23 அக்டோபர் 2014

கத்தி - விமர்சனம்

கத்தி, சமூக விழிப்புணர்வு படம். விவசாயத்தையும் - கிராமத்தையும் மையப்படுத்திய கதைக்களத்தில், முதல் பாதி மனதை கவரும் கமர்சியல் என்றாலும், இரண்டாம் பாதி மனதை சுடும் சோசியல். இது திரு.விஜய் படமாகவும், திரு.முருகதாஸ் படமாகவும் இருக்க இந்த இரண்டும் தான் காரணமாக இருக்கின்றது. மேலும், துப்பாக்கி - தேசியத்தின் மீதான சாடல் என்று சொன்னால், கத்தி - தமிழகத்தின் சாடல் என்றே சொல்லலாம். படத்தின் பல இடங்களில் சோசியல் பஞ்ச் இருக்கு. கூடவே, எங்க ஊரு நாகப்பட்டினத்தையும் டெல்டாவையும் சொல்லி, மிக முக்கியமாக மீத்தேன் பிரச்சனையை சுட்டிக்காட்டி திரு.விஜய் பேட்டி கொடுக்கும் காட்சி நச்.

வெறும் தண்ணி தானே? அப்படின்னு நிருபர் கேட்கும் போது, 2ஜிங்கிறது வெறும் காத்து தான். அதுல பல லட்சம் கோடி ஊழல் பண்ணலைன்னா? பதில் கேள்வி கேட்பாரு திரு.விஜய். அது போலவே ஐயாயிரம் கோடி ஊழல்ன்னு அழுத்தம் திருத்தமாக எல்லா தரப்பு அரசியல் ஊழலையும் காட்டமாக பதிவு செய்திருக்கின்றது இந்த கத்தி.

மேலும், நீயா நானா, மானாட மயிலாட போன்ற ரியாலிட்டி ஷோக்களின் தில்லுமுல்லுவையும், கூடவே செய்தி சேனல் - பத்திரிகைகளின் ஊடக விபச்சாரத்தையும் தோலுரித்து காட்டிருக்கும் விதம் அருமை. திரையரங்கினுள் பல வசனங்களுக்கு கைத்தட்டலும் விசில் சத்தமும் காதை கிழிக்கின்றது. படத்தில் வரும் பெரும்பாலான வசனங்கள், விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயி மகனான எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதே உண்மை. வைகை ஆற்றில் ஒரு நாளில் 1 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி தென் தமிழகத்தின் வறட்சிகளில் ஒரு காரணமாக இருந்து வரும் பெப்சி / கோலா கம்பெனி உள்ளிட்ட அனைத்து பன்னாட்டு நிறுவனங்களின் கோரமுகத்தை பதம் பார்த்திருக்கும் இந்த கத்தி, கண்டிப்பாக விஜயின் ஹிட் லிஸ்டில் இணைய போகின்றது. தாராளமாக பார்க்கலாம். கத்தி, நல்லாருக்கு.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக