரைப்பட எதிர்ப்பு தொடர்பாகவே இருந்தது. அங்கே நடத்தப்பட்ட இரு கருத்து கணிப்புகளிலும், பாதிக்கும் மேற்பட்ட மக்களின் பெரும்பான்மை கருத்தாக 'விஜய் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி' என்பதாக தான் இருந்தது. எது எப்படியோ, 'இளைய தளபதி' திரு.விஜய் நடிக்கும் 'கத்தி' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற சக தமிழனாய் அடியேனின் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

14 அக்டோபர் 2014

தீபாவளிக்கு ரிலீஸ்? கத்தி!

’தமிழக வாழ்வுரிமை கட்சி’ என்ற பெயரில் லெட்டர்பேடு அமைப்பு வைத்திருக்கும் திரு தி.வேல்முருகனெல்லாம், ’கத்தி’ திரைப்படம் வெளியே வந்தால், ”திரையை கிழிப்போம்!, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்!” என்றெல்லாம் வீராப்பு காட்டுற மாதிரியான நிலை தமிழ்நாட்டுக்கு வந்துடுச்சேன்னு நினைக்கும் போதுதான் காமெடி கலந்த கவலை வருது. எதார்த்தம் என்னன்னு பார்த்தால், 200 ரூபாய் கொடுத்து முதல்நாள் படம் பார்க்க வருகின்ற சாமானிய ரசிகன் முன்னாடி, ’திரையை கிழிப்பேன்!ன்’னு சொன்னாலேயே, அவன் இவிய்ங்க முகரக்கட்டையெல்லாம் கிழிச்சிட மாட்டானா? 200 ரூபாய்க்காக 5 வருட ஆட்சியையே அரசியல்வாதிக்கிட்ட தரும் சாமானியனிடம் வெற்று சவடால் விடும் ஆசாமிகளெல்லாம் இப்படி தியேட்டர் வாசலில் கிழிபட்டால் தான் இதற்கெல்லாம் ஒரு முடிவு வரும்.

- இரா.ச.இமலாதித்தன்

17 செப்டம்பர் 2014

தமிழன் ஆளட்டும்!

திரைத்துறையில் 'தயாரிப்பாளர் - இயக்குனர் - நடிகர் - கவிஞர் - இசையமைப்பாளர்' யென மிகப்பெரிய உச்சத்தை அடைந்திருந்த பலராலும், அவர்களது வாரிசுகளை அதே திரைத்துறையில் ஜொலிக்க வைக்க முடியவில்லை என்பதே எதார்த்தம். ஆனால், மிகப்பெரிய இயக்குனர்களாக இல்லாத போதும் திரு. எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் திரு. கஸ்தூரி ராஜா போன்றோரின் மகன்களான திரு. விஜய் மற்றும் திரு. தனுஷ் இருவரும் திரைத்துறையில் சாதித்திருப்பதை பார்க்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கின்றது. திரைத்துறையில் வந்த புதிதிலிருந்து, பிறரின் ஏளனத்திற்கும் - புறக்கணிப்புகளுக்கும் - அவமானத்திற்கும் அதிகமாக ஆளானவர்கள் திரு. தனுசும் - திரு. விஜயும் தான். அவர்கள் பட்ட அந்த அவமானங்களே இன்றைக்கு அவர்களை மிகப்பெரிய ஆளாக்கி விட்டுருக்கின்றது.

இத்தனை பெரிய ரசிகர்கள் கூட்டத்தை இன்றைக்கு தனக்கு பின்னால் வைத்திருந்தும் கூட இன்னமும் திரு. விஜய் தரக்குறைவாகவே விமர்சிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார். அது வெறும் விமர்சனம் மட்டுமல்ல. காரணம் என்னவெனில், தமிழன் இனி தலையெடுத்து விடக்கூடாதென்ற வார்த்தைகளின் விசம் பலருக்கு தெரியாமலேயே அவர்களுக்குள் திணிக்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் அள்ளி தெளிக்கப்படுகின்றது. திரு. விஜயை எதிர்ப்பதற்கு பின்னால் ஆரிய சித்தாத்தங்களை கொள்கையாக கொண்ட ஊடகங்களின் பங்கும் பெருமளவு உண்டு என்பதை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என்பது தெரியவில்லை. சக தமிழனாக திரு. விஜய் அரசியலுக்கு வருவதுதான் சரியானதாக எனக்கு படுகிறது. அரசியலில் தலையெடுப்பதற்கான சரியான நேரமிது. இனியாவது தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆளட்டும்!

- இரா.ச.இமலாதித்தன்

22 ஜூன் 2014

இளையதளபதி பிறந்தநாள்!

ஜூன் 22ல் 40வது அகவை காணும் எங்கள் 'இளைய தளபதி' விஜய் அவர்கள் எம்பெருமான் முருகன் அருளோடு வாழ்க வளமுடன்... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா!

Time to Lead :-)

27 ஜூலை 2012

விமர்சனம் என்பது யாதெனில்...

இணையத்தில் சமூக வலைதளங்களில் எல்லா வயதினரும் அங்கம் வகிக்கின்றனர். ஆனாலும், பெரும்பாலனவர்கள் இளைஞர்களே. ஒருவரை விமர்சிக்க இவர்கள் எடுக்கும் ஆயுதம், கார்ட்டூன் போன்ற இவர்களே கணினியின் மென்பொருள் உதவியோடு உருவாக்கும் ஒளிப்படங்களே.

இங்கே விமர்சிக்கபடுவபர்களில் பெரும்பாலும் அரசியல்வாதிகளும், நடிகர்களும் தான். சமீப காலமாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் பெரும்பாலும், காங்கிரஸ்காரர்களே. தமிழ்நாட்டை பொறுத்தவரை இங்குள்ள அனைத்து அரசியல் தலைவர்களில் யாரும் விதிவிலக்கு அல்ல. பாரபட்சமில்லாமல் அனைவருமே பந்தாடப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். 

அனைவருமே விமர்சிக்க படுகிறார்கள் என்பது ஒரே ஆறுதலென்றாலும், உடலியலியல் மற்றும் நிறத்தின் அடிப்படையிலான விமர்சனங்கள் அதிகமாகி கொண்டிருக்கின்றன என்பது வருத்தமளிக்கின்றனகுறிப்பாக, நாராயணசுவாமியை உடலியல் தோற்றத்தை வைத்து மிக கேவலமாக விமர்சிக்கும் யாருமே, மன்மதன் அல்ல. கண்ணாடியில் முகத்தை பார்த்து தங்களுக்கு தாங்களாகவே 'இதுக்கு மேலேயுமா அழகு வேணும்?' யென்று முணுமுணுத்துக்கொண்டு, கணினி தொழிநுட்ப உதவியுடன் தங்களை மிக அழகாக செதுக்கி கொள்கிறார்கள். அவர்களைப்போல போலியான அழகை வெளிக்காட்டிக்கொள்ள தெரியாத நாராயணசுவாமி போன்றவர்கள், அவர்களுக்கு விலங்கின் தோற்றமாகத்தான் தெரியும். விஞ்ஞான அறிவியலின் கூற்றுபடி, விமர்சிக்கும் அனைவரும் அதே விலங்கினத்தில் இருந்துதான் பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்  என்பதை மறந்துவிட்டுதான் இதையெல்லாம் செய்கிறார்கள் போல.  

ஈழத்தமிழர்களை கொன்றொழிக்க காராணமாக இருந்த காங்கிரஸ் இயக்கத்தை தமிழகத்தில் இல்லாதொழிக்க வேண்டியது நம் கடமைதான்; ஆனால், தன்னுடைய தலைமைக்கு உண்மையான விசுவாசியாய் இருக்கிற ஒரு சக தமிழனை, மற்றொரு தமிழனே இழிவாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த மாதிரியான வண்ணத்தையும், உருவத்தையும் யாரும் பிறப்பதற்கு முன்பாக தீர்மானித்து உயிராய் உருவெடுக்க வில்லை. அது ஒருவகையில் இயற்கையான ஒரு நிகழ்வு. 

உடலியல் ரீதியாக ஒருவரை விமர்சனம் செய்யும் நீங்களும், ஒருநாள் இழமையான/ அழகான உங்களது உடலை இழக்கத்தான் போகிறீர்கள். முதுமையான காலத்தில், நீங்கள் விமர்சித்த அதே விலங்கினத்தின் தோற்றம் உங்கள் மீதும் ஏற்படக்கூடும். 

உங்களுக்கு ஒருவரை பிடிக்காத போது, அதை விமர்சனம் என்ற போர்வைக்குள் மிகவும் கீழ்த்தரமான முறையில் தாக்குவது, உங்களது கீழ்த்தரமான புத்தியையே அது காட்டும். 

சமீப காலமாக, இந்த கணினியின் துணையோடு, குறிப்பிட்ட ஒருசில நடிகர்களை அவர்களின் முகத்தோற்றத்தையும், உடலியல் கூறுகளையும் மிகவும் அருவருக்க தகுந்த வகையில் சித்தரித்து அதை ஒளிப்படமாக இணையத்தின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனது குரூர புத்தியை வெளிக்காட்டி வருகிறார்கள் ரசிகர் என்ற முகமூடியில். பதிலுக்கு, இன்னொரு நடிகரின் ரசிகர் பட்டாளங்களும் அதற்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்த, வேறொரு ஒழிப்படத்தை உருவாக்கி தங்களை மேதாவிகளாக காட்டிக்கொள்கிறார்கள். அதற்கு அந்தந்த நடிகர்களின் ரசிகர்களின் குழுமம் அதை ஆதரிப்போது போன்றே தெரிகிறது. குறிப்பாக விஜய், அஜித், சூர்யா தான் இப்போதைக்கு இவர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறார்கள். 

இது போன்ற கீழ்த்தரமான, முகம் சுழிக்கும் வகையில் செயல்படும் நபர்களை யார் தட்டிக்கேட்பது யென்ற போட்டியில், யாருமே கண்டுகொள்வதில்லை. மாறாக அதை ஆதரிப்பது போல அமைதி காப்பதும் ஒருவகையில் ஆபத்தில்தான் முடிய போகிறது என்பது மட்டுமே நிதர்சனம். ஆனால், அதை யாருமே புரிந்து கொண்டது போல தெரியவில்லை. 'இந்த பூனைக்கு யார் மணி கட்டுவார்கள்?' யென்று நானும் மற்றவர்களை  போலவே அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருகிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்